World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Amid mounting popular anger over price rises

Indian Stalinists stage one-day protest strike

விலைவாசி உயர்வு பற்றி பெருகிய மக்கள் சீற்றத்திற்கு இடையே

இந்திய ஸ்ராலினிஸ்டுகள் ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தம் ஒன்றை நடத்துகின்றனர்

By Deepal Jayasekera
27 April 2010

Back to screen version

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) மற்றும் அதன் இடது முன்னணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளும், 9 பிராந்திய மற்றும் சாதிகளை அடிப்படையாக கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து, இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம் சமீபத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் உர விலைகளை உயர்த்தும் சமீபத்திய முடிவுகளுக்கு எதிராக இன்று ஒரு அனைத்து இந்திய ஹர்த்தால் அதாவது தேசிய வேலைநிறுத்தம் நடத்துகின்றன.

விலைவாசி உயர்வுகள் பற்றி மக்களின் பெருகும் சீற்றம் மற்றும் தொழிலாளர்கள் போராட்டங்களின் பெருகும் அலை இவற்றிற்கு இடையே ஒரு நாள் வேலைநிறுத்தம் வருகிறது.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி, மொத்த விலைகள் இப்பொழுது ஆண்டு விகிதத்தில் 9.9 சதிகிதம் என்றும் மொத்த உணவுப் பொருட்களின் விலைகள் 17 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் சில்லறை விற்பனை விலை மொத்த விலையை விட மிக விரைவாக உயரும் என்பது சாதாரணமாகக் காணக்கூடியதாகும். இதையொட்டி நாள் ஒன்றிற்கு 1 டாலருக்கும் குறைவான வருமானத்தையுடைய நூற்றுக்கணக்கான மில்லியன் இந்திய தொழிலாளர்களும் விவசாயிகளும் உணவுப் பொருட்களின் விலைகள் 25 சதவிகிதம் அல்லது அதற்கும் அதிகம் என்பதை சமாளிக்க வேண்டியுள்ளது.

சமீபத்திய மாதங்கள் சில போர்க்குணம் மிக்க வேலை நடவடிக்கைகளை சந்தித்துள்ளன. இவற்றில் குர்காம் என்னும் தொழிற்பேட்டையில் பல நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கார் பாகங்கள் தயாரிப்புத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்ததும் அடங்கும். இம் மாதம் முன்னதாக 450,000 பொதுத் துறைத் தொழிலாளர்கள் வட இந்திய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கடுமையான வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டத்தையும் மீறி ஒரு வேலைநிறுத்தத்தை மேற்கொண்டார்கள்.

கடந்த வாரம் அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான BSNL ல் 300,000 தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். ஆனால் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்களானது அரசாங்கம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்றல் மற்றும் 100,000 வேலைகளை தகர்த்தல் என்னும் திட்டங்களை சிறிதும் பின்வாங்காத நிலையிலேயே நடவடிக்கையை இரத்து செய்தன. 800,000 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் அதன் இணைத் தொடர்பு தொழிலாளர்கள் மே 5 தொடங்கி அரசாங்கத்தின் முதலீடுகளை விற்கும் திட்டங்களுக்கு எதிராக அவர்களுடைய போராட்டத்தை தொடங்க உள்ளனர்.

ஆனால் இன்றைய ஹர்த்தால் அனைத்து தொழிலாள வர்க்கத்தையும் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக திரட்டும் நோக்கத்தைக் கொண்டதல்ல. அதே போல் பிற ஒடுக்கப்படும் தொழிலாளர்களை முதலாளித்துவ ஆட்சிக்கு எதிராக ஒன்று திரட்டி, ஒரு தொழிலாளர்கள், விவசாயிகள் அரசாங்கத்தை அமைப்பதற்காக அணிதிரட்டும் நிலைப்பாடும் இல்லை.

மாறாக இது பெருகும் சீற்றம், அமைதியின்மை ஆகியவற்றை இடது முன்னணியின் பாராளுமன்ற தந்திரங்களுக்கு தாழ்த்திப் பயன்படுத்தும் நோக்கத்தை கொண்டது. அதனுடன் இணைந்த கட்சிகளும் பல தசாப்தங்களாக இந்தியாவின் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகத்தான் செயல்பட்டு வருகின்றன.

இன்றைய எதிர்ப்பு வேலைநிறுத்தத்துடன் தொடர்புடைய இரண்டாவது நோக்கம் இடது முன்னணி தனது நைந்துவிட்ட நற்சான்றுகளை, மறு உருக்கொடுத்து எதிர்க்கட்சியாக, பெருவணிக எதிர்ப்பு சக்திகளாக காட்டிக் கொள்ள வேண்டும் என்பதாகும். இடது முன்னணி மே 2009 தேர்தலில் மிகப் பெரிய இழப்பை சந்தித்தது. அதன் தோல்விகளில் அதிகமானவை அதன் மேற்கு வங்கக் கோட்டையில் வந்தது. இதற்குக் காரணம் மாநிலத்தில் இடது முன்னிணியின் அரசாங்கம் முதலீட்டாளர்-சார்புக் கொள்கைகளை தொடர்ந்ததற்கு மக்கள் பதிலடி கொடுத்ததுதான்.

இந்திய பாராளுமன்றத்தில் இடது முன்னணியும் அதன் காங்கிரஸ் அல்லாத "மத சார்பற்ற" கட்சிகளும் வெட்டு மசோதா ஒன்றைக் கொண்டு வர இருக்கும் நேரத்தில் இந்த ஹர்த்தாலுக்கும் நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்ட வரைவு அரசாங்கம் அதன் சுங்கம் மற்றும் உற்பத்தி வரிகளை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது சமீபத்திய வரவு-செலவுத் திட்டத்தில் சுமத்தியது திரும்பப் பெற வேண்டும் என்று கோருவது ஆகும்.

வெட்டுப் பிரேரணை ஒரு பணச் சட்டவரைவை பொறுத்தது என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம், இந்தியாவின் பாராளுமன்ற விதிகளின்படி வெட்டுப்பிரேரணை வெற்றிபெற்றால் இராஜிநாமா செய்ய வேண்டும்.

தாங்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க முற்படவில்லை என்பதை வலியுறுத்த ஸ்ராலினிஸ்டுகள் பாடுபட்டுள்ளனர்--இக்கருத்தானது அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலாக, "ஒரு வெட்டு மசோதா" அளிப்பதில் இருந்து, நன்கு அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் மற்ற மூத்த கட்சித் தலைவர்களும் பலமுறையும் தங்கள் நோக்கம் UPA ஒரு "மக்கள்-சார்பு" கொள்கைகளை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்துதலே அன்றி அரசாங்கத்தை தோற்கடித்தல் அல்ல என்று பலமுறை அறிவித்துள்ளனர்.

CPI(M) ன் ஆங்கில மொழி வாராந்திர ஏடான மக்கள் ஐனநாயகம் (People's Democracy) இன் தற்போதைய பதிப்பில் வந்துள்ள தலையங்கம், "இந்த நாடு தழுவிய ஹர்த்தாலின் நோக்கம் மத்திய அரசாங்கத்தை உறுதி குலைப்பது அல்ல. இதன் நோக்கம் வெகு எளிமையானது. பொது அழுத்தம் பாராளுமன்றத்திற்கு வெளியே மற்றும் உள்ளிருந்து கொடுப்பதின் மூலம் அரசாங்கம் பெட்ரோல், டீசல் மற்றும் உரங்களின் முதுகை ஒடிக்கும் விலை உயர்வுகளை திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்பது தான்" என்று அறிவித்துள்ளது.

"ஒரு சக்தி வாய்ந்த மக்கள் அணிதிரள்வு.... இந்த அரசாங்கத்தை அதன் தற்போதைய செல்வந்தர்களின் பெரும் இலாபங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, மக்கள் நலன்களுக்கு செயல்படுவதற்கு கட்டாயப்படுத்தும்" என்று தலையங்கம் முடிவுரையாகக் கூறுகிறது.

இது ஒன்றும் ஸ்ராலினிஸ்டுகளுக்கு ஒரு புதிய நிலைப்பாடு அல்ல. மே 2004ல் இருந்து 2008 ஜூன் வரை, நான்கு ஆண்டுகளுக்கு இடது முன்னணி நடைமுறையில் UPA கூட்டணியின் உறுப்பினராகத்தான் இருந்து, அதற்கு அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு தேவையான பாராளுமன்ற வாக்குகளை அளித்து, காங்கிரஸுக்கு அடுத்தாற்போல் UPA கொள்கைகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.

UPA க்கு ஆதரவானது இந்தியாவின் முக்கிய முதலாளித்துவக் கட்சியான காங்கிரஸ், மக்கள் அழுத்தத்திற்கு கட்டுப்படும், வணிகச் சார்பு சீர்திருத்தங்களை மக்கள் சார்பு கொள்கைகளுடன் இணைக்க முடியும் என்று காங்கிரசின் வெகுஜனத் திருப்தி 2004 பிரச்சார கோஷமான "சீர்திருத்தம் ஆனால் மனித முகத்துடன் கூடியது " என்பதை நடைமுறைப்படுத்த முடியும் என்ற கூற்றைத் தெரிவித்து ஸ்ராலினிஸ்டுகள் நியாயப்படுத்தினார்கள். இடது முன்னணியானது ஒரு காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தை ஆதரிப்பதின் மூலம் தான் இந்து மேலாதிக்க BJP பதவிக்கு வருவதைத் தடுக்க முடியும் என்று மேலும் வாதிட்டது.

இறுதியில் காங்கிரஸ் கட்சி தான் இடது முன்னணியுடன் தன் கூட்டை முறித்துக் கொள்ள விருப்பியது. இந்திய-அமெரிக்க சிவிலிய அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்த அது முன்வந்தபோது இது நிகழ்ந்தது. அந்த முயற்சி இந்திய முதலாளித்துவம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இடையே ஒரு மூலோபாயப் பங்காளித்தனத்தை உறுதிப்படுத்தும் இலக்கைக் கொண்டிருந்தது.

இரு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பின் கீழ் UPA அரசாங்கமானது ஒரு வலதுசாரி வரவு-செலவுத் திட்டத்தை அளித்துள்ளது. இது பெருவணிகத்திற்கு இன்னும் கூடுதலான வரிச் சலுகைகளைக் கொடுத்து, சரியான மதிப்பில் சமூக நலன்களை வெட்டி, முதலீட்டு செயற்பாடின்மையை (தனியார் மயமாக்குதல்) வேகப்படுத்தியுள்ளது. ஸ்ராலினிஸ்டுகள் இதற்கும், தொழிலாள வர்க்கமானது UPA மீது அழுத்தம் கொடுக்கும் நிலைநோக்கை கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தொழிலாள வர்க்கத்தை இந்தியாவின் ஆளும் உயரடுக்கிற்கு தாழ்த்தும் ஸ்ராலினிஸ்டுகளின் பங்கு அவர்களுடைய "மூன்றாவது முன்னணி" --அதாவது "காங்கிரஸ் அல்லாத, BJP அல்லாத" கூட்டணி ஒன்றை பலதரப்பட்ட சாதிய மற்றும் பிராந்தியங்களை தளமாகக் கொண்ட கட்சிகளான சமாஜ்வாடி,(SP) ராஷ்ட்ரியிய ஜனதா தளம் (RJD), AIADMK, பிஜு ஜனதா தளம் (BJD), தெலுங்கு தேசக்கட்சி (TDP) ஆகியவற்றை உள்ளடக்கிய விதத்தில் அமைத்ததில் இன்னும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

இக்கட்சிகள் அனைத்துமே முன்னதாக காங்கிரஸ் அல்லது BJP தலைமையிலான கூட்டணி அரசாங்கங்களில் பங்கு கொண்டிருந்து பெருவணிக, சந்தை சீர்திருத்தங்களை செயல்படுத்தியவை. BJP உடன் நீண்டகாலம் ஒரிசாவில் ஆட்சி நடத்தி பங்காளியாக இருந்த BJD பெருவணிகத்திற்கான ஆதரவிற்கும், நூறாயிரக்கணக்கான பழங்குடி மக்களை இடம் பெயரச் செய்த பெரும் திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்ததிலும் இழிவுற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள TDP அரசாங்கம் புதிய தாராள சீர்திருத்தங்களை செயல்படுத்தியதற்கு உலக வங்கியால் பெரும் பாரட்டைப் பெற்றது. 2002ல் தமிழ்நாட்டின் AIADMK அரசாங்கமானது அரச ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முறிக்க கைது செய்தல் மற்றும் ஏராளமானவர்களைப் பதவி நீக்கல் ஆகியவற்றை செய்தது.

ஆயினும் கூட ஸ்ராலினிஸ்டுகள் இன்றைய ஹர்த்தாலை இத்தகைய பிற்போக்குக் கட்சிகளுடன் தந்திரமாக அவைகளை பிணைக்க முயற்சிக்கிறது. இவை அனைத்தும் பலவித பிராந்தியத்தை தளமாகக் கொண்ட இந்திய மூலதனப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் அவற்றை ஸ்ராலினிஸ்டுகள், காங்கிரஸ் மற்றும் BJP க்கு "முற்போக்கான மாற்றீடு" என்று ஊக்குவிக்க முற்படுகின்றனர்.

இன்றைய ஹர்த்தாலுக்கு முன்பு இந்திய செய்தி ஊடகமானது சமாஜ்வாடிக் கட்சியும் RJD யும், ஒருவேளை இடது முன்னணிக் கூட்டணிக் கட்சிகளில் மற்றவையும் இன்றைய வெட்டு மசோதா பற்றிய வாக்கெடுப்பு பற்றி காங்கிரஸ் கட்சியுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் தலைமையானது UPA வெட்டுத் தீர்மானத்தில் வெற்றுபெறுவது உறுதி என்று அறிவித்துள்ள நிலையிலும், இந்திய பாராளுமன்ற கணக்கின் சிக்கல் தன்மையை காணும்போது உறுதியளிக்க முடியாதது ஆகும்.

இன்றைய வாக்கெடுப்பின் இறுதியில் என்ன நடந்தாலும், இத்தகைய உத்தியானது ஸ்ராலினிஸ்டுகளின் காங்கிரஸ் அல்லாத "மதச் சார்பற்ற"கட்சிகளுடன் கொண்டுள்ள கூட்டணியின் மோசடித்தன, பிற்போக்குத்தனத்தைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

UPA ஆனது ஒரு டஜன் கட்சிகளுடனும் ஒரு ஒற்றை எம்.பி. மற்றும் 9 சுயேட்சை எம்.பிக்களில் பெரும்பாலானவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டால், அது பெரும்பான்மையை அடைந்துவிடும். அது BSP எனப்படும் பகுஜன சமாஜக் கட்சி அதாவது உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியினாலும் ஆதரவைப் பெறும். ஆனால் எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்கு எச்சரிக்கையாக காங்கிரஸ் கட்சியின் தலைமை ஹர்த்தால் சார்பு முகாமில் இருக்கும் சில கட்சிகளுடைய ஆதரவையும் நாடுகிறது.

டைம்ஸ் ஒப் இந்தியாவில் வந்துள்ள தகவல் ஒன்றின்படி, வெட்டு மசோதா வாக்கிற்கு முன்னதாக, "SP மற்றும் RJD இரண்டும் பிரச்சினை குறித்து முடிவிற்கு வரவில்லை, "ஹர்த்தாலை" செவ்வாயன்று (பாராளுமன்றத்தின்) கீழ் பிரிவில் இருந்து ஒதுக்கும் போலிக்காரணமாகப் பயன்படுத்தக்கூடும்" என்று தெரிகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved