World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US provides more troops than aid

Death toll mounts in Haiti

அமெரிக்கா உதவி என்பதைவிட கூடுதலான துருப்புகளை அனுப்புகின்றது

ஹைட்டியில் இறப்பு எண்ணிக்கை பெருகுகிறது

By Patrick Martin
15 January 2010

Back to screen version

பேரழிவைக் கொடுத்த நிலநடுக்கம் ஹைட்டி தலைநகரான Port-au-Prince ன் பல பகுதிகளைத் தரைமட்டமாக்கிய 48 மணிநேரத்திற்குப் பின்னரும் மில்லியன் கணக்கான மக்கள் உறைவிடம், மின்விசை, உணவு, நீர் ஆகியவை இன்றி உள்ளனர். இறப்பு எண்ணிக்கை செஞ்சிலுவைச் சங்கம் கூறும் 50,000த்தில் இருந்து அதைப் போல் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது; ஒவ்வொரு மணி கடக்கப்படும்போதும் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும்போல் தெரிகிறது.

தொலைவில் உள்ள சீனாவில் இருந்து அண்டை நாடான கியூபா, டொமினிகன் குடியரசு வரை பல நாடுகளில் இருந்தும் ஹைட்டிக்கு நிவாரண ஊழியர்கள் விரைந்துள்ளனர். ஆனால் மிகப் பெரிய அளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மீட்பு முயற்சியைக் கடினமாக்கியுள்ளது. உயிரோடு இருப்பவர்கள், மடிந்தவர்கள் என்று கணக்கிலடங்கா மக்கள் இடிபாடுகளுக்கு கீழே சிக்கியுள்ளனர்; பல பகுதிகளிலும் திகைப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், சிறு கைக்கருவிகளை மட்டுமே கொண்டு அவர்கள் மீட்க முயல்கின்றனர். தொடரும் பின் அதிர்வுகள் பலவும் இன்னும் அதிக அடிபாடுகள், நிலச் சரிவுகள் ஆகியவற்றின் அச்சத்தைக் கொடுக்கின்றன.

Port-au-Prince இல் பெரும்பாலான பொது கட்டிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன, அல்லது மிகப் பெரும் சேதத்திற்கு உட்பட்டு இப்பொழுது பயனற்று உள்ளன. இதில் எட்டு மருத்துவமனைகள் அடங்கும்; மருத்துவ வசதி இப்பொழுது முக்கியமாக அழிவிற்குட்பட்ட இடங்களில் இருந்து அல்லது ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள முகாம் மருத்துவமனைகளில் இருந்து கொடுக்கப்படுகின்றன. நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு வெளியே தரைகளில் கிடக்கும் செய்தித்தகவல்கள் வந்துள்ளன. அமெரிக்க தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர், ஒரு மருத்துவமனையில் மயக்கமருந்தும் ஏனைய மருந்துவகைகளும் மிகவும் பற்றாக்குறையாக இருக்கையில் அங்கங்கள் அகற்றப்படும் சத்திரசிகிச்சை நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

"பெரும்பாலான சேதம் Port-au-Prince என்று 2 மில்லியன் மக்கள் வாழும் இடத்தில் மோசமாக நடைபெற்றுள்ளது போல் தோன்றுகிறது; இது சாம்பல் நிறமுடைய காங்க்ரீட் தளம் கரிபியனில் இருந்து மலைப்பகுதி ஒன்று புறப்பட்டாற்போல் காட்சியளிக்கிறது. வீடுகள் பெரும்பாலம் மலிவான காங்க்ரீட், மணல் ஆகியவற்றால் அருகில் உள்ள சிறுமலைகளில் இருந்து பெறப்படும் கற்களைக் கொண்டு கட்டப்படுகின்றன. நில நடுக்கத்திற்குப்பின், முழு பெரும் பெட்டி போன்ற அடுக்குவீடுகள் சரிந்து சாலைகள் முழுவதும் மலை போல் குவிந்துள்ளன" என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.

புவியியல் வல்லுனர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகவே தெற்கு ஹைட்டியில் பெரிய நிலநடுக்கம் தோன்றலாம் என்று எச்சரித்து வந்தனர். இங்கு வட அமெரிக்க, கரிபிய நிலத்தடி தட்டுக்கள் ஓடும் இடத்தில் இடத்தில் வெடிப்புக் கோடு பகுதி உள்ளது. 2008ல் Port-au-Prince ன் நகரதலைவர் தலைநகரத்தில் 60 சதவிகித கட்டிடங்கள் ஒரு பெரிய நில நடுக்கம் ஏற்பட்டால் பாதுகாப்பற்று இருக்கும் என்று மதிப்பிட்டிருந்தார்.

ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 பில்லியன் டாலரே இருக்கும் ஒரு நாட்டில், நில நடுக்கத்தை எதிர்க்கும் சக்தியுடைய கட்டிடங்களோ, உறுதியான தளங்களைக் கட்டவோ பொது நிதிகள் இல்லை. நில நடுக்கத்திற்கு முன்பே, ஹைட்டியில் வாழ்வு நிலை மேலை உலகிலேயே மிக மோசமானது ஆகும். மக்களில் மூன்றில் இரு பகுதியினர் நாள் ஒன்றிற்கு 2 டாலருக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர். நீர், எரிசக்தி போக்குவரத்து வசதிகள் ஆகியவை மிகப் பழமையான மட்டத்தில் இருக்கின்றன.

நிலநடுக்கத்திற்கு பின்னர், அமெரிக்க செய்தி ஊடகத்திடம் இருந்து அமெரிக்க முதலாளித்துவம் அதிக பொறுப்பை ஏற்க வேண்டிய பெரும் சோகத்தின் சமூக, வரலாற்று வேர்களை பற்றிய முக்கிய தகவல்கள் இல்லை.

தன்னுடைய பங்கிற்கு வெள்ளை மாளிகை பாசாங்குத்தன, போலியான அறிக்கைகளையும் அற்ப உதவித் தொகையையும் கொடுத்துள்ளது. தன்னுடைய சமீபத்திய பொது அறிக்கையில் ஹைட்டியன் நிவாரணத்திற்கு 100 மில்லியன் டாலர் கொடுப்பதாக ஒபாமா உறுதியளித்துள்ளார்; அவருடைய நிர்வாகத்தின் உயர் முன்னுரிமை ஹைட்டிக்கான உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். உண்மையான தொகைகள் இந்த கொடுமையான கூற்றை பொய்யாக்குகின்றன. அமெரிக்கா உறுதியளித்திருக்கும் 100 மில்லியன் டாலர் என்பது அமெரிக்கப் போர் இயந்திரத்திற்கு அது ஒருமணி நேரம் செலவழிக்கும் தொகைதான். வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள், ஊகக்காரர்களுக்கு இந்த மாதம் கொடுக்கப்படும் மேலதிக கொடுப்பனவுகளை விட குறைவுதான்.

அமெரிக்க அரசாங்கம். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க செய்தி ஊடகம் ஆகியவற்றின் கூற்றுக்கள் ஒருபுறம் இருந்தாலும், அழிவிற்குட்பட்ட நாட்டிற்கு சர்வதேச உதவி பெரிய அளவில் திரண்டுவிடவில்லை. ஹைட்டிக்கு அனுப்பப்படுவது ஒரு வாளி நீரில் ஒரு துளி போன்றதுதான். இந்த குறைந்த உதவிகூட தேவையான மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும் வலைப்பின்னல் இல்லாத விதத்தில் பயனற்றது ஆகும்.

தங்கள் பொருட்படுத்தாத்தன்மையை மறைக்க பெரிய சக்திகள் அதிக முயற்சி கொள்ளவில்லை. உதாரணமாக ஜேர்மனி அற்பமான 2.2 மில்லியன் டாலரை உதவியாக அளித்துள்ளது. பிரான்ஸ் தன்னுடைய மேற்கு இந்தியத் தீவுப் பகுதிகளான Martinique, Guadeloupe இருந்து 100 இராணுவத்தினரை அனுப்பி வைத்துள்ளது. எந்த இலத்தீன் அமெரிக்க முதலாளித்துவ அரசாங்கமும் ஒரு சில டஜன் மீட்பு ஊழியர்களைத் தவிர அல்லது ஓரிரு விமானம் நிறைய அவசர விநியோகங்களைத் தவிர ஏதும் செய்யவில்லை.

Port-au-Prince ல் வந்துள்ள நூற்றுக்கணக்கான மீட்பு பணியாளர்கள் எண்ணிக்கை ஏராளமான இராணுவத்தினரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு ஆகும். ஐக்கிய நாடுகள் தலைமையிலான 9,000 MINUSTAH அமைதிகாக்கும் படைக்கு துணையாக விரைவில் இதே போல் அல்லது இன்னும் அதிக அமெரிக்கத் துருப்புக்களை வான்வழி, கடல்வழி அனுப்பப்படவுள்ளது.

Port-au-Prince ல் முதலில் வந்த அமெரிக்கக் கப்பல் அமெரிக்க கடற்படையின் Forward ஆகும். இது குவான்டநாமோ வளைகுடாவில் நிலைகொண்டிருந்தது. 6,000 பேரை கொண்ட விமானந்தாங்கியான Carl S. Vinson வியாழனன்று வந்தது. 2000 மரைன்களைக் கொண்ட USS Bataan என்று தரையிலும் கடலிலும் செல்லும் தாக்கும் கப்பலும் புறப்பட்டுள்ளது. தாக்கி அழிக்கும் கப்பலான USS Higgins சனிக்கிழமையன்று வந்து சேரும். 82வது விமானப் பிரிவில் இருந்து 100 படையினர் அடங்கிய குழு ஒன்று 3,500 அமெரிக்க துணைப்படையிருடன் இருக்கும் முழுப் பிரிவின் பங்காக Port-au-Prince க்கு செல்லுகின்றனர்.

