World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Hundreds killed and wounded in ethnic pogroms in Kyrgyzstan

Unrest destabilizes Central Asian region

கிர்கிஸ்தானில் இனப்படுகொலைகளில் நூற்றுக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டும் காயமுற்றுமுள்ளனர்

மத்திய ஆசியப் பகுதியை அமைதியின்மை ஸ்திரமற்றதாக்குகிறது

By Barry Grey
15 June 2010

Back to screen version

திங்களன்று கிர்கிஸ் இனவழி குண்டர்கள் தொடர்ந்து நான்காம் நாட்களாக தெற்கு கிர்கிஸ்தானில் உஸ்பெக் இனவழியினரை தாக்கியதில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 124 என்றும் காயமுற்றோர் எண்ணிக்கை 1,685 என்றும் உயர்ந்தது.

உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் இறந்தோர் எண்ணிக்கையை 1,000 வரை என்று கூடவும் காயமுற்றோர் எண்ணிக்கையை பல ஆயிரங்கள் எனவும் கூறுகின்றன. திங்களன்று நியூயோர்க் டைம்ஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க குழுவின் செய்தித் தொடர்பாளர் Pierre-Emmanuel Ducruet, மருத்துவமனை பிரேத பரிசோதனை இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், "700 பேருக்கும் மேலாக ஓஷ் நகரில் மட்டும் இறந்தனர் என்றும், "பெரும்பாலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்காக குறைந்தது 3,000 பேராவது மருத்துவ உதவியை நாடி நின்றனர்" என்றும் தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான இனவழி உஸ்பெக்கியர்கள் ஓஷ் மற்றும் ஜலாலாபாத், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து எல்லை தாண்டி உஸ்பெகிஸ்தானில் புகலிடம் நாடிச் சென்றுள்ளனர்.

75,000 உஸ்பெக்கியர்கள் கிர்கிஸ்தானில் இருந்து ஓடிவந்துள்ளனர் என்று உஸ்பெக் அரசாங்கம் கூறுகிறது. இது நாட்டிலுள்ள உஸ்பெக் மக்களில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் ஆகும். உஸ்பெக் எல்லை பக்கத்தில் அகதிகள் முகாம்கள் தீ்டீரென எழுந்துள்ளன. அங்குள்ள செஞ்சிலுவைச் செய்தித் தொடர்பாளர் கருத்துப்படி நிலைமை மிக மோசமாக உள்ளது. வயிற்றுப் போக்கு பல அகதிக் குழந்தைகளிடம் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்னும் ஆயிரக்கணக்கான அகதிகள் எல்லை கடப்பதற்கு போராடுகின்றனர். உஸ்பெக் அரசாங்கம் திங்களன்று அதை மூடிவிட்டது.

தாக்குதல்களின் மையம் ஒஷில் இருந்த ஞாயிறும், திங்களும் ஜலாலாபாத்திற்கு மாறியது. வியாழன் இரவு பூசல் ஓஷில் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இது கிட்டத்தட்ட 225,000 மக்கள் வசிக்கும் கிர்கிஸ்தானில் இரண்டாம் பெரிய நகரம் ஆகும்.

ஆரம்பத்தில் கிர்கிஸ் மற்றும் உஸ்பெக்கிய இனவழியினரும் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் போலிருந்துபோதிலும், ஆனால் மோதல் விரைவில் உஸ்பெக் அண்டை வீட்டாருடன் அலையென மக்கள் தாக்குதலாக மாறியது. முழு உஸ்பெக் பகுதிகளுக்கும் தீ வைக்கப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எஞ்சியிருக்கும் இனவழி உஸ்பெக்கியர்கள் தங்கள் வீடுகளிலேயே முற்றுகைக்கு உட்பட்டுள்ளனர்.

ஞாயிறன்று ஓஷில் வன்முறை குறைந்தபோதிலும், ஜலாலாபாத்தில் உஸ்பெக்கியர்கள்மீது தீ வைத்தல், சுடுவது ஆகியவை பெருகிய முறையில் திங்களன்று பெருகின.

ஜனாதிபதி ரோசா ஒடுன்பயேவா தலைமையில் உள்ள இடைக்கால அரசாங்கம் தெற்கில் ஒழுங்கை மீட்க முடியவில்லை. பொலிஸ், பாதுகாப்புப் படையினர் மற்றும் துருப்புக்கள் பகுதிக்குள் செல்லுமாறு உத்திரவிடப்பட்டுள்ளன. சில உஸ்பெக்கியர்கள் அரசாங்கப் படைகள் தங்கள் வீடுகளையும் வணிகங்களையும் தாக்கியவர்களுக்கு உதவின என்று கூறியுள்ளனர்.

ஒழுங்கை மீட்கவும் தன்னுடைய அரசாங்கத்தைக் காப்பாற்றவும், சனிக்கிழமை ஒடுன்பயேவா பெரும் திகைப்புடன் கூடிய முயற்சியாக, ரஷியாவிடம் அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறு கோரினார். அந்த வேண்டுகோள் பகுதியில் அழுத்தங்களை அதிகரித்தது, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையேயும் அழுத்தங்களை அதிகரித்தது. ரஷிய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் இந்த வேண்டுகோளை, குறைந்தபட்சம் தற்பொழுதைக்கேனும், நிராகரித்தார். ஆனால் அவர் கிரிகிஸ் தலைநகரமான பிஷ்கெக்கிற்கு அருகே உள்ள ரஷிய இராணுவத் தளத்திற்கு கூடுதலாக 300 துணைத் துருப்புக்களை அனுப்பி வைத்தார்.

ரஷிய ஆதிக்கம் கொண்ட CSTO எனப்படும் கூட்டுப் பாதுகாப்பு உடன்படிக்கை அமைப்பின் அவசரக் கூட்டம் திங்களன்று நடத்தப்பட்டதும் இதே போல் துருப்புக்களை அனுப்ப மறுத்து, அதற்குப் பதிலாக இடரில் உள்ள பிஷ்கெக் அரசாங்கத்திற்கு இராணுவக் கருவிகளையும், சாலைப் போக்குவரத்து உதவியும் கொடுத்துள்ளது. CSTO வில் ரஷியா மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளான ஆர்மீனியா, பெலாரஸ், காஜக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான் ஆகியவை இருக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத்துறை திங்களன்று ஒரு ஒருங்கிணைந்த சர்வதேச பிரதிபலிப்பு தேவை என்றும், இதில் அமெரிக்கா, ரஷியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய பாதுகாப்பிற்கும் கூட்டுறவிற்குமான அமைபுப்புட OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான அமைப்பு ஆகியவை இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. வாஷிங்டன் ஒருதலைப்பட்ச ரஷியக் குறுக்கீட்டை விரும்பவில்லை. அது உடனடியாக வியத்தகுமுறையில் கிர்கிஸ்தான்மீது செல்வாக்குச் சமசீர் நிலையை மாற்றிவிடுவதோடு பிஷ்கெக்கிற்கு வெளியே உள்ள அமெரிக்க விமானத் தளத்தை அச்சுறுத்தும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.

கிர்கிஸ்தானில் உள்ள 5.5 மில்லியன் மக்கள் தொகையில், உஸ்பெக்கியர்கள் 15 சதவிகிதம் உள்ளனர். ஆனால் உஸ்பெக்கிஸ்தான் எல்லையில் உள்ள தெற்குப் பகுதிகளில் அவர்கள் கிர்கிஸ் இனத்தவரைப் போலவே எண்ணிக்கையில் சமமாக உள்ளனர்.

வன்முறையின் வெடிப்புக்கான காரணம், பாரிய பொருளாதார கஷ்டங்களும், வறுமையும், பல தசாப்தங்களாக இருக்கும் அடக்குமுறை அரசாங்கங்கள், ஊழல்கள் மற்றும் சிக்கலான அரசியல் நெருக்கடியும்தான். இக்கூறுபாடுகள் அனைத்தும் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்து ஆக்கிரமித்துள்ளதின் விளைவாக ஏற்பட்டுள்ள உறுதிகுலைக்கும் பாதிப்பினால் அதிகமாகியுள்ளன. அதற்கு மனஸ்ஸில் உள்ள விமானத்தளம் அமெரிக்க, நேட்டோ துருப்புக்களுக்கும் விநியோகத்திற்கான மையமான இணைப்பு இடமாக உள்ளது.

அமெரிக்கா கிர்கிஸ்தானில் இராணுவ/உளவுத்துறை நிலைப்பாட்டை அதிகரிக்க முற்பட்டுள்ளது. கடந்தமாதம் பென்டகன் ஒஷ்ஷல் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி மையத்தைக் கட்டுவதற்கு நிறுவனங்கள் ஏலங்கள் கேட்கலாம் என்று தெரிவித்திருந்தது.

சீனாவிற்கும் கிர்கிஸ்தானின் விதியில் பெரும் அக்கறை உண்டு; இந்நாட்டுடன் அது விரிவான எல்லையையும் கொண்டுள்ளது. சீனர்கள் சமீப ஆண்டுகளில் இந்நாட்டுடன் தங்கள் வணிகத்தை விரிவாக்கியுள்ளனர்.

கிர்கிஸ்தான் சிதைந்துபோனால் அது ரஷியா மற்றும் சீனாவிற்குள் பிரிவினைப் போக்குகளுக்கு இனவழி அழுத்தங்களுக்கு எரியுட்டும். அத்துடன் முன்னாள் சோவியத் குடியரசுகளான உஸ்பெக்கிஸ்தான், டாஜிகிஸ்தான் மற்றும் காஜக்ஸ்தானிலும் அத்தகைய உணர்வுகளைத் தூண்டும்

குறிப்பாக 2001 ஆப்கானிய போர் துவங்கியபோது அமெரிக்கா மனஸ் தளத்தை முன்னாள் சோவியத் குடியரசில் நிறுவியதில் இருந்து அமெரிக்காவும் ரஷியாவும் கிர்கிஸ்தான் மீது மேலாதிக்கம் கொள்ளப் போட்டியிடுகின்றன. கிர்கிஸ் அரசாங்கம் கவிழ்ந்து நாடு உடைவது என்பது இரு சக்திகளுக்கும் இடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.

ரஷிய அறிவியல் உயர்கல்விக்கூடத்திலுள்ள Commonwealth of Independent States Institute உடைய துணை இயக்குனர் Zharikhin Vladimir இந்த அமைதியின்மை கிர்கிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால் எதிரொலிக்கும் என்று எச்சரித்தார். "இந்நிகழ்வுகள் பகுதி உறுதிப்பாட்டில் எதிர்மறைச் செல்வாக்கைக் கொள்ளும் என்று அவர் எச்சரித்தார். "கிர்கிஸ்தான் உடையக்கூடும் என்ற வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. தெற்கு கிர்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தானுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஆப்கான் நாட்டு எல்லையும் அருகில்தான் உள்ளது. இப்பகுதி மத்திய ஆசியா முழுவதற்கும் நரம்பு மையம் போன்றதாகும்" என்று சேர்த்துக் கொண்டார்.

இந்த இனவழி வன்முறை ஜனாதிபதி குர்மன்பெக் பாகியேவை உடைய ஆட்சி அகற்றப்பட்ட இரு மாதங்களுக்குள் வந்துள்ளது. அந்த ஆட்சி பியாகெக்கில் அரசாங்க ஊழல் மற்றும் பாவனைப்பொருள்களின் வசதி விகிதங்களில் தீவிர ஏற்றத்தை எதிர்த்து வந்தவை ஆகும். பகியேவிற்குப் பிறகு ஒடுன்பயேவாவின் தலைமையில் ஒரு இடைக்கால அரசாங்கம் பதவியில் உள்ளது.

இடைக்கால அரசாங்கம் நாட்டின் தெற்குப் பகுதியில் கட்டுப்பாட்டை முழுமையாக ஒருங்கிணைத்தது இல்லை. அப்பகுதி அகற்றப்பட்ட ஜனாதிபதி பாகியேவின் வலுவான கோட்டை ஆகும். இங்கு ஓஷ், ஜலாலாபாத் உட்பட பெரும்பாலான கிர்கறிஸ் தொடர்ந்து பாகியேவிற்கு ஆதரவு கொடுப்பதாகக் கூறப்படுகிறது; அதே நேரத்தில் பெரும்பாலான உஸ்பெக்கியர்கள் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றனர்.

ஒடுன்பயேவா ஆழ்ந்த மக்கள் ஆதரவற்ற ஒரு நலிந்த, உட்பூசல்கள் உடைய அரசாங்கத்திற்கு தலைமை தாங்குகிறார். அவரும் அவருடைய ஆதரவாளர்களும் ஏப்ரல் 7ம் திகதி ஒரு புதிய ஜனநாயக காலம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கொண்டுவருவதாக உறுதியளித்து பதவிக்கு வந்தனர். ஆனால் பல காலமாக அவர் அரசியலில் இருப்பவர், 1990களில் அமெரிக்கா, பிரிட்டன் இரண்டிலும் தூதராக இருந்தவர். அப்பொழுது இங்கு ஆட்சி புரிந்தது அமெரிக்கா, பிரிட்டன் இரண்டும் ஆதரவு கொடுத்திருந்த ஆக்கர் அகயேவின் சர்வாதிகார நிர்வாகம் ஆகும். அதன்பின் அந்நாடுகள் பாகியேவை 2005ம் ஆண்டு "துலிப் புரட்சியின்போது" ஆதரித்தன. அது அகயேவை பதவியில் இருந்து அகற்றியது.

அவருடைய கூட்டணிப் பங்காளிகள் இதேபோல் முந்தைய ஊழல் நலிந்த, சர்வாதிகார ஆட்சிகளில் மூத்த தலைவர்களாக இருந்தவர்கள் ஆவர்.

துவக்கத்தில் அக்டோபரில் தேர்தல்களை நடத்துவதாகக் கூறிய இடைக்கால அரசாங்கம் அதை 2011க்கு ஒத்திப் போட்டுள்ளது. ஜூன் 27ம் தேதி ஒடுன்பயேவாவின் ஜனாதிபதிப் பதவி அதுவரை நீடிக்கவும் ஒரு புதிய அரசியலமைப்பு ஏற்கப்பட வேண்டும் என்பதற்கு ஒப்புதல் கொடுக்கவும் தேசிய வாக்கெடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பெலாரசில் நாட்டைவிட்டு நீங்கியுள்ள பாகியேவ்தான் தெற்கில் தூண்டிவிடல், கலகம் ஆகியவற்றைச் செய்கிறார், அதையொட்டி வாக்கெடுப்பு நிறுத்தப்பட்ட அரசாங்கம் கவிழும் என்பதற்காக என்று ஒடுன்பயேவா குற்றம் சாட்டியுள்ளார். பதவியில் இருந்து இறக்கப்பட்ட ஜனாதிபதி இதை மறுத்துள்ளார். ஆனால் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கடந்த வியாழனன்று இனவழி உஸ்பெக்கியர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரத் தலைமையைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் இனவழிப் பூசல்கள் சற்று குறைந்த அளவில் பாகியேவின் சொந்தப் பகுதியான ஜலாலாபாத்தில் வெளிப்பட்டன. இனவழி கிர்கிஸ்காரர்கள் உஸ்பெக்கியர் பெரும்பாலும் கற்கும் ஒரு பல்கலைக் கழகத்தைத் தாக்கிய போது, இருவர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர். அதற்குச் சில நாட்களுக்கு முன்பு பாகியேவின் ஆதரவளார்கள் ஒஷ்ஷிலும் ஜலாலாபாத்திலும் அரசாங்கக் கட்டிடங்களைக் கைப்பற்றி, இடைக்கால அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்கும் உள்ளூர்த் தலைவர்களை வெளியேற்றினர். பின்னர் அரசாங்கப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்

கிர்கிஸ்தானில் நடைபெற்ற பெரும் சோக நிகழ்வுகள் ஆப்கானிஸ்தானத்திலும் பாக்கிஸ்தானிலும் அமெரிக்கா நடத்தும் காலனித்துவவகை ஆக்கிரமிப்பு, மற்றும் 1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது ஆகியவற்றின் விளைவுகள் ஆகும். அது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் மேலை ஏகாதிபத்திய ஆதரவுடன் நடந்தேறின.

சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில், ஸ்ராலினிச அமைப்பின் தேசியவாதக் கூறுபாடுகள் கிர்கிஸ்தானிலப் தனியாகப் பிரிந்து சுதந்திரத்தை நிறுவ முயன்றபோது (அது 1991ல் வந்தது), இனவழி வன்முறை ஒஷ்ஷில் வெடித்தது. சோவியத் துருப்புக்கள் ஒழுங்கை மீட்பதற்குள் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்

சோவியத் ஒன்றியம் உடைந்தது, முதலாளித்துவ மீட்பு நடந்தது ஆகியவை கிர்கிஸ்தானில் அளவிடமுடியாத பேரழிவை ஏற்படுத்தின. முன்னாள் சோவியத் குடியரசின் பொருளாதாரம், சோவியத்தின் பிற பகுதிகளுக்கு அதன் பொருட்கள் 96 சதவிகிதத்தை ஏற்றமதி செய்திருந்தது சரிந்து போயிற்று. இப்பொழுது கிர்கஸ்தான் மிக வறிய நிலையில் உள்ளது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி காஜக்ஸ்தானுடையதில் ஒன்பதில் ஒரு பங்குதான். ஒரு வேலை என்று கிடைக்கும் அதிருஷ்டம் உடையவர்களின் சராசரி அன்றாட ஊதியம் $5 தான்.