World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil :

4-The origins of Trotskyism in Australia

ஆஸ்திரேலியாவில் ட்ரொட்ஸ்கிசத்தின் மூலங்கள்

Back to screen version

82. ஸ்ராலினிசத்திற்கு எதிராக 1923ல் இருந்து ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பாளர்கள் நிகழ்த்தி வந்த அரசியல் போராட்டமானது, ஜேம்ஸ் பி. கனன் என்னும் அமெரிக்க புரட்சியாளர் ஆறாவது காங்கிரசின் மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனத்தை கம்யூனிச அகிலத்தின் கூட்டத்தில் இருந்து கடத்தி வந்து அமெரிக்காவில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகத்தை (CLA) ஸ்தாபகம் செய்த பின்னர் சர்வதேச பார்வையாளர்களுக்கு எட்டத் தொடங்கியிருந்தது. இந்த முன்முயற்சி சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அபிவிருத்தியில் ஒரு தீர்மானமான பாத்திரத்தை ஆற்றவிருந்தது. 1932வாக்கில், அமெரிக்க கம்யூனிஸ்ட் கழகத்தின் (CLA) செய்தித்தாளான போராளி (The Militant) ஆஸ்திரேலியாவில் விநியோகிக்கப்பட்டுக்கொண்டிருந்தது, கட்சியின் ஸ்ராலினிச தலைமையுடன் மோதலுற்றிருந்த முன்னாள் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPA) போராளிகளின் ஒரு தட்டின் கைகளில் இந்த செய்தித்தாள் படிக்கப் பெற்றது.

83. ட்ரொட்ஸ்கியின் விமர்சனம் ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு கோட்பாட்டுடனான அரசியல் அஸ்திவாரத்தை வழங்கியது. கட்சித் தலைமைக்குள் அதிகாரத்துவ, ஜனநாயக-விரோத தன்மைக்கு ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளாக குறிப்பிடத்தகுந்த எதிர்ப்பு எழுந்திருந்தது, ஆனால் அது தேசிய அடிப்படையில் அமைப்புரீதியில் அமைந்த பேதங்கள் என்கின்ற மட்டத்தில் தான் இருந்து வந்தது. ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு அதிகாரத்துவத்தின் அரசியல் அடிப்படையையும் உள்கட்சி ஜனநாயகம் மீதான அதன் அடக்குமுறையையும் தெளிவுபடுத்தியது, "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்னும் தத்துவத்தில் அவை அமைந்திருப்பதை விளக்கியது. கம்யூனிச அகிலத்தின் ஒவ்வொரு பிரிவுக்குமான தாக்கங்களை வரைந்த ட்ரொட்ஸ்கி பின்வருமாறு எழுதினார்: "தலையீடு மட்டும் ஏதும் இல்லையென்றால் ஒரு தேசிய அரசின் அடிப்படையில் சோசலிசம் கட்டப்பட முடியும் என்பதாய் புதிய கோட்பாடு பிரகடனப்படுத்துகிறது. இதிலிருந்து வருவது, தலையீட்டை தவிர்க்கும் நோக்கத்தோடு வெளிநாட்டு முதலாளித்துவத்துடன் ஒரு ஒத்துழைப்பு கொள்கையை பின்பற்றலாம், பின்பற்றியாக வேண்டும் (வரைவு வேலைத்திட்டத்தின் அனைத்து படோடபமான பிரகடனங்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்), அப்போது தான் சோசலிசம் கட்டப்படுவதற்கான உத்தரவாதம் கிட்டும், அதாவது, முக்கிய வரலாற்று பிரச்சினை தீர்க்கப்படும். அப்படியானால், கம்யூனிச அகிலத்தில் இருக்கும் கட்சிகளின் பணி ஒரு துணைத் தன்மையை பெறும், அதாவது அவர்களது செயல்பாட்டு இலட்சியம், சோவியத் ஒன்றியத்தை தலையீட்டில் இருந்து தடுப்பதை தவிர, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு போராடுவது அல்ல. உண்மையில், இது அகநிலை நோக்கங்கள் பற்றிய பிரச்சினை அல்ல அரசியல் சிந்தனையின் புறநிலை தர்க்கம் பற்றியதாகும்." அதிகாரத்துவத்தை எதிர்த்து போராட அதன் பிற்போக்குத்தனமான தேசியவாத அரசியல் வேலைத்திட்டத்தை உலக சோசலிசப் புரட்சி முன்னோக்கின் மூலம் எதிர்ப்பது அவசியம் என்று ட்ரொட்ஸ்கியும் சர்வதேச இடது எதிர்ப்பாளர்களும் வலியுறுத்தினர்.

84. ஸ்ராலினின் "மூன்றாவது காலகட்ட" நிலைப்பாட்டின் பின்விளைவுகள் குறித்த ட்ரொட்ஸ்கியின் தொடர்ந்த எச்சரிக்கைகள் ஜனவரி 1933ல் ஜேர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்றதில் நிரூபணமாகின. உலகின் மிகவும் சக்திவாய்ந்ததாய் இருந்த ஜேர்மன் தொழிலாள வர்க்கம் ஒரு குண்டு கூட பாயாமல் ஒரு துன்பியல் தோல்வியை சந்தித்திருந்தது. ஏப்ரல் 1, 1933ல் கம்யூனிச அகிலம் அறிவித்தது: "ஜேர்மனி சூழ்நிலை குறித்து தோழர் ஹெகர்ட் அளித்த அறிக்கையைக் கேட்ட பின், ஹிட்லரின் இராணுவப் புரட்சிக்கு முன்னதாகவும் அச்சமயத்திலும், தோழர் தால்மான் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு மூலம் பின்பற்றப்பட்ட அரசியல் நிலைப்பாடும் அமைப்புரீதியான கொள்கையும் சரியானதே என்று கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைமைக் குழு அறிவிக்கிறது." உலகில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கூட கம்யூனிச அகிலத்தையோ அல்லது ஜேர்மன் பேரழிவிற்கு இட்டுச் சென்றிருந்த கொள்கைகளையோ விமர்சிக்கவில்லை. புரட்சி நோக்கங்களைப் பொறுத்தவரை கம்யூனிச அகிலம் இறந்து விட்டிருந்ததை இந்த பதிலிறுப்பு நிரூபணம் செய்தது.

85. ஜூலை 1933ல், நான்காம் அகிலத்தை ஸ்தாபிப்பதற்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார்: "மாஸ்கோ தலைமை ஹிட்லருக்கு வெற்றியை உறுதியளித்த கொள்கையை தவறானதல்ல என்று பிரகடனம் செய்திருப்பதோடு மட்டுமல்லாமல், நடந்தது குறித்த அனைத்து விவாதங்களையும் கூட தடை செய்திருக்கிறது. இந்த அவமானகரமான தடை மீறப்படவில்லை, தூக்கியெறியப்படவுமில்லை. தேசிய காங்கிரசுகள் எதுவுமில்லை; சர்வதேச காங்கிரசுகளும் எதுவுமில்லை; கட்சிக் கூட்டங்களில் எந்த விவாதமும் இல்லை; ஊடகங்களிலும் விவாதமில்லை! பாசிசத்தின் இடியோசைக்கும் எழுந்திருக்காததாகவும், அதிகாரத்துவத்தின் இத்தகைய கோபமூட்டும் செயல்களுக்கு எளிதாய் அடிபணிவதாகவும் ஒரு அமைப்பு இருக்கிறதென்றால், அது இறந்து போயிருக்க வேண்டும், எதுவும் அதற்கு இனி உயிரூட்ட முடியாது என்பது தான் அதனால் விளங்கப் பெறுவதாகும்."

86. புதிய அகிலத்திற்கான அவசியமாயிருக்கும் அரசியல் மற்றும் தத்துவார்த்த அஸ்திவாரங்களை இடுவது ஒரு சிரமமான நெடிய நிகழ்முறையாய் இருந்தது. 1933ம் ஆண்டில் இருந்து 1938 செப்டம்பரில் அது ஸ்தாபிக்கப்படும் வரையான ஐந்து ஆண்டு காலத்தில், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கிற்கும் பல்வேறு மத்தியவாத அரசியல் போக்குகளின் கண்ணோட்டத்திற்கும் இருந்த வித்தியாசத்தை வேறுபடுத்திக்காட்டுவதற்கான ஒரு பொறுமையான ஆனால் தீர்மானகரமான அரசியல் போராட்டத்திற்கு ட்ரொட்ஸ்கி தலைமை தாங்கி நடத்தினார்; அந்த போக்குகள் எல்லாம் ஸ்ராலினிசத்தின் மீதான ட்ரொட்ஸ்கியின் விமர்சனங்களில் உடன்பட்டன என்றாலும் ஒரு புதிய அகிலம் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்த்தன, சீர்திருத்தவாத மற்றும் புரட்சிகர அரசியலுக்கு இடையிலான ஒரு நடுப் பாதையை அவை எதிர்நோக்கின. புதிய அகிலம் உருவாக்கப்படுவதற்கான மத்தியவாதிகளின் எதிர்ப்பு எங்கிருந்து கிளம்பியது என்றால், ஸ்ராலினிச ஆட்சி மற்றும் அதனுடன் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சிகள், மற்றும் அவற்றின் அடிப்படைரீதியாய் தேசியவாத நோக்குநிலை ஆகியவற்றின் எதிர்-புரட்சி பாத்திரம் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வை அவர்கள் நிராகரித்ததில் இருந்தாகும்.

87. ஜேர்மனியின் பிரளய நிகழ்வுகள் மற்றும் சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் பகுப்பாய்வு ஆகிய இரண்டுக்குமான பதிலிறுப்பாக, ஆஸ்திரேலியாவில் மே 1933ல் தொழிலாளர் கட்சி (Workers Party) ஸ்தாபிக்கப்பட்டது. அதன் ஸ்தாபக ஆவணம் அறிவித்தது: "ஜேர்மன் தொழிலாள வர்க்க அமைப்புகள் பாசிசத்தின் காலடியில் நசுக்கப்பட்டது ஜேர்மன் கட்சிக்கு ஒரு தீர்மானமான தலைமையைக் கொடுக்க கம்யூனிச அகிலம் தவறிய குற்றம்மிக்க தோல்வியால் விளைந்ததாகும்... லெனின் கற்றுத் தந்தவை எல்லாம் நடப்பு ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் தனியொரு நாட்டில் சோசலிசத்தை ஸ்தாபிக்கும் கற்பனாவாத தத்துவமாக திரிக்கப்பட்டு, அதன்விளைவாக சர்வதேச புரட்சிகர போராட்டமும் அதற்கு பலியிடப்பட்டிருக்கிறது என்கின்ற வாதத்திற்கு இது மேலும் சான்று சேர்க்கிறது."[37]

88. 1933 டிசம்பரில் தொழிலாளர் கட்சியின் மாதாந்திர இதழான போராளி (Militant) ஒரு புதிய அகிலம் ஸ்தாபிக்கப்படுவதற்கு ட்ரொட்ஸ்கி விடுத்த அழைப்பை ஆதரித்தது. "நான்காம் அகிலத்திற்கு" என்கிற தலைப்பின் கீழ் விளக்கியது: "ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கான முடிவு, தொழிலாள வர்க்கத்தின் சில வட்டாரங்களில் முதிர்ச்சியற்றது என்று கருதப்பட்டாலும் கூட, சர்வதேச புரட்சிகர இயக்கத்தில் இப்போது நடந்து கொண்டிருக்கும் உலக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு பார்த்தால் முக்கியமான வழிமொழிவைப் பெறுகிறது. ஜேர்மன் படுதோல்வி மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தாங்கள் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள அழுத்தம் திருத்தமாய் மறுப்பது அல்லது இன்னும் அந்தத் தவறுகளை ஒப்புக் கொள்ளக்கூட மறுப்பது ஆகியவற்றை தொடர்ந்து, சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் பல்வேறு பிரிவுகளும் மொத்த சூழ்நிலை குறித்து ஒரு தெளிவான முடிவிற்கு வந்திருக்கின்றன....ஒரு புதிய கட்சி மற்றும் ஒரு புதிய அகிலத்தைக் கட்டுவதற்கு அழைப்பு விடுப்பது என்னும் ஒரு தீர்மானமான நடவடிக்கையை இடது எதிர்ப்பாளர்கள் அணி எடுத்திருக்கிறது."[38]

89. ஆகஸ்ட் 1936ல் ஆரம்பித்து மார்ச் 1938 வரை தொடர்ந்த மாஸ்கோ விசாரணைகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்புரட்சிகர வன்முறை அலையின் மிகப் பகிரங்க வெளிப்பாடாகும், இது ஏறக்குறைய ஒரு மில்லியன் மக்கள் உயிரைக் குடித்தது. நூறாயிரக்கணக்கான மார்க்சிஸ்டுகள், சோசலிஸ்டுகள் மற்றும் புத்திஜீவிகள் என பல தசாப்த காலங்களாக இருந்து வந்த புத்திஜீவித மற்றும் அரசியல் கலாச்சாரத்தின் மிக உயர்ந்த பிரதிநிதிகளான அனைவரும் கொன்றுதள்ளப்பட்டனர். இது கணக்கிட முடியாத அளவில் சோவியத் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பயங்கர அடியாக விழுந்தது. மூன்று பொது விசாரணைகளில் அக்டோபர் புரட்சியின் ஏறக்குறைய அனைத்து தலைவர்களுமே தங்களை "எதிர்-புரட்சியாளர்களாக" கண்டித்துக் கொள்ள நிர்ப்பந்தத்திற்குள்ளாயினர். இந்த குருதிதோய்ந்த களையெடுப்பு காலம் முழுவதும், மாஸ்கோவில் இருந்து வந்த அத்தனை பொய்கள் மற்றும் அவதூறுகளையும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி அப்படியே இங்கு வாந்தி எடுத்தது. வளங்கள் பற்றாக்குறையாய் இருந்தபோதிலும், தொழிலாளர் கட்சி மாஸ்கோ விசாரணைகளுக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தது, சிட்னி, மெல்போர்ன் மற்றும் நியூகேஸிலில் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, போராளி மற்றும் ஏனைய பிரசுரங்களை விநியோகித்து இந்த கட்டுகதைகளை அம்பலப்படுத்தியது.

90. தொழிலாளர் கட்சி, ஸ்ராலினிசவாதிகள் மற்றும் அரசினால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த பலம் வாய்ந்த தாக்குதல்களை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த அதே சமயத்தில், தெளிவுபடுத்தப்படாத அரசியல் பிரச்சினைகளும் உள்முக மோதல்களும் அதனைச் சூழ்ந்து கொண்டிருந்தன, அவை பெரும்பாலும் அதன் தனிமைப்படலிலும் தேசிய சூழலின் சக்திவாய்ந்த அழுத்தங்களை வெல்வதில் அதற்கிருந்த சிரமத்திலும் இருந்து எழுந்தவை. போராளி மற்றும் வழக்கமான துண்டுப் பிரசுரங்களுடன் சேர்த்து, ட்ரொட்ஸ்கியின் பல்வேறு படைப்புகளையும் அது வெளியிட்டது, விநியோகம் செய்தது என்றாலும், இதுவும் ஆரம்ப ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி போலவே அரசியல் மற்றும் தத்துவார்த்த தெளிவிற்கு செலவிட வேண்டியதை தேசிய பொருளாதார போராட்டங்களுக்கு மிகையழுத்தம் கொடுப்பதில் செலவிடவும், முந்தைய வருடங்களில் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு கிட்டியிருந்த மூலோபாய அனுபவங்களின் படிப்பினைகளை முழுமையாக திறனாய்வு செய்வது மற்றும் உள்வாங்கிக் கொள்வதன் அரசியல் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவும் முனைந்தது. அத்தகையதொரு அடிப்படையில் மட்டும் தான் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தில் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்க முடியும்.

91. 1937ல், அக்டோபர் தேசிய தேர்தல்களில் ஒரு முக்கிய தலையீட்டை தொழிலாளர் கட்சி மேற்கொண்டது, வர்க்க நனவுள்ள தொழிலாளர்கள் தொழிற் கட்சியில் இணைய வேண்டும் என்பதாக அணுகுமுறையை வரையறுக்க அது முனைந¢தது. இக்காலத்திற்குள், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி1935ம் ஆண்டு நடந்த கம்யூனிச அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கேற்ப, "சமூக பாசிஸ்டுகள்" நிலையைக் கைவிட்டிருந்ததோடு, இன்னுமொரு 180கு திருப்பமாக, இப்போது தொழிற்கட்சியுடனும் முதலாளித்துவ வர்க்கத்தின் "முற்போக்கான" பிரிவுகள் என்று சொல்லப்படுபனவற்றுடனும் ஒரு கூட்டணியை உருவாக்க முனைந்து கொண்டிருந்தது. பாசிச அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு "ஐக்கிய முன்னணி"யை ஸ்தாபிக்கும் பெயரில், ஸ்ராலினிச மக்கள் முன்னணி தொழிலாள வர்க்கத்தை சமூக ஜனநாயகக் கட்சியுடனும் அதன் வழியே முதலாளித்துவத்துடனும் பிணைத்து முதலாளித்துவ அரசை சோசலிசப் புரட்சியில் இருந்து பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. இதற்கேற்றபடி, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிசெயலரான ஜே.பி.மில்ஸ் தொழிற் கட்சியின் அரசாங்கங்கள் எப்போதும் தொழிலாளர்களை வஞ்சித்தே வந்திருக்கின்றன என்று கூறுவது ஒரு "பெரும் தவறாகும்" என்று அறிவித்தார். மாறாக தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை பின்வருமாறு வலியுறுத்தியது: "ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் கொள்கையின் மூடத்தனம் மற்றும் துரோகத்தை அம்பலப்படுத்துவதற்கான போராட்டம் மீண்டும் தொடங்க வேண்டும்.... புரட்சியாளர்களின் கடமை இந்த அனுபவத்தின் படிப்பினைகளை சுட்டிக் காட்டி அனுகூலமாக்கிக் கொள்வதாகும். அனைத்து துறைகள், எல்லாவற்றிற்கும் மேலாய் தொழிற்சங்கங்களில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி மற்றும் ஸ்ராலினிச சீர்திருத்தவாதத்திற்கு எதிராக சமரசமற்ற ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதை இது அடக்கியிருக்கிறது. புரட்சிகர வர்க்கப் போராட்டத்திற்கான லெனினிச வழிமுறைகளை முன்நிறுத்துவதன் மூலம் அவர்களது போலி-இடதுவாதம், அவர்களது செயலற்ற எதிர்ப்பு வேலைநிறுத்த கொள்கை, அவர்களின் வர்க்க ஒத்துழைப்பை அம்பலப்படுத்த வேண்டும். ...நாடாளுமன்ற சீர்திருத்தவாதத்தின் பயனற்ற தன்மையை அங்கீகரிக்கும் தனித்துவமான அனைத்து போராளிகளையும் தொழிலாளர்களுடன் இணைந்து பங்குபெற நாங்கள் அழைக்கிறோம், இந்த தேர்தலில் தொழிற்கட்சிக்கு வாக்களிக்கும் வரை கூட இது செல்லலாம். இந்த தேர்தல் அறிக்கையில் நமது வாதத்தில் இருக்கும் உண்மையைக் காணும் ஒரு தொழிலாளி வழங்கும் இத்தகையதொரு வாக்கு எந்த வகையிலும் ஆஸ்திரேலிய தொழிற்கட்சியின் கொள்கைகளுக்கான ஒரு அங்கீகாரமாய் ஆகாது, மாறாக தொழிலாளர்கள் மத்தியில் நமது கருத்து கொண்டு செல்லப்படுவதற்கு ஒரு பெரும் சாத்தியக்கூற்றினை உறுதி செய்வதற்காக உண்மையான புரட்சியாளர்கள் செய்யக் கூடிய ஒரு தந்திரோபாயமாகத் தான் அது இருக்கும்."

மத்தியவாதத்திற்கு எதிரான போராட்டம்

92. நான்காம் அகில ஸ்தாபகத்தை நோக்கிய பாதையில், தொழிலாளர் கட்சிக்கு உள்ளே பல்வேறு மத்தியவாத குழுவாக்கங்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நிக் ஓரிக்ளாஸால் தலைமை தாங்கி நடத்தப்பட்ட மிக முக்கிய அரசியல் போராட்டங்கள் இருந்தன. ஓரிக்ளாஸ் வேலைவாய்ப்பற்ற தொழிலாளர் இயக்கத்திலும் பின் 1932ல் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து பின் வெகுவிரைவில் வெளியேற்றப்பட்டார். 1934ல் தொழிலாளர் கட்சியில் இணைந்திருந்த அவர் 1937க்குள்ளாக அதன் தலைமைக் காரியாளர்களில் ஒருவராகி இருந்தார்.

93. தொழிலாளர் கட்சிக்குள் இருந்த மிகக் குறிப்பிடத்தக்க குட்டி முதலாளித்துவ குழுவிற்கு சிட்னி பல்கலைக் கழகத்தின் தத்துவப் பேராசிரியரான ஜோன் ஆண்டர்சன் தலைவராய் இருந்தார். ஆண்டர்சன் சிட்னி ஹூக்கின் ஒரு ஆதரவாளர், அமெரிக்காவில் ஹூக் மற்றும் பேர்ன்ஹாம் போலவே, இவரும் இயங்கியல் சடவாதத்தின் எதிர்ப்பாளராய் அறிவித்துக் கொண்டவர். ஆயினும், தொழிலாளர் கட்சியில் இவர் ஒரு ஸ்தாபக உறுப்பினராக இருந்ததோடு பிரதானமான பொதுக்கூட்ட பேச்சாளராகவும் இருந்தார், மாஸ்கோ விசாரணைகளின் புனைவுகள் மற்றும் ஸ்பானிய புரட்சி ஸ்ராலினிஸ்டுகளால் கழுத்து நெரிக்கப்பட்டதையெல்லாம் அம்பலப்படுத்தி போராளி பத்திரிகையிலும் மற்ற இடங்களிலும் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். 1937ம் ஆண்டில், ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் குற்றங்கள் சோவியத் ஒன்றியம் இனியும் ஒரு சீரழிந்த தொழிலாளர் அரசாகக் கூட கருதப்பட முடியாது என்பதைக் காட்டுவதாக வாதிடத் தொடங்கினார், இந்த நிலைப்பாடு கட்சியில் கணிசமான ஆதரவை பெற்றுத் தந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வலதுபக்கம் நோக்கி நகரும் மத்தியவாதப் போக்குகள் போலவே, சோவியத் ஒன்றியத்தின் வர்க்க தன்மை குறித்த ஒரு மார்க்சிச - அதாவது விஞ்ஞான மற்றும் வரலாற்றுரீதியான - பகுப்பாய்வை அதன்மூலம் சோவியத் ஒன்றியத்தை ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராய் பாதுகாக்கும் எந்த அடிப்படையையும் கைவிட ஆண்டர்சன் விரைந்ததற்கு பின்னால் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர திறன்கள் குறித்த ஒரு ஆழ்ந்த ஐயுறவு அமைந்திருந்தது. ஏப்ரல் 1937 தொழிலாளர் கட்சியின் நான்காவது மாநாட்டிற்கு முன்னதாக அளிக்கப்பட்ட திருத்தல்வாதத்தைப் பாதுகாத்து என்கிற தலைப்பிலான சுற்றறிக்கை ஒன்றில் ஸ்ராலினிசத்திற்கான வேர்கள் மார்க்சிசத்துக்கு உள்ளேயே இருப்பதாய் வாதிட்டார். ஆண்டர்சன் எழுதினார்:"ஸ்ராலினிஸ்டுகளின் மொத்த கையிருப்பு அம்சமாய் இருக்கும் சுத்திகரிக்கப்படா அரைகுறை விஷயங்கள் அனைத்தும் தங்களது அடிப்படையை மார்க்சின் தத்துவங்களில் கொண்டிருக்கின்றன. அவரது பிரதிபலிப்பு தத்துவம் (‘reflection theory’), சமூக இயக்கங்களின் சுயாதீனத்தை அவர் மறுத்தது எல்லாம் அவரது ஒரு பொருண்மைவாதத்தை (monism), மற்றும் வெறிபிடித்த குறுங்குழுவாதிக்குத்தான் மிகப் பொருத்தமான நிலைப்பாடான யதார்த்தம் ஒரு தனிப்பாதையில் அபிவிருத்தியுறுவது போன்றவை, சோசலிசத்தின் தவிர்க்கவியலா தன்மை பொருட்களின் இயல்பிலேயே வேரூன்றியிருப்பதாகக் கூறும் இறையியல் கருத்தாக்கம் இயைந்துவருகிறது."[40]

94. ஒரு பொருண்மைவாதத்தையும் பிரதிபலிப்பு தத்துவத்தையும் தாக்கக் கிளம்பி, மார்க்சிச சடவாத உலகக் கண்ணோட்டத்தின் வெகு தத்துவ அடிப்படையையே ஆண்டர்சன் தாக்குகிறார்: அதாவது, உலகத்தின் ஐக்கியம் அதன் சடவாத தன்மையில் தான் அடங்கியிருக்கிறது என்பதையும், சிந்தனை என்பது மனிதனின் நனவில் இருந்து சுயாதீனமான புற உலகின் ஒரு பிரதிபலிப்பே என்பதையும், சமூக இருப்பு தான் சமூக நனவைத் தீர்மானிக்கிறது என்பதை. சோசலிசத்தை இறையியலுடன் அவர் சமப்படுத்துவது என்பது, வரலாற்று அபிவிருத்தியின் நியதிகளால் ஆளப்படும் தன்மை குறித்த மார்க்சிச பகுப்பாய்வு மீது அனைத்து முதலாளித்துவ சித்தாந்தங்களும் காட்டும் குரோதத்தின் ஒரு வெளிப்பாடு ஆகும். ஆண்டர்சன் வர்க்கப் போராட்ட விதிகளை மறுத்தார் என்ற போதிலும், அவை தான் அவரது சொந்த பரிணாமத்தையே தீர்மானித்தன. அனைத்து சமூக இயக்கங்களும் இறுதியாக வர்க்க நலன்களில் இருந்து தான் எழுகின்றன, அவற்றையே பிரதிபலிக்கின்றன என்கின்ற மார்க்சிச புரிதலுக்கான அவரது எதிர்ப்பே தன்னளவில் நன்கறிந்த ஒரு வர்க்க நிகழ்வு ஆகும். இது தங்களின் சொந்த "விடுதலை"க்கு போராடிக்கொண்டிருந்த குட்டி முதலாளித்துவ தட்டுகளின், குறிப்பாக புத்திஜீவிப் பிரிவுகளின் ஒரு வெளிப்பாடு ஆகும் - ஆண்டர்சன் கண்ணோட்டத்தின் இந்த அம்சம் தான் 1950களில் தோன்றியிருந்த தனிநபர்வாத, மார்க்சிச-விரோத "தாராளவாத" இயக்கத்தில் அவரை ஒரு முக்கியபுள்ளியாக ஆக்கியது. 1937 மாநாட்டில் அவரது நிலைப்பாடுகள் ஓரிக்ளாஸால் எதிர்க்கப்பட்ட பின்னர், கட்சியை நோக்கிய ஆண்டர்சனின் குரோதம் இன்னும் பகிரங்கமாய் வெளிப்பட்டது. கட்சியின் பலவீனம் எல்லாம், போல்ஷிவிசத்துடன் ட்ரொட்ஸ்கியின் பிணைப்பால் விளைந்த "ட்ரொட்ஸ்கிசத்தின் திவால் நிலையால்" வந்தது என்று அவர் வலியுறுத்தினார். அவரது கூற்றின்படி, "நாம் இன்று கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் போல்ஷ்விசம் இறந்து விட்டது....."[41] அதன்படி, இன்னொரு தொழிலாளர் கட்சி உறுப்பினர் கட்சியின் அடித்தளத்தைவிரிவாக்குவதற்கு விடுத்த அழைப்பை வழிமொழிந்த ஆண்டர்சன், "போர்க்குணமிக்க போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட, ஆஸ்திரேலிய புரட்சிக்கான நிலைமைகளை உருவாக்கும் விருப்பம் கொண்ட" எவரொருவருக்கும் கட்சியில் கதவு திறந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவித்தார். போல்ஷிவிச விரோதம் ஆஸ்திரேலிய தேசியவாதத்துடன் கைகளை கோர்த்துக்கொண்டது இது கடைசி தடவையல்ல. அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக, ஆண்டர்சன் குழு கட்சியுடன் முறித்துக் கொண்டிருந்தது அத்துடன் இரண்டு வருடங்களுக்காக அவர் "தாராளவாத ஜனநாயகவாதத்தின்" பாதுகாவலனாக கோலோச்சிக் கொண்டிருந்தார். போருக்குப் பிந்தைய வருடங்களில் வெளிப்படையாக ஒரு கம்யூனிச விரோதியான அவர் கம்யூனிசத்தை "நவீன காலத்தின் நோய்" என்று தாக்கினார்.

95. டெட் ட்ரிப் தலைமையிலான ஒரு மத்தியவாத குழுவாக்கத்திற்கு எதிராக இன்னும் நெடியதொரு போராட்டத்தை ஓரிக்ளாஸ் தலைமைதாங்கி நடத்தினார். 1929ல், மாஸ்கோவில் இருக்கும் சர்வதேச லெனின் பள்ளிக்கு அனுப்பப்பட்ட முதல் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினராக ட்ரிப் இருந்தார். திரும்பி வந்த பின், 1934ம் ஆண்டில் "வலது சந்தர்ப்பவாதத்திற்காக" - அதாவது மூன்றாம் காலகட்ட நிலைப்பாடான "சமூக பாசிசத்தின்" எதிர்ப்பிற்காக - 1934ம் ஆண்டில் வெளியேற்றப்படும் வரை கட்சியில் இயங்கிவந்தார். வெகு விரைவில், தொழிலாளர் கட்சியில் இணைந்த ட்ரிப், கொஞ்ச காலத்திற்கு Militant பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தார். தொழிலாளர் கட்சி 1937ம் ஆண்டில் நான்காம் அகிலத்தின் இயக்கத்துடன் முறைப்படி இணைத்துக்கொண்டதை அவர் எதிர்த்தார். ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வுடன் உடன்பாடு தெரிவித்த ட்ரிப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் எல்லாம் தேசியவாத தளத்திற்குள் தங்களது சொந்த தொழிற்சங்கவாத மற்றும் சந்தர்ப்பவாத நோக்குநிலையை தீர்மானித்துக் கொள்வதில் சுதந்திரத்தைப் பராமரித்துக் கொண்டு, அதேசமயத்தில் ட்ரொட்ஸ்கிசத்திற்கான அரசியல் ஆளுமையை பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். மிக அடிப்படையான அளவில், ஆஸ்திரேலிய கட்சி அகிலத்தின் கோட்பாடுகள், வேலைத்திட்டம் மற்றும் அமைப்பு ஒழுங்கிற்கு அடிபணிவதை எதிர்த்தார். 1937 மாநாட்டிற்குப் பின்னர் அவரது குழு கட்சியில் இருந்து விலகியது.

96. சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் சோசலிச சர்வதேசியவாதத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இலட்சியத்தோடு செப்டம்பர் 3, 1938 அன்று பாரிஸ் மாநாடு ஒன்றில் நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டது. முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின் பணிகளும் (அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தயார் செய்ய இடைமருவு கோரிக்கைகளைச் சுற்றி வெகுஜனங்களைத் திரட்டுதல்) என்கின்ற அதன் ஸ்தாபக வேலைத்திட்டம் புரட்சிகர தலைமைக்கான நெருக்கடியைத் தீர்ப்பது தான் சகாப்தத்தின் மைய பணி என்று வரையறுத்தது.

97. மே 1938ல், சற்று காலத்திற்கு ஓரிக்ளாஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சியுடன் ட்ரிப்பின் குழு மீண்டும் இணைந்து ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் (CLA) ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகத்தின் 1939 மாநாட்டின் முதல் தொடக்கத்திலேயே, புதிய நான்காம் அகிலத்துடன் இணைத்துக் கொள்வதான பிரச்சினை இறுதியாகத் தீர்மானிக்கப்பட வேண்டியதாய் இருந்தபோது, ட்ரிப் மற்றும் அவரது சக சிந்தனையாளர்கள் சர்வதேசியவாதத்திற்கு எதிரான தங்கள் குரோதத்தை மறுஉறுதி செய்து வெளிநடப்பு செய்தனர். இது ட்ரொட்ஸ்கிசத்துடனான ட்ரிப்பின் குறைந்த கால தொடர்பை முடிவுக்குக் கொண்டு வந்தது. மெல்போர்னுக்கு நகர்ந்து விட்ட அவர், தன் வாழ்வின் எஞ்சிய காலம் முழுவதும் தன்னை தொழிற்சங்க பிழைப்புவாதிகள் மற்றும் அதிகாரத்துவவாதிகளுக்கான ஒரு பயிற்சிக் களமான விக்டோரிய தொழிற் கட்சி கல்லூரியில் அமிழ்த்திக் கொண்டார்.

98. ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகத்தின் மாநாடு நான்காம் அகிலத்துடன் இணைத்துக் கொள்ள வாக்களித்தது. மே 8, 1939ல் ட்ரொட்ஸ்கிக்கு எழுதிய கடிதத்தில், எதிர்ப்பாளர்களின் சில யுக்திகளை விவரித்த பின் ஓரிக்ளாஸ் இவ்வாறு முடித்தார்: "உண்மையில் எமது வலியுறுத்தலின் பகுதியாக இருந்தது என்னவென்றால் இடைமருவு வேலைத்திட்டம் [நான்காம் அகிலத்தின் ஸ்தாபக ஆவணம்] ஆஸ்திரேலியாவிற்கும் பொருந்தும்" என்பதாகும்."

99. மார்ச் 1940ல், இடைமருவு வேலைத்திட்டத்தின் ஆஸ்திரேலிய வெளியீட்டு அறிமுக உரை ஒன்றில் முந்தைய போராட்டத்தின் படிப்பினைகளை ஓரிக்ளாஸ் இவ்வாறு சுருக்கப்படுத்திக் கூறினார்: "நான்காம் அகிலத்தின் ஆஸ்திரேலிய பிரிவை (ஆஸ்திரேலிய தொழிலாளர் கழகம்) பொறுத்தவரை, இந்த வேலைத்திட்டத்தை வழங்குவதென்பது முன்னோக்கிய ஒரு முக்கிய அடியைக் குறிக்கிறது. உலக அபிவிருத்திகளின் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஒதுங்கியதொரு தேக்கத்தில் நிலைகொண்டு, வர்க்க குரோதங்கள் தாராளவாத முதலாளித்துவ ஆளுகையால் சாந்தப்படுத்தப்படுவதை புதியதொரு தேசத்தின் அபிவிருத்திக் காலகட்டம் சாத்தியமாக்கியிருந்த நிலையில், ஆஸ்திரேலிய மக்கள் அந்நியமார்க்சிச தத்துவங்கள் மீது ஒரு தனிமைப்பட்ட ஒதுங்கிய பின்தங்கிய கண்ணோட்டத்தை உருவாக்கிக் வைத்திருந்தனர். எப்படியிருந்தபோதும் உலகப் பொருளாதார விதிகளின் கம்பீரமான அலையில் இருந்து ஆஸ்திரேலியா விலகி நிற்க முடியாது என்பதை முதலாம் ஏகாதிபத்திய உலகப் போரும், 1929-32ம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார நெருக்கடியும், இன்றைய மக்கள் ஏகாதிபத்திய படுகொலைக்கு உள்ளாகும் நிலையும் எடுத்துக் காட்டுகின்றன. முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சியின் இந்த சகாப்தம் தொழிற்கட்சியின் சீர்திருத்த அரசியலையே நிகழ்ச்சிநிரலில் இருந்து துரிதமாய் அகற்றிக் கொண்டிருப்பதோடு ஆஸ்திரேலிய மக்களுக்கு முன்பாக தப்பிக்க முடியாத மாற்றீடான சோசலிசப் புரட்சியா அல்லது பாசிசமா என்பதை முன்வைக்கின்றது."

100. நான்காம் அகிலத்தால் வழங்கப்பட்ட அரசியல் தெளிவும், தேசிய சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை பிரித்துக் காட்டுவதற்கான அதன் போராட்டமும் தான், இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அரச அடக்குமுறைக்கும் ஏகாதிபத்திய போர் முயற்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணியச் செய்ய முனைந்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தொழிற்கட்சிவாதிகள் கூட்டுச் சக்திகளுக்கும் எதிராக ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகத்தின் ட்ரொட்ஸ்கிசவாதிகள் எடுத்த துணிச்சலான நிலைப்பாட்டுக்கு அடிப்படையை அமைத்தன.

ஸ்ராலினிசம், ட்ரொட்ஸ்கிசம் மற்றும் இரண்டாம் உலகப் போர்

101. இரண்டாம் உலகப் போர் செப்டம்பர் 3, 1939 அன்று ஆரம்பமாகியது. இது பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகத்திற்கான போராய் இருக்கவில்லை, மாறாக, உலகை பங்கிடுதல் மற்றும் மறுபங்கிடுதலுக்கான ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே 1914ம் ஆண்டில் வெடித்திருந்த போரின் இன்னும் பரந்த இன்னும் பேரழிவு தரும் வகையிலான ஒரு தொடர்ச்சி தான்.

102. போர் தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பின்னர், ட்ரொட்ஸ்கி அதன் அடிப்படை தர்க்கத்தை விளக்கினார்: "தற்போதைய போர் ஏகாதிபத்திய முரண்பாடுகளில் இருந்து எழுந்ததாகும், இதில் பங்கேற்பவர்கள் வெர்செயில்ஸ் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திடும் முன்பே அதனைத் தொடக்கி விட்டனர். ஒரே பாதையில் எதிரெதிரே செல்ல விடப்பட்ட இரண்டு ரயில்கள் மோதுவது எப்படி தவிர்க்கவியலாததோ, அது போலவே இதுவும் தவிர்க்கவியலாததாய் இருந்தது....பாசிசத்திற்கு எதிராக ஜனநாயகம் என்கிற வார்த்தை சூத்திரத்தைக் கொண்டு விளையாடும் அரச தந்திரங்கள், மற்றும் பொறுப்புணர்வு குறித்த வார்த்தை ஜாலங்கள் இவை எல்லாம், உலகத்தை புதிய வகையில் பங்கிடுவதற்கு ஏகாதிபத்திய பங்குதாரர்களின் பல்வேறு முகாம்களிடையே மோதல் நடந்து கொண்டிருப்பதை நமக்கு மறக்கச் செய்து விட முடியாது. அதன் முடிவுகள் மற்றும் வழிமுறைகளின் படி பார்க்கும் போது முந்தைய போரின் நேரடியான தொடர்ச்சி தான் இது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழுகிய நிலை தான் இன்னும் அதிகமாகி இருக்கிறது, நாசப்படுத்துவது மற்றும் படுகொலை செய்வதற்கான வழிமுறைகளும் இன்னும் பயங்கரமாகி இருக்கின்றன. ...தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளின் அங்கீகாரமுள்ள பிரதிநிதிகளின் பணி என்னவென்றால் ஒரு ஏகாதிபத்திய முகாமுக்கு எதிராக இன்னொன்றுக்கு உதவி செய்வது அல்ல, மாறாக அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு நடப்பு போரின் பிற்போக்குவாத அர்த்தத்தை புரிந்து கொள்ள, அவர்களது சொந்த வேலைத்திட்டமான நாடுகளின் உலக சோசலிசக் கூட்டமைப்பை முன்னெடுக்க மற்றும் கொள்ளை ஆட்சிக்கு எதிராக பொது கூட்டுழைப்புடனான ஆட்சியைக் கொண்டு மாற்றுவதற்கு அவர்களை தயார்படுத்த கற்பிப்பதாகும்."[45]

103. போர் வெடித்தது ட்ரொட்ஸ்கியின் வாழ்வை இன்னும் பெரிய அபாயத்தில் நிறுத்தியது. முதலாம் உலகப் போரின் புரட்சிகர பின்விளைவுகள் இன்னும் நினைவுகளில் நீங்காதிருந்த நிலையில் அப்போர் கொண்டு வரக் கூடிய சமூக எழுச்சிகள் குறித்து அச்சம் கொண்டு ஸ்ராலினிச அதிகாரத்துவம், ட்ரொட்ஸ்கி உண்மையில் நாட்டிற்கு வெளியிலிருந்து இயங்கும் புரட்சிகர அரசாங்கத்தின் தலைவராய் இருப்பதாக அஞ்சியது. ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஆழமாய் ஊடுருவியிருந்த முகவர்களின் ஒரு வலைப்பின்னல் மூலமாக ட்ரொட்ஸ்கியை படுகொலை செய்வதற்கு ஸ்ராலின் உத்தரவிட்டார். ஆகஸ்ட் 20, 1940 இல் ட்ரொட்ஸ்கி மெக்சிகோவின் கோயோகானில் இருந்த அவரது வீட்டில், ஸ்ராலினிச இரகசிய போலிஸ் GPU முகவரான ரமோன் மெர்காடரால் தாக்குதலுக்கு உள்ளானார். அடுத்த நாள் ட்ரொட்ஸ்கி இறந்து போனார். சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று & சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தில் விளக்கப்படுவதைப் போல: "ட்ரொட்ஸ்கியின் படுகொலை சர்வதேச சோசலிசத்தின் நலனில் ஒரு பேரழிவான அடியைக் கொடுத்தது. அவர் அக்டோபர் புரட்சியின் சக தலைவராக மட்டும் இருந்தவரில்லை, ஸ்ராலினிசத்தின் சமரசப்படுத்தப்பட முடியாத எதிர்ப்பாளராகவும் நான்காம் அகிலத்தின் ஸ்தாபகராகவும் இருந்தார். 19ம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்கள் மற்றும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் தோன்றிய பரந்துபட்ட புரட்சிகர தொழிலாளர் இயக்கத்திற்கு உந்துசக்தியாய் விளங்கிய மரபுவழி மார்க்சிசத்தின் அரசியல், புத்திஜீவி மற்றும் அறநெறி மரபுகளுக்கு மாபெரும் கடைசிப் பிரதிநிதியாய் திகழ்ந்தார்."

104. நான்காம் அகிலத்தின் ஸ்தாபகத்தை எதிர்த்த மத்தியவாத அமைப்புகளுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி நடத்திய போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை இப்போர் அடிக்கோடிட்டு காட்டுவதாய் அமைந்தது. போரின் பாதையில், இவர்கள் அனைவருமே ஒன்று தங்களது "சொந்த" முதலாளித்துவ வர்க்கத்தின் முன்பாகவோ அல்லது "ஜனநாயக" ஏகாதிபத்திய சக்திகள் முன்பாகவோ மண்டியிட்டனர். நான்காம் அகிலமும் அதன் பிரிவுகளும் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை பராமரிக்கவும் மற்றும் "ஜனநாயக" மற்றும் பாசிச ஆட்சிகள் இரண்டுக்கும் எதிரான ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் போராடின.

105. ஆஸ்திரேலியாவில் பிரிட்டனின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து உடனடியாக பழைமைவாத ஐக்கிய ஆஸ்திரேலியக் கட்சி (UAP) பிரதமர் ரொபேர்ட் மென்ஸைஸிடம் இருந்து "எனவே ஆஸ்திரேலியாவும் போரில் இருக்கிறது" என்கிற அறிக்கை வெளியானது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தொழிற் கட்சி தனது முழு ஆதரவை அறிவித்தது. அடுத்த ஆறு ஆண்டு காலங்களில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகளின் முக்கிய உதவியுடன் அது மீண்டுமொரு முறை போர் முயற்சியை ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. ஏழு மில்லியனுக்கு மிகாத மக்கள்தொகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் வரை ஐரோப்பா, ஆபிரிக்கா, தென்மேற்கு பசிபிக் மற்றும் ஆசிய பகுதிகளில் ஆஸ்திரேலிய இராணுவப் படைகளில் சேவை செய்ததுடன், இதில் சுமார் 40,000 பேர் இறந்தனர்.

106. போர் வெடித்ததானது, முந்தைய மூன்று ஆண்டுகளில் நீக்கங்கள், மந்திரிசபை மாற்றங்கள் மற்றும் ஊழல்களால் உடைந்து போயிருந்த (UAP) தலைமையிலான அரசாங்கத்தின் நெருக்கடியை இன்னும் அதிகப்படுத்தியது. பிரதான அரசாங்க தலைவர்களின் பாசிச ஆதரவு அனுதாபங்களை நன்கறிந்து கொண்டிருந்த தொழிலாள வர்க்கத்துக்குள்ளாக அதற்கான குரோதம் பெருகியது. தேசப்பற்றுவாதத்தை ஊடகங்கள் ஊதி விட்ட போதிலும், அரசாங்கத்தின் தேசிய பதிவேடுக்கு (National Register) எதிர்ப்பு தீவிரமுற்றது - கட்டாய இராணுவ சேவைக்கான ஒரு முன் அறிகுறியாகத் தான் இது பரவலாய் கருதப்பட்டது. பெருமந்த நிலையின் அழிவுகளில் இருந்து தொழிலாளர்கள் தங்கள் மன ஊக்கத்தை மீட்டிருந்த நிலையில் வேலைநிறுத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கின. 1940 தேர்தலில், ஆஸ்திரேலிய தொழிற் கட்சியும் பிரதான ஸ்தாபக கட்சிகளும் சம எண்ணிக்கையில் இடங்களைப் பெற்றன, நாடாளுமன்ற அதிகாரத்துக்கான சமநிலை இரண்டு முதலாளித்துவ சுயேட்சைகளால் தீர்மானிக்கப்படுவதாய் ஆனது, அவர்கள் ஆரம்பத்தில் தங்களது ஆதரவை (UAP)க்கு வழங்கினர். போருக்கு எதிர்பை தொடர்ந்த தொழிற் கட்சி கூட்டணி அரசாங்கத்தில் இணைய வேண்டும் என்று மென்ஸைஸ் விரும்பினர், ஆனால் தொழிற் கட்சித் தலைவர் ஜோன் கர்டின் மறுத்து விட்டார். அதற்குக் காரணம் கர்டின் போரை எதிர்த்தார் என்பதோ அல்லது UAP உடன் கூட்டணியை எதிர்த்தார் என்பதோ அல்ல - சொல்லப் போனால், அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி இரண்டிலும் இருந்து சம பிரதிநிதித்துவத்துடன் ஆலோசனை போர்க் குழு (Advisory War Council) ஒன்றை ஸ்தாபிப்பதற்கு தொழிற் கட்சி மென்ஸைஸ் உடன் ஒரு உடன்பாட்டை எட்டியிருந்தது - மாறாக, அரசாங்கத்தில் சேரும் பட்சத்தில் வெளியே தொழிற் கட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தில் அபிவிருத்தியாகக் கூடிய இயக்கத்தைக் குறித்து அவர் அஞ்சியதே காரணம். இடதுசாரி விக்டோரியன் சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினராகத் தான் கர்டின் அரசியலுக்கு வந்தார், முதலாம் உலகப் போரில் கட்டாய இராணுவ சேவைக்கு கடுமையான எதிர்ப்பாளராகவும் இருந்தார். அந்த சமயத்தில், கட்டாய இராணுவ சேவைக்கு எதிரான இயக்கம் ஹியூக்ஸ் மற்றும் ஹோல்மேன் போன்றோரை தொழிற் கட்சியில் இருந்து வெளியேற்றி இருந்தது. தொழிலாள வர்க்கம் இடது நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அதன் மிகவும் போர்க்குணமிக்க தட்டுகளின் தலைமையை, அந்த சமயத்தில் போர் "ஏகாதிபத்திய வகையானது" என்று கண்டித்த கம்யூனிஸ்ட் கட்சி வென்று கொண்டிருந்த நிலைமைகளின் கீழ் ஒரு கூட்டணி அரசாங்கத்தில் நுழைவது குறித்து கர்டினுக்கு கவலை இருந்தது.

107. போரை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி "ஏகாதிபத்திய வகையானது" என்று கூறியது கோட்பாட்டின் அடிப்படையில் அல்ல. மாறாக இது, ஆகஸ்டு 1939ல் மோலோடோவ் மற்றும் ரிப்பன்டிராப் மூலம் கைச்சாத்திடப்பட்ட ஸ்ராலின்-ஹிட்லர் பரஸ்பரம் தாக்கிக் கொள்ளாமை ஒப்பந்தத்தின் தர்க்கத்தில் இருந்து பிறந்ததாகும். இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி உலகெங்கும் இருக்கும் மற்ற ஸ்ராலினிச கட்சிகளுடன் சேர்ந்து, பாசிசத்திற்கு எதிராக "ஜனநாயகத்தை" பாதுகாக்க தொழிற் கட்சி மற்றும் முதலாளித்துவத்தின் "முற்போக்கான" பிரிவுகளுடன் சேர்ந்து ஒரு மக்கள் முன்னணி உருவாக்கப்படுவதற்காக போராடி வந்தது. போர் வெடித்த பின் ஆரம்ப நாட்களிலும் இந்தக் கொள்கையே தொடர்ந்தது. எடுத்துக்காட்டாக, செப்டம்பர் 12, 1939ல் போர் "ஏகாதிபத்திய வகையானது" என்கின்ற ட்ரொட்ஸ்கிச வகைப்படுத்தலை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் செய்தது, ஒரு வாரத்திற்குப் பின், "ஹிட்லரைத் தோற்கடிக்க மற்ற பிரிட்டிஷ் படைகளுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய மனிதசக்தி மற்றும் வளங்களின் சக்தியின் முழு பலத்தையும் திரட்டப்படுவதற்கு" அழைப்பு விடுத்தது. அடுத்த சில வாரங்களில் ரஷ்யாவின் நலன்கள் தெரிவிக்கப்பட்டன. உடனே இன்னொரு பல்டியடித்த ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி, போரை "ஏகாதிபத்திய வகையானது" என்று வர்ணித்ததோடு, அதனுடைய பாதிப்பை பிராந்தியத்திற்குள் கையாண்டதற்கு ஸ்ராலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை புகழ்ந்தது. இந்த புதிய நிலைப்பாடு அமெரிக்காவில், பிரிட்டனில் அல்லது ஆஸ்திரேலியாவில் உள்ள ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்க இயக்கத்தை அபிவிருத்தி செய்யும் கவலையால் ஊக்குவிக்கப்பட்டதல்ல, மாறாக அந்த இயக்கத்தை போரின் பின்விளைவுகள் குறித்து அச்சம் கொண்டிருந்த சோவியத் அதிகாரத்துவத்திற்கு ஒரு பின்னிணைப்பாகி விட வேண்டிய கவலை தான் அதற்கு இருந்தது.

108. ஜூன் 22, 1941ல் சோவியத் ஒன்றியத்தில் நாஜி ஊடுருவலைத் தொடர்ந்து "ஒப்பந்தம்" முழுமையாய் முறிந்து போனதையடுத்து, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிமீண்டுமொருமுறை துரிதமாய் பாதையை மாற்றி போர் முயற்சியின் மிகத் தீவிர ஆதரவாளரானது. 1941, செப்டம்பர் 19ல் அது வெளியிட்ட அறிக்கையில் பினவருமாறு அறிவித்தது: "கம்யூனிஸ்ட் கட்சி இப்போதைய போரை முழுமனதாய் ஆதரிக்கிறது. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிற நேச நாடுகளின் பொதுவான இலக்கிற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து அவசியப்படக்கூடிய உன்னதமான போர் முயற்சிகளுக்காக கட்சியும் அதன் உறுப்பினர்களும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்." ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது போரை ஆதரிக்கும் நிலையில், தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு பாதை திறந்திருந்தது. அக்டோபர் 30, 1941ல், ஒரு வரவு-செலவுத் திட்ட விவாதத்தில் இரண்டு சுயேச்சை அங்கத்தவர்களும் கட்சி மாற, இறுதியில் UAP - நாட்டுக்கட்சி கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்தது. மென்ஸைஸை இடம்பெயர்த்து பதவியில் அமர்ந்திருந்த பழமைவாதக் கட்சியின் பிரதமர் ஆர்தர் ஃபாடன் பதவி விலகும் சமயத்தில் தொழிற் கட்சி தலைவர் கர்டினை அரசாங்கம் உருவாக்க அழைக்குமாறு ஆளுநர்-ஜெனரலுக்கு ஆலோசனையளித்தார்.

109. மென்ஸைஸ் அரசாங்கத்தால் ஜூன் 1940ல் சட்டவிரோதமானதென அறிவிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தானாகவே சட்டபூர்வமாகி விட்டது. உத்தியோகபூர்வ முடிவு, டிசம்பர் 1942ல், தொழில்துறை போர் முயற்சிகளை ஆதரிப்பதில் ஸ்ராலினிஸ்டுகளின் பொறுப்புகளை விவரிக்கும் ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கர்டினின் தொழிற்கட்சி அரசாங்கம் இரு தரப்பும் கையெழுத்திட்ட பின் தான் வந்தது. இந்த ஒப்பந்தத்தின் படி, "போர் மீது முறையான விசாரணை தொடுப்பதில் உதவுவதற்கு", "போருக்கான பொருட்களை உற்பத்தி செய்வதையும் போர் அல்லது தொழில்துறை நோக்கங்களுக்கான சேவைகளை வழங்குவதையும் அதிகரிப்பதற்கு" ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி தனது சக்திக்குட்பட்ட அனைத்தையும் செய்யும், அத்துடன் "துறையில் இணக்கத்தை ஊக்குவிக்கவும், வருகையின்மை, உற்பத்தி நிறுத்தங்கள், வேலைநிறுத்தங்கள் அல்லது வேறு எந்த தடைகளையும் குறைப்பதற்கும்" தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். [49]

110. 1930களின் பொருளாதார நெருக்கடியும் அதற்குப் பின் போர் வெடித்ததும், மீண்டுமொருமுறை, ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் பலவீனத்தையும் அது தனது ஆட்சியை பராமரிக்க வரலாற்று ரீதியாக தொழிற் கட்சியை சார்ந்திருக்க வேண்டியதிருந்ததையும் வெளிப்படுத்தியது. கூட்டணி அரசாங்கம் உடைந்தது மட்டுமல்ல, பிரதான முதலாளித்துவ கட்சியான UAP முழுமையாய் சிதறிப் போனது. போர் நெருக்கடி கடந்திருந்த போது மட்டும் தான் 1944ல் லிபரல் கட்சி என்னும் ஒரு புதிய அமைப்பை மென்ஸைஸால் உருவாக்க முடிந்தது. தேவைப்பட்ட சமயத்தில் முதலாளித்துவம் தொழிற் கட்சியை நோக்கித் திரும்பியதென்றால், அதே சமயத்தில் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி தனியாக ஆட்சி செய்ய முடியவில்லை. தொழிற் கட்சியினர் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் மீது தங்கியிருந்தனர், அவர்களோ தங்களது கட்சி சோசலிசம் மற்றும் அக்டோபர் புரட்சியுடன் போலியாக அடையாளப்படுத்திக் கொண்டதன் மூலம் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெற்றிருந்த ஆதரவை, தொழிற் கட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு பயன்படுத்தினர்.

111. நூற்றாண்டின் திருப்பத்தில், தொழிற் கட்சி பிரிட்டிஷ் பேரரசின் கட்டமைப்புக்குள்ளான ஆஸ்திரேலிய தேசிய-அரசை உருவாக்குவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றியிருந்தது. 1941ம் ஆண்டின் இறுதியில், பசிபிக்கில் போர் தொடங்கியிருக்க, தூர கிழக்கில் ஜப்பானிய இராணுவத்தின் முன்னேற்றங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ் படைகள் நிலைகுலைய, தொழிற் கட்சியினர் சர்வதேச நோக்குநிலையில் ஒரு முக்கிய நகர்வை செய்தனர். போர் வெடிப்பதற்கு முன்பாக நான்காம் அகிலம் விளக்கியிருந்ததைப் போல, ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் யாருடன் அணிசேரும் என்பது ஜப்பானுக்கு எதிராக பசிபிக் பிராந்தியத்தில் தமது நலன்களை யார் சிறந்த வகையில் பாதுகாக்க முடியும் என்று அது நம்புகிறது என்பதன் மூலம் தான் தீர்மானிக்கப்படும். போரின் ஆரம்ப காலத்தில் ஜப்பானால் பிரிட்டிஷாருக்கு நேர்ந்த தோல்விகள் - பிப்ரவரி 15, 1942 அன்று சிங்கப்பூர் வீழ்ந்ததும் பிரிட்டிஷ் தலைமையிலான படைகளின் மிகப் பெரும் சரணடைவு நேர்ந்ததும் இதன் உச்சமாகும் - பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் இந்த இலக்கை இனியும் பூர்த்தி செய்ய முடியாது என்பதைக் காட்டின. அதனையடுத்து விசுவாசத்தை எழுச்சியுற்று வந்த ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டிய நேரமாக அது ஆனது. டிசம்பர் 26, 1941 அன்று அளித்த புத்தாண்டு செய்தியில், பிரதமர் கர்டின் அறிவித்தார்: "ஆஸ்திரேலியா அமெரிக்காவைத் தான் எதிர்பார்த்திருக்கிறது என்பதை எந்த வகை தயக்கமும் இன்றி நான் தெளிவுபட சொல்கிறேன், இங்கிலாந்துடனான எங்களது பாரம்பரிய இணைப்புகள் அல்லது உறவு போலவே எந்த மனக்கிலேசமும் இன்றி."[50]

112. போர் தென்பட்டது முதலே, ட்ரொட்ஸ்கிச ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் மட்டும் தான் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான முன்னோக்கினை முன்னெடுத்த ஒரே அரசியல் போக்கு ஆகும். செப்டம்பர் 10, 1939 அன்று "இது நமது போர் அல்ல" என்று தலைப்பிட்ட போராளி இதழின் சிறப்பு பதிப்பு அறிவித்தது: "முதலாம் உலகப் போர் எப்படி இருந்ததோ, அதைப் போலவே இரண்டாம் உலகப் போரும் ஒரு ஏகாதிபத்தியப் போரே. இது ஜனநாயகத்தை காப்பதற்கான போர் அல்ல; முதலாளித்துவ இலாபங்களுக்கான போர் என்பது தெளிவு." "சுதந்திரம், ஜனநாயகம், அமைதி, இன்னபிற" நல்ல விடயங்களாய் தொனிக்கும் எதற்காகவும் இந்தப் போர் நிகழவில்லை மாறாக இது "யார் ஐரோப்பாவை கட்டுப்படுத்துவது, யார் காலனித்துவ மக்களை கொள்ளையடிப்பது, சுரண்டுவது என்பதில் போட்டி ஏகாதிபத்திய தாதாக்களுக்கு இடையே" நிகழக் கூடிய போர் ஆகும் என்பதை அந்த அறிக்கை விளக்கியது. "நமது சொந்த நாட்டில் எதிரி" என்கிற தலைப்பில் அந்த அறிக்கை தொடர்ந்தது: "சாம்பர்லின் [பிரிட்டிஷ் பிரதமர்] ஹிட்லரை நிறுத்த விரும்புகிறார் என்றால் ஹிட்லர் ஜேர்மனியில் தொழிலாள வர்க்கத்தை நசுக்குகிறார் என்பதனால் அல்ல, மாறாக ஹிட்லர் பிரிட்டனின் காலனிகளை அச்சுறுத்துகிறார் என்பதால். டலாடியேர் [பிரெஞ்சு பிரதமர்] ஹிட்லரை நிறுத்த விரும்புகிறார் என்றால் ஹிட்லர் ஜேர்மன் தொழிலாளர்களின் சுதந்திரத்தை அழித்து விட்டார் என்பதனால் அல்ல, மாறாக சில பிரெஞ்சு காலனிகளை இழந்து விடுவோமோ என்று அவர் அஞ்சுவதால் தான். ரூஸ்வெல்ட் [அமெரிக்க ஜனாதிபதி] ஹிட்லர் மீது பாயத் தயாராய் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் ஜேர்மன் தொழிலாளர்களை ஏறக்குறைய ஹிட்லர் அடிமைகள் போலாக்கி விட்டார் என்பதால் அல்ல, மாறாக இப்போது அமெரிக்க முதலாளிகளின் கைவசம் இருக்கும் தென் அமெரிக்க வர்த்தகத்தில் பெரும் பகுதியை ஜேர்மனி கையகப்படுத்த அச்சுறுத்துகிறது என்பதால். இங்கிலாந்து, பிரான்ஸ், மற்றும் அமெரிக்காவை ஆளுவோர் ஹிட்லரை மேற்கண்ட காரணங்களுக்காக விரும்பவில்லை என்றாலும், ஹிட்லரிசம் குறித்து அவர்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. மாறாக, தங்களது சொந்த நாடுகளின் எதேச்சாதிகார அமைப்பு தான் தங்களது அதிகாரத்தையும் சிறப்புரிமைகளையும் பாதுகாப்பதற்கு தங்களுக்கு இருக்கும் ஒரே வழிமுறை என்பது அவர்களுக்குத் தெரியும்." "தொழிலாள வர்க்கம் பாசிசத்தை தோற்கடிக்க போராட வேண்டும், ஆனால் அந்த பொறுப்பை "ஜனநாயகங்கள்" என்று சொல்லப்படுவனவற்றின் முதலாளித்துவ வர்க்கத்தை நம்பி அது ஒப்படைக்க முடியாது" என ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் விளக்கியது.

113. போர்க் காலம் முழுவதிலுமே தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீனமான நடவடிக்கையையும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் பாதுகாத்தது. மே 1940ல், NSW சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியபோது, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெகுஜனப் பேரணிகளுக்கும், வேலைநிறுத்தத்தை நீட்டிப்பதற்கும், தொழிலாளர்களின் தற்காப்புப் படைகளை உருவாக்குவதற்கும் மென்ஸைஸ் அரசாங்கத்தை கீழிறக்குவதற்கும் அழைப்பு விடுத்தனர். அதே மாதத்தில், மிருகத்தனமான போர்க்காலத்திற்குரிய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தின் கீழான ஒரு அரசாங்க உத்தரவு மூலம் போராளி தடை செய்யப்பட்டது. ஜூன் 1940ல், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிசட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, அது வெறுமனே அடிபணிந்ததொரு சமயத்தில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சிதடையை உடனே அகற்ற வேண்டுமென ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் உடனடியாய் கோரியது. தன்னுடைய சொந்த உறுப்பினர்கள் மீது ஸ்ராலினிஸ்டுகள் தொடர்ந்து ஆத்திரமூட்டல் செய்து வந்திருந்த நிலையிலும் கூட, இத்தடை ஒட்டுமொத்தமாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு செய்யக் கூடிய பாதிப்புகளை அது சுட்டிக் காட்டியது. வெகுவிரைவில், ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகமும் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு, அதன் ஊடகமும் அமைப்பும் அடக்கப்பட்டபோது, தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து பின்வருமாறு எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்களை அது பரவலாய் விநியோகித்து பதிலிறுப்பு செய்தது: "முதலில் எல்லா எதிர்ப்பையும் நசுக்குவோம், பின்னர் கட்டாய இராணுவ சேவை: இதுதான் மென்ஸைஸ் போடும் திட்டம். ...மென்ஸைஸ் ஒழிக, ஏகாதிபத்தியப் போர் ஒழிக, ஒரு சோசலிச சமாதானத்திற்காக."

114. போரில் ஜப்பான் நுழைந்ததும், அது ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிக்கக் கூடும் என்ற அச்சுறுத்தல் எழுந்ததும் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம்மற்றும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்திற்கான அதன் போராட்டத்தின் மீது அரசியல் அழுத்தங்களை அதிகரித்தது. ஆனால் கட்சி ட்ரொட்ஸ்கியால் முன்னரே அரசியல்ரீதியாக தயார் செய்யப்பட்டிருந்தது. 1937ல், இத்தகையதொரு அச்சுறுத்தல் எழுந்தால் எவ்வாறு பதிலிறுப்பது என்பதில் ஆலோசனையளிக்குமாறு ஓரிக்ளாஸிடம் இருந்து வந்த கடிதத்திற்கு எழுதிய பதில் கடிதத்தில் ட்ரொட்ஸ்கி அறிவித்தார்: "இயல்பாகவே எந்த ஒரு ஆஸ்திரேலிய தொழிலாளரோ அல்லது விவசாயியோ ஜப்பானால் வெல்லப்பட்டு அதற்கு அடிபணிவதை விரும்பவில்லை. ஒரு புரட்சிகரக் கட்சியைப் பொறுத்தவரை வெறுமனே இந்த பிரச்சினை குறித்து எங்களுக்குக் கவலையில்லைஎன்று கூறுவது தற்கொலைக்குச் சமமானது. ஆனால் ஆஸ்திரேலியாவின் சுதந்திரத்தை பாதுகாக்கும் கடமையை நாம் ஒரு முதலாளித்துவ மற்றும் அடிப்படையாக ஏகாதிபத்திய அரசாங்கத்திடம் கொடுக்க முடியாது. ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கை ஜப்பான் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஜப்பானிய மக்கள் மனதில் இதற்கான ஒருவகை நியாயப்படுத்தலை ஏற்படுத்த வசதி செய்து தந்திருக்கிறது. தனது பொதுவான கொள்கையின் மூலமாக முதலாளித்துவ அரசாங்கம் ஆஸ்திரேலிய மக்களை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மற்றும் இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்துகிறது. இறுதியாய், ஒரு மாபெரும் சமூக நெருக்கடி தோன்றும் சமயத்தில், முதலாளித்துவ அரசாங்கமானது, தவிர்க்கவியலாமல் அந்நிய ஏகாதிபத்தியவாதிகளுடன் சமரசம் செய்து கொள்ளவும் தயாராயிருக்கும்; சமூகப் புரட்சியை தடுக்கும் சந்தர்ப்பத்திற்காக நாட்டின் முக்கிய நலன்களையும் தியாகம் செய்யத் தயாராய் இருக்கும். ஒவ்வொரு முதலாளித்துவ நாட்டிலும் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை நோக்கிய நமது சமரசமற்ற கொள்கையை நியாயப்படுத்த இந்த காரணங்களே போதுமானது. ஆனால் தேசிய சுதந்திரம் குறித்த பிரச்சினையில் நாம் கவலை கொள்ளாதவர்கள் என்று பிரகடனம் செய்வதற்கு எந்த ஒரு மிகச் சிறிய காரணமும் இல்லை."

115. ட்ரொட்ஸ்கியின் 1937 கடிதம் மற்றும் ஒரு பாட்டாளி வர்க்க இராணுவ கொள்கை குறித்து அவர் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) உடன் நடத்தியிருந்த விவாதங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு கொள்கை ஒன்றை ஜனவரி 1942ல் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வழங்கினர். போருக்கு எதிராக தனிநபர் எதிர்ப்புக்கு அழைப்பு விடுத்த குட்டி-முதலாளித்துவ சாந்தப்படுத்தல்வாதிகளுக்கு எதிராக நான்காம் அகிலமானது, தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாள வர்க்க அதிகாரிகளை கொண்டு தொழிலாளர்களுக்கு இராணுவக் கலைகளில் பயிற்சியளிக்க அழைப்பு விடுத்தது. ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய தொழிலாளர்களும் விவசாயிகளும் போராட விரும்புகின்ற அதே சமயத்தில், ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கத்திற்கோ ஜப்பானால் வெற்றி கொள்ளப்படுவது என்பது காலனிகளில் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றி காண்பது என்பதை விடவும் "குறைந்த தீமையாக"க் கருதப்படும் என்பதை தொழிலாளர்கள் பாதுகாப்பு கொள்கை விளக்கியது. "ஜனநாயக" ஏகாதிபத்தியவாதிகள் "பூர்வீக மக்கள் ஆயுதமேந்துவதை விட எதிரிகளின் இராணுவ வெற்றியே உகந்தது" எனக் கருதுவார்கள், ஏனென்றால் "மக்கள் ஆயுதமேந்தினால் அது பழைய முதலாளியை மட்டுமல்ல புதிதாய் உள்ளே வரும் முதலாளியையும் துரத்துவதற்கான தவிர்க்கவியலாத போராட்டமாகி விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்." தோல்வி உறுதி எனத் தெரிந்தால், "ஆஸ்திரேலிய முதலாளித்துவ வர்க்கம் தனது தேசப்பற்றுவாதத்தைகீழே போட்டு விடும்; ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகளுடன் உடன்பாட்டிற்கு வரும்; வெகுஜனங்களின் முதுகுக்குப் பின்னே அவர்களை சுரண்டுவதற்கு கூட்டுச் சேரும். .....பிரதான எதிரி அதாவது தொழிலாள வர்க்கம் சொந்த நாட்டில்தான் இருக்கின்றது என்கிற அடிப்படையில் தான் எப்போதும் முதலாளித்துவ வர்க்கம் செயல்படுகிறது."[53]

116. "அனைவரும் உற்பத்திக்காக" என்கிற சுலோகத்தின் கீழ் கர்டின் அரசாங்கத்துடன் ஸ்ராலினிஸ்டுகள் கூட்டுச் சேர்ந்ததற்கு ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பின்வருமாறு பதிலளித்தனர்: "முதலாளித்துவ வர்க்கத்திற்கு நாங்கள் சொல்வது: எங்கள் வீடுகளும் குடும்பங்களும் அதிபயங்கர அபாயத்தில் இருப்பதாய் சொல்கிறீர்கள். நல்லது, எங்களுக்கு ஒன்றும் நடுக்கமில்லை. ஆனால் போரை வழிநடத்துவதற்கோ தலைமை கொடுப்பதற்கோ நாங்கள் எங்களது வர்க்க எதிரிகளான உங்களையோ, அல்லது உங்கள் உயர் அதிகாரிகளையோ நம்பப் போவதில்லை. நாங்களே சொந்தமாக தெரிவு செய்த தலைவர்களின் கீழ் இராணுவப் பயிற்சி பெறவும் ஆயுதபாணியாகவுமே நாங்கள் விரும்புகிறோம். உங்களது மதிப்புமிகுந்த உடைமைகளை எதிரியின் குண்டுவீச்சு நாசப்படுத்தும் போது சரணடைவதை நாங்கள் எதிர்நோக்கப் போவதில்லை. நாங்கள் தான் உருவாக்குகிற மக்கள். நாசப்படுத்தப்படும் ஒவ்வொன்றையும் எங்களால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆயுதமேந்திய மக்களால் சாதிக்கப்படக் கூடிய அற்புதங்கள் எங்களுக்குத் தெரியும். மாட்ரிட், மாஸ்கோ, லெனின்கிரேடு எங்களது நினைவில் இருக்கிறது. அதிகப்பட்ச உற்பத்தி உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆண்டாண்டுகளாக, வங்கிகளுக்கு அடிபணிந்து, ஆஸ்திரேலிய உற்பத்தியை நீங்கள் சதிசெய்து குறைத்தீர்கள். 1929ம் ஆண்டில் உங்கள் தொழிற்சாலைகள் மற்றும் பட்டறைகளை எல்லாம் மூடி எங்களை தெருவுக்குக் கொண்டு வந்தீர்கள். இன்று கையூட்டும் லாபநோக்கும் சேர்ந்து உங்கள் போர் முயற்சியாக இருக்கிறது. மத்திய அரசாங்கம் போர்த் தொழிற்சாலைகளை தேசியமயமாக்கட்டும், அவை தொழிலாளர்களின் தொழிற்சாலைக் குழுக்களால் கட்டுப்படுத்தப்படட்டும். அப்போது உங்களது பெரும் ஆதாயங்களில் இருந்து தொழிலாளர்களுக்கு சிறப்பான நிலைமைகள் பெறுவதுடன், உற்பத்தி தங்குதடையில்லாமல் இருக்கும். ...."[54]

117. கைதுகள் மற்றும் சிறைவாசங்கள் உள்ளிட்ட அரசு அடக்குமுறைகள், மற்றும் ஸ்ராலினிஸ்டுகளிடம் இருந்தான வார்த்தைரீதியான மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையிலும் இந்த கொள்கைகளுக்கான போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் போலிஸ் நடத்திய சோதனைகளில் மூன்று ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கைது செய்யப்பட்டு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை பெற்றனர். போரின் ஏகாதிபத்திய குணத்தை அம்பலப்படுத்தும் இலக்கியத்தை வைத்திருந்தது, இராணுவத்தில் படைவீரர் குழுக்களை தேர்வு செய்வதற்கு அழைப்பு விடுத்தது, இதன்மூலம் இராணுவப் படைகளிடையே "அதிருப்தியைத் தூண்டியது" ஆகியவை தேசிய பாதுகாப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தின் கீழ் அவர்கள் செய்த குற்றங்களாய் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 1942ல் கர்டின் அரசாங்கத்துடன் உடன்பாடு கண்டபின் ஸ்ராலினிஸ்டுகளின் பிரச்சாரம் உச்சத்தை எட்டியது. பிரதமர் கர்டினின் கட்டாய இராணுவ சேவை சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை இழக்கச் செய்திருந்த நிலையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருந்தது என்று ட்ரொட்ஸ்கிச செய்தித்தாளான தி சோசலிஸ்ட் கூறியது. "போர்க்குணம் மிக்க சாதாரண தொழிலாளர்கள் தங்களது கருத்துகளை வெளியிடாமல் அவர்களைப் பயமுறுத்தி வைக்கும் அவமானகரமான வேலையை" அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அளித்திருந்தார். தொழிற் கட்சி அரசாங்கத்துடன் ஸ்ராலினிஸ்டுகளின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு ஆழமானதோ அந்த அளவுக்கு ட்ரொட்ஸ்கிசவாதிகள் மீதான தங்களது தாக்குதலை அவர்கள் அதிகப்படுத்தினர். 1943 ஜனவரியில் ஸ்ராலினிச செய்தித்தாளான ட்ரைப்யூன், தி சோசலிஸ்ட் பத்திரிகை "பாசிஸ்டுகளுக்கு நன்றாய் வேலை செய்வதாக" கண்டித்தது. "யங்கிகள் (Yanks -அமெரிக்கர்கள்) ஆஸ்திரேலியாவை 'ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு' செய்கிறார்கள்; போர் 'ஏகாதிபத்திய வகையானது'; இன்னும் வேலை நிறுத்தங்கள் வாழ்க, இன்னும் இடைக்குழப்பங்கள் வாழ்க, பின் குறிப்பாக எல்லா இடங்களிலும் கம்யூனிஸ்ட்கள் ஒழிக. இந்த பாசிச எலிகள் கவலைப்படாத ட்ரொட்ஸ்கியின் அச்சு அணித் தலைவர்களுக்கு நல்லதொரு வேலையை செய்கிறார்கள், ஜப்பானியர்கள் ஆஸ்திரேலியாவை ஆக்கிரமித்தால் இவர்கள் வரவேற்புக் குழுவிலும் இடம்பெறுவார்கள்...." ஆகஸ்டு 1945ல், ஹிரோஷிமாவிலும் நாகாசாகியிலும் அணு குண்டுகள் வீசப்பட்டதை ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகள் கொண்டாடினர்.[55]

118. போர்க்காலம் முழுவதிலும், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் வெகு சிறு சக்திகளாய் இருந்தனர், அதே சமயத்தில் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி சுமார் 20,000 உறுப்பினர்கள் கொண்டிருந்ததாய் பெருமை கூறிக் கொண்டது. ஆனால் ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகம் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நலன்களை பாதுகாத்த ஒரு வேலைத்திட்டத்தை உறுதிசெய்தது. மேலும் சிட்னியில் இருந்த கொகடூ தீவு மற்றும் மோர்ட்ஸ் துறைமுக கப்பல் பழுது நீக்கும் தளங்களின் பிரச்சினையில் ஸ்ராலினிஸ்டுகள் மீதான அவர்களின் வெற்றியின் மூலம், கோட்பாட்டு ரீதியான ஒரு அரசியல் நிலைப்பாடுக்காக தொடர்ந்து போராடுவதன் முக்கியத்துவத்தை அவர்கள் விளங்கப்படுத்தினர்.

119. கப்பல்துறைகளில் 1943-44ல் தொடங்கிய தொழிற்சாலை மோதல் 1945 இன் முதல் பாதியில் மூன்று மாத கால யுத்தத்தில் உச்சமுற்றது. இரும்புத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய தலைமையில் இருந்த ஸ்ராலினிஸ்டுகள் கண்காணித்து வந்த தொழிற் கட்சி அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு எதிராக தங்களது ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் பாதுகாப்பதற்காக கப்பல்துறை தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருந்தனர். போருக்குப் பிந்தைய உடனடிக் காலத்தில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே முதன்மையாக தொழிற் கட்சி அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக அபிவிருத்தியுற இருந்த, மேம்பட்ட ஊதியங்கள் மற்றும் வேலைநிலைமைகளுக்கான தொழில்துறை கிளர்ச்சிக்கு ஒரு முன்னறிவிப்பாக இந்த போராட்டம் அமைந்தது. இரும்பு தொழிலாளர் சங்கத்தின் பால்மெயின் கிளையின் தலைமைக்கான தேர்தலில், ஓரிக்ளாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் அவர்களது சூழ்ச்சித் தந்திரங்களைத் தோற்கடித்து, வெற்றி பெற்றதோடு இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த இந்த ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தில், வலதுசாரி தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் முதல் தொழிற் கட்சி இடதுகள் மற்றும் சிடுமூஞ்சித்தனமான "முன்னாள்-ட்ரொட்ஸ்கிசவாதிகள்" வரை போர் குறித்த ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகத்தின் நிலைப்பாட்டை "கிறுக்குத்தனமானது" என்றும், "தலைக்கனமானது" என்றும் "முழுமையாய் யதார்த்தமற்றது" என்றும் கண்டித்து வந்திருக்கிறார்கள். அப்போதும் அதற்குப் பின்னரும் அவர்கள் வலியுறுத்தி வந்ததெல்லாம், போர் சமயத்தில் தொழிலாள வர்க்கம் தனது "சொந்த" ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும், வேறு எந்த கொள்கையும் யதார்த்தமற்றது என்பதைத் தான். ஆனால், போரின் தன்மை குறித்து ட்ரொட்ஸ்கியும் நான்காம் அகிலமும் முன்னெடுத்த அரசியல் முன்னோக்கும், ஒவ்வொரு கட்டத்திலும் தொழிலாள வர்க்கம் தனது சுயாதீனமான நலன்களுக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தை ஆஸ்திரேலிய ட்ரொட்ஸ்கிசவாதிகள் வலியுறுத்தி வந்ததும் தான், மிகவும் முன்னேறிய தட்டுகளின் மதிப்பினை வென்று, ஸ்ராலினிஸ்டுகள் மீதான ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கழகத்தின் வெற்றிக்கு இட்டுச் சென்றது என்பதை வரலாற்றுப் பதிவு எடுத்துக் காட்டுகின்றது.

தொடரும்...

அடிக்குறிப்புகள்

34. லெனினுக்குப் பிந்தைய மூன்றாம் அகிலம் op. cit., ப. 47.

35. கம்யூனிச அகில ஆவணங்கள், தொகுதி III, 1929-1943, ஜேன் டிக்ராஸ் (எட்.), ரௌட்லெட்ஜ், 1971, ப.257.

36. ‘கம்யூனிஸ்ட் கட்சிகளை கட்டுவதும் அகிலத்தை புதிதாய் எழுப்புவதும் அவசியமானது’, ஜேர்மனியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம், op. cit., ப.431.

37. தொழிலாளர் கட்சி கொள்கை அறிக்கை, http://www.reasoninrevolt.net.au/pdf/d0070.pdf, பார்வையிட்டது பிப்ரவரி 15, 2010.38. ‘நான்காம் அகிலத்திற்கு’, போராளி, எண். 3, டிசம்பர் 1, 1933, பக். 1-2

39. ‘தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கை’, போராளி, தொகுதி 4, எண்.11, சிட்னி, அக்டோபர் 18, 1937, பக். 1-2.

40. ஜான் ஆண்டர்சன், ‘திருத்தல்வாதத்தை பாதுகாத்து’, ஆபத்தான போராடும் வாழ்க்கை: பேராசிரியர் ஜான் ஆண்டர்சனின் அரசியல் எழுத்துகள், மார்க் வெப்லின் (எட்), ப்ளூட்டோ பிரஸ், சிட்னி, 2003, ப. 145.

41. ஹால் கிரீன்லேண்ட், ரெட் ஹாட், நிக் ஓரிக்ளாஸின் வாழ்க்கையும் காலமும், வெலிங்டன் லேன் பிரஸ், நியூட்ரல் பே, 1999, ப. 76.42. அதே புத்தகம், ப. 77

43. ஆபத்தான போராடும் வாழ்க்கை: பேராசிரியர் ஜான் ஆண்டர்சனின் அரசியல் எழுத்துகள், op. cit., ப.18.

44. ரெட் ஹாட், நிக் ஓரிக்ளாஸின் வாழ்க்கையும் காலமும், op. cit., பக். 92-93.

45. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘இரண்டாம் உலகப் போரைத் துவக்கிய குற்ற உணர்வுக்குரியவர்கள் யார்?’ லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள்: 1939-40, பாத்ஃபைண்டர், நியூயார்க், 1977. பக். 84-85.

46. சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று & சர்வதேசிய அடித்தளங்கள், ஷீஜீ. நீவீt., பக்.59.

47. காட்டிக் கொடுப்பு: ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வரலாறு, தொழிலாளர்கள் செய்தி ஆசிரியர் குழு, ஆலன் புக்ஸ், சிட்னி, 1981, பக். 89.

48. அதே புத்தகம்., பக். 90

49. அதே புத்தகம்., பக். 90

50. அவரது சொந்த வார்த்தைகளில். ஜோன் கர்டினின் உரைகளும் எழுத்துகளும், டேவிட் பிளாக் (எட்.), பாரடிம் புக்ஸ், பெண்ட்லி, மேற்கு ஆஸ்திரேலியா, 1995, பக். 195.51. போராளி, சிட்னி, செப்டம்பர் 10, 1939, தொகுதி.2 எண். 8 (C.L.A. வரிசை) பக். 1

52. லியோன் ட்ரொட்ஸ்கி, ‘ஆஸ்திரேலியர்களுக்கான கடிதம், டிசம்பர் 23, 1937’, லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள் 1937-38, பாத்ஃபைண்டர், நியூயார்க், 1976, பக். 116-117.

53. காட்டிக்கொடுப்பு: ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு வரலாறு, ஷீஜீ. நீவீt., பக். 104-105.

54. அதே புத்தகம், ப. 105.

55. அதே புத்தகம், ப. 112.