World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Police-state tactics against protesters in Britain

பிரிட்டனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக போலிஸ்-அரசின் தந்திரம்


Robert Stevens
13 December 2010

Back to screen version

பிரிட்டிஷ் கன்சர்வேடிவ்-லிபரல் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராகப் போராடி வரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பிறர் மீதான அடக்குமுறையானது தசாப்தங்களில் கண்டிராத மோசமான ஒன்றாகும்.

முதல் போராட்டமாய் நவம்பர் 10 அன்று இலண்டனில் நடந்த 50,000 மாணவர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி மிகப்பெரும் அளவிலான கலகத் தடுப்பு போலிசார் தொடர்ந்து  அதிகரித்துச் செல்லும் மூர்க்கமான தாக்குதல்களையே மேற்கொண்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான மாணவர்களை அடிப்பதும் கைது செய்வதும் அரங்கேறியுள்ளன. இலண்டனிலும் மற்றும் தேசமெங்கும் இருக்கும் நகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போதும் அவற்றுக்குப் பின்னரும் இந்த கைது நடவடிக்கைகள் நிகழ்ந்தன. இந்த கைது நடவடிக்கையின் பின்னணியில் கிளர்ச்சி எதிர்ப்பு செயல்பாடுகளுக்கென பிரத்யேகமாக இயங்கும் சிறப்புப் பிரிவுகளால் நடத்தப்பட்ட உளவு வேலைகள் இருந்தன.

போலிஸ் வன்முறையின் அளவு 1984-85 சுரங்கத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் பின்னர் கண்டிராத ஒரு அளவில் இருக்கிறது. இலண்டனில் டிசம்பர் 9 அன்று நடந்தடே எக்ஸ் 3”  ஆர்ப்பாட்டத்தில் கண்ட வன்முறை மிக மிருகத்தனமானதாய் இருந்தது. சுமார் 20,000 பேர் கலந்து கொண்ட ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 2,800 போலிசார் திரட்டப்பட்டிருந்தனர்.

வெஸ்ட்மினிஸ்டரில் விவாதத்தில் இருக்கும் கல்விக் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய நுழைந்ததை ஒட்டி பெருநகரப் போலிஸ் ஒரு முன்கூட்டித் திட்டமிட்ட தாக்குதலை செயல்படுத்தியிருந்தது. பெருந்திரளான போலிஸ் இருந்ததால் ஆர்ப்பாட்டக்காரர்களில் அநேக பேர் நாடாளுமன்றத்தின் கிட்டே நெருங்கவியலாமல் கலைந்து விட்டனர். நாடாளுமன்ற சதுக்கத்திற்குள் சமாளித்து நுழைந்தவர்களும் போலிசின்அடைப்பு நடவடிக்கை தந்திரத்தில் 10 மணி நேரம் வரையிலும் சிக்கிக் கொண்டிருந்தனர். இரவு 11.30 மணி வரையிலும் கூட பலரும் வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் மொத்தமாய் 33 பேர் கைது செய்யப்பட்டனர், 50க்கும் மேலானோர் படுகாயமுற்றனர். இன்னும் பதில் நடவடிக்கைக்கு அஞ்சி பலர் காயங்களை வெளியில் சொல்லவில்லை. 10 வயது பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் ஆயுதமேந்திய கலகத் தடுப்பு போலிசாரால் தாக்கப்பட்டதை ஏராளமான செய்திகளும், காணொளிப் படங்களும் புகைப்பட சான்றுகளும் நிரூபிக்கின்றன.

கால்ஊனமுற்ற செய்தியாளரும் வலைப்பதிவருமான ஜாடி மெகிண்டைர் அவரது சக்கரநாற்காலியில் இருந்து இருமுறை இழுக்கப்பட்டதோடு போலிசாரால் லத்தி கொண்டும் தாக்கப்பட்டார். “ஒரு போலிஸ்காரர் என்னை தோளில் லத்தியால் அடித்தார். அதன்பின் திடீரென்று நான்கைந்து பேர் எனது நாற்காலியில் இருந்து இழுத்தனர்.”

ஒரு 17 வயது மாணவி தானும் தனது தோழிகளும் போலிசாரால் தாக்கப்பட்ட விதத்தை விவரித்தார். “அவர்கள் எந்த கருணையும் காட்டவில்லை. 17 வயது பெண்களை போலிசார் லத்தி கொண்டு அடித்தனர்.”

பின்னர் என் நண்பன் அனுப்பிய செய்தியில், அவனால் தப்பிக்க முடியவில்லை என்றும், அவனைக் கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியதாகவும் கூறியிருந்தான். அவனைக் கீழே தள்ளி மூன்று போலிசார் இரத்தம் வரும் வரையில் அடித்திருக்கிறார்கள். இரத்தம் வந்த பின்னரும் கூட அவனுக்கு முதலுதவி எதுவும் அளிக்காமல் அடுத்த மாணவனை தாக்க சென்று விட்டார்கள்.”

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறையின் இந்த அளவினைப் பிரயோகிப்பதற்கான உரிமம் தான் முதன்முதலில் வெட்டுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடங்கியதில் இருந்தே போலிசாரின் இலக்காக இருந்து வந்திருக்கும் ஒன்றாகும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களில் திணிக்கப்படுகின்ற சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கத் துணியும் எவரொருவரையும் பயமுறுத்துவதே இதன் நோக்கமாகும். நவம்பர் 10 அன்று கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையகமான மில்பாங்க் டவர்ஸ் ஆக்கிரமிக்கப்பட்ட சம்பவத்தின் போது போலிசார், 2009 ஏப்ரலில் இலண்டனில் நடந்த ஜி20 ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்குப் பின்னர் தங்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் தான் தங்கள் கையில்கட்டுப்பாடு இல்லாமல் போனதாக முறையீடு செய்தனர். இலண்டன் சம்பவத்தில், இயான் டோம்லின்சன் என்னும் ஒரு செய்தித்தாள் விற்பனையாளர் போலிசின் கையில் சிக்கி உயிரிழந்த சம்பவம், போலிசின்அடைப்பு தந்திரம் மற்றும் வன்முறை மிது பரவலான விமர்சனத்தைக் கொண்டுவந்ததோடு, சீர்திருத்தப்படுமென்ற வாக்குறுதியளிக்கப்படவும் இட்டுச் சென்றது.

வியாழக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில், போலிசாரின்கட்டுகள் அவிழ்க்கப்பட்டிருந்ததன் காரணத்தால், பெருநகர போலிசின் கரங்களில் இன்னொரு மரணம் ஏறக்குறைய சம்பவிக்கவிருந்தது. மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அல்பி மெடோஸ் என்னும் 20 வயது மாணவன் போலிசாரின் லத்தி அடியில் மயங்கி நினைவின்றி சாய்ந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். தலையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு பலமணி நேரம் அறுவைச் சிகிச்சை நடந்தது.

அதன்பின்னரும் போலிஸ் வன்முறை தீவிரப்படவே செய்தது. டிசம்பர் 9 அன்று மாலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு சிறு குழுவினர் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா சென்ற காருக்கு நெருக்கமாய் வர அனுமதிக்கப்பட்டனர். முடியாட்சி விரோத முழக்கங்கள் சில எழுப்பப்பட்டன, காரின் மீது பெயிண்ட் வீசப்பட்டது, அத்துடன் கார்க்கண்ணாடி ஒன்றும் உடைந்தது.

அரசாங்கமும் ஊடகங்களும் இதற்குப் பதிலடியாக கடுமையான தண்டனைக்கு கோருகின்றன. போலிஸ் பாதுகாப்பை அதிகரிக்கக் கோரும் ஆவேசமான கோரிக்கைகள் எல்லாம் வேக வேகமாய் வந்து விட்டிருக்கின்றன. பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்தார்: “இந்த மோசமான வழிகளில் நடந்து கொண்டவர்கள் இம்மண்ணின் சட்டத்தின் சக்தியின் முழுவீச்சையும் உணரச் செய்வதற்கு நாங்கள் உறுதி காட்ட விரும்புகிறோம்.” கன்சர்வேடிவ் கட்சியின் இலண்டன் மேயர் போரிஸ் ஜோன்சன் எச்சரித்தார்: “நாம் ஒரு வேறுபட்ட அமைப்பைக் கொண்டிருந்திருக்கலாம். நீர்ப் பீரங்கிகளை கொண்டிருந்திருக்கலாம். லத்தியால் தடியடி நடத்தியிருக்கலாம். ஒரு மாறுபட்ட ஜனநாயக வகையைக் கொண்டிருக்கலாம். இன்னும் நிறைய மண்டைகளை நாம் உடைத்திருக்கலாம்.”

துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்ததில் இளவரசருக்கு பாதுகாப்பாய் இருந்த ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிகள்உண்மையான மனக்கட்டுப்பாட்டை காட்டியிருந்ததாய் கூறி பெருநகர போலிஸ் ஆணையர் சர் போல் ஸ்டீபன்சன் அதிர்ச்சியூட்டினார். பாதுகாப்பு ஆய்வு அதிகாரியும் முன்னாள் போலிஸ் அதிகாரியுமான சார்லஸ் ஷூபிரிட்ஜ் கூறுகையில், “துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதான சூழ்நிலையை போலிசார் உணரும் ஒரு காட்சியை ஒருவர் எண்ணிப் பார்க்க முடிகிறது. அது அபாயமாகும் சாத்தியமுடைய சூழ்நிலையாக இல்லை. அபாயமான சூழ்நிலையாகவே இருந்தது.”

இலண்டன் ஈவினிங் செய்தித்தாள் இந்த குறிப்பை எடுத்துக் கொண்டு தலையங்கப்படுத்தியது: “

நீர்ப் பீரங்கிகள் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவது உட்பட இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அவசியப்படக் கூடுமா என்பதே போலிஸ், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் முன் இருக்கும் கேள்வி ஆகும்....”

சென்ற மாதத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் மீது பெருநகர போலிசார் வெள்ளியன்று ஒரு முக்கிய குற்றவியல் விசாரணையை அறிவித்துள்ளனர். இனிவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு நீர்ப் பீரங்கிகளைப் பயன்படுத்தும் தெரிவை பெருநகரப் போலிசார் கருதி வருவதாக பிபிசியின் நியூஸ்நைட் நிகழ்ச்சி தெரிவித்தது. அடக்குமுறைக்கு அப்பட்டமாய் திரும்புவதன் அரசியல் தாக்கம் குறித்த கவலையை தலைமை போலிஸ் அதிகாரிகள் கழகத்தின் தலைவரான சர் ஹியூ ஓர்டெ வெளியிட்டார். “ஆர்ப்பாட்டங்களில் நேரும் தொடர்ந்த மோதல்களால் போலிசாரின் மரியாதைக்கு அபாயம் தோன்றியுள்ளதா என்று அவரிடம் கார்டியன் கேட்டது. அதற்கு ஓர்டே அளித்த பதில்: “ஆம், போலிசார் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதைக் காட்டிலும் அரசின் ஆயுதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் விருப்பத்தை செலுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்படும் போது”.

ஒரு அரசியல் திட்டத்தை முன்செலுத்துவதற்கு எங்களது அரசியல் எஜமான்களால் செலுத்தப்படுகிறோம் என்பதான குற்றச்சாட்டுகளை இல்லாது செய்ய வேண்டுமென்றால் போலிஸ்செயல்பாட்டுரீதியாய் சுதந்திரமான அமைப்பாக காணப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஓர்டேயின் அச்சங்களுக்கு அடித்தளமிருக்கிறது. போலிசின் செயல்பாடு பெருந்திரளான உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதே என்கிற ஒரு பாடத்தை மில்லியன் கணக்கான மக்கள் பெற்று வருகின்றனர். போலிஸ் வெறுமனே அரசின் ஆயுதம் மட்டுமல்ல, ஆளும் உயரடுக்கிற்கு சேவை செய்யும் ஒரு ஒடுக்குமுறை எந்திரமாக அதன் அடிப்படையான தன்மையை அது உச்சமாய் பிரதிநிதித்துவம் செய்கிறது. அடிப்படையில், அரசு என்பது, பிரடெரிக் ஏங்கல்சின் வார்த்தைகளில் சொல்வதானால், “சிறைச்சாலை உள்ளிட்டவற்றை தங்களின் உத்தரவில் கொண்ட ஆயுதபாணியான மனிதர்களின் சிறப்பு அமைப்புகளையே கொண்டிருக்கிறது.

அரசின் ஒடுக்குகிற மற்றும் வர்க்க தன்மையானது இப்போது பெருகிய முறையில் பட்டவர்த்தனமாய் ஆகி வருவதான உண்மையும், அது பொதுவாக அணிந்து வரும் ஜனநாயக மேலணிகள் எல்லாம் கழன்று விழத் தொடங்கியிருப்பதான உண்மையும் மிகப்பெரும் அரசியல் முக்கியத்துவம் உடையவை ஆகும். பட்டவர்த்தனமாய் அரசியல்மயமாக்கப்பட்ட போலிஸ் சக்தியைக் கொண்டு வெகுஜன அடக்குமுறையில் இறங்குவது என்பது தீவிரமான வர்க்க குரோதங்களின் விளைபொருளே ஆகும்.

எங்கேயிருக்கும் அரசாங்கமாய் இருந்தாலும் சரி, அது என்ன அரசியல் நிறத்தைக் கொண்டிருந்தாலும் சரி, வெகுஜன மக்களின் வெறுப்பை சம்பாதித்திருக்கிற அவர்களின் நலன்களுக்கு நேர்விரோதமாய் செயல்படுகிற கொள்கைகளைத் திணிப்பதற்கு எதேச்சாதிகார வழிமுறைகளில் இறங்குகின்றன.

ஸ்பெயினில் பிரதமர் ஜோஸ் லூயி சப்பாதேரோ விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து, ஒரு அரசு உஷார் நிலையை அறிவித்து, அந்த ஊழியர்களை இராணுவ கட்டளையின் கீழ் துப்பாக்கி முனையில் வேலைக்குத் திரும்பச் செய்த நிகழ்வுக்கு ஒரு சில தினங்களின் பின்னர் பிரிட்டிஷ் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்தேறியுள்ளன. அங்கு ஏராளமான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைத்தண்டனைக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கிரீஸில் ஆர்ப்பாட்டம் செய்த பார ஊர்தி ஓட்டுநர்களுக்கு எதிராக போலிஸ் மற்றும் இராணுவம் இரண்டுமே பயன்படுத்தப்பட்டன என்பதோடு வேலைநிறுத்தம் செய்த கப்பற்துறை ஊழியர்களுக்கு எதிராக இருமுறை அவசரகால இராணுவ உத்தரவுகள் சமூக ஜனநாயகக் கட்சியின் PASOK அரசாங்கத்தால் பயன்படுத்தப்பட்டன.

பிரான்சில் எண்ணெய் சுத்திகரிப்புத் துறை தொழிலாளர்களுக்கு எதிராக கலகத் தடுப்பு போலிசார் பயன்படுத்தப்பட்டனர்.

இந்த நிகழ்வுகள் எல்லாம் உழைக்கும் மக்களுக்கு முன்பாக அவசரமான கடமைகளை முன்வைக்கின்றன. மிருகத்தனமான அரசு ஒடுக்குமுறையின் மூலமாக திணிக்கப்படும் சிக்கனம், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றின் ஒரு வருங்காலத்திற்கான ஒரே மாற்று இந்த பிற்போக்கான அரசாங்கங்களைக் கீழிறக்கி விட்டு சோசலிசக் கொள்கைகளுக்கு உறுதியெடுத்துக் கொண்ட ஜனநாயகமயமான தொழிலாளர் அரசாங்கங்களை அந்த இடத்தில் வைப்பதற்கு உறுதி கொண்ட வெகுஜன அரசியல் இயக்கத்தைக் கட்டுவதே ஆகும்.