World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German parliament approves new Afghanistan strategy

புதிய ஆப்கானிய மூலோபாயத்திற்கு ஜேர்மனியப் பாராளுமன்றம் ஒப்புதல்

By Peter Schwarz
1 March 2010

Back to screen version

பெப்ருவரி 26 வெள்ளியன்று ஆப்கானிஸ்தானில் இராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படலாம் என்று ஜேர்மனிய பாராளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை வாக்களித்தது. வருங்காலத்தில் ஹிந்து குஷ் பகுதியில் நிலைநிறுத்தப்படும் படையினரின் எண்ணிக்கை தற்போதைய 4,500 என்பதில் இருந்து 5,350 என்று உயர்த்தப்படும். இதைத்தவிர, கணிசமாக பொலிசார் ஆப்கானிஸ்தான் உள்ளூர் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்க அனுப்பப்படுவர்.

இன்னும் ஓராண்டிற்கு ஆப்கானிஸ்தானில் படைகளை நிலைநிறுத்துவது என்று முடிவிற்கு பாராளுமன்றம் வந்தபின் அது அமெரிக்க அரசாங்க அரசாங்கத்தின் புதிய ஆப்கானிஸ்தான் மூலோபாயத்திற்கு அதன் ஒப்புதலைக் கொடுத்தது. இந்த மூலோபாயத்தின் மையக்கருத்து போரைப் பெரிதும் விரிவாக்கம் செய்து ஆக்கிரமிப்புப் படைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது ஆகும். ஆக்கிரோஷமான இராணுவ நடவடிக்கைகளும் எழுச்சியாளர்களை மிருகத்தன வன்முறையை பயன்படுத்தி மண்டியிட வைப்பதற்கு அதிகரிக்கப்படும். இதன் விளைவாக பொதுமக்கள், இராணுவ இறப்பு எண்ணிக்கை அதிகமாகும்.

பெப்ருவரி மாத தொடக்கத்திலேயே, பாராளுமன்றம் ஆப்கானிய நடவடிக்கையை மறு வரையறை செய்ய முடிவெடுத்தது. சமாதானத்தை பாதுகாக்க, உறுதிப்படுத்த என்ற பேச்சுக்கள் இப்பொழுது இல்லை. மாறாக "ஒரு சர்வதேசத் தொடர்பற்ற ஆயுதமேந்திய பூசல்" எனப்படுகிறது. இது உள்நாட்டுப்போருக்கு ஒரு அலங்காரப் பெயராகும். இதன் பொருள் ஜேர்மன் படையினர் சர்வதேச சட்டத்தின்கீழ் உள்ளடங்கி ஆயுதமற்ற குடிமக்களை சில சூழ்நிலையில் கொல்லலாம் என்பது ஆகும். இதுவரை அவர்கள் அசாதாணமான சூழ்நிலையில்தான் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று இருந்தது.

போர் விரிவாக்கம் ஜேர்மனிய மக்களில் மூன்றில் இரு பகுதியினரால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றாலும், பாராளுமன்றம் அதற்கு அதிகப் பெரும்பான்மையில் ஒப்புதல் கொடுத்துள்ளது. 506 பிரதிநிதிகளில் 429 பேர் புதிய மூலோபாயத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 46 பேர் வாக்குப் போடவில்லை, 111 பேர் அதை எதிர்த்து வாக்களித்தனர். ஆளும் கட்சிகளான யூனியன் கட்சிகள் (CDU/CSU) மற்றும் தாராளவாத ஜனநாயக் கட்சி (FDP) தவிர பெரும்பாலான சமூக ஜனநாயகக் கட்சி (SPD) உறுப்பினர்கள் ஆகியோரும் புதிய நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்தனர். பசுமைக் கட்சியின் தலைமை அதன் பிரிவு வாக்களிக்க வேண்டாம் என்று பரிந்துரைத்தது, இடது கட்சி இதை எதிர்த்தது.

