World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

UK student protesters denounce fees hike and police violence

கல்விப் பயிற்சிக் கட்டண அதிகரிப்பு மற்றும் பொலிசாரின் வன்முறையை இங்கிலாந்து மாணவ எதிர்ப்பாளர்கள் கண்டிக்கின்றனர்

By our reporters
11 December 2010
Back to screen version

லண்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களிடம் உலக சோசலிச வலைத் தளம்  பேசியது.

போர்ட்ஸ்மத் பல்கலைக்கழகத்தில் பெக்கி கார்ட்னர் படிக்கிறார். அவர் கூறியது: “நாங்கள் எதை எதிர்க்கிறோம் என்பதைப் பற்றி புரிந்து கொள்ளாமல் நாங்கள் செயல்படுகிறோம் என்பது போல் எங்களை நடத்துகின்றனர். “நீங்கள் 15,000 பவுண்டுகள் சம்பாதிக்கும்போது பணத்தைத் திருப்பித் தரவேண்டாம். ஆனால் 21,000 பவுண்டுகள் சம்பாதிக்கும்போது திருப்பிக் கொடுங்கள் என்று தொடர்ந்து கூறுகின்றனர்.”

ஆனால் அதை வணிக வட்டிவிகிதங்களில் திருப்பிக் கொடுக்க வேண்டும், அதாவது அதிக நாட்கள் நீங்கள் திருப்பிக் கொடுப்பதற்கு எடுத்துக் கொண்டால், மிக அதிகமான தொகையைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். நீங்கள் ஏழையாக இருந்து, கல்வியையும் கற்று இக்கட்டணத்தையெல்லாம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால், நீங்கள் பணக்காரராக இருப்பவரைவிட மிக அதிகமாகக் கொடுக்க நேரிடும்.

அவர்கள் தேர்தலின் போது எங்கள் கருத்தை  உண்மையில் மதிப்பதாகக் கூறி எங்களுக்குக் கடிதம் எழுதினர். இப்பொழுது நாங்கள் மடையர்கள் என்று கூற முற்படுகின்றனர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி நன்கு தெரியும். இன்று சாதாரணமாகத்தான் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம், ஆனால் உடனே அவர்கள் எங்களைச் சுற்றி வளைக்கின்றனர். வன்முறையே நாங்கள் சுற்றிவளைக்கப்பட்ட பின்தான் நடந்தது. இங்கு நாங்கள் நடந்து கொண்டிருந்தோம், திடீரென அது நின்று போயிற்று. கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்குப் பின்னர் நாங்கள் சுற்றி வளைக்கப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தோம், இப்பொழுது இங்கு பல மணி நேரமாக உள்ளோம்.

எங்கள் கருத்துக்கள் கேட்கப்படவில்லை. அவர்கள் எங்களைப் பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் பிரதிபலிக்கவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளில் எங்கள் நிதிய நிலைமைய அவர்கள் சீர்செய்துவிடுவதாகக் கூறும் காலத்தில், நீங்கள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இந்த நாட்டில் மதிப்பான ஏதும் மிச்சம் இருக்குமா? கல்வி இல்லை என்றால், தேசியச் சுகாதாரப் பணியும் இல்லை. அனைத்தும் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டால், ஏதும் இராது என்றுதான் நான் நினைக்கிறேன்.

தேசிய மாணவர் சங்கம் [National Union of Students] எங்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது. NUS தலைவர் ஆரோன் போர்ட்டர் ஒரு அரசியல்வாதியாகப் போக உள்ளார் என்பது தெளிவு. நான் எல்லாத் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்துவதை ஆதரிக்கிறேன். என் தகப்பனார் வேலைய இழக்க உள்ளார், அவர் NHS ல் இருக்கிறார், என்னுடைய சகோதரியும் தன்னுடைய NHS வேலையை இழக்க உள்ளார்.

கல்விக்காக மட்டும் போராடும் மாணவி அல்ல நான். அனைவருக்கும் போராடுவதில் தீவிர ஆர்வம் கொண்டுள்ளேன். பொதுச் செலவுகள் அதிகம் என்பதால்தான் தேசியக் கடன் வந்துவிட்டது என்று அவர்கள் கூறுவதுதான் பெரும் எரிச்சலை ஊட்டுகிறது. அவர்கள் கூடுதலாகச் செலவழித்தது வங்கிகளினால், அவற்றைப் பிணை எடுத்ததால்தான். இப்பொழுது அவர்கள் பொதுப் பணிச் செலவுகளைக் குறைப்பதின் மூலம் அவற்றை ஈடுகட்ட முயல்கின்றனர். இது பணச் சேமிப்பு பற்றியது. ஆனால் அவர்கள் சீர்திருத்தம் எனக்கூறி எல்லாவற்றையும் தனியார்மயமாக்க விரும்புகின்றனர்.”

ஆலன் போர்ட்ஸ்மத் பல்கலைக்கழகத்தில் ஒரு கணனி பொறியியல் மாணவர் ஆவார். அவர் கூறினார்: “மாணவர்கள் கலகம் விளைவிக்கின்றனர், நாங்கள் வன்முறையில் ஈடுபடுகிறோம் என்று செய்தி ஊடகம் கூற முற்பட்டுள்ளது. ஆனால் நடப்பதோ பொலிசார் குறுக்கே வந்து வன்முறைகளில் இறங்குவதுதான். அவர்கள் அவர்களுடைய போர்களை ஒரு நாளைக்கு நிறுத்தினால், எங்கள் கல்விக்  கட்டணச் செலவுகள் முழுவதையும் ஏற்கலாம். செல்வந்தர்கள் கொடுக்க வேண்டிய வரிகளை ஒழுங்காகக் கொடுத்தால், கல்விச் செலவுகளைக் குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.”

அன்யா ஜேர்மனியில் இருந்து வருபவர். “லண்டன் தொடர்புத்துறைக் கல்லூரியில் நான் புகைப்படக்கலை பயில்கிறேன். ஒரு முதுகலைப் பட்டத்தைப் பெற நான் முயல்கிறேன். இங்கிலாந்திற்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நான் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற கல்வியை நான் பெறவில்லை என்று காண்கிறேன். இன்னும் கல்வியே தொடங்கவில்லை. 9,000 பவுண்டுகள் கொடுத்து முதுகலைப் பட்டத்தை நான் பயில விரும்பவில்லை. ஏனெனில் என்னால் அவ்விதத்தில் சரியாகப் படிக்க முடியாது. வேலைதான் செய்து கொண்டிருக்க வேண்டும்.”

லண்டலிலுள்ள கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் ஸ்டீபன் படிக்கிறார். “இங்கு கோல்ட்ஸ்மித்ஸில் நூற்றுக்கணக்கானவர்கள் உள்ளோம். கடந்த சில தினங்களாக நாங்கள் எங்கள் நூலகத்தை ஆக்கிரமித்துள்ளோம், அங்குத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்தவரை கல்விப் பயிற்சிக் கட்டண அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சினை ஆகும். ஆனால் அது ஒரு சமூக நலன்புரி அரச முறையின் தாக்குதல் என்றுதான் கூடுதலாகக் காண்கிறேன். செய்தி ஊடகப்பிரிவுகளில் பலவும் தன்னலத்திற்காகத்தான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன என்று கூறுகின்றன. ஆனால் அது உண்மையல்ல. அடுத்த ஆண்டு நான் பட்டம் பெறும்போது என் கட்டணங்கள் முடிந்துவிடும், பலருக்கும் இதுதான் நேர்கிறது.

இது ஐரோப்பா முழுவதும் நடைபெறுகிறது. எங்கள் ஆக்கிரமிப்பு இடத்தில் நாங்கள் கிரேக்க மொழியில் ஒரு பதாகையைக் கொண்டுள்ளோம், “கிரேக்கத் தோழர்களுடன் நாம் ஒற்றுமைஎன. NUS செய்தது பெரும் வெறுப்பைத் தருவது ஆகும். உங்கள் மாணவச் சமூகத்தைப் பிரதிபலிப்பது உங்கள் வேலையே, ஆனால் உங்கள் புதிய தொழிற் கட்சியில் அரசியல் போக்கிற்காக, திசைதிருப்பி மாணவர்களையே கண்டிக்கிறீர்கள். அனைத்து வெட்டுக்களுக்கும் எதிராக இயக்கத்தை விரிவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். லண்டனில் Lewisham ல்  கோல்ட்ஸ்மித் உள்ளது. இங்கு தொழிற் கட்சி கட்டுப்பாட்டிலுள்ள குழு ஒன்று வெட்டுக்களைத் திணிக்கிறது. தொழிற் கட்சி நம்பிக்கைக்கு உரியது அல்ல என்பதைத்தான் இது காட்டுகிறது.”

கோல்ட்ஸ்மித்ஸிலேயே படிக்கும் ஜோசப் கூறினார்: “நியூ கிராஸில் சபையானது சேவைகளை வெட்டிக் கொண்டிருக்கிறது. உண்மையான செயற்பட்டியல் என்ன என்பதை இது நிரூபிக்கிறது. அவர்கள் மழலையர் பள்ளிக்கான செலவுகளையும் குறைக்கின்றனர், எல்லாவிதச் செலவுகளையும் குறைக்கின்றனர், இது முற்றிலும் நியாயமற்றது ஆகும். எனவேதான் நான் இதில் பங்கு பெறுகிறேன். எந்த அரசியல் கட்சி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. தொழிற் கட்சி ஒன்றும் உண்மையான தொழிலாளர் கட்சியாக இப்பொழுது இல்லை.

வன்முறை நிகழ்வுகள் வரும்போது பலவும் பேசப்படுகின்றன. அவை ஏற்கப்படமுடியாதவை என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் வரலாறு முழுவதையும் பார்த்தால் அரசு மக்கள் கூறுவதைக் கேட்கவில்லை என்றால், மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகின்றனர் என்பது புரியும். வங்கிக்கிளை காப்பாற்ற பிணை எடுக்க வேண்டும், இல்லாவிடின் அவை திவாலாகிவிடும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, இதுபற்றி எனக்குத் தெரியாது. சாதாரண மக்களின் இழப்பிலா அவை காப்பாற்றப்பட வேண்டும்? இது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல, வங்கியாளர்களுக்குப் போனஸ் கொடுப்பதற்கு பொது நிதியம் செல்கிறது.”

இதற்குத் தீர்வு என்ன என்று எனக்குத் தெரியாது. முதலாளித்துவத்தின் கீழ் இதற்குத் தீர்வு இல்லை. தொழிலாளர்கள் நிதி கொடுக்கிறார்கள்அப்படித்தான் முதலாளித்துவம் செயல்படுகிறது, இல்லையா, பெரும் ஏற்றமும், பின்னர் வெடிப்பும்? முதலாளித்துவம் முற்றிலும் முறை பிறழ்ந்தது. முதலாளித்துவமும் ஜனநாயகமும்அவை ஒன்றாக இணைந்து செயல்படமுடியாது. அது ஒரு இல்லாக் கருத்தைக் குறிக்கும். மிக முக்கியமாகச் செய்ய வேண்டியது சாதாரண மக்களுடன் நாம் உடன்பாடுகளைக் கட்டமைக்க வேண்டும்.

நீங்கள் கூறியுள்ளதுபோல், ஒரு புதிய சோசலிஸ்ட் கட்சி உருவாக்கப்பட வேண்டும். இந்த இயக்கம் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்தி அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும். இது எப்பொழுதும் சிறிய குழுக்களாகத்தான் தொடங்கும். மாணவர்கள் இப்பொழுது தொடங்கி விட்டனர்.”

காம்டம் பெண்கள் பாடசாலையில்லிருந்து ஒரு மாணவி கூறினார்: “நான் இன்று இதில் பங்கு பெறுகிறேன், என்றால் அது லிபரல் டெமக்கிராட்டுக்கள் முற்றிலும் காட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்று உணர்வதால்தான். தங்கள் தேர்தல் அறிக்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் அவர்கள் செயல்புரிகின்றனர். நான் இங்கு இருப்பதற்குக் காரணம், பதாகையின் மறுபக்கம் இவை அனைத்தும் வங்கியாளர்களின் தவறுஎன்று எழுதப்பட்டுள்ளதிலிருந்து தெரியவரும். அவர்கள் நம் பணத்தை வைத்துச் சூதாடினர், இப்பெருங்குழப்பத்தில் நம்மைத் தள்ளினர், இப்பொழுது நாம் அதற்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது.

 “பெருநிறுவன உரிமையாளர்கள், வங்கிகள்மீது நாம் இன்னும் கடுமையான கண்காணிப்பைக் கொள்ள வேண்டும். அவர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்கின்றனர். அதனால் நாம் நிறைய பணத்தை இழக்கிறோம்அது நம் பணம். இதற்குத் தொழிலாளர் வர்க்கமும் மத்தியதரவர்க்கத்தின் கீழ்ப்பகுதியும் விலைகொடுக் கக் கூடாது. ஒரு வீடு வாங்குவதற்கு அவர்களிடம் பணம் உள்ளது, ஆனால் இக்கட்டணங்களைக் கட்ட பணம் இல்லையாம்.”

ஒரு பொலிஸ் அதிகாரியால் நோரன் தாக்கப்பட்டார். அவர் கூறினார்: “நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். அவர் என் தலையில் அணிந்திருந்த ஸ்கார்ப்பைப் பற்றி என்னை இழுத்தார். என் முடியையும் பிடித்து இழுத்தார். ஸ்கார்பை அகற்றும்படி கூறவில்லை, அதைப் பற்றிக் கொண்டு என்னைச் சுற்ற வைத்தார். அதன்பின் என்னிடம் அவர் கலகப் பிரிவுச் சட்டத்தின் 60AA விதியை படித்துக் காட்டினார். தலையில் ஸ்கார்ப் அணியும் அளவிற்கு இங்கு குளிர் இல்லை என்றார். எவ்வளவு குளிர் என்பதைக் காட்டுவதற்கு அவரை நான் நிர்வாணப்படுத்தியிருக்க வேண்டும்.”