World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

German state election reveals an all-party coalition against the population

ஜேர்மன் மாநிலத் தேர்தல் மக்களுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளின் கூட்டணியை வெளிப்படுத்துகிறது

By Ulrich Rippert
30 April 2010

Back to screen version

மே 9ம் தேதி வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா (NRW) மாநில பாராளுமன்றத்திற்கு நடக்க இருக்கும் தேர்தல் ஏற்கனவே தேசிய எதிரொலிப்பு விளைவுகளை காணத் தலைப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மிக அதிக மக்கள் உள்ள மாநிலத்தின் பாராளுமன்ற தேர்தலானது மரபார்ந்த முறையில் கூட்டாட்சி மட்டத்தில் அரசியல் போக்குகளை சுட்டிக் காட்டும். ஆனால் இந்த ஆண்டு தேர்தல் பற்றிய கவனம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. ஏனெனில் அரசியல் வர்ணனையாளர்கள் கருத்தின்படி முக்கியப் பிரச்சினை கூட்டாட்சி மட்டத்தில் எப்படி கணிசமாக அரசியல் "புதிய சரிபடுத்துதல்" செய்வது என்பதாகும்.

தேர்தலுக்கு பின்னணியில் விரைவாக அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி உள்ளது. கிரேக்க அரசாங்கத்திற்கு ஜேர்மன் அரசாங்கமும் வங்கிகளும் ஆணையிட்டுள்ள கடுமையான சமூகநலத் தாக்குதல்கள் ஜேர்மனியிலும் செயல்படுத்தப்பட வேண்டும். இப்பொழுது சமூக நலன்களை அழிப்பதற்காக தயாரிக்கப்படும் திட்டங்களானது இழிந்த 2010 சமூக நல எதிர்ப்பு செயல்பட்டியல் மற்றும் ஹார்ட்ஸ் சட்டங்களில் இருந்த கூறுபாடுகளை விட மிக அதிகமானவையாக இருக்கின்றன.

வணிகக் கூட்டமைப்புக்கள் மற்றும் நிதிய உயரடுக்கின் முக்கிய பிரதிநிதிகள் அரை ஆண்டிற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்லின் கூட்டாட்சி அரசாங்கத்தை எதிர்பார்க்கப்படும் மக்கள் எதிர்ப்பிற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள பொதுநலச் செலவு வெட்டுக்களை செயல்படுத்த வலுவற்றிருக்கும் என்று கருதுகின்றன. இது NRW க்கும் பொருந்தும். இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக அதே போன்ற பழமைவாதக் கட்சிகள் மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) கூட்டணிதான் பதவியில் உள்ளது.

அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU) தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் பற்றி வணிகத் தலைவர்களின் தீர்ப்பு கடுமையாக உள்ளது--இதே குழுதான் ஆறு மாதங்களுக்கு முன்பு சிறந்த தேர்வு என்று இந்தக் கூட்டணியை பாராட்டியிருந்தது குறிப்பாக FDP ஒருகாலத்தில் Otto Graf Lambsdorff தலைமை தாங்கிய கட்சியின் நிழல்போல்தான் உள்ளது. அவர் உயர் நிதியடுக்கின் சக்தி வாய்ந்த நபர்களுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தார். தற்போதைய கூட்டணியில் சேர்க்கப்பட்டதில் இருந்து FDP அதன் வணிக நெருக்கமுடையவர்களை திருப்தி செய்வதற்காக எடுத்த ஐயத்திற்குரிய அரசியல் வழக்கங்களை அடுத்து, பலமுறை தலையங்கங்களில் சிக்கிக் கொண்டது. ஏனெனில் அத்தகைய நடவடிக்கைகள் அரசியல் உறுதியற்ற தன்மையை அதிகரிக்கத்தான் செய்தது. ஜேர்மனிய நிதிய ஏடு Handelsblatt கடந்த வாரம் கூறியபடி, ஜேர்மனிய வரலாற்றில் வேறு எந்த கட்சியும் வணிக சமூகத்தின் நம்பிக்கையை Guido Westerwelle தலைமையிலான FDP இழந்தது போல் விரைவில் இழந்ததில்லை.

பழமைவாத CDU மற்றும் அதன் பங்காளிக் கட்சியான கிறிஸ்துவ சமூக ஒன்றியமும் (CSU) ஒன்றோடொன்று எதிரிடையாக உள்ளன. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், பழமைவாத மற்றும் போருக்கு முந்தைய மத அதிகாரத்துவ கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்தன. ஆனால் உண்மையில் ஒருமித்த உணர்வுகளை கொண்ட கட்சிகளாக பிரதிபலிக்கவில்லை. மாறாக, அவை வட்டார மற்றும் பிற நலன்களை உடைய குழுக்கள் என்ற தன்மையில்தான் இயங்கின. முன்னாள் CDU தலைவர் ஹெல்முட் கோல் தன்னுடைய கறைபடிந்த நிதித் திட்டத்தின் மூலம் கட்சியை ஒன்றாக இணைத்து வைக்க முடிந்தது. அங்கேலா மேர்க்கெல் அந்த உதாரணத்தை பின்பற்ற முடியவில்லை.

சற்றே திரும்பிப் பார்க்கையில், வணிக வட்டாரங்கள் 1998ல் கோல் இடம் இருந்து எடுத்துக் கொண்டு 2005 வரை ஆட்சியை நடத்திய கெஹார்ட் ஷ்ரோடர் மற்றும் ஜோஷ்கா பிஷர் தலைமையில் இருந்த SPD-பசுமைக் கட்சிக் கூட்டணி பற்றி பாசமான நினைவுகளை கொண்டுள்ளது. ஷ்ரோடர்-பிஷர் அரசாங்கம் அதிக "சமூகச் சீர்திருத்தங்களை" செயல்படுத்தியது--அதாவது அதற்கு முன்பு அல்லது பின்பு பதவியில் இருந்த அரசாங்கங்களை விட மிகக்கடுமையான சமூக பொதுநலச் செலவுக் குறைப்புக்களை. எனவேதான் SPD மற்றும் பசுமைவாதிகள் இப்பொழுது வடக்கு ரைன் வெஸ்ட்பாலிய தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் ஆதரவிற்கு உட்பட்டுள்ளன.

கருத்துக் கணிப்புக்களின்படி, SPD மற்றும் பசுமைக் கட்சியினர் இரண்டுமே தங்கள் ஆதரவுத் தளத்தை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் CDU விற்கான ஆதரவானது கட்சிக்கும் வணிக நலன்களுக்கும் இடையே உள்ள சந்தேகத்திற்கு இடமான உறவுகள் பற்றிய வெளிப்பாடுகளால் சரிந்துள்ளது. இத்தகைய உறவுகள் அனைத்துக் கட்சிகளிலும் உண்டு என்றாலும், இவற்றைப்பற்றி வந்துள்ள தகவல்கள் ஊழல்களாக உருவெடுத்து அதையொட்டி கட்சிக்கு தேர்தல்களில் எதிர்மறை விளைவுகளைக் கொடுத்தன. கருத்துக் கணிப்புக்கள் இப்பொழுது SPD-பசுமைக்கட்சி மற்றும் CDU-FDP இரண்டிற்கும் சம ஆதரவைக் காட்டுகின்றன.

இச்சூழ்நிலையில்தான் செவ்வாயன்று (WDR) தொலைக்காட்சியில் "முக்கிய வேட்பாளர்களின் விவாதம்", "சவால் விடும் Hannelore Kraft (SPD) பதவியில் உள்ள பிரதம மந்திரி Jochen Rüttgers (CDU)" க்கும் இடையே நடந்தது.

எப்படியும் இரு வேட்பாளர்களுக்கும் இடையே வேறுபடுத்திக் காட்டுவதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை. ருட்கர்ஸும் கிராப்ட்டும் அனைத்து முக்கிய அரசியல் பிரச்சினைகளிலும் அவர்களுடைய ஒத்த கருத்துக்களைக் காட்டினர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்கள் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் உண்மையிலேயே முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவில்லை: அதாவது வேலையில்லாதவர்கள், தகுதிக்கும் குறைந்த வேலையில் இருப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது, பல நகர சபைகளின் நிதித் திவால் தன்மை, மற்றும் முழுப்பகுதிகளிலும் இணைந்து நிற்கும் சமூகச் சரிவு ஆகியவை பற்றி.

இருவருமே தவிர்க்க முடியாத பொருளாதார வெட்டுக்கள், பொதுத்துறையில் பல்லாயிரக் கணக்கான வேலைகளை தகர்ப்பதின் தேவை ஆகியவை பற்றிப் பேசினர். கல்வி முறையில் வருங்கால அமைப்பு பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இரு வேட்பாளர்களும் கல்விச் செலவில் வெட்டுக்கள் பற்றிய தங்கள் விருப்பத்தை அறிவித்தனர். சமூக நிலைமைகள் மீதான தாக்குதல் உறுதியாக தீவிரமாகும். அது CDU அல்லது SPD என எது புதிய மாநிலப் பாராளுமன்றத்திற்கு தலைமை வகித்தாலும்.

"முக்கிய விவாதத்தில்" தனித்து வெளிப்பட்டது Hannelore Kraft தன் தொலைக்காட்சி தோற்றத்தை முடித்துக் கொண்டவிதம்தான். வெட்கம் கெட்ட முறையில் அவர் SPD ஐ "சமூக நீதிக் கட்சி" என்றும் சமூக ஒருங்கிணைப்பிற்கு பாடுபடுகிறது என்றும் பாராட்டினார். வாக்காளர்கள் மடையர்கள் என்று Kraft கருதுகிறார். ஹார்ட்ஸ் சட்டங்கள் மற்றும் 2010 செயற்பட்டியலுக்கு எவர் பொறுப்பு என்பதை மக்கள் மறந்துவிட்டார்கள் என நினைக்கிறார். உண்மையில் மில்லியன் கணக்கான ஜேர்மனிய தொழிலாளர்கள், SPD மற்றும் பசுமைக் கட்சி கொள்கைகளால் பாதிப்பு அடைந்தனர்.

பொருளியலாளர் Kraft தன் அரசியல் தொழிலலை SPD யில் தொடங்குமுன், IG Metall தொழிற்சங்க உறுப்பினராக இருந்தார். அவர் பல ஆண்டுகள் நிர்வாக ஆலோசனையாளராகவும் இருந்தார். ஒரு விதத்தில் இன்னும் அவர் அதே பணியைத்தான் செய்கிறார். வணிக முயல்வோருக்கு அவர் SPD அதிகாரத்துவக் கருவியின் சமூக விரோதக் கொள்கைகளால் வெறுப்புற்று கட்சியை விட்டு நீங்கி விட்ட நூறாயிரக்கணக்கான உறுப்பினர்களில் எஞ்சியிருப்பவர்களுக்கு தன் பணியைத்தான் கொடுக்கிறார்.

மாநில அரசியலில் Hannelore Kraft தள்ளபட்டு, வுல்ப்காங் கிளெமென்டின் (SPD) ஆதரவிற்கு உட்பட்டார். பிந்தையவர் பின்னர் பொருளாதார மற்றும் தொழிலாளர் துறை கூட்டாட்சி மந்திரி என்னும் முறையில் Hartz விதிகளை இயற்றினார். பின் அவர் SPD ஐ விட்டு விலகினார். ஏனெனில் அவரின் செயற்பட்டியல் 2010 போதுமான அளவு பலன் கொடுக்கவில்லை என்று கருதினார். கிளெமென்ட் இப்பொழுது CDU வலதுசாரி Friedrich Merz உடன் சேர்ந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் இன்னும் அதிக பொதுநலச் செலவு வெட்டுக்களைக் கோருகின்றனர்.

SPD அதிகாரத்தில் இருந்து NRW ல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டபோது, Hannelore Kraft அறிவியல்துறை மற்றும் ஆராய்ச்சி மந்திரியாக இருந்தார். இத்தகைய பதவியில் அவர் இப்பொழுது Jürgen Rüttgers தலைமையில் உள்ள CDU-FDP மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை செயல்படுத்தினார். கணக்கியல் கல்வி என்று கூறப்படுபவற்றை அவர் அறிமுகப்படுத்தினார். அவை பின்னர் கட்டணக் கல்வி என்று மாற்றப்பட்டன. பல்கலைக்கழகங்கள் முக்கிய நிறுவனங்களுடன் நெருக்கமாக ஒத்துழைப்பு கொடுப்பதற்கும் அவர் ஏற்பாடு செய்தார். இது கல்வி முறையை பெரு வணிக நலன்களுக்கு ஏற்ப மாற்றும் தன்மையை இலக்காகக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் இவர் கல்வித் துறையில் கணிசமான பணி குறைப்புக்களையும் மேற்பார்வையிட்டார்.

இந்தக் கொள்கைகளின் விளைவாக SPD கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குத் தளத்தில் தன் பங்கு சரிவதைக் கண்டது. கட்சியானது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற பேரழிவை எதிர்கொண்டவிதம் இன்னும் வலதிற்கு மாறியதுதான். பாராளுமன்றத்தை முன்கூட்டியே இது கலைத்து மேர்க்கெலின் முதல் அரசாங்கத்தில் இளைய பங்காளியாக பெரும் கூட்டணியில் நுழைந்தது. NRW இல் SPD நெருக்கமாக Ruttgers உடன் உத்தியோகபூர்வமற்ற பெரும் கூட்டணியில் ஒத்துழைத்தது. இதன் பின் கடந்த ஆண்டு SPD வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் ஐரோப்பிய, கூட்டாட்சி மற்றும் உள்ளூர் தேர்தல்களில் இன்னும் பெரும் தோல்விகளை சந்தித்தது.

தற்போதைய வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பிரச்சாரம், SPD ஐப் புதுப்பிக்க வேண்டும் என்பது, மக்களிடையே ஆதரவைப் புதுப்பித்தலை அடிப்படையாகக் கொள்ளவில்லை. முற்றிலும் மாறான நிலைமைதான் உள்ளது. இதன் தோற்றங்கள் வேண்டுமென்றே வணிக அமைப்புக்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் அது கொண்டுள்ள நெருக்க உறவினால் SPD 2010 செயற்பட்டியல் வடிவில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த நல்ல நிலைமையில் உள்ளது என்று நடத்திய பிரச்சாரத்தில் இருந்தன

NRW ல் உள்ள நிலைமை 12 ஆண்டுகளுக்கு முன்பு ஹெல்முட் கோலிடம் இருந்து ஷ்ரோடருக்கு அரசாங்கம் மாறியதைத்தான் நினைவிற்கு கொண்டுவருகிறது. அந்த நேரத்தில் முக்கிய வணிகப் பிரதிநிதிகள் கோஹ்லின் CDU-FDP கூட்டணி கணிசமான சமூகச் செலவு வெட்டுக்களைக் கோரிய வணிக சமூகத்தின் கோரிக்கைகளைச் செயல்படுத்த முடியாது என்ற சந்தேகங்களை வெளிப்படுத்தினர். ஒரு மாற்றத்தை அவர்கள் விரும்பினர். அதே நேரத்தில் குட்டி முதலாளித்துவக் குழுக்கள் , தங்களை இடது என்றும் சோசலிஸ்ட் என்றும் கூறிக் கொள்ளுபவர்கள் SPD பசுமை கட்சியுடன் கொண்ட கூட்டணியை, கோல் தலைமையில் நடந்த 17 ஆண்டு ஆட்சிக்குப் பின்னர் முற்போக்கானது என்று கொண்டாடின. பின்னர் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

இந்தத் தொடர்பில்தான் NRW தேர்தலில் இடது கட்சி கொண்ட பங்கை அறிய வேண்டும். 1990 களில் இருந்ததைப்போல், இடது கட்சி இப்பொழுது SPD, பசுமைவாதிகளை ருட்கர்ஸிற்கு இடது மாற்றீடு என்று புகழ்ந்து SPD பதவிக்கு வர உதவ விரும்புகிறது. SPD ஐயையும் நிர்வாக ஆலோசகர் Kraft ஐயும் பொதுநலக் குறைப்புக்களை கொடுக்கக்கூடிய சிறந்த விருப்புரிமை என்று கருதும் ஆளும் வர்க்கத்தின் பிரிவுகளுடைய நலன்களுக்கு நேரடியாக உதவும் விதத்தில் இது பணிபுரிகிறது.

இத்தகைய நிலையை தொழிலாள வர்க்கம் உறுதியுடன் நிராகரித்து உண்மையை நேரில் காண வேண்டும். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள எந்தக் கட்சிகளும் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிபலிக்கவில்லை. அடுத்த மாநில அரசாங்கம், எதிர்க் கட்சி ஆகியவற்றின் துல்லியமான அமைப்பு எப்படி இருந்தாலும், தொழிலாளர்கள் ஒரு அனைத்துக் கட்சிகளின் கூட்டு நோக்கமான சமூக வெட்டுக்கள் திட்டத்தைத்தான் எதிர்கொள்ளுவார்கள். அவை கடந்த காலத்தில் இருந்த எதைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

தேர்தலுக்கு பின்னர் உடனடியாகத் தொடங்க இருக்கும் சமூக பிரச்சனைகளுக்கான தயாரிப்புக்களானது சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Gleichheit, PSG) ஸ்தாபிக்கப்படுவதை எதிர்நோக்குகின்றன. இது நான்காம் அகிலத்தின் ஜேர்மனிய பிரிவு ஆகும். றிஷிநி ஆனது பணிநீக்கங்கள் மற்றும் பொதுநலச் செலவு வெட்டுக்களுக்கு தீவிர எதிர்ப்பை வேலை நிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள் என்ற வடிவில் உள்ள ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குடன் பிணைக்கிறது. மேலாதிக்கம் கொண்ட நிதியப் பிரபுத்துவம் ஒரு தொழிலாள வர்க்க சுயாதீனமான அணிதிரட்டலின் மூலம் தான் உடைக்கப்பட முடியும். இது பெரு வணிகங்கள் மற்றும் வங்கிகளை கைப்பற்றி உற்பத்தி முறையை தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும்.