World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government minister prepares new attacks on the unemployed

ஜேர்மனிய அரசாங்க மந்திரி வேலையற்றோர் மீது புதிய தாக்குதல்களுக்கு தயாரிப்பு நடத்துகிறார்

By Peter Schwarz
20 February 2010

Back to screen version

தாராளவாத ஜனநாயகக் கட்சியின் (FDP) தலைவர் கீடோ வெஸ்டர்வெல்ல கடந்த சிலநாட்களாக வேலையற்றோர்மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியதன் மூலம் செய்தித்தாள்களின் தலைப்புக்களில் இடம்பிடித்துள்ளார்.

வெஸ்டர்வெல்ல ஜேர்மனிய வெளியுறவு மந்திரியும், தாராளவாத ஜனநாயகக் கட்சியும் இரு பழைமைவாத கட்சிகள் கொண்ட ஜேர்மனியக் கூட்டணி அரசாங்கத்தின் துணைத் தலைவரும் ஆவார். ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றம் (BVG) Hartz IV பொதுநல உதவித்தொகைகள் என்று அழைக்கப்படுபவற்றில் கணக்கீடு செய்யப்படும் முறை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று எடுத்த முடிவை ஒட்டி இவருடைய சமீபத்திய கருத்துக்கள் வந்துள்ளன.

ஒரு செய்தித்தாளுக்கு கொடுத்த பேட்டியில் வெஸ்டர்வெல்ல Hartz IV பற்றிய விவாதங்கள் "சோசலிச தன்மைகளை" ஒத்துள்ளன என்றும் "கடைசிக்கால ரோமானிய சீர்குலைவை" நினைவுகூறுகின்றன என கூறினார். மற்றும் ஒரு "புத்திஜீவிதமான அரசியல் திருப்பம் வேண்டும்" என அழைப்புவிட்டார். பங்கீட்டுமுறையை முன்னேற்றுவிப்பதற்குப் பதிலாக, அரசியல் விவாதத்தின் மையத்தில் "ஒவ்வொருவரினதும் செயற்பாட்டு நியாயம்" இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அவருடைய கருத்துக்கள் பற்றிய குறைகூறல்கள் எழுந்தவுடன், வெஸ்டர்வெல்ல செய்தி ஊடகத்தில் தாக்குதலை அதிகரித்தார். நாட்டில் வேலை செய்பவர்கள் "வடிகட்டின முட்டாள்களாகி" வருகின்றனர் என்றார் அவர். ஜேர்மனிய சமூகநல அரசாங்கத்திற்கு முற்றிலும் புதிய தொடக்கம் தேவை என்றார். "ஜேர்மனியில் வேலை செய்பவர்கள், சுறுசுறுப்பாக எழுந்து பணியாற்றுபவர்கள், தாங்கள் செய்யும் வேலையினால் இறுதியில் தங்கள் கைகளில் சிறிதளவாவது எஞ்சியிருக்கவேண்டும் என்று விரும்புவதற்காக அவர்களை மன்னிக்கவேண்டும் என்று கூறுவது இழிந்த விவாதம் ஆகும்." என்று அவர் அறிவித்தார்.

பெரும்பாலான வர்ணனையாளர்கள் வெஸ்டர்வெல்லவின் சமூகநல அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்கள் தன்னுடைய கட்சியின் சரியும் செல்வாக்கை சமாளிக்கமுயலும் பேச்சுக்கள் என்று கூறியுள்ளனர். வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா முக்கிய மாநிலத் தேர்தலுக்கு மூன்று மாதத்திற்கு முன்பு தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) கருத்துக் கணிப்பில் கடந்த இலையுதிர்காலத்தில் மத்தியதேர்தல் காலத்தில் அது கொண்டிருந்த 14.6 சதவிகித ஆதரவில் இருந்து தற்போதைய 8 சதவிகிதத்திற்கு சரிந்தது. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாமாநிலத் தேர்தலில் அப்படி மீண்டும் இதே நிலை ஏற்பட்டால், தாராளவாத ஜனநாயக கட்சிக்கு அத்தகைய வாக்களிப்பு, ஜேர்மனியில் மிக அதிக மக்கள் வாழும் மாநிலத்தில் தாராளவாத ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கும் (CDU) இடையே தற்போதுள்ள கூட்டணிக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்குள் பசுமைக் கட்சியுடன் கூட்டணி வரலாம் என்பதைச் சுட்டிக்காட்டும் தொடர்ச்சியான அடையாளங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பிந்தையவர்கள் கருத்துக் கணிப்பில் அதிக ஆதரவைப் பெற்றுள்ளனர். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் ஹாம்பேர்க்கில் ஏற்கனவே இருப்பது போல் வடக்குரைன் வெஸ்ட்பாலியாவில் பசுமைக்கட்சியுடன் கூட்டணி அமைத்தால், பழைமைவாதிகள் மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சி தங்கள் பெரும்பான்மையை பாராளுமன்றத்தின் மேல்பிரிவில் இழந்துவிடும். இது கூட்டாட்சி மட்டத்தில் தாராளவாத ஜனநாயக கட்சியின் செல்வாக்கைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே வெஸ்டர்வெல்லேயின் தலைப்புக்களில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஜனரஞ்சன கருத்துக்களைக் கூறுவது தாராளவாத ஜனநாயக கட்சிக்கு சரியும் ஆதரவை நிமிர்த்துவதற்கு என்றுதான் பல வர்ணனையாளர்களும் கருதுகின்றனர்.

ஆனால் தேர்தல் உத்திகளைவிட வெஸ்டர்வெல்லயின் தாக்குதலின் முக்கிய இலக்காக இருப்பது சமூகநலங்களின் அரசின் மீதான நேரடித் தாக்குதலாகும். அவருடைய கருத்துக்களுக்கு அரசாங்கக் கூட்டணியின் அடுக்குகளில் இருந்து எதிர்ப்புக்கள் வந்துள்ளன என்றாலும், அனைத்து ஆளும் கட்சிகளும் செயற்பட்டியில் 2010ல் கொண்டுவரப்பட்ட குறைப்புக்களைவிட மிக அதிகமான சமூக வெட்டுக்களைப் புதிய சுற்றில் கொண்டுவர விரும்புகின்றன. ஹெகார்ட் ஷ்ரோடர் அறிமுகப்படுத்திய செயற்பட்டியல் 2010ல் இருந்த குறைப்புக்கள் அதிகமாக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதவை என்றும் அவை கருதுகின்றன.

முந்தைய பெரும் கூட்டணி (சமூக ஜனநாயக கட்சி மற்றும் பழைமைவாத யூனியன் கட்சிகள்) ஜேர்மனிய அரசியலமைப்பிற்குள் அறிமுகப்படுத்திய "கடன்கள் மீது தடை" என்பதின்படி அரசாங்கம் பல பில்லியன் யூரோக்களை ஆண்டு செலவுக் குறைப்புக்கள் என்று செயல்படுத்தவேண்டும் என்று உள்ளது. பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் மகத்தான வங்கிகளுக்கான கடன் உதவியும் இந்த குறைப்புக்களில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டன. இதன் பொருள் ஓய்வூதியங்கள், சுகாதாரப் பாதுகாப்பு, வேலைகள் மற்றும் சமூகநலஉதவித் தொகைகள் ஆகியவற்றில் வெட்டு வேண்டும் என்று ஆகும். எப்படியும் கடன் தடையினால் பாதிக்கப்பட்ட பல நகரசபைகள் ஏற்கனவே திவால்தன்மையை எதிர்கொள்ளுகின்றன.

ஜேர்மனிய அரசாங்கமும், பொருளாதாரப் பிரதிநிதிகளும், அரசாங்கம் கடன்களை பொதுச் செலவுகள், ஊதிங்கள் இவற்றில் வேதனைதரும் குறைப்புக்களை செய்து மீட்க வேண்டும் என்று கோருகின்றனர். இவ்விதத்தில் கிரேக்கம், ஜேர்மனி உட்பட ஐரோப்பா முழுவதற்கும் ஒரு பரிசோதனைக்களமாக உள்ளது.

வெஸ்டர்வெல்லவின் கருத்துக்கள் விமர்சனத்திற்கும் உட்பட்டுள்ளன. ஏனெனில் ஆளும் உயரடுக்கின் பல பிரதிநிதிகள் அடுத்த சுற்று வெட்டின் பாதிப்பாளர்களைத் தேவையில்லாமல் தூண்டிவிடக்கூடாது என்று கவலைப்படுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடி பல குடும்பங்களை திவால் விளிம்பிற்குத் தள்ளியுள்ளது ஆனால் அரசாங்கமோ நூற்றுக்கணக்கான பில்லியன்களை வங்கிகளுக்குள் உட்செலுத்துகிறது. Deutsche Bank மீண்டும் அதிக இலாபங்களைக் அடைந்துள்ளது. இங்கிருந்து பணத்தை ஸ்விட்சர்லாந்தில் கொண்டுபோய் வரி ஏமாற்றும் மில்லியனர்கள் நடவடிக்கை பற்றி தொடர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பின்னணியில் வெஸ்டர்வெல்லவின் தீப்பொறி பறக்கும் பேச்சுக்கள் அவர் தன்னுடைய தளம் என்று கருதும் மரபார்ந்த சமூக அடுக்குகளில் எதிர்ப்பைக் கண்டிருப்பது வியப்பு இல்லை.

