World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

Scientists detect miles-long streaks of submerged oil

பல மைல் நீளமான கடல்மட்டத்தின் கீழ் எண்ணெய் திரட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்

By Andre Damon
17 May 2010

Back to screen version

மெக்சிகோ வளைகுடாவில் ஒரு ஆராய்ச்சிக் கப்பல் சனிக்கிழமை அன்று பிரிட்டிஷ் பெட்ரோலியப் பேரழிவுக் கசிவில் இருந்து வெளிப்பட்டுள்ள நீர்மட்டத்தின் கீழான "எண்ணைய் திரட்டுக்கள்" நான்கினைக் கண்டுபிடித்துள்ளனர்; இது அரசாங்கம் கூறிவரும் எண்ணெய்க் கசிவின் அளவைவிட மிகஅதிக கசிவு ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் உறுதிபடுத்துகிறது. இந்த திரட்டுக்களில் மிகப் பெரியது 1.7 கன மைல்கள் கொள்ளளவு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது மெக்சிகோ வளைகுடாவிற்கு தென்மேற்கே முப்பது மைல்கள் தொலைவில் உள்ளது.

விஞ்ஞானிகள் மற்றும் கப்பல் மாலுமித் தலைவர்கள்  மூழ்கியுள்ள எண்ணெய் நீண்ட தூரம் பெருங்கடல் ஒட்டத்தால் பயணிக்கக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிக் கூறியுள்ளதை இக்கண்டுபிடிப்புக்கள் வலுப்படுத்துகின்றன.

அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் பெரும்பாலான எண்ணெய் மேல் பரப்பிற்கு வந்துவிட்டது, மிகக் குறைந்த அளவுதான் நீருக்கு அடியில் உள்ளது என்னும் கூற்றுக்களை இது வலுவிழக்கச் செய்கிறது. நாள் ஒன்றிற்கு 5,000 பீப்பாய்கள்தான் கசிவு என்ற தங்கள் கணிப்பீட்டிற்கு மேற்புறத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களையே அடித்தளமாக கொண்டுள்ளனர். வியாழன் இரவு, National Public Radio ஆழ்கடல் பகுதி கசிவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட 14 மடங்கு மோசம், நாள் ஒன்றிற்கு 70,000 பீப்பாய்கள் வெளிவந்தன என்று சில விஞ்ஞானிகள் கொடுத்த தகவலை வெளியிட்டது. இது வரலாற்றில் மோசமான எண்ணெய்க் கசிவு என்பதை காட்டுகிறது.

"அரசாங்கம் வேண்டும் என்றே மக்களிடம் தவறான தகவல் கொடுக்கிறதா அல்லது தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அவர்கள் உணரவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை" என்று அலாஸ்கா பல்கலைக் கழகத்தில் கடல்துறைப் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் பேராசிரியர் ரிச்சர்ட் ஸ்ரைனர் கூறினார். "ஆனால் தவறான தகவல் கொடுப்பதாக நான் சந்தேகிக்கிறேன். அவர்கள் கூட்டாட்சி அரசாங்கத்தின் பொருத்தமற்ற பதில் நடவடிக்கையை மூடிமறைக்க முயல்வதுடன், பிரிட்டிஷ் பெட்ரோலியம் போல் தமது கவனமின்மையையும் மறைக்க முயல்கின்றனர்.

சுற்றுசூழல் பாதுகாப்பு அமைப்பிடம் இருந்து அவற்றைப் பயன்படுத்த ஒப்புதல் பெற்ற பின்னர், நீர்மட்டத்தின்கீழ் உள்ள எண்ணெய் மேற்பரப்பை அடையாத விதத்தில் கலைத்துவிடும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் சனிக்கிழமை அன்று கூறியது. கச்சா எண்ணெய் போலவே நச்சுத்தன்மையைக் கொண்டுள்ள அவற்றை கலைத்துவிடும் இரசாயனங்களை பயன்படுத்துவதும், பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் திட்டமான கசிவு பற்றி பொதுமக்கள் முழுமையாக அறிவதைக் குறைப்பதற்கு பெரும்பாலான எண்ணெயை நீருக்கடியில் மறைத்து வைக்கும் செயலின் முக்கிய பகுதி ஆகும்.

