World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year since Obama's inauguration

ஒபாமா பதவியேற்று ஓராண்டு

Jerry White
20 January 2010

Back to screen version

இற்றைக்கு ஓராண்டிற்கு முன் ஜனவரி 20, 2009ல் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிகழ்வு பெரும் ஆர்வத்துடன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு இன்னும் ஏனைய இடங்களில் வரவேற்கப்பட்டது. உலகெங்கிலும் பல மில்லியன் மக்கள் அமெரிக்காவின் நீண்டகால அரசியல் பிற்போக்குத்தனம் இறுதியில் முடிவிற்கு வருகிறது என்று நம்பினர். ஆனால் ஓராண்டிற்குப்பின் இத்தகைய நல்லெண்ணக் கருத்துக்கள் போலித் தோற்றமாகவும், சீற்றமாகவும், எதிர்ப்பாகவும் போய்விட்டன.

வாஷிங்டனில் பதவியேற்பு தினத்தன்று கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் புஷ் ஆண்டுகளின் முடிவைக் கொண்டாடக் கூடியிருந்தனர். ஆனால் அவருடைய உரையின் ஆரம்பச் சொற்களில் இருந்தே ஒபாமா தான் தன்னுடைய முந்தைய குடியரசு ஜனாதிபதியின் கொள்கைகளை தொடர உள்ளதாகக் கூறினார்; இது அமெரிக்க மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்காவை பீடித்திருக்கும் பொருளாதார, சமூக நெருக்கடி பற்றி ஏதும் கூறும் முன்னர், ஒபாமா அறிவித்தார்: "எமது நாடு வன்முறை, வெறுப்பு என்றவற்றைக் கொண்டுள்ள தொலை விளைவுதரும் இணையங்களுடன் போரில் உள்ளது." இது குடியரசுக் கட்சியினருக்கு ஐயத்திற்கு இடமில்லாத சமாதானக் கருத்து என்பதுடன் அவருடைய நிர்வாகம், இராணுவவாதத்தை நியாயப்படுத்தவும், ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதலை நடத்தவும் போலித்தனமான "பயங்கரவாதத்தின் மீதான போரை" தொடரும் என்ற அறிவிப்பைத்தான் கொடுத்தது.

இதன்பின் அவர் அமெரிக்க மக்கள் நிதியப் பேரழிவிற்கு பங்கைக் கொள்ளவேண்டும் என்றும் ஆளும் வர்க்கத்தின் முழுச் செயற்பாட்டின் காரணமாக விளைந்த ஒரு பேரழிவின் பொறுப்பை பாதிப்பாளர்கள் மீது இழிந்த முறையில் சுமத்தினார்.

ஒரு "மாற்றத்திற்கான" வேட்பாளர் என்று போட்டியிட்டிருந்த ஜனாதிபதி, புஷ்ஷின் வலதுசாரிக் கொள்கைகளை தொடர்கிறார். வெளியுறவுக் கொள்கையில் அவர் ஈராக்கிய ஆக்கிரமிப்பை தொடர்கிறார், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் துருப்பு எண்ணிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளார் மற்றும் பாக்கிஸ்தானுக்குள்ளும் போரை விரிவாக்கம் செய்துள்ளார்.

புஷ்ஷின் தவிர்க்க முடியாத போர்க் கொள்கையை ஒபாமா வெளிப்படையாக ஏற்றுள்ளார்; இதன்படி அமெரிககா தன்னுடைய நலன்களுக்கு தற்பொழுது ஆபத்து கொடுக்கக்கூடிய அல்லது வருங்காலத்தில் ஆபத்து கொடுக்கக் கூடிய திறன் உடைய எந்த நாட்டின் மீதும் போர்தொடுக்கும் உரிமையை தனக்கு எடுத்துக் கொண்டுள்ளது. சமீபத்திய அமெரிக்க அச்சுறுத்தல்களில் யேமனும் இலக்காகியுள்ளது; ஈரானுடன்; ஹைட்டியின் பெரும் துன்பியல் இராணுவ ஆக்கிரமிப்பு நடத்தவும் அந்த வறிய நாட்டின்மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடுக்கிப்பிடியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

குவான்டநாமோவில் அமெரிக்க இழி முகாம் இன்னும் உள்ளது; கடத்தல்களும் சித்திரவதைகளும் தொடர்கின்றன; நிர்வாகம், புஷ் நிர்வாகத்தில் இருந்து அல்லது CIA இல் இருந்து எவரையும் போர்க்குற்றங்களுக்கோ சர்வதேச சட்ட மீறல்களுக்கோ பொறுப்பு என்று வலியுறுத்தவில்லை.

2008 தேர்தல் தினத்தன்று வெளியிட்ட அறிக்கையில் உலக சோசலிச வலைத் தளம் தெளிவாக புதிய நிர்வாகம் பிரதிபலிக்கும் வர்க்க நலன்களைப் பற்றியும் அவை எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது பற்றியும் கூறியது. "அமெரிக்க அரசியல் மற்றும் நிதிய நடைமுறையில் சக்திவாய்ந்த பிரிவுகள் ஒபாமாவிற்கு ஆதரவு கொடுத்துள்ளதற்கு துல்லிய காரணம் அவை எட்டு ஆண்டுகள் புஷ்ஷின் பேரழிவுக் காலத்திற்குப் பின்னர் இவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெறுக்கப்பட்ட தோற்றத்தை மீட்க உதவுவார் என நம்பியதுதான். ஒபாமா, வணிக சமூகத்தில் இருந்து பெற்றுள்ள நூறாயிரக்கணக்கான மில்லியன் டாலர்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக நிதிய நலன்களுக்கு சான்றாக திகழ்கின்றன."

தன்னுடைய ஆரம்ப உரையில் ஒபாமா அமெரிக்க மக்கள் "புதிய பொறுப்பான சகாப்தத்திற்கு" அடிபணிய வேண்டும் என்று அறிவித்தார். இக்கருத்துக்கள் பற்றி WSWS ஜனவரி 22, 2009ல் எழுதியது: "இந்த வாதங்களில் பொருளில் பிழைக்கு இடம் இல்லை. ஒபாமாவின் வரவு ஒரு புதிய உடன்பாடு வருவதையோ ஒரு பெரிய சமூகம் வருவதையோ குறிக்கவில்லை. சமூக சீர்திருத்தங்களில் புதுப்பித்தல் இருக்காது; மாறாக நிதிய கடும் சிக்கன நடவடிக்கைகளும் சீர்திருத்த-எதிர் நடவடிக்கைகளும் அமெரிக்காவில் சமூகப் பாதுகாப்பு வலையில் எஞ்சியவற்றிற்கு எதிராக இயக்கப்படும்; அதாவது சமூகப் பாதுகாப்பு, மருத்துவ பாதுகாப்பு போன்றவற்றில்."

"புதிய நிர்வாகத்தின் மத்திய அரசியல் நோக்கம், முன்னால் இருந்ததற்கு பதிலாக இது வந்துள்ளபோதிலும், ஒரு குறுகிய நிதிய உயரடுக்கின் நலன்களையும் செல்வத்தையும் காப்பது என்பதுதான்; அவர்கள், மில்லியன் கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்களினதும் அவர்களது குடும்பங்களின் இழப்பிலும் பிணை எடுக்கப்படுவர்."

தன்னுடைய நிர்வாகத்தை வோல் ஸ்ட்ரீட்டின் ஊழல் நிறைந்த பிரதிநிதிகளை கொண்டு நிரப்பினார்; இதில் முன்னாள் நியூ யோர்க் பெடரல் ரிசேர்வ் தலைவர் டிமோதி கீத்னர், லோரன்ஸ் சம்மர்ஸ் என்று கிளின்டன் காலத்தில் நிதியக் கட்டுப்பாட்டு தளர்விற்கு முக்கிய வழிகாட்டியாக இருந்த ரோபர்ட் ரோபினின் உகந்தவர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு, நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் பிணை எடுப்பின் அளவை விரிவாக்கி, வங்கிகள் பெரும் இலாபத்தை ஈட்ட அனுமதித்தது; வங்கிகள் மில்லியன் கணக்கான டாலர்களை ஊதியத்தொகையாக அளிக்கவும் அவற்றின் ஊக நடவடிக்கைகளை தொடரவும் அனுமதித்தது.

தங்கள் வேலைகளையும் வீடுகளையும் இழந்த மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு எவ்வித உதவியும் வரவில்லை. மாறாக வெள்ளை மாளிகை பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்களில் கடுமையான நிரந்தரக் குறைப்பை புகுத்துவதற்குத்தான் முயற்சித்துள்ளது; இது ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லர் ஆகியவற்றின் கட்டாயத் திவாலில் தொடங்கியது; ஊதிய மற்ற நலன்கள் குறைப்புக்கள் கார்த் தொழிலாளர்களின் மீது சுமத்தப்பட்டன.

மாநிலங்களுக்கு உதவியளிக்க ஒபாமாவின் வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது; இது முன்னோடியில்லாத அளவிற்கு பொதுக் கல்வி மற்ற சமூக நலன்களின் மீதான பாதிப்பிற்கு வகை செய்துவிட்டது. "சீர்திருத்தம்" என்று சுகாதாரப் பாதுகாப்பு பற்றி பேசுகையில், நிர்வாகம் பெருநிறுவன மற்றும் அரசாங்கச் செலவுகளை குறைக்கும் நோக்கத்தை கொண்டு சுகாதாரப் பாதுகாப்பை பகிர்வு செய்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடைய நலன்களை குறைத்து, மருத்துவப் பாதுகாப்பு செலவுகளையும் கடுமையாகக் குறைத்து விட்டது.

ஒபாமாவின் இரண்டாம் ஆண்டு அடுத்த வாரம் நாட்டிற்கு ஆற்றும் உரையுடன் தொடங்கும்; இதில் அவர் வரவு-செலவு திட்ட செலவுக் குறைப்புக்கள் கடும் சிக்கனம் ஆகிய செயற்பட்டியலை வெளிப்படுத்துவார். அமெரிக்க மக்களின் மிக அதிக பணம் படைத்த ஒரு சதவிகிதத்திற்கு நடக்கும் பிணை எடுப்பிற்கு நிதி கொடுப்பதற்கு, நிர்வாகம் பொதுநலத் திட்டங்களைக் குறைக்கவும் தொழிலாள வர்க்கத்தின் மீது பிற்போக்குத்தன வரிகளை சுமத்தவும் தயாரிப்புக்களை நடத்தி வருகிறது.

2008 தேர்தலில் வாக்காளர்களால் உறுதியாக நிராகரிக்கப்பட்ட குடியரசுக் கட்சியை மீட்க முதல் நாளில் இருந்தே ஒபாமா தளர்ச்சியின்றி உழைத்தார். முன்னாள் புஷ் அதிகாரிகளை, பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் உட்பட அவர் நியமித்து தன்னுடைய கொள்கைகளை குடியரசு வலதின் கோரிக்கைகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டார். இரு கட்சியையும் அணைத்துச் செல்லும் சமீபத்திய மந்திரம் ஒபாமா சிறிதும் வருத்தப்படாத போர்க்குற்றவாளியான ஜோர்ஜ் புஷ்ஷை பில் கிளின்டனுடன் இணைத்து ஹைட்டிக்கு அமெரிக்க "உதவி" முயற்சிக்கு தலைவராக்கியுள்ளதுதான்.

"புதிய அரசியலுக்கு" தீர்ப்புக் குழு என்றும் முற்போக்கான மாறுதலுக்கு பெரும் அடையாளம் என்றும் ஒபாமா தன்னைக் காட்டிக் கொள்வது ஒரு மோசடி ஆகும். ஆளும் வர்க்கத்தின் சக்திவாய்ந்த பிரிவுகளால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளார்; ஒரு இளம் ஆபிரிக்க-அமெரிக்கர் வெள்ளை மாளிகையில் இருப்பது தங்கள் பிற்போக்குத்தன செயற்பட்டியலை விரைவாக செயல்படுத்த ஆதரவான சூழலைத் தரும் என்று அவர்கள் கணக்கிட்டனர்.

அடையாள அரசியலின் ஜனநாயக முற்போக்கு போலித்தனங்களை கடந்த ஆண்டு அம்பலப்படுத்தி, அமெரிக்க சமூகத்தின் அடிப்படைப் பிளவு இனம், தேசியம் அல்லது பால் அல்ல வர்க்கம்தான் என்பதை நிரூபித்துள்ளது.

Nation இன்னும் பிற ஒபாமாவின் போலி இடது ஆதரவாளர்களின் வெளியீடுகளையும் இது அம்பலப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் அவருக்காக பிரச்சாரம் செய்து, அவருடைய கொள்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவைக் கொடுக்கின்றன; அதில் ஆப்கானிஸ்தான் போர் மற்றும் சுகாதாரக் காப்பை அகற்றியது ஆகியவை அடங்கும். இவை, தொழிலாள வர்க்கத்திடம் இகழ்வு கொண்ட விரோதம் கொண்ட வலதுசாரி சக்திகள், சமூகத்தின் சலுகை பெற்ற அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

நிர்வாகம் இரண்டாம் ஆண்டை தொடங்குகையில் அது நெருக்கடியால் பீடிக்கப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சங்கடங்கள் தொடர்கின்றன; வோல் ஸ்ட்ரீட் மீட்பு பெற்றாலும், சமூக நெருக்கடி மோசமாகிக் கொண்டிருக்கிறது; பொருளாதார கரைப்பின் முக்கிய காரணம் --அமெரிக்க முதலாளித்துவத்தின் உலக நிலைச் சரிவு-- தொடர்கிறது. ஒரு இரண்டாம், இன்னும் கூடுதல் அழிவைத் தரக்கூடிய நிதியச் சரிவு தோன்றும் வாய்ப்பு உண்மையில் உள்ளது.

அனைத்து கருத்துக் கணிப்புக்களின் படியும் ஒபாமாவிற்கு ஒப்புதல் தரங்கள் சரிந்துவிட்டன; பெரும்பாலான மக்கள் அமெரிக்கா தவறான திசையில் செல்வதாகத்தான் நம்புகின்றனர்.

ஒபாமா நிர்வாகத்தின் முதலாண்டு பதவிக் காலம் முழு அரசியல் முறையின் அடிப்படையில் ஜனநாயகமற்ற தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளும் நலன்களும் பெருவணிகத்தின் இரு கட்சிகள் ஏகபோக உரிமை கொண்டுள்ள முறையில் உரிய வெளிப்பாட்டைக் காண முடியாது.

நிர்வாகத்தின் நடவடிக்கைகள், அரசாங்கம் மற்றும் உத்தியோகபூர்வ நிறுவனங்களுடன் மக்கள் கொண்டிருக்கும் பெரும் ஏமாற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது. 20ம் நூற்றாண்டின் பெரும்பகுதியில் இருந்ததைப் போல் "முதலாளித்துவம்" என்பது மீண்டும் ஒரு கறைபடிந்த சொல்லாகி வருகிறது.

ஒரு புதிய வர்க்க மோதல்களும் சமூக எழுச்சிகளும் அமெரிக்காவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் எழுச்சி பெறும் என்பதற்கான முன்னிழல் படர்ந்துள்ளது. இதற்கு மத்தியமானதும், மிக முக்கியமானதுமான பிரச்சினை எதிர்வரவிருக்கும் இயக்கத்தை ஒரு புரட்சிகர, சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு ஆயுதமேந்த வைக்க ஒரு புதிய தலைமையை வளர்த்தலாகும். அப்பணிக்குத்தான் உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved