World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India’s latest train crash kills 66 in West Bengal

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் அண்மையில் நடந்த ரயில் மோதலில் 66 பேர் கொல்லப்பட்டனர்

By R. Shreeharan
21 July 2010

Back to screen version

இந்தியாவில் இந்த ஆண்டு நான்காவது தடவையாக நடந்த பெரும் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை, மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் இருந்து சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிர்பும் மாவட்டத்தின் சைன்தியா ரயில் நிலையத்தில் அதிகாலை சுமார் 2 மணியளவிலேயே இந்த விபத்து நடந்தது. சியல்டாவில் இருந்து புறப்பட்ட உத்தர் பங்கா கடுகதி ரயில், நிலையத்தில் தரித்திருந்த வனன்சல் கடுகதி ரயில் மீது மோதியது.

வனன்சல் ரயிலின் ஆசனங்கள் ஒதுக்கப்படாத பொதுவான இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இரண்டும் ஒரு சரக்குப் பெட்டியும் தண்டவாளத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டன. ஒரு பெட்டி நடைபாதை பாலமொன்றின் மீது மோதியதோடு இன்னொன்று பாலத்துக்கு மேலாக தூக்கியெறியப்பட்டு தண்டவாளங்களுக்கு அருகில் இருந்த பாதை மீது விழுந்தது. சடலங்களையும் காயமடைந்தவர்களையும் வெளியில் எடுக்க தகரத்தை சுட்டி வெட்டியெடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை மீட்புப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. “முழு சரீரத்தை விட, உடற் பாகங்களையே வெளியில் எடுக்க முடிந்ததாக” ஒரு மீட்புப் பணியாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். உயிர் பிழைத்த பின்டூ சிங் என்பவரின் கை உடைந்து போயிருந்தது. “மூன்று ரயில் பெட்டிகளும் முழுமையாக சேதமடைந்துவிட்டன எவரும் உயிருடன் இல்லை” என அவர் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார்.

உத்தர் பங்கா கடுகதி ரயில் சைன்தியாவில் நிறுத்தப்பட இருந்தது. கொல்லப்பட்ட மூன்று ரயில் ஊழியர்களில் ஒருவரான ரயில் சாரதி மீது குற்றஞ்சாட்டுவதற்கான உத்தியோகபூர்வ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடுகதி ரயிலின் சாரதி நிறுத்தம் சமிக்ஞையில் நிறுத்தத் தவறியதோடு பின்னர் ரயில் நிலையத்தை நெருங்கிய போதும் வேகத்தை குறைக்கத் தவறிவிட்டார் எனக் கூறிய இந்திய ரயில் போக்குவரத்துச் சபையின் தலைவர் விவேக் ஷாகை, மனித தவறே விபத்துக்குக் காரணம் என குறிப்பிட்டார். “ரயில் அந்தளவு வேகமாக பயனித்தது ஏன்? சாரதி பிரேக்கில் அல்லது அவசர பிரேக்கில் கைவைக்கவே இல்லை, ” என ஷாகை நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆயினும் பல இந்திய பத்திரிகைகளுக்கு பேட்டியளித்த ஓய்வு பெற்ற ரயில் சாரதிகள், ஷாகை பதிலளித்த முறையை கேள்விக்குள்ளாக்கினர். சாரதி அல்லது உதவியாளர் பிரேக்கை அழுத்தாவிட்டால், அது சமிக்ஞை கோளாறை அல்லது ஏனைய தொழில்நுட்ப பிரச்சினையையே குறிக்கின்றது என அவர்கள் தெரிவித்தனர்.

சாரதி அனுபவசாலி என்பதையும் அவர் தவறு செய்திருக்க முடியாது என்பதையும் ஷாகையே ஏற்றுக்கொண்டார். விசாரணை நடத்தும் அதிகாரிகளின்படி, உத்தர் பங்கா கடுகதி ரயிலின் சேவை பதிவுகள், இந்திய ரயில் சேவையில் உயர் மட்டத்தில் உள்ள 20 பேரில் அவரும் ஒருவர் என்பதை காட்டுகின்றன.

நாளாந்தம் 18 மில்லியன் பயணிகளை ஏற்றிச்செல்லும் 9,000 பயணிகள் ரயில்கள் சேவையில் ஈடுபடும் இந்தியாவில், இந்த அழிவு இரண்டு மாதங்களுக்குள் நடந்த இரண்டாவது சம்பவமாக இருப்பதோடு இந்தவருடம் இதுவரை நடந்த 13 விபத்துக்களில் ஒன்றாகவும் உள்ளது. அமைப்பு முறையின் தோல்விக்கு, மனித தவறுகளை அல்லது தொழில்நுட்ப பிரச்சினைகளை காரணம் காட்டுவது வழமையாகிவிட்டது.

திங்கட் கிழமை நடந்த விபத்தானது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி (யூ.பி.ஏ.) அரசாங்கத்தின் பகுதியாக இருக்கும் ரயில் போக்குவரத்து அமைச்சர் மம்தா பனர்ஜீ மீது குவிமையப்படுத்தப்பட்ட ஒரு சிடுமூஞ்சித்தனமான அரசியல் குற்றச்சாட்டு சூதாட்டத்துக்கு வழி வகுத்தது. மேற்கு வங்காளம் அடுத்த ஆண்டு மாநில சட்டசபைத் தேர்தலை நடத்தவுள்ளது. அதில் ஸ்டாலினிஸ இந்திய கம்யூனிசக் கட்சியின் (சி.பி.எம்.) தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்து பனர்ஜீயின் திரினமூல் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. “நீங்கள் வைத்திருக்கும் அமைச்சர் கவனத்தை வேறு இடத்தில் வைத்திருப்பதால் நாடு அதற்கு விலைகொடுத்து வருகின்றது,” என சி.பி.எம். அரசில் குழு உறுப்பினர் சிதாராம் யசூரி தெரிவித்தார். உண்மையில், இடது முன்னணி அரசாங்கத்தை வெளியேற்றுவதிலேயே அக்கறை காட்டுவதாக அவர் பனர்ஜீயை குற்றஞ்சாட்டினார்.

இதே போல், தேசிய மட்டத்தில் பிரதான எதிர்க் கட்சியாக உள்ள, இந்து மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சியின் (பி.ஜே.பி.) பிரதான பேச்சாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: “மம்தா பனர்ஜீ அவரது அமைச்சில் அக்கறை காட்டுவதில்லை. அவர் பல அமைச்சரவைக் கூட்டங்களைக் கூட புறக்கணித்துள்ளார்.” முன்னதாக பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.ஏ.) அரசாங்கத்தின் பங்காளியாகவும் இருந்த பனர்ஜீ, இதே ரயில் போக்குவரத்து அமைச்சர் பதவியையும் ஏற்றிருந்தார்.

தன் பங்குக்கு பொறுப்பை திசை திருப்ப முயற்சித்த பனர்ஜீ, இந்த விபத்து மாவோவாதிகளின் சதியால் ஏற்பட்டிருக்கலாம் என தான் “சந்தேகிப்பதாக” தெரிவித்தார். மே 28 அன்று, மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஜார்கிரமுக்கு அருகில் நடந்த ஒரு ரயில் மோதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

ரயில் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையாளரின் தலைமையில் விசாரணையொன்று நடத்தப்படும் என ரயில் போக்குவரத்து அமைச்சின் பொது உறவுகள் அதிகாரி தெரிவித்தார். முன்னைய விசாரணைகள் இந்தியாவின் ரயில் போக்குவரத்தில் இடம்பெறும் உயிரிழப்புக்களைக் குறைக்க வழிவகுக்கவில்லை.

திங்கள் நடந்த மோதலின் உடனடி காரணம் எதுவாக இருந்த போதிலும், இன்றியமையாத பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றாக்குறையாக இருப்பதையே அது மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. அனுபவம் மிக்கவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல், ரயில் சிவப்பு சமிக்ஞையை கடந்து சென்றால், அதை தானாகவே நிறுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மோதல் தவிர்ப்பு பொறியை பொருத்தியிருந்தால் இந்த அழிவை தடுத்திருக்க முடியும். “எங்களிடம் அத்தகைய பொறிமுறைகள் கிடையாது. பணமும் பற்றாக்குறையாக உள்ளது” என முன்னால் இந்திய ரயில் போக்குவரத்து சபையின் தலைவர் ஐ.ஐ.எம்.எஸ். ரனா தெரிவித்துள்ளார்.

ரனா குறிப்பிடும் “பணப் பற்றாக்குறை” காங்கிரஸ் தலைமையிலான மற்றும் பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் குற்றத்தை கோடிட்டுக் காட்டுகிறது. அடிப்படை பாதுகாப்பை அலட்சியம் செய்துவந்துள்ள இந்த அரசாங்கங்கள், உயிர் மற்றும் பயணிகளதும் ரயில் ஊழியர்களதும் நலனை விட, வரவுசெலவுத் திட்ட நலனுக்கும் வர்த்தக நலனுக்கும் முன்னுரிமை கொடுத்து வந்துள்ளன.