மீட்புப் பணியாளர்கள் மிசிசிப்பி கழிமுகப் பகுதியில் உள்ள ஒரு தீவில் எண்ணெய் பாதிப்பிற்கு உட்பட்ட பறவைகளை தேடுவதற்கு தயார்படுத்துகின்றர்.

கலைப்புக்களின்மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ள பாரியளவு அளவு எண்ணெய் ஒரு புறம் இருந்தாலும், அல்லது அவை மேற்பரப்பிற்கே வரவில்லை என்று கொண்டாலும், மூழ்கியுள்ள எண்ணெய் பற்றிய ஆய்வு நடத்த அதிக முயற்சிகள் இல்லை என்பது வியப்பைத் தருகிறது. இத்திரட்டுக்களைக் கண்டுபிடித்த R/V Pelican, கசிவு இடத்திற்கு வந்த முதல் ஆய்வுக் கப்பல் ஆகும். ஆனால் அது பேரழிவிற்கு இரு வாரங்களுக்குப் பின்னர்தான், மே 3 அன்றுதான் புறப்பட்டது. "அந்த இரு வாரங்கள் மிக முக்கியமும், முன்னோடியில்லாத வகையில் தகவல்கள் முற்றிலும் இழக்கப்பட்டு விட்டன" என்றார் ஸ்ரைனர்.

பல பல்கலைக் கழகங்களில் இருந்து வந்துள்ள பதினாறு விஞ்ஞானிகளைக் கொண்டுள்ள Pelican, ஆழ்ந்த நீருக்கடியிலான பவளங்களைப் பற்றி ஆய்வுகளை நடத்தத் தயாரிப்புக்களை கொண்டிருந்தபோது கசிவு பற்றி ஆய்வு நடத்த அழைக்கப்பட்டது. மற்றொரு அறிவியல் கப்பல் சமீபத்தில் கசிவிடத்திற்கு அனுப்பப்பட்டது; இதையொட்டி மொத்தம் இரு கப்பல்கள் உள்ளன.

"Pelican அந்தத் திரட்டை தற்செயலாக மோதியது. ஆனால் இன்னும் பல, பல திரட்டுக்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என்று ஸ்ரைனர் கூறினார். "பல நீர் ஆழங்களில், திரட்டுக்கள் பல திசைகளிலும் சென்று கொண்டிருக்கும், அவர்கள் ஒன்று அல்லது இரு பரிமாணங்களைத்தான் இதுவரை பார்த்திருப்பர். முற்றிலும் ஆய்வு செய்யப்படாத பாரிய பாதிப்பு அங்குள்ளது."

NOAA எனப்படும் கடலோரப் பாதுகாப்புப் பிரிவிடமும் மற்ற அதிகாரிகளிடமும் இன்னும் பல படகுகள் நீரடி எண்ணெயைக் கண்டறிய பயன்படுத்துமாறு தான் கூறியதாகவும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் அவர் சேர்த்துக் கொண்டார். "பிரிட்டிஷ் பெட்ரோலியம் போலவே மத்திய அரசாங்கமும் இது பற்றித் தயாராக இல்லை. அதனிடம் அவசரக்கால திட்டம் ஏதும் இல்லை" என்றார் அவர்.

வளைகுடா கடலோர மீன்பிடி மற்றும் போக்குவரத்து படகுகளின் மாலுமித் தலைவர்களிடையே இத்தகைய திரட்டுக்கள் இருப்பது பரந்த அளவில் அறியப்பட்டிருந்தது. லூயிசியான வெனிஸில் ஒரு போக்குவரத்து படகின் மாலுமித் தலைவரான கிறைஸ் ஹெண்டர்சன் புதனன்று கொடுத்த பேட்டியில் எண்ணெயை மேற்பரப்பில் இருந்து கடலின் அடிப்பகுதிக்கு மூழ்கடிக்கும் கலைப்பான்களின் பயன்பாடு அத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

"கடலுக்குக்கீழே உள்ள நீரோட்டங்கள் மேல்மட்டத்தில் இருப்பதை விட மிக வலுவனாவை, கீழே மூழ்கியுள்ள எண்ணெய் பெரிய ஆறுகள் போல் ஓடும்" என்றார் அவர். "மூழ்கியுள்ள எண்ணெய் சூடான நீரைத் தொடும்போது எங்கு வேண்டுமானாலும் மேலெழலாம். மக்கள் வியப்படைவர்."

ஓரளவு மிதக்கக்கூடிய, "எண்ணெய் மற்றும் குளிர்ந்த தண்ணீரின் "கலவைக் குழம்பு" எந்த விலங்கினத்திற்கும் நச்சு ஆகும்; இதில் plankton, crustaceans ஆகியவை அடங்கும். இவை அவற்றுடன் நேரடித் தொடர்பைக் கொள்ளும். ஆனால் விஞ்ஞானிகள் திரட்டுக்கள் மேற்பகுதிக்கு அருகே உயர்ந்து வரும்போது, அவை காற்றில் வாழும் நுண்ணியிர்களால் செரிக்கப்படக்கூடும் என்று கவலைப்படுகின்றனர்; அவை சுற்றியுருக்கும் நீரில் உள்ள பிராணவாயுவைக் குறைத்து மிகப் பெரிய "இறப்புப்பகுதிகளை" ஏற்படுத்தக்கூடும்; இது அவற்றுடன் தொடர்பு கொள்ளும் கடல்வாழ் உயிரனங்களை மூச்சுத்திணற செய்துவிடும்."

இந்தக் கண்டுபிடிப்புக்கள் வெளிவந்தவுடன், பிரிட்டிஷ் பெட்ரோலியமும் அமெரிக்க அரசாங்கமும், செய்தி ஊடகமும் கசிவின் முக்கியத்துவத்தை குறைமதிப்பிற்குத் தொடர்ந்து உட்படுத்தின. தொடர்ச்சியான பல தலையங்கங்கள் மற்றும் செய்தித் தகவல்கள் வெளியிடப்பட்டு நிகழ்வு பற்றிய மக்கள் சீற்றம் தணிக்கப்படுகிறது. இதில் மிக மோசமானது மே 3ம் திகதி நியூயோர்க் டைம்ஸில் வந்த "வளைகுடா கசிவு மோசம்தான், ஆனால் எந்த அளவு மோசம்" என்ற தலைப்பில் வந்த கட்டுரை ஆகும். மிகச் சமீபத்திய முயற்சி வாஷிங்டன் போஸ்ட்டில் வந்துள்ள கட்டுரை ஆகும்; இது கசிவைக்கூட இயற்கையின் இணக்கத்திற்கு ஏற்ப உள்ளதாகச் சித்தரிக்கிறது.

"இயற்கையானது" என மெக்சிகோ வளைகுடாவில் கசிந்துள்ள கணிசமான அளவு எண்ணெய் பற்றி குறிப்பிட்டபின், கட்டுரை அபத்தமான வகையில் எண்ணெய்க் கசிவினால் ஒரு எழுச்சி கூட வரக்கூடும் என்று முடித்துள்ளது: ''மூழ்கடிக்கப்பட்ட எண்ணெய்க் கிணற்றில் பவளப்பாறைகள் வளரும் என்பதே அது. "மூடப்படாத கிணற்றில் இருந்து ஒரு மைல் தூரத்திற்குள், இப்பொழுது தலைகீழாக இருப்பது, ஆழ்கடல் எண்ணெய் தோண்டும் மேடையாகும். இப்பொழுது அது ஒரு செயற்கை நீரடித்திட்டு ஆகும். இது ஆழ்கடலில் மற்றொரு பூங்காவாகப் பரிமளிக்கும்." என அது குறிப்பிட்டது.

இந்தப் பத்தியை படித்தபோது, ஸ்ரைனர் வியந்து கூறினார்: "நான் இதுவரை கேட்டதிலேயே மிக அதிகமாக திரிக்கப்பட்ட தர்க்கம் இது." பல மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளைகுடாவிற்குள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டாலும், இயற்கையான கசிவு அல்லது நீண்டகால மாசு மூலம், அவை சூரிய ஒளி மற்றும் நுண்ணியிரால் ஒப்புமையில் விரைவாக கலைக்கப்பட்டு விடுகின்றன. ஏனெனில் அவை மிகச் சிறிய அளவு உடையவை. ஆனால் இப்பொழுது மெக்சிகோ வளைகுடா வழியாக பெரிதும் ஊர்ந்து வரும் திரள்களின் குவிப்புக்கள் அவை தொடர்பு கொள்ளுபவை அனைத்தையும் கொன்றுவிடும். "இதில் இருந்து தப்ப வழியில்லை. இந்த அளவு நச்சு எண்ணெயால் மில்லியன் கணக்கான உயிரினங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டன" என்றார்.

இதற்கு இடையில், ஞாயிறன்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் தொடக்கத் தோல்விக்கு பின்னர், கசியும் தோண்டும் குழாயின் ஒரு பகுதியில் உறிஞ்சும் குழாயைச் செருகுவதில் வெற்றி அடைந்துள்ளது. நிறுவனம் எண்ணெய் மற்றும் மெதேனை குழாய் மூலம் நிலத்தருகே உள்ள டாங்கர் ஒன்றிற்குள் வடிகட்டிச் சேகரித்து உள்ளே அனுப்பத் தொடங்கிவிட்டது.

ஆனால் இச்சமீபத்திய பரிசோதனை பிரிட்டிஷ் பெட்ரோலியத்தின் முந்தைய முயற்சிகளின் விதியைத்தான் அடையும். நீர் மெதேனுடனும் கசிவின் மூலம் வரும் எண்ணெயுடனும் கலந்தால், இக்கலவை உறைந்து, படிமம் ஆகி குழாயைத் தடுப்பிற்கு உட்படுத்திவிடும். கடந்த வாரம் கசிவுகள் மீது இறக்கப்பட்ட "கட்டுப்படுத்தும் மூடியின்" விதியும் இப்படித்தான் இருந்தது.

ஆனால் மிகச்சாதகமான முடிவில்கூட, குழாய் கசிவை கட்டுப்படுத்த மட்டுமே செய்யும். இந்த முயற்சியும் தோற்றால், பிரிட்டிஷ் பெட்ரோலியத்திடம் "உயர் தொப்பி" என்னும் மற்றொரு கருவி இருப்பில் உள்ளது. அது மற்றொரு கசிவைக் கட்டுப்படுத்த முயலும். அதன் பின் இதேபோல் செயலற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதில் கோல்ப் பந்துகளையும் மற்ற குப்பைகளையும் குழாயில் திணிக்கும் முயற்சியும் இருக்கும்.

இந்த நடவடிக்கைகள் முற்றிலும் பரிசோதிக்கப்படாதவையும், திறனற்றவையும் வெறும் கண்காட்சிக்கு உரித்தானவை. பிரிட்டிஷ் பெட்ரோலியம் கசிவு "இன்னும் ஒரு வாரத்திற்குள்" கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும் என்று ஒவ்வொரு வாரமும் கூறுவதற்கு இவை முன்வைக்கப்படுகின்றன. உண்மை என்னவென்றால் பிரச்சினைக்கான ஒரு கவனமான தீர்வான நிலத்திடிக் கசிவைத் தடுப்பதற்கு உதவிக்கிணறுகளை தோண்டுதல் நடைபெறுவதற்கு பல மாதங்கள் பிடிக்கலாம். அதற்குள் இந்தக்கசிவு இதற்கு முந்தைய மோசமான அமெரிக்கப் பேரழிவான Exxon Valdex ஐ மிகச் சிறிதாக்கிவிடும்.