World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

"We should work to unite Tamil and Sinhala people"

Participants in SEP Jaffna meeting speak out

"தமிழ், சிங்கள மக்களை ஐக்கியப்படுத்த நாம் போராடவேண்டும்"

சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்ப்பாண கூட்டத்தில் பங்கு பெற்றவர்கள் கூறுகின்றனர்

By our correspondents
21 January 2010

Back to screen version

யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சி முன்வைத்த சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கு ஆர்வமான ஆதரவை வெளிப்படுத்தினர். பலரும் அதை ஒரு புதிய காற்றை சுவாசிப்பது போலிருந்தது எனப் புகழ்ந்தனர்.

இலங்கையின் வட மாகாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சி நீண்ட காலமாக அரசியல் பணிகளை செய்திருந்தாலும், சமீப காலம் வரை அரசாங்கம்-இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளால் மறைமுகமாகத்தான் அதைச் செய்ய முடிந்தது.

"இக்கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஒரு மாணவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினார் (அடக்குமுறை அச்சுறுத்தல்களால் தொடர்புடையவர்களின் பெயர்களை உலக சோசலிச வலைத் தளம் வெளியிடவில்லை.)

"இத்தேர்தலில் இரு முக்கிய வேட்பாளர்களான (ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் முன்னாள் இராணுவத் தலைவர் பொன்சேகா) தமிழ் மக்களுக்கு எதிராகப் போரை நடத்தியவர்கள். அவர்களில் எவர் வெற்றி பெற்றாலும், மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

"சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தங்களுக்கு கிடைக்கும் நலன்களைப் பற்றித்தான் சிந்திக்கிறது. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கையிலும் அவர்கள் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. சிவாஜிலிங்கம் (தமிழ் தேசியக் கூட்டமைப்பில் கருத்துவேறுபாடான) ஒரு சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டாலும், அவருக்கும் இதே அரசியல் கருத்துக்கள்தான் உள்ளன.

"நான் இன்னும் கூடுதலான (பல்கலைக்கழக) தகுதிக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இந்த அரசாங்கத்திற்கு பங்காளியாக இருக்கும் தமிழ் கட்சி அதன் ஆதரவாளர்களுக்கு சில வேலைகளை கொடுத்தது. தகுதி உடையவர்களுக்கும் ஏதும் கிடைக்கவில்லை."

ஒரு இளம் இல்லத்தரசி, கூட்டத்தில் கலந்து கொண்ட பல மகளிரைப் போலவே கூறினார்: "சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. இது ஒரு தேர்தல் வித்தை. இத்தகைய பாசாங்குத்தனங்கள் தேர்தல் முடிந்தவுடன் நின்றுவிடும். உங்கள் கட்சியின் கொள்ளைகள் உண்மையில் அடிப்படையானவை. அவை மக்களுக்கு நன்கு கூறப்பட வேண்டும்."

ஒரு மீன்படிப்பவர் கூறினார்: "என் கருத்தின்படி, இந்த நாட்டில் எந்தக் குடிமகனும் இரு முக்கிய வேட்பாளர்களில் எவரும் வாக்குப் போடுவது பற்றி சிந்திக்கக்கூடாது; ஏனெனில் கடந்த காலத்தில் இருவரும் அட்டூழியங்களை செய்துள்ளனர். மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் இராஜபக்ஷ அல்லது பொன்சேகாவிற்கு தங்கள் ஆதரவை அறிவித்துள்ளனர்.

"நவசமசமாஜ கட்சியின் (NSSP) விக்கிரமபாகு (கருணரத்ன) இடம் எனக்கு சற்று நம்பிக்கை இருந்தது. ஆனால் உங்கள் துண்டுப்பிரசுரத்தை பார்த்தபின், எவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிந்தித்தேன். உங்கள் கூட்டம் எனக்கு அவர்களை பற்றிய தெளிவான சித்திரத்தைக் கொடுத்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் இருவரில் ஒருவருக்கு ஆதரவாகத்தான் அவர்கள் எப்பொழுதும் இருப்பர். மக்களுக்கு ஒரு மாற்றீடு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

"தொழிலாள வர்க்க போராட்டத்தின் கடந்தகால வரலாறு பற்றி எங்களுக்கு தெரியவில்லை. போர் தொடங்கியபோது எனக்கு ஒன்பது வயது. நான் கொழும்பிற்கு சென்றதில்லை. சிங்களம் பேசும் மக்களையோ அல்லது இராணுவத்தில் இருப்பவர்களையோ நான் சந்தித்தது இல்லை. பல இளஞர்களும் என்னைப் போல்தான் உள்ளனர். அவர்களுக்கு தமிழ், சிங்கள தொழிலாளர்களின் இணைந்த போராட்டங்களின் தேவை பற்றி கற்பிக்க வேண்டும்.

"இராஜபக்ஷ நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சமாதானம் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நீங்கள் இப்பகுதியை பார்த்துள்ளீர்கள். ஒவ்வொரு மூலை முடுக்கிலும் சோதனைச் சாவடிகள் உள்ளன. மக்கள் அச்சத்தில்தான் நடமாடுகின்றனர். மக்கள் சமாதானமாக வாழ்கின்றனர் என்று அவர்கள் எப்படிக் கூறமுடியும்?.

கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொருவர் போரின்போது தன்னுடைய அனுபவங்களை கூறினார்: "அரசாங்கம் இறுதித் தாக்குதல் நடத்தியபோது நான் முளங்காவிலில் (மன்னாருக்கு வடக்கே) இருந்தேன். ஒவ்வொரு இடமாக நாங்கள் குடிபெயர்ந்து இறுதியில் புதுமாத்தாளனை அடைந்தோம். அங்கு இருக்கும்போது, பல்குழல் ராக்கெட் குண்டுகள் எங்கள் மீது பொழியப்பட்டன. எங்களில் பலரும் இறந்துவிட்டோம். இன்னும் கஷ்டங்களைத் தாங்க முடியாது என்ற நிலையில் இரு நாட்கள் கடினப் பயணத்திற்கு பின்னர் நாங்கள் இராணுவக் கட்டுப்பாடு இருக்கும் பகுதிக்கு வந்தோம்

"இரக்கமற்ற முறையில் எங்களைச் சோதித்த பின்னர், பாதுகாப்புப் பிரிவினர் எங்களை மனிக் பார்ம் (Manik Farm) இற்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மிக மோசமாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபின், நாங்கள் Manik Farm ல் இருந்து விடுவிக்கப்பட்டோம். ஒவ்வொரு ஞாயிறும் எங்களில் பலர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். நாங்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். இதுதான் எங்களின் சமாதானம். எங்கள் போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்ப்பட்டுள்ளது. மறுவாழ்வு அமைத்துகொள்ள எங்களுக்கு எந்தவித இழப்பீடும் வசதிகளும் கொடுக்கப்படவில்லை. இந்த இரு முக்கிய வேட்பாளர்களுக்கு எப்படி மக்கள் வாக்களிக்க முடியும்? முக்கிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று எவரேனும் வாதிட்டால் அவர்கள் துரோகம் செய்யும் தலைவர்கள்தான்."

ஒரு வேலை இல்லாத பெண் பட்டதாரி கூறினார்: "சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு கொடுத்தல் என்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவு ஒரு குற்றமாகும். இதேபோல்தான் இராஜபக்ஷவிற்கு ஆதரவு என்பதும். இருவரும் போரை நடத்தினர். இன்னமும் மீன்பிடிப்பவர்கள் தடையின்றி மீன்பிடிக்கச் செல்ல முடியாது. மகளிரும் இளைஞர்களும் அச்சமின்றி எங்கும் செல்ல முடியாது. அப்படியும் இராஜபக்ஷ உயர்மட்டப் பாதுகாப்பு வலையங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று வாதிடுகிறார். அதனால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியவில்லை. வன்னியில் (இறுதித் தாக்குதலில் கைப்பற்றப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கோட்டை) இருக்கும் எஞ்சிய கடைகள் இராணுவ சிற்றுண்டி நிலையங்களாக மாற்றப்பட்டுவிட்டன. ஒவ்வொரு சாலைச் சந்தியிலும் பெளத்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

"இந்த நிலையில் உங்கள் கட்சியின் கொள்கை பற்றி அறிவது சிறப்பாக உள்ளது. தமிழ், சிங்கள மக்களின் ஐக்கியத்திற்கு நாம் போராட வேண்டும். வெவ்வேறு மொழிகள் பேசினாலும் எமது நலன்கள் ஒன்றுதான்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved