World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama’s “jobs program”: Poverty wages and mass unemployment

ஒபாமாவின் “வேலைகளுக்கான திட்டம்”: வறிய நிலை ஊதியங்கள் மற்றும் வெகுஜன வேலையின்மை

Tom Eley and Barry Grey
10 July 2010

Back to screen version

இந்த வாரம் தொடர்ச்சியான உரைகளிலும் பேட்டிகளிலும், ஒபாமா நிர்வாகம் அதன் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளில் மேலும் வலது நோக்கிய திருப்பத்திற்கு அடையாளம் காட்டியமையானது, நிதியப் பெருநிறுவன உயரடுக்கின் அழுத்தத்தின் கீழ் பெயரளவிற்கு வைத்திருந்த ஊக்கப் பொதித் திட்டங்களையும் கைவிட்டதை குறிக்கிறது.

புதனன்று ஜனாதிபதியின் ஏற்றுமதிச் சபை என்ற பெயரில் ஜனாதிபதி ஒபாமா ஒரு குழுவை அமைத்துள்ளதை அறிவித்தார். இச் சபை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்க ஏற்றுமதிகள் இருமடங்காக்கப்படும் என்னும் நிர்வாகத்தின் உறுதிமொழியை ஒருங்கிணைக்கும். பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும் வேலைகளை தோற்றுவிப்பதற்கும் திறவுகோல் ஏற்றுமதிகளை அதிகரிப்பது தான் என்று அவர் கருதுகிறார்.

பெருநிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்ட வெள்ளை மாளிகைக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர் 19 உறுப்பினர் கொண்ட குழுவில் அமெரிக்காவின் மிகப் பெரிய, சக்தி வாய்ந்த பெருநிறுவனங்கள் சிலவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளை நியமித்துள்ளார். இதில் போயிங், போர்ட், ஜேரோக்ஸ், UPS, ADM, Verizon, Walt Disney ஆகிய நிறுவன அதிகாரிகள் அடங்குவர்.

வியாழனனன்று அவர் கன்சாஸ் நகர சிறு மின் டிரக் ஆலையில் தன் பொருளாதாரக் கொள்கைகளை ஊக்குவிக்க விளக்கிப் பேசினார்.

இந்த இரண்டு உரைகள் எதிலும் ஒபாமா அவசரகால வேலையற்றோர் நலன்களை காங்கிரஸ் விரிவுபடுத்தத் தோல்வியுற்றது பற்றியோ அல்லது அது மில்லியன் கணக்கான நீண்டகால வேலையற்ற தொழிலாளர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல் செய்துவிட்டது என்பது பற்றியோ எதுவும் பேசவில்லை. அதே போல் காங்கிரஸ் அதிக கூட்டாட்சி மருந்துவ உதவியை மாநிலங்களுக்குக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல் கொடுக்காதது பற்றியும் பேசவில்லை. இது நூறாயிரக்கணக்கான புதிய பொதுத் துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிநீக்கத்திற்கு வகைசெய்து கல்வி, பிற அடிப்படைப் பணிகளில் இன்னும் வெட்டுக்களை ஏற்படுத்தும்.

இரு உரைகளிலும் ஒபாமா பல முறை பொருளாதாரம் “சரியான திசையில்”, “முன்னேற்றம் அடைந்து வருவதாகக்” குறிப்பிட்டார். ஆனால் கணிசமான வேலை வளர்ச்சி வாய்ப்பை இல்லை என்று செய்யும் விதத்தில் தான் பொருளாதாரச் சரிவின் பெருகிய அடையாளங்கள் உள்ளன.

அமெரிக்காவில் உண்மை வேலையின்மை விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. நீண்ட கால வேலையின்மையானது போருக்குப் பிந்தைய காலத்திலேயே மிக அதிகம் ஆகும். மில்லியன் கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் இல்லை. பல குடும்பங்களின் செல்வத்திற்கு பெரும் ஆதாரமான வீடுகள் மதிப்பு தொடர்ந்து சரிகிறது. முன்கூட்டிய விற்பனைகள், வீடற்ற நிலை, பட்டினி, அடிப்படை தேவைகள் சேவைகள் மூடல் மற்றும் வறுமை ஆகியவை உயர்ந்துள்ளன. பள்ளிகள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மூடப்படுகின்றன. சமூகப் பாதுகாப்பு வலையில் எஞ்சி உள்ளவையும் சிதைக்கப்படுகின்றன.

இந்தச் சமூகப் பேரழிவிற்கு, வேலைகள் தோற்றுவிப்பதற்குத் தீவிர நடவடிக்கை எடுக்காதது அல்லது வேலையின்மையில் இருப்பவருக்கு உதவி அளிக்க மறுப்பது மற்றும் 2009ல் அவர் தொடக்கிய அற்ப நடவடிக்கைகளைக் கைவிட்டது பற்றிக்கூட நேரிய விளக்கம் தரும் வகையில், அவர் நியாயப்படுத்த முற்பட்டுள்ளார்.

பல மில்லியன் அமெரிக்கர்களின் நிலையைக் காணாமலும், கேட்காமலும் அது பற்றிப் பேசாமலும் தோன்றும் நிலையில், ஒபாமா வோல்ஸ்ட்ரீட் பிரபுக்கள் மற்றும் பெருநிறுவன அமெரிக்காவிற்குக் கவனம் என்னும் முறையில் தன் வெள்ளை மாளிகை அறிக்கையைக் காட்டினார். “தனியார் துறை தான், நம் வேலைத் தோற்றுவிப்பிற்கு ஆதாரம், நம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நம் வளமைக்கு ஆதாரம்” என்று அவர் பாராட்டுக்களைக் கூறினார்.

“நம் மக்கள் அனைவருக்கும்” வளம் என்பதற்கு தன் உறுதிப்பாட்டை அவர் அறிவித்தார்—வனப்புரையாக “நம் தொழிலாளர்களுக்கும்” நம் “தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும்” சம கனம் கொடுத்து, அதாவது 200 மில்லியன் தொழிலாளர்களுக்கும் ஒரு சில ஆயிர பல மில்லியன்கள் கொண்ட முதலாளித்துவத்தினருக்கும்.

அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு உற்பத்தியைப் புதுப்பித்தல், ஆலைகளில் இருந்து ஏற்றுமதியை அதிகரித்தல் என்ற அடிப்படையில் “ஒரு புதிய அஸ்திவாரம்” தேவை என்று ஒபாமா அழைப்பு விடுத்தார். இது எப்படி அடையப்பட வேண்டும் என்பதற்கு குறிப்புக் காட்டும் வகையில், அவர் “நுகர்வுக் குமிழிற்கு” ஒரு முற்றுப்புள்ளி தேவை என்றார். அவருடைய பெருநிறுவனப் பார்வையாளர்கள் இத்தகவலை ஆர்வத்துடன் வரவேற்றனர். அமெரிக்கத் தொழிலாளர்களின் ஊதியங்களும், வாழ்க்கைத் தரங்களும் சரிவிற்கு உட்படுத்தப்பட்டு அவர்களுடைய உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டு அதையொட்டி அமெரிக்க ஆலைகள் உலகச் சந்தைக்கு ஏற்றுமதிகளைப் பெருக்கும் ஒரு குறைவூதியத் தொழிலாளர் அரங்கமாக மாற்றப்படும்.

தொழிலாள வர்க்கம் அதன் வருமானத்திற்கு மீறிய வாழ்க்கையை நடத்துகிறது என்று ஒபாமா குற்றம் சாட்டினார். உண்மையில், அமெரிக்காவில் தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்கள் கடந்த 40 ஆண்டுகளாக தேக்கம் அடைந்துள்ளன அல்லது சரிந்துவருகின்றன. தேசியச் சொத்தைக் கொள்ளையடிக்கும் நிதியப் பிரபுத்துவம் தான் அதன் நுகர்வுக் கேளிக்கையை நடத்தி வருகிறது.

ஏற்றுமதிச் சபையில் போர்ட் தலைமை நிர்வாகி ஆலன் முலாலியை ஒபாமா நியமித்தது குறிப்பிடத்தக்கதாகும். GM, Chrysler இரண்டுடனும் போர்டும் ஏராளமான பணிநீக்கங்கள், ஆலை மூடல்கள் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு 50 சதவிகித ஊதியக்குறைப்புக்கள் ஆகியவற்றால் பெரும் இலாபங்களை ஈட்ட உள்ளது. ஒபாமாவின் கார்த்தொழில் செயற்பிரிவினால் இத்தகைய குறைப்புக்கள் நிகழ்ந்தன.

பெருவணிகத்தின் முன் ஒபாமா தாழ்ந்து நிற்பது மற்றொரு நியமனத்தினால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. மே மாதம் ஒபாமா Business Roundtable ஐ அதற்குப் பிடிக்காத அரசாங்கக் கொள்கைகள் பற்றித் தெரிவிக்குமாறு கூறினார். சங்கத்தின் சார்பில் பேசிய Verizon CEO, Ivan Seidenberg நிர்வாகத்தை பகிரங்கமாகச் சாடி, வணிக எதிர்ப்புக் கொள்கைகளை அது தொடர்வதாகக் குற்றம் சாட்டினார். இவரைத் தன்னுடைய ஏற்றுமதிச் சபை உறுப்பினராக எப்படியும் நியமிப்பது என்று ஒபாமா முடிவு கொண்டார்.

பெருநிறுவன உயரடுக்கானது வெள்ளை மாளிகை மீது அது தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, அதிகரிக்க வேண்டும் என்று பெருகிய அழுத்தம் கொடுத்து வருகிறது. இதில் மிக அடிப்படையான ஊக்கப் பொது நடவடிக்கைகள் கைவிடப்படலும் அடங்கியுள்ளது. அவர்கள் இன்னும் விரைவான விதத்தில் சிக்கன நடவடிக்கைக்கு மாற வேண்டும், அதில் மருத்துவப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு போன்ற சமூக நலத் திட்டங்களில் வெட்டுக்கள் வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

பெருவணிகத்தின் சில பிரிவுகள் நிர்வாகத்தின் பெயரளவு நடவடிக்கைகள் என்று நிதியக் கட்டுப்பாட்டு மாறுதல்களில் கொண்டவரப்படுவது பற்றிக்கூட அதிருப்தி அடைந்துள்ளன. இன்னும் அதிக வரிக்குறைப்புக்கள் மற்றும் உதவித் தொகைகளை அவர்கள் கோரி, ஒபாமாவும் பிற நிர்வாக அதிகாரிகளும் எப்பொழுதாவது மேற்கொள்ளும் வணிகப்பிரிவுத் தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்த அழுத்தம் குடியரசுக் கட்சியினர், காங்கிரஸிற்குள் இருக்கும் பெருகிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் அவரசகால வேலையின்மை நலன்கள் தொடர்வது போன்ற மிகக் குறைந்த உதவி நடவடிக்கைகளுக்குக் காட்டும் எதிர்ப்பில் பிரதிபலிக்கிறது.

சமீப காலத்தில் செய்தி ஊடக அறிக்கைகள் பெருநிறுவனப் பிரச்சார நன்கொடைகளில் ஜனநாயக கட்சியினரிடம் இருந்து குடியரசுக் கட்சியினருக்கு பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை ஆவணப்படுத்தியுள்ளன. இதில் Washington Post கட்டுரை ஒன்று “ஜனநாயக கட்சி பிரச்சார குழு மிகப் பெரிய வோல் ஸ்ட்ரீட் நன்கொடையாளர்களை இழக்கிறது” ( “Democratic Campaign Committes Losing Big Wall Street Donors” ) என்பதும் அடங்கும்.

தங்கள் குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு கொடுக்க முடியாத, உணவு அளிக்க முடியாத வகையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் தேவைகள், விருப்பங்கள் பற்றி நிர்வாகம் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒபாமா, வோல் ஸ்ட்ரீட் கருத்துத் தெரிவிக்கும் போதெல்லாம் தன் முழுக் கவனத்தையும் அதன் மீது செலுத்துகிறார்.

தான் வணிக-விரோதப் போக்குடையது என்ற குற்றச்சாட்டை மறுக்கும் விதத்தில் வெள்ளை மாளிகை ஒரு பொது உறவுப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. வெள்ளை மாளிகை ஊழியர்கள் தலைவர் ரஹம் எமானுவல் வியாழனன்று Politico விற்கு ஒரு பேட்டி கொடுத்தார். அதில் அவர் நிர்வாகத்தின் சீரான வணிகச் சார்புச் சான்றுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Politico எழுதியது: “ஒபாமாவிற்கு எதிராக நிற்பதை விட வணிகத்தவர்கள் குறைந்தது ஆறு விவகாரங்களிலாவது அவருடைய ஆதரவிற்கு நன்றியுணர்வு காட்ட வேண்டும்: அதாவது சர்வதேச வணிகத்திற்காகவும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் தடையற்ற சந்தைகளுக்கு தொழிற்சங்கத்தின் அவநம்பிக்கைத்தன்மையை மீறிக் கொடுக்கும் ஆதரவான வாதாடல், சில இடங்களில் இருந்து நிதியச் சரிவின்போது வங்கிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்ற வந்த கருத்துக்களை நிராகரித்தது, கார்த்தொழிலை மீட்டது, சுகாதாரப் பாதுகாப்பு மொத்தத்தில் சீரமைக்கப்பட்டது, தனியார் அளிப்பு முறையைக் காப்பாற்றியது, ஊக்கப் பொதியில் அளிக்கப்பட்ட பில்லியன் கணக்கான தொகை வணிகங்களுக்கு புதிய பெரும் இலாபகரமான ஒப்பந்தங்களைக் கொடுத்தது. ஒரு உடைந்த, ரொக்கத்திற்கு முந்தைய கட்டுப்பாட்டுக் கருவிக் காலத்தில் இருந்த உறுதியற்ற தன்மையை மாற்றிய நிதியச் கட்டுப்பாட்டுச் சீர்திருத்தம்.”

இப்படித்தான் வேலையின்மை நெருக்கடியும் உள்ளது. பெருவணிகம் பல ஆண்டுகள் வேலையின்மை அதிக நிலையில் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் வேலையின்மையைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் ஊதியங்கள், பணி நிலைகள் பெரும் அடிக்கு உட்படுத்தப்பட முடியும் என்று விரும்புகிறது. வெள்ளை மாளிகை துல்லியமாக அதைத்தான் செய்துவருகிறது—வேலையின்மையில் உள்ளோரின் நிலைக்குத் தான் பெரும் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும்.

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதியின்—ஒரு ஆபிரிக்க-அமெரிக்கர், கட்சியின் தாராளவாதப் பிரிவின் முன்னணியில் நிற்பவர் என பிரச்சாரப்படுத்தப்பட்டவர்—மக்களின் ஆழ்ந்த சீற்றம் பற்றி சிறிதும் வெளிப்பாட்டைக் கொடுக்காதவர், ஒரு பொருளாதார, சமூப் பேரழிவைத் தோற்றுவித்த பெருநிறுவனக் குற்றவாளிகளிடம் இருந்து தன்னை ஒதுக்கிக் கொள்ளக்கூட இயலாதவர்—BP எண்ணெய் குழாய் வெடிப்பு, சுற்றுச்சூழல் சேதம் என—அவரின் நிலையானது முழு அரசியல் முறையும் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குச் சிறிதும் பொருட்படுத்தாத் தன்மையின் வெளிப்பாடு ஆகும்.

மூலதனத்தின் நடைமுறை சர்வாதிகாரம்—அதன் கட்சிகள் மற்றும் அனைத்து அரசாங்கத் துறைகள் மீதான முழு மேலாதிக்கம்—இப்பொழுது போல் அதிகம் முழுமைபெற்ற வகையில் எப்போதும் இருந்ததில்லை.

இவற்றில் இருந்து என்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்? முதலாளித்துவ இலாபமுறை என்பது மக்களின் பரந்த அடிப்படைத் தேவைகளுடன் பொருந்தி இருக்க முடியாது. அதன் அடிப்படை நலன்களைப் பாதுகாக்க—ஒரு வேலை, கௌரவமான ஊதியங்கள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடு, பாதுகாப்பான ஓய்வு காலம்—ஆகியவற்றிற்காக தொழிலாள வர்க்கம் பெருவணிகத்தின் இரு கட்சிகளிடம் இருந்தும் முறித்துக் கொண்டு சமுதாயத்தை சோசலிச வழியில் மாற்றியமைக்க போராட வேண்டும்.