World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

A talk by WSWS arts editor David Walsh

உலக சோசலிச வலைத் தளத்தின் கலைப் பிரிவின் ஆசிரியர் டேவிட் வோல்ஷ் அளித்த ஓர் உரை

The Detroit Symphony strike and the defense of culture in the US

டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு வேலைநிறுத்தமும், அமெரிக்காவில் கலாச்சார பாதுகாப்பும்

By David Walsh
18 November 2010
Back to screen version

இது, நவம்பர் 15இல் மிக்சிகனின் அன் ஆர்பரில் நடந்த கூட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் கலைப் பிரிவின் ஆசிரியர் டேவிட் வோல்ஷால் அளிக்கப்பட்ட குறிப்புகளாகும்.

 

அக்டோபர் 4இல் தொடங்கிய டெட்ராய்ட் சிம்பொனி இசைக்குழு உறுப்பினர்களின் வேலைநிறுத்தம் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இந்த முரண்பாட்டின் மிகநெருங்கிய சூழ்நிலைகள் மிகத்தெளிவானவையாகும்; அவற்றைக் குறித்து நாம் பேசுவோம். ஆனால் போராட்டத்தைப் பரந்த சமூக மற்றும் வரலாற்று ரீதியிலான தன்மையில் பார்ப்பது தான், இந்த மாலை நேரத்தில் நம்முடைய மிக அடிப்படையான நோக்கமாக இருக்கும்.

இந்நாட்டில் நடக்கும் தற்போதைய உத்தியோகபூர்வ தாக்குதலுக்கு எதிராக கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உள்ள பிரச்சினைகள் தான் நம்முன்னால் எல்லாவற்றிற்கும் முதலாவதாக நிற்கிறது. DSO நிர்வாகத்தால் முறையிடப்பட்டிருக்கும் பெரும் வெட்டுக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இசை வாசிப்பாளர்களின் அடிப்படை ஊதியம் (பணவீக்கத்தை கணக்கில் எடுத்து பார்ப்போமேயானால்), 1975இல் இருந்ததை விடவும் குறைவாக கொண்டு செல்லப்படும். இது அமெரிக்க ஆளும் மேற்தட்டின் உண்மையான மனோபாவத்தை எடுத்துக்காட்டுகிறது. மேலும் நிர்வாகம் அதன் வழியில் தொடர்ந்தால், ஒரு முன்னனி இசைக்குழுவாக இருக்கும் DSO இல்லாமல் அழிக்கப்படும். அது இந்த துறையின் மற்றும் இந்த நாட்டின் கலாச்சார வாழ்க்கையின்மீது விழும் ஒரு பலத்த அடியாகும்.

மற்றொருபுறம் DSO இசைக்கலைஞர்களின் எதிர்ப்பானது, இந்த அமைப்புமுறையின் வரலாற்றுரீதியிலான நெருக்கடிக்கு உழைக்கும் மக்களை விலை செலுத்த வைக்கும் முயற்சிகளுக்கு எதிராக, தகமைவாய்ந்த தொழிலாளர்கள் உட்பட உழைக்கும் மக்களின் பரந்த அடுக்குகளிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. கடந்த பல ஆண்டுகளில் ட்ரில்லியன் கணக்கான பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன; பில்லியன் கணக்கில் நவ-காலனித்துவ யுத்தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் சுகாதாரத்திற்கு, கல்விக்கு மற்றும் சமூக உள்கட்டமைப்பு, இன்னும் குறைவாக கலை மற்றும் கலாச்சாரத்திற்கு என்று வரும் போது, நம்மிடம் "பணம் இல்லை" என்று சொல்லப்படுகிறது. சமூகத்தில் செல்வம் குவிந்திருக்கிறது, ஆனால் அது விரல்விட்டு எண்ணக்கூடிய மக்களால் ஏகபோகமாக்கப்பட்டிருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, டெட்ராய்ட் இசைக்கலைஞர்கள் மீதான தாக்குதலின் பரிமாணங்களும் மற்றும் அவர்கள் தற்போது தங்களிடத்தில் காணும் இக்கட்டான நிலைமையும், அவர்களின் புறநிலையான சமூக நிலைமையை வெளிச்சமிட்டு காட்ட உதவுகிறது. ஊதிய குறைப்புகள், ஓய்வூதிய வயது மற்றும் சுகாதார நலன்களில் குறைப்பு அல்லது அவற்றை முற்றிலுமாக நீக்குதல், மோசமான பணியிட நிலைமைகள் போன்றவற்றை முகங்கொடுக்கும் மில்லியன் கணக்கான வாகன மற்றும் ஏனைய தொழில்துறை தொழிலாளர்கள், விமானத்துறை தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஏனையவர்கள் இருக்கும் அதே பக்கத்தில் DSO இசைக்கலைஞர்களும் இருக்கிறார்கள் என்ற ஒரு கடுமையான, ஆனால் மதிப்புமிக்க பாடம் DSO இசைக்கலைஞர்களுக்கு இப்போது கற்றுக்கொடுக்கப்படுகிறது.

ஒவ்வொரு விதமான கலாச்சார அமைப்புகள் மீதும் ஏற்பட்டிருக்கும் தேசியளவிலான நெருக்கடியின் குறிப்பிட்ட அதே உள்ளடக்கத்தில் தான், DSO மீதான தாக்குதலும் நடந்து வருகிறது. அரசாங்கத்தின் ஒவ்வொரு மட்டத்திலும், பொதுத்துறை கல்வி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. பல நூலக அமைப்புகள் வெட்டுக்களையும், கதவடைப்புகளையும் அல்லது தனியார்மயமாக்கலையும் முகங்கொடுக்கின்றன. அமெரிக்காவிலுள்ள ஆயிரக்கணக்கான அருங்காட்சியக ஊழியர்களுடன், அருங்காட்சியக இயக்குனர்களில் மூன்றில் ஒரு பங்கினர் அக்டோபர் 2009வாக்கில் ஊதிய வெட்டுக்களைச் சந்தித்தார்கள்.

கடந்த மாதம் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, முப்பத்தியொரு கலைசார் அரசு அமைப்புகள், 2011ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கின்றன. கடந்த தசாப்தத்தில், அரசின் கலைகளுக்கான பரிசளிப்புகள் 34.7 சதவீதம் குறைந்திருக்கிறது. பணவீக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 10 ஆண்டு கால குறைவு  45 சதவீதத்திற்கும் மேலாக இருக்கிறது.

2010 நிதியாண்டில் சுமார் 100,000 இலாப நோக்கமற்ற கலைக் குழுக்களுக்கு (NEA) -கலைகளுக்கான தேசிய மானியத்தின் மூலமாக- அளிக்கப்படும் மத்திய ஒதுக்கீடு, மொத்தத்தில் 167.5 மில்லியன் டாலர் தான் சேர்க்கப்பட்டது (இது ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் அண்ணளவாக  20 மணித்தியாலங்களுக்கு செலவிடப்படும் தொகையாகும்). 1978இல் NEA ஒதுக்கீடு 123 மில்லியன் டாலராக அல்லது தற்போதைய டாலரில் குறிப்பிடுவதானால் 427 மில்லியன் டாலராக இருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பணவீக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 1978இல் ஒதுக்கப்பட்ட தொகையிலிருந்து 2010 தொகை 61 சதவீத குறைப்பை எடுத்துக்காட்டுகிறது. 2009இல், அமெரிக்காவில் உள்ள கலை அமைப்புகளில் 65 சதவீத அமைப்புகள் மூன்று மாதங்களுக்கும் குறைவான தொகையையே கையிருப்பாக கொண்டிருந்தன.

முரண்பட்ட வகையில், இவை பேரழிவை அளிக்கக்கூடிய புள்ளிவிபரங்களாகும்; இதற்கு எந்த தீர்வும் கிடைப்பதாக நம்முன்னால் தெரியவில்லை.

NEA தொகையை மனதில் கொண்டு, 2010க்கான மத்திய வரவுசெலவுத்திட்டத்தை பார்ப்போம். இது 3.55 ட்ரில்லியனாக இருந்தது. அது பின்வருவனவற்றை உட்கொண்டிருந்தது:

· பாதுகாப்பு துறைக்கு 663.7 பில்லியன் டாலர்   (வெளிநாட்டிற்கான எதிர்பாரா நடவடிக்கைகள், அதாவது "பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம்" உட்பட)

·முன்னாள் படையினர் விவகாரத்துறைக்கு 52.5 பில்லியன் டாலர்.

· உள்நாட்டு பாதுக்காப்புத்துறைக்கு 42.7 பில்லியன் டாலர்

இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு ஏற்கனவே 758.9 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. (மத்திய அரசிற்கு வரியாக செலுத்தப்படும் ஒவ்வொரு டாலரிலும் 50 சதவீதத்திற்கும் மேலான தொகை கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால யுத்தத்திற்கு செலவிடப்படுவதாக பொதுவாக கருதப்படுகிறது.)

என்னுடைய கணக்கு சரியாக இருக்குமேயானால், 2010இல் NEA இற்கான நிதி ஒதுக்கீட்டில் இருக்கும் 167.5 மில்லியன் டாலர் என்பது இராணுவம் மற்றும் உளவுத்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 0.0002 சதவீதமாகும்; அதாவது ஒரு சதவீதத்தில் இருபதாயிரம் மடங்காகும். இது தான் கலைத்துறை வாழ்க்கையை குறித்த, அமெரிக்க சமூகத்தின் உத்தியோகபூர்வமான ஒரு மனோபாவமாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்-இது பலவீனமான, சீர்கெட்ட சமூக ஒழுங்குமுறையின் ஒரு வெட்கக்கேடான அடையாளமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, NEAவை கைவிட வேண்டும் என்று வலதுசாரி குடியரசு கட்சியிடமிருந்து தொடர்ந்து வலியுறுத்தல்கள் இருக்கின்றன என்பதும் உண்மை தான். கடந்த இரண்டு தசாப்தங்களின் முரண்பாடுகளின் விளைவாக, எந்த நிகழ்விலும் NEA ஒரு நடுநலை அமைப்பாக நின்று கொண்டிருக்கிறது-எல்லாவற்றிற்கும் மேலாக, அதன் அதிகாரிகள் வலதுகளிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்று பயமுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சிம்பொனி இசைக்குழுக்களைப் பொறுத்த வரையில், பல்வேறு வகையிலும் நிலைமை படுமோசமாக இருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிலடெல்பியா சிம்பொனி நொடிந்து போவதற்கான சாத்தியக்கூறை முகங்கொடுத்தது. நியூயோர்க்கின் பில்ஹார்மோனிக் கடந்த பருவகாலத்தில் இருந்து 4.6 மில்லியன் டாலர் பற்றாக்குறைக்கு உள்ளாகி இருப்பதாக ஓர் அறிக்கையை சமர்பித்தது; அதுவும் 2010இல் இதேபோன்று ஒரு பற்றாக்குறைக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஊதியத்தில் 5 சதவீத குறைப்பு முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரியில் கிளெவ்லாந்து சிம்பொனி ஒரு நாள் வேலைநிறுத்தத்தை நடத்தியது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு இல்லை என்றும், மூன்றாம் ஆண்டில் சிறயளவில் உயர்வு அளிக்கப்படும் என்றும் இறுதி உடன்பாடானது. இதற்கிடையில், 2010இன் தொடக்கத்தில் சீட்டெல் சிம்பொனியின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் வரையில் 5 சதவீத சம்பள வெட்டை ஏற்றுக்கொண்டார்கள். அதற்கும் மேலாக, சீட்டெல் இசைக்கலைஞர்கள், இசைக்குழுவிற்குத் ஒரு தொகையாக 2,010 டாலரை, "நன்கொடையாக" அளிக்கவும் உடன்பட்டார்கள். 2009 நவம்பரில் ஹோனோலூலு சிம்பொனி திவால்நிலையை அறிவித்தது.

போனிக்ஸ், ஹோஸ்டன், சின்சினாட்டி, இன்டியானாபொலிஸ், மில்வாஹகி, பால்டிமோர், அட்லாண்டா, வெர்ஜினியா, வடக்கு காரோலினா மற்றும் உத்தாஹ் மற்றும் ஏனைய நகரங்கள் மற்றும் மாகாணங்களின் சிம்பொனி இசைக்குழுக்கள் மீதும் ஊதிய வெட்டுக்கள் திணிக்கப்பட்டிருக்கின்றன. டெட்ராய்டில் இந்த பெரும் வெட்டுக்கள் செய்யப்படுமேயானால், அந்த நடவடிக்கை அமெரிக்கா முழுவதும் உள்ள ஏனைய இசைக்குழு நிர்வாகங்களும் இதே போன்ற கோரி்க்கைகளை வைக்க அவற்றிற்குக் கதவைத் திறந்துவிடும்.

சிம்பொனி மற்றும் ஓபெரா இசைக்கலைஞர்களின் சர்வதேச மாநாடு (ICSOM) சில ஊதிய வெட்டுக்களை ஆவணப்படுத்தி இருக்கிறது. அதன் சமீபத்திய செய்தியிதழ் பின்வருமாறு குறிப்பிட்டது: “நாடு முழுவதிலும் உள்ள இசைக்குழுக்கள் அவற்றின் ஒப்பந்தங்களில், குறுகிய-கால குறைப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான அழுத்தத்தை முகங்கொடுத்து வருகின்றன.” டெட்ராய்ட், புளோரிடா, போர்டு வோர்த் மற்றும் ஹொனூலூலு ஆகிய இடங்களில் உள்ள இசைக்கலைஞர்களின் பரிதாபகரமான நிலையை குறிப்பிட்டு பின்வருமாறு தொடர்கிறது:

"நஷ்டஈட்டு மட்டும் போதாதென்பதால், அவற்றிற்கும் மேலாக பல விஷயங்கள் பணயமாக்கப்பட்டு இருக்கின்றன. பணியின் காலஅளவைக் கைவிடுவது, ஓய்வூதியங்களை உயர்த்தாமல் வைத்திருக்க செய்வது, மின்னணு ஊடக சேவைகளுக்கான தொகையை மறுப்பது, சுகாதார காப்பீட்டு நலன்களைக் கடுமையாக குறைப்பது, மற்றும் இசைக்குழு இசைக்கலைஞர்களுக்கான வேலைகளை மாற்றி வரையறுப்பது ஆகியவற்றை சமீபத்திய நிர்வாகத்தின் முன்மொழிவுகள் உட்கொண்டிருக்கின்றன. இசைக்குழுவின் பிரச்சினைக்கான ஓர் ஒட்டுமொத்த தீர்வாக, துண்டு ரொட்டியிலிருந்து அதற்கடுத்த சிறந்த விஷயமாக சேவை பரிமாற்றங்கள் மற்றும் சேவை மாற்றங்களை நிர்வாகிகள் அதிகரித்தளவில் வாடிக்கையாக செய்கிறார்கள்.

சேவை மாற்றம்" அல்லது "சேவை பரிமாற்றம்" என்பது இசைக்கலைஞர்கள் எவ்வித கூடுதல் சம்பளமும் இல்லாமல், கற்றுத்தருவது, பயிற்றுவிப்பது, அல்லது பாடசாலைகள் அல்லது அமைப்புகளுக்கான சிறிய குழுக்களில் வாசிப்பது, அல்லது இசை சாராத வேலைகளையும் செய்வது போன்ற கூடுதல் வேலைகள் செய்வதைக் குறிக்கிறது. முக்கியமாக இது மலிவுக்கூலி திட்டத்தின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது.

அவர்களின் "சமூக மேம்பாடுகளைப்" பொறுத்தவரையில், வாகனத்துறை தொழிலாளர்களைப் போன்றே தொழில்ரீதியிலான இசைவாசிப்பாளர்களும் வெறுமனே வேலையாட்களாகத் தான் இருக்கிறார்கள். அவர்களும் மாற்றீடு செய்யப்படக்கூடியவர்களாகவும்,  வெளியேற்றப்படக் கூடியவர்களாகவும், செல்வவளத்தின் உடனடி பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப கையாளப்படக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். இது தான் உண்மையான நிலைமை; சக்திகளின் உண்மையான உறவுமுறை இது தான்; இது குறித்து தெளிவாக இருப்பது நல்லது. இசைவாசிப்பாளர்களை, கையாளப்படும் விதத்தால் துன்புறுத்துவதற்கான எல்லா உரிமையும் DSOவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வருந்தத்தக்க வகையில், DSOஇல் தற்போதிருக்கும் நிர்வாகிகளின் நடத்தை என்னவாக இருந்தாலும், இது அவர்கள் சம்பந்தப்பட்ட ஓர் அடிப்படை விஷயமல்ல; பெருநிறுவனத்தின், ஊடகங்களின் மற்றும் அரசியல் அமைப்பின் ஒட்டுமொத்த பலமும் இசைவாசிப்பாளர்களுக்கு எதிராக DSOஇன் பக்கம் இருக்கிறது. இதுவொரு சமூக முரண்பாடு; எதிரெதிராக இருக்கும் சமூகங்களுக்கு இடையிலான, கலைத்துறைக்கு இடையிலான, அறிவுஜீவித்தனத்திற்கு இடையிலான ஒரு முரண்பாடு. நீங்கள் விரும்பினால், ஒழுக்கநெறி நலன்களுக்கு இடையிலான ஒரு முரண்பாடு என்றும் கூறலாம்.

அக்டோபர் மாத ஆரம்பத்தில் தொடங்கிய போராட்டத்தின் முதல் வாரத்தின் போது, DSOஇன் தலைவர் அன்னி பார்சன்ஸ் பேசியதை நான் கேட்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. அதில் அவர் பற்றாக்குறையின் வரலாறு குறித்து ஏதோ விளக்கி இருந்தார். Ford அமைப்பின் ஆலோசகர்கள் உட்பட பல்வேறு ஆலோசகர்களும், நிபுணர்களும், மற்றும் இசைக்குழுவை உருவாக்கியர்களால் நியமிக்கப்பட்ட ஏனையவர்களும், பல்வேறு வங்கிகளும் DSOஇன் நிலைமை குறித்து ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்ததாக பார்சன்ஸ் குறிப்பிட்டார். இசைக்குழுவின் நிதி நிலைமை "ஏற்க முடியாததாக" இருப்பதாகவும், ஓர் அடிப்படை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டிய நிலைமை இருப்பதாகவும் அவர்கள் ஒட்டுமொத்தமாக தீர்மானித்தார்கள். "மாற்றம் போதிய வேகத்தில் வருவதாக இல்லை... 2009வாக்கில் வங்கிகள் அதிருப்தியில் இருந்தன," என்று பார்சன்ஸ் குறிப்பிட்டார். "இசைக்குழுவின் செலவுகளைக் கடுமையாக குறைக்க வேண்டும்," என்று அனைத்து ஆலோசகர்களும் கோரினர். வங்கிகள் கிரீஸ் அல்லது அயர்லாந்தைக் கையாள்வதைப் போன்று DSO கையாள்கின்றன.

அமெரிக்காவிலுள்ள முன்னனி இசைக்குழுக்களில் ஒன்றாக டெட்ராய்ட் சிம்பொனியும் கருதப்படுகிறது. 2004இல் இருந்து, அதன் செயல்பாடுகளின் அடிப்படையில் நாட்டின் ஆறாவது சிறந்த DSOஆக ஒட்டுமொத்த கலைத்துறையின் ஓர் மதிப்பீடு பட்டியலிடுகிறது. இதை எல்லாம் மதிப்பிடும் இடத்தில் நான் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். 1914இல் ஸ்தாபிக்கப்பட்ட இந்த இசைக்குழு, அமெரிக்காவில் மிகப் பழமைவாய்ந்த நான்காவது இசைக்குழுவாகும். மேலும் 2009-2010இல், அடிப்படை சம்பளத்தில், மிக பெருந்தன்மையான பத்தாவது இடத்தில் இருந்தது.

பார்சன்ஸின் கருத்துக்களில் நாம் பார்த்ததைப் போல, DSO அதன் பணியாளர்களையும், இசைக்கலைஞர்களையும் விலையாக கொடுத்து அதன் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வங்கிகளும், ஏனைய அமைப்புகளும் வலியுறுத்துவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

2008இன் இறுதிவாக்கில், இசைக்கலைஞர்கள் மற்றும் இசை இயக்குனர் லியோனார்டு ஸ்லாட்கின் ஆகியோரின் கூட்டுறவுடன், இசைக்குழுவால் ஒரு மூலோபாய திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாகவும், அதை முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் DSOவின் இசைவாசிப்பாளர் ஷெர்லெ ஹெரொன் (oboe கருவி வாசிப்பாளர்) இணையத்தில் விளக்கி இருக்கிறார். எவ்வாறிருப்பினும், செப்டம்பர் 2008இன் பொருளாதார சீரழிவானது, அதன் இயக்கத்தில் வெவ்வேறு செயல்முறைகளைக் கொண்டு வர உதவியது.

எதை "முக்கியத்துவம் மிக்க" DSO பொதுக்குழு கூட்டம் என்று ஹரன் வரையறுக்கிறாரோ, ஜீன் 2009இல் நடந்த அந்த கூட்டத்தில், பொருளாதார நிலைக்குலைவை ஒட்டி இசைக்குழுவை மாற்றியமைக்க வேண்டியுள்ளதன் அவசியம் குறித்து மெக்கேல் வால்ஷ், ஜெஸ்ஸி ரோசன் (அமெரிக்க இசைக்குழுக்களின் கூட்டுக்கழகம்) மற்றும் ஏனையவர்களால், "நம்முடைய பொதுக்குழு இயக்குனர்களுக்கு ஒரு விளக்கப்படம் காட்டப்பட்டது". அடிமட்டத்திலிருந்து ஒவ்வொன்றும் தங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டும் என்றும், இசைக்கலைஞர்கள் அதை ஏற்றுக் கொள்வது மிகவும் சிரமம் என்பதால், அது ஒரு "பெரும் சாகசமாக" இருக்கும் என்றும் அவர்கள் உணர்ந்தார்கள். அந்த விளக்கப்படம் முடிந்த பின்னர், DSOஇன் தலைமை செயல் நிர்வாகி அன்னி பார்சன்ஸ், "நாம் விவாதித்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டி உள்ளது" என்று தெரிவித்தார்.

அமெரிக்க இசைக்குழுக்களின் கூட்டுக்கழகம் என்பது "புதிய கண்டுபிடிப்பு" என்ற பெயரில் அமெரிக்கா முழுவதும் ஊதியங்களையும், சலுகைகளையும் வெட்டுவதற்கான உந்துசக்தியைத் தாங்கிபிடிப்பதற்கான ஒரு நிர்வாக அமைப்பாகும். Time இதழில் இருந்த ஒரு முன்னாள் இசை விமர்சகரும், National Reviewஇல் எழுதுபவருமான மெக்கேல் வால்ஷ், ஒரு வெறிபிடித்த வலதுசாரியாளராகவும், தீவிர கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராகவும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் சமூக முன்னேற்றத்தின் மீதும் சமசரமற்ற விரோதம் கொண்ட ஒருவராவார். பராக் ஒபாமா ஒரு மார்க்சிஸ்ட் என்று நம்பும், ஒரு கூட்டத்தில் அவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற ஒரு தனிநபரிடம் ஆலோசனை பெறுவதற்கு DSO திரும்பி இருப்பதானது, அது எந்த கருத்தியில் மற்றும் நடைமுறை திசையில் திரும்பியிருக்கிறது என்பது பற்றி சிறிது உள்ளார்ந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது.

அடிமட்டத்திலிருந்து ஒவ்வொன்றும் நம்முன்னால் வைக்கப்பட வேண்டும்" என்று ஜூன் 2009 பொதுக்குழு கூட்டத்தில் கூறப்பட்ட வால்ஷின் கருத்து, எச்சரிக்கை ஒலியாக கருதப்பட வேண்டும். அதுவொரு அச்சுறுத்தல்.

ஜூன் 2010இல் அமெரிக்க இசைக்குழுக்களின் கூட்டுக்கழகத்தின் தேசிய கருத்தரங்கில் டோரிஸ் டியூக் அறக்கட்டளையின் பென் கேமரோன் அளித்த அவருடைய முக்கிய உரையில், பல்வேறு செலவு-குறைப்புகள் மற்றும் ஏனைய "புதிய கண்டுபிடிப்பு" திட்டங்கள் போன்றவற்றை வலியுறுத்தி, பின்னர் இதே வாக்கியத்தைத் தான் அவரும் பயன்படுத்தினார்: “இவை மிகுந்த தைரியமான படிகள்-ஆனால் இவை வெறுமனே ஆரம்பம் தான். தற்போது ஒவ்வொன்றும்-திட்டமிடல், இலக்கு, ஒத்துழைப்பு வடிவம், சிறந்த வியாபார முறை ஆகிய ஒவ்வொன்றும்-நம்மிடம் இருக்க வேண்டும்.” இது மரண படுக்கையாக மாறிவிடாமல் இருக்கும் என்று நம்புவோமாக.

இப்போது, ஏனைய தொழிலாளர்களிடமிருந்து DSO இசைக்கலைஞர்கள் எவ்வகையிலும் வித்தியாசமாக கையாளப்படவில்லை என்று நான் முன்னர் கூறிய போது, நான் DSO இசைவாசிப்பாளர்கள் அவர்களின் இசைநிகழ்ச்சிகளில் காட்டும் திறமையைக் குறைத்து கூறவில்லை அல்லது அவர்களின் திறமையை மட்டந்தட்டவில்லை. அதற்கு மாறாக, இது என்னவென்றால், தற்போதைய வேலைநிறுத்தத்தின் விளைவாக அதனை மிக ஆழமாக வரவேற்கவே நான்(நான் மட்டும் தனியாக அல்ல) வந்திருக்கிறேன்.

நாங்கள் DSO இசைக்கலைஞர்களை நேர்காணல் செய்திருந்தோம். முன்னனி இசைக்குழுக்கள் அவர்களின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்முறையின் போட்டி நிறைந்த இயல்பையும், உயர் மட்டத்தில் தொடர்ந்து இருப்பதற்கு செய்ய வேண்டிய முயற்சிகளையும் மற்றும் தியாகங்களையும் குறித்து அவர்கள் எங்களுக்கு விளக்கினார்கள். போராடி வரும் இசைக்கலைஞர்களின் வலைத்தளத்தில் எழுதியிருந்த டிரம்பெட் வாசிப்பாளர் பில் லூகாஸ், அந்த பிரச்சினைகளுக்காக மூன்று பாகங்களை ஒதுக்கி இருந்தார்.

நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கான நிகழ்முறையைக் குறித்த ஒரு விஷயத்தோடு தொடர்புபட்டிருக்கும் ஒரேயொரு பத்தியை இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். ஓர் இசை நிகழ்ச்சியில் பங்கெடுக்க விண்ணப்பிக்கும் ஓர் இசைக்கலைஞருக்கு, மிகவும் பிரபலமான இசைக்கலைஞர்களும் கூட கடினமாக இருக்கக்கூடிய அல்லது அவர்களாலேயே சாத்தியப்படாத மிகவும் கம்பீரமான, அசலான இசை வெளிப்பாடுகளுக்குள், தொழில்நுட்ப பிரச்சினைகளும், கலைத்துவ பிரச்சினைகளும் நிறைந்த நீண்ட சிம்பொனி இசையின் ஒரு பகுதியின் பட்டியல் அளிக்கப்படுகிறது என்று லூகாஸ் விளக்குகிறார்.

"இருபது, முப்பது அல்லது அதற்கும் அதிகமான சிம்பொனி இசைகளைக் கொண்ட ஒரு பட்டியலில் இருந்து பல இசைக்குறிப்புகள் தேர்ந்தெடுக்கப்படலாம். பல மணி நேரங்களில் கூட எல்லா இசைக்குறிப்புகளையும் வாசித்து முடிப்பதென்பது தர்க்கரீதியாகவும் கூட சாத்தியப்பட முடியாத அளவுக்கு, தேர்வு செய்வதற்கான பட்டியல்கள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அவற்றை பல நாட்களில் தான் வாசித்து முடிக்க இயலும். அதுவும் போதாதென்று, எல்லா தேர்வு பட்டியலிலும் பார்த்து-வாசிக்கும் ஒரு பகுதியையும் எதிர்பார்க்கலாம். இதற்கு மேலாக, எது எப்படி இருந்தாலும், வாசிக்க இருக்கும் இசைக்கலைஞர் அதை பல மாதங்கள் பயிற்சி செய்திருப்பதைப் போன்று துல்லியமாக வாசிக்க வேண்டும். ஏறத்தாழ எல்லா இசையையும் அறிந்திருக்கும் ஒரு பிரபல இசைக்கலைஞருக்கும் கூட, ஒரு தேர்வு பட்டியலை கூர்மையாக்கவும், மெருகூட்டவும், துல்லியமாக்கவும், வெறுமனே வார்த்தைகளில் சொல்வதானால், பல மாதங்கள் எடுப்பதை நீங்கள் பார்க்கலாம்.”

இது போன்றவொரு இடத்திற்கு வருவதற்கு தேவைப்படும் நேரம், இழப்பு ஆகியவற்றையும், இந்த அருமையான இசைக்குழுவில் சேர இசைக்கலைஞர்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதற்கான காரணங்களையும், என்ன நிலைமைகளின்கீழ் இத்தகைய இசைக்குழுக்கள் சீரழியக்கூடும், வீழ்ச்சியடையக்கூடும் என்பதையும் கூட லூகாஸ் விளக்குகிறார். நிச்சயமாக புலன்களுக்கு இனிமையளிக்கக் கூடிய இதுபோன்ற ஒரு இசைக்குழு, பொருளாதார மற்றும் உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் பின்புலத்துடன், அமெரிக்க ஆளும் வர்க்கம் எந்தெந்த தந்திர சூழ்ச்சிகளுக்காக அறியப்படுகிறதோ, அவற்றுடன் சேர்ந்து செயல்படும் DSO நிர்வாகம், இசைக்குழுவின்மீது அறுக்கும் வாளைக் கொண்டு வேலை செய்து வருகிறது. இதை அவர்கள் ஒரு "பெரும் தீர செயலாக" குறிப்பிடுகிறார்கள். ஆனால் இசைக்கலைஞர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் மட்டும் தான் இந்த வழியில் முன்நிற்கிறார்கள்.

இசைக்கலைஞர்களின் திறமையும், அனுபவமும் ஒரு கலாச்சார சாதனையை எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவில் தொல்சீர் இசைக்கு இரசிகர்கள் குறைவதென்பது, அமெரிக்க சமூகத்தின் குற்றமே தவிர மக்களின் குற்றமல்ல. இந்த சமூகம் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமான, அல்லது பெரும்பாலும் எந்த கல்வியையுமே அளிக்கவில்லை. நாங்கள் தொல்சீர் இசையை ''தனிச்சலுகையாக்கவில்லை''.  ஒவ்வொரு வகையான முக்கிய கலைத்துவ அமைப்பும் அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஆதரிக்கப்பட வேண்டும். எது தங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதைத் தேர்ந்தெடுக்க மக்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

முந்தைய அமர்வில் நாம் விவாதித்திருந்ததைப் போன்றே, இசை மற்றும் கலையென்பது மனித நிலைமை மற்றும் நம்முடைய சொந்த உளவியல், அதனூடாக சமூக விழிப்புணர்வு பற்றிய நம்முடைய உணர்திறனை  விரிவாக்குவதில் பங்களிப்பளிக்கின்றன. அதுபோன்ற கலைத்துவ முயற்சிகள் மற்றவர்களுடனும், ஒருவருக்கு அவருக்குள்ளேயே கூட நேர்மையையும், பரந்த மனநிலையையும், அகத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு முக்கியமான படைப்பிற்காக முட்டி மோதுவதென்பது, தவிர்க்கமுடியாமல் ஆளுமையை செழிமையாக்குவதுடன், வாழ்க்கையில் மிக சிக்கலான மற்றும் முக்கியமாக கேள்விகள் மீது கவனத்தைத் திருப்பும்.

சோசலிஸ்டுகளாகிய நாங்கள், மனிதயினத்தில் ஒன்றுதிரண்டிருக்கும் மற்றும் ஆத்மார்த்தமான, கலாச்சார மரபுகளில் உள்ள பெறுமதிவாய்ந்த ஒவ்வொன்றுக்காகவும் போராடுகிறோம். இவை தான் சமூகத்தை மாற்றுவதற்கான அடிப்படை அடித்தளங்களில் ஒன்றாகவும், ஐக்கியத்தின் அடித்தளத்தில் வாழ்க்கையை மறுகட்டியமைப்பதற்காகவும் இருக்கின்றன.

ஒரு சோசலிச வலைத் தளம் இந்த பிரச்சினையை இந்தளவிற்கு தீவிரமாக கையிலெடுத்திருப்பது குறித்து DSO இசைக்கலைஞர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சோசலிசம் என்ற பெயரைக் கையில் ஏந்திக் கொண்டு, அதை களங்கப்படுத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலினிசம் மற்றும் இன்னும் பல அறிவுஜீவியதன்மைக்கு எதிரான தீவிரவாத" இயக்கங்கள் உட்பட, பல்வேறு அரசியல் மோசடியாளர்கள் வேண்டுமானால் அந்த ஆச்சரியங்களைப் பிரதிபலிக்கலாம். தலைச்சிறந்த போலாந்து-ஜேர்மன் புரட்சியாளர், ரோசா லுக்சம்பேர்க் ஒருமுறை விளக்கியதைப் போல, “சோசலிசம் என்பது வயிற்று உணவுக்கான பிரச்சினை இல்லை, மாறாக அதுவொரு கலாச்சார இயக்கம், அது தலைச்சிறந்த, பெருமிதம் கொள்ளத்தக்க உலகளாவிய-சித்தாந்தம்.”

நான் ஏற்கனவே கூறியதைப் போல, DSOஇன் தாக்குதல்கள், கலை மற்றும் கலாச்சாரத்தின்மீது இந்த நாட்டில் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் கூட்டத்தைக் குறித்த மதிப்பின்மீது மக்களுக்கும், இசைக்கலைஞர்களுக்கும் பல உண்மைகளைக் கொண்டு வரும். இந்த எதார்த்தம் நேர்மையோடு உள்வாங்கப்பட்டு உணரப்பட்டால், அது இசைக்கலைஞர்கள் மற்றும் ஏனைய பிற கலைஞர்கள் மற்றும் தொழில்நிபுணர்களின் சிந்தனையிலும், கண்ணோட்டத்திலும் ஏற்படும் முன்னேற்றத்திற்குத் தொடக்கப்புள்ளியாக மாறக்கூடும்.

உண்மையில், சமூக ஈடுபாடு கொண்ட கலைஞர்கள் மற்றும் அரசியல்ரீதியாக அர்ப்பணித்த கலைஞர்களின் மறு-எழுச்சியின் தேவை குறித்து தான், நான் இந்த மாலை நேரத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த வார்த்தைகள் எல்லாம் சீரழிக்கப்பட்டிருக்கின்றன; அவற்றைத் தவறாக விளங்கப்படுத்த முடியும். இத்தகைய வார்த்தைகளைக் கொண்டு, ஒரு போராட்டதிலிருந்து மறு போராட்டத்திற்கு ஓடிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி நாங்கள் குறிப்பிடவில்லை, இவர்கள் சார்புரீதியல் அந்த வார்த்தையின் மலிந்த அர்த்தத்தில் ''விறுவிறுப்பாக செயற்படுபவர்களாக'' இருக்கிறார்கள். அல்லது ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில், அவர்களைச் சூழ்ந்துகொண்டு சுற்றி தொங்கிக் கொண்டிருந்த மேற்கத்திய அறிவாளிகளின் பிரிவை, மீட்டுயிர்பெற செய்யவும் நாங்கள் கோரவில்லை. சோசவியத் ஒன்றியத்தின் "தோழர்களாக" இருந்த இவர்கள், அவர்களின் கட்டுரைகளைப் பதிப்பிக்கப் பெற்றார்கள்; போக்குவரத்து செலவுகள், ஊக்கச்சலுகைகள் வழங்கப்பட்டனர். கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் சோசலிச ஒன்றியத்திலும் இருந்த ஸ்ராலினிச அணியிடம் தான், "உண்மையான சோசலிசம் நிலவுகிறது" என்று புகழ்பாடுவதற்கு, இவர்கள் பல்வேறு தனிச்சலுகைகளையும், சன்மானங்களையும் பெற்றார்கள்.

நாங்கள் இதற்கு முற்றிலும் எதிர்தரப்பில் நிற்கிறோம். மனிதயினத்தின் சமூக மேம்பாட்டிற்கு வழிகாட்டும் கோட்பாடுகளாக மதிக்கும் கலைஞர்களையும், அறிவுஜீவிகளையும் மற்றும் தங்களோடு சம்பந்தப்பட்டிருக்கும் பிரச்சினைகளில் தலையீடு செய்பவர்களையுமே நாங்கள் சிந்தனையில் கொண்டிருக்கிறோம். இந்த அரசியல் அமைப்புமுறைக்கு நண்பராக இல்லாதவர்களையும்; கலைத்துவ மற்றும் சமூக உண்மைகளைத் குறிக்கோள்களாக கொண்டு, பிரபலத்தன்மையிலிருந்து விதிவிலக்காக இருப்பவர்கள் உட்பட, போர்குணமிக்க எதிர்காலத்தின் கவண்களையும், அம்புகளையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்களையும்; கலைத்துவ ஆளுமையை அதன் உயர்ந்த புள்ளியில்-வார்த்தைகளிலும் அல்லது உச்சரிப்பிலும் அல்லது தோற்றத்திலும் கூட ஆழமாக சிந்திக்கும் மற்றும் ஆழமாக உணரும் ஒருவரை; நிலவும் அமைப்புமுறையை, அதன் கொடூரத்தை, சுரண்டலைத் தவிர்க்க முடியாமல் எதிர்க்கும் ஒரு தனிநபரை; ஒருவரின் வேலையில் போராட்டம் ஒருமுக்கிய உட்கூறாக நுழைய வேண்டும் என்பதற்காக, நிலவும் நிலைமைகளுக்கு எதிரான போராட்டத்தை - இவற்றை தான் நாங்கள் மனதில் கொண்டிருக்கிறோம்.

சமீபத்திய தசாப்தங்களில் இதுபோன்ற நபர்கள் குறைவாக தான் இருந்திருக்கிறார்கள் என்றபோதினும், அவர்கள் மீண்டும் உருவாவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நிலைமை அதற்காக கிளர்ந்தெழுகின்றது; கலைஞர்களின் ஓர் அடுக்கு அதற்கு பிரதிபலிப்பு காட்டும் என்று நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். கடந்தகால வரலாற்று சூழ்நிலைகளைக் குறித்த ஆய்வு எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. கலைத்துவம் பெற்ற, பரிணமித்த கலைஞர்களின் குரல்கள் எதிரொலிக்கும்.

இந்த சமூகத்தில் நிலவும் தற்போதைய நிலைமையை நீங்கள் கவனித்து பார்க்கும் போது, அது அதன் சொந்த கலாச்சார மற்றும் கல்வி உள்கட்டமைப்பை இரக்கமில்லாமல் தாக்கி வருவதைப் பார்க்க முடியும்... 1950கள் மற்றும் 1960களின் இறுதியிலிருந்து, நாம் எந்தளவிற்கு முன்னேறி வந்திருக்கிறோம்! ஐரோப்பாவிலும் வெட்டுக்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன என்ற போதினும் கூட, கலைக்களுக்கான அரசாங்க நிதியுதவி முறை அங்கே இருப்பதைப் போல, அமெரிக்காவில் ஒருபோதும் இருந்ததில்லை என்பது உண்மைதான். கலைகள் மற்றும் கலைஞர்களின் தலைவிதி, அபாயகரமான வகையில், ஒட்டுமொத்தமாக அமெரிக்காவின் வள்ளல்களின், பெருநிறுவனங்களின் மற்றும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நல்வாழ்வோடு பின்னிப்பிணைந்துள்ளது. இது பேரழிவுமிக்கது என்பதை நிரூபித்திருக்கிறது.

இருந்தபோதினும், இந்த நாட்டில் கடந்த அரை நூற்றாண்டில் கலைத்துவ திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடும், உத்தியோகபூர்வ ஆதரவும் பெரிதும் பின்தங்கியுள்ளது. இந்த வரலாற்றில் இசை நிகழ்ச்சி வழிநடத்துனரும், இசையமைப்பாளருமான லியோனார்ட் பேர்ன்ஸ்டீன் ஒரு முக்கிய நபராக விளங்குகிறார். அவரது அபிவிருத்தியை சுருக்கமாக பார்ப்பது பிரயோசனமானது என கருதுகின்றேன். என்னுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு, அமெரிக்காவில் பேர்ன்ஸ்டீன் மிகச்சிறந்த இசை பிரபலமாக இருந்தார்.

 

அவருடைய வாழ்க்கையை குறித்த சில உண்மைகளை இங்கே தருகிறேன்:

 

· ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்த பேர்ன்ஸ்டீன், அவருடைய இளங்கலை படிப்பை முடிப்பதற்கு முன்னதாகவே, 1939இல் மார்க் பிலிட்ஜ்ஸ்டீனின் இடது-சாரி இசைக்குழு/ஓபெரா இசைக்குழுவான, "The Cradle Will Rock"இல் ஒரு நிகழ்வை இயக்கி அரங்கேற்றினார்.

  ·     1943இல், நிகழ்ச்சி நடத்துவதற்கான அவருடைய முதல் நிரந்தர பதவியில், நியூயோர்க் இசைக்குழு நிகழ்ச்சிகளின் உதவி நடத்துனராக நியமிக்கப்பட்டார்.

  ·    பேர்ன்ஸ்டீன், அவருடைய சமகாலத்திய இசையமைப்பாளர்களின், குறிப்பாக ஆரொன் கோப்லாந்தின் ஒரு முன்னனி ஆதரவாளராக இருந்தார். அவர்கள் இருவரும், அவர்களின் காலம் முழுவதும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

·     1958 முதல் 1969 வரையில் அவர் நியூயோர்க் இசைக்குழுவின் இசை இயக்குனராக செயல்பட்டார். இசைக்குழுக்களை வழிநடத்திய பேர்ன்ஸ்டீன், உலகம் முழுவதிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

·   விருதுபெற்ற திரைப்படமான “On the Waterfront” (1954) இல் அவர் இசையமைத்தார். மேலும் இரண்டு பிராட்வே நாடகங்களான, "Peter Pan" (1950) மற்றும் "The Lark" (1955) ஆகியவற்றிலும் இசை அமைத்திருந்தார்.

·   பேர்ன்ஸ்டீன், பிராட்வே இசையரங்கிலும் பங்களிப்பளித்தார். "On The Town" (1944) மற்றும் "Wonderful Town" (1953) ஆகியவற்றிலும் அவர் ஒருங்கிணைந்திருந்தார். ரிச்சர்டு வெல்பர் மற்றும் லில்லியன் ஹெல்மேன் மற்றும் ஏனையவர்களுடன் கருத்தொன்றியிருந்த அவர், "Candide" (1956)ஐ எழுதினார். 1957இல், புத்துணர்ச்சிமிக்க இசை நிகழ்ச்சியான "West Side Story"யிலும் ஒருங்கிணைந்திருந்தார்.

 

1958இல் இருந்து 1972 வரையில் CBS தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, அவருடைய 'இளைஞர்களுக்கான இசைநிகழ்ச்சிகள்' (Young People’s Concerts) மூலமாக பல அமெரிக்கர்களால் உண்மையிலேயே அவர் மிகவும் நேசிக்கப்பட்டார். இதில் அவரால் ஐம்பத்தி மூன்று நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் இசையரங்கில் நிரம்பியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், நான்கு மில்லியன் தொலைக்காட்சி நேயர்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களின் முன்னிலையில், அவர் மிக பிரம்மாண்டமாக, ஜாஸ் மற்றும் ஏனைய இசைகளுடன் தலைச்சிறந்த தொல்சீர் இசை மேதைகளின் இசைக்குறிப்புகளில் அவர்களைக் கட்டுண்டு இருக்கச் செய்தார். அந்த மூன்று ஆண்டுகளில், மிகவும் பிரபலமாக இருந்த அந்த இசை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சியின் முக்கிய நேரமான (prime time) மாலை 7.30க்கு ஒளிபரப்பப்பட்டன. அந்த மாதிரியான ஒன்று இன்று ஏறத்தாழ நினைத்தும் பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

அந்த இசைச்சுவையில் அளிக்கப்பட்ட சில இசைத் தலைப்புகள் இங்கே கீழே அளிக்கப்படுகின்றன:

Berlioz Takes a Trip
A Birthday Tribute to Shostakovich
Fidelio: A Celebration of Life
Folk Music in the Concert Hall
Happy Birthday, Igor Stravinsky
Humor in Music
Jazz in the Concert Hall
The Latin American Spirit
Musical Atoms: A Study of Interval
Quiz Concert: How Musical Are You?
The Sound of an Orchestra
A Toast to Vienna
A Tribute to Sibelius
Two Ballet Birds [Swan Lake and Firebird]
What Does Music Mean?
What is a Concerto?
What is a Mode?
What is American Music?
What is Classical Music?
What is Impressionism?
What is Melody?
What is Orchestration?
What is Sonata Form?
What Makes Music Symphonic?
Who is Gustav Mahler?

உயிரோட்டத்தோடும், பொழுதுபோக்கிற்காகவும் அதை மில்லியன் கணக்கானவர்கள் பார்த்தனர். அது அறிவுபூர்வமாகவும் அமைந்திருந்தது. அவற்றின் பல பகுதிகள் இணையத்திலும் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1958 ஜனவரியில் ஒளிபரப்பான, "What Does Music Mean?” என்ற முதல் நிகழ்ச்சியிலிருந்து ஒரு இசைவிளக்கத்தை இங்கே சுட்டிக் காட்டுகிறேன்:

"வெவ்வேறு விதமான எல்லையில்லா உணர்வுகளை இசையால் உங்களுக்கு வழங்க முடியும் என்பது தான் எல்லாவற்றையும்விட மிகவும் அற்புதமான ஒன்று. மேலும் அவற்றில் சில உணர்வுகள் மிகவும் சிறப்பார்ந்தவை; மிகவும் ஆழமானவை. அவற்றை வார்த்தைகளால் கூட விளக்க முடியாது. நாம் உணரும் எல்லாவற்றையும் வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாது. சில நேரங்களில், ஒருமுறையேனும் நாம் அவ்வாறான மிக ஆழ்ந்த, மிக சிறப்பார்ந்த உணர்வைப் பெற்றிருப்போம்; அதை கூற நம்மிடம் வார்த்தை இல்லாமல் இருக்கலாம். அதில் தான் இசை அற்புதமாக இருக்கிறது; ஏனென்றால் நமக்காக இசை அவற்றை வெளிப்படுத்திக் காட்டுகிறது, வார்த்தைகளில் அல்லாமல் இசைக்குறிப்புகளில். இவ்வழியில் இசை நகர்கிறது -- எப்போதும் எங்கேயோ போய் கொண்டும், மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், பறந்து கொண்டும் ஒரு குறிப்பிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்டிருக்கும் அந்த இசையை நம்முடைய இயக்கத்தில் நம்மால் ஒருபோதும் மறக்க முடியாது. இசையின் அந்த இயக்கம், நாம் உணர்வதை ஒரு மில்லியன் வார்த்தைகள் சொல்வதையும் விட அதிகமாக நமக்கு எடுத்துக்கூறும்."

இது உணர்வையும், மனிதத்தன்மையை அசாதாரணமான வகையில் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மக்கள் செவிசாய்த்தார்கள்; குழந்தைகளும், பெரியவர்களும் ஆழமாக கவர்ந்திழுக்கப்பட்டார்கள். இதை இந்தளவிற்கு ஆழமாகவும், பிரபலமாகவும் செய்தது எது?

ஒரு கணம் திரும்பிப்பார்த்தால், எல்லா விஷயங்களும் சமமாக தெரிகின்றன. தலைச்சிறந்த கலைஞர்கள் ஆழமாக ஜனநாயகத்தை நாடியதுடன், ஒரு நாட்டு மக்களின் வாழ்க்கையில், அவர்கள் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில், சோசலிஸ்ட் இயக்கமும், குறிப்பாக ரஷ்ய புரட்சியும் கணக்கில் அடங்கா கலைஞர்களின் சிந்தனையிலும், வாழ்க்கையிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பாசிசம், உலக யுத்தம் மற்றும் பொருளாதார பெருமந்தநிலை  ஆகியவற்றால் பல சிறந்த மூளைகளில் முதலாளித்துவம் அடையாளம் காணப்பட்டது.

அமெரிக்கா சோசலிசத்திடமிருந்து தன்னைக் தடுப்புக்கொண்டது போல் காணப்பட்டது. இன்னும் இந்த விஷயத்தில் பல கலைஞர்களுக்கு இங்கே ஒரேமாதிரியான பிரதிபலிப்பை கொண்டுள்ளனர். கடந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இருந்த தலைச்சிறந்த எழுத்தாளர்கள் டெய்சர், பிட்ஜ் ஜெரால்டு, ஹெமிங்வே, ரிச்சர்டு ரயிட் மற்றும் ஏனையவர்கள் தங்களைத்தாங்களே சோசலிசத்தோடு இணைத்துக் கொண்டிருந்தார்கள். வெகுஜன இசையில் கணக்கிலடங்கா ஹாலிவுட் மற்றும் நாடக நடிகர்கள் மற்றும் பிரபலங்களுடன் சேர்ந்து, பல காட்சி சார்ந்த கலைஞர்கள் விஷயத்திலும் இது உண்மையாக இருந்தது.

பல தலைச்சிறந்த இசைத்துறை பிரபலங்களுடனும், இவ்வாறே இருந்தது. சாமுவேல் பார்பரைப் போன்றே, ஆரோன் கோப்லாந்தும் இடதின் பக்கம் இருந்த ஒரு பிரபலமாக இருந்தார். Porgy and Bess போன்ற படைப்பை உருவாக்கியதன் மூலம், ஜோர்ஜ் ஜெர்ஸ்வின் மிக ஆழமான ஜனநாயக உணர்வை எடுத்துக்காட்டினார். ஜெர்ஸ்வின், அவருடைய வாழ்நாளின் இறுதிகாலங்களில், நாஜி எதிர்ப்பு பேரணிகளில் பங்கு பெற்றும், தொழிலாளர் நடவடிக்கைகளுக்கு ஆதரவுகாட்டியும், இடது வட்டாரங்களை ஆதரித்தார். ஜெர்ஸ்வின்னின் மரணத்திற்குப் பின்னர், 1953இல் அவருடைய இசையை "நிலைகுலைக்கும் தன்மையைக்" கொண்ட ஒன்றாக சென். ஜோசப் மெக்கார்தே அறிவித்தார்.

பேர்ன்ஸ்டீன், இடதுசாரி நடவடிக்கை மற்றும் நம்பிக்கையின் மீது ஒரு நீண்ட வரலாறைக் கொண்டிருந்தார். இவற்றில் பெருப்பாலானவை மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது அறியப்படாமல் இருக்கின்றன. பேரி செல்டரினின் Leonard Bernstein: The Political Life of an American Musician என்றவொரு மதிப்பார்ந்த புத்தகம், வரலாறை நேரடியாக எடுத்துக்காட்ட உதவியது. (அந்த படைப்பைக் குறித்த ஓர் ஆழமான மதிப்புரையை உலக சோசலிச வலைத் தளம் விரைவில் பிரசுரிக்க உள்ளது)

1918இல் பிறந்த பேர்ன்ஸ்டீன், பெருமந்தநிலைமையின் பேரழிவு மற்றும் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது உட்பட, 1930களின் கொடூரமான நிகழ்வுகளால், தீவிரமயப்படுத்தப்பட்டிருந்த அந்த தலைமுறையின் பல கலைஞர்களில் ஒருவராக இருந்தார். பேர்ன்ஸ்டீன் போன்ற கலைஞர்கள் பாசிச காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான ஒரு பாதுகாப்பு அரணாக சோவியத் ஒன்றியத்தைக் கண்டார்கள். துரதிருஷ்டவசமாக, 1930 களில் ஸ்ராலினிசமயப்படுத்தப்பட்ட அமைப்பான கம்யூனிஸ்ட் கட்சி  அதனைச் சுற்றி ஈர்க்கப்பட்டிருந்த அறிவுஜீவிகளின் சமூக எதிர்ப்பை, பிராங்கிளின் டி. ரூஸ்வெல்ட் மற்றும் 'புதிய உடன்படிக்கை' (New Deal) ஆகியவற்றிற்குள் ஆதரவாக, தவறாக திசை திருப்பியது.

பேர்ன்ஸ்டீன், தம்மைத்தாமே ஓர் இடது அரசியல்வாதியாகவே கண்டார். 1939இன் தொடக்கத்தில், அவர் தம்முடைய முன்னாள் பியானோ ஆசிரியருக்கு எழுதியபோது, "தான் 'பாட்டாளி வர்க்கத்திற்கு' கடமைப்பட்டிருப்பதாக" எழுதினார். அந்த காலக்கட்டத்தில், அவர் ஹாவர்டின் மாணவராக இருந்தபோது, அவர் FBIஇன் கண்காணிப்பில் வந்தார். FBI அவர்மீது ஒரு கோப்பைத் (file) திறந்திருந்தது. அவருடைய இடதுசாரி நடவடிக்கைகள், யுத்தக்காலத்திலும் மற்றும் யுத்தத்திற்கு பின்னரும் கூட தொடர்ந்தன. 1940களின் இறுதியில், பனிப்போரின் தொடக்கத்திலும், மற்றும் பொழுதுபோக்குத்துறை மற்றும் ஏனைய முக்கிய நிலைமைகளில் இருந்து சோசலிஸ்டுகளுக்கு எதிரான களையெடுப்பின்(ள் எழுச்சி அடைந்த) போதும், இசைத்துறையில் ஏற்கனவே ஒரு முக்கிய பிரமுகராக இருந்த பேர்ன்ஸ்டீன் மீது இன்னும் கவனம் அதிகமானது.

 ஒரு விமர்சகர் குறிப்பிடுவதைப் போல, "பனிப்போர் காலத்திய, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான களையெடுப்புகளால்  பொழுதுபோக்குத்துறையில் பாதிக்கப்பட்டவர்கள் ஹாலிவுட் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்கள் மட்டுமல்ல. லியோனர்ட் பேர்ன்ஸ்டீன், ஆரோன் கோப்லாந்து, லினா ஹார்ன், பீட் சீகெர் மற்றும் ஆர்டி ஷா போன்றோர் உட்பட இசைத்துறையின் முக்கிய பிரபலங்களும் இலக்காக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும், Red Channels: The Report of Communist Influence in Radio and Television எனும் அவ்வளவாக அறியப்படாத ஒரு வெளியீட்டில், 1950இல், சந்தேகத்திற்கு இடமான கம்யூனிஸ்ட் அனுதாபிகள் என்று வெளிப்படையாகவே பட்டியலிடப்பட்டிருந்தார்கள்.

பேர்ன்ஸ்டீன், ஒரேயிரவில் அழையா விருந்தாளி ஆனார். 1950இல் ஜனாதிபதி ஹேரி ட்ரூமேனால் வெளியிடப்பட்ட ஓர் உத்தரவைத் தொடர்ந்து, அவருடைய இசை வெளிநாட்டு அமெரிக்க அரசு விழாக்களில் இசைக்க முடியாமல் ஆனது. அவரை உள்நாட்டு நேயர்களின் கவனத்திற்கு முதன்முதலில் கொண்டு வந்த ரேடியோ ஒளிபரப்புகளை வெளியிட்ட CBS வலையமைப்பால், அவர்மீது கரும்புள்ளி குத்தப்பட்டது. ட்ரூமேனை அடுத்து பதவி்க்கு வந்த ட்வைட் ஐசென்ஹோவர், அந்த இசையமைப்பாளரின் இடதுசாரி நடவடிக்கைகளுடான தொடர்பைக் காரணம் காட்டி, 1953 ஜனவரியில் நடந்த அவருடைய பதவியேற்பு  விழாவில், பேர்ன்ஸ்டீனின் இசைநிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்துவதற்கு தடை விதித்தார்.

1953இல் ஆரோன் கோப்லாந்து இருந்ததைப் போல, காங்கிரஸின் மாய-வேட்டைகளால் சோதனைகளுக்கு உள்ளாக நேரிடலாம் என்பதால், பேர்ன்ஸ்டீன் பல ஆண்டுகள் மறைந்து வாழ்ந்தார். இறுதியில், பேர்ன்ஸ்டீனிடமிருந்து ஒரு அவமரியாதைக்குரிய உறுதிப்பத்திரத்தை உருவி எடுத்ததுடன் அதிகாரிகள் திருப்தி அடைந்தனர். அதில் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு பணிவினை வெளிப்படுத்தியிருந்த அவர், தம்முடைய நிலைகுலைய வைக்கும் கருத்துக்களையும் அல்லது தேசாபிமானத்திற்கு எதிரான கருத்துக்களையும் மறுத்தார். கீழிறங்கிவந்த இந்த நடவடிக்கை இன்னும் ஒருமுறை கடவுச்சீட்டை வைத்திருக்க அவரை அனுமதித்தது என்பதுடன், அதற்கு பிந்தைய ஆண்டுகளில் அவருடைய நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும் கதவுகளைத் திறந்துவிட்டது.

அருமையான, தலைச்சிறந்த பிரபலங்களை அவமானப்படுத்துதல், மதிக்காமல் நடத்துதல், மற்றும் ஒடுக்குமுறை, தணிக்கைமுறை மற்றும் இணக்கவாதம் (conformism) ஆகியவற்றுடன் அந்த கலைஞர்களின் கசப்பான அனுபவங்கள் தான், இந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் இசையின் உண்மையான வரலாறாக இருக்கிறது.

பேர்ன்ஸ்டீனின் அனுபவங்களும், அவர் அவருடைய வாழ்நாள் முழுவதும் எதனோடு இணைந்திருந்தாரோ - அமெரிக்காவிலிருந்த அந்த இடதுசாரி சிந்தனைகளை தோற்றப்பாட்டளவில் குற்றங்களாக காட்டப்பட்டதும், நம்முடைய தற்போதைய பிரச்சினைகளில் சிலவற்றை விளக்க உதவும்.

உலகின்மீது ஆதிக்கத்தை தக்க வைத்திருந்த அமெரிக்க முதலாளித்துவமும், மத்தியமேற்கு தொழில்துறை போன்ற பிராந்தியங்களும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், உயர்ந்த அளவிலான வேலைவாய்ப்புகளை அனுபவித்தன. வாழ்க்கைத் தரம் பொதுவாகவே உயர்ந்து வந்தது. கம்யூனிசத்திற்கு எதிரான களையெடுப்புகளுக்கு இடையிலும், ஒரு தழைத்தோங்கிய மற்றும் பொதுவாகவே நம்பிக்கை மிகுந்த, உத்யோகபூர்வ கலாச்சார வாழ்க்கை அமெரிக்காவில் செல்வாக்கு பெற்றிருந்தது. உண்மையில், இடதுசாரி செல்வாக்கு வெறுமனே மறைந்து போய்விடவில்லை. கலைகளுக்கு ஆதரவு கோரி வாதிட்டவர்கள், தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் தைரியமாக பேசினார்கள்.

முதலாளித்துவ கோடீஸ்வரரும், பரோபகாரியுமான (philanthropist) ஒருவரின் பேரன், ஆகஸ்ட் ஹெக்ஸ்செர், 1950கள் மற்றும் 1960களில் ஒரு பிரபல தாராளவாதியாக இருந்தார். 1952 முதல் 1956 வரையில் New York Herald Tribuneஇல் முதன்மை தலையங்க எழுத்தாளராக இருந்த அவரை, ஜோன் எஃப். கென்னடி 1962இல் வெள்ளை மாளிகையின் கலாச்சார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். அவர், கலைகளுக்கான ஒரு சிறப்பு ஆலோசகராக கென்னடி நிர்வாகத்திற்குச் சேவைச் செய்ய சென்றார்.

கலைகளுக்கான தேசிய சட்டமசோதா குறித்த தொடக்க விவாதத்தின் போது, 1961இல் காங்கிரஸின் முன் தோன்றிய ஹெக்ஸ்செர், புதிய கலை அமைப்புகளுக்கான ஒரு நிதி ஒதுக்கீட்டுத் தொகையைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். ஏனைய திறமைவாய்ந்தோர், 10 முதல் 25 மில்லியன் டாலரை முன்மொழிந்தனர். ஹெக்ஸ்செர் 1 பில்லியன் டாலரை முறையிட்டார். காங்கிரஸ் உறுப்பினர்கள் எள்ளி நகையாடிய போது, ஹெக்ஸ்செர் குறிப்பிட்டதாவது: "நான் பெண்டகனை பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்திருந்தால் ... உங்களில் ஒவ்வொருவரும், எனது கருத்துக்களை கவனத்துடன் எடுத்துக்கொண்டு  அந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டிருக்கக்கூடும். இங்கே சிரிப்பொலி இருந்திருக்காது," என்றார். இதுவொரு உணர்வுபூர்வமான மற்றும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக நான் கருதுகிறேன்.

கென்னடியின் பதவியேற்பு விழாவில் கவிஞர் ரோபர்ட் புரோஸ்ட் கலந்து கொண்டார். நீங்கள் நம்புவீர்களோ மாட்டீர்களோ, அந்த காலக்கட்டத்தில் பிரபலமான ஓபெரா பாடகர்களும், தொல்சீர் பியானோ வாசிப்பாளர்களும், தலைச்சிறந்த ஜாஸ் மேதைகளும், தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பின்-இரவு உரையாடல் நிகழ்ச்சிகளிலும் தோன்றினார்கள். பேர்ன்ஸ்டீனின் இளைஞர்களுக்கான இசைநிகழ்ச்சிகள் (Young People's concerts) பெருமிதம் கொள்ளத்தக்க ஒன்றாக இருந்தன. ஆனால் அதே அளவிற்கு அமெரிக்க வெகுஜன இசையும், ஜாஸ் இசையும் இருந்தன. உள்நாட்டு உரிமைகள் கோரி வரலாற்றுரீதியிலான போராட்டங்களில் களம் இறங்கியிருந்த இளம் கறுப்பினமக்கள் உட்பட, தொழிலாள வர்க்கத்தின் இளம் தலைமுறைகளுக்கு, முதல்முறையாக, சிறிது ஓய்வுநேரம் கிடைத்திருந்தது. அவர்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியையும் சிறிது அறிந்து கொண்டார்கள். இது Motown மற்றும் ஏனைய இசை போக்குகளை தோற்றுவிக்க உதவியது.

நாங்கள் பழங்கால நிகழ்வுகளை பாராட்டிக்கொண்டிருக்கவில்லை. அதுவொரு பொற்காலமாக இருக்கவில்லை. கென்னடி அரசாங்கம் உலகம் முழுவதிலும் இராணுவவாதம் மற்றும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தது. எளிமையான ஒன்றைக் குறிப்பிடுவதானால், 1961இல் கியூபாவின் குறைப்பிரசவ Bay of Pigs தாக்குதலையும், வியட்நாமில் அதிகரிக்கப்பட்ட இராணுவ-CIA ஈடுபாட்டையும் குறிப்பிடலாம். இருந்தபோதினும், அமெரிக்க அரசியல் நிர்வாகம் அப்போது ஆழமான கலாச்சார வாழ்க்கையை சகித்துக் கொண்டிருந்ததுடன், அதை ஆதரிக்கவும் செய்தது.

கடந்த பல தசாப்தங்களில் அமெரிக்க முதலாளித்துவத்தின் நீளமான பொருளாதார மற்றும் தொழில்துறை சிதைவானது, ஓர் அறிவுபூர்வமான மற்றும் கலாச்சார சிதைவையும் ஓரளவிற்கு சேர்த்துக் கொண்டிருந்தது; அதற்கு உதவியாக ஆகியிருந்தது.

உலக சோசலிச வலைத் தளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஒரு கருத்துரையில் நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்: "வீழ்ச்சியில் இருக்கும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு கலைத்துவ படைப்பில் ஆர்வமோ அல்லது நிதியுதவி வழங்குவதில் ஆர்வமோ இல்லை. செல்வசெழிப்பு மிக்க காலக்கட்டத்தில், பல்வேறு கல்வி மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதைப் பெருநிறுவன மேற்தட்டு குறிப்பிட்ட அளவிற்கு கௌரமாக உணர்ந்தது. ஆனால் அமெரிக்காவை ஆளும் இப்போதைய மேற்குடி, அதற்கு கூடுதலாக அளிக்கும் ஒவ்வொரு டாலரும் வீணானது என்றும், இழிவானது என்றும் கூட பார்க்கிறது. பொதுக்குழுவிலும், சட்ட வளாகங்களிலும் உட்கார்ந்திருக்கும் நாசக்காரர்களினால், அமெரிக்காவின் கலாச்சார வாழ்க்கை ஒரு பெரும் அபாயத்திற்குள் இருக்கிறது."

இதற்காக என்ன செய்வது?

இந்த விளக்கவுரையில் ஒன்றை தெளிவுபடுத்துவதென்றால், டெட்ராய்ட் சிம்பொனி போராட்டத்தை வெறும் ஒரு தொழிற்சங்க பிரச்சினையாக நாங்கள் பார்க்கவில்லை. இது சிக்கலான சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது. DSOவிற்கும், இதுபோன்ற நூற்றுக்கணக்கான இசைக்குழுக்களுக்கும், நிதியளிக்க தேவையான அளவிற்கு செல்வவளம் இந்நாட்டில் இருக்கிறது. வெறுமனே டெட்ராய்ட் சிம்பொனி குழுவிற்கு மானியம் அளிப்பது என்றில்லாமல், அமெரிக்க சமூகத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் நிதியியல் உயர்தட்டின் இரும்புப்பிடி உடைக்கப்பட்டால், எல்லாவிதமான விஷயங்களும் சாத்தியப்படும்.

எங்களுடைய பார்வையில், கலை மற்றும் கலாச்சாரத்திற்கான போராட்டத்தை ஒரு புதிய அடித்தளத்தின்மீது நிறுத்த வேண்டிய அவசியமேற்பட்டிருப்பதை இது உணர்த்துகிறது. ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் அளிப்பதோ அல்லது பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் கோடீஸ்வர மோசடியாளர்களின் நல்லெண்ணத்திற்காக முறையிடுவதென்பது பயனற்றது என்பதையும் விட, நாசகரமானதாகும்.

எந்த வகையிலும், பொருளாதாரம் மட்டுமே பிரச்சினையில்லை. இன்றைய நிலையில், கலையின் இருப்பே அச்சுறுத்தலுக்குள்ளாகி உள்ளது. ஆளும் மேற்தட்டும், ஊடகங்களில் உள்ள அதன் சேவகர்களும், மக்களின் அறிவு மற்றும் உணர்வு சுருங்கிப் போவதையே அதிகமாக கோருகின்றன. உணர்வுப்பூர்வமாகவும், சுதாரிப்புடனும், இரக்க உணர்வோடும் இருக்கும் மக்கள் கூட்டத்தைத் தான், இறுதியில், அவர்கள் விரும்புவதாக உள்ளது. எடுத்துக்காட்டாக, வெகுஜன இசையும் மற்றும் திரைப்படங்களில் இருக்கும் கொடூரமும், வன்முறையும் ஒரு சித்தாந்த நெருக்கடியிலிருந்தும், முட்டுச்சந்திலிருந்தும் எழுகின்றன. ஆனால் அவையும் கூட உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அமெரிக்க அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்திற்கு மக்களைப் பழக்கப்படுத்தவே உதவுகின்றன. திரைப்படங்களில் ஆபாச-காமமும் (porno-sadism) அதிகரித்திருப்பது, அதன் எதிர்பலத்தில் உண்மையில், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள குடிமக்களையும், கைதிகளையும், உவமையில் கூற முடியாத அளவிற்கு, தவறாக கையாள்கிறது. மேலும், இவை இன்னும் மோசமான அட்டூழியங்கள் வரவிருப்பதைக் காட்டுகின்றன.

பணக்காரர்களின், பெருநிறுவனங்களின், இரண்டு வலதுசாரி அரசியல் கட்சிகளின் கருணையில் இருக்கும் இந்த கலாச்சாரம் தற்போதைய நிலைமை சகிக்க முடியாததாக உள்ளது. சமூகத்தால், கலைக்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும். இது தான் ஒரு முன்னேறிய நாகரீகத்தின் அடையாளமாக இருக்கும். இன்று நாம் பகட்டுத்தனமான கோட்பாட்டின் ஒரு புதுப்பிப்பை எதிர்கொண்டிருக்கிறோம். அதாவது, கற்றுத்தரப்படும் கலை மற்றும் கல்விக்காக, ஒருவேளை அவை கற்றுத் தரப்படுவதாக வைத்துக்கொண்டோமேயானால்- ஒரு பில்கேட்ஸ் அல்லது பேஸ்புக்கின் மார்க் ஜூக்கெர்பெர்க் போன்ற மிகைப்பட்ட பணக்காரர்களின் நன்மை செய்யும் மனப்பாங்கிற்குத் தான் நன்றி கூற வேண்டியதிருக்கிறது. இதுவொரு அருவருப்பான மற்றும் தாழ்ந்த நிலைமையாகும்.

முடிவாக: கலை தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாது. எங்களுடைய பார்வையில், கலை மற்றும் கலாச்சாரத்தை வெற்றிகரமாக காப்பாற்றுவதற்கான ஒரே அடித்தளம், முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச போராட்டமும், மற்றும் மனித கலாச்சாரத்தின் ஒவ்வொரு முன்னோக்கிய சாதனையையும் பாதுகாப்பதற்கான, விரிவுபடுத்துவதற்கான ஒரு திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வருவதும் ஆகும்.

இந்த வீழ்ச்சி மற்றும் பின்னடைவு நிலைமைகள், பெருமந்த நிலைமைகளுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மோசமான பொருளாதார நிலைமைகளாகும். இது அமெரிக்காவிலும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களைத் தற்போது பாதித்துள்ளது. இந்நாட்டில் வாழும், சுமார் 800இல் இருந்து 100 மில்லியன் மக்கள் தங்களின் அடிப்படை பொருளாதார மற்றும் சுகாதார தேவைகளை சமாளிக்க முடியாமல் அல்லது சமாளிக்க கஷ்டப்பட்டு வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நேரடியாக தாக்குதலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் அல்லது தங்களைச் சுற்றிலுமுள்ள மக்களின் நிலைமைகளோடு தங்களைத்தாங்களே பொருந்திப் பார்க்க முடியாமல் இருக்கும் கலைஞர்கள் (DSOஇல் உள்ள இசைக் கலைஞர்களைப் போன்றவர்கள்) சமூகத்தை மாற்றியமைக்கும் மற்றும் மறுகட்டமைக்கும் முன்னோக்குகளால் ஈர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். கலைத்துவ ஆளுமை மீண்டுமொருமுறை சமூக புரட்சிக்கான காரணங்களில் பங்கெடுக்க அழைக்கப்பட்டிருக்கிறது. உலக சோசலிச வலைத் தளம், சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் இயக்கம் மற்றும் சோசலிச சமத்துவ கட்சி இந்த நிலைப்பாட்டில் இருந்தே போராடி வருகிறது; ஆக, அந்த போராட்டத்தில் பங்கெடுக்க உங்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.