பென்டகனுடைய தெற்குக் கட்டுப்பாடு ஆணையகம் நிலநடுக்கத்தால் சேதமுற்ற கட்டுப்பாட்டு கோபுரம் பழுது பார்க்கப்பட்டதற்கு பின் Port-au-Prince விமான நிலையத்தை 24 மணி நேர விமானப் போக்குவரத்திற்கு மீண்டும் திறந்தது. அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு C-130 சரக்கு விமானம் வியாழனன்று ஐ.நா. அதிகாரிகளுடன் நிவாரண முயற்சிகளுக்கும் சமாதானம் காப்பதற்கும் பொறுப்பேற்க வந்துள்ளது. இதன் தலைமை அங்குள்ள தலைமையகக் கட்டிடம் சரிந்தபோது கொல்லப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்க இராணுவத்தின் பங்கு மேலாதிக்கத்தில் இருக்கும் தன்மையில், வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ரோபர்ட் கிப்ஸ் வியாழனன்று வாஷிங்டன் ஹைட்டியில் உண்மையான அரசாங்க அதிகாரத்தை செலுத்துகிறது என்ற கருத்தை மறுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டார். ஹைட்டிய அரசாங்கம்தான் Port-au-Prince ல் பொறுப்பைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்; உள்ளூர் செய்தித் தகவல்கள் ஒரு அரசாங்க அமைப்பு அல்லது கட்டிடம் கூட செயற்பாட்டில் இல்லை என்றுதான் கூறுகின்றன.

கடற்படை, விமானப்படை, தரைப்படைத் துருப்புக்கள் என்று பென்டகனால் அனுப்பப்பட்டுள்ளவர்கள் மொத்தத்தில் 12,000க்கும் மேல் உள்ளனர். அதே நேரத்தில் அமெரிக்க அரசாங்கம் 300 மருத்துவர்களை மட்டுமே அனுப்பியுள்ளது. ஹைட்டியில் ஏற்கனவே இருக்கும் கியூபா சுகாதாரப் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையான 344ஐ விட இதுக் குறைவாகும். எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) அனுப்பிவைத்துள்ள தன்னார்வ ஊழியர்களின் எண்ணிக்கையான 800ல் பாதிகூட இல்லை.

மூன்று ஆண்டுகளில் இரண்டாம் முறையாக இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளும் ஹைட்டிய மக்கள் மீது மகத்தான பரிவுணர்வு அமெரிக்கர்களிடையே உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. 2008ல் கோடைகாலத்தில் நான்குமுறை பெரும் புயல்கள் வேறு வந்த நிலையில். பணம், பொருட்கள் ஆகியவை அமெரிக்கா மூலம் அனுப்பப்படும் அறக்கட்டளை அமைப்புகளிடம் குவிகின்றன.

ஆனால் அமெரிக்க நிதிய பிரபுத்துவத்தின் பிரதிநிதியாக இருக்கும் அமெரிக்க அரசாங்கத்தை பொறுத்தவரையில், இப்பிரச்சினை கரிபியனில் ஹைட்டிக்குள் அமைதியின்மை என்ற அச்சுறுத்தலுக்கு எதிராகவும், போட்டி சக்தி நெருக்கடி நிலைமையை பயன்படுத்தி அப்பகுதியில் நீண்டகாலமாக அமெரிக்க ஆதிக்கத்தில் இருக்கும் அமெரிக்க பிடியை கைப்பற்றுவதில் இருந்து பாதுகாத்து, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களைக் காப்பது ஆகும்.

ராய்ட்டர் தகவல்படி, "மூத்த அமெரிக்க அதிகாரிகள் நிவாரண, மறுகட்டமைப்பு முயற்சி என்பது அமெரிக்க, சர்வதேச அமைப்புக்களின் திறமைக்கும், திறனுக்கும் ஒரு சோதனை போல் இருக்கும்" என்று கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார செயலாளர் ஹில்லாரி ரோட்ஹம் கிளின்டன் இந்த முயற்சிகளை "ஒரு உண்மையான சந்தர்ப்பம் மற்றும் சவால்" என்று விவரித்துள்ளார்.

அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாள வர்க்கம் நெருக்கடி உதவிக்கான மகத்தான வேலைத்திட்டத்தையும் மற்றும் நீண்டகால ஹைட்டிக்கான மறு கட்டமைப்பையும் கோர வேண்டும்; இதில் குறைந்தது 100 பில்லியன் டாலராவது மூலஆதாரங்களுக்கும் ஆயிரக்கணக்கான டாக்டர்கள், சுகாதாரப் பாதுகாப்பு, மீட்பு பணியாளர்களுக்கு என்றும் செலவழிக்கப்பட வேண்டும். வாஷிங்டனிலும் ஐ.நா.விலும் விவாதிக்கப்படும் தொகைகள் பேரழிவிற்கு உட்பட்ட அந்நாட்டு மக்களுக்கு மரண தண்டனை கொடுப்பதற்கு ஒப்பாக உள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved