World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Washington asserts colonial-style control of Haiti at UN donors' conference

ஹைட்டி பற்றி ஐ.நா. நன்கொடையாளர்கள் மாநாட்டில், வாஷிங்டன் காலனித்துவ வடிவிலான கட்டுப்பாட்டை உறுதிபடுத்துகிறது

By Barry Grey
2 April 2010

Back to screen version

புதனன்று நியூயோர்க்கில் ஐ.நா.வில் நடைபெற்ற ஹைட்டி பற்றிய சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாடு, பேரழிவிற்கு உட்பட்ட தீவினை பில் மற்றும் ஹில்லாரி கிளின்டன் மூலம் அமெரிக்காவின் காலனித்துவ வடிவிலான கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவதற்கு ஓர் அரங்காயிற்று.

அமெரிக்க வெளிவிவகாரத்துறை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு கிட்டத்தட்ட 100 நாடுகள், பன்முகக் கடன் கொடுக்கும் நிறுவனங்கள், அறக்கடைகளை ஆகியவற்றிடம் இருந்து அடுத்த இரு ஆண்டுகளில் ஹைட்டிக்கு $5.3 பில்லியன் உதவிக்கான உறுதிமொழிகளையும் இன்னும் கூடுதலான $5பில்லியனை அதற்குப் பிறகும் உறுதிமொழியாகப் பெற்றது. 250,000 க்கும் 300,000 மக்களுக்கும் இடையே உயிர்களை இழந்துவிட்ட ஒரு வறிய நாட்டை மறுகட்டமைக்க இந்தப் பணம் ஏற்கனவே போதாதுள்ளது. ஜனவரி 12ல் நடந்த நிலநடுக்கத்தின் சேதம் கிட்டத்தட்ட $14 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உறுதிமொழியில் கூறப்பட்டுள்ள நிதிகளில் முன்பே உறுதி கொடுக்கப்பட்டதும் சரியான தொகை தெரியாத அளவு நிதியும் அடங்கியுள்ளது.

நிகழ்வைப் பொறுத்தவரை ஹைட்டி முன்பு உறுதி கூறப்பட்ட மனிதாபிமான உதவித் தொகையான $1.35 பில்லியனில் இருந்து $23 மில்லியனைத்தான் ரொக்கமாக, பெற்றது.

இந்நிகழ்வின் அடிப்படையில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கி-மூன் மற்றும் ஹைட்டிய ஜனாதிபதி ரெனே பிரேவலும், அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி கிளின்டன் மற்றும் ஹைட்டிக்கு அமெரிக்கச் சிறப்புத் தூதரான முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் இருவரும் புடைசூழ நின்றிருந்தனர். ஒரு இடைக்கால ஹைட்டி மறுகட்டமைப்பு ஆணையம் பற்றி பிரேவல் அறிவித்தார்; இதற்கு ஹைட்டிய பிரதம மந்திரி Jean-Max Bellerive யும், பில் கிளின்டனும் இணைத் தலைவர்களாக இருப்பர். இது மறுகட்டமைப்பு நிதிகள் வழங்கப்படுவதை மேற்பார்வை இடும்.

இந்த ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் அமெரிக்கா, கனடா, பிரேசில், பிரான்ஸ், வெனிஜூலா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இருப்பர். இதைத்தவிர அமெரிக்காவிற்கிடையிலான அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ஐ.நா.வின் பிரதிநிதிகளும் இருப்பர். குறைந்தது 18 மாதங்களுக்காவது செயல்பட உள்ள இந்த அமைப்பு ஏகாதிபத்திய சக்திகளின் கைகளில், போட்டியில்லாத மேலாதிக்கப் பங்கை அமெரிக்கா கொண்டிருக்கையில், ஹைட்டியின் தலைவிதியைக் தீர்மானிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை.

ஹைட்டிய அரசாங்கம் இறையாண்மைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் என்பதை காட்ட மிகக் பலமற்ற திரை ஒன்று இடப்பட்டுள்ளது. மார்ச் 31 திகதி கட்டுரையில் NewYork Times குறிப்பிட்டுள்ளபடி, நன்கொடையாளர் மாநாட்டில் வெளிவிவகாரத்துதுறை தீவிரக் கட்டுப்பாடு கொண்டிருப்பது பற்றி ஐ.நா.வில் முணுமுணுப்பு உள்ளது. ஒரு மூத்த ஐரோப்பிய தூதர் இதை 'பில், ஹில்லாரிக் காட்சி" என்று முத்திரையிட்டார்.' "

வியாழனன்று வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை ஒன்று பின்வருமாறு கூறிப்பிட்டது: "தங்கள் மறுகட்டமைப்பு பற்றி ஹைட்டியர்கள் முழுபொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது பற்றி அனைவரும் உதட்டளவில் பேசினாலும், எவரும் உண்மையில் முட்டாளக்கப்படவில்லை. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மாநாட்டின் இணைத் தலைவராக இருந்தார்...ஹைட்டிக்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் பில் கிளின்டன்பில் கிளின்டன், மூலோபாயம், ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச உதவி இயக்கப்படும் திசை ஆகியவை பற்றி ஹைட்டியின் பிரதம மந்திரியுடன் செய்யவேண்டியவற்றைக் கட்டுப்டுத்துவார். இவரை மிஸ்டர் வைஸ்ராய் என்று அழைக்கலாமா?"

மாநாட்டில் குறுகிய கால உதவியாக உறுதிகூறப்பட்டுள்ள $5.3 பில்லியனில், அமெரிக்க உதவி $1.13 பில்லியன் என்று, ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ள $1.7 பில்லியனைவிடக் குறைவாகவும், வெனிஜூலா உறுதி கொடுத்துள்ள $1.3பில்லியனைவிட மிகக்குறைவாகவும்தான் உள்ளது. பல இராணுவ ஆக்கிரமிப்புக்கள் நிறைந்திருந்த, அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கம் ஒரு நூற்றாண்டிற்கும் மேற்பட்டு இருந்ததின் விளைவாக ஏற்பட்ட பேரழிவிற்கு அமெரிக்கா கொடுத்துள்ள உதவி உறுதி, வோல் ஸ்ட்ரீட்டை பிணை எடுக்க ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு மிகச் சிறிய பகுதிதான்.

ஜனவரி 12 நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் விதத்தில் ஒபாமா நிர்வாகம் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்கள், கடற்படைக் கப்பல்களை ஹைட்டியைச் சுற்றி ரோந்து வந்து, பேரழிவினால் பாதிக்ப்பட்ட அகதிகள் அமெரிக்காவில் புகலிடிம் நாடுவதைத் தடுக்க ஏற்பாடு செய்தது. இதைத் தொடர்ந்து பெரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடைபெற்றது. அதில் 12,000 தரைப்படை, கடற்படையினர் இருந்தனர்.

Port-au-Prince விமான நிலையத்தின்மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கா கொண்டு பல நாட்களுக்கு அதிகத் தேவைப்பட்ட உணவு, குடிநீர், மருத்துவப் பொருட்கள், மருத்துவப் பிரிவு உதவியாளர்கள் நகரத்திற்குள் நுழைவதைத் தடை செய்தது. நகரமோ 7.0 அளவில் இருந்த நிலநடுக்கத்தால் தகர்க்கப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அங்கு தன் இராணுவத்தை நிலைநிறுத்துவதுதான். வாஷிங்டனின் முக்கிய நோக்கம் பேரழிவை ஒட்டி மக்கள் எழுச்சி ஏற்படுவதை அடக்குவதுதான்; இதன்மூலம் நாட்டின்மீது தன்னுடைய பிடியை இறுக்கிக் கொண்டது.

இதன் விளைவாக இடர்பாடுகளுக்கு இடையே புதையுண்டோ அல்லது உரிய நேரத்தில் சிகிச்சை இல்லாத்தால் காயத்தாலோ ஆயிரக்கணக்கான மக்கள் தேவையின்றி உயிரிழந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நியூயோர்க்கில் பெரும் தலைவர்கள் கூடி ஹட்டியை "மறுகட்டமைக்க தங்கள் திட்டங்களை விவாதிக்கையில், தங்கள் வீடுகளை இழந்த அரை மில்லியனுக்கும் மேலான ஹைட்டிய மக்கள் தக்க சுகாதாரம் அல்லது பிற அடிப்படை வசதிகள் இல்லாத இழிவான முகாம்களில் அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களில் தப்பிப்பிழைக்க போராடுகின்றனர்.

அமெரிக்க இராணுவம் விமான நிலையத்தின் மீதான கட்டுப்பட்டைத் தொடர்வதுடன், அதன் பெரும் படைப் பிரிவுகள் அந்நாட்டில் இன்னமும் உள்ளன.

மார்ச் 27 New York Times ல் வந்துள்ள தகவல்படி, உதவித் தொகையில் பெரும்பகுதிய நாட்டின் சிறிய ஆளும் உயரடுக்கை இன்னும் செல்வக் கொழிப்பு உடையதாக்குவதில் முடிந்துள்ளது. இது ஆடம்பரத்தில் திளைக்கையில், 80 சதவிகித மக்கள் நாள் ஒன்றிற்கு $2 குறைவான பணத்தில் வாழ வேண்டியுள்ளது. Port-au-Prince நகரத்தில் பெடிஷன்வில்லே பகுதியில் ஒரு முகாம் நகர வாசி, "தங்கள் உயர்ந்த உணவிடங்களுக்கு செல்லுவதற்கு, பணக்காரர்கள் எங்களை மிதித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது" என்றார் என மேற்கோளிட்டுள்ளது.

கட்டுரை தொடர்ந்தது: "பல நேரமும் ஒரு கதவும், 12 துளை வேட்டைத் துப்பாக்கியை கொண்ட காவலாளியும் தான் புதிதாக வீடிழந்து நிற்பவர்களையும் ஒரு செல்வம் நிறைந்த ஹைட்டியர்களும் வெளிநாட்டவர்களும் Raymond Weil கைக்கடியாரங்கள், Izod சட்டைகளை வாங்குவதற்கான இடமான Les Galeries Rivoli போன்ற நிறுவனங்களையும் பிரித்து நிற்கின்றது."

அடக்கப்பட்ட ஹைட்டிய மக்களின் சமூக வெடிப்பு என்ற ஆபத்து பற்றி ஹில்லாரி கிளின்டன் கவனத்தில் கொண்டிருந்தார் என்பது அவர் நன்கொடையாளர் மாநாட்டில்,"ஹைட்டியைச் சூழ்ந்திருந்த சவால்கள் மீண்டும் உலகளாவிய விளைவுகளைத் தரக்கூடிய விதத்தில் வெடிக்கக்கூடும்" என்று கூறியதில் சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது.

நிலநடுக்கத்திற்கு முன்னரே கூறியிருந்ததுபோல், ஹைட்டிக்கு தீர்வு தனியார் மூலதனத்தை அந்நாட்டினுள் ஈர்ப்பதும்(குறிப்பாக அமெரிக்கர்களை), இலாபத் திறனை வளர்ப்பதின் மூலம்தான் முடியும் என்று பில் கிளின்டன் தொடர்ந்தார். இது ஹைட்டியின் பரந்த குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதின் மூலம்தான் முடியும். நாள் ஒன்றிற்கு $3 ஐவிடக் குறைவாக ஊதியம் பெறும் தொழிலாளர்களால் தயாரிக்கப்படும் ஹைட்டிய ஆடைகள் அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு உள்ள தடைகளை அகற்ற தான் முயல இருப்பதாகவும் அவர் கூறினார்.

தற்கால வரலாற்றில் அதிக இணையில்லாத பெரும் சமூக, மானுட பெரும் சோகம் பற்றி மாநாட்டில் கூறிய கருத்துக்களில், ஜனாதிபதி என்னும் முறையில் இரு பதவிக்காலங்களில் பங்களித்த கிளின்டன் ஏதோ பெருநிறுவனங்கள் இணைதல் அல்லது ஒரு புதிய தனியார் முதலீட்டு நிதியை நிறுவதலைப் பற்றிப் பேசுவதைப் போல் உரைத்தார். "அடுத்த 18 மாதங்களில் என்னுடைய பணி உள், வெளி சக்திகளை இணைத்து, அனைவருக்குமான திறமையான விளைவையும் மற்றும் பிரயோசனங்களை அதிகரித்தலும், போக்குவரத்துச் செலவுகளைப் பெரிதும் குறைப்பதும், அனைத்தும் இடர்ப்பாடுகள் இல்லாமல் நடத்திவைப்பதுதான்." என்றார்.

ஆடைத் தயாரிப்புக் கூடங்களை நிறுவுதலைத் தவிர, வாஷிங்டனின் ஆசிகளுடன் ஹைட்டிய ஜனாதிபதி பிரேவல் கொடுத்துள்ள "மறுகட்டமைப்பு" திட்டத்தின் முக்கிய கூறுபாடு, Port-au-Prince ல் இருந்து வறிய தொழிலாளர்களை இன்னும் தொலைதூரத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் குடியமர்த்துவது ஆகும். இது தலைநகரைத் தூய்மைப்படுத்தி வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, தொழிலாளர் வர்க்கத்தைப் பிரிக்க என்ற இரு செயற்பாடுகளுக்கும் உதவும். அதனால் தொழிலாளர் வர்க்கத்தின் சமூக, அரசியல் பலமும் பிளவிற்கு உட்படுத்தப்படுத்தலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved