World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Lessons of the Paris Commune

பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள்

Leon Trotsky
February 1921
Back to screen version

கம்யூனின் வரலாற்றை ஒவ்வொரு முறை நாம் ஆராயும்போதும், பிற்கால புரட்சிகரப் போராட்டங்களில் இருந்து மற்றும் சமீபத்திய புரட்சிகளில் இருந்து (ரஷ்யப் புரட்சி மட்டுமல்லாது ஜேர்மன் மற்றும் ஹங்கேரியப் புரட்சிகளில் இருந்து) பெற்ற அனுபவத்தின் உதவியால், அதனை ஒரு புதிய அம்சத்தின் பரிமாணத்தில் இருந்து நாம் பார்க்கிறோம். பிராங்கோ-ஜேர்மன் போர் குருதிபாயும் வெடிப்பாய், ஒரு தீவிர உலகப் படுகொலைக்கு கட்டியம் கூறியது என்றால், பாரிஸ் கம்யூன் ஒரு உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மின்னலாய் வந்து கட்டியம் கூறியது.

கம்யூன் உழைக்கும் வெகுஜனங்களின் தீரச்செயலையும், ஒரே கூட்டாக ஐக்கியப்படுவதற்கான அவர்களது திறனை, வருங்காலத்தின் பெயரில் தங்களை தியாகம் செய்யக் கூடிய அவர்களது திறமையை நமக்குக் காட்டுகிறது. ஆனால் அதேநேரத்தில், வெகுஜனங்கள் தங்களது பாதையைத் தெரிவதில் திறனற்று இருந்ததையும், இயக்கத்தின் தலைமை குறித்து முடிவு எடுக்காது இருந்ததையும், ஆரம்ப வெற்றிகளுக்குப் பின்னர் சட்டென்று நின்று விடும் அவர்களது விதிவசமான மனவிருப்பையும், அது எதிரி மீண்டும் மூச்சு விடுவதற்கும் தனது நிலையை மறு ஸ்தாபகம் செய்வதற்கும் அனுமதிப்பதையும் இது நமக்குக் காட்டுகிறது.

கம்யூன் மிகத் தாமதமாகத் தான் வந்தது. செப்டம்பர் 4 அன்றே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் அது கொண்டிருந்தது, அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் தொழிலாளர்கள் கடந்த காலத்தின் அனைத்து சக்திகளுக்கும் எதிராக (பிஸ்மார்க்குக்கு எதிராக, அதேபோல் தியேருக்கு எதிராகவும்) நடத்தி வந்த போராட்டத்தில் அவர்களது தலைமையிடத்தில் ஒரே அடியில் பாரிஸின் பாட்டாளி வர்க்கத்தை அமர்த்தியிருக்க அந்நிலை அனுமதித்திருக்கும். ஆனால் அதிகாரம் பாரிஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் (deputies of Paris) என்கின்ற ஜனநாயக வாய்வீச்சுக்காரர்களின் கரங்களில் சென்று விட்டது. பாரிஸின் பாட்டாளி வர்க்கத்திடம் ஒரு கட்சியும் இல்லை, முந்தைய போராட்டங்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டிருக்கக் கூடிய தலைவர்களும் இல்லை. தங்களை சோசலிஸ்டுகளாகக் கருதிக் கொண்டு தொழிலாளர்களின் ஆதரவை எதிர்பார்த்த குட்டிமுதலாளித்துவ தேசப்பற்றாளர்கள் (patriots) தங்கள் மீதே உண்மையில் எந்த நம்பிக்கையும் கொண்டிராமல் இருந்தார்கள். பாட்டாளி வர்க்கம் தன்னகத்தே கொண்டிருந்த நம்பிக்கையை அவர்கள் உலுக்கினார்கள். இயக்கத்தின் தலைமையை ஒப்படைப்பதற்காக, தங்களுடைய பைகளில் ஒரு டஜன்  சற்றே புரட்சிகரமாய் தோன்றக்கூடிய சொல்லாட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டிருந்த பிரபலமான வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், பாராளுமன்றவாதிகளைத் தேடி அவர்கள் தொடர்ந்து அலைந்து கொண்டிருந்தார்கள்.

போல்-போன்கூர், .வரேன், ரெனோடெல் மற்றும் ஏராளமான மற்றவர்களை கொஞ்ச காலத்திற்கு பாட்டாளி வர்க்க கட்சியின் ஆசான்களாக இருக்க எது அனுமதித்ததோ அது தான் ஜூல் பேவர், கேமியே-பாஜ் மற்றும் அவர்களின் கூட்டம் பாரிஸில் செப்டம்பர் 4 அன்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் காரணமாய் அமைந்தது. ரெனோடெல்களும், போன்கூர்களும்  இன்னும் லோங்கேகளும் மற்றும் பிரெஸெமேன்களும் கூட, தங்களது அனுதாபங்கள், தங்களது புத்திஜீவித்தன பழக்க வழக்கங்கள் மற்றும் தங்களது நடத்தையின் மூலம், புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தைக் காட்டிலும் ஜூல் பேவர் மற்றும் ஜூல் பெரிக்கு மிக நெருக்கமாய் இருந்தனர். அவர்களது சோசலிசச் சொல்லாட்சி எல்லாம் வெகுஜனங்களின் மீது தங்களை இருத்தி்க்கொள்ள அனுமதிக்கிற வரலாற்று முகமூடியே அன்றி வேறு எதுவும் இல்லை. அத்துடன் பேவர், சிமோன், பிகார்டு மற்றும் மற்றவர்கள் எல்லாம் ஜனநாயக-தாராளவாத சொல்லாட்சிகளையெல்லாம் பயன்படுத்திய மற்றும் துஷ்பிரயோகம் செய்த அக்காரணத்தினால் தான் அவர்களது பிள்ளைகளும் பேரன்களும் சோசலிச சொல்லாட்சிக்கு கடமைப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகளும் பேரன்களும் தங்களது தந்தையர்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, அவர்கள் விட்ட வேலையை இவர்கள் தொடர்கிறார்கள். அமைச்சரவை குழுவில் எவரெவர் இருப்பது என்பது பற்றிய  கேள்வியாக இல்லாமல் இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியான பிரான்சில் எந்த வர்க்கம் அதிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும் என்ற் கேள்வி பற்றி முடிவெடுக்க அவசியமான சமயத்தில், ரெனோடெல், வாரேன், லோங்கே மற்றும் இவர்களைப் போன்றவர்கள் எல்லாம் காலிஃபெட்டின் கூட்டாளியும் கம்யூனைக் கொலை செய்தவருமான மிலெராண்டின் முகாமின் பக்கம் இருப்பார்கள் .... சலோன்களின் [பலரும் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் தங்களது மகிழ்ச்சிக்காகவும் ஒரு சிறப்பான தலைவரின் கீழ் ஒரு கூரையின் கீழ் கூடுகின்ற ஒரு இடம்] மற்றும் நாடாளுமன்றங்களின் புரட்சிகரப் பிதற்றல்காரர்கள் எல்லாம் உண்மை வாழ்க்கையில் புரட்சிக்கு நேருக்கு நேராய் தங்களை காண்கின்ற சமயத்தில், அதனை ஒருபோதும் அடையாளம் காணவும் இயலாதவர்களாய் இருக்கின்றனர்