World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Communal outburst from Kerala’s Stalinist Chief Minister

கேரள ஸ்ராலினிச முதல்-அமைச்சரின் மதவாத பாய்ச்சல்

By Arun Kumar
7 August 2010

Use this version to print | Send feedback

தென் இந்திய மாநிலமான கேரளாவின் முதலமைச்சரும், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொலிட் பீரோ உறுப்பினருமான வி.எஸ்.அச்சுதானந்தன் ஜூலை 24ந் தேதி டெல்லி செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த கருத்து வெளிப்படையாகவும்- மிகச் சரியாகவும்கூட- இந்து மதவாத உணர்வாளர்களுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே தெரிகிறது.

பாபுலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ.) என்ற சின்னஞ்சிறு இஸ்லாமிய பழமைவாதக் குழுவினர், இஸ்லாமுக்கு எதிரானவர்களாக கருதுபவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ``நபிகள் நாயகத்தைப்’’ பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி சமீபத்தில் கல்லூரிப் பேராசிரியர் டி.கே.ஜோசப் என்பவரது கையை வெட்டி ``தண்டனை’’ அளித்ததாக பி.எப்.ஐ. தொண்டர்கள்மீது போலீசாரும், அரசு அதிகாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேசிய பத்திரிகையாளர்கள் குழுமியிருந்ததால் அச்சுதானந்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பி.எப்.ஐ. அமைப்புக்கு கண்டனம் தெரிவித்தார். பி.எப்.ஐ.யும் அதன் கூட்டணியினரும் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் கேரளாவை ``இஸ்லாமியர்-ஆதிக்கத்திற்குரிய’’ பகுதியாக மாற்ற திட்டமிட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர்களிடம் கூறிய அச்சுதானந்தன், ``இந்த இலக்கை எட்டுவதற்காக ஏராளமான இளைஞர்களுக்கு பணத்தையும், ஆயுதங்களையும் வாரி வழங்குகின்றனர்'' என மேலும் தெரிவித்தார்.

``இஸ்லாமியப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு இஸ்லாமியக் குழந்தைகளை பெற்றுத் தள்ளுவதற்காக இளைஞர்களுக்கு பணம் கொடுத்து மதமாற்றம் செய்யவும் அவர்கள் தூண்டுகின்றனர்'' என்றும் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.

மதமாற்றம், அதிக பிறப்பு விகிதம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் உள்ள இந்துக்களை சிறுபான்மை அந்தஸ்துக்கு கீழிறக்க இஸ்லாமியர் முயற்சிக்கின்றனர் என்று பல தசாப்தங்களாக இந்து மேலாதிக்க வலதுசாரி அமைப்பு மதச்சாயம் பூசி தீயைக் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறது. `வலுக்கட்டாயமாகவோ, ஆசைகாட்டியோ மதமாற்றம் நடப்பதைத் தடுக்கவேண்டும். ஒரு மதத்திலிருந்து வேறொன்றுக்கு ஒருவர் மாறுவதை சாத்தியமாற்றதாக்குவது, முடியாவிட்டால் கடினமாக்கும் சட்டம் கொண்டுவருவோம் என இந்து மேலாதிக்க பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.)வும், அதற்கு முன்பிருந்த ஜனசங்கமும் பல ஆண்டுகளாக பிரசாரம் செய்து வருகிறது.

உழைக்கும் வர்க்கத்தின் வேடதாரி தலைவர்களுள் அச்சுதானந்தனும் ஒருவர்தான் என்றாலும், மதவாத- அடிப்படைவாத அரசியல் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை எதிர்க்கும் உரிமை அவருக்கு உண்டு.

ஆனால், அவரது விமர்சனங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை யாருக்காக குறிப்பிடப்படுகின்றன என்பதுதான் இங்கே பிரச்சனை! கேரளாவை `இஸ்லாமிய ஆதிக்க மாநிலமாக்க’ விரும்புவதாக பி.எப்.ஐ. மீது அவர் தொடுத்துள்ள தாக்குதலையும், மதரீதியான பீதி முழக்கம் எழுப்புவதையும் பார்க்கும்போது, ஸ்ராலினிச முதல் அமைச்சர் வலதுசாரி அமைப்பின் மதவாத பயக்கூச்சலை பிரதிபலித்துள்ளார்.

இந்திய அரசியல்வாதிகளில் மூத்த அனுபவமுள்ள 86 வயது அச்சுதானந்தன், இந்து பேரினவாத உணர்வுக்கு திட்டமிட்டே விண்ணப்பிக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவது அவர் பி.எப்.ஐ.யைத் தாக்கும்போது, பா.ஜ.க மற்றும் அதன் இந்து வகுப்புவாத கூட்டணிகள் மற்றும் வகுப்புவாத வளர்ச்சிக்கு உதவியும் தூண்டுதலும் வழங்குவதற்காக அனைத்து இந்திய ஸ்தாபனத்தையும் குற்றம் சாட்ட தவறிவிட்டார் என்பது தான்.

நாடாளுமன்றத்தில் உத்தியோகரபூர்வ எதிர்க்கட்சியாகவும், 1998 முதல் 2004 வரை ஆதிக்க சக்தியாக ஆட்சி செய்த பா.ஜ.க.தான் மிகப்பெரிய அளவில் கடந்த 25 ஆண்டுகளாக எண்ணெய் ஊற்றி இஸ்லாமிய மதவாதத்தையும், பழமைவாதத்தையும் வளர்த்து வந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்பு, 2002ல் குஜராத்தில் நடத்திய வன்முறை என இஸ்லாமிய எதிர்ப்பைத் தூண்டிவிட்டது. இருந்தும்கூட, போலீஸ் மற்றும் நீதித்துறை, காங்கிரஸ் மற்றும் அரசியல் மேல்தட்டுகள் அனைத்தின் துணைபோகும் தன்மை மற்றும் கோழைத்தனம் ஆகியவற்றால்தான், இவ்வாறான படுகொலைகளின் சூத்திரதாரிகளாக விளங்கியவர்கள் தண்டனைப் பயமின்றி திரிகின்றனர்.

அச்சுதானந்தனின் கருத்துக்கள் இந்து மதவாத உணர்வாளர்களுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே பரந்த அளவில் கருதப்படுகிறது.

இதுகுறித்து கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஊமன்சாண்டி கூறுகையில், ``தேச விரோத சக்திகளை ஒழிக்க அரசுக்கு நாங்கள் அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறோம். அதற்காக ஒட்டுமொத்த ஒரு சமூகத்தையே சந்தேகத்திற்கிடமாக்கும் வகையில் முன்யோசனையின்றி இதுபோன்ற கருத்தை அச்சுதானந்தன் வெளியிடுவார் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை’’ என்கிறார்.

இதற்காக சி.பி.எம். கட்சித் தலைவர்களில் ஒருசிலர் அச்சுதானந்தனை தமது சொந்த தேவைகளுக்காக விமர்சிப்பது அவசியமாக கருதினார்கள். ``அச்சுதானந்தன் பஜ்ரங்தள் (விஸ்வ இந்து பரிஷத் இளைஞரணி) போல பேசுகிறார், அவருக்கு மத்திய கட்சி ஆதரவு அளிக்கிறது’’ என (கொல்கத்தா) டெலிகிராப் பத்திரிகைக்கு சி.பி.எம். மூத்த தலைவர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் எல்லாம் தமக்கு ஆச்சரியமளிப்பதாக அச்சுதானந்தன் பதில் அளிக்கிறார். ``மதத்தின் பெயரால் சின்னஞ்சிறு குழுவினர் வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதை சுட்டிக்காட்ட முனைந்தால் இவர்கள் எதற்காக கவலைப்படுகிறார்களோ தெரியவில்லை’’ என மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆனால் பி.எப்.ஐ. என்ற `சின்னஞ்சிறு குழு`வுக்கு கண்டனம் தெரிவிக்க அச்சுதானந்தன் புது டெல்லியைத் தேர்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அதுவும் வலதுசாரி அமைப்புக்கு பொருந்துமாறு உடனடியாக தெரியும்படியாக பேசியது ஏன்?

இதற்கான விடையை மேற்கு வங்க தலைவர்கள் கூறிய தகவல்களாக `டெலிகிராப்’ வெளியிட்டுள்ளது. கேரள மக்கள் தொகையில் 23 விழுக்காடான கிறிஸ்தவரும், 25 விழுக்காடான இஸ்லாமியரும் இதுவரை சி.பி.எம். தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்.) அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை கட்சி இழந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தோல்வியடைவதைத் தவிர்க்க ``பெரும்பான்மை (இந்து) சமூகத்தை இழுப்பதுதான் சரியான வியூகம்’’ என சி.பி.எம். கருதுகிறது.

கடந்த சில வாரங்களாக சி.பி.எம். தலைமையிலான பிற மாநில அரசாங்கங்கள் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சந்தை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதைப் போல, எல்.டி.எப். அரசாங்கங்கமும் அடுத்தடுத்த வலதுசாரி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பந்த், ஹர்த்தால் (அரசியல் வேலைநிறுத்தம்) போன்றவற்றை ``சீரமைக்க’’ (அதாவது கட்டுப்படுத்த) புதிய சட்டம் இயற்றவும், அதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாக கடந்த ஜூலை மத்தியில் எல்.டி.எப். அறிவித்தது. அதற்கு முன்பாக ஜூன் மாதம், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியை (என்.சி.பி) எல்.டி.எப். அரசாங்கங்கம் தன்னுடன் இணைத்துக் கொண்டது. மராட்டியத்தைச் சேர்ந்த பிராந்தியக் கட்சியான என்.சி.பி., ஸ்ராலினினிசத்தை எதிர்த்துவரும் காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் தேசிய அரசாங்கங்கத்த்தின் கூட்டாளியாக இருப்பதோடு, கடந்த 18 மாதங்களாக அதி தீவிரவாத சிவசேனாவுடன் ஒட்டி உறவாடி வருகிறது.

இப்படியான வலது சாரி சூழ்ச்சிகள் சி.பி.எம். கடுமையாக பிளவுபட்டிருக்கையில் வந்துள்ளது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துடன் 4 ஆண்டுகள் இருந்த உறவை திடீரென துண்டித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற 2009 தேசியத் தேர்தலில் சி.பி.எம். படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன என்பது பற்றிய பிளவாகும். (See: எந்த வலதுசாரி போக்கை பின்பற்றுவது என்பதில் இந்திய ஸ்ராலினிஸ்டுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு http://www.wsws.org/tamil/articles/2010/july/100728_indian.shtml )

காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிகளில் இடம்பெற்றிருந்த பல்வேறு பிராந்திய, சாதிக் கட்சிகளை சேர்த்துக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில், தேசிய மற்றும் கேரளா மாநில சி.பி.எம். தலைவர்கள் ``காங்கிரஸ் எதிர்ப்பு’’ நிலைப்பாட்டை தற்போது ஆதரிக்கத் தொடங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களாக பா.ஜ.க.வுக்கு இணக்கமாக சி.பி.எம். தேசியத் தலைமை செயல்படுகிறது. அதன் ஒருபகுதியாகத்தான், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து சி.பி.எம்., இடதுசாரிகள் ஏற்பாடு செய்த ஒரு நாள் பொதுவேலைநிறுத்தத்தில் பாஜக பங்கெடுத்ததற்கு பாராட்டுத் தெரிவித்தது.

மேற்கு வங்கத்தில் கடந்த 1977ம் ஆண்டு முதல் இடதுசாரிக் கூட்டணி ஆட்சியில் நீடித்துவருகிறது. 2008 ஜூலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ்பெற சி.பி.எம். முடிவு செய்தபோது, மேற்கு வங்க தலைவர்கள் அதை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இந்திய-அமெரிக்க உறவை `சர்வதேச ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும்’ உறுதியாக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தியே தீருவோம் என்ற காங்கிரசின் பிடிவாதத்தால் அரசாங்கங்கத்திலிருந்து சி.பி.எம்.-ஐ உதைத்து தள்ளியது போன்ற நிலையில் தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது.

இருப்பினும், காங்கிரஸ் கட்சியுடன் (இதன்மூலம் பெரும் வர்த்தக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்கத்துடன்) சமரசமாகப் போகவேண்டும் என மேற்குவங்க சி.பி.எம். தலைமை வலியுறுத்தி வருகிறது. காங்கிரசில் இருந்து பிரிந்துசென்ற வலதுசாரி திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் தற்போது இருந்தாலும், மேற்கு வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இந்திய முதலாளித்துவத்தின் முதன்மையான கட்சியான காங்கிரஸின் கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரசை கழற்றிவிட முடியும் மற்றும் அதன் மூலமாக மேற்குவங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் படுதோல்வி நிச்சயம் என்ற நிலையை தவிர்க்கலாம் என சி.பி.எம். கருதுகிறது.

இருதரப்பையும் சமரசப்படுத்த முடியாத சூழ்நிலையில், இன்று முதல் 10ந் தேதி வரை நடைபெறும் சி.பி.எம். இன் நீடிக்கப்பட்ட மத்தியக் குழுக் கூட்டத்தில், கேரளா-மேற்கு வங்க மாநில அமைப்புகள் தமது சொந்த சுதந்திரமான வலதுசாரி பாதைகளை தொடர்வதற்கு அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.