World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands of Colombo slum dwellers rounded up by Sri Lankan military

ஆயிரக்கணக்கான கொழும்பு குடிசைவாசிகள் இலங்கை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டனர்

By W.A. Sunil and Panini Wijesiriwardena
10 July 2010

Back to screen version

இலங்கை இராணுவத்தினரும் பொலிசாரும் கடந்த வாரக் கடைசியில் கொழும்பின் வடக்கில் உள்ள மட்டக்குளிய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதோடு பின்னர் ஆயிரக்கணக்கானவர்களை சுற்றிவளைத்தனர்.

சனி இரவு கைதுசெய்யப்பட்ட ஒரு இளைஞனை பொலிசார் அடித்ததற்கு எதிராக பலநூறு பேர் ஆர்ப்பாட்டம் செய்ததை அடுத்தே இந்தத் தாக்குதல் தொடங்கியது. சிப்பாய்கள் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸ் படைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்களுக்கு எதிராக குவிக்கப்பட்டனர்.

அடுத்தநாள் காலை, சுமார் 8,000 பிரதேசவாசிகள் ஒரு திறந்த வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு முகமூடி அணிந்த நபர் 200க்கும் அதிகமானவர்களை காட்டிக்கொடுத்தார். அவர்கள் பின்னர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த இராணுவ-பொலிஸ் நடவடிக்கையானது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் புதிய கட்டத்தை குறிக்கின்றது.

செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்கள் மட்டக்குளிக்கு சென்றிருந்த போது, சம்பவத்தின் வடுக்களை காணக்கூடியதாக இருந்தது. பிரதேசத்தின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஆயுதப் படையினர் காவலில் நின்றனர். கண்ணாடிகள் நொருங்கி சேதமடைந்த வாகனங்கள் வீதிகளில் இருந்தன. உடைந்த ஜன்னல்களும் கதவுகளும் மக்களின் வீடுகள் மீது பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலின் விளைவுகளை காட்சிப்படுத்தின. சில வீடுகளில் டி.வி., குளிர்சாதனப் பெட்டி மற்றும் தளபாடங்கள் உட்பட எல்லாமே திருத்தமுடியாதளவு நாசமாகியிருந்தன. பலர் ஆத்திரமடைந்திருந்ததோடு சிலர் ஆழமாக அதிர்ச்சியடைந்திருந்தனர்.

முதலீட்டாளர்கள் மற்றும் சொத்து சேர்ப்போர்களின் சார்பில் கொழும்பில் குடிசைகளை அகற்றுவதை இலக்காகக் கொண்டு இராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுக்கும் பொலிஸ்-இராணுவ பாய்ச்சலில் ஒன்றாக, அடுத்து வரவுள்ள தாக்குதலை நியாயப்படுத்த மட்டக்குளிய பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டு முன்னெடுத்த தாக்குதலே இது என்பதை உள்ளூர்வாசிகள் தந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

ஜூலை 3 மாலை, போதை பொருள் வியாபாரி என்று குற்றஞ்சாட்டி முச்சக்கர வண்டி ஓட்டும் எம். நிஷாந்த என்ற இளைஞனை பொலிசார் கைது செய்தனர். பிரதேசவாசிகள் அந்தக் குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்தனர். மோசமாக தாக்குதலுக்குள்ளான நிஷாந்த பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது காணமால் போயுள்ளதை அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்களும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களும் சனிக்கிழமை மாலை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக பொலிஸ் நிலையத்தை நோக்கி விரைந்தனர்.

கூட்டத்தை கலைப்பதற்காக நூற்றுக்கணக்கான பொலிசாரும் படையினரும் அணிதிரட்டப்பட்டதோடு பின்னர் ஒரு பீதியை கிளப்பிவிட்டனர். சிவில் உடையில் இருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்கள் பிரதேசத்துக்குள் படையெடுத்து நிராயுதபாணிகளாக இருந்த மக்களை பொல்லுகளால் கண்மூடித்தனமாகத் தாக்கினர் என பிரதேசவாசிகள் நமது நிருபர்களிடம் தெரிவித்தனர். பல வீடுகளும் வாகனங்களும் இரும்பு பொல்லுகளால் தாக்கப்பட்டுள்ளன.

“எங்களை அடிக்க வேண்டாம் என்றும் எங்களது சொத்துக்களை சேதமாக்க வேண்டாம் என்றும் நாங்கள் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை,” என ஒரு பெண் சீற்றத்துடன் தெரிவித்தார். “ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள் பார்த்துக்கொண்டிருந்த அதே வேளை அவர்கள் தொடர்ந்தும் தாக்கினர்”, என அவர் மேலும் தெரிவித்தார். இளைஞர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதோடு அவர்களது தலை மயிரும் பலாத்காரமாக வெட்டப்பட்டது. பாதுகாப்பு படையினர் பிரதேசவாசிகள் சிலரின் நகைகளையும் திருடினர்.

அடுத்த நாள் காலை 7.30 மணிக்கு, பிரதேசத்தில் உள்ள 10 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பொலிசாரினால் அருகில் உள்ள மைதானமொன்றுக்கு அழைக்கப்பட்டனர். சமிட்புர, கெமுனுபுர, கதிரான மற்றும் ஸ்ரீ விக்கிரமபுரவைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் 8,000 பேர் அங்கு சுற்றிவளைக்கப்பட்டனர். அவர்கள் பி.ப. 2 மணிவரை தண்ணீர் கூட இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்ததோடு, அந்த மைதானத்தைச் சூழ சுமார் 1,000 பொலிசாரும் படையினரும் காவலில் நின்றனர். முகமூடி அணிந்த நான்கு பேர், 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த முழு செயற்பாடும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான மூன்று தசாப்த கால போரின்போது தமிழ் பொது மக்களுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களை நினைவூட்டின. இன்றுவரை, ஆயிரக்கணக்கான தமிழர்கள் இராணுவத்தால் நடத்தப்படும் தடுப்பு முகாங்களில் இருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் இழுத்துச் செல்லப்பட்டு “புலி சந்தேக நபர்களாக” விசாரணையின்றி காலவரையறையின்றி சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்களுமாக முழு தொழிலாள வர்க்கத்துக்கும் எதிராக பயன்படுத்தவுள்ள புதிய ஒடுக்குமுறை வழிமுறைகளை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சிக் களமாக அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தை பயன்படுத்திக்கொண்டுள்ளது என்பதையே மட்டக்குளிய நடவடிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. 1989-1990ல் சுமார் 60,000 பேர் கொல்லப்பட்ட, நாட்டின் தெற்கில் கிராமப் புற இளைஞர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படைகளால் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களையும் கூட கடந்த வாரக் கடைசி சுற்றி வளைப்புக்கள் நினைவூட்டுகின்றன.

இந்த நடவடிக்கை போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிரானது என கூறுவதன் மூலம் பொலிசார் அதை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். திங்களன்று பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை நடத்திய பிரதி பொலிஸ்மா அதிபர் (டி.ஐ.ஜி) என்.கே. இலங்ககோன், சாதாரண மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படவில்லை என முழுமையாக மறுத்தார். கைது செய்யப்பட்டுள்ளவர் ஒரு “போதைப் பொருள் முதலை மற்றும் பாதாள உலக தலைவருடன் நெருங்கிய தொடர்புடையவர்” என அவர் கூறினார். நிஷாந்த பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அவர் கூறினார். ஆயினும், பொலிசார் அவரை கைது செய்த பின்னர் தான் அவரை கானவில்லை என நிஷாந்தவின் தாயார் எமது நிருபர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை பொலிசார் தமது தாக்குதல்களை நியாயப்படுத்த கதைகளைப் புணைவதில் இழிபுகழ்பெற்றவர்கள். அந்த “போதைப் பொருள் முதலையை” ஏன் பொலிசார் கைது செய்யவில்லை என்பதை டி.ஐ.ஜி. இலங்ககோன் கூறவில்லை. நடவடிக்கையை மூடி மறைக்கவும் உள்ளூரில் நிலவும் சீற்றத்தை தணிக்கவும் முயற்சித்த பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, பிரதேசத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அதே போல் உள்ளூர் பொலிஸ் நிலையங்களில் உள்ளவர்களையும் இடம் மாற்றுமாறு கட்டளையிட்டார்.

தமது அச்சுறுத்தலை தொடர்ந்த பொலிஸ், கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை அடையாள அணிவகுப்பில் நிறுத்த தீர்ப்பளிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. தாம் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக பொலிஸ் சொத்துக்களுக்கு எந்தவொரு சேதமும் ஏற்பட்டுள்ளதாக ஆதாரங்கள் எதையும் பொலிசார் முன்வைக்கவில்லை என எதிர்தரப்பு வக்கீல் வாதாடினார். நீதவான் 176 பேரை பிணயில் விடுவித்த போதிலும், 25 பேரை விளக்கமறியலில் வைத்தார்.

WSWSக்கு கருத்துத் தெரிவித்த ஒரு உள்ளூர் இளைஞர்: “[வடக்கு மற்றும் கிழக்கில்] யுத்தம் நடத்துகையில் ‘நமக்காக நாம்’ என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த அரசாங்கம், சிப்பாய்கள் எங்களுக்கு சேவை செய்பவர்கள் என எங்களுக்கு கூறப்பட்டது. அவர்கள் எங்களுக்காக சேவை செய்பவர்கள் அல்ல என்பதை இப்போது நாம் புரிந்துகொண்டோம் ” என்றார். யுத்தத்தின் போது வடக்கில் அப்பாவி மக்களை பாதுகாப்புப் படையினர் எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பதை இப்போது மக்களால் புரிந்துகொள்ள முடியும் என பாதிக்கப்பட்ட இன்னொரு இளைஞர் கூறினார். “பாதுகாப்பு படைகள் யுத்தக் குற்றங்களை செய்யவில்லை என அரசாங்கம் கூறிக்கொள்வதை யாரால் நம்ப முடியும்? ” என அவர் கேட்டார்.

பாதுகாப்புப் படையினரின் பாய்ச்சலில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி சமிட்புர ஆகும். தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களுமாக சுமார் 6,000 குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. அநேக குடும்பங்கள் அன்றாட கூலித் தொழில்களை செய்தே பிழைக்கின்றன. 1976ல் அணிசேரா இயக்கத்தின் மாநாட்டுக்காக மாநகரை அரசாங்கம் சுத்தம் செய்த போது, இந்த மக்கள் ஏனைய புறநகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி சமிட்புரவில கொட்டப்பட்டனர்.

“மரப் பலகைகள், தகரங்கள் அல்லது தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட வீடுகளில் பல வருடங்கள் மக்கள் வாழத் தள்ளப்பட்டார்கள். எனது ஊழியர் சேமலாப நிதியை எடுத்தே நான் இந்த வீட்டைக் கட்டினேன்,” என ஒரு ஓய்வுபெற்ற தொழிலாளி WSWS க்குத் தெரிவித்தார். பிரதேசவாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய நிலத்துண்டுக்கு எந்தவொரு சட்டப்பூர்வ ஆவணமும் வழங்கப்படவில்லை.

பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிஷாந்த, தனது 64 வயது தாயுடனும் மற்றும் தனது 13 வயது மகளுடனும் 12 சதுரமீட்டர் கொண்ட ஒரு சிறிய வீட்டில் வாழ்கின்றார். அவர் முன்னதாக ஒரு மாட்டுவண்டியில் சென்று மண்ணென்னை விற்று வந்தார். அவரது தாயார் இன்னமும் ஒரு துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்கின்றார். அவரது மனைவி மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொழில் தேடி ஜோர்தானுக்கு போன போதிலும், தனது எஜமானரால் துன்புறுத்தலுக்கு உள்ளான பின்னர் அங்கிருந்து வெளியேறி, இப்போது 18 மாதங்களுக்கும் மேலாக தடுப்பு முகாம் ஒன்றில் இருக்கின்றார்.

இந்த வறிய மக்கள் கொழும்பு குடிசைகளில் வாழும் இலட்சக்கணக்கானவர்களை சேர்ந்தவர்கள். இவர்கள் “அதிகாரமற்ற” வீடுகளில் வசிப்பதாக கூறி இராஜபக்ஷ அரசாங்கம் இந்த குடிசைவாசிகளை வெளியேற்ற திட்டம் வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையானது, ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோடாபய இராஜபக்ஷவின் தலைமையில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸ்-இராணுவ அணிதிரள்வு இலங்கையில் தொடர்ந்தும் விதிவிலக்காக இருக்கப் போவதில்லை, மாறாக ஆட்சியாக இருக்கும். மே மாதம், மத்திய கொழும்பில் 45 குடும்பங்களின் வீடுகளை உடைத்து அவர்களை வெளியேற்ற நூற்றுக்கணக்கான பொலிஸ் மற்றும் இராணுவப் படையினரை அனுப்பிய பாதுகாப்பு அமைச்சு, அவர்களது வீடுகளை தகர்த்தது. கடந்த வாரங்களாக, கொழும்பிலும் மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் ஆயிரக்கணக்கான நடைபாதை வியாபாரிகளை அகற்றுவதற்காக பொலிசார் பயன்படுத்தப்பட்டனர்.

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த போதிலும், இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்ற 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான நிபந்தனைகளை இட்டு நிரப்பத் தேவையான கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துகின்ற நிலையில், வெகுஜன போராட்டங்களையும் எதிர்ப்புக்களையும் நசுக்குவதன் பேரில், பொலிஸ் மற்றும் இராணுவத்துக்கு பரந்த அதிகாரங்களை வழங்கும் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்துள்ளது.

மட்டக்குளிய பிரதேசவாசிகள் மீதான தாக்குதல் பற்றிய பொலிசாரின் கதையை எதிரொலித்த கொழும்பு ஊடகம், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலை மூடி மறைப்பதை தொடர்ந்தும் முன்னெடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) மற்றும் சிங்கள அதிதீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட எந்தவொரு பாராளுமன்ற கட்சியும், மட்டக்குளிய நடவடிக்கையை பற்றி கருத்துத் தெரிவிக்காமை, பொலிஸ் அரசுக்கான தயாரிப்புக்கு அவர்கள் உடந்தையாய் இருப்பதை வெளிக்காட்டியுள்ளது.

ஆழமடைந்துவரும் உலக முதலாளித்துவத்தின் பூகோள நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதற்காக, அரசாங்கம் தசாப்தகால யுத்தத்தின் போது கட்டியெழுப்பிய இராணுவ இயந்திரத்தை நாடு பூராவும் உள்ள உழைக்கும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் என சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் WSWS விடுத்த எச்சரிக்கையை மட்டக்குளிய நடவடிக்கை தெளிவாக உறுதிப்படுத்துகின்றது.