World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SEP begins crucial phase of federal election campaign

ஜேர்மனி: தேசிய தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி ஆரம்பிக்கின்றது

By our correspondents
31 August 2009

Back to screen version

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit-PSG), கடந்த வார இறுதியில் தேசிய தேர்தல் பிரச்சாரத்தில் "சூடுபிடிக்கும் காலத்தை" ஆரம்பித்துள்ளது. தெருக்களில் பிரச்சாரம் செய்வதும் நடக்க தொடங்கிவிட்டன. வணிக மையங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலிடங்களுக்கு முன் தகவல் சிற்றரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய ஜேர்மனிய ARD அரசாங்க தொலைக்காட்சி நிலையம் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை பேட்டி கண்டன. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் உல்ரிச் ரிப்பேர்ட் ஜேர்மனிய அரசாங்க தொலைக்காட்சியினால் பேட்டி காணப்படல்

கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரச்சாரத் தொண்டர்களுக்கும் உரையாற்றிய உல்ரிச் ரிப்பேர்ட் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் பங்கு பெறுவதின் முக்கியத்துவத்தையும் பிரச்சாரத்தின் பொது நோக்கங்களையும் விளக்கினார். பிரச்சாரத்தின் இதயத்தானத்தில் நடைமுறையில் இருக்கும் கட்சிகளில் இருந்து சுயாதீனமாக அரசியல் வழிவகையில் தொழிலாளர்கள் குறுக்கிடுவதற்கு வகைசெய்யும் ஒரு புதிய கட்சியை கட்டமைக்கும் நோக்கம் உள்ளது. இப்பொழுது இருக்கும் பாராளுமன்ற கட்சிகளை பொறுத்தவரையில் இப்பொழுது உண்மையான தேர்தல் பிரச்சாரம் ஏதும் நடைபெறவில்லை என்று ரிப்பேர்ட் சுட்டிக் காட்டினார். உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில் உள்ள "அரசியல் அமைதி" க்கான காரணத்தை அவர் விளக்கினார். இலட்சக்கணக்கான மக்கள் எதிர்நோக்கும் பெரும் கவலையளிக்கும் உண்மைப் பிரச்சினைகளை பற்றி எந்த கட்சியும் பேசத் தயாராக இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் சமூக செலவீனங்களை தவிர்க்க முடியாமல் குறைப்பது பற்றிய அவர்களுடைய அக்கறை சீரிய மெளனத்தைத்தான் சந்தித்தது. "சமீபத்தில்தான் ஜேர்மனிய அரசியலமைப்பில் பெரும் கூட்டணி "கடன் குவிப்பிற்கு தடை" என்ற ஒரு பிரிவை சேர்த்துள்ளது. இதன்படி வருங்கால அரசாங்கங்கள் அனைத்தும் பெருகியுள்ள வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை இல்லாதொழிக்க இரக்கமற்ற முறையில் கடும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்" என்றார் ரிப்பேர்ட். "வங்கிகளுக்கு ஒதுக்கப்பட்ட பில்லியன் கணக்கான யூரோக்கள், சரிந்துவிட்ட வரி மூலமான வருவாய்கள் மற்றும் பொதுநல வரவு-செலவுத் திட்டங்களின் பெருகிய சுமை ஆகியவை சமுதாயத்தின் மிக நலிந்த பிரிவுகளிடம் இருந்து மீட்டெடுகப்படும். ஆனால் இதைப் பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு சொல்கூட இல்லை."

மாறாக, கல்வி, சமூக முன்னேற்றங்களுக்கான அதிக பணம் கொடுத்தல், குறைந்த வரிகள் பற்றிய தெளிவற்ற உறுதிமொழிகள் கொடுக்கப்படுகின்றன. இத்தகைய உறுதிமொழிகள் தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறியப்படும் என்பதை அனைவரும் அறிவர். உத்தியோகபூர்வ தேர்தல் என்பது மக்களுக்கு எதிரான சதியின் ஒரு பகுதியாகும்.

ஒரு விரிவான தேர்தல் அறிக்கையை சோசலிச சமத்துவக் கட்சி வெளியிட்டுள்ளது. அது தற்பொழுது பரந்த முறையில் வினியோகிக்கப்படுகிறது. ஆங்கிலம், துருக்கி, தமிழ், பிரெஞ்சு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தேர்தலின் முக்கியத்துவத்தை பொருளாதார நெருக்கடி மற்றும் அதையொட்டி தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி விளக்குகிறது.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலையின்மை, ஊதியங்களில் பெரும் சரிவு மற்றும் சமூக நலன்களின் தகர்ப்பு ஆகியவற்றை எதிர்கொள்ளுகையில், முன்பு தொழிலாளர்களின் நலன்களை பிரதிபலிப்பதாக கூறிய அமைப்புக்கள் இப்பொழுது முற்றிலும் மறுபக்கம் சென்றுவிட்டன. சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் அறிக்கையில் விளக்கப்பட்டிருப்பது போல், " சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் தொழிற்சங்கங்கள் நிதியத் தன்னலக்குழுவின் காலில் அடிபணிந்து விழுந்துள்ளன. அவற்றின் கோழைத்தனத்திற்கும், அடிபணிந்து நிற்றலுக்கும் வரம்பே இல்லை."

தேர்தல் அறிக்கை இடது கட்சியின் பங்கை தெளிவுபடுத்தி சோசலிச சமத்துவக் கட்சி ஏன் "இடதுடன்" ஒத்துழைக்க உறுதியாக மறுக்கிறது என்பதையும் விளக்குகிறது.

"இந்த இழிசரிவின் மிகப் புரையோடிய வடிவமைப்பு ஒஸ்கார் லாபொன்டைனின் இடது கட்சியில் காணப்படலாம். "இடதுசாரி போல் பேசு, வலதுசாரி போல் நட" என்ற கொள்கையை அது கட்சி தனது வேலைத்திட்டமாக மாற்றியுள்ளது. இடது கட்சி "சமூக அநீதி" பற்றி உரத்த குரலில் புகார் கூறுகிறது. ஆனால் எங்கு அதிகாரத்தில் அது இருந்தாலும் அதைத்தான் தீவிரமாக வளர்க்கிறது. எந்த கூட்டாட்சி மாநிலமும் மக்கள் பொதுநலச் செலவுகளை தொடர்ந்து பேர்லின் போல் குறைத்ததில்லை. அங்குத்தான் இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சி கூட்டணியின் அங்கமாக எட்டு ஆண்டுகளாக ஆட்சி புரிகிறது. சோசலிச ஒலி கொடுக்கும் சொற்றொடர்களை எப்பொழுதாவது இது பயன்படுத்தினாலும், இடது கட்சி முதலாளித்துவ சொத்துடமை உறவுகளை பாதுகாப்பதுடன், அரசாங்கத்தின் வங்கிமீட்பு திட்டத்திற்கு மாற்றீடு எதையும் கொடுக்கவும் இல்லை."

சோசலிச சமத்துவக் கட்சி அதன் பிரச்சாரத்தை ஜேர்மனியின் இரு முக்கிய கூட்டாட்சி மாநிலங்களில் முக்கிய கவனத்தை காட்டுகிறது. முதலாவது நாட்டின் மிக அதிக மக்களை கொண்ட மாநிலமான வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா (NRW). ரூர் பகுதியை கொண்ட இம்மாநிலம் ஒருகாலத்தில் மேற்கின் மிக முக்கியமான தொழில்துறை மையமாக இருந்தது. இக்கணத்தில் ஓப்பல் கார்த்தயாரிப்பு நிறுவனம் பற்றிய மோதல்கள் அதன் உச்சக்கட்டத்தை வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா நகரமான Bochum இல் அடைந்துள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ள இரண்டாவது மாநிலம் தலைநகரமான பேர்லின் ஆகும். இங்கு சோசலிச சமத்துவக் கட்சிக்கு முக்கிய பிரச்சினை இடது கட்சியின் சமூகக் கொள்கைகளை கோட்பாட்டு ரீதியாக எதிர்த்தல் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் நான்கு தேர்தல் வேட்பாளர்களில் உல்ரிச் ரிப்பேர்ட் (58), ஃபாபியான் ரேமான் (29) இருவரும் பேர்லினிலும், எலிசபெத் சிம்மர்மானும் (52) டீற்மார் கைசென்கெயர்ஸ்டிங் (42) இருவரும் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவிலும் நிற்கின்றனர். இவர்கள் சோசலிச சமத்துவக் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், நிறைந்த அரசியல் அனுபவம் உடையவர்களாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் சுவரொட்டிகள் மற்ற கட்சிகளின் பொருளற்ற, வெற்றுத் தன்மையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையில் உள்ளனன. உதாரணமாக:

"வங்கிகளுக்கும் ஊகக்காரர்களுக்கும் ஒரு சென்ட் கூட கொடுக்கக்கூடாது! நெருக்கடிக்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும்! வங்கிகளும் நிறுவனங்களும் ஊழியர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும்!"

"ஜேர்மனியில் மாதாந்திர வருமானம்: Porsche தலைமை அதிகாரி 4,500,000 யூரோக்கள்; சராசரி நிகர ஊதியம் 1,470 யூரோக்கள்; ஹார்ட்ஸ் IV (வேலையின்மை ஆதரவுத் தொகை) 351 யூரோக்கள்; அனைவருக்கும் அடிப்படை ஊதியமாக 1,500 யூரோக்கள் வழங்குக! உயர்மட்ட வருமானம் உடையவர்களுக்கு வரி விதிக்கவும்!--மாதத்திற்கு 20,000 யூரோக்கள் போதுமானது!"

"Hartz IV விதிகள், வங்கி மீட்புப் பொதிகள், சமூக குறைப்புக்கள்--இடது கட்சி முதலாளித்துவத்தை பாதுகாக்க விரும்புகிறது. நாங்கள் விரும்பவில்லை"

இந்த சுவரொட்டிகள் அனைத்தும் PDF வடிவமைப்பில் எங்கள் வலைத் தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி 90 செக்கண்டுகள் ஓடக்கூடிய ஒரு ஒளிபரப்பை அரசாங்க தொலைக்காட்சி நிறுவனங்களில் வெளியிட தயாரித்திருக்கிறது. இது சோசலிச சமத்துவக் கட்சியின் முக்கிய தேர்தல் அறிக்கைகளை சுருக்கமாகக் கூறுகிறது. மற்றைய விடயங்களுடன் இது கூறுவதாவது: "நாங்கள் வேலைநிறுத்தங்கள், பணியிட ஆக்கிரமிப்புக்களை அனைத்து வேலைகளை பாதுகாப்பதற்காக ஆதரிக்கிறோம். பெரிய வங்கிகளும் வணிக நிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட வேண்டும். வங்கிகளுக்கு பில்லியன் கணக்கான யூரோக்களை கொடுப்பதற்குப் பதிலாக, மில்லியன் கணக்கான நல்ல ஊதியம் கொடுக்கும் வேலைகள் தோற்றுவிக்கப்பட வேண்டும்; அவற்றுடன் தரமான உயர் இலவசக் கல்வி, வேலைப் பயிற்சி ஆகியவை அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தான், சோமாலியா மற்றும் பிற நாடுகளில் இருந்து திரும்பப் பெறப்பட வேண்டும்."

கடந்த வியாழனன்று சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் ARD தொலைக்காட்சி இணையத்தால் பேட்டி காணப்பட்டனர். ARD வெளிப்புற காட்சியாக படம் எடுத்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தாத எல்லா கட்சிகளையும் இரண்டு முக்கிய வெளிப்புறக் கட்சிகளில் பங்கு பெறவும் விரும்பியது. இவற்றை ஒரு வர்ணனையுடன் தொடர்கிறது. சோசலிச சமத்துவக் கட்சி, தொலைக்காட்சி குழுவை பேர்லினில் ஒரு மிகப் பெரிய கட்டுமான இடத்திற்கு அழைத்துச் சென்றது. உல்ரிச் ரிப்பேர்ட் ஒளிப்பதிவிற்கு கீழ்க்கண்ட வார்த்தைகளை கூறினார்:

ஒவ்வொரு நாளும் நான் இந்தக் கட்டுமான இடத்தைத் தாண்டிச் செல்கிறேன். இத்தகைய மிக உயர்ந்த, சிக்கல் வாய்ந்த கட்டிடங்கள் இக்காலத்தில் எழுப்பப்படுவதில் துல்லியம், வேகம் இவற்றைத் தொழிலாளர்கள் காட்டுவதை பற்றி பெருவியப்பு அடைந்துள்ளேன். தொழிலாளர் உற்பத்தித்திறன் கடந்த 50 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக பெருகியுள்ளது. இதன் பொருள் இன்று ஒரு தொழிலாளர் 1960ல் உற்பத்தி செய்ததைப் போல் மூன்றரை மடங்கு அதிகம் உற்பத்தி செய்கிறார். இந்தக் கட்டுமான இடத்தில், தொழிலாளர்கள் பல மொழி பேசுகின்றனர். உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்கள் இன்று பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறைகளால் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக தொடர்பைக் கொண்டுள்ளனர். அவர்களுடைய திறமைகள் ஒன்று சேர்க்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்பட்டால், மனிதகுலத்தை தற்பொழுது தாக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட முடியும். மாறாக, வறுமை, வேலையின்மை ஆகியவைதான் பெருகி வருகின்றன. நாள் ஒன்றிற்கு 30,000 பேர் போதிய ஊட்டச்சத்து நிறைந்த உணவு இல்லாததால் இறக்கின்றனர்."

இரண்டாம் ஒளிப்பதிவு நகரத்தின் கிழக்குப் புறத்தில் Oberschoneweide என்னுமிடத்தில் மூடப்பட்டுள்ள Samsung ஆலைக்கு முன்பு எடுக்கப்பட்டது. நிர்வாகக்குழு உறுப்பினர் கிறிஸ்தோபர் வன்டரையர் கீழ்க்கண்ட வர்ணனையை அளித்தார்.

"இங்கு நீங்கள் முதலாளித்துவத்தின் மறு முகமான தொழில்துறை அழிவை காணலாம். தொழிலாளியின் உழைப்பினால் தோற்றுவிக்கப்பட்ட மதிப்பு ஊகக்காரர்களின் இலாபங்களை அதிகமாக்குகிறது. அதே நேரத்தில் நிறுவனங்கள் மூடப்படுகின்றன, ஊதியங்கள் தேக்கமடைகின்றன, பொதுநலப் பணிகள் தகர்க்கப்படுகின்றன. வளரும் ஒரே விஷயம் நிர்வாகிகளுடைய ஊதியங்கள், பங்குச் சந்தை இலாபங்கள்தான். கீழிருந்து ஆரம்பிக்கும் ஒரு சோசலிச இயக்கத்திற்கு நாங்கள் பாதை அமைக்கிறோம். அது முதலாளித்துவத்தின் பிடியை முறிக்கும். சமூகத்தின் தேவைகள்தான் இலாபம் செய்பவர்களுடைய நலன்களைக் காட்டிலும் முன்னுரிமை பெற வேண்டும். மில்லியன் கணக்கான மக்கள் வாழ்வைப் பாதிக்கும் முடிவுகள் சந்தையின் விதிகளுக்கு விடப்படக் கூடாது."

இத்திரைப்படம் "Outsider Round" நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ARD செய்தி ஒளிபரப்பிற்குப் பின்னர், தேர்தலுக்கு நான்கு நாட்கள் முன்பு செப்டம்பர் 23 காட்டப்படும்.

ஒரு புதிய தேசிய பாராளுமன்ற தேர்தல் வலைத் தளத்தை சோசலிச சமத்துவக் கட்சி தொடக்கியுள்ளது. அதில் பிரச்சார ஆதரவாளர்களாக பதிவு செய்து கொண்டு பிரச்சார நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம். அத்தகைய நடவடிக்கைகளில், உதாரணமாக, "பணி 1: சோசலிச சமத்துவக் கட்சியின் தொலைக்காட்சி ஒளிபரப்பை 5,000 பேர் வரை பார்க்க உதவுவது."

புதிய தேர்தல் வலைத் தளம் இணைய வசதிகளின்மீது குவிப்புக் காட்டுகிறது. ஆதரவாளர்கள் பல சமூக இணையங்களான Facebook, MySpace, StudiVZ போன்றவற்றிற்கு பங்களிப்புக்கள் வழங்கலாம். இக்குழுக்களை தமக்குள் கருத்துக்களை விவாதிக்க, பறிமாறிக்கொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தளம் வாடிக்கையாக தேர்தல் பிரச்சாரம் பற்றி அவர்களுக்கு தகவல் கொடுக்கும். ஒரு செய்திக் கடிதத்திற்கு பதிவு செய்து கொள்ளுவதும் இயலும். அது மின்னஞ்சல் மூலம் வசதியாக பெறப்படும்.

செய்தித்தாளை தவிர, ஒலி/வீடியோ காட்சிகளும் உண்டு; இவற்றில் சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்கள் தற்போதைய நிலைமை பற்றி விடையிறுக்கும் வகையில் வாசகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து வினாக்களுக்கு பதில் கூறுவர். சோசலிச சமத்துவக் கட்சியின் முதல் தேர்தல் ஒளிப்பதிவு அரசாங்க தொலைக்காட்சியில் காட்டப்பட உள்ளது.

குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு அல்லது சோசலிச சமத்துவ கட்சிக்கு வலைத் தளத்தின் மூலம் வினாக்கள் அனுப்பப்படலாம்.

வாக்காளர்களுடன் பிரச்சினைகளை விவாதிக்கும் சந்தர்ப்பத்திற்கு சோசலிச சமத்துவக் கட்சி உயர்மதிப்பைக் கொடுக்கின்றது. பல Bochum, Frankfurt/Main, Munich, Leipzig, Hamburg, Bielefeld உட்பட பல சிறுநகரங்கள், பெரு நகரங்களில் இது ஏற்கனவே அரை டஜன் விவாத நிகழ்ச்சிகளுக்கான தயாரிப்புக்களை நடத்தியுள்ளது. இக்கூட்டம் நடக்கும் நேரம், இடங்கள் பற்றிய விவரங்கள் தேர்தல் வலைத் தளத்தில் காணப்படலாம். அதில் பிரசுரங்களும் உள்ளன. இதையொட்டி பார்வையாளர்கள் நண்பர்களுக்கு நிகழ்ச்சி பற்றி தகவல் கொடுத்து அவர்களையும் அழைத்து வரலாம். செப்டம்பர் 26ம் தேதி தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியின் நிறைவு பேர்லினில் நடக்கும்.

பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியமைப்பது ஒரு செலவு தரும் நிகழ்வாகையால், தேர்தல் வலைத் தளத்தின் மூலம் பெரிதும் தேவைப்படும் நன்கொடைகளும் அளிக்கப்படலாம்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு அதன் வாசகர்கள் அனைவரையும் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வமுடன் பங்கு பெறுமாறு அழைப்பு விடுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved