World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

WikiLeaks document exposes US complicity in Sri Lankan war crimes

இலங்கை யுத்தக் குற்றங்களுக்கு அமெரிக்கா உடந்தையாய் இருந்ததை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன

By K. Ratnayake
4 December 2010
Back to screen version

விக்கிலீக்ஸால் இந்த வாரம் வெளியிடப்பட்ட, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து கிடைத்த இராஜதந்திர தகவல் பரிமாற்ற ஆவணங்கள், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கட்டங்களில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றி ஒபாமா நிர்வாகம் நன்கு அறிந்திருந்ததை காட்டுகின்றன.

இராஜபக்ஷ 2006 ஜூலையில் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்கினார். அது 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது. கடைசி மாதங்களில், புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருந்த சிறிய நிலப் பகுதியின் மீது இலங்கை இராணுவம் குண்டுகளைப் பொழிந்து சேதப்படுத்தி, ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களை கொன்றது. இராஜபக்ஷ, இராணுவம் அல்லது தனது அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்களை மீண்டும் மீண்டும் மறுத்துவருவதோடு எந்தவொரு சுயாதீன விசாரணையையும் எதிர்க்கின்றார்.

விக்கிலீக்ஸ் பிரசுரித்த தகவல்கள், இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு சற்றே ஒரு வாரத்துக்கு முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று அமெரிக்க தூதர் பற்றீசியா ஏ. புடீனிஸ்ஸால் அனுப்பப்பட்டவை. இராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை தோற்கடித்து தேர்தலில் வென்றார்.

 “[யுத்தக் குற்றத்துக்கான] பொறுப்புடைமை பற்றிய அரசாங்கத்தின் அக்கறையீனம் ஆச்சரியத்திற்குரியதல்ல, என குற்றிப்பிட்ட பின்னர், இந்த விவகாரமானது, குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் எதிர்க் கட்சி வேட்பாளர் ஜெனரல் பொன்சேகா உட்பட, நாட்டின் சிரேஷ்ட சிவிலியன் மற்றும் இராணுவத் தலைமைத்துவத்தை சார்ந்திருப்பதால் சிக்கலானதாக இருக்கின்றது என புட்டீனிஸ் தெரிவித்தார்.

வாஷிங்டன், புலிகளின் தோல்வியின் பின்னர்மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைக்கு அழைப்பு விடுத்த போதிலும், அது இராஜபக்ஷ சகோதரர்களை அல்லது பொன்சேகாவை பிரதான குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடவில்லை. நாட்டின் உயர் மட்ட சிவில் மற்றும் இராணுவத் தலைவர்கள் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பாளிகள் என்பதை அமெரிக்கா நன்கு தெரிந்து வைத்திருந்ததை புட்டீனிஸ் அனுப்பிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தளபதி என்ற வகையில், இறுதித் தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுத்தமைக்கு பொன்சேகா பொறுப்பாளியாவார். ஜனாதிபதியின் சகோரர் கோடாபய இராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட பொறுப்பில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தார்.

ஜனாதிபதி இராஜபக்ஷவும் ஜெனரல் பொன்சேகாவும் யுத்தக் குற்றங்களை மேற்பார்வை செய்தமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 7,000 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது. சர்வதேச நெருக்கடி குழுவானது கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை 30,000க்கும் 75,000 க்கும் இடையிலான உயர்ந்த எண்ணிக்கை என்றும், இலங்கை இராணுவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களினுள் இருந்த ஆஸ்பத்திரிகள் மற்றும் உதவி நிலையங்களை வேண்டுமென்றே இலக்கு வைத்தது என்றும் ஆதாரங்களைத் தொகுத்துள்ளது.

2009 மே மாதம், பிரிட்டிஷை தளமாகக் கொண்ட கார்டியன் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகள், புலிகளின் மூன்று தலைவர்களான சமாதானச் செயலகத்தின் தலைவர் எஸ். புலித்தேவன், அரசியல் தலைவர் பி. நடேசன் மற்றும் ஒரு இராணுவத் தலைவரான ரமேஷ் ஆகியோர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த போது கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தன. இந்த சரணடைவுகளுக்கான ஒழுங்குகள் பிரிட்டிஷ், அமெரிக்கா மற்றும் ஐ.நா. அலுவல்களின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்டதாக சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் மாரி கொல்வின் அம்பலப்படுத்தியுள்ளார்.

கசிந்துள்ள தகவல்கள், இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அதன் உச்ச கட்டம் வரை ஆதரவளித்த அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளின் வஞ்சகத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அவர்கள், 2002ல் கைச்சாத்திட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை இராணுவம் பகிரங்கமாக மீறியதை பற்றியும், அது பொதுமக்கள் இலக்குகள் மீது குண்டு வீசியதைப் பற்றியும் மற்றும் அரசாங்க-சார்பு கொலைப் படைகள் இயங்குவது உட்பட ஜனநாயக உரிமை மீறல்கள் பற்றியும் மௌனமாக இருந்தன. கடைசி மாதங்களில், படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழியாக, அவர்கள் புலிகளை நிபந்தனையின்றி சரணடையுமாறு மீண்டும் மீண்டும் கோரினர்.

யுத்தத்தின் கடைசி கட்டத்திலும் மற்றும் அதன் பின்னரும் மட்டுமே, இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமைகள் என்ற துரும்புச் சீட்டை அமெரிக்காவும் ஏனைய வல்லரசுகளும் வெறுப்புணர்ச்சியுடன் பயன்படுத்தின. மனித உரிமை மீறல்கள் பற்றிய அவர்களது அம்பலப்படுத்தல்களுக்கும் தமிழ் பொது மக்களின் தலைவிதிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. மாறாக, சீனா குறிப்பாக இலங்கையில் ஹம்பந்தொட்டையில் ஒரு பிரதான புதிய தென் துறைமுகத்தை அமைப்பது உட்பட பொருளாதார மற்றும் மூலோபாய சலுகைகளை வழங்கியதற்குப் பிரதியுபகாரமாக, யுத்தத்தை நடத்துவதற்கு நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி, கொழும்பு அரசாங்கத்தின் நெருங்கிய ஆதரவாளராக வளர்ச்சியடைந்திருப்பதை பற்றியே அவர்கள் கவலைகொண்டுள்ளனர்.

யுத்தத்தின் எழுச்சியுடன் இராஜபக்ஷ தனது அதிகாரத்தை பலப்படுத்திக்கொண்டது தெளிவானவுடன், மனித உரிமைகள் பற்றிய அமெரிக்க அக்கறைகள் விரைவில் காணாமல் போயின. இலங்கை: யுத்தத்தின் பின்னர் அமெரிக்க மூலோபாயத்தை மீண்டும் திட்டமிடல், என்ற தலைப்பில் கடந்த டிசம்பரில் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பிரதான அறிக்கையை சார்ந்ததாகவே புடினிஸின் தகவல் அமைந்திருந்தது. கொழும்பில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதால் அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கு உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய அந்த அறிக்கை, அமெரிக்காவால் இலங்கையை இழக்க முடியாது என பிரகடனம் செய்தது. மனித உரிமைகள் விவகாரம் முக்கியமானதாக இருக்கும் அதே வேளை, இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கை ஒரே ஒரு நிகழச்சி நிரலின் மூலம் மட்டும் செல்வாக்கு செலுத்த முடியாது. அது உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தாக்கத்தை ஏற்படுத்தாது, மற்றும் அது பிராந்தியத்தில் அமெரிக்காவின் பூகோள மூலோபாய நலன்களுக்கு குறைவாகவே பயன்தருகிறது, என அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த தகவமைவின்படி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், ஜனவரியில் அனுப்பப்பட்ட தகவல் புதிதாக எதையும் வெளிப்படுத்தவில்லை என நேற்று கூறிக்கொண்டது. இலங்கையில் பொறுப்புடைமை சம்பந்தமான அமெரிக்கக் கொள்கை, பல முறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது, என அது கூறுகின்றது. அவற்றை [யுத்தக் குற்ற குற்றச்சாட்டுக்களை] விசாரிப்பதற்கான முதல் பொறுப்பு இறைமைகொண்ட தேசிய அரசாங்கத்துக்கே உண்டு எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.

இதுவரை, இலங்கை அரசாங்கம் முழுமையாக அமைதியாக இருந்துள்ளது. ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தின் சிறப்புரிமை கொண்ட தொடர்பாடல்கள் குறித்து பகிரங்கமாக கருத்துக் கூற விரும்பவில்லை என இலங்கையின் வெளியுறவு அமைச்சு கூறிக்கொண்டது.

புலிகளின் தோல்வியின் பின்னர், தமிழ் முதலாளித்துவத் தட்டுக்களுக்காக அரசியல் ஸ்தாபனத்தில் ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் தமது சொந்த காய்நகர்த்தல்களுக்கு ஆதரவை எதிர்பார்த்து அமெரிக்க தூதரகத்துடன் பின் கதவு ஊடாக ஆலோசனையில் ஈடுபடும் தமிழ் கட்சிகளின் அடிபணிவையும் புடெனிஸ்ஸின் தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன. யுத்த காலத்தின் போது புலிகளின் ஊது குழலாகச் செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இத்தகைய கட்சிகளில் அடங்கும்.

தமிழ் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன், பொறுப்புடைமை முக்கியமானது என்று நம்புவதோடு இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டையும் அவர் வரவேற்றுள்ளார் என புடெனிஸ் குறிப்பிட்டுள்ளார். மிகவும் தெளிவாக இருந்த தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், இத்தகைய பொறுப்புடைமை விவகாரம் உடனடியாக அக்கறை செலுத்தவேண்டிய ஒன்றாக இருந்தாலும், அதற்குப் பதிலாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களை விடுதலை செய்துகொள்வது, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்த பிராந்தியங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதைப் பற்றி கவணிப்பது, மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வது போன்ற நடப்பில் நிலவும் ரொட்டி மற்றும் வெண்ணைக்கட்டி பற்றிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் பேரில், அத்தகைய பொறுப்புடைமை விவகாரத்தை குறைத்து மதிப்பிட வேண்டும் என பிரேரித்தார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இன ஒற்றுமை பிரச்சினையை பொன்சேகா கையாள்வார் என அமெரிக்க தூதரிடம் கூறியிருந்தார். பொறுப்புடைமை பற்றி கணேசன் எம்முடன் கூறும் போது, விடயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், பொறுப்புடைமை பிரச்சினை பிரிவினையை ஏற்படுத்துவதாக இருக்கிறது, மற்றும் இப்போது இராஜபக்ஷக்களின் பிடியில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஐக்கியப்படுவது பற்றியே கவணம் செலுத்த வேண்டும் என்றார்.

பொன்சேகா யுத்தக் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர் இராஜபக்ஷவுடன் ஒப்பிடும் போது குறைந்த தீமையுடையவர் எனக் கூறி, தமிழ் கூட்டமைப்பும் கணேசனின் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகாவை ஆதரித்தனர். யுத்தத்தின் பின்னர் இராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்ட பொன்சேகா, இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்டார். பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பதற்காக, இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்த வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியுடனும் தமிழ்க் கட்சிகள் கைகோர்த்துக்கொண்டன.

தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எம்.கே. சிவாஜிலங்கம், ஒரு வேறுபட்ட தந்திரத்தை கையாண்டார். புடெனிஸ்ஸின் தகவலின் படி, அவர்தமிழ் மக்கள் உயிரிழப்பு மற்றும் அவர்களது துன்பங்களுக்கு நியாயம் பெறுவதற்காக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரும் வகையில் பொறுப்புடைமை பற்றி பேசினார்”. அமெரிக்காவுக்கும் ஏனைய வல்லரசுகளுக்கும் மனித உரிமை மீறல் பற்றி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்த முன்னாள் தீவிரவாதிகளான நவசமசமாஜக் கட்சியும் சிவாஜிலிங்கத்தை ஆதரித்தது. கசிந்துள்ள தகவல்கள் அந்த வேண்டுகோளின் அரசியல் வங்குரோத்தை அம்பலப்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் அதன் பங்களிகளுக்கும், இராஜபக்ஷவை அல்லது பொன்சேகாவை பொறுப்பாளிகளாக்கும் எண்ணம் கிடையாது. மாறாக, அவர்களது தலையீடு எப்பொழுதும் முழுமையாக அவர்களது மூலோபாய, பொருளாதார மற்றும் இராஜதந்திர எண்ணங்களுடன், சீனாவுடன் அமெரிக்காவுக்கு அதிகரித்துவரும் பகைமையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.