சமூக ஜனநாயகக் கட்சியின் நிர்வாகக் குழு, கட்சியில் சில தீவிர வேறுபாடுகள் இருந்தாலும், அதன் பாராளுமன்ற பிரிவை ஒருமனதாக சட்டத்திற்கு ஆதரவு தருமாறு பரிந்துரைத்தது. முன்னாள் வெளியுறவு மந்திரி பிராங்க் வால்ட்டர் ஸ்ரைன்மையர் இதை நியாயப்படுத்தும் விதத்தில் அரசாங்கம் சமூக ஜனநாயக கட்சியுடன் பல விதங்களில் ஒத்த கருத்தை உடையது என்று கூறினார். "முன்னோக்கில் மாற்றம் ஏற்கப்பட்டுள்ளது" என்றார் அவர். பொதுமக்கள் வாழ்வை மறுகட்டமைக்கும் முயற்சிகள் இருமடங்காக்கப்படும், 2011ல் இராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும்.

உண்மையில் சமாதானத்தை அடைவதைவிட போரை தொடுக்கும் முயற்சிகள்தான் இருமடங்காகியுள்ளன. திரும்ப படைகளை பெறுவதற்கு குறிப்பிட்ட தேதி ஒன்றும் நிச்சயிக்கப்படவில்லை. பாராளுமன்ற வாக்கிற்கு முன்பு, வெளியுறவு மந்திரி தாராளவாத ஜனநாயக் கட்சியின் கீடோ வெஸ்டர்வெல்ல மீண்டும் ஜேர்மனிய இராணுவம் திரும்புவதற்கு தேதியை குறிப்பிட மறுத்துவிட்டார். வெள்ளியன்று அவர் Südwestrundfunk வானொலி நிலையத்திடம் அத்தகைய அறிவிப்பு பயங்கரவாதிகளுக்கு பொறுத்திருந்து தாக்குவதற்கு அவகாசம்தான் கொடுக்கும் என்று கூறினார்.

பாதுகாப்பு மந்திரி கார்ல் தியோடர் ஜு கூட்டன்பேர்க்கும் படைகளை திரும்பிப் பெறுவதற்கு உறுதியான தேதி என்பதை எதிர்த்தார். "ஆப்கானிஸ்தானில் குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் ஜேர்மனிய படையினர் இருக்க மாட்டார்கள் என்று நாம் கூறுவது, "நல்லது, நேரம் வரும்போது நாம் கடிகாரத்தை திருப்பி வைக்கலாம்" என்று காத்திருப்பவர்களுக்கு ஆதரவாகத்தான் போய்விடும்" என்று புதனன்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறினார்.

நேட்டோவின் பொதுச் செயலர் Fogh Rasmussen ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பற்றிய ஜனவரி மாத இறுதியில் நடைபெற்ற லண்டன் மாநாட்டில், "அதிகாரத்தை மாற்றுவது என்பது ஒன்றும் "வெளியேறுவதற்கு" மறுபெயர் இல்லை" என்று வலியுறுத்தினார்.

"ஆப்கானிய மக்கள் நாம் விரைவில் அகன்றுவிடுவோம் என்று அஞ்சவில்லை. நாமும் அவ்வாறு செய்ய மாட்டோம்." என்றார் அவர்

ஜேர்மனிய பாராளுமன்றம் போர் விரிவாக்கத்திற்கு ஒப்புதல் கொடுத்தது அமெரிக்கா, நேட்டோ ஆகியவற்றிற்கு ஒரு நெருக்கடி நேரத்தில் வந்துள்ளது. ஐரோப்பாவிற்குள் எதிர்ப்பு காரணமாக போர் முன்னணி சரியத் தொடங்கியுள்ளது. கடந்தவாரம்தான், ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2,000 துருப்புக்கள் இன்னும் ஓராண்டு அங்கு நீடிக்க அனுமதிக்கப்பட்டால், தாங்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதியை முறிக்க நேரிடும், அதற்குத் தயாராக இல்லை என்று சமூக ஜனநாயக வாதிகள் கூறியதால் நெதர்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது. இதன் விளைவாக நேட்டோவிற்குள் மற்ற நாடுகளும் படைகளை திரும்பப் பெறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது.

எனவே கடந்த சில நாட்களில், அமெரிக்க அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஐரோப்பிய நேட்டோ உறுப்பினர்கள்மீது ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் துருப்புக்களை அனுப்பி இன்னும் வலுவுடன் இராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுமாறு அழுத்தம் கொடுத்தனர். ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை 1,000 ஐவிட அதிகமாகிவிட்டது. இப்பொழுது அமெரிக்க அரசாங்கம் போர் சுமையில் அதிக பங்கை தங்கள் உள்நாட்டில் இருக்கும் எதிர்ப்பை சமாதானப்படுத்தும் வகையில் பிற நாடுகள்மீது சுமத்தப்பார்க்கிறது.

பெப்ருவரி 23ம் தேதி வாஷிங்டனில் தேசிய பாதுகாப்புப் பல்கலைக் கழகத்தில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் கூறினார்: "பல நூற்றாண்டுகள் நீடித்த அழிவு தந்த போர் முறைக்குப் பின் ஐரோப்பா அமைதி வழியைக் கைக்கொண்டது கடந்த நூற்றாண்டின் வெற்றிகளில் ஒன்றாகும்" என்றார் அவர். "ஆனால், நான் முன்பே கூறியதுபோல், ஒரு திருப்புமுனையை அடைந்துள்ளோம், கண்டமானது வேறு திசையில் மிக அதிகமாக வந்துவிட்டதே அது என்று நான் நம்புகிறேன். கேட்ஸ் தொடர்ந்தார்: "பொது மக்கள் மற்றும் அரசியல் வர்க்கத்தில் ஏராளமான பிரிவுகளானது இராணுவ சக்தியுடன் இருக்கும் ஆபத்துக்கள் பற்றி வெறுப்புற்ற நிலையில், ஐரோப்பா இராணுவமயமற்றதாக இருத்தலானது 20-ம் நூற்றாண்டில் ஒரு பெரும் நன்மை நிலையில் 21-ம் நூற்றாண்டில் உண்மையான பாதுகாப்பு, நீடித்த சமாதானத்தை அடைவதற்கு ஒரு தடையாகிவிட்டது."

கடந்த வாரம் பேர்லினில், அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகியவற்றிற்கான சிறப்பு பிரதிநிதி ரிச்சர்ட் ஹோல்ப்ரூக் இன்னும் குறைந்தது 2,000 பேராவது ஆப்கானிய பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பதற்குத் தேவை என்று எச்சரித்தார். "ஜேர்மனி இதைப் பற்றிச் சிந்தித்து இன்னும் உறுதியான பங்களிப்பை செய்யும் என்று நினைக்கிறேன்." என்று அவர் கூறினார்.

புதிய கட்டளையை ஏற்றவிதத்தில், ஜேர்மனிய அரசாங்கம் வாஷிங்டனில் இருந்து அழுத்தத்திற்கு இடமளித்துவிட்டது. ஏன் இவ்வாறு நிகழ்ந்தது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

முதலில், ஜேர்மனிய அரசாங்கம் மத்திய கிழக்கில் மூலோபாயப் பகுதியில் அமெரிக்க கட்டுப்பாடு இழப்பதை விரும்பவில்லை. ஐரோப்பாவிற்கு எரிபொருள் விநியோகிப்பதில் இப்பகுதி கணிசமான முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. போர் ஏகாதிபத்திய இலக்குகளினால் வழிகாட்டப்படுகின்றன என்றாலும், அல்லது அதனால்தான் என்று வைத்துக் கொண்டாலும், ஜேர்மனி கொள்ளையில் ஒரு பங்கினை பெற விரும்புகிறது.

இரண்டாவதாக, பேர்லின் நேட்டோவிற்குள் உடைவு அல்லது நெருக்கடி வந்துவிடக் கூடாது என்று அஞ்சுகிறது. சர்வதேசப் பொருளாதார, நிதிய நெருக்கடியின் விளைவாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே உள்ள அழுத்தங்கள் தீவிரமாகியுள்ளன. ஐரோப்பாவிற்குள்ளேயும் பொருளாதார முரண்பாடுகள் தீவிரமாகிவிட்டன. இவை அமெரிக்காவுடன் ஒரு அரசியல் மோதலால் அதிகமானால், ஜேர்மனி தனிமைப்படுத்தப்படுமோ என்று அஞ்சுகிறது. ஈராக் போரின்போது, வாஷிங்டன் தன்னுடைய நோக்கத்திற்காக ஐரோப்பாவிற்குள் இருக்கும் அழுத்தங்களை எப்படி பயன்படுத்தவது என்பதை நன்கு காட்டியது. பல ஐரோப்பிய வர்ணனையாளர்கள் ஏற்கனவே வோல் ஸ்ட்ரீட் ஊக வணிகர்கள்தான் கிரேக்க நெருக்கடிக்குக் காரணம், யூரோவின் சரிவிற்குக் காரணம் என்று கூறியுள்ளனர்

மூன்றாவதாக இராணுவவாதத்திற்கு சமூக நலன்களைத் தவிர்ப்பதற்கும் இடையே நெருக்கமான உறவு உள்ளது. ஜேர்ரமனிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அவற்றின் வரவு-செலவு திட்ட பற்றாக்குறைகளை சமூகநல செலவுகளைக் குறைத்து ஈடுகட்ட வேண்டும் என்றும் இதையொட்டி வரும் எதிர்ப்பிற்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும் கடுமையாக வலியுறுத்துகிறது. எனவே ஆப்கானிய போர் எதிர்ப்பிற்கு எந்தச் சலுகைகளையும் அது கொடுக்க தயாராக இல்லை. அவ்வாறு செய்தால் மக்களுடைய எதிர்ப்பிற்கு ஊக்கம் கொடுத்தது போல் ஆகும்.

சமூக ஜனநாயக் கட்சி போர் வெறியர்களுக்கு ஆதரவு கொடுப்பதில் குறிப்பிடத்தக்க வகையில் இழிவடைந்து உள்ளது. புதிய ஆப்கானிய நிலைப்பாட்டை ஏற்றவிதத்தில், இது போரை எதிர்க்கும் மக்களுடைய முதுகில் குத்துவது மட்டும் இல்லாமல், சமூகநலக் குறைப்புக்களுக்கு எதிர்ப்பு காட்டுபவர்களையும் குத்துகிறது. சமூக ஜனநாயக் கட்சி பாராளுமன்ற பிரிவின் தலைவர் பிராங்க் வால்ட்ர் ஸ்ரைன்மையர் ஆப்கானிஸ்தானில் இராணுவ விரிவாக்கத்திற்கும் Hartz IV சீர்திருத்தத்திற்கும் (வேலையின்மை நலன்கள்) தன் இசைவைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் அது திருத்தப்பட வேண்டிய தேவைக்கு உட்பட்டது. அவர் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை இதை முன்னிட்டுக் கொடுத்துள்ளார். CDU/FDP கூட்டணிக்குள் பூசல் தீவிரமாக இருப்பதை அடுத்து, ஸ்ரைன்மையர் பெரும் கூட்டணி மீண்டும் அமைப்பதின் மூலம் அரசாங்கத்திற்கு வரலாம் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறார் போலும்.

பசுமை வாதிகள் மற்றும் இடது கட்சிகள் சமூக ஜனநாயக் கட்சிக்கு ஆதரவைக் கொடுக்கின்றன. வாக்களிப்பில் கலந்து கொள்ளாததில் இருந்து, தங்கள் மட்டங்களில் இருந்து அதிக அழுத்தம் வந்தபோதிலும், பசுமைவாதிகள் போருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தயாரில்லை என்று தெளிவாக்கினர். 1998ல் கூட்டாட்சி அரசாங்கத்தில் கொசவோ போருக்கு இணங்கியதால்தான் பங்கு பெற முடிந்தது; மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஆளும் கட்சி என்னும் முறையில், ஆப்கானிஸ்தானிற்கு ஜேர்மனிய இராணுவத்தை அனுப்பியது. இதற்கிடையில் அவர்கள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் கூட்டணி அமைக்க வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தில் (கூட்டாட்சி அளவிலும் முடிந்தால்) முயல்கிறது. எனவே போர் பற்றி தங்கள் நிலைப்பாட்டை மாற்ற இயலாது. எனவே அவர்கள் கோழைத்தனமாக அதைப்பற்றி எந்த உண்மை அறிக்கையையும் வெளியிடுவதில்லை.

போருக்கு எதிராக உத்தியோகபூர்வமாக இடதுகட்சி பேசுவதன் மூலம் தலைப்புக்களை தன்பக்கம் கவனத்தை ஈர்க்க இது உதவுகிறது. ஆப்கானிய நிலப்பாடு பற்றிய விவாதத்தின்போது, இடது கட்சியின் பிரிவு பாராளுமன்றத்தின் தலைவர் நோபைர்ன் லம்மர்ட் ஆல் மன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது; ஏனெனில் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் ஜேர்மனிய இராணுவத்தின் மூத்த அதிகாரி கொடுத்த உத்தரவின்பேரில் குண்டுஸில் நடந்த தாக்குதலில் இறந்த சாதாரணக் குடிமக்களின் பெயர்கள் அடங்கிய பதாகைகளை காட்டினர்.

ஆனால் இத்தகைய வியத்தகு தந்திரவித்தைகள் இருந்தபோதிலும், இடது கட்சி ஆப்கானிய நடவடிக்கைக்கு தீவிர எதிர்ப்பை மக்களிடையே திரட்டவும் அரசாங்கத்திற்கு உண்மையான சிக்கலை கொடுக்கவும் மறுக்கிறது. பெப்ருவரி 20அன்று அது வெறும் 2,000 பேரை மட்டுமே பேர்லினில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டததிற்கு கூட்டியது. ஆனால் பல டஜன் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தங்கள் ஆதரவின் அடையாளத்தைக் காட்டியிருந்தன. இடதுகட்சி இதைவிட பத்து மடங்கு எண்ணிக்கையை சேர்த்திருக்கலாம்.

ஆப்கானிய போரை நிராகரித்தல் என்பது இடது கட்சிக்கு அதன் "இடது" தோற்றத்தைக் காப்பது என்று ஆகும். அதே நேரத்தில் அது பேர்லின், பிராண்டன்பேர்க் இன்னும் கிழக்கு ஜேர்மனியில் பல நகரசபைகளில் சமூகநலச் செலவினக்குறைப்புக்களை தீவிரமாக செயல்படுத்துகிறது.

உண்மையில் இடது கட்சியின் போருக்கான எதிர்ப்பு வாய்ப்பு கிடைக்கும்போது அரசாங்கத்தில் ஒரு இடத்தைப் பெறுவதற்கான பேரத்திற்கு உகந்த ஒரு கருவியாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு சார்லாந்து, துரிஞ்சியா ஆகியவற்றில் அரசாங்கத்தில் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது, பல முக்கிய கட்சிச் செயலர்கள் இடது கட்சி ஒன்றும் உடனடியாக இராணுவம் திரும்பப் பெற வேண்டும் எனக் கூறவில்லை, ஒரு "மூலோபாயக் கொள்கை" தேவை வேண்டும் என்று மட்டுமே கூறியாதாக வலியுறுத்தினர். இவ்விதத்தில்தான் கூட்டாட்சி அரசாங்கமும் அதன் புதிய மூலோபாயத்தை விவரிக்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved