World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australia: Election slogans spark wave of disgust

ஆஸ்திரேலியா: தேர்தல் கோஷங்கள் வெறுப்பு அலையைத் தூண்டுகின்றன

Nick Beams
21 July 2010

Back to screen version

ஆஸ்திரேலிய கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள்ளேயே, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் முழு அமைப்பு முறையின் வெற்றுத்தன, பயனற்ற தன்மையும் பெருகிய முறையில் அம்பலமாகியுள்ளன.

தாராளவாத தத்துவத்தின்படி, தேர்தல் என்பது பல கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களின் கொள்கைகளை கேட்டு, ஆராய்ந்த பின்னர் “மக்கள்” அடுத்த அரசாங்கம், அதன் திட்டம் பற்றிய தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இந்த “மக்கள் இறைமை” என்னும் கட்டுக்கதை ஏற்கனவே ஜூன்23-24 சதித்திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியான கெவின் ரூட் அவருடைய முதல் வரைகாலத்தை முடிக்கு முன்னரே அகற்றியதில் பாரிய அடியைப் பெற்றது. இப்பொழுது தேர்தல் பிரச்சாரத்திலேயே அது இன்னும் குறைமதிப்பிற்கு உட்படுகிறது.

பிரச்சாரத்தின் ஆரம்ப நாட்களின் மிக முக்கியமான நிகழ்வு முக்கிய கட்சிகள் தங்கள் கொள்கைகள், வேலைத்திட்டம் பற்றி அறிவித்திருப்பதிலும் அதேபோல் சிந்தனைகள், வாதங்கள் ஆகியவற்றின் மோதலிலும் இருக்கவில்லை. மாறாக அலுப்பிலும், வெறுப்புணர்வு அலையிலும், சிலவற்றைப் பொறுத்தவரை கட்சித் தலைவர்கள் கூறும் தொடர்ந்த வெற்றுத்தன கோஷங்களை எதிர்கொண்டுள்ள நேரடியான கோபத்தையும் கொண்டிருந்தது.

கடந்த சனிக்கிழமை கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கிய பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட், 31 நிமிடங்கள் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறைந்தது 39 தடவையாவது “முன்னோக்கிச் செல்லவேண்டும்” என்ற சொற்றொடரை பயன்படுத்தினார்.

திங்களன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இந்த மந்திரத்தை பலமுறை பயன்படுத்தியது பற்றி கேட்கப்பட்டதற்கு கில்லார்ட் மற்றும் தொடர்ச்சியான வெற்றுச் சொற்றொடர்களையே கூறி “முன்னோக்கி செல்லவேண்டும்” என்பது அவருடைய வருங்காலம் பற்றிய நம்பிக்கைத்தன்மை மற்றும் ஆஸ்திரேயாவிற்கு இதற்கு முன்னரைப்போல் அல்லாது இனித்தான் சிறந்த நாட்கள் வரவுள்ளன என்னும் அவர் கருத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.

பிரச்சாரத்திற்கு இவ்விதத்தில் மிகப் பரந்த விரோதப்போக்கு இருப்பது இன்னும் ஆழ்ந்த வழிவகைகளுடைய அடையாளம் ஆகும். இரு கட்சி முறையின் உறுதிப்பாடு பற்றியே பெருநிறுவனச் செய்தி ஊடகங்களின் சில பிரிவுகளில் உள்ள கவலைகளை எழுப்பியுள்ளது. கடந்த சனிக்கிழமை, பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கு முன்பே, Sydney Morning Herald கில்லார்டை “வெற்றுப் பெண்மணி” என்று முத்திரையிட்டது. இதைத்தொடர்ந்து அது திங்களன்று வெளியிட்ட “வெற்றுப் பெண்மணி வெற்று முரசை முழக்குகிறார்” என்னும் தலையங்கத்தை எழுதி இளைஞர்கள் முழுபாராளுமன்ற நடைமுறையில் இருந்தும் அந்நியப்பட்டுவிடுவர் என்று எச்சரித்தது.

“இளைஞர்கள் பயிலும் கல்வி வளாகங்கள் மற்றும் பிற மையங்களில் இருந்து கேட்கப்படும் தகவல்கள் ஆஸ்திரேலியே தொழிற்கட்சி மற்றும் கூட்டணி ஆட்சி இரண்டில் இருந்துமே விலகி, முடிந்தால் பசுமைவாதிகள்புறம் திரும்புகின்றனர்” என்று எழுதியுள்ளது. தொழிற்கட்சியும் பசுமைவாதிகள் கொண்டுள்ள தேர்தல் உடன்பாடுகள் அத்தகைய எதிர்ப்பு இருகட்சி முறை வடிவமைப்பிற்கு ஆதரவாகத் திருப்பப்படுகிறது என்றும், எதிர்ப்புணர்வுகள் விரைவில் இன்னும் அதிக வெளிப்படைத் தன்மையை அடையக்கூடும் என்பதையும் தலையங்கம் எழுதுபவர்கள் அச்சங்களாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதே கருத்துக்கள் திங்களன்று Australian பத்திரிகை தலையங்கத்திலும் கூறப்பட்டன; அதில் “ஆஸ்திரேலியா அதன் சமீபத்திய வரலாற்று காலத்தில் எப்பொழுதும் இருந்ததையும்விட அதன் அரசியல் வர்க்கத்தை விவாதத்திற்கிடமின்றி வெறுப்புணர்வுடன்தான் காண்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது, “பல பிரச்சினைகளில் கட்சிகளுக்கு இடையே ஒரு சென்டிமீட்டர் இடைவெளிகூட இல்லை” என்றும் அது கூறியுள்ளது.

தொழிற்கட்சி அரசாங்கத்தின் நிதிப்பொறுப்பாளர் வேன் ஸ்வானுடன் நடத்திய பேட்டியில், முதுபெரும் செய்தியாளர் Laurie Oakes இப்பிரச்சாரத்தை 1972 கோக் விட்லாம் தலைமையின்கீழ் நடத்திய பிரச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளார். “நேரம் வந்துவிட்டது” என்னும் தொழிற்கட்சியின் கோஷத்தை “மிகச் சிறந்தது” என்று விவரித்த அவர் மேலும், “ஆனால் கோக் விட்லம் தன் ஒவ்வொரு உரையிலும் “நேரம் வந்துவிட்டது”, “நேரம் வந்துவிட்டது”, “நேரம் வந்துவிட்டது” என்று கூறவில்லை, நம் அனைவரையும் சொற்றடர்களையும் கொள்கைகளையும் அறியும் பக்குவம் உடைய அறிவார்ந்த மக்களாகத்தான் நடத்தினார்.” என்று கூறினார்.

இன்றைய தேர்தல் பிரச்சாரம் “நாய்க்குப் பயிற்சி” கொடுக்கும் முறைகளைப் போல் உள்ளன என்று ஒரு வர்ணனையாளர் பொருத்தமாக விவரித்ததைப்போல்தான் உள்ளது.

இந்த வேறுபாட்டின் ஆதாரம் புறநிலைச் சூழலில் உள்ளது. 1972ல் போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றத்தின் கடைசிப் பகுதியில், விட்லாம் மற்றும் தொழிற் கட்சி சமூக சீர்திருத்த வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்தனர். அந்த நடவடிக்கைகளில் எவையும் இலாப முறையின் அஸ்திவாரங்களை சிறிதும் சவாலிடவில்லை, அந்தநோக்கமும் அவற்றிற்குக் கிடையாது, ஆனால் அவை குறிப்பட்ட, மட்டுப்படுத்தப்பட்டவை என்றாலும், தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் முன்னேற வேண்டும் என்பதைப் பிரதிபலித்தன.

1975-75 உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, போருக்குப் பிந்தைய பொருளாதார ஏற்றம் திடீரென முடிவற்கு வந்தபோது, 1972ல் தாராளவாத அரசாங்கம் அகற்றப்பட்டதை தொடர்ந்து முன்னோடியில்லாத வகையில் தொழிலாள வர்க்க எழுச்சி ஏற்பட்டதை நிறுத்தத் தவறியதால், விட்டலம் அரசாங்கமே 1975ல் CIA ஆதரவுடனான சதியால், கவர்னர்-ஜெனரால் செய்யப்பட்ட நிகழ்வில் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டது. இதன் பின் பொருளாதார, அரசியல் நிலைப்பாடுகள் தொடர்ந்து ஆழ்ந்த மாறுதல்களுக்கு உட்பட்டன.

சீர்திருத்த வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு முற்றிலும் மாறான முறையில், 1983ல் பதவிக்கு வந்த ஹாக்-கீட்டிங் தொழிற்கட்சி அரசாங்கம் “பொருளாதார மறுகட்டமைப்புத்” திட்டத்தை தொடங்கி, அமெரிக்காவில் ஜனாதிபதி ரேகன், கிரேட் பிரட்டனில் பிரதம மந்திரி தாட்சர் ஆகியோரின் கீழ் தொடக்கப்பட்ட கொள்கைகளை சர்வதேச அளவில் இயைந்து செயல்படுத்தும் விதத்தில் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைகள் மீது தாக்குதலை நடத்தியது. அப்பொழுது முதல் எந்தக் கட்சியும் சமூக சீர்திருத்த வேலைத்திட்டத்தை முன்வைத்துப் பேசுவதில்லை.

உண்மையில், கடந்த மூன்று தசாப்தங்களாக “சீர்திருத்தம்” என்னும் கருத்துப்படிவமே ஒருவித ஓர்வெல்லிய முறை மாற்றத்தை அடைந்துள்ளது. முன்பு “சீர்திருத்தம்” என்றால் பொது மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தும் கொள்கைகளை குறிப்பிட்டது. அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, இலவச பல்கலைக்கழகப் படிப்பு என்பவை உதாரணத்திற்கு விட்லம் தொடக்கிய இரு முக்கிய கொள்கைகள் ஆகும். இன்று ஓர்வெல்லின் “போர் என்பதுதான் சமாதானம்” கோஷத்தைப் போல், பொருளாரச் சீர்திருத்தம் என்பது இன்னும் கூடுதலான முறையில் சமூகவாழ்வு முதலாளித்துவ சந்தை முறைகளின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிதல் என்றுபோய்விட்டது. இதன் விளைவு சமூக முன்னேற்றங்களைத் தகர்த்தல், தனியார்மயமாக்குதல், முன்பு உறுதியளிக்கப்பட்டிருந்த சமூகநலப் பணிகளுக்கு “பணம் கொடுத்துப் பெறவும்” என்ற கொள்கையை தொடக்கியது என ஆகிவிட்டது.

தொடர்ந்த தடையற்ற சந்தை “சீர்திருத்தங்கள்” கடந்த இரண்டரை தசாப்தங்களாக பலவித சமூகப், பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசியக் கூட்டணியின் விடையிறுப்பு இரு கூறுபாடுகளை உடையது. “எல்லைப் பாதுகாப்பு” என்ற பெயரில், சமூகச் சீற்றத்தை குடியேறுபவர்கள், அகதிகளுக்கு எதிராகத் திருப்புதல், அதே நேரத்தில் பிரச்சார அரசியல் விவாதத்தை பொருளற்ற சிந்தனை உரைகளாகக் குறைத்துவிடுதல் என்று ஏற்பட்டுவிட்டது.

இப்பிரச்சாரத்தில் ஒரு உறுதியான அரசியல் நோக்கம் உண்டு. முதலாளித்துவ முறையின் ஆழ்ந்த உலகளாவிய நெருக்கடிச் சூழ்நிலையில், நிதியச் சந்தைகளும் நிறுவனங்களும் இன்னும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை கோருகையில், முக்கிய கட்சிகள் இரண்டில் எதுவும் தன் உண்மைப் பொருளாதார, அரசியல் செயல்பட்டியல் பற்றி விவாதிக்க முடியாது. பசுமைவாதிகளைப் பொறுத்தவரை, அடுத்த அரசாங்கத்திற்கு அது தொழிற் கட்சியாயினும், கூட்டணியாயினும் “உறுதித்தன்மை” கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் பிரச்சாரம் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை தூண்டியுள்ளது. இது மற்றொரு முக்கியமான அரசியல் வழிவகையைக் குறிக்கிறது. வெற்றுத்தன கோஷங்களை எழுப்புதல், “தனது கட்சியின் கொள்கைக்கு பொருத்தமாக தாம் இருப்பதாக கூறுதலை” தொடர்தல் என்ற உறுதிப்பாடு கில்லார்டினால் முன்னெடுக்கப்பட்ட செயல் அல்ல. இது சொல்லப்போனால் 2007 கெவின் ரூட்டின் தொழிற் கட்சி பிரச்சாரத்திலேயே மையப் பகுதியாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் அது ஹோவர்ட் அரசாங்கத்தை அகற்றும் இயக்கத்தில் உள்ளடங்கி விட்டது.

அப்பொழுது முதல் மூன்று ஆண்டுகளாக மக்களின் உணர்மைக்கு பல தொடர்ச்சியான அதிர்ச்சிகள் கொடுக்கப்பட்டன. ஆஸ்திரேலிய பிரத்தியேகவாதம் என்ற கோட்பாட்டை வளர்க்கும் அனைத்து முயற்சிகளும் ஒருபுறம் இருந்தாலும், உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி மில்லியன் கணக்கான மக்களுக்கு அவர்களுடைய வேலைகள், வாழ்க்கை, ஜனநாயக உரிமைகள், குழந்தைகளின் வருங்காலம் ஆகியவை அவர்கள் கட்டுப்பாடு கொண்டிராத சக்திகளால் அச்சுறுத்தப்படுகின்றன என்பதை உணர்த்த தொடங்கியுள்ளது. இப்பிரச்சினைகள் முடிவில்லாத வெற்றுத்தன கோஷங்களை பலமுறை கூறுவதாலும் தீர்க்க முடியாது என்பதை அறிந்துள்ளனர்.

அவர்கள் கோரும் விடைகள், திவாலய்போன உத்தியோகபூர்வ அரசியல் நடைமுறையில் காணப்பட முடியாது மாறாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் பூகோள ரீதியான பகுப்பாய்வு மற்றும் ஆஸ்திரேலிய தேர்தல் பிரச்சாரத்தில் சோசலிச சமத்துவக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் மூலம்தான் காணப்பட முடியும்.