World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Stalinist union calls off Indian coal strike

இந்திய நிலக்கரி வேலைநிறுத்தத்தை ஸ்ராலினிச தொழிற்சங்கம் இரத்து செய்கிறது

By Arun Kumar
10 May 2010

Back to screen version

AICWF எனப்படும் அனைத்திந்திய நிலக்கரித் தொழிலாளர் கூட்டமைப்பு, அரசாங்கத்தின் திட்டமான அரசுக்குச் சொந்தமான இந்திய நிலக்கரி நிறுவனத்தின் (Coal India Limited-CIL) பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பதை எதிர்த்து கடந்த வாரம் ஆரம்பித்த அதன் மூன்று நாள் வேலைநிறுத்தத்தை ஒரே நாளில் முடித்துக் கொண்டது. இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) உடன் கூட்டிலுள்ள இத்தொழிற்சங்கம் இன்னும் கூடுதலான தொழில்துறை நடவடிக்கைக்கு திட்டம் எதுவும் வைத்திருக்கவில்லை.

இந்த வேலை நிறுத்தம் முதலில் ஐந்து பெரிய தொழிற்சங்கங்களால் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகியவற்றுடன் கூட்டுள்ள மூன்று தொழிற்சங்கங்களானது நிலக்கரி மந்திரி ஸ்ரீப்ரகாஷ் ஜெயஸ்வாலுடன் ஏப்ரல் 16 அன்று எடுத்த உடன்பாட்டை அடுத்து விலகிக் கொண்டன. வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு, "தனித்தியங்கும்" ஹிந்த் மஜ்டூர் சபா (HMS) உம் பின்வாங்கிவிட்டது.

மே 5 ம் தேதி AICWF அரைமனதுடன் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தது. ஆனால் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக பகிரங்கப் பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளவில்லை. அதே போல் தொழிற்சங்கமோ, CPM அல்லது CPM ன் இந்திய தொழிற்சங்கங்களின் மையமோ (CITU), CIL நிர்வாகத்தின் கூற்றான வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு காணப்பட்டு வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது என்ற கூற்றை எதிர்த்து அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

அரசாங்கமும் வணிக உயரடுக்கும் ஒரு முக்கிய தொழில் துறையில் 700,000 சுரங்கத் தொழிலாளர்கள் கலந்து கொள்ளக்கூடிய வேலைநிறுத்தம் நடைபெறுவது பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை என்பது தெளிவு. இந்திய செய்தி ஊடகம் வேலநிறுத்தத்திற்கு முன்போ, வேலைநிறுத்தத்தின்போதோ, அதற்கு பின்னரோ கிட்டத்தட்ட இதைப் பற்றி எவ்விதத் தகவலும் கொடுக்கவில்லை. ஒரு செய்தி ஊடக இருட்டடிப்பு என்பதற்கு பதிலாக இந்த மௌனமே AICWF, அரசாங்கத்தின் முதலீடுகளைத் திரும்பப் பெறும் திட்டங்கள் பற்றி உண்மையான பிரச்சாரத்தை நடத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை ஆளும் வட்டாரங்கள் அறிந்து கொண்டதைத்தான் காட்டுகிறது.

எத்தனை தொழிலாளர்கள் பங்கு பெற்றனர் என்பது தெளிவாக இல்லை. CITU அறிக்கை ஒன்று CIL தொழிலாளர்களில் 60 சதவிகிதத்தினர் பங்கு பெற்றனர் என்று கூறியது. ஆனால் ஒரு HMS அதிகாரி உலக சோசலிச வலைத் தளத்திடம் இடம் "பூஜ்ய சதவிகிதம்தான்" பங்கு பெற்றது என்று கூறினார். இரு சங்கங்களும் எண்ணிக்கையை தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக மிகைப்படுத்தி கூறுகின்றன என்பது வெளிப்படை. CIL தலைவர் பார்த்தா எஸ். பட்டாச்சார்யா அன்றாட உற்பத்தி மே 5 ம் தேதி 306,000 டன்கள் என்று குறைந்தது என்பதை ஒப்புக் கொண்டார். இது முந்தைய நான்கு நாட்களின் சராசரியான 326,000 டன்களோடு ஒப்பிடப்பட வேண்டும்.

சரியான எண்ணிக்கை எப்படி இருந்தாலும், AICWF தொழிலாளர்களிடையே அரசாங்கத்தின் தங்கள் வேலைகள், பணி நிலைமைகள் பற்றிய திட்டங்களின் உட்குறிப்புக்கள் பற்றிய பரந்த கவலை, சீற்றத்தை குறைக்கும் ஒரு வழிவகையாகத்தான் வேலைநிறுத்தத்தை நடத்தியது.

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்கள் ஏற்கனவே கடுமையான மறுகட்டமைப்பிற்கு உட்பட்டுவிட்டன. மிகக் குறைந்த ஊதியம் பெறும் ஒப்பந்த தொழிலாளர்கள், தொழிலாளர் தொகுப்பில் இப்பொழுது கிட்டத்தட்ட 40 சதவிகிதம் என்று உள்ளனர். கடந்த மாதம் CIL தலைவர் பட்டாச்சார்யா நிரந்தர தொழிலாளர் தொகுப்பை 416,000 ல் இருந்து அடுத்த இரு ஆண்டுகளில் 380,000 என்று குறைக்க இருப்பதாகவும், நிதிவகையில் "ஈடுகட்டாத" சுரங்கங்கள் மூடப்படும் என்ற திட்டங்களை அறிவித்தார்.

CITU செயலர் தீபங்கர் முக்கர்ஜி உலக சோசலிச வலைத் தளத்திடம் தொழிற்சங்கம் "அரசாங்கத்திற்கு எதிர்ப்புக்கான தகவல் கொடுப்பதற்காக ஒரு நாள் அடையாள நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது" என்றார். வேலைநிறுத்தம் ஏன் மூன்று நாட்களில் இருந்து ஒரு நாளைக்கு குறைக்கப்பட்டது என கேட்கப்பட்டதற்கு அவர் மற்ற தொழிற்சங்கங்கள் விலகிக் கொண்டதைக் குறைகூறினார். ஆனால் CITU ஆனது நிலக்கரி மந்திரியுடன் மேற்கோள்ளப்பட்ட உடன்படிக்கையை எதிர்த்து பிரச்சாரம் எதையும் மேற்கொள்ளவில்லை.

காங்கிரஸுடன் கூட்டுள்ள இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), அரசாங்கமானது சங்கத்தின் முக்கிய கோரிக்கைக்கு உடன்பட்டுள்ளது என்று கூறியது --அதாவது CIL ன் பங்குகளில் பெரும்பான்மையை வைத்திருக்கும். ஆனால் மந்திரியின் ஒரே உறுதியான அளிப்பு ஒரு லஞ்சம்தான்-- அதாவது CIL பங்குகளில் ஒரு சதவிகிதத்தை சுரங்கத் தொழிலாளர்களுக்கு தள்ளுபடி விகிதத்தில் கொடுப்பது என்பதே அது. வேலைகள் மற்றும் பணி நிலை பற்றிய தொழிலாளர்களின் கவலைகள் எதுவும் பொருட்படுத்தப்படவில்லை.

CITU இப்படி விற்கப்பட்டு விட்டதை சவாலுக்கு உட்படுத்த முயற்சி எதுவும் எடுக்கவில்லை. உண்மையில் CITU செயலர் முக்கர்ஜி உலக சோசலிச வலைத் தளத்திடம் அடுத்த நடவடிக்கை ஜூலை மாதம் அனைத்துத் தொழிற்சங்கங்களும் "அரசாங்க நடவடிக்கையான முதலீடுகளைக் குறைத்தல், பொதுத்துறை தொழில்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிராகப் போராடுவதற்கு" மாநாடு ஒன்றை நடத்துவது என்றார். சுரங்கத் தொழிலில் இதன் பொருள் ஏற்கனவே முதலீடுகளை விற்பதற்கு ஒப்புக் கொண்டுவிட்ட அதே தொழிற்சங்கங்கள் "கூட்டுப் போராட்டம் நடத்தவுள்ளன" என்பது ஆகும்.

இந்த தொழிற்சங்கங்களின் ஜூலை மாத மாநாடு என்பது ஒரு போலித்தனம் ஆகும். CIL பங்குகளை விற்பது என்பது புது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்கும் தீவிரத் திட்டம் ஆகும். இது தற்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவிகிதம் என்று இருக்கும் வரவு-செலவுப் பற்றாக்குறையை 2011-12 க்குள் 4.8 சதவிகிதம் என்று குறைக்க விரும்பும் முயற்சிகளின் ஒரு பகுதியேயாகும். நிலக்கரித் தொழிலிலோ அல்லது தொலைத் தொடர்பு துறையிலோ அரசாங்கத்தின் பரந்த திட்டங்களுக்கு எதிராக CITU "போரடியதை" போல்தான் இதுவும் இருக்கும்.

கடந்த மாதம் தொலைத் தொடர்பு சங்கங்கள் 300,000 தொழிலாளர்கள் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இன் பங்குகள் விற்கப்படும், மற்றும் தொழிலாளர் தொகுப்பு 100,000 வேலைகள் இழப்பிற்கு உட்படுத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து "காலவரையறையற்ற வேலைநிறுத்தம்" தொடர்ந்ததை ஒரு சில மணிநேரங்களுக்கு உள்ளாகவே நிறுத்திவிட்டன. CPM உடன் இணைந்து செயற்படும் BSNL ஊழியர்கள் சங்கமானது கூட்டுத் தொழிற்சங்க குழுவிற்கு தலைமை தாங்கியது. அதுதான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தெளிவற்ற உறுதிமொழிகளையும் ஏற்றிருந்தது.

பெரும்பாலான தொழிற்சங்கங்கள் கடந்த இரு தசாப்தங்களாக சந்தைச் சார்பு மறுகட்டமைப்புக்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும் கட்சிகளுடன் நேரடியாக இணைந்து உள்ளன. காங்கிரஸ் மற்றும் BJP இரண்டும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை மறுகட்டமைக்கும் நடவடிக்கைகளை எடுத்தன. மேலும் தொலைத் தொடர்பு போன்றவற்றை தனியார் நிறுவனங்களுக்கு திறந்தும் விட்டன.

CPM ஆனது காங்கிரஸ் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை நான்கு ஆண்டுகளுக்கு ஆதரித்தது. 2004ல் அது ஆரம்பத்தில் பதவிக்கு வந்தபோது இது நடந்தது. மேற்கு வங்கம், கேரளா மற்றும் திரிபுரா மாநிலங்களில், CPM தலைமையிலான இடது முன்னணி நிர்வாகங்கள் இதேபோன்ற சந்தை சார்பு செயற்பட்டியலை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு செயல்படுத்தின. CPI ஆனது மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் உள்ள இந்த "இடது" கூட்டணிகளின் பாகமாக உள்ளது.

இன்னும் பரந்த அளவில், CPM ஆனது தொழிலாள வர்க்கத்தின் பெருகும் சீற்றத்தை குறைப்பதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது.

காங்கிரஸ் அல்லது/மற்றும் BJP உடன் முன்பு நட்புக் கட்சிகளாக இருந்தவை அனைத்துமே சமீபத்திய வாரங்களில் இடது முன்ணியின் பல பிராந்திய மற்றும் சாதி அடிப்படை கட்சிகளோடு சேர்வதின் மூலம் அவைகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்திற்கு "மக்கள் சார்பு" கொள்கைகளை ஏற்க அழுத்தம் கொடுக்க இயலும் என்று கூறியுள்ளது.

ஏப்ரல் 27 அன்று இடது முன்னணி ஒன்பது "மத சார்பற்ற, காங்கிரஸ் அல்லாத, BJP அல்லாத" கட்சிகளுடன் சேர்ந்து ஒரு ஒருநாள் ஹர்த்தாலை (வேலைநிறுத்தத்தை) நடத்தியது. இது உயரும் உணவுப் பொருட்களின் விலைகளுக்கு எதிரானது ஆகும். அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் ஒரு "வெட்டுத் தீர்மானத்தையும்" கொண்டுவந்தது. அது சமீபத்தில் உயர்த்திய பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை அரசாங்கத்தை அகற்றுமாறும் கோரியது. பாராளுமன்றத்திற்கு வாக்கு வெட்டுத் தீர்மானத்திற்கு வருவதற்கு முன், இரு ஸ்ராலினிச கட்சிகளும் அதாவது CPM மற்றும் CPI தாங்கள் அரசாங்கத்தை "உறுதி குலைக்க" விரும்பவில்லை என்பதை வலியுறுத்த முயற்சிகளை மேற்கொண்டன. அவ்வாறு இருந்தால் தாம் ஒரு "நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை" கொண்டு வந்திருப்போம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டன. எப்படிப்பார்த்தாலும், இரு ஸ்ராலினிசக் கட்சிகளின் நட்புக் கட்சிகளான சமாஜ்வாடிக் கட்சி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியவை வெட்டுத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை. தீர்மானம் 289-201 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது.

சுரங்கத் தொழிலாளர்கள், தொலைத் தொடர்பு ஊழியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளும் தங்கள் வேலைகள் மற்றும் பணி நிலைமைகளை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அவை இணைந்துள்ள அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடம் இருந்து முழுமையாக முறித்துக் கொள்ளுவதின் மூலம்தான் காப்பாற்ற முடியும். ஸ்ராலினிச கட்சிகள் உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும் ஒரே பொதுவான செயற்பட்டியலைத்தான் கொண்டுள்ளன. அதாவது ஆழமான உலகப் பொருளாதார நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கம் சுமக்க வேண்டும் என்பதே அது. தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக இருக்கும் தமது சொந்த கீழ்மட்ட அணி தொழிலாளர் குழுக்களை தொழிலாளர்கள் நிறுவத் தொடங்க வேண்டும். இது நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறிய பிரிவுகள் பக்கம் திரும்ப வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் அத்தகைய பரந்த தட்டுக்களை கொண்டுள்ள ஒரு சுயாதீன இயக்கம்தான் ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் முன்னேற முடியும். ஒரு சிறிய செல்வந்தர் அடுக்கின் இலாப நோக்கு என்பதற்கு பதிலாக, பெரும்பான்மையான மக்களின் தேவைகளை உயர்மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை சமூகத்தை மறுசீராக்க முடியும்.