World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German TV debate between leading election candidates

Merkel and Steinmeier promote the grand coalition

முக்கிய தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே ஜேர்மனியில் தொலைக்காட்சி விவாதம்

மேர்க்கெலும் ஸ்ரைன்மயரும் பெரும் கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகின்றனர்

By Peter Schwarz
16 September 2009

Back to screen version

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU), சமூக ஜனநாயகக் கட்சி (SPD) முக்கிய தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம் என்று அழைக்கப்பட்டிருந்த ஞாயிறு மாலை தொலைக்காட்சி தற்போது இருக்கும் பெரும் கூட்டணி அரசாங்கத்தை (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன்-CSU-என்ற மீள்கூட்டு) தொடர்வதற்கு பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சியாயிற்று.

அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) மற்றும் அவருடைய உதவி அதிபருமான பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மயர் இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளில் தாங்கள் கடைபிடித்த பொதுக் கொள்கையை வெற்றி என்று புகழ்வதில் அதிக நேரத்தை செலவழித்தனர். "நாங்கள் நிறைய நல்லது செய்தோம், ஆனால் அந்த நல்லது இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்" என்று மேர்க்கெல் விளக்கினார்; அதே நேரத்தில் ஸ்ரைன்மயர் கிட்டத்தட்ட அதே போன்ற சொற்றொடர்களை கையாண்டு, "நாங்கள் ஒன்றாக பலவற்றைச் சாதித்துள்ளோம், ஆனால் அனைத்தையும் நாங்கள் சாதிக்க முடியவில்லை." என்றார்.

தொலைக்காட்சி நிகழ்வின் நான்கு நடுவர்களின் முக்கிய வினாக்களை இருவரும் பலமுறையும் தங்கள் பொதுக் கொள்கையை திரும்பதிரும்ப ஆதரித்து விடையிறுத்தனர். அரசியல் கருத்து வேறுபாடுகள் குறைவாகக் காட்டப்பட்டு, முக்கியமற்ற பிரச்சினைகளைப் பற்றி மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தன. "போட்டியில்" பங்கு பெற்ற இருவரும் பொதுக்கருத்துக்களை விளக்குவதுடன் நிறுத்திக்கொண்டு முக்கிய கொள்கைகளை உறுதியாகக் கூறுவதைத் தவிர்த்தனர். அரசாங்கத்தை "ஒழுங்கைக் காக்கும் அமைப்பு" என்று மேர்க்கெல் விவரித்து, "சமூக தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தை" புகழ்ந்தார். தன்னுடைய உறுதியான விசுவாசத்தை சமூகநீதிக்கு காட்டிய ஸ்ரைன்மயர் புதிய வணிக அறநெறிக்கு அழைப்பு விடுத்தார். கல்வி, சமூகப் பிரச்சினைகளை, சுற்றுச் சூழல், வெளியுறவுக் கொள்களைகள் போன்ற முக்கிய தலைப்புக்கள் விவாதிக்கப்படவில்லை.

ஒரு பொதுவான தன்மையில் ஸ்ரைன்மயர் ஜேர்மனியின் மிகச் சக்திவாய்ந்த பழைமைவாத மற்றும் சமூக-ஜனநாயகக் கட்சிகளுக்கு இடையேயான பெரும் கூட்டணி ஒரு ஜனநாயகத்தில் அசாதாரண அரசாங்க வடிவமைப்பை பிரதிபலித்தது என்று விளக்கி, ஒரு மாறுபட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் தன் விருப்பத்தை அறிவித்தாலும், கூட்டணிப் பங்காளியாக எந்தக் கட்சியை தான் விரும்புகிறார் என்பது பற்றி அவர் விளக்கவில்லை. மேர்க்கெல் தடையற்ற சந்தை சார்புடைய தாராளவாத ஜனநாயக கட்சியுடன் (FDP) கூட்டணிக்குத் தன் ஆதரவு என்பதை பலமுறை கூறினார், ஆனால் தன்னுடைய விவாதத்திற்கு அதிக விளக்கத்தை கொடுக்க முடியவில்லை. FDP பற்றி சற்றே குறிப்பிட்ட அவர் அதன் தலைவர் Guide Westerwelle பற்றி ஏதும் கூறவில்லை. 90 நிமிட விவாதத்திற்கு பின்னர் FDP தலைமைச் செயலர் Dirk Niebel இது "பெரும் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக வாதிடப்பட்ட நிகழ்ச்சிதான்" என்று முடிவுரையாகக் கூறினார்.

பெரும்பாலான செய்தித்தாட்கள் இதேபோன்ற முடிவிற்குத்தான் வந்தன. Suddeutsche Zeitung கருத்தின்படி, இந்த நிகழ்ச்சி "இருவர் சண்டை என்பதைவிட சமீபத்திய ஆண்டுகளில் பெரும் கூட்டணியின் பணியைப் பற்றி அதிகம் பிரச்சாரம் செய்த ஒரு கூட்டம் போல்தான்" இருந்தது. Frankfurter Rundschau "மேர்க்கெலும் ஸ்ரைன்மயிரும் மீண்டும் ஒரு பெரும் கூட்டணியில் ஆட்சி நடத்தக்கூடாது என்பதற்கு நம்பும்படியான காரணம் ஏதும் முன்வைக்கப்படவில்லை." Rheinische Post மேர்க்கெல் மற்றும் ஸ்ரைன்மையர் இருவரும் "விவாகத் தளையில் இருந்து பிரிய விரும்பும் தம்பதியர் போல், ஆனால் எதற்காகப் பிரிகிறோம் என்று உண்மையில் தெரியாத நிலையை" ஒத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளது.

பெரும்பாலன மற்ற வர்ணனையாளர்களும் மேர்க்கெலும், ஸ்ரைன்மயரும் ஒருவரை ஒருவர் தட்டிக்கொடுத்து, அலுப்புத்தட்டும் பேச்சுக்கள் பற்றி எள்ளி நகையாடியுள்ளனர். இருவரும் ஏன் பெரும் கூட்டணியில் தொடர விரும்புகின்றனர் என்பது பற்றிய தீவிர பகுப்பாய்வு இல்லை என்பது வியப்பே ஆகும்.

உண்மையில் விவாதம் பற்றிய சரியான உணர்தலுக்கு இதுதான் திறவு கோல் ஆகும். மேர்க்கெல் மற்றும் ஸ்ரைன்மயர் இருவரும் செப்டம்பர் 27க்குப் பின்னர் வாக்காளர்கள் எதிர்பார்க்கக்கூடியதை கவனத்துடன் மறைக்க முயன்றனர். பொருளாதார, சமூக நிலைமை பற்றிய அவர்கள் கூற்று வளமான கதை போல் இருந்தது. பொருளாதார, நிதிய நெருக்கடியின் மோசமான விளைவுகள் ஏற்கனவே கடக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். உண்மையில் மோசமானது இனிதான் வரவிருக்கிறது.

இவ்விதத்தில் இரு அரசியல்வாதிகளும் தாங்கள் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட 2005ல் இருந்த மொத்த 5 இலட்சம் வேலையற்றோர் தொகை கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் 3 இலட்சம் எனக் குறைந்த உண்மை பற்றி இருவரும் பெருமிதப்பட்டுக்கொண்டனர். ஆனால் இதற்கிடையில் வேலையற்றோர் எண்ணிக்கை 3.5 மில்லியன் என்று ஏற்கனவே உயர்ந்துவிட்டது; தேர்தலுக்குப் பிறகு அரசாங்க நடவடிக்கைகளான குறைந்த பணிநேரத்திற்கு வழங்கப்படும் உதவிக்கொடுப்பனவு மற்றும் பழைய வாகனங்களுக்கு பதிலாக புதியவாகனம் வாங்கும்போது கொடுத்த உதவிப்பணம் போன்றவை இல்லாதுபோகும்போது தொழிலாளிகள் வெளியே அனுப்பப்படும் எண்ணிக்கை அதிகமாகும். OECD வேலையின்மை வரும் ஆண்டு ஐந்து மில்லியனைவிட அதிகமாகும் என குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் மில்லியன் கணக்கான வேலை இல்லாதவர்களும், குறைந்த வேலை பார்ப்பவர்களும் ஏதேனும் ஒரு காரணம் காட்ட்பட்டு உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

ஓப்பல் கார் நிறுவனத்தை மாக்னாவிற்கு விற்றதை மேர்க்கெலும் ஸ்ரைன்மயரும் தனிப்பட்ட வெற்றி என்று கூறுதல் விவாதத்தின் நேர்மையற்ற தன்மையின் ஒரு கூறுபாடு ஆகும். கார் நிறுவனத்தின் "மீட்பு" அதன் தொழிலாளர் பிரிவின் இழப்பில் நடைபெறும் என்பது தெளிவாகியுள்ளது. ஜேர்மனியில் முன்பு கூறப்பட்டிருந்த 3,500 என்பதற்கு பதிலாக 4,500 வேலைகள் அகற்றப்படும்; இங்கிலாந்து, பெல்ஜியம் மற்றும் ஸ்பெயினில் வேலையிழப்புக்கள் இன்னும் கூடுதலாக இருக்கும். அதே நேரத்தில் விற்பனை பற்றிய விவரங்கள் முழுமையாக வெளிவிடப்படாததுடன், உடன்பாடே பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் எளிதில் சரியக்கூடும்.

ஒரு சர்வதேச நிதிய நெருக்கடியும் இன்னும் கடக்கப்படவில்லை. அதன் சமீபத்திய பதிப்பில் Der Spiegel முடிவுரையாக பின்வருமாறு கூறியது: "நோய்க்கான கிருமி இன்னும் உடலில் உள்ளது. தேசிய உதவித்தொகைகள் எதிர்ப்பு மருந்து போல் செயல்படுகின்றன. இவை கிருமிகளின் அழிவு தரும் விளைவுகளை அடக்குகின்றன. ஆனால் முற்றிலும் குணமாக்குவதில்லை."

இவ்விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கணக்கின்படி, வங்கிகள் அவற்றின் பயனற்ற சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கைத்தான் இருப்புக் கணக்கில் இருந்து அகற்றியுள்ளனர். பல வங்கிகள் மீண்டுவிட்டது போல் தோன்றுவதற்கு முக்கிய காரணம் கணக்கு எழுதப்படும் விதிகள் மாற்றப்பட்டுவிட்டன. அமெரிக்காவில் 416 நிதிய அமைப்புக்கள் இப்பொழுது "சிக்கல் நிறைந்த வங்கிகள்" என்று மத்திய சேமிப்பு காப்பீட்டு நிறுவனத்தால் (FDIC) மதிப்பிடப்பட்டுள்ளன; இது முந்தைய காலாண்டைவிட ஒப்புமையில் 111 சதவிகிதம் அதிகமாகும்

வங்கித் தோல்விகள் என்று மற்றொரு அலை வந்தால், அரசாங்கம் நலிந்திருக்கும் ஜேர்மனிய வங்கிகளுக்கு ரொக்க முதலீடுகள், கடன்கள், ஒப்புதல்கள் என்று பெரும் கூட்டணி அரசாங்கம் அளித்திருந்த நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை மீட்க வேண்டியிருக்கும். அரசியலமைப்பில் "கடன் தடை" என்ற விதியைச் சேர்த்த அளவில், பெரும் கூட்டணி அரசாங்க அதிகாரிகள் ஏற்கனவே சேர்த்துள்ள பாரிய கடன்களை ஓய்வூதியம் பெறுவோர், நோயாளிகள் மற்றும் உதவி தேவைப்படுவோர் மற்றும் தொழிலாள வர்க்கம் ஆகியோரின் முதுகில் ஏற்றிவிடுவர்.

வரவிருக்கும் அரசாங்கம் ஹெகார்ட் ஷ்ரோடர் தலைமையில் இருந்த முன்னாள் சமூக ஜனநாய கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி செயல்படுத்திய செயற்பட்டியல் 2010 என்னும் சமூக நல எதிர்ப்புக் கொள்கைள், அவற்றைத் தொடர்ந்த தற்போதைய பெரும் கூட்டணியின் நடவடிக்கைகளையும் விட அதிகமான சமூகத் தாக்குதல்களை நடத்தும். சமூகநீதியைப் பற்றி மேர்க்கெலும் ஸ்ரைன்மயரும் காட்டும் கரிசனம், ஒரு சமூக தடையற்ற சந்தைப் பொருளாதாரம், வளர்ச்சி என்பனவை அவர்களுடைய உண்மையான நோக்கங்களை மறைக்கும் நோக்கத்தைக் கொண்டவை ஆகும்.

தொலைக்காட்சி வாதத்தில் பங்கு பெற்ற நான்கு நடுவர்களும் இந்த ஒளித்து விளையாடும் விளையாட்டில் கலந்து கொண்டனர். பல முறை அவர்கள் மேர்க்கெல், ஸ்ரைன்மயர் ஆகியோர் பேசும்போது குறுக்கிட்டு, ஒரு போட்டி நிறைந்த விவாதத்தை செயற்கையாகத் தோற்றுவிக்க முயன்றனர். ஆனால் இரு வேட்பாளர்களையும் போலவே அவர்களும் முக்கிய பிரச்சினைகளை தவிர்த்தனர். நடுவர்களில் ஒருவர் Maybrit Illner தான் ஸ்ரைன்மயரிடம் "செயற்பட்டியல் 2010 ஐ விட இன்னும் கடினமாதாக வரும் என்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களா?" என வினா எழுப்பினார். இப்பிரச்சினை பின்னர் தலையெடுக்கவே இல்லை!

ஸ்ரைன்மயர் மற்றும் மேர்க்கெல் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்குவதில் இருந்து கட்டுப்படுத்திக் கொண்டனர்; ஏனெனில் அவர்கள் கூட்டணி அரசாங்க வடிவமைப்பு வரவிருக்கும் சமூக வெட்டுக்களை சுமத்த மிகவும் உகந்தது என்று நினைக்கின்றனர். தடையற்ற சந்தை FDP ஒரு அரசாங்கக் கூட்டணியில் இத்தகைய கொள்கை உடையவற்றுடன் பங்கு பெறுவது தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளைப் பெரிதும் சீற்றப்படுத்தும். குறிப்பாக தொழிற்சங்கங்கள் அத்தகைய அரசாங்கத்தைக் காப்பாற்ற அரும்பாடு படவேண்டியிருக்கும். ஆனால் CDU/CSU வோ அல்லது SPD யோ FDP உடன் கூட்டணி இல்லை என்று கூறவில்லை.

பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியைப் பொறுத்தவரையில், அவர்கள் சமூக எதிர்ப்பை திசைதிருப்ப தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்; அரசியல் நெருக்கடி நீடித்தால் ஒரு கூட்டணி அரசாங்கத்திலும் சேருவர். இரு கட்சிகளும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையை பொதுமக்கள் தலையில் சுமத்துவது என்று வரும்போது பசுமை வாதிகள் ஷ்ரோடர் அரசாங்கத்தில் கூட்டணிப் பங்காளிகளாக இருந்ததுபோலும் மற்றும் இடது கட்சி ஜேர்மனிய தலைநகரான பேர்லினில் SPD கூட்டணியில் இருந்தபோலும் தங்கள் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளன.

இன்னும் ஒரு கேள்வி, தொலைக்காட்சி பேட்டியில் முற்றிலும் ஒதுக்கப்பட்ட விடயம் ஆப்கானிஸ்தான் போர் பற்றியதாகும். குண்டுஸுக்கு அருகே ஒரு ஜேர்மனிய இராணுவ அதிகாரியின் உத்தரவின்பேரில் பெரும்பாலான சாதாரண மக்கள் அடங்கிய 100 பேருக்கும் மேலானவர்கள் ஒரு பூசலில் கொல்லப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகவில்லை. குண்டுஸ் படுகொலை ஜேர்மனிய இராணுவம் ஆப்கானிஸ்தானத்தில் போரில் ஈடுபடவில்லை, மனிதாபிமானச் செயல்களில் ஈடுபட்டுவருகிறது என்ற கட்டுக்கதையை அழித்துள்ளது. உண்மையில் ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமிப்புப் படைகள் போல் செயல்பட்டு பெருகிய முறையில் உள்ளுர் எதிர்ப்பாளர்களுடன் மோதலுக்கு வருகிறது.

SPD மற்றும் CDU/CSU இரண்டுமே சிறிதும் தயக்கமின்றி குண்டுஸ் படுகொலையைக் பாதுகாத்துள்ளன. இதற்கிடையில் தக்க முடிவு இதில் இருந்து பற்றி எடுக்கப்பட வேண்டும், ஆப்கானிஸ்தானில் ஒரு "முறையான" போர் நடத்தப்பட வேண்டும் என்று கோஷ்டியாக குரல் எழுப்பப்படுகிறது. அதன் சனிக்கிழமைப் பதிப்பில் Suddeutsche Zeitung, "படைகள் அனுப்புவது பற்றி நிபந்தனைகள் அடிப்படையில் மாற்றப்பட வேண்டும்" என்று கோரியுள்ளது. தற்பொழுது உள்ள 4,500 துருப்புக்கள் போதாது என்றும் ஜேர்மனிய இராணுவம் அதன் சொந்த விமானத் தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்டிருக்க வேண்டும் என்றும், அதன் துருப்புக்கள் "இன்னும் கூடுதலான சட்டப் பாதுகாப்பை" கொண்டிருக்க வேண்டும், அதாவது வருங்காலத்தில் அரச வழங்குத்தொடுனரை கண்டு பயப்படத் தேவையில்லாமல் கொலை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய கோரிக்கைகள் அரசாங்க வட்டங்களில் தேர்தலுக்குப் பின் கவனமாகக் கேட்கப்படும் என்பதில் ஐயமில்லை. ஆனால் செப்டம்பர் 27 வரை அரசியல்வாதிகள் இப்பிரச்சினைகளை எழுப்புவதில்லை என்று உடன்பட்டுள்ளனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved