World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government receives a drubbing in the presidential election

ஜனாதிபதித் தேர்தலில் ஜேர்மனிய அரசாங்கம் ஒரு தோல்வியை பெறுகிறது

By Stefan Steinberg
1 July 2010

Back to screen version

புதனன்று ஜேர்மனிய ஜனாதிபதித் தேர்தலின் முடிவை விளக்கிய ஜேர்மனிய செய்தி ஊடகம் “ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்குச் சங்கடம்”, “ஜேர்மனிய அரசாங்கத்திற்குப் பெரும் தோல்வி” போன்ற சொற்றொடர்களை பரந்த அளவில் பயன்படுத்தியது.

கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் (CDU), பவேரிய கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) ஆகிய கட்சிகளை கொண்ட ஆளும் கூட்டணியின் வேட்பாளர் கிறிஸ்டியான் வொல்ப் மூன்று சுற்று வாக்குகளுக்குப் பின்னர்தான் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது மேர்க்கெலுக்கு ஒரு பெரும் பின்னடைவு என்று காணப்படுகிறது.

முந்தைய ஜனாதிபதி ஹோர்ஸ்ட் ஹோலரின் ஒரு மாதம் முன்பு எதிர்பார இராஜிநாமாவை குறுகிய முன்னறிவிப்பில் கொடுத்ததை அடுத்து அரசாங்கம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது. தன்னுடைய இராஜிநாமாவிற்கு ஒரே காரணமாக ஆப்கானியப் போரின் காரணங்ளில் ஒன்று பொருளாதார நலன்களை காத்தல் என்று தான் அறிவித்ததைத் தொடர்ந்து செய்தி ஊடகம் அவரை நடத்திய முறைதான் என்று ஹோலர் மேற்கோளிட்டார்.

செய்தி ஊடகம் மற்றும் அரசியல் வட்டங்களில் இந்த உண்மையை வெளியிட்டதற்கு மிக அதிக விமர்சனங்கள் வந்தபின், ஹோலர் தன்னுடைய கருத்துக்களுக்கு விடையிறுப்பு “என் பதவிக்கு கொடுக்க வேண்டிய தேவையான மதிப்பைக் கொண்டிருக்கவில்லை” என்றார். தான் ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலகிய காரணத்தை மேலும் விளக்க அவர் மறுத்தார். ஆனால் அரசாங்கப் பணி முறையின் மீது ஏமாற்றமும் அரசியல் வாழ்வில் குறுக்கிட இயலாத அவருடைய குறைந்த வரம்புடைய அதிகாரங்களும்தான் அவரை இராஜிநாமா செய்யத் தூண்டின என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது.

தன்னுடைய அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சேதத்தைக் குறைக்கும் விதத்தில் சான்ஸ்லர் மேர்க்கெல் விரைவில் மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க செயல்பட்டு லோயர் சாக்சனியின் பிரதம மந்திரியான கிறிஸ்டியான் வொல்ப் (CDU) ஐ முடிவெடுத்தார். இந்த அதிக ஆடம்பரம் இல்லாத அரசியல்வாதி செய்தி ஊடகத்தால் “ஓநாய் உடையில் ஒரு ஆடு” என்று கேலி செய்யப்பட்டார்.

இதன்பின், செய்தி ஊடகத்தால் “நேர்த்தியான தந்திரோபாய நடவடிக்கை” என்று பெரிதும் சித்தரிக்கப்பட்ட விதத்தில் எதிர்க்கட்சிகள்-சமூக ஜனநாயகக் கட்சி (SPD), மற்றும் பசுமைவாதிகள்-முன்னாள் திருச்சபை மந்திரி, முழு கம்யூனிச எதிர்ப்பாளர் மற்றும் வலதுசாரிக்காரரான ஜோவாகிம் கவுக்கை தங்களுடைய எதிர் வேட்பாளரை பதவிக்கு தேர்ந்தெடுத்தனர். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமை வாதிகள் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் புடை சூழ கவுக் ஒரு குறுகியகால ஆனால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட பிரச்சார சுற்றை மேற்கோண்டு தான் எதிர்க்கட்சிகளிடம் மட்டும் கணிசமான ஆதரவைக் கொண்டிருக்கவில்லை, ஆளும் கூட்டணிக் கட்சிப் பிரதிநிதிகள் இடையேயும் ஆதரவைக் கொண்டுள்ளதை தெளிவாக்கினார்.

அதே நேரத்தில், செய்தி ஊடகம் செயலில் இறங்கியது. அரசியல் அரங்கில் உள்ள நாளேடுகளும், இதழ்களும் கவுக்கை “மக்கள் உரிமைகளுக்கான சுதந்திரப் போராளி”, “ஜனாதிபதியாக மக்களால் விரும்பப்படுபவர்” என்று தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டார். அவருக்காக நடந்த ஒரு இணைய தளப் பிரச்சாரம் பல ஆயிரக்கணக்கானவர்களின் ஆதரவைப் பெற்றது. உண்மையில், பேர்லினில் இந்த வாரம் அவருக்காக நடத்தப்பட்ட பொது ஊர்வலத்தில் மிகச் சிறிய ஆதரவாளர்கள்தான் இருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய அளவில் அரசாங்கக் கட்சிகளின் பாராளுமன்ற பிரிவுத் தலைவர்கள் அரசாங்க வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டினர். ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் கூட்டாட்சி சட்டமன்றத்தில் 21 பிரதிநிதிகளைக் கூடுதலாகக் கொண்டு பெரும்பான்மை பெற்ற நிலையில் சான்ஸ்லர் மேர்க்கெல் தன் வேட்பாளருக்கு ஆதரவாக தடையின்றி, விரைவான வாக்குகள் பதிவாகும் என்று நம்பினார்.

ஆனால் தேர்தல் முற்றிலும் வேறுவிதமாகப் போயிற்று. முதல் சுற்று வாக்களிப்பில், வொல்ப் 600 வாக்குகளையும் கவுக் 499 வாக்குகளையும் பெற்றனர். இடதுகட்சியின் வேட்பாளரும், செய்தியாளருமான லுக் ஜோஷிம்சன் 126 வாக்குகளைப் பெற்றார். இதன் விளைவாக அரசாங்கத்தின் வேட்பாளருக்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் போயிற்று.

CDU, CSU, FDP இவற்றைக் கொண்ட மேர்க்கெலின் கூட்டணி, கூட்டாட்சி சட்ட மன்றத்தில் மொத்தம் 644 பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. இச்சுற்றின் முடிவு 44 அரசாங்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் வேட்பாளருக்கு வாக்களிக்க மறுத்தனர் என்பதாகும். தேவையான பெரும்பான்மை எந்த வேட்பாளருக்கும் கிடைக்காததால் இரண்டாம் சுற்று வாக்களிப்பிற்கு விரைவில் ஏற்பாடாயிற்று.

இரண்டாம் சுற்றில் வொல்ப் தன்னுடைய மொத்த வாக்கில் 15 அதிகரிப்பை (615) கண்டார். கவுக் 9 வாக்குகளை இழந்தார் (490). இடது கட்சி வேட்பாளர் 123 வாக்குளைப் பெற்றார். இரண்டாம் முறையாக, வுல்பிற்கு தேவையான மொத்தப் பெரும்பான்மை இல்லாமல் போயிற்று. கூட்டாட்சிச் சட்டமன்றத்தில் குறைந்தது அரசாங்கத்துடன் இணைந்த 29 பிரதிநிதிகள் வுல்பிற்கு ஆதரவு கொடுத்த மறுத்திருந்தனர்.

மூன்றாம் சுற்று வாக்களிப்பின்போதுதான், தேர்தல் 9 மணி நேரம் நீடித்த பின்னர்தான், வொல்ப் இறுதியாக தன் பதவிக்கு தேவையான போதிய வாக்குகளைப் பெற முடிந்தது. வுல்பிற்கு 625 வாக்குகளும் கவுக்கிற்கு 494 வாக்குகளும் கிடைத்தன. இடது கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். வெற்றிபெறும் வேட்பாளருக்கு சாதாரண பெரும்பான்மை மூன்றாம் சுற்றில் இருந்தால் போதும் என்ற அடிப்படையில் வொல்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தேர்தல் இரகசிய வாக்களிப்பு மூலம் நடந்தது. எனவே எந்தக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர் என்பதை அடையாளம் காண்பது முடியாததாகும். ஆனால் அரசாங்க வேட்பாளருக்கு எதிராக வாக்களிப்பதற்கு அந்த நபர்களுடைய நோக்கங்கள் எப்படி இருந்தாலும், எதிர்ப்பின் அளவு தற்போதைய அரசாங்கத்துடன் ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் செல்வாக்கான பிரிவுகள் கொண்டுள்ள ஆழ்ந்த அதிருப்தியைத்தான் குறிக்கிறது.

கவுக்கிற்கு ஆதரவு கொடுத்த இதே செய்தி ஊடக சக்திகள், சில காலமாக மேர்க்கேலின் அரசாங்கத்தை அதன் கொள்கைகளுக்காக குறை கூறிவந்தன. ஆளும் அரசாங்கக் கூட்டணி பங்காளிகள் தமக்குள் பிளவுற்றிருப்பது மட்டுமில்லாமல், கூட்டணிக்குள் இருக்கும் தனிக்கட்சிகளுக்கு இடையேயும் மோதல்கள் மலிந்துள்ளன.

மேர்க்கெல் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கடும் சிக்கன நடவடிக்கைப் பொதி இப்பிளவை அதிகமாக்கும் மற்றும் அதிக ஓட்டைகள் உள்ளன என்ற குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது. மேர்க்கெலின் வெளியுறவுக் கொள்கையும் பெருகிய குறைகூறலுக்கு உட்பட்டுள்ளது-குறிப்பாக யூரோ நெருக்கடிக்கு அவர் தாமதப்படுத்திக் கொடுத்த பிரதிபலிப்பு ஜேர்மனியின் ஐரோப்பிய அண்டை நாடுகளை விரோதத்திற்கு உட்படுத்தி, இறுதியில் முதலில் நினைக்கப்பட்டதை விட அதிக மீட்புப் பொதியில் முடிவடைந்தது.

புதன் நடைபெற்ற தேர்தல் மேர்க்கெல் அரசாங்கம் அதன் உட்பிளவுகளை கடக்க திறனற்று, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தவில்லை என்றால் அதன் பதவிக்காலம் விரைவில் முடிந்துவிடும் என்பதற்கான தெளிவான எச்சரிக்கையாகும்.

வலதுசாரி ஜோவாகிம் கவுக்கை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததில் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சிகள் தொழிற்சங்கங்களுடனும், ஒருவேளை இடது கட்சியுடனும் கூட கூட்டுக் கொண்டு, தாங்கள் கடும் சிக்கன நடவடிக்கையை செயல்படுத்துவதிலும் ஜேர்மனிய செல்வாக்கை வெளிநாட்டில் உயர்த்துவதிலும் அதிக பங்கைக் கொள்ளத்தயார் என்பதை அடையாளம் காட்டியுள்ளது.