எனவேதான் பல கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம்- கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தினதும்(CDU-CSU) மற்றும் சில தாராளவாத ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளும் வெஸ்டர்வெல்லேயின் கருத்துக்களைக் கண்டித்துள்ளனர். ஆனால் அவர்களுடைய விமர்சனங்கள் அவர் தன் குறைகளை விவாதத்திற்குரிய வகையில் முன்வைப்பதைத்தான் எதிர்த்துள்ளனரே தவிர சாராம்சத்தில் அவர்கள் அவருடைய கருத்தோடு ஒத்துப் போகின்றனர். உதாரணமாக கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் ஹேர்மான் குரோகே, வெஸ்டர்வெல்லேயின் "பிரச்சனையை பொதுவாக்கப்படும் முறை மற்றும் ஆக்கிரோஷக் குறிப்பு" பற்றிக்குறைகூறி, அவருடைய கருத்துக்கள் Hartz IV உதவித்தொகைத் தரம் பற்றிய தேவையான விவாதத்தை சிக்கலாக்கத்தான் உதவியுள்ளன என்றார்.

வரவுசெலவுத்திட்ட கொள்கையில் இறுதி முடிவு எடுக்கும் மத்திய நிதிமந்திரி வொல்வ்காங் ஷொய்பிள (CDU), வெஸ்டர்வெல்லக்கு மறைமுகாமாக ஆதரவு கொடுக்கும் வகையில் Hartz IV உதவி நிதிகளில் அதிகரிப்பு இருக்காது என்று உறுதியாகக் கூறிவிட்டார். "அரசியலமைப்பு நீதிமன்றம் Hartz IV உதவிநிதிகள் போதுமானவை அல்ல என்று கூறுவதில் இருந்து தெளிவாக ஒதுங்கிவிட்டன" என்றும் கூடுதலான சமூகச் செலவுகளுக்கு போதுமான பணமும் இல்லையென ஷொய்பிள கூறியுள்ளார்.

வெஸ்டர்வெல்லயை பிரதிபலித்த வகையில் ஷொய்பிள குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் வேலையின்மை உதவித் தொகைகளில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்றார். "Hartz IV ன் அடிப்படையில் உள்ள கருத்தை நாம் மறந்துவிடக்கூடாது. சமூகநல உதவியின் அளவு வேலைக்கு செல்வதை கவர்ச்சியற்றதாக செய்துவிடக்கூடாது என்பதே அது." என்றார் அவர்.

இந்தவகையிலான வாதம் தற்போதைய விவாதத்தில் பல வடிவங்களில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க வகையில் இழிந்தது ஆகும். ஹார்ட்ஸ் IV சட்டம்தான் துல்லியமாக மகத்தான குறைவூதியப் பிரிவை ஜேர்மனியில் தோற்றுவிப்பதில் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. ஓராண்டு வேலையின்மைக்குப்பின் தொழிலாளர்கள் எவ்வித வேலையையும், இழிவான மணிக்கு ஒரு யூரோ வேலைகளைக்கூட ஏற்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வழிவகை ஊதியங்களில் அனைத்து மட்டத்திலும் குறைவை ஏற்படுத்தி மோசமான வேலைகளை தோற்றுவித்துவிட்டது.

இப்பொழுது முடிவெட்டுபவர்கள், காவலர்கள், அழைப்பு மையத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அற்ப தொகைகள்கூட வேலையற்றோருக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைகள் குறைக்கப்பட பயன்படுத்தப்படுகின்றன. வேலையில் இருப்பவர்கள், உதவித் தொகைகள் தற்போதைய அளவில் இருந்தால் வேலை செய்ய ஊக்கம் பெற மாட்டார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

மற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் அரசியல்வாதிகள், குறிப்பாக வணிகப் பிரிவில் இருப்பவர்கள், வெஸ்டர்வெல்லக்கு தடையற்ற ஆதரவைக் கொடுத்துள்ளனர்.

Michael Fuchs (CDU), பாராளுமன்றத்தில் ஒன்றியப் பிரிவின் துணைத் தலைவர், "வெஸ்டர்வெல்லவின் முற்றிலும் ஆக்கிரோஷமான தாக்குதல்களை" குறைகூறியுள்ளார்; "அடிப்படையில், சாராம்சத்தில் சரிதான், ஒரு முக்கிய விவாதத்தைத் தொடக்கியுள்ளார்" என்றும் அறிவித்தார். கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தின் பொருளாதாரக் குழுவின் தலைவரான குர்ட் லவுக் வெஸ்டர்வெல்லவுக்கு ஆதரவு கொடுத்து, "எவ்வித முன் தடையும் இல்லாமல் வெளிப்படையாக விவாதங்கள் சமூகச் செலவுகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பது பற்றித் தேவை" என்றார்.

கிறிஸ்தவ சமூக ஒன்றியத்தின் (CSU) மாநிலக்குழுத் தலைவர் ஹன்ஸ் பீட்டர் பிரீட்றிஸ் வெஸ்டர்வெல்லவின் கருத்துக்களின் அடிப்படைத்தன்மை "வேலை செய்யாதவர்களைவிட வேலைசெய்பவர்களுக்கு அதிகம் கொடுக்கப்பட வேண்டும்" என்பாதாகும் என்றார். கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் தலைவர் ஹோர்ஸ்ட் ஸீகோவர் இன்னும் கடுமையான விதிகள் Hartz IV உதவி பெறுவோர் வேலைகளை ஏற்க தேவை என்பதற்கு ஆதரவு கொடுத்தார். அத்தகைய "உதவியை" மறுப்பவர்கள் "அவ்வாறு தொடராமல் இருப்பதை நாம் நிறுத்தவேண்டும்." என்று அவர் அச்சுறுத்தினார்.

சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைவாதிகள் மற்றும் இடது கட்சியில் சில உறுப்பினர்களும் வெஸ்டர்வெல்லவை குறைகூறியுள்ளனர். சமூக ஜனநாயக கட்சித் தலைவர் ஸீக்மார் காப்பிரியேல் அவரை ஒரு "சமூக-அரசியல் தீ மூட்டபவர்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் பசுமைக் கட்சியின் தலைவர் கிளவ்டியா ரோத் அவரை "சண்டைக்காரன்" என்று அழைத்துள்ளார்; பசுமைக் கட்சியின் பாராளுமன்றப் பிரிவின் தலைவர் றெனாட்ட கூனாஸ்ட் அவரை "அரசியல் குண்டர்" என்று கூறினார்.

உண்மையில் இத்தகைய குறைகூறல்கள் நம்பகத்தன்மை அற்றவை. எப்படியும் சமூக ஜனநாயக கட்சியும் பசுமைக் கட்சியினரும்தான் Harts IV விதிகளை நிறுவியர்கள். அவை சமீபத்தில் மனித கெளரவத்தை மீறுகின்றன என்று ஜேர்மன் அரசியலமைப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில் இரு கட்சிகளும் தங்கள் உயர் அரசியல் முன்னுரிமை உரிய சமூகநலக் குறைப்புக்கள் மூலம் தேசிய வரவுசெலவுத்திட்டத்தை உறுதிப்படுத்துவதுதான் என்று தெளிவாக்கியுள்ளனர்.

இடது கட்சியை பொறுத்தவரையில், கடந்த எட்டு ஆண்டுகளாக பேர்லின் செனட்டில் சமூக ஜனநாயக கட்சியின் கூட்டாட்சி பங்காளி என்னும் முறையில் அதன் பங்கு கட்சி மற்ற அனைத்துக் கட்சிகளையும்போல் சமூகநலக் குறைப்புக்களை இரக்கமின்றி செயல்படுத்த தயார் என்பதைத்தான் நிரூபிக்கின்றன.

ஜேர்மனிய தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) வெஸ்டர்வெல்லவின் சமூகநீதி பற்றிய "பரந்த விவாதம்" தேவை என்ற திட்டத்திற்கு தன் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. அது அத்தகைய விவாதம் மிருகத்தனமான பொதுநலக் குறைப்புக்கள் புதிய சுற்றில் வருவதைக் குறிக்கும், ஷ்ரோடரின் செயற்பட்டியல் 2010ல் அறிமுகப்படுத்தியதைவிட மிக அதிகமாக இருக்கும் என்பதை நன்கு அறியும். இந்த வழிவகையில் சமூக ஜனநாயக கட்சி, பசுமைக் கட்சியினர், இடது கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதில் சந்தேகம் இல்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved