World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Bhopal verdict provokes public outrage

இந்தியா: போபால் தீர்ப்பு வெகுஜன எதிர்ப்பை தூண்டுகிறது

By R. Shreeharan
15 June 2010

Back to screen version

இந்திய நீதிமன்றம் ஒன்று 1984ல் நடந்த அழிவுக்கு காரணமாயிருந்த குற்றவியல் அலட்சியத்துக்காக யூனியன் காபைட் நிர்வாகிகள் எட்டு பேருக்கு எதிராக கடந்த வாரம் வழங்கிய தண்டனை பரந்த வெகுஜன எதிர்ப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பானது பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான இந்திய ஸ்தாபனத்தின் அலட்சியத்தையும் பெரும் வர்த்தகர்களையும் மற்றும் வெளிநாட்டு முதலீட்டையும் காக்க அது அர்ப்பணித்துக்கொண்டுள்ளதையும் மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

உலகின் ஆகவும் மோசமான இந்த தொழிற்துறை விபத்து 1984 டிசம்பர் 3-4ம் திகதிகளின் இரவில் நடந்தது. மத்திய இந்திய மாநிலமான மத்திய பிரதேஷின் தலைநகரான போபாலில் அமைந்துள்ள அமெரிக்க பன்னாட்டுக் கூட்டுத்தாபனமான யூனியன் காபைட் இரசாயன உற்பத்தி நிலையத்தில் இருந்து 40 டொன்களுக்கும் மேற்பட்ட உயிரைப் பறிக்கும் மீதைல் ஐசோகைனேட் வாயு மற்றும் ஏனைய பெயர் தெரியாத நச்சு வாயுக்களும் கசிந்தன.

இந்த நச்சுப் புகை 8,000 பேரை உடனடியாக பலிகொண்டது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 16,000க்கும் 30,000க்கும் இடைப்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது. பலர் இந்தியாவின் ஏனைய பாகங்களில் இருந்து தொழிலுக்காக வந்திருந்தமையால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக கணிப்பதில் சிக்கல் ஏற்பபட்டது. அரை மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாயு குறிப்பாக கண்களையும் சுவாசப் பையையும் தாக்குவதோடு பலர் இன்னமும் சோர்வூட்டும் நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த அழிவு நடந்து கால்நூற்றாண்டின் பின்னர், ஒரு மாவட்ட நீதிமன்று குற்றத் தீர்ப்பை வழங்கியது. எட்டு இந்திய யூனியன் காபைட் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையும் 100,000 ரூபா (2,100 அமெரிக்க டொலர்) தண்டமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கம்பனிக்கு அற்பத் தொகையான வெறும் 500,000 ரூபா (10,600 டொலர்) மட்டுமே தண்டம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதே தினம், தீர்ப்பளிக்கப்பட்டவர்களில் ஏழு பேரும் –ஏற்கனவே ஒருவர் இறந்துவிட்டார்- 25,000 ரூபா அல்லது 500 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மேன்முறையீடும் செய்யவுள்ளனர்.

சட்ட நடவடிக்கையில் மேலும் நீண்டகால தாமதங்கள் ஏற்படுத்தக்கூடிய நிலை இருப்பதால், ஏழு பேரில் எவரும் ஒரு காலமும் சிறையிலடைக்கப்படாமல் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளவர்களில் அப்போதைய யூனியன் காபைட் தலைவரும் மற்றும் இந்தியாவின் பிரதானமான வாகன உற்பத்தி நிறுவனமான மஹிந்ரா அன்ட் மஹிந்ராவின் தற்போதைய தலைவருமான குஷேப் மஹிந்ராவும் அடங்குவார். யூனியன் காபைட்டின் அமெரிக்க முதல்நிலை நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான வாரன் என்டர்சன், தீர்ப்பு வழங்கப்பட்டவர்களில் அடங்கவில்லை. அவர் போபாலுக்கு வருகை தந்தபோது கைது செய்யப்பட்ட போதும், பினையில் விடுவிக்கப்பட்டு நாட்டை விட்டே பறந்துவிட்டார்.

நீதிமன்றுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த போபால் பாதிக்கப்பட்டவர்களும் செயற்பாட்டாளர்களும் இந்த தீர்ப்பால் சீற்றமடைந்தனர். இந்த தீர்ப்பு “உலகிம் மிகவும் மோசமான தொழிற்துறை அழிவை ஒரு வீதி விபத்தாக பலவீனப்படுத்தியுள்ளது,” என சட்டத்தரணி சதினாத் சாரங்கி தெரிவித்தார். “மக்களின் உயிர் பிரச்சினைக்குரியதல்ல; முக்கியமானது வெளிநாட்டு நேரடி முதலீடேயாகும். நீங்கள் மக்களை கொல்லலாம், அவர்களை வாழ்நாள் பூராவும் முடமாக்கலாம் மற்றும் தண்டனையில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்பதே இதன் செய்தியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

உயிர் பிழைத்த சம்பா தேவி ஷுக்லா ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது: “குற்றவாளிகள் பெரிய கார்களில் ஏறி வெளியேறியபோது நான் நீதிமன்றுக்கு வெளியில் பாதாகைகளை சுமந்துகொண்டிருக்கும் ஒரு முட்டாளாக உணர்ந்தேன்.” ஹமீடா பீயின் பேத்தி வாயுக் கசிவின் பின்னர் 20 நாட்களில் உயிரிழந்தார். ஆயுள் தண்டனையை கோரிய பீ, “அவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை கொன்றார்கள், நாங்கள் 25 வருடங்களாகப் போராடுகிறோம்” என்றார். வாயுக் கசிவில் உயிர் தப்பிய அப்துல் ஜபார், “இந்த தீர்ப்பு பெரும் கம்பனிகள் மீது எந்தவொரு அச்சமூட்டும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது... உண்மையில், நீங்கள் அதில் இருந்து இலகுவாக மீள முடியும் என அவர்களுக்குச் சொல்லும், ” என்றார்.

வெகுஜன எதிர்ப்பு அலையை எதிர்கொண்ட இந்திய அரசாங்கமும் ஊடகங்களும் இந்த தீர்ப்பு தொடர்பாக பலவித விமர்சனங்களை முன்வைத்தன. டைம்ஸ் ஒஃப் இன்டியா பிரகடனம் செய்ததாவது: “வேறெந்த நாடும் தனது மக்களை இவ்வளவு மலிவாக விற்பதில்லை. வேறு எந்த நாடும் அதன் வறியவர்களை இந்தளவு மலிவாக விற்பதில்லை. வேறு எந்த நாடும் தனது உயிரிழந்தவர்களை இவ்வளவு மலிவாக விற்பதில்லை... இன்று, இந்தியா தனது மக்களை காக்க, குறிப்பாக அவர்கள் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாட்டில் உள்ள சக்திவாய்ந்தவர்களால் படுகொலைசெய்யப்பட்டாலும் தனது மக்களை காக்க அணிதிரளாது என்பதை நிரூபித்துள்ளது. ”

தற்போதை காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சரான எம்.வி. மொய்லி, இந்த வழக்கை மீண்டும் தொடங்க முடியும் என ஊடகங்களிடம் கூறினார். “சட்டத்துறையின் சகல முன்னெடுப்புகளையும், சகல விசாரணை முன்னெடுப்புகளையும், சகல சட்ட நடவடிக்கைகளையும் மீளாய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது என நான் சொல்வேன்... குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நட்ட ஈடு வழங்கவேண்டும்” என்றார்.

இந்த தீர்ப்பு “மிகவும் திருப்தியற்றது” என சூற்றுச் சூ.ழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விவரித்தார். 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை தனது அமைச்சு கண்டிப்பாக அமுல்படுத்தும் என அவர் வாக்குறுதியளித்தார். ஆயினும், இன்னமும் போபால் பிரதேசத்தில் 325 டொன் டொக்ஸிக் கழிவுகள் இருப்பதாகவும் 45 டொன்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் அதே மூச்சில் அவர் ஏற்றுக்கொண்டார்.

தீர்ப்பு மீதான தற்போதைய எதிர்ப்பு தணிந்தவுடன், அரசாங்கம் மேற்பூச்சு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கும் மேலாக எதையும் செய்யாது என்பதே யதார்த்தமாகும். கடந்த 25 ஆண்டுகளாக, காங்கிரஸ் தலமையிலானது உட்பட ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இந்த துன்பத்துக்குப் பொறுப்பான நிறுவனத்துக்கும் தனிநபர்களுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைகளை கீழறுக்க பின்னால் வளைந்துகொடுத்து வந்துள்ளன.

வாரன் என்டர்சன் மத்திய பிரதேஷில் இருந்த காங்கிரஸ் மாநில அரசாங்கத்தால் வெளியேற அனுமதிக்கப்பட்டார். மாநிலத்தின் பிரதான நிர்வாக அலுவலர் மோடி சிங் அண்மயில் தெரிவித்ததாவது: “[மாநில அரசாங்கத்தின்] அப்போதை பிரதான செயலாளர் அறைக்குள் என்னை அழைத்து என்டர்சனின் விமானப் பயணத்தை ஏற்பாடு செய்யச் சொன்னார்.” என்டர்சனை நாடு கடத்த கோருவதற்கு இந்திய அரசாங்கத்துக்கு 19 ஆண்டுகள் பிடித்துள்ளது. ஆயினும் அந்தக் கோரிக்கையை அமெரிக்க நீதிமன்றமொன்று நிராகரித்துள்ளது.

25 ஆண்டு நிறைவான கடந்த டிசம்பரில், இந்திய அரசாங்கம் கம்பனியுடன் 1989ல் ஏற்படுத்திக்கொண்ட நட்ட ஈடு உடன்படிக்கையை மீண்டும் திறக்குமாறு கோரி போபால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மணுவை மத்திய பிரதேஷ் மேல் நீதிமன்றம் நிராகரித்தது. 1985ல் 3.3 பில்லியன் டொலர்களைக் கோரி கூட்டுத்தாபனத்துக்கு மனு தாக்கல் செய்த போதிலும், அந்தத் தொகையை வெறும் 470 மில்லியன் டொலர்களாக அல்லது 7 பில்லியன் ரூபாய்களாகக் குறைத்தது. பாதிக்கப்பட்டவர்களை தொடர்புகொள்வது பற்றி அது கவலைப்படவில்லை.

தமது சொத்துக்களையும் கால்நடைகளையும் இழந்த மக்களுக்கு ஒரு பில்லியன் ரூபாய்கள் விநியோகிக்கப்பட்டன. எஞ்சிய 6 பில்லியன் ரூபாய்கள், தமது வாழ்க்கையை இழந்த குடும்பங்கள் உட்பட பாதிக்கப்பட்ட 570,000 பேருக்கு ஒதுக்கப்பட்டது –அதாவது சராசரி 12,000 ரூபா அல்லது சுமார் 500 டொலர். அதற்குப் பிரதியுபகாரமாக, இந்திய அரசாங்கம் கம்பனிக்கு எதிராக இருந்த சகல சிவில் மற்றும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை கைவிட உடன்பட்டது –இது பாதிக்கப்பட்டவர்கள் மேலும் கோரிக்கைகள் விடுப்பதை மேலும் கடினமாக்கியது.

1996 வழக்குத் தீர்ப்பில், இந்திய உயர் நீதிமன்றம் இந்தக் குற்றச்சாட்டுக்களை தண்டனைக்குரிய மனிதக் கொலையில் இருந்து குற்றவியல் அலட்சியம் என்ற சரத்துக்குக் கீழ் கொண்டுவந்து தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, இவர்களது அதிகபட்ச சிறைத் தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 2 வருடங்களாக குறைக்கப்பட்டன. இதுவே கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பாகும்.

இந்த தீர்ப்பு பற்றி இந்திய அரசு அவ்வப்போது விமர்சிக்கும் அதே வேளை, அடுத்த நடவடிக்கைகள் பற்றி எந்தவொரு யோசனையையும் அமெரிக்க நிர்வாகம் மறுக்கின்றது. “இந்த தீர்ப்பு புதிய விசாரணைகளை அல்லது அது போன்ற எதையும் மீண்டும் தொடக்கி வைக்கும்” என தான் “எதிர்பார்க்கவில்லை” என்றும், “மாறாக அதை முடிவுக்குக் கொண்டுவரவே உதவும் என எதிர்பார்ப்பதாகவும்” தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்கச் செயலாளர் ரொபட் பிளேக் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

போபால் துன்பத்துக்கு ஒபாமா நிர்வாகத்தின் பிரதிபலிப்பு, சட்ட ரீதியான பொறுப்புடைமை விதியில் சுருக்கிக் காட்டப்பட்டுள்ளது. ஒபாமா நிர்வாகம் இரு நாடுகளுக்கும் இடையிலான 2008 அணு உடன்படிக்கையின் பகுதியாக இந்த சட்டக ரீதியான பொறுப்புடைமை விதியை நிறைவேற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றது. இந்த உடன்படிக்கையின் கீழ், அணுவாயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் அல்லது அணுவாயுதங்களை கலைக்காமல் சிவில் அணுசக்தி உற்பத்திக்கான தொழிற்நுட்பமும் எரிபொருளும் இந்தியாவுக்குக் கிடைக்க அமெரிக்கா உடன்படுகின்றது. ஒரு அணு விபத்துச் சம்பவத்தின் போது வெளிநாட்டு விநியோகத்தர்கள் இந்த சட்டரீதியான பொறுப்புடைமை விதியின் கீழ் செலுத்த வேண்டிய தொகையை 450 மில்லியன் டொலராக வரையறுக்குமாறு வாஷிங்டன் அமெரிக்க நிறுவனங்களின் சார்பில் வலியுறுத்தி வருகின்றது.