World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

More refugees drown trying to reach Australia

ஆஸ்திரேலியாவை முயற்சி செய்து அடைகையில் மேலும் பல அகதிகள் மூழ்கின்றனர்

By Mike Head
22 June 2010

Back to screen version

ஆஸ்திரேலியாவிற்கு அகதிகள் தப்பி ஓடிவருவதைத் தடுக்கும் நோக்கம் கொண்ட ரூட் அரசாங்கத்தின் கொடூரமான “எல்லைப் பாதுகாப்பு” நடவடிக்கைகள், இம்மாதத் துவக்கத்தில் மேலும் 12 தஞ்சம் நாடுவோர் இறப்புக்களுக்கு நேரடியாக வழிவகை செய்துள்ளன. 2007ல் தொழிற் கட்சி அரசாங்கம் பதவியை ஏற்றதில் இருந்து கிட்டத்தட்ட 170 பேர் ஆஸ்திரேலியாவை அடையும் முயற்சியில் இறந்துவிட்டதாக இப்பொழுது கருதப்படுகிறது.

சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களாவர். ஜூன் 7 அன்று, அவர்கள் ஒரு சிறிய படகில் இந்தோனேசியத் தீவான பாடமிற்கு அருகே ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல இருந்த பெரிய கப்பலின் சேர முயற்சித்த வேளையில் மூழ்கி இறந்தனர்.

இறந்தவர்களில் இருவர் மற்றும் தப்பிப் பிழைத்த இரண்டு பேர்களும் ஜெயா லெஸ்டாரி என்னும் மரப்படகில் இருந்தவர்கள் ஆவர். இது இந்தோனேசியப் படைகளால் ஜாவன் துறைமுகமான மெரக்கிற்கு கடந்த ஆண்டு ஆஸ்திரேலியப் பிரதம மந்திரி கெவின் ரூட்டின் வேண்டுகோளின்படி இழுத்துச் செல்லப்பட்டிருந்தது. மூழ்கிய இருவர்களில், ஒருவர் 24 வயது எஃகு பொருத்துபவர் டபுள்யூ பகீரதன் மற்றவர் 27 வயது திலீப் குமார் ஆவர். இருவரும் ஐ.நா.வினால் அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கூட ஏற்கனவே மலேசியாவில் மூன்று ஆண்டுகளாக இடரோடு வாழ்ந்தனர்.

ரூட், இந்தோனிசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனாவை, ஜெயா லெஸ்டாரி மரப்படகை வழிமறித்து அதில் இருந்த 254 இலங்கைத் தமிழர்களை ஆஸ்திரேலியாவிற்கு பயணிப்பதைத் தடுக்கும் விதத்தில் காவலில் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், அவர்கள் 1951 அகதிகள் உடன்படிக்கையின்படி, குற்ற விசாரணையில் இருந்து தப்பியோடும் உரிமையைக் கொண்டிருந்தனர். அகதிகளில் பலரும் ஆறுமாத காலம் மெரக்கில் ஒரு கப்பல் மேல்தளத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும்கூட, எந்தத் தமிழர்களுக்கும் இறங்குவதற்கு ரூட், அனுமதியை மறுத்தார்.

ஏப்ரல் மாதத்தில் இருந்து ரூட் அரசாங்கம், அகதிகளுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. இதில் இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தஞ்சம் கோருவோரின் விண்ணப்பங்கள் குறைந்தது முறையே மூன்று, ஆறு மாத காலத்திற்குத் தற்காலிகமாக ஏற்கப்படுவதை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தத் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் இப்பொழுது இந்து சமுத்திரத்தில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பகுதியான, அதிகமாக தடுத்துவைக்கப்பட்ட மக்களை கொண்டுள்ள கிறிஸ்துமஸ் தீவில் மேற்கு, வடக்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்துப்பட்டுள்ள முகாம்களுக்கு மாற்றப்படுகின்றனர்.

அகதிகளை கொண்டு செல்லும் மாலுமிகளுக்கு சிறைத் தண்டனையை அரசாங்கம் 20 ஆண்டு காலம் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் மீது “மனிதர்களைக் கடத்துபவர்கள்” என்ற முத்திரையும் இடப்பட்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அகதிகள் படகில் ஏறிவர உதவும் எவருக்கும் 10 ஆண்டுகால சிறைவாசம் விதிக்கப்படுகிறது. மே மாதம் வெளிவந்த பட்ஜெட்டில், அரசாங்கம் 1.2 பில்லியனை டொலர்களை எட்டு புதிய ரோந்துப் படகுகளை, அகதிகளை இடையில் தடுப்பதற்காக வாங்க ஒதுக்கியது. சமீபத்திய இறப்புக்கள் விளக்குவது போல், இந்த நடவடிக்கைகள் இன்னும் அதிக சோகங்களைத்தான் அதிகரிக்கும்.

இந்த மாதத்திற்கு முன்பு வெளிவந்த செய்தி ஊடகத் தகவல்கள் கடந்த அக்டோபரில் 100 அகதிகள் மூழ்கியிருக்கலாம் என்ற அச்சத்தைக் வெளிக்காட்டின. அக்டோபர் 2ம் திகதி, 100 பேரைக் கொண்ட ஒரு படகு ஒன்று இந்தோனிசியத் துறைமுகம் ஒன்றிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய சுங்க, எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் கூற்றுப்படி, அதற்குப் பின் அதைப்பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை. படகில் இருந்தவர்களுடைய உறவினர்கள், காணாமற் போனவர்களிடம் இருந்து தகவல் ஏதும் வராததால் படகு மூழ்கிப்போயிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

தொழிற் கட்சியின் கீழ் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம், குறைந்தது ஒன்பது பேர் இந்தோனேசியத் தீவான Rote ற்கு அருகே, அவர்கள் வடமேற்கு ஆஸ்திரேலிய கடலோரப் பகுதியில் இருந்து 400 கி.மீ. தொலைவிலுள்ள குன்றுத்திட்டான Ashmore Reefக்கு பயணிக்க முயற்சித்தபோது மூழ்கினர். இந்தோனேசிய பொலிஸ் இறந்தவர்களுள் ஒரு 9 வயது சிறுவனும் இருந்ததாகக் கூறினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு மேலும் ஒரு 9 பேர் தென் சீனக் கடலில் இறந்தனர். அதில் தப்பிப்பிழைத்தவர் 14 வயதுடைய Aqeel Qirkeel என்று மலேசிய கடற்பிரிவு செயலாக்க அதிகாரிகள் கூறினர்.

ஏப்ரல் 2009 லேயே, ஆஸ்திரேலியக் கடற்படை Ashmore Reefக்கு அருகே ஒரு படகை இடைமறித்தபோது, அது வெடித்ததில் ஐந்து ஆப்கானிய ஆண்கள் இறந்து போயினர். ஓராண்டிற்குப் பிறகு, இந்த சம்பவம் பற்றிய விசாரணை படகை முடக்கும் திட்டத்தின் எதிர்பாராத விளைவினால் மக்கள் இறந்துபோயினர் என்ற முடிவிற்கு வந்ததோடு, படகில் இருந்த 47 பயணிகளுக்கு, இந்தோனேசியாவிற்கு மீண்டும் உடனே திரும்ப வேண்டும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது.

2009 மே மாதம், ஒரு இந்தோனேசியப் படகில் 19 பேர்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றபோது ஹாலங் தீவிற்கு அருகே படகு மூழ்கியதில் இறந்து போயினர். கடந்த நவம்பர் மாதம், 12 இலங்கையர்கள் சென்ற படகு இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகோஸ் தீவுகளுக்கு அருகே கவிழ்ந்தபோது மூழ்கினர். கடந்த மாதம் மற்றொரு ஐந்து பேர் கோகோஸ் தீவுகளுக்கு அருகே அவர்களுடைய படகில் எரிபொருள், உணவு, நீர் ஆகியவை இல்லாததால் இறந்து போயினர்.

இவை அறியப்பட்டுள்ள பேரழிவுகள் மட்டும்தான். இம்மாதம் ஆரம்பத்தில், இந்தோனேசியாவில் உள்ள ஒரு ஆப்கானியரான முகம்மது டாக்கியினுடைய சொந்தப் படகு குபாங்கிற்கு அருகே தடுமாறியதால் 3 பேர்கள் கொல்லப்பட்டதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன “7.30 அறிக்கைக்கு'' தெரிவித்தார். “என்னுடைய நண்பர்கள் பலர் கடலில் இறந்துவிட்டனர்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதற்கு ரூட் அரசாங்கத்தின் விடையிறுப்பானது, முந்தைய ஹோவர்ட் அரசாங்கத்தைப் போல் இந்த மரணங்களை பயன்படுத்திக் கொள்ளுவது ஆகும். ஹோவர்ட் அரசாங்கம் ஒரு ஆபத்திற்குட்பட்ட படகில் இருந்து 353 பேர்கள் மூழ்கியதை அடுத்து, அதனை SIEV X (Suspected Illegal Entry Vehicle X or unknown) என்று கூறி பூசி மெழுகியது. அக்டோபர் 2001ல் இந்தப் பேரழிவானது “படகுகளை நிறுத்திவிடும்” என்ற நம்பிக்கையை கொண்டுவரும் என்று வானொலியில் அது ஒலிபரப்பியது. SIEV X எப்படி இறுக்கமான ஆஸ்திரேலிய இராணுவக் கண்காணிப்பு இருக்கும் பகுதியில் மூழ்கியது என்பது பற்றி விடையளிக்கப்படாத பல வினாக்கள் உள்ளன.

சமீபத்திய பேரழிவிற்கு சற்று முன்னதாக ரூட் அரசாங்கம் ஒரு மூழ்கிய நபரைக் காட்டி தஞ்சம் கோருவோரை வரவேண்டாம் எனக்கூறும், மன உறுதியிழக்கப்பண்ணுகிற குடியேற்ற திணைக்களத்தின் வீடியோ விளம்பரங்களை YouTube ல் வெளியிட்டது. அதில் உள்துறை மந்திரி பிரெண்டன் ஓ’கானரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மக்கள் கடத்தலின் விளைவாக எந்த உயிரிழப்பு ஏற்பட்டாலும் அது வருத்தம் அளிப்பதுதான். அதே நேரத்தில் அத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கோள்ள நினைப்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையும் ஆகும்'' என்றார்.

அகதிகள் படகுகளை நிறுத்துவதற்கு “இந்தோனேசியத் தீர்வின்” ஒரு பகுதியாக அரசாங்கம் இந்தோனேசியாவில் படுமோசமான நிலைமையடைந்துவரும் தடுப்புக்காவல் மையங்களுக்கு நிதியளிக்கிறது. சிங்கப்பூருக்குத் தெற்கே பின்டான் தீவில் உள்ள டான்ஜுங் பினாங் மையத்தில் உள்ள தடுப்புக்காவலில் இருப்பவர்கள் கடந்த வாரம் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, இந்தோனேசியக் காவலர்கள் இயந்திரத் துப்பாக்கியை பயன்படுத்தி அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்தினர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தடுப்புக் காவலில் இருப்பவர்களில் 122 பேர்கள் ஜெயா லெஸ்டாரி அகதிகள் ஆவர்.

ஆஸ்திரேலியாவின் குடியேற்றத்துறை மந்திரி Chris Evans இதுபற்றி தன்னுடைய அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என்றார். ஆனால், இதில் தங்கள் பொறுப்பைக் கைகழுவி விட்டார். “நாங்கள் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இந்த தடுப்பு மையங்களின் நிர்வாகம் உயர்தரத்தில் இருக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுக்கிறோம், ஆனால் இறுதியில் இது அவர்களுடைய பொறுப்பு” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியப் பகுதியில், அரசாங்கம் மீண்டும் முன்பு ஹோவர்ட் அரசாங்கத்தில் மிக மனிதாபிமானமற்ற முறையில் இருந்த முகாம்களைத் திறந்துள்ளது. வடமேற்கு ஆஸ்திரேலியாவில் குர்ட்டின் விமானத் தளத்தின் அருகே இது உள்ளது. குழந்தைகள் உட்பட, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள லெனோரா மற்றும் குயின்ஸ்லாந்தில் உள்ள டால்பி போன்ற பயன்படுத்தப்படாத சுரங்க முகாம்களுக்கு அகதிகளை மாற்றுவதற்கு தயாரிப்புக்கள் நடக்கின்றன. ஹோவர்ட் அரசாங்கத்தின் மற்றொரு கொடூரம் திரும்பி விட்டது. அதாவது, மனம் தளர்ந்து நம்பிக்கையிழந்த மக்களை தொலைதூர முகாம்களில் காலவரையற்று வைத்திருப்பது என்பதே அது.

தொழிற் கட்சியின் தேர்தல் உறுதிமொழிகளில் குழந்தைகளை காவலில் வைப்பது முடிவிற்கு வரும் என்று கூறப்பட்டிருந்தாலும், இப்பொழுது ஹோவர்ட் அரசாங்கத்தின் கடைசி நாட்களில் இருந்ததைவிட அதிகக் குழந்தைகள் காவலில் உள்ளன. மே 21 வரை, தடுப்பு மையங்களில் 3,612 தஞ்சம் கோருவோர் உள்ளனர். அவர்களுள் 452 பேர் குழந்தைகள் ஆவர்.

இந்த வாரம் ரூட் அரசாங்கம் அதன் கடுமையான ஆட்சிக்கு துவக்க “வெற்றிகள்” வந்துள்ளதாகக் கூறியது. அதாவது, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அகதிகள் வருவதை முடக்கியதன் பின்பு படகு வரத்துக்கள் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் குறைந்துவிட்டன என்றும், அகதிகளின் விசா விண்ணப்பங்கள் நிராகரிப்பு விகிதம் அதிகரித்துள்ளது என்றும் ஈவான்ஸ் பெருமை பேசிக் கொண்டார். 40 சதவிகித ஆப்கானியர்கள் இப்பொழுது விசா மறுக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.

கேலிக்கிடமான முறையில் அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நிலைமை முன்னேறி வருகிறது என்று கூறுகிறது. அங்கோ அமெரிக்கத் தலைமையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் தமிழர்கள், இராஜபக்ஷவின் அரசாங்கம் கடந்த ஆண்டில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது மேற்கொண்ட இராணுவ வெற்றிக்குப் பிறகு துன்புறுத்தல்களில் இருந்து தப்புவதற்காக தப்பியோடுகின்றனர். தொழிற் கட்சி அரசாங்கம், இந்த இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறைக்கு நேரடியான பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கப்படைகள் ஆக்கிரமித்துள்ளதற்கு இது ஆதரவைக் கொடுத்து துருப்புக்களையும் அனுப்பியுள்ளது. விடுதலைப் புலிகள் மீது நடந்த தாக்குதல்களை மௌனமாக ஆதரித்ததோடு, இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து அகதிகள் செல்லும் படகுகளைத் தடுக்கிறது.

உள்நாட்டில், ரூட் அரசாங்கம் லிபரல் எதிர்க்கட்சியுடன் போட்டியிட்டு தஞ்சம் கோருபவர்களை “சட்டவிரோதம்“ எனக்கூறி அவர்கள் நுழைவதைத் தடுக்கிறது. இரு கட்சிகளும் இப்பொழுது குடியேற்ற எதிர்ப்பு தேசவெறியைத் தூண்டுகின்றன. இதற்கு காரணம், தொழிற்கட்சி மற்றும் லிபரல் அரசாங்கங்களின் தொடர்ச்சியான கொள்கையினால் விளைந்த வேலையின்மை, மோசமடைந்துவரும் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு எதிராக வளர்ச்சியடைந்துவரும் அதிருப்தியை திசை திருப்புவது ஆகும்.