World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

July 4th in America:

A government of the rich, by the rich and for the rich

அமெரிக்காவில் ஜூலை 4ம் திகதி:

செல்வந்தர்களுடைய, செல்வந்தர்களால், செல்வந்தர்களுக்கான அரசாங்கம்

Bill Van Auken
5 July 2010

Back to screen version

ஜூலை 4 சுதந்திரப் பிரகடன ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அமெரிக்கக் குடியரசின் இந்த நிறுவன ஆவணம் “அனைத்து மக்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” என்னும் ஆழ்ந்த ஜனநாயகக் கொள்கையை பிரகடனப்படுத்தி அது “சிறிதும் மாற்றப்படாத உரிமைகளுடன்” இணைந்தது என்றும் மதிப்பளித்தனர்.

ஆக்கிரமித்திருந்த பிரிட்டிஷ் இராணுவத்திற்கு எதிரான ஒரு கசப்பான ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ஓராண்டிற்குப் பின் இது 1776ல் வெளியிடப்பட்டது. காலனித்துவ ஆட்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த இப்புரட்சிகர போராட்டம் ஒர் ஆழ்ந்த விடுதலையளித்த நிகழ்வாகும், அதின் எதிரொலிகள் உலகம் முழுவதும் உணரப்பெற்றன.

இது முடிந்து 234 ஆண்டுகளுக்குப் பின்னர், வாஷிங்டனில் உள்ள மத்திய அரசாங்கம் இந்த ஆண்டுநிறைவு விழாவை கொண்டாடுகையில் அந்த அறிக்கையில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள கொள்கைகள் எப்படி நடைமுறையில் நிராகரிக்கப்பட்டு, அமெரிக்கர்களை பழைய அரசர் மூன்றாம் ஜோர்ஜ் ஆட்சியில் பிரதிநிதித்துவம் இல்லாமலும், பிற்போக்குத்தனமானதுமாக அரசாங்கத்திடம் விட்டுவைத்திருப்பதைத்தான் நினைவுபடுத்துகிறது.

விடுமுறைக்காக ஒத்திவைக்கப்பட்ட காங்கிரஸ் மில்லியன் கணக்கான வேலையில்லாத தொழிலாளர்களை வேலையின்மை உதவி வளங்காது பணமின்றி வைத்துள்ளது. அவர்கள் தங்கள் வாடகை, வீட்டு அடைமான பணம் செலுத்தவும், தங்களுக்கும் குடும்பத்திற்கும் உணவிற்கும் பெரும் இடரில் தள்ளிவிட்டுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட பல பில்லியன் டாலர்கள் மருத்துவ உதவி நிதிகளுக்கு அளிக்கப்படுவதையும் நிறுத்திவிட்டது. இதனால் ஆசிரியர்கள் இன்னும் பிற பொது ஊழியர்களுக்கு அடிப்படைச் சமூக நலன்கள், பணிநீக்க நலன்கள் ஆகியவற்றிலும் கடுமையான வெட்டுக்களை ஏற்படுத்தி விட்டது.

வேலையற்றோருக்கும் பொதுவாகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் நிதிகளைக் குறைத்த விதத்தில் காங்கிரஸ் ஒன்பது ஆண்டுகளாக நடக்கும் விரிவாக்கப்படும் காலனித்துவப்போருக்கும் ஆக்கிரமிப்பிற்கும் $33 பில்லியன்களை ஒதுக்கியுள்ளது. இது இன்னும் காட்டுமிராண்டித்தனமான விதத்தில் பிரகடனச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த பிரிட்டிஷ் அரசரின் “கொள்ளை”, “இறப்பு”, “பெரும் திகைப்பு”, “கொடுங்கோன்மை”, “கொடூரம்” “நயவஞ்சகம்” ஆகியவை மீண்டும் வளங்கப்படுவதை உறுதி செய்துள்ளது.

இந்த நான்காம் ஜூலை களிப்பிற்கு கொடி அசைத்துப் பாராட்டுவதற்கு காரணத்தோடு உள்ள அமெரிக்காவின் முக்கிய சமூகத்தட்டு வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர்கள் மற்றும் ஒதுக்கு நிதி மேலாளர்கள் ஆவர். அவர்கள் 19 பில்லியன் டாலர் வரி, அவர்கள் சொத்துக்களில் இருந்து தொழிலாளர்களுக்கு மாற்றப்படுவதைக் காண்கின்றனர். கடந்த வாரம் பயனற்ற நிதிச் சட்டம் காங்கிரஸால் இயற்றப்பட்டபோது, 2008 நிதியக் கரைப்பிற்கு மிகஅதிகப் பொறுப்பு கொண்ட நிறுவனங்கள் மீது வரிவிதிப்பதின் மூலம் வரவேண்டும் என்று இருந்தபோது, ஜனநாயகக் கட்சித் தலைமை குடியரசுக் கட்சியின் எதிர்ப்புக்களுக்கு அடிபணிந்து TARP எனப்படும் பிரச்சனைக்குட்பட்ட சொத்து உதவித்திட்டத்தில் மிச்சம் இருந்த பணத்தின் மூலம் நிதிகொடுக்க ஒப்புக் கொண்டது. இந்த நிதிகள் அமெரிக்கப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு செலுத்தப்பட்டிருக்கும். மாறாக அந்த வரவு செலவுத் திட்ட குறைப்பின் பில்லியன்கள் இப்பொழுது தொழிலாள வர்க்கம் மற்றும் வறியவர்களுக்கு சென்றிருக்க வேண்டிய திட்டங்களில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டன.

மொத்தத்தில் இந்த நடவடிக்கைகள் செல்வந்தர்களால், செல்வந்தர்களுடைய, செல்வந்தர்களுக்கான அரசாங்கம் என்ற அரசாங்கம் பற்றிய தவறிற்கிடமில்லாத சித்திரத்தைத் தீட்டியுள்ளன. இந்த அரசாங்கம் முற்றிலும் அமெரிக்க மக்கள் பெரும்பாலானவர்கள் தேவைகள், விருப்பங்கள் இவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அமெரிக்க செனட்டின் நடவடிக்கைகள் (மில்லியனர்களின் பொழுது போக்கிடம்), பிரதிநிதிகள் மன்றம் (சராசரி நிகர மதிப்பு $650,000), மற்றும் ஒபாமாவின் வெள்ளை மாளிகை வங்கிகள், பெருநிறுவனங்கள் மற்றும் மக்கட்தொகையில் மிக அதிக செல்வம் கொண்டுள்ள 1 சதவிகிதப் பிரிவு ஆகியவற்றின் நலன்களைக் காக்கும் உறுதியைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் நாட்டின் பெரும்பாலான மக்களான உழைக்கும் மக்கள் முதலாளித்துவ “தடையற்ற சந்தை” முறையின் தயவிற்குக் கைவிடப்பட்டுவிட்டனர்.

அரசாங்கத்தின் கொள்கைகள் பல மில்லியன்கணக்கான அமெரிக்க மக்களுக்குப் பேரழிவைத் தருகின்றன. கடந்த வாரம் வேலையின்மை நலன்கள் விரிவாக்கத்தை இயற்றாமல் செனட்டை ஒத்திப்போட்ட முடிவு 1.63 மில்லியன் வேலையற்ற தொழிலாளர்களுக்கு வருமானம் ஏதுமின்றிச் செய்துவிட்டது. இந்த மாத இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 3 மில்லியன் என்று உயரும். மீண்டும் கூடியதுடன் விரிவாக்கத்தை காங்கிரஸ் இயற்றாவிட்டால், ஆண்டு இறுதிக்குள் இந்த எண்ணிக்கை 7 மில்லியன் என்று ஆகும்.

இந்த மில்லியன் கணக்கான வேலையின்மையில் வாடும் தொழிலாளர்கள், அவர்கள் குழந்தைகளுடன் வறிய நிலை, பட்டினி, வீடற்ற தன்மை ஆகியவற்றிற்கு பற்றாக்குறையைக் குறைத்தல் என்பதற்காக தள்ளப்படுகின்றனர். அரசியலில் பயன்படுத்தப்படும் இந்தச் சொற்றொடர் நடைமுறையில் முதலாளித்துவ முறை தொழிலாள வர்க்கத்தின் மீது நெருக்கடியின் முழுச்சுமையையும் மேலேற்றுகிறது என்ற பொருளைத்தான் கொடுக்கிறது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள பொருளாதார, சமூகநிலை குற்றத்தின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தொழிலாளர் துறை வெள்ளியன்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் ஜூன் மாதம் 125,000 பணிகள் இழக்கப்பட்டுவிட்டதைக் காட்டுகின்றன. குறைந்தது 15 மில்லியன் மக்களாவது வேலையின்றி உள்ளனர், ஒரு வேலைக்கு ஐந்து தொழிலாளர்கள் போட்டியிடுகின்றனர். 1930களின் பெருமந்த நிலைக்குப் பின்னர் முன்னோடியில்லாத வகையில் நீண்டகால வேலையின்மையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 6 மாதத்திற்கும் அதற்கும் மேலாக வேலையின்றி உள்ளவர்கள் உள்ள கூட்டாட்சி நிதி விரிவாக்கத் தேவையை கொண்டவர்கள்.

வீடுகள், கார்கள் விற்பனைகள், நுகர்வோர் நம்பிக்கைச் சரிவு மற்றும் ஆலைகளில் பணிக்கான குறிப்புக்கள் வராதவை ஆகியவை தொடர்ந்து வீழ்ச்சி என்ற அறிக்கையை தொடர்ந்து வேலையற்றோர் பற்றிய தகவல்கள், ஒபாமா நிர்வாகத்தின் கூற்றான இது ஒரு “மீட்புக் கோடைகாலம்” என்பதை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.

காங்கிரஸ் மருத்துவ உதவிக்கு மாநில அரசாங்கங்களுக்கு 24 பில்லியன் கொடுக்கத் தவறியுள்ளது, அமெரிக்க பொருளாதாரத்தின் கீழ்நோக்கிய சரிவை ஆழப்படுத்துகிறது. இந்தப் பணம் இல்லாவிட்டால், பணிநீக்கங்கள் 600,000 பொது, தனியார்துறை ஊழியர்களைப் பாதித்து, முக்கிய சமூகப்பணிகள் இழப்பு என்ற அச்சுறுத்தலைக் கொடுத்து பொதுக்கல்வியை இன்னும் சீரழிக்க செய்துவிடும்.

ஜனநாயக பிரதிநிதிகள் மற்றும் மற்றும் செனட் தலைமை இந்த அற்ப உதவிநிதி நடவடிக்கைகள் தோல்விக்கு குடியரசுக் கட்சியின் பிடிவாதத்தன்மை காரணம் என்று குறைகூறியுள்ளது. ஆனால் உண்மையோ இரு பெரு வணிகக்கட்சிகளும் அக்கொள்கைக்காக பற்றாக்குறைக் குறைப்புக் கொள்கையை ஏற்று சமூக நலக் குறைப்புக்கள், வேலையின்மையில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் அற்பத்தொகை-இன்னும் குறைக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுள்ளன. ஒபாமாவின் வெள்ளை மாளிகையைப் பொறுத்தவரை, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வறிய நிலையில் தள்ளப்படுவதை ஒரு பிரச்சினையாக ஏற்க மறுத்துவிட்டது.

இத்தகைய தடை ஏதும் ஏகாதிபத்தியப் போர் நடத்துவதற்கு செலவளிப்பதற்கு குறுக்கே வரவில்லை. காங்கிஸ் ஜனநாயகக் கட்சித் தலைமை $33 பில்லியன் துணைப் பொதி ஒன்றுக்கு ஒப்புதல் கொடுக்க உறுதி கொண்டது-கிட்டத்தட்ட இதே பணம்தான் ஜூன் 4ம் திகதிக்கு முன்பு வேலையற்றோருக்கும் மாநிலங்களுக்கும் கொடுக்காமல் நிறுத்தப்பட்டது. மன்றம் போர் நிதிக்கு வாக்களித்தது புதிய ஆப்கானிய தளபதியாக ஜேனரல் டேவிட் பெட்ரீயஸை நியமனம் செய்யப்பட்டதை 99-0 வாக்கில் ஏற்றுக்கொண்ட ஒர நாளைக்குப் பின் வந்தது. அவர் காங்கிரஸிடம் ஆப்கானியர்கள் கொலை கூடுதலாக வேண்டும் என்ற விருப்பத்தைத் வெளிப்படுத்தியிருந்தார்.

இரு பெருவணிகக் கட்சிகளின் கொள்கைகளுக்கும் பெரும்பான்மை தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு இடையேயான பெரும் பிளவிற்கு என்ன காரணம் கூறப்படலாம்? சட்டமன்ற வரவு-செலவுத் திட்ட அலுவலகம் கடந்த வாரம் வெளியிட்ட சமீபத்திய தகவல்கள்படி, உயர்மட்ட 1 சதவிகித அமெரிக்க மில்லியனர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இடையே உள்ள வருமான இடைவெளி 1979 க்கும் 2007க்கும் இடையே மூன்று மடங்காகிவிட்டது. இதே காலத்தில்தான் உயர்மட்ட 1 சதவிகிதம் அதன் வரி செலுத்திய பின் வருமானம் 281 சதவிகிதம் அதிகமாகியுள்ளதை காண்கிறது. இது மக்கள் தொகையில் உள்ள நடு ஐந்தில் ஒரு பங்கினருக்கு இதே காலத்தில் 25 சதவிகிதம் என்றுதான் இருந்தது.

அமெரிக்காவில் தடையற்ற பாரிய சமூக சமத்துவமின்மை வளர்வது நாட்டின் நிறுவன ஆவணத்தில் தெளிவாக்கப்பட்ட சமத்துவக் கொள்கைகளை கேலிக்கூத்தாக்குவதுடன் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகளுடன் பொருத்தமற்ற நிலையிலும் உள்ளது. பொருளாதார, சமூக, சுற்றுச் சூழல் பேரழிவுகளை மட்டும் தோற்றுவிக்கக்கூடிய முதலாளித்துவ அமைப்புமுறையில் ஆழ்ந்த இழிசரிவின் அடிப்படை வெளிப்பாடுதான் இது. இவற்றுடன் இன்னும் பேரழிவு தரக்கூடிய போர்களும் நடத்தப்படுகின்றன.

அமெரிக்க வர்ணனையாளர்கள் சுதந்திரப் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது பற்றி நினைவு கூருகையில், அவர்களுடைய “மாற்ற இயலாத உரிமைகளை” மறுக்கும் எந்தவொரு அரசாங்கத்தையும், “மாற்றுதல் அல்லது அகற்றுதலுக்கான'' மக்களின் உரிமை பற்றியும், “தங்களுக்குப் பாதுகாப்பு, மகிழ்ச்சி அதிகம் கொடுக்கக் கூடிய”, புதிய ஒரு அமைப்புமுறை மூலம் மாற்றீடு செய்யலாம் என்பதை ஆவணம் வலியுறுத்தியிருப்பதும் நினைவு கொள்ளுவது பொருத்தமானதே ஆகும்.

அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் இந்த அடிப்படை உரிமையைச் செயல்படுத்த முற்படும் என்பதில் சோசலிச சமத்துவக் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் உலகெங்கிலும் இருக்கும் தங்கள் சகோதர, சகோதரித் தொழிலாளர்களுடன் ஒன்றுபட்டு ஒரு புதிய புரட்சிகரப் போராட்டத்தில் வேலையின்மை, வறுமை, அடக்குமுறை போர் இவற்றிற்கு முற்றுப் புள்ளி வைத்து, ஒரு தற்கால நிதியப் பிரபுத்துவத்தின் இலாப நலன்கள் என்பதற்கு மாறாக பெரும்பாலான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சோசலிச சமூகத்தை அமைப்பதற்கு ஒன்றுபடுத்தும் திட்டத்திற்கான புரட்சிகரத் தலைமையை வளர்ப்பதுதான் மிகமுக்கியமான பிரச்சினை ஆகும்.