World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  கணனி தொழில்நுட்பம்

Google-Verizon deal undermines push for an open Internet

கட்டுப்பாடற்ற இணையச்சேவைக்கான முயற்சிகளுக்குக் குழிபறிக்கும் கூகுள்-வெரிஜோன் உடன்படிக்கை

By Mike Ingram
20 August 2010

Back to screen version

ஆகஸ்ட் 9, திங்கட்கிழமை வெரிஜோனுடன் செய்து கொண்ட கூட்டு உடன்படிக்கையில் இடம்பெற்றிருந்த அதன் பெருநிறுவன கொள்கையில், கூகுள் கணிசமான மாற்றங்களைச் செய்திருக்கிறது. அனைத்து வலைத் தளங்களாலும் மற்றும் தகவல் அளிப்பு நிறுவனங்களாலும் இணையத்தை கட்டுப்பாடின்றியும், பாரபட்சமின்றியும் அணுகுவதற்கான “பாரபட்சமற்ற இணையமுறையை” (net neutrality) நிர்வகிக்க அரசாங்கத்தின் அவசியமே ஏற்படாத திசையை நோக்கி அதன் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வயர்லெஸ் இணையச்சேவையளிப்பு நிறுவனங்கள் இந்த “பாரபட்சமற்ற இணையமுறையிலிருந்து” விலக்கு பெற கோருவது என்ற உடன்பாட்டிற்கு இந்த இரண்டு நிறுவனங்களும் வந்திருக்கின்றன.

இந்த கூட்டு உடன்படிக்கையானது, கம்பிவழி பிராட்பேண்ட் வசதியளிக்கும் இணையச்சேவையளிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் “பாரபட்சமற்ற இணையமுறை” வசதியை அளிக்க ஒத்துக்கொள்கிறது. “ஒரு பிராட்பேண்ட் இணைய சேவையளிப்பு நிறுவனம் அதன் சேவையைப் பயன்படுத்தும் பயனர்களைப் பின்வரும் விஷயங்களில் தடுப்பதிலிருந்து தடைவிதிக்க வேண்டும் என்று அது முறையிடுகிறது: (1) பயனர்கள் தங்கள் விருப்பப்படி சட்டத்திற்குட்பட்ட தகவல்களை அனுப்புவதை மற்றும் பெறுவதைத் தடுப்பது; (2) அவர்கள் தங்கள் விருப்பப்படி சட்டத்திற்குட்பட்ட பயன்பாடுகளையும், சேவைகளையும் பயன்படுத்துவதை தடுப்பது; (3) வலையமைப்பை அல்லது சேவையைப் பாதிக்காத, சேவையை திருட்டுத்தனமாக பயன்படுத்தாத, அல்லது சேவையின் பிற பயனர்களுக்குப் பாதிப்பளிக்காத சட்டரீதியான உபகரணங்களைத் தங்கள் விருப்பப்படி இணைப்பதைத் தடுப்பது” ஆகியவற்றிற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று அது கோருகிறது.

Comcast போன்ற பிராட்பேண்ட் நிறுவனங்கள், அவற்றின் கட்டுப்பாட்டிலிருக்கும் இணைய பேண்ட்விட்தைப் பயன்படுத்தி, இணைய பயனர்களுக்கு முழுவதுமாக தரவு பரிமாற்றத்தைக் கொண்டு சேர்க்க கூகுள் போன்ற இணையச்சேவை நிறுவனங்களிடமிருந்து ஒரு கட்டணத்தைக் கோரக்கூடும் என்ற அவற்றின் அச்சங்களையே இது எடுத்துக்காட்டுகிறது.

Comcast நிறுவனம் அதன் வலையமைப்பு மேலாண்மை வழிமுறைகளின் விபரங்களை அளிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட வகையிலான தரவு பரிமாற்றத்தில் குறுக்கிடக்கூடாது என்றும் ஆகஸ்ட் 2008இல் பெடரல் தொலைதொடர்பு ஆணையம் (FCC) வழங்கியிருந்த ஓர் உத்தரவை, ஓர் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்த போது, இந்த ஆண்டு ஏப்ரலில் இந்த பிரச்சினை பெரிதானது. திரைப்படங்கள் மற்றும் ஏனைய பெரிய கோப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் BitTorrent போன்ற இணையவழி கோப்பு-பகிர்வு சேவைகளைப் பயன்படுத்துவதிலிருந்து வாடிக்கையாளர்களைத் தடுப்பதை நிறுத்துமாறு Comcastக்கு FCC உத்தரவிட முடியாது என்று கொலம்பியா மாகாண மேல்முறையீடுகளுக்கான அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதே கட்டுப்பாடுகளுக்குள் பிற “கூடுதல் அல்லது வேறுபட்ட சேவைகளும்” கொண்டு வரப்படக்கூடாது என்ற முறையீடுகளையும் கூகுள்/வெரிஜோன் ஆவணம் உட்கொண்டிருக்கிறது. குறிப்பாக, காங்கிரஸால் கொண்டு வரப்படும் எந்த சட்டவரைவிலிருந்தும் வயர்லெஸ் பிராட்பேண்டிற்கு விதிவிலக்கு கோரும் ஒரு முறையீட்டை அந்த அறிக்கை கொண்டுள்ளது. அது குறிப்பிடுவதாவது: “வயர்லெஸ் வலையமைப்புகளின் பிரத்யேக தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டு பண்புகளின் காரணமாகவும், அதில் நிலவும் போட்டித்தன்மை காரணமாகவும், மற்றும் வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன என்பதாலும், இப்போதைக்கு வயர்லெஸ் பிராட்பேண்டிற்கு தடையற்ற கொள்கை (transparency principle) மட்டும் தான் பொருந்தும். இதுகுறித்து கவனிக்கும் அமெரிக்க அரசாங்கத்துறை (US Government Accountability Office) ஆண்டுதோறும் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைய சேவைகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், வேகத்தையும் காங்கிரஸிற்கு அறிவிக்கலாம்.”

விரைவாக வளர்ந்து வரும் மொபைல் இணையத்திற்கான (mobile Internet) இந்த விதிவிலக்கு கோரிக்கை தான், பாரபட்சமற்ற இணையமுறை பிரச்சாரகர்களோடு கூகுளை முரண்பாடாக நிறுத்தியுள்ளது. அவர்களில் சிலர் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் வியாபாரத்தில் “கொடுமையாக” இருக்கக்கூடாது என்பதே கூகுளின் முக்கிய விருப்பம் என்ற அந்த முன்னோடி தேடுபொறி நிறுவனத்தின் பிரச்சார இயந்திரத்திடமிருந்து வந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளை நம்பிய ஒருவருக்கு தான், பாரபட்சமற்ற இணையமுறை பற்றிய விவாதத்தில் கூகுளின் நிலைப்பாடு ஓர் ஆச்சரியமாக இருக்கும். முடிவாக கூறுவதானால், ஏனைய பெருநிறுவனங்களைப் போலவே, கூகுளின் முக்கிய நோக்கமும் பணத்தைக் குவிப்பது தான்.

கூகுள் மற்றும் வெரிஜோன் இரண்டுமே மொபைல் இணைய சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஆண்டின் மார்ச்சில் comScoreஆல் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, முந்தைய மூன்று மாதகால நிலவரப்படி சந்தையில் 31.1 சதவீத பங்களிப்புடன் வெரிஜோனை முன்னனி மொபைல் சேவையளிப்பு நிறுவனமாக பட்டியலிடுகிறது. அமெரிக்க ஸ்மார்ட்போன் சந்தையில், அக்டோபர் 2009இல் 2.8 சதவீதமாக இருந்த கூகுளின் பங்களிப்பு, ஜனவரி 2010இல் 7.1 சதவீதமாக உயர்ந்தது. இது கூகுளை அந்த சந்தையில் நான்காவது இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. பிளாக்பெர்ரி தயாரிப்பாளர் RIM 43 சதவீதத்துடனும், ஆப்பிள் 25.1 சதவீதத்துடனும், மைக்ரோசாப்ட் 15.7 சதவீதத்துடனும் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருந்தன. அதேகாலத்தில், அமெரிக்க சந்தையில் பால்ம் (Palm) 2.1 சதவீத புள்ளிகளை இழந்து, 5.7 சதவீதத்திற்குச் சென்றதால், அந்த இடத்தை கூகுள் பிடித்திருக்கிறது.

சந்தையில் 25.2 சதவீதத்துடன் இருக்கும் இரண்டாவது மிக பிரபலமான மொபைல் சேவை நிறுவனமான AT&T, பெரும்பாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை விற்பதற்கான பிரத்யேக உடன்பாட்டைக் கொண்டிருப்பதாலேயே, கூகுள்/வெரிஜோன் உடன்படிக்கை அதனால் ஆதரிக்கப்படுகிறது.

2008 தேர்தல் பிரச்சாரத்தின் போது, “பாரபட்சமற்ற இணையமுறைக்குத் தன்னைத்தானே ஒரு தீவிர ஆதரவாளராக” ஒபாமா அறிவித்துக் கொண்டார். “ஏதோவொருவகை ஏனோதானோவென்ற (mom-and-pop) வலைத் தளங்களிடமிருந்து நீங்கள் மோசமான சேவையைப் பெற்றுவரும் நிலையில், உங்களுக்கு என்ன கிடைக்குமென்றால், உங்களால் நிறைய பதிவிறக்கம் செய்ய முடியும். மேலும் Fox News வலைத் தளத்திலிருந்து சிறந்த தரத்தை உங்களால் பெற முடியும்” என்று நேர்காணல்களில் குறிப்பிட்டார். “யாரிடம் சிறந்த யோசனை இருக்கிறதோ அவர்கள் சிறந்த பங்களிப்பை அளிப்பதற்கான களத்தை நீங்கள் கொண்டிருக்கவில்லை என்றால், Facebook, MySpace, Google போன்றவை தோன்றியிருக்கவே முடியாது. மேலும் இணையம் எவ்விதத்தில் செயல்படுகிறதோ, அதில் அந்த அடிப்படை கொள்கை இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நாங்கள் முன்னேறிச் செல்லும் போது, என்னுடைய FCC அதிகாரிகள் அந்த கொள்கையைக் கொண்டு வருவார்கள் என்பதை, ஒரு ஜனாதிபதியாக, நான் உறுதிப்படுத்துவேன்,” என்று அவர் தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும், ஏனைய பல பிரச்சாரங்களும் உறுதியளிப்பதைப் போலவே, ஒபாமா நிர்வாகமும் பெரு வியாபாரங்களின் முறையீடுகளுக்குள் புகுந்து கொண்டிருக்கிறது. மேலும் கட்டுப்பாடற்ற இணையச்சேவையை அதனால் ஆதரிக்கவும் முடியாத நிலையை அது நிரூபித்துள்ளது.

கூகுள்/வெரிஜோன் அறிவிப்புகளுக்கு முன்னதாக, Comcast பற்றிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின்னர், “பங்குதாரர் பேச்சுவார்த்தைகளின்” ஒரு சுற்றைத் தொடங்க ஆணையம் அழைப்புவிடுத்திருந்ததாக FCCஇன் மூத்த அதிகாரி எட்வார்டு லஜாரஸ் அறிவித்தார். “பல முயற்சிகள் ஆக்கபூர்வமாக இருந்துள்ளன. ஆனால் இணையத்தின் கட்டுபாடற்றத்தன்மையையும், சுதந்திரத்தையும் காப்பாற்றுவதில் விரைவான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை – அத்தகைய ஒரு கட்டமைப்பினால் தான் புதிய கண்டுபிடிப்புகளையும், முதலீட்டையும், சுதந்திர உரையாடலையும், நுகர்வோருக்கான தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் அளிக்க முடியும்,” என்று லஜாரஸ் தெரிவித்தார். மேலும், “இந்த முக்கிய பிரச்சினையில் நாங்கள் பரந்த உள்ளீட்டைக் கோருவதால், அனைத்து கருத்துக்களும் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

தற்போது பிராட்பேண்ட் சேவையை, கடுமையாக நெறிப்படுத்தப்படாத “தகவல் பரிமாற்ற சேவையாகவே” FCC கருதுகிறது. இதனால் பாரபட்சமற்ற இணையமுறை விதிகளுக்கு உத்தரவிடுவதற்கான அதிகாரம் அதற்கு இருப்பதாகவே FCC வாதிடுகிறது. தொலைதொடர்பு சட்டத்தின்கீழ் பிராட்பேண்ட் இணையச்சேவையை தொலைத்தொடர்பு சேவையாக மாற்றியமைக்கும் ஒரு தீர்வையும் FCC ஆராய்ந்திருக்கிறது. முதல்பார்வையில், இத்தகைய மறுசீரமைப்பு அருமையானதாக தான் தோன்றும். வழக்கத்திலிருக்கும் தொலைத்தொடர்பு துறையால் அளிக்கப்படும் சேவைகளைப் போலவே, ஸ்கைப் மற்றும் கூகுள் குரல்சேவை (Google Voice) போன்ற இணையவழி குரல் சேவைகளின் (VoIP) வளர்ச்சியுடன், பிராட்பேண்ட் வலையமைப்புகள் மிக சிறியளவில் குரல்வழி சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இத்தகைய ஒரு மறுசீரமைப்பு எவ்விதத்தில் சுதந்திரமான மற்றும் கட்டுப்பாடற்ற இணையமுறைக்கு உறுதியளிக்கும்? ஏற்கனவே தொலைத்தொடர்பு பெருநிறுவனங்களின் மீது FCC அதன் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது. எனினும், தொலைத்தொடர்பு வலையமைப்புகள் முழுமையாக திறந்துவிடப்படாமல் தான் இருக்கின்றன.

FCCஇல் இருக்கும் ஒரு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அதிகாரி மெக்கேல் கோப்ஸ், கூகுள்-வெரிஜோன் உடன்படிக்கையைக் குறிப்பிட்டு, ஒபாமா நிர்வாக கொள்கையின் போக்கைக் குற்றஞ்சாட்டினார். அவர் கூறுகையில், “இந்த அறிவிப்பு விவாதத்தை முன்னோக்கி எடுத்து செல்வதாக சிலர் கூறக்கூடும். பல பிரச்சினைகளில் அதுவும் ஒன்றாக இருக்கிறது. ஒரு தீர்மானத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டிய நேரமிது – அதாவது, பிராட்பேண்ட் தொலைதொடர்புகள் மீது FCCஇன் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான, இப்போதும் எப்போதுக்குமான ஒரு கட்டுப்பாடற்ற இணையமுறைக்கு உத்தரவாதமளிப்பதற்கான, மிகப்பெரிய பெருநிறுவனங்களின் நலன்களுக்கு முன்னால் நுகர்வோர்கள் தங்களின் நலன்களை முன்னிறுத்துவதற்கான ஒரு தீர்மானத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டிய நேரமிது” என்றார்.

உண்மை என்னவென்றால், மிகப்பெரிய பெருநிறுவனங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டு இருக்கும் ஒரு சமுதாயத்தில், இணையத்தை கட்டுப்பாடில்லாமலும், சுதந்திரமாகவும் அணுகுவதென்பது சாத்தியமில்லை. இச்சமுதாயத்தில் அனைத்து ஆதாரங்களும் பெருநிறுவன இலாபங்களுக்கான ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இணையம் இன்று பெருந்திரளான மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத பாத்திரத்தை வகிக்கிறது. அதை பெருநிறுவனங்களின் அல்லது வாஷிங்டனில் இருக்கும் அவற்றின் பிரதிநிதிகளின் கருணையை எதிர்பார்த்து விட்டுவிட முடியாது.