World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The “Berlin Club”: Germany plans to put Europe on rations

“பேர்லின் குழு”: ஜேர்மனி ஐரோப்பாவின் மீது கொடுப்பனவுகளை நிறுத்த திட்டமிடுகிறது

Stefan Steinberg
17 July 2010

Back to screen version

ஐரோப்பிய வங்கிகளுக்கு தங்கள் கடன்களை திருப்பி செலுத்தமுடியாது செய்வதற்கு பலவீனமான நாடுகளுக்கு ஒரு நிபந்தனைகளை விதிக்கும் திட்டம் ஜேர்மனிய அரசாங்கத்தால் தயாரிக்கப்படுகிறது. பேர்லினில் உள்ள ஒரு சிறுகுழு அரசியல்வாதிகள், நிதிய வல்லுனர்கள் கொண்ட குழு ஒன்றினால் விவாதிக்கப்படும் இத்திட்டம் பொருளாதார, வரவு-செலவுத் திட்ட கொள்கைகளின் பரந்த பகுதிகள் பற்றி நிர்ணயிக்கும் திறனை அரசாங்கங்களிடம் இருந்து நடைமுறையில் அகற்றிவிடும்.

Der Spiegel பத்திரிகையில் வந்துள்ள ஒரு சமீபத்திய தகவல்படி, ஒரு டஜனுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான வல்லுனர்கள் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள இன் வேண்டுகோள்படி ஒரு ஆவணத்தை இயற்றி வருகின்றனர். நிதியச் சந்தைகளை பயமுறுத்தக்கூடாது என்பதற்காக புதிய திட்டத்தின் விவரங்கள் இயலுமானளவு அமைதியாக வைக்கப்பட்டுள்ள்ன.

மே மாதம் மற்ற ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) சேர்ந்து முன்னோடியில்லாத வகையில் 750 பில்லியன் யூரோ (அமெரிக்க டாலர் 945 பில்லியன்) மீட்பு நிதி நிறுவி, கடன்களை திருப்பிக் கொடுப்பதில் இடர்களை முகங்கொடுக்கும் யூரோப்பகுதி நாடுகளின் கடன்கள் மறுஉதவி பெறுவதற்கு வசதியாக அமைக்கப்படும் திட்டத்திற்கு ஜேர்மனி ஒத்துக்கொண்டது. இப்பொழுது ஜேர்மனிய சான்ஸ்லர் பேர்லினில் இயற்றப்படும் திட்டம் ஐரோப்பிய பிணை எடுப்பின் பொதியின் மீது ஒரு நம்பிக்கையில்லா தன்மையைக் காட்டுகிறது எனக் கருதப்படக்கூடும் என்ற கவலையை கொண்டுள்ளார். திங்களன்று திட்டத்தின் செய்தி கசிந்தபோது, யூரோவின் மதிப்பு குறைந்தது.

அடிப்படையில் பிரச்சனைக்குள்ளான ஐரோப்பிய நாடுகளின் கடன்களை மறுகட்டமைக்கும் விதத்தில் பேர்லின் திட்டம் காண்கிறது. கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகியவற்றின் பொருளாதாரங்கள் தற்பொழுது முக்கியமாக உதவியைப் பெறும். ஆனால் வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடன்களை திருப்பிக் கொடுக்க திணறும் மற்ற நாடுகளும் அடுத்து வரிசையில் நிற்கக்கூடும். கடன்களை மறுகட்டமைத்து தருவதற்கு ஈடாக பாதிக்கப்பட்ட நாடுகள் தங்கள் பொருளாதாரங்களின்மீது கொண்டுள்ள பரந்த அதிகாரங்களை கைவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேர்லின் திட்ட வரைவின் சொற்களில், “இந்த நிகழ்வுப்போக்கிற்கு அரசாங்க மதிப்பிடும் அதிகாரங்களில் சில கட்டுப்பாடுகளும் தேவைப்படும்.” வரவு-செலவுத் திட்ட கொள்கை பற்றிய கடுமையான கட்டுப்பாடு, பின்னர் “கடன் வாங்கியுள்ள நாட்டின் பிராந்திய தன்மைகளை நன்கு அறிந்துள்ள ஒரு தனிநபரால் அல்லது பல உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவால் அது ஏற்கப்படும்”; இவர்கள் பேர்லின் குழு என அழைக்கப்படும் வல்லுனர்கள் குழுவினால் நியமிக்கப்படுவர்.

ஜேர்மனிய திட்டத்தின் பின்னணியில் உள்ள கருத்தை பற்றி ஷௌய்பிள அறிவித்தார்: “திவால்தன்மை பற்றி ஒரு நிறுவனம் பதிவு செய்யும்போது, கடன் கொடுத்தவர்கள் தங்கள் உரிமைகளில் ஒரு பகுதியை கைவிடுவர். அதே கருத்துத்தான் தேசிய திவாலுக்கும் பொருந்தும்.”

ஷௌய்பிளவின் சொற்கள் கவனத்துடன் ஆராயப்பட வேண்டும். திவாலாகும் நாடுகள், செயலிழந்த நிறுவனங்களைப் போல் நடத்தப்படும் என்று அவர் அறிவிக்கிறார். அதாவது மறுகட்டமைப்பிற்கு உட்பட்டு, அதிகாரம் இழந்து, தங்கள் வரவு-செலவுத் திட்டங்களை வெளி அமைப்பின் முழுக்கட்டுபாட்டிற்கு கொடுத்துவிட வேண்டும்.

பேர்லின் திட்டம் பற்றிய விளக்கம் ஒன்றில் இந்த வாரம் பைனான்சியல் டைம்ஸ், கண்டத்தின் நிதிய நெருக்கடியைத் தடுப்பதில் இருக்கும் ஐரோப்பிய விதிகள் எங்கு தோற்றுள்ளனவோ, அங்கு கூடுதல் நடவடிக்கைகள் தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த அடிப்படையில், “இந்த கருத்தில் சில விடயங்கள் விரும்பும் வகையில் உள்ளன. ஆனால் ஜேர்மனியின் கருத்தில் உள்ள மறைமுகப்புள்ளி இது மிக அதிகம் செல்கிறது என்பதுதான்…. வெளிநபர்கள் தேசிய அதிகாரத்திற்கும் முடிவிற்கும் அப்பாற்பட்ட அதிகாரத்தால் நிர்ணயிக்கப்படுவர்: அவர்கள் கடன் நாட்டின் நிதிய விவகாரங்களை பாதுகாப்பர். இது சில அரசாங்க அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்தும். அத்தகைய திட்டம் கடன்வாங்கியுள்ள நாட்டை காலனித்துவமுறை அடிபணிதலுக்குத் தள்ளிவிடும். இதற்கு உடன்பட்டுவிட்டால், அரசியல் வெடிப்புத் தன்மை ஏற்படக்கூடும்…. அரசாங்கக் கடன் கொடுத்தலில் தவறு ஏற்பட்டால், தேவைப்படுவது ஒரு பேச்சுவார்த்தை மாநாட்டு மேசையே அன்றி சித்தரவதை அறை அல்ல.” என்று Times எழுதியுள்ளது.

சர்வதேச நிதிய சமூகத்தின் குரலான, பைனான்சியல் டைம்ஸ் சற்றும் தயக்கம் இன்றி அதன் நலன்களை ஆதரிப்பது. அப்படி இருந்தும் செய்தித்தாள் இப்பொழுது ஜேர்மனியில் விவாதிக்கப்படும் ஒரு வெளிநாட்டுப் பொருளாதாரத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்வதில் இருந்து வரும் உள்ளடங்கியுள்ள அரசியல் விளைவுகளுக்கு எதிராக எச்சரிக்கும் கட்டாயத்தை உணர்ந்துள்ளது.

பேர்லினில் தயாரிக்கப்படும் திட்டங்களில் இருந்து பல முக்கியமான முடிவுகள் பற்றி எடுக்கப்பட வேண்டும்.

நிதிய நெருக்கடி ஏற்பட்டுக் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அது இப்பொழுது ஒரு புதிய, இன்னும் வெடிப்புத்தன்மை திறனுள்ள கட்டத்தில் நுழைகிறது. ஜூன் 23ம் திகதி, 91 ஐரோப்பிய வங்கிகள் மீது நடத்தப்பட்ட அழுத்தச் சோதனைகள் வெளியிடப்பட உள்ளன. அவை எந்த அளவிற்கு வெளிப்படுத்துகின்றனவோ, அந்த அளவிற்கு சிலவற்றை மூடிமறைக்கும் விதத்தில் சோதனைகள் இருந்தாலும், சில நிதியப் பகுப்பாய்வாளர்கள் புள்ளிவிவரங்கள் 10 முதல் 20 வங்கிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடும் என்று கணித்துள்ளனர். இப்படி ஏற்பட்டால் இன்னும் பல கூடுதல் பில்லியன்கள் இந்த வங்கிகளின் பிணையெடுப்பிற்கு தேவைப்பட்டு அவற்றின் பெறுமதியற்ற சொத்துக்களும் வாங்கப்படும்.

யூரோப்பகுதி மீட்புப் பொதி நலிந்த ஐரோப்பிய வங்கிகளையும், தாக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களையும் பிணை எடுக்க போதாமல் இருக்கலாம் என்ற கவலையில் ஆழ்ந்துள்ள ஜேர்மனிய அரசாங்கம் இப்பொழுது அதன் ஐரோப்பாவிற்கான தீவிரமான அவசரக்காலத் திட்டத்தை வரைந்து கொண்டிருக்கிறது.

பேர்லின் குழுவின் திட்டங்கள் கண்டம் முழுவதும் தேசிய விரோதப் போக்குகளையும் அதிகரிக்கும். Der Spiegel குறிப்பிடுவதுபோல், “கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் போல் திவால் தன்மை அல்லது அது ஏற்படக்கூடிய சாத்தியத்தால் அச்சுறுத்தப்படும் நாடுகள் பேர்லினில் இருந்து வரும் திட்டங்களுக்கு எதிராக ஆயுதமேந்தி நிற்கும். எஞ்சியுள்ள யூரோ நாடுகள் ஒரு அவசரகாலத்தில் அவற்றிற்கு உதவ மறுக்கும் விதத்தில் எளிதாகத் தயாரிக்கப்படும் விதிகளுக்கு அவை ஏன் உட்பட வேண்டும்?’

பேர்லின் திட்டம், ஜேர்மனியின் பிரான்ஸ் உட்பட அண்டை நாடுகளுடன் உறவுகளை சீர்குலைக்கும். ஏற்கனவே ஜேர்மனிய அரசாங்கம் நிதிநெருக்கடிக்கு காட்டும் விடையிறுப்பு, அதன் ஒருதலைப்பட்ச முன்முயற்சிகள் பற்றி கடுமையான விமர்சனத்தை பிரான்ஸ் செய்துள்ளது.

இறுதியாக, ஆளும் உயரடுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியை முதலாளித்துவ ஜனநாயகத்தின் மரபார்ந்த வடிவமைப்பிற்குள் சமாளிக்கும் திறனை முற்றிலும் கொள்ளாதது பற்றி ஜேர்மனிய திட்டம் வெளிப்படுத்தியுள்ளது. பொதுவாக எந்த மந்திரியும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ள விரும்பாத உண்மை ஒன்றை சமீபத்தில் ஷௌய்பிள ஒப்புக் கொண்டுள்ளார். அதாவது அரசாங்கங்கள் நிதியச் சந்தைகளின் உத்தரவுகளை செயல்படுத்துகின்றன என்பதே அது. இப்பொழுது வங்கிகளை திருப்திப்படுத்த ஷௌய்பிள திவால் நாடுகளும் திவால் வணிகங்களைப் போல் நடத்தப்பட வேண்டும், பொதுக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு கொடுப்பனவு நிறுத்தலுக்குள்ளாக வேண்டும் என்கிறார். இதுதான் நிதிய தனியுரிமை மற்றும் சர்வாதிகாரத்திற்கு சூத்திரமாகும்.

சமீப ஆண்டுகளில் ஐரோப்பா ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்படாத “வல்லுனர் குழுக்களின்” ஆட்சியை அனுபவித்து வருகிறது. இத்தகைய குழுக்கள் ஹங்கேரியில் 2009 மற்றும் 2010ல், செக் குடியரசில் 2010 வரை கடுமையான சிக்கன நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த அரசியல் உயரடுக்கினால் நியமிக்கப்பட்டிருந்ன. சமீபத்திய ஜேர்மனிய திட்டம் இன்னும் ஒரு படி மேலே உறுதியாகச் செல்கிறது. பேர்லினைத் தளமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்படாத “வல்லுனர்கள் குழு” ஒன்றின் பகுதிச் சர்வாதிகார ஆட்சி சுமத்தப்படல் என்பதே அது.

ஜேர்மனிய மற்றும் ஐரோப்பிய ஆளும் வட்டங்களில் நடைமுறையிலுள்ள ஜனநாயக வழிமுறைகளை தூக்கிவீசிவிட்டு சர்வாதிகார மாற்றிடுகளுக்கு ஆதரவான முறைகளை முன்வைப்பதற்கான விவாதங்கள் நடைபெறுகின்றன. ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த மாற்றீட்டை, ஒரு சர்வதேச சோசலிச கட்சியை தோற்றுவித்து அதன் மூலம் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகள் நிறுவப்படுவதற்கு தயாரிப்புக்கள் நடத்தவேண்டும்.