World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil :

7-The founding of the Socialist Labour League

சோசலிச தொழிலாளர் கழகத்தின் ஸ்தாபகம்

Back to screen version

171. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவு, இருந்த அமைப்பின் ஒரு கன்னையில் இருந்து தோன்றவில்லை. எப்படியிருந்தாலும், பகிரங்க கடிதம் மற்றும் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் 1961-63 ஆவணங்கள் இவற்றில் இருந்த, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு, குறிப்பாக சந்தர்ப்பவாதம் மற்றும் அனுபவவாதத்திற்கு எதிரான ட்ரொட்ஸ்கிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் கோட்பாடுகளின் பாதுகாப்பு தான் ஏப்ரல் 1972ல் ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகத்தை ஸ்தாபித்த சக்திகளை ஈர்த்திருந்தது. பப்லோவாத முன்னோக்கின் தனியம்சமாய் இருந்த புறநிலைவாதத்திற்கு எதிராக அகநிலைக் காரணியின் பாத்திரமான புரட்சிகர தலைமையின் நெருக்கடியை தீர்ப்பதற்கான அவசியம் பற்றிய பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் முன்வைத்த வலியுறுத்தல்தான் இதில் அதிமுக்கியமாய் அமைந்தது.

172. 1969ன் பிற்பகுதியில், பெருகும் போரெதிர்ப்பு இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தீவிரவாத மற்றும் ஸ்ராலினிச தட்டுகளுக்கு எதிராக, சிட்னியில் ஏராளமான இளையோர் ஒரு குழுவை உருவாக்கியிருந்தனர். ஒரு புரட்சிகர அமைப்பை ஸ்தாபிக்கும் சிந்தனையோடு மார்க்சிசத்தின் மீதான ஒரு தீவிர ஆய்வை மேற்கொள்வது தான் அக்குழுவின் நோக்கமாக இருந்தது. தொழிலாளர்கள் நடவடிக்கை (Workers Action) என்று பின்னர் அழைக்கப்பட்ட இது பிற நகரங்களில் உருவாகியிருந்த இதேபோன்ற குழுக்களுடன் இணைப்புகளை ஸ்தாபித்திருந்தது. இந்த குழுக்களுக்குள் இருந்த பிரதான நபர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆவணங்களின் நகலைப் பெற்றிருந்தனர்.

173. செப்டம்பர் 1971ல், பிரெட்டன் வூட்ஸ் நிதியமைப்பு முறிந்து ஒரு மாதம் கூட ஆகியிராத ஒரு சமயத்தில், தொழிலாளர் நடவடிக்கை அமைப்பு Labour Press என்னும் மாதமிருமுறை செய்தித்தாளின் முதல் பதிப்பை வெளியிட்டது, இதில் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்தின் இன் நாளிதழான Workers Press செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரைகள் மறுபிரசுரம் செய்யப்பட்டு இடம்பெற்றன.174. ஆயினும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவோ அல்லது மற்ற குழுக்களோ அரசியல் ரீதியாக ஒரேதன்மைகொண்டனவையாக இல்லை, இதனால் Labour Press வெளியீட்டை தொடர்ந்து வந்த காலத்தில் ஒரு முரண்பாடுகள் வெடித்தன. பத்திரிகைக்கு ஆதரவு மிதமிஞ்சியதாய் இருந்தது என்றாலும், முக்கிய கருத்து வேறுபாட்டின் உள்ளடக்கமாக இருந்தது என்னவெனில் இரண்டு எதிரெதிர் வர்க்க நோக்குநிலைகளாகும்: ஒன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் தொழிலாள வர்க்கத்தை நோக்கியதாய் இருந்தது, இன்னொன்று நடுத்தர வர்க்க தீவிரவாத சூழல் மற்றும் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் "இடது" பிரிவுகளை நோக்கி மீண்டும் திரும்பியதாய் இருந்தது. 1971 இறுதிக்குள்ளாக, இந்த கருத்துமோதல்கள் எல்லாம் ஒரு மையப் பிரச்சினையை சுற்றிக் கொண்டன: நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுடன் இணைப்பு கொள்வதா கூடாதா என்பதில். நிக் பீம்ஸால் ஆதரிக்கப்பட்ட ஜிம் மல்க்ரூ தலைமையில் இணைப்புக்கு ஆதரவு தெரிவித்தோர், குழுக்கள் ஒன்று சேர்வதற்கான ஒரே அடிப்படையாக இருந்ததே நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வேலைத்திட்டத்தை ஏற்றுக் கொண்டது தான் என்பதை வலியுறுத்தினர். எதிர்த்தவர்கள் எல்லாம், அவ்வப்போது சர்வதேசியவாதம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவுக்கு உதட்டளவு சேவை செய்து விட்டு, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாய் தொழிற்சங்கங்கள் மற்றும் தேசிய வட்டத்திற்குள் கூட்டிணைப்பு வேலையை தொடர்ந்து நடத்துவதற்கான தமது சுதந்திரத்தை பாதுகாக்கின்ற ஒரு தேசிய அடிப்படையிலான அமைப்பை விரும்பினர்.

175. சர்வதேசியவாதிகள் வெற்றிபெற்று மே 1972ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் நான்காவது காங்கிரசுக்கு தம்மை இணைத்துக் கொள்ளவதற்காக இரண்டு பிரதிநிதிகளை அனுப்புவதற்குசோசலிச தொழிலாளர் கழகத்தின் இன் ஸ்தாபக மாநாடு தீர்மானித்தது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் செயலாளரான கிளிஃப் சுலோட்டர் ஜூன் 1972ல் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பயணம் மேற்கொண்டார். அதன் பின், சோசலிச தொழிலாளர் கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தகவல் நவம்பர் 11, 1972 அன்று தெரிவிக்கப்பட்டது.

176. கனனின் பகிரங்க கடிதத்தை ஒரிக்ளாஸின் குழு மறுதலித்த 18 ஆண்டுகளுக்கு பின்னர் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஆஸ்திரேலிய பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதானது சர்வதேச மற்றும் ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். வர்க்க மோதல்கள் கூர்மையுற்று தொழிலாளர் மற்றும் இளைஞர்கள் தீவிரமயப்பட்ட நிலைமைகளின் கீழ், போருக்குப் பிந்தைய முதலாளித்துவ பொருளாதார எழுச்சி முறிந்து போயிருந்ததன் இடையே, பப்லோவாதத்தின் நாசங்களுக்கு எதிரான சிரமமான நிலைமைகளில் பாதுகாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டம் ஆஸ்திரேலிய தொழிலாளர் இயக்கத்தில் போராடுவதற்கு ஆதரவாளர்களை கண்டது. சோசலிச தொழிலாளர் கழகம் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அன்றி சூழ்நிலை ஒத்துவந்ததை கருதியோ அல்லது நடைமுறைவாத அணுகுமுறையை கருதியோ உருவானதல்ல ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவம்; கட்சி குறித்த லெனின்-ட்ரொட்ஸ்கி தத்துவம்; ஏகாதிபத்திய சகாப்தத்தின் தன்மையும் அதிலிருந்து உருவாகும் கடமைகளும்; தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரம் மற்றும், தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம், அதேபோல் ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் தொழிற்கட்சி "இடதுகளை" தழுவியிருந்ததால் பெண்ணியம் மற்றும் கறுப்பின தேசியவாதம் உள்ளிட்ட அடையாள அரசியலால் ஒரு வர்க்க முன்னோக்கினை பதிலீடு செய்த பல்வேறு நடுத்தரவர்க்க தீவிரவாத போக்குகள் ஆகியவற்றில் இருந்து அதன் அரசியல் சுயாதீனத்திற்கு போராடுவதற்கான அவசியம் ஆகியவையே அந்த கோட்பாடுகளாகும்.

177. ஆயினும், ட்ரொட்ஸ்கிசத்தை கோட்பாடுரீதியாக பாதுகாத்ததும் மற்றும் பாட்டாளி வர்க்க நோக்குநிலையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவிற்கு புதிய ஆதரவாளர்களை ஈர்த்துக் கொண்டிருந்த அந்த சரியான சமயத்தில், கட்சியின் அரசியல் பணியின் அச்சாணியாக அமைந்திருந்த பப்லோவாதத்திற்கு எதிரான சர்வதேசிய போராட்டத்தில் இருந்து பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் விலகத் தொடங்கினர். அவர்கள் மீது விழுந்திருந்த அழுத்தம் மிகக் கடினமானது. நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் ஒரே இன்னொரு பிரிவாக நெடுங்காலம் இருந்த OCI மத்தியவாதத்தை நோக்கி நகர்ந்து விட்டிருந்தது, அத்துடன் பப்லோவாதிகள் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு எதிராக சர்வதேசிய அளவில் அவதூறு மற்றும் ஆத்திரமூட்டும் பிரச்சாரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் பிரிட்டனில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு எழுச்சி இருந்ததோடு இளைஞர்களின் தீவிரமயமாக்கமும் நிகழ்ந்தது. 1966ம் ஆண்டில் இந்த அழுத்தங்கள் ஜெரி ஹீலியின் நான்காம் அகிலத்தின் பிரச்சினைகள் என்கின்ற கடிதமாய் வெளிப்பாடு கண்டது, அதில் பிரிட்டிஷ் பிரிவின் மையப் பணி பிரிட்டனில் ஒரு வலிமையான புரட்சிகரக் கட்சியை கட்டுவது தான் என்றும், அது உலகின் மற்ற பகுதிகளில் இருக்கும் புரட்சிகரவாதிகளுக்கு "முன்மாதிரியாய்" அமையும் என்றும் அவர் வாதிட்டார். நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட அடித்தளங்களாய் அமைந்திருந்ததும், தேசிய சந்தர்ப்பவாதத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிரான போராட்டத்தின் மீது மைய முக்கியத்துவத்தை இருத்தியதுமான சர்வதேசிய கருத்தாக்கங்களில் இருந்து ஒரு அடிப்படையான நகர்வு இந்த நிலைப்பாட்டின் பின்னால் இருந்தது.

178. சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் OCI இடையேயான பிளவு அரசியல் பிரச்சினைகளின் மீதான எந்த தெளிவும் இன்றி நடத்தப்பட்டது. உண்மையில், குறிப்பாக போருக்குப் பிந்தைய காலகட்டத்தின் மிக முக்கியமான அரசியல் போராட்ட நிகழ்வும் அத்துடன் வரலாற்றின் மிகப்பெரிய வேலைநிறுத்தப் போராட்ட இயக்கங்களில் ஒன்றுமான பிரான்சில் மே-ஜூன் 1968ல் நடந்த ஒரு விளைவாகவும், மூலோபாயம் மற்றும் தந்திரோபாயம் குறித்த முக்கிய கேள்விகள் அதுபற்றி தோன்றியிருந்த போதிலும், இந்த பிளவு தந்திரோபாயம், அமைப்பு அல்லது அரசியல் நிலைப்பாடுகள் குறித்ததல்ல மாறாக "மார்க்சிச தத்துவத்தை" மையமாகக் கொண்டது என்று சோசலிச தொழிலாளர் கழகம் அறிவித்தது. "கருத்துவாத ரீதியான (Idealist ways) சிந்திக்கும் முறைகளுக்கு எதிரான ஒரு முழுமையான மற்றும் ஆழமான போராட்டம் அவசியப்படுகிறது, அது வேலைத்திட்டம் மற்றும் கோட்பாட்டில் உடன்பாடு எட்டும் பிரச்சினையைக் காட்டிலும் வெகு ஆழமாய் செல்வதாகும் என்பதை பிரிட்டனில் கட்சி கட்டும் அனுபவம்" தங்களுக்குக் கற்பித்திருப்பதாக சோசலிச தொழிலாளர் கழகம் தெரிவித்தது. கிளீஃப் சுலோட்டரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிலைப்பாடு, "வேலைத்திட்டத்தின் முக்கியத்துவம் தான் கட்சியின் முக்கியத்துவம்" என்றும் வேலைத்திட்டத்தில் "நிகழ்வுகள், கடமைகள் குறித்த ஒரு பொதுவான புரிதல்" அடங்கியிருக்கிறது என்றும் வலியுறுத்தி வந்திருந்த ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாட்டிற்கு நேரடியாய் முரண்பட்டது. OCI உடனான பிளவின் முக்கியத்துவம் தொடர்பாக ஒரு முழுமையான மதிப்பீட்டை செய்வதும், மே-ஜூன் எழுச்சி தோற்கடிக்கப்பட்டதின் படிப்பினைகளை திறனாய்வு செய்வதும் தான் மே 1972ல் நடந்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் நான்காவது காங்கிரசின் மையப் பணியாக அமைந்தது. தோல்விக்கு இட்டுச் சென்றிருந்த ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளின் கொள்கைகளையும், அத்துடன் OCI இன் கொள்கைகளையும் ஆய்வு செய்வது இதற்கு அவசியமாய் இருந்தது. ஆனால் இரண்டு குறித்துமே ஏறக்குறைய எந்த விவாதமும் இல்லை. சர்வதேசிய இயக்கத்திற்குள்ளான இந்த அடிப்படைக் கேள்விகளில் தெளிவுபடுத்தத் தவறியது நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட பிரிவுகளில் ஒரு கணிசமான பாதிப்பைக் கொண்டிருந்தது. உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி மீதான வேலைத்திட்ட தெளிவு தேவைப்பட்டதொரு அந்த சரியான தருணத்தில், அந்த கடமையில் இருந்து சோசலிச தொழிலாளர் கழக தலைமை விலகிச் சென்று கொண்டிருந்தது.

179. பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகளின் அரசியல் அச்சில் நேர்ந்த இந்த நகர்வு ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அபிவிருத்தியை ஆழமாய் பாதித்தது. அனைத்துலகக் குழுவுடன் இணைந்துகொள்வதற்கு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் வரலாற்றுப் போராட்டங்கள் மீதான இக்கட்சியின் பகுப்பாய்வு மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு கடந்து வந்திருந்த போராட்டங்கள் குறித்த இக்கட்சியின் அரசியல் மதிப்பீடு ஆகிவற்றை ஸ்தாபிக்கக் கூடிய எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க அவசியமில்லாமலே இக்கட்சி ஒரு பிரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. உண்மையில், ஜூன் 1972ல் தான் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பயணத்தின் போது, இத்தகைய அரசியல் ஆய்வை ஊக்குவிப்பதைக் காட்டிலும், கட்சிக்குள் தோன்றியிருந்த தொடர்ந்து கொண்டிருந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கும்படி சுலோட்டர் வலியுறுத்தினார். அதன் விளைவு ஆஸ்திரேலியாவில் குட்டி முதலாளித்துவ தீவிரவாதத்தின் வரலாற்றுடன் தொடர்புபட்ட முக்கிய பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்படாமலும் தீர்க்கப்படாமலுமே விடப்பட்டன.

180. எப்படி இருந்தாலும், சுலோட்டர் தனது பயணத்தில் இளம் சோசலிச தொழிலாளர் கழக தலைமைக்கு அரசியல் கற்பிப்பதில் ஒரு முக்கியமான பங்களிப்பை செய்தார். தாராளவாதக்கட்சி அரசாங்கத்தின் பெருகும் நெருக்கடியையும் தொழிற் கட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கான இயக்கத்தையும் சுட்டிக் காட்டிய அவர், தொழிற்சங்கங்களில் போர்க்குணத்தை ஊக்கப்படுத்துவதை கட்சியின் மையக் கவனமாக்கும் போக்கிற்கு எதிராக வலியுறுத்தினார். சோசலிச தொழிலாளர் கழகம் தனது அரசியல் பகுப்பாய்வை அபிவிருத்தி செய்வதோடு எதிர்வரும் தொழிற்கட்சி அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாய் தயார்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

181. 1972 டிசம்பர் தேர்தலுக்கான முன்னோட்டத்தில், சோசலிசக் கொள்கைகளுக்கு உறுதியளிக்கும் ஒரு தொழிற் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான போராட்டம் என்கின்ற பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகளால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு தந்திரோபாய நோக்குநிலையிலான பரப்புரையை சோசலிச தொழிலாளர் கழகம் முன்னெடுத்தது. இடைமருவு வேலைத்திட்டத்தில் இருந்து தருவிக்கப்பட்ட இந்த தந்திரோபாயம் தொழிற் கட்சியின் உண்மையான பாத்திரத்தை அம்பலப்படுத்துவது மற்றும் மிகவும் அரசியல்-நனவுடனான தொழிலாளர்களை புரட்சிகர கட்சிக்கு வென்றெடுப்பது ஆகிய நோக்கங்களை கொண்டிருந்தது. இரண்டு வருடங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து பழமைவாத பாத்திரம் ஆற்றியிருந்த ஆஸ்திரேலிய தொழிற் கட்சியில் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவினர் வலிமையான பிரமைகளும் விசுவாசமும் கொண்டிருந்தனர். சிலர், வலதுசாரி எனப் பரவலாய் அறியப்பட்ட விட்டலாம் மீது சற்று குரோதமுற்றிருந்தனர் என்றாலும், சோசலிச எண்ணம் கொண்ட தொழிலாளர்கள் அப்போதும் சோசலிசத்திற்கான பாதை ஆஸ்திரேலிய தொழிற் கட்சி வழியாகத் தான் செல்ல முடியும் என்று நம்பினர். சோசலிச தொழிலாளர் கழகத்தின் வரலாற்று மற்றும் அரசியல் பகுப்பாய்வுடன் சேர்த்து அதன் தந்திரோபாயமும், ஆஸ்திரேலிய தொழிற் கட்சிமற்றும் தொழிலாளர் வாதத்தின் வர்க்க தன்மையை தெளிவுபடுத்துவதை, தொழிலாளர்களை அதிலிருந்து பிரிப்பதை, மற்றும் மிகவும் வர்க்க நனவுள்ள தட்டுகளை ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுப்பதை நோக்கமாய் கொண்டிருந்தன.

182. சோசலிஸ்ட் தொழிலாளர் கழகத்தை (Socialist Workers League) சேர்ந்த பப்லோவாதிகளின் (ஜனநாயக சோசலிச கட்சியின் முன்னோடி) நோக்குநிலையோ இதற்கு மாறானதாய் இருந்தது. தொழிற்கட்சி, முதலாளித்துவ மற்றும் பாட்டாளி வர்க்க "இரட்டைத்தன்மை" களையும் ஒருசேரக் கொண்டிருக்கிறது என்றும் அதனை நெருக்கி இடதின் பக்கமாய் நகர்த்த முடியும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாய், தொழிற்கட்சிக்கு வெளியில் இருந்து கொண்டு தொழிற்கட்சியின் தலைமைக்கு ஒரு மாற்றினைக் கட்டுவதை முன்னெடுப்பது "அபத்தமானது" என்று அவர்கள் வலியுறுத்தினர். 1970களின் ஆரம்பம் தொடங்கி அந்த அமைப்பு மேற்கொண்ட அத்தனை திருப்பங்கள், மாற்றங்கள் மற்றும் மறுகண்டுபிடிப்புகள் இடையே ஒன்று மட்டும் தான் மாறாமல் இருந்தது, அது என்னவென்றால் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனம் பெறப் போராடுவதை எதிர்ப்பதாகும்.

183. சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்பினுள் ஏற்படுத்தியிருந்த குரோதத்தை "இடது" பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் பீட்டர்சன் வார்த்தையழகுடன் வெளிப்படுத்தினார். 1950களில் சிறிது காலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவில் இருந்திருந்த இவர் ஆஸ்திரேலிய பப்லோவாதிகளின் பொறுப்பில் கொஞ்ச காலம் இருந்தபின் தொழிற் கட்சியில் இணைந்திருந்தார். "தொழிலாள வர்க்க அதிகாரம் குறித்த பிரச்சினையை முன்நிறுத்தும் இடைமருவுக் கோரிக்கைகள்" அவசியமாய் இருப்பதை பீட்டர்சன் ஏற்றுக் கொண்டார். ஆனால் இத்தகையை கோரிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் நடப்பு தலைமைக்கு எதிரான நடைமுறைப் போராட்டம் எதுவும் அவசியமில்லை, அவற்றை எல்லாம் "விடுமுறைகால பேச்சுக்களாக (Holiday speechifying) வைத்துக் கொள்ளலாம் என்று லேபர் பிரஸ்க்கு அனுப்பிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக்கினார். தொழிற் கட்சி வாதத்தின் தனிமுத்திரையாய் விளங்கும் மார்க்சிசத்திற்கான தேசியவாத குரோதத்தை சுருக்கமாகக் கூறுமுகமாக அவர் எழுதினார்: "ஆஸ்திரேலியாவில் தொழிற் கட்சி இயக்கத்தின் பிரதான சாபக்கேடுகளில் ஒன்றாய் இருப்பது என்னவென்றால் ஆஸ்திரேலிய சமூகத்தின் உறுதிப்பட்ட நிலைமைகள் குறித்த எந்த குறிப்புகளும் இன்றி வெளிநாட்டு மாதிரிகளில் இருந்து தருவிக்கப்பட்ட குறுங்குழுவாதக் குழுக்களின் கொள்கைகளை கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக் கொள்வது தான்". யதார்த்தத்தில், "உறுதிப்பட்ட நிலைமைகள்" எனப்படுவதான ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்தின் தனித்துவமான நிலைமைகளை "உலக நிகழ்முறை ஒன்றின் அடிப்படையான அம்சங்களின் உண்மையான கூட்டுச்சேர்க்கையாக" (ட்ரொட்ஸ்கி) மட்டும் தான் புரிந்து கொள்ள முடியும். எந்த மட்டத்திற்கு, தேசிய சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான தனது போராட்டங்களில் இருந்து மார்க்சிச இயக்கம் வடித்தெடுத்த சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மூலோபாய அனுபவங்களின் மீது தங்கியிருக்கிறதோ அந்த மட்டத்திற்குத் தான் தொழிலாள வர்க்கம் முன்னேறிச் செல்ல முடியும்.

தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் பின்சறுக்கல், சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் கான்பெரா சதி

184. பதவியில் அமர்ந்த ஒரு வருடத்திற்குப் பின்னர், 1973 டிசம்பரில், விட்டலாம் தொழிற் கட்சி அரசாங்கம் ஊதியங்கள் மற்றும் விலைகள் மீதான அரசாங்க கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒரு பொதுமக்கள் கருத்துக்கணிப்பு தேர்தலை அறிமுகப்படுத்தியது. தண்டிக்கும் சக்திகளின் தோல்வி மற்றும் போருக்குப் பிந்தைய தொழிற்துறை உறவுகளின் ஆட்சி நொருங்கிப் போனமை ஆகியவற்றைத் தொடர்ந்து தொழிலாளர்களின் ஊதிய கோரிக்கைகள் அடக்கப்பட வேண்டும் என்றும் தொழில்துறை ஸ்திரநிலை மீட்சி செய்யப்பட வேண்டும் என்றும் முதலாளித்துவத்தின் சக்திவாய்ந்த பிரிவுகள் தொடர்ந்து வலியுறுத்திய அம்சங்களை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக இது இருந்தது. ஆகஸ்டு 1971ல் பிரெட்டன் வூட்ஸ் நிதி அமைப்பு மறைந்து போயிருந்ததை அடுத்து பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது, தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதில் தீர்மானத்துடன் இருந்தனர். இந்த கருத்துக்கணிப்பு பெரும் எண்ணிக்கையில் தோற்கடிக்கப்பட்டது, இது அடுத்த 12 மாதங்களில் தொழிலாள வர்க்கத்தின் ஊதியத் தாக்குதலின் தொடக்கத்தை அடையாளப்படுத்தியது.

185. தொழில்துறை போராட்டங்களின் எழுச்சி அலை தொடர்ந்தது. 1972ம் ஆண்டில், வேலைநிறுத்தங்களின் வாயிலாக 2 மில்லியன் வேலை நாட்கள் இழக்கப்பட்டன. 1973ம் ஆண்டில் 2.6 மில்லியன் நாட்களும், 1974ம் ஆண்டில் ஏறக்குறைய 6.3 மில்லியன் நாட்களும் (1919ம் ஆண்டின் தொழில்துறை மற்றும் அரசியல் குழப்ப காலத்திற்கு பின்னர் மிக அதிக எண்ணிக்கை இது தான்) என இது அதிகரித்தது. ஊதிய கோரிக்கைகள் பாய்ச்சல் கண்டன, வார அதிகரிப்பாக முதலில் 15 டாலர் வென்ற தொழிலாளர்கள், பின் 24 டாலர் வென்றனர், அதன்பின் 30 மற்றும் 40 டாலர் அளவுக்கும் அதிகரித்தது. 1973ம் ஆண்டில் பணவீக்க விகிதம் 13.2 சதவீதமாய் இருந்தது, சராசரி ஊதியம் 21 சதவீதம் அதிகரித்திருந்தது. 1974ம் ஆண்டில் வயது வந்த ஆணின் வருவாய் 28 சதவீதம் வரை அதிகரித்திருந்தது, விலைகள் 16.3 சதவீதம் வரை அதிகரித்திருந்தன.

186. ஆஸ்திரேலிய இயக்கம் ஒரு சர்வதேச எழுச்சியின் பகுதியாகும். 1974 பிப்ரவரியில், பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஹீத் டோரியின் அரசாங்கத்தை பதவியிறக்கினர். அமெரிக்காவில் வியட்நாம் போர் உருவாக்கிய அரசியல் நெருக்கடி நிக்சன் நிர்வாகம் நிலைகுலைவதை கண்டது. போர்த்துக்கலில், தொழிலாள வர்க்க இயக்கமும் காலனிகளிலான சுதந்திரப் போராட்டங்களும் 50 வருடங்கள் ஆட்சியை கைப்பற்றியிருந்த பாசிச ஆட்சி சீர்குலைய வழிவகுத்தது. தென்கிழக்கு ஆசியாவில், வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட்டது, பிலிப்பைன்ஸில் மார்கோஸ் இராணுவச் சட்டத்தை அறிமுகப்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது, அத்துடன் கிழக்கு தீமோரில் போர்த்துக்கீசிய ஆட்சி நொருங்கிப் போனதை அடுத்து இந்தோனேசியாவில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த சுகார்டோ ஆட்சி ஆட்டம் கண்டது.

187. ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் தேர்வு செய்யப்பட்டதானது, சோசலிச தொழிலாளர் கழகம் ஸ்தாபிக்கப்பட்டு வெறும் எட்டு மாத காலமே ஆகியிருந்த நிலையில் அதன்முன் சிக்கலான அரசியல் பிரச்சினைகளை முன்நிறுத்தியது. அந்த குறுகிய காலத்தில், கட்சி உறுப்பினர்கள் வெகுவாய் அதிகரித்திருந்தது, வியட்நாம் போரினால் தீவிரமுற்று தொழிற் கட்சி அரசாங்கத்துடன் குரோதமடைந்த இளைஞர்கள் தான் அவர்களில் பிரதானமாய் இருந்தனர். பதவிக்கு வந்த வெகு விரைவில், வியட்நாமில் இருந்து விட்டலாம் படைகளை திரும்பப் பெற்றார், கட்டாய இராணுவ சேவையை முடிவுக்குக் கொண்டு வந்தார், அத்துடன் வரையறுக்கப்பட்ட சீர்திருத்தங்களின் ஒரு வேலைத்திட்டத்தை அமுலாக்கி ஆஸ்திரலிய தொழிற் கட்சியின் மீதான பிரமைகளை வலுப்படுத்தத் தொடங்கினார். தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை நோக்கிய தனது நோக்குநிலையை சோசலிச தொழிலாளர் கழகம் ஆழப்படுத்துவது அவசியமாக இருந்த அந்த சரியான தருணத்தில், கணிசமான உறுப்பினர்கள் அவர்களது அரசியல் கல்வி உண்மையில் ஆரம்பிக்க முன்பாகவே கட்சியை விட்டு விலகத் தொடங்கினர்.

188. ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக ட்ரொட்ஸ்கிசத்திற்கான அரசியல் போராட்டத்தின் அபிவிருத்திக்கு சோசலிச தொழிலாளர் கழகத்தின் அரசியல் மற்றும் தத்துவார்த்த அடித்தளங்களை வலுப்படுத்துவது அவசியமாக இருந்தது. அது பிரிட்டனில் உள்ள நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவின் தலைமையுடனான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் மட்டும் தான் சாத்தியப்படத்தக்கதாய் இருந்தது. ஆனால் சர்வதேசிய காரியாளர்களை பயிற்றுவிக்கின்ற கல்வியூட்டுகின்ற பொறுப்பில் இருந்து பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பின்வாங்கத் தொடங்கியிருந்தனர். டோரிக்களை வெளியேற்றுவது மற்றும் மீண்டும் தொழிற் கட்சி அரசாங்கம் திரும்புவதை மையமாக வைத்து தொடர்ச்சியான தந்திரோபாய கோரிக்கைகளின் மீது அவர்கள் 1973 நவம்பரில் தொழிலாளர் புரட்சிக் கட்சியை (WRP) ஸ்தாபித்தனர். ஸ்தாபக காங்கிரசுக்கு முந்தைய விவாதங்களில் அனைத்துலகக் குழு ஒதுக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் வேலைத்திட்டத்தில், உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு அல்லது பப்லோவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் படிப்பினைகளின் எந்த ஒரு குறிப்பும் கூட இடம்பெற்றிருக்கவில்லை.

189. 1974ம் ஆண்டில், பிரிட்டிஷ் சுரங்கத் தொழிலாளர்கள் ஹீத் இன் டோரி அரசாங்கத்தை பதவியிறக்கி, சிறுபான்மை தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் தொழிலாளர் புரட்சிக் கட்சியில் ஒரு தீவிர நெருக்கடி உருவானது. கட்சி பெருமளவில் டோரி எதிர்ப்பு உணர்வுக்கு அழைப்புவிடுத்து தான் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததே தவிர, பப்லோவாதத்திற்கு எதிரான வரலாற்று போராட்டம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் வர்க்க தன்மை குறித்த ஒரு அரசியல் மற்றும் வரலாற்று தெளிவுபடுத்தல் மீது ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் தொழிலாளர் புரட்சிக் கட்சித் தலைமையை ஒரு புதிய சூழ்நிலைமை எதிர்கொண்டது. நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் திகைத்துப் போயிருந்தனர், மிகக் குறிப்பிடத்தக்கதாய், கோட்பாடற்ற, வலதுசாரி, கட்சி-விரோத கன்னை ஒன்று எழுந்திருந்தது. மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவரும் கார் உற்பத்தித் துறையில் முன்னணி தொழிற்சங்கவாதியுமான அலன் தொர்னெட்டின் தலைமையிலான இந்தக் கன்னை, தொழிற் கட்சி தெரிவானதை தொடர்ந்து ட்ரொட்ஸ்கிச முன்னோக்கில் முக்கியத்துவம் அளிப்பதற்கு கட்சி மேற்கொண்ட புதுப்பித்த முயற்சிகளையும் சமூக ஜனநாயகத்திற்கான அதன் எதிர்ப்பையும் எதிர்த்தது. தொர்னெட்டின் மத்தியவாத அரசியலை பொறுமையாக அம்பலப்படுத்தி உறுப்பினர்களுக்கு கற்பிப்பதற்கு பதிலாக, ஹீலியும் தொழிலாளர் புரட்சிக் கட்சிதலைமையும் உடனடியாக அனைத்து அரசியல் விவாதங்களையும் துண்டித்து விட்டதோடு தொர்னெட் குழுவையும் வெளியேற்றியது. இதனால் இன்னும் பல உறுப்பினர்களை இழந்ததோடு அடிப்படைத் தொழில் துறையில் அதன் முக்கியமான பிரிவையும் இழந்தது. அரசியல் ரீதியாக பொறுப்பற்றதான இந்த நடவடிக்கையால் இறுதியாய் விளைந்தது என்னவென்றால், முன்னர் தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த அடித்தளத்தில் இருந்த "கட்சியின் சமூக அடித்தளத்தை" விலக்கி "நடுத்தர வர்க்கத்தை நோக்கி திருப்பியது" தான்.

190. தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக் கொடுத்தது 1973-85 என 1986ம் ஆண்டில் விடுத்த அறிக்கையில் அனைத்துலகக் குழு விளக்கியது: "தொர்னெட்டின் நோக்கங்கள், எண்ணங்கள், நோக்குநிலை எல்லாம் இருந்தாலும், அவரது கன்னை உருவானது தொழிலாளர் புரட்சிக் கட்சி மற்றும் பிரிட்டிஷ் தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின் முக்கிய பிரச்சினைகளுடன் பிணைந்திருந்தது. 1974 மார்ச்சில் தொழிற் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதன்பின் 1974 அக்டோபரில் அது மீண்டும் தேர்வு செய்யப்பட்டதும் மார்க்சிச முன்னணிப் படை மீது தீவிரமான அரசியல் அழுத்தங்களை அளித்தது. இதற்கு தத்துவார்த்த தெளிவு அவசியமாய் இருந்தது, அது இல்லாமல் தந்திரோபாய வளம்பெற்றிருப்பதெல்லாம் தவிர்க்கவியலாமல் சந்தர்ப்பவாத திட்டங்களாகவே சீரழிவுறும். இந்த அர்த்தத்தில், தொர்னெட்டுடனான போராட்டம் சமூக ஜனநாயகத்திற்கு எதிராக போராடுவதில் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தலைமையின் திறமைக்கு முதல் பெரும் சோதனையாக அமைந்தது.[78]

191. இந்த சோதனையில் தொழிலாளர் புரட்சிக் கட்சி தேறத் தவறியதனாது, தொழிலாளர் புரட்சிக் கட்சி மட்டுமல்லாது ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவின் இளம் பிரிவுகளுக்கும் ஆழமான பாதிப்புகளைக் கொண்டிருந்தது. அவையும், பிரிட்டிஷ் பிரிவைப் போலவே, சமூக ஜனநாயக அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்ததால் முன்நிறுத்தப்பட்ட அரசியல் சவால்களை எதிர்கொண்டிருந்தன. இறுதியில் எடுத்துக்காட்டப்பட்டதுபோல் 1972ம் ஆண்டில் சுலோட்டரின் அரசியல் ஆலோசனையும் உதவியும் தான் ஆஸ்திரேலியாவில் சோசலிச தொழிலாளர் கழகம்தொழிலாளர் புரட்சிக் கட்சியின் கடைசியான சாதகமான தலையீடாய் இருந்தது. 1975ம் ஆண்டில் ஆஸ்திரேலிய வரலாற்றின் மிகத் தீவிரமான -புரட்சிகர சாத்தியமுடையதுமான- அரசியல் நெருக்கடி நிலைமைகளின் கீழ், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நோக்குநிலை ஆஸ்திரேலிய சோசலிச தொழிலாளர் கழகத்தை அரசியல் ரீதியாய் குழப்பவும் நோக்குநிலை தவறச் செய்யவுமே சேவை செய்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியுடனான பிளவுக்கு பின், அக்டோபர் 5, 1986 அன்று வெளியிடப்பட்ட சோசலிச தொழிலாளர் கழகத்தின் கடமைகள் மற்றும் முன்னோக்குகள் குறித்த தீர்மானத்தில், அனைத்துலகக் குழு குறிப்பிட்டது: "ஆஸ்திரேலிய பிரிவின் வேலைக்கு மையமான விடயமாக, சமூக ஜனநாயகக் கட்சி குறித்த முக்கிய பிரச்சினையில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் சீரழிவுக்கான கனமானதொரு விலையை கொடுக்கும் நிர்ப்பந்தம் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு ஏற்பட்டது. கான்பெரா சதி நடந்த ஆண்டான 1975, சமூக ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் தனது தந்திரோபாயங்களை அபிவிருத்திசெய்ய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை மரபுரீதியாக வழிநடத்திய அனைத்து வரலாற்றுப் படிப்பினைகளையும் தொழிலாளர் புரட்சிக் கட்சி பரிசீலித்துப்பார்க்காமல் மறுதலிக்க தொடங்கியதை அடையாளப்படுத்தியது.

192. 1974 இன் ஆரம்பத்தில், விட்டலாம் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில், சக்திவாய்ந்த ஊதியங்கள் இயக்கத்தை அது அடக்கமுடியாமல் தோற்றதை தொடர்ந்து, ஆளும் வர்க்கத்தின் பிரிவுகள் அதனை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டன. தேர்தலுக்கு அழைப்பு விடுவதான லிபரல்களின் கோரிக்கைகளுக்கு ஒப்புக் கொண்டார் எனினும் மே 1974ல் விட்டலாம் மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பினார். 1975க்குள்ளாக, பணவீக்க சுழல் ஒரு முழுமையான மந்த நிலைக்கு இட்டுச் சென்று, நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஆழப்படுத்தி இருந்தது. தொழிற் கட்சி அரசாங்கம் கூடுதலாய் வலதுக்கு நகர்வதன் மூலம் இதற்கு பதிலிறுப்பு செய்தது. ஜூன் மாதத்தில், "இடது" பொருளாளர் ஜிம் கெய்ன்ஸ் ஒரு விக்டோரியன் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி மாநாட்டில் கூறினார்: "ஒரு மேம்பட்ட சமூகத்திற்கான நமது புரிந்துகொள்ளக்கூடிய நியாயமான இலட்சியம் இருந்தபோதிலும், இப்போது நிலவும் அமைப்பிற்குள்ளாகத் தான் நாம் செயல்பட்டாக வேண்டும். நாம் வாழும் அமைப்பில் பணவீக்கத்தினை துரிதமாகக் கையாளுவதற்கு ஒரே ஒரு வழி தான் உள்ளது. அரசாங்க செலவினங்களையும் வங்கிகள் மூலமான பணப் புழக்கத்தையும் குறைப்பதன் மூலமாக மக்களிடம் புழங்கும் பணத்தைக் குறைக்க வேண்டும், இதன்மூலம் வேலைவாய்ப்பின்மையின் அளவு பெருத்து அது தொழிலாளர்களை உண்மையான ஊதியக் குறைப்புகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும்." கெய்ன்ஸிடம் இருந்து குறிப்பை உணர்ந்து கொண்ட விட்டலாம் முந்தைய வருடங்களில் இருந்தது போன்ற ஊதிய உயர்வுகளை அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என அறிவித்தார்.

193. 1975 ஜூலையில், அரசாங்கத்தின் பெரு வணிக விமர்சகர்களை மேலும் சாந்தப்படுத்தப்படும் ஒரு முயற்சியாக, விட்டலாம் தொழிலாளர் அமைச்சர் க்ளைடெ கேமரான் மற்றும் பொருளாளர் கெய்ன்ஸ் ஆகிய இரண்டு முக்கிய "இடது" அமைச்சர்களை மந்திரிசபையில் இருந்து நீக்கினார். இருவருமே தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்க்கவில்லை, அதேபோல் எந்த தொழிற்சங்கம் அல்லது தொழிற் கட்சி "இடதுகளும்" எதிர்க்கவில்லை. மேலும், சாமானிய தொழிலாளர்களை விட்டலாமின் வலதுசாரி திருப்பத்திற்கு எதிராக திரட்டுவதற்கு அவர்கள் எந்த அழைப்பும் விடவில்லை. "இடதுகளின்" செயலின்மை தாராளவாதக் கட்சிக்கும் அதன் சக சதியாளர்களுக்கும் அரசாங்கத்தை ஸ்திரம் குலைப்பதை வேகப்படுத்த நம்பிக்கை கொடுத்தது. 1975 பிப்ரவரியில் தாராளவாதக் கட்சியின் தலைமைக்கு உயர்த்தப்பட்ட போது, மால்கம் ஃபிரேஸர் தெளிவாகக் கூறியது: "கண்டிக்கத்தக்க சூழ்நிலைகள்" இருந்தால் செனட்டில் எதிர்க்கட்சிகள் விநியோகத்தை (வரவு-செலவுத் திட்ட செலவினத்திற்கு செலுத்த நிதிகளை பறிமுதல் செய்வது) தடுத்து நிறுத்தும். ஆண்டின் மத்தியில், இந்த சூழ்நிலைகளை மிகத் துல்லியமாய் உருவாக்குவதற்காக, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் உதவியோடு, வெளிநாட்டுக் கடன்களை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை சுற்றி தொடர்ச்சியான பல "ஊழல்கள்" ஏற்பாடாகியிருந்தன.

194. 1975 ஜூலை அதே மாதத்தில், பிரிட்டனில் வில்சனின் தொழிற் கட்சி அரசாங்கம் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வுகளை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தச் சென்றது. பதிலிறுப்பாய், தொழிலாளர் புரட்சிக் கட்சி தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றியது. இந்த சட்டத்தை அறிமுகப்படுத்திய வலதுசாரிகளை வெளியேற்றி இந்த ஊதியச் சட்டத்தை தோற்கடிப்பதற்கு தொழிலாளர் இயக்கம் முழுவதிலும் ஒரு பிரச்சாரத்தை தொடக்குவதற்குப் பதிலாக, தொழிலாளர் புரட்சிக் கட்சிஇவ்வாறு அறிவித்தது: "மொத்த இயக்கத்தையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரே வழி அவர்களை (வில்சன் மற்றும் வலதுசாரியினர்) இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்து தொழிற் கட்சியை பொதுத் தேர்தலில் களம் இறங்கச் செய்து டோரிக்களை தோற்கடிப்பது தான்." அனைத்துலகக் குழு பின்னர் விளக்கியது: "இந்த தீர்மானம் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிசவாதிகள் பல தசாப்தங்களாக போராடி வந்திருக்கும் பாட்டாளி வர்க்க நோக்குநிலையுடன் ஒரு அடிப்படையான வேலைத்திட்ட ரீதியான முறிவை அடையாளப்படுத்துகிறது. புரட்சிகரக் கட்சி தொழிலாள வர்க்கத்தின் எந்த கணிசமான பகுதியின் விசுவாசத்தையும் இன்னும் வென்றிராத நிலையில், தொழிற் கட்சி இல்லையென்றால் டோரி அரசாங்கம் தான் வர முடியும், அந்த அரசாங்கத்தை ஒரு வருடத்திற்கு முன்னதாகத் தான் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தில் இருந்து அகற்றியிருக்கிறது என்கிற நிலைமைகளின் கீழ், தொழிற் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்தில் இருந்து இறக்க அழைப்பு விடுப்பது அபாய சாகசத்தின் உச்சமாகும். தொழிற் கட்சியானது, தனது வெகுஜன அமைப்புகளுக்குள் சக்திவாய்ந்த தலையீடுகளுக்கான நிலைமைகளை உருவாக்கி தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வெளிப்படையாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்ற அந்த சரியான தருணத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சி சாத்தியமில்லாத ஒரு காலக்கெடுவை வழங்கியது. இந்த மோதலின் வெகு ஆரம்ப கட்டத்திலேயே, தொழிற் கட்சியின் தலைவிதியை தேசிய வாக்காளர்களின் கைகளில் இருத்தக் கூடிய ஒரு பிரச்சாரத்தின் மூலமாக தொழிலாள வர்க்க அமைப்புகளுக்குள் இந்த போராட்டத்தினை முதலிலேயே தடுக்க தொழிலாளர் புரட்சிக் கட்சி முன்மொழிந்தது."[79]

195. பிரிட்டனில் வலதுசாரி தொழிற் கட்சி தலைமைக்கு எதிராக எந்த போராட்டத்திலும் முன்கூட்டிய தாக்குதல் செய்த தொழிலாளர் புரட்சிக் கட்சி, ஆஸ்திரேலியாவில் துரிதமாக அபிவிருத்தியுற்றுக் கொண்டிருந்த சிக்கலான அரசியல் சூழ்நிலையிலோ, அல்லது சோசலிச தொழிலாளர் கழகம் எடுக்க வேண்டிய அணுகுமுறையிலோ எந்த ஆர்வமும் காட்டவில்லை. சோசலிச தொழிலாளர் கழகத்தை எதிர்கொண்டிருந்த மிக அதிமுக்கிய பணிகளாக இருந்தவை, நெருக்கடி குறித்த அதன் பகுப்பாய்வை ஆழப்படுத்துவது, விட்டலாம் தனது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு முதலாளித்துவம் மற்றும் அரசினால் மேற்கொள்ளப்பட்ட தயாரிப்புகளுக்கு துரோகமிழைக்கும் வகையில் இடமளித்ததை அம்பலப்படுத்துவது, மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகளின் ஆதரவுடன் விட்டலாம் மற்றும் தொழிற் கட்சி வலதுசாரிகளுக்கு எதிராக ஒரு விரலைக் கூட அசைக்க மறுக்கும் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க "இடதுகளின்" பாத்திரத்தை அம்பலப்படுத்துவது ஆகியவையே. இந்த வழியில் மட்டும் தான் தொழிலாள வர்க்கமானது முதலாளித்துவ அரசின் தலையீட்டை சந்திப்பதற்கு அரசியல் ரீதியாய் ஆயுதபாணியுற்று இருக்க முடியும். இதற்கு பதிலாய் ஹீலி ஜூன் 1975 தனது ஆஸ்திரேலிய பயணத்தில், சோசலிச தொழிலாளர் கழகத்தை மூன்று வருடங்களுக்கு முன்பாக அது முறித்துக் கொண்டிருந்த நடுத்தர வர்க்க தீவிரவாத சூழலுக்கு திருப்புவதற்கு முனைந்தார். பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவர் ஆற்றிய பாத்திரத்திலிருந்து எத்தகைய மாறுபட்டதாய் இது இருந்தது. அப்போது லங்கா சம சமாஜ கட்சியின் காட்டிக் கொடுப்பின் மத்தியில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த அவர் அதனைப் பகிரங்கமாய் கண்டித்ததோடு பப்லோவாத அரசியலில் இருந்த அதன் வேர்களையும் அம்பலப்படுத்தினார், அத்துடன் தனித்துவமான ட்ரொட்ஸ்கிசவாதிகள் அனைத்துலகக் குழுவின் பின் அணிதிரளவும் அழைத்தார்.

196. அரசியல் நெருக்கடி துரிதமாய் அபிவிருத்தியுற்றது, 1975 அக்டோபர் 16 அன்று தாராளவாதிகள் செனட்டில் விநியோகத்தையை தடுத்து தொழிற் கட்சி அரசாங்கம் செயல்படும் திறனை மறுதலித்து அதனை பதவியிறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை கவர்னர்-ஜெனரல் (அரசின் தலைவர் மற்றும் ராணியின் பிரதிநிதி) அரசாங்கத்தை கலைத்து விடுவதற்கான பாதையைத் திறந்து விட்டது. தாராளவாதிகளின் நடவடிக்கைகளுக்கு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்திறனுடையோரின் வெகுஜன அரசியல் இயக்க வெடிப்பு மூலம் பதில் கிட்டியது, தாராளவாதிகளின் சதி முயற்சியை தடுக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணமாய் இருந்தது. அதே சமயத்தில், ஒட்டுமொத்த தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தலைமையானது, கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு, இந்த இயக்கத்தை அரசியல் ரீதியாகக் குழப்பி அதனை விட்டலாம் மற்றும் தொழிற் கட்சி தலைமைக்கு பின்னால் செல்வதற்கு பணிபுரிந்தனர்.

197. தான் நீக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, விட்டலாம் ஆற்றிய ஒரு உரை அவரது முக்கிய கவனத்தை வெளிப்படுத்தியது: அதாவது, நாடாளுமன்ற அமைப்பின் தகுதிவகைகளுக்கு வெளியேயான ஒரு அரசியல் போராட்டத்துக்குள் தொழிலாள வர்க்கம் நுழைவதைத் தடுப்பது என்பது. தொழிற் கட்சி இயக்கத்துக்கு நாடாளுமன்றத்தின் வழியான சீர்திருத்தத்தின் முக்கியத்துவத்தை கொண்டு நம்பிக்கையேற்படுத்துவதற்கே தனது மொத்த தலைமைப் பண்பையும் அர்ப்பணித்திருப்பதாக அவர் விளக்கினார்: "நடப்பு நெருக்கடிக்கு நான் பலியாக நேர்ந்து புதிதாய் பொறுப்புக்கு வரக்கூடிய ஆஸ்திரேலிய தொழிற் கட்சியின் எந்த ஒரு வருங்காலத் தலைவருக்கும், தீவிரவாத சக்திகளை நாடாளுமன்ற அமைப்பின் வரைமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தும் பணி வந்து சேருவதை, நான் விரும்ப மாட்டேன்." [80]

198. நவம்பர் 11 அன்று விட்டலாம் பதவி நீக்கப்பட்டபோது, கவர்னர்-ஜெனரலின் சதிக்கு தன்னால் முடிந்த அளவு உதவி ஒத்துழைத்தார். தொழிற் கட்சியின் பிரதமர் தனது சொந்த நீக்கத்தையே எதிர்க்கவில்லை. அதற்குப் பதிலாக, கவர்னர் ஜெனரல் சேர் ஜோன் கெர் அமர்த்தியிருந்த ஃபிரேசரின் "பராமரிப்பு" அரசாங்கத்திடம் விநியோகவிடயம் செல்வதை தொழிற் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்து கொண்டனர். ஆயினும், தொழிலாள வர்க்கம் இந்த கவிழ்ப்பிற்கு பாரிய வெளிநடப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் பதிலிறுப்பு செய்தது. ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு, பெருகிக் கொண்டிருந்த கோரிக்கைகளை தடுப்பதற்கு அப்போது ACTU தலைவராக இருந்த பாப் ஹாக் தலைமையின் கீழ் தொழிற்சங்க அதிகாரத்துவம் வேலை செய்தது. இந்த நீக்கம் மற்றும் தொழிலாளர் தரப்பு நடவடிக்கைக்கான அழைப்புகள் குறித்து அவரது கருத்து கேட்கப்பட்ட போது அவர் பதிலளித்தார்: "எனக்கு வருத்தம் தான் என்றாலும் இது வெறுமனே தொழிற் கட்சி அரசாங்கம் வீழ்ந்து விடும்போல் இருக்கிறதே என்பதான பிரச்சினை அல்ல. எனது கவலையெல்லாம் இந்த நாட்டின் வருங்காலம் குறித்து. இன்று நடந்திருப்பது நாம் முன்கண்டிராத வகையில் இந்த நாட்டில் பல்வேறு சக்திகளை கட்டவிழ்த்து விடக் கூடும். சற்று பயங்கரமான ஒன்றின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம், எனவே ஆஸ்திரேலிய மக்கள் தலைமைக்கு மறுமொழிகூறும் விதமாய் நடந்து கொள்வது முக்கியமாகும்." கவிழ்ப்புக்கு ஒரு சில தினங்கள் முன்னதாக, தொழிற்சாலை பிரதிநிதிகளின் ஒரு பாரிய கூட்டத்தில் பேசுகையில், ஹாக் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அமைப்பின் அடிப்படை பாத்திரத்தை வெளிப்படுத்தினார்: "1970களில் முதலாளித்துவ அமைப்பு அதன் தையல்களில் முறியத் துவங்கியது. எனவே அந்த அமைப்பை காப்பாற்றவே 1972ம் ஆண்டில் நாம் ஆட்சியைப் பிடித்தோம்."

199. இந்த அரசியல் நெருக்கடியின் தீவிரமும் ஆட்சிக்கவிழ்ப்பின் சாத்தியமான புரட்சிகர தாக்கங்களும் முன்னாள் தாராளவாதக் கட்சி தலைவரான பில்லி ஸ்னெடன் வார்த்தைகளில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன. 1983ம் ஆண்டில் தான் ஓய்வு பெறுகின்ற சமயத்தில், அவர் கூறினார்: "அன்றைய தினம் நடந்த சில விடயங்கள் அதிர்ஷ்டவசமாய் நம்பமுடியாததாய் இருந்தன. கவர்னர் ஜெனரல் கலைக்க முயலும்போது அவர்கள் [செனட் மற்றும் அவைப் பிரதிநிதிகள்] அமர்ந்திருந்தார்கள் என்றால், நாம் துருப்புகளை அழைத்துத் தான் அவர்களை அவையில் இருந்து வெளியேற்ற வேண்டியதிருந்திருக்கும்.... அந்த நாளில் நம் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது.... அன்றைய தினத்தில் கிளர்ச்சி குறித்த வெகு உண்மையான பயம் அங்கு இருந்தது."

200. குட்டிமுதலாளித்துவ தீவிரவாதப் போக்குகள் அரசியல் நெருக்கடியின் முக்கியத்துவத்தை குறைத்துக் காட்ட வேலை செய்தன, இதன் மூலம் தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைமைக்கு அதிமுக்கிய ஆதரவை இவை வழங்கின. "மிகவும் முன்கூட்டியது" என்று காரணம் கூறி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுவதை சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) பப்லோவாதிகள் எதிர்த்தனர். முதலாளித்துவத்தின் வலிமையை மிகையுரைத்த ஸ்பார்டசிஸ்டுகள் இந்த ஆட்சிக் சதியினை "முதலாளித்துவ சட்ட அங்கீகாரத்தின் லேசான நீட்சி" என்று வர்ணித்து ஒரு பொது வேலைநிறுத்தம் "அநேகமாய் தோற்கடிக்கப்படும்" நிலைமையைக் கொண்டிருப்பதாக அறிவித்தனர். தொழிலாளர் வர்க்கத்தில் இருந்து வந்த சீர்திருத்தங்களுக்கான நெருக்குதலுக்கு மிக எளிதாய் வளைந்து கொடுக்கத்தக்கதாய் இருந்ததால் தான் விட்டலாம் அரசாங்கம் நீக்கப்பட்டது என்பதான மாயையை, கவிழ்ப்புக்குப் பின்னர், பப்லோவாதிகள் உருவாக்கினர்.

201. தொழிலாள வர்க்கத்தின் கோரிக்கைகளுக்கு இடம்கொடுத்தது என்பதற்காக விட்டலாம் அரசாங்கம் நீக்கப்படவில்லை. மாறாக, தான் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்யப் போகிறோம் என்பதை அது ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தது. ஆனால் அதன் வேலைத்திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் இருந்து வந்த எதிர்ப்பை அடக்குவதில் தொழிற் கட்சி அரசாங்கம் திறனற்றதாய் இருக்கிறது, இது நேரடி மோதலுக்கு அழைத்துச் செல்லக்கூடும் என்கிற அச்சம் ஆளும் வட்டங்களில் இருந்தது. எப்படிப் பார்த்தாலும், தொழிலாள வர்க்கத்திற்கும் வரலாற்று ரீதியாக முதலாளித்துவத்தின் மிக முக்கிய அரசியல் முட்டுத்தூணாய் இருந்து வந்திருக்கின்ற தொழிற் கட்சி தலைமைக்கும் இடையே ஒரு மோதல் நேர்வதைக் காட்டிலும் ஆஸ்திரேலிய முதலாளித்துவ ஆட்சியின் ஸ்திரநிலைக்கு வேறு எதுவும் பெரிய அபாயமான அச்சுறுத்தல் இருக்க முடியாது. அத்தகையதொரு மோதலைத் தடுப்பதற்கான முன்கூட்டிய தாக்குதலே இந்த ஆட்சிசதி.

202. 1975ம் ஆண்டின் அரசியல் நெருக்கடி காலம் முழுவதிலும், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைமையின் பாத்திரத்தை அம்பலப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கினை அபிவிருத்தி செய்யவும் சோசலிச தொழிலாளர் கழகம்போராடியது. 1975களின் மத்தியில், முதல் தொழிற்கட்சித் தலைமை துரிதமாய் வலது நோக்கி திசைமாறியதை அடுத்து, விட்டலாம் தலைமை வெளியேற்றப்படுவதற்கும், ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை ஏற்பதற்கு சாமானிய காரியாளரும் பங்குபெறத்தக்க ஒன்றிய மற்றும் தொழிற்கட்சி மாநாடுகளைக் கூட்டுவதற்கும் சோசலிச தொழிலாளர் கழகம்அழைப்பு விடுத்தது. ஆயினும், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நோக்குநிலைக்கு சீரமைந்த வகையில், இந்த கொள்கைகள் எல்லாம் ஒரு புதிய தேர்தலுக்கான அழைப்புடன் இணைக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக தொழிலாளர் இயக்கத்திற்குள் ஒரு சிறப்புமிக்க அரசியல் போராட்டம் நடந்து, நடப்பு தலைமை வெளியேற்றப்பட்டு, இறுதியாய் இவை வாக்குப்பெட்டிகளில் தேசிய வாக்காளர்களின் ஒப்புதல் முத்திரையுடன் உச்சம் பெற வேண்டும்.

203. விட்டலாம் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து தாராளளாதிகள் விநியோகத்தைதடுக்க முடிவெடுத்ததால், பொதுத் தேர்தலுக்கான அழைப்பை சோசலிச தொழிலாளர் கழகம்கைவிட்டது. பதிலாக, அதன் ஆர்ப்பாட்டத்தின் மையக்கவனம், அரசாங்கத்தை வெளியேற்ற தாராளவாதிகளும் முதலாளித்துவ அரசும் செய்யும் முயற்சிகளை எதிர்ப்பதற்கு ஒரு பொது வேலைநிறுத்தத்திற்காக போராடுவதற்குத் திரும்பியது. அரசியல் நெருக்கடியில் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டுக்கான அவசியத்தை தூக்கிப் பிடிப்பது மிகச் சரியான ஒன்று தான். ஆனால், தலைமை அபாயம் தாராளவாதக் கட்சியிடம் இருந்தோ, கவர்னர் ஜெனரலிடம் இருந்தோ அல்லது அரசு எந்திரத்திடம் இருந்தோ வரவில்லை என்பதையும், மாறாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் தலைமையிடம் இருந்து தான் வந்திருக்கிறது, அவை தான் ஆட்சிக் கவிழ்ப்புக்கான நிலைமைகளை உருவாக்கியிருந்தன என்பதையும் மிக முன்னேறிய மற்றும் அரசியல் ரீதியாய் நனவுடைய தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் மட்டத்திற்குத் தான் அந்த தலையீடு முன்னே செல்ல முடியும். இந்த இடத்தில் தான் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் அரசியல் மாற்றம் ஒரு சேதாரமிழைக்கும் பாத்திரத்தை ஆற்றியது. அதன் நோக்குநிலையின் இதயத்தானத்தில் இருந்தது தந்திரோபாய சந்தர்ப்பவாதத்தின் அபிவிருத்தி - அதாவது மூலோபாய கருத்தாங்களுக்கு மேலாக தந்திரோபாயங்களை உயரத்தில் இருத்துவது. கான்பெரா சதியின் அர்த்தத்தில் அதன் பொருள் என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு சரியான தந்திரோபாயத்திற்கான தேடல் தான் சோசலிச தொழிலாளர் கழகத்தின் மனதில் முழுதாய் நிரம்பியிருந்தது. உண்மையில், எந்தவொரு தந்திரோபாயம் அல்லது சுலோகமும் அத்தகையதொரு பாத்திரத்தை ஆற்ற முடியாது. சமூக ஜனநாயகத்தின் பாத்திரத்தை ஆஸ்திரேலியாவில் மட்டுமல்லாது சர்வதேசிய ரீதியாக தெளிவுபடுத்துவதும், ஒரு புதிய சோசலிச சர்வதேசிய அரசியல் முன்னோக்கிற்கு தொழிலாள வர்க்கத்தின் மிகவும் முன்னேறிய தட்டுகளை வென்றெடுப்பதும் தான் சோசலிச தொழிலாளர் கழகத்தின் அடிப்படையான பணியாக இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் முன்னணிப் படைக்குள்ளாக, அதன் தலைமையால் ஆற்றப்படும் ஒரு துரோகப் பாத்திரம் குறித்த புரிதலை உருவாக்குவது தான் மிக முக்கிய பிரச்சினையாக இருந்தது. அது இல்லாமல் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாய் சிறைப்பட்டதாய் தான் தொடர்ந்தது.

204. இத்தகையதொரு போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் சூழ்நிலையின் மிக முக்கிய காரணியாகி இருந்த அந்த சரியான தருணத்தில் அதனை முக்கியத்துவமற்றதாய் நடத்துவதற்கு சோசலிச தொழிலாளர் கழகத்தின் மீது சக்திவாய்ந்த அழுத்தங்கள் விழுந்தன. இந்த அழுத்தங்கள் அரசியல் நெருக்கடியாலேயே விளைந்தவை ஆகும், ஏனெனில் பரந்த வெகுஜன மக்கள் போராட்டத்திற்குள் நுழைந்திருந்தனர். முந்தைய காலகட்டத்தில், சோசலிச தொழிலாளர் கழகத்தின் பணி சற்று வரம்புபட்டதொரு கட்டமைப்புக்குள் அபிவிருத்தியுற்றிருந்தது. ஆட்சிக்கவிழ்ப்புக்கு பின்னர், அரசியல் சூழ்நிலையைக் கண்டுகொள்ளாதிருந்த அல்லது அரசியல் நெருக்கடியை தூரத்தில் இருந்து கொண்டு பின் தொடர்ந்து வந்திருந்த மில்லியன்கணக்கான மக்கள் இப்போது செயலூக்கத்துடன் பங்குபெற்றனர். தொழிலாளர் இயக்கத்தின் மிகவும் அரசியல் நனவுள்ள தட்டுகளுக்குள்ளாக பெருகும் அமைதியின்மை அபிவிருத்தியுற்றுக் கொண்டிருந்தது. வலதுசாரி தொழிற்கட்சி தலைமையை நோக்கிய அதன் குரோதமும் மற்றும் முதலாளித்துவத்தின் சேவகனாக அதன் பாத்திரம் குறித்த ஆழமான புரிதலும் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனால் நவம்பர் 11 கவிழ்ப்புக்கு பின்னர், இத்தகைய உணர்வுகள் எல்லாம் அரசியல் காட்சியில் புதிதாய் வந்து கொண்டிருந்த சக்திகளின் கண்ணோட்டங்களால் பின்னால் தள்ளப்பட்டன. அவை எல்லாம் விட்டலாம் குறித்த வெகுகுறைந்த விமர்சனக் கண்ணோட்டம் கொண்டிருந்தன, ஹாக், எல்லாவற்றுக்கும் மேலாய் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ராலினிஸ்டுகளால் "இடது" என்றும் தொழிலாளர் இயக்கத்தின் வெற்றியாளர்கள் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டு வந்த நிலையில், ஒரு பரந்த ஆதரவை அனுபவித்தார். புதிதாய் அரசியல் சிந்தனையுற்றிருந்த தட்டுகள் விட்டலாம் அரசாங்கம் அதன் சீர்திருத்தங்களின் காரணமாகத் தான் நீக்கப்பட்டது என்று நம்பினர். சூழ்நிலை துரிதமாய் மாறிக் கொண்டிருந்தது. ஒப்பீட்டளவில் அரசியல் ரீதியாய் முன்னர் நடவடிக்கையின்றி இருந்த மில்லியன்கணக்கான மக்கள், இப்போது, சமூகத்தின் மிகவும் வலதுசாரி சக்திகளால் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் ஒரு அரசாங்கத்தையும் அதன் தலைமையையும் பாதுகாப்பதற்கு ஒரு வழியைக் காண போராடிக்கொண்டிருந்தனர். தொழிலாள வர்க்கத்திற்கு முன்நோக்கி செல்வதற்கான ஒரே வழி தொழிற்கட்சி தலைமைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துவது தான் என்று வலியுறுத்தி ஒரு அரசியல் நிலைக்காகப் போராடுவது பெருகிய முறையில் கடினமான ஒன்றாய் மாறியிருந்தது.

205. தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைமைகளின் காட்டிக் கொடுப்புகள் டிசம்பர் 10 தேசிய தேர்தலில் மால்கம் ஃபிரேசரின் தலைமையின் கீழ் தாராளவாதிகளின் வெற்றியை உறுதி செய்தன. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான நடவடிக்கை நிகழப் போவதில்லை, கவிழ்ப்பு வெற்றி பெற்று விட்டது என்பது தெளிவாகிய உடனேயே, நடுத்தர வர்க்கத்தின் மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் தாராளவாதிகளை நோக்கி திசைமாறி அவர்களுக்கு பெரியதொரு நாடாளுமன்ற பெரும்பான்மையை அளித்தன. பின்னர், சதிக்கு வசதி செய்வதில் தங்களது சொந்த எதிர்புரட்சி பாத்திரத்தையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான தங்களின் உயிர்ப்புள்ள குரோதத்தையும் மறைக்கும் பொருட்டு, ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிஸ்டுகள் ஆஸ்திரேலியா ஒரு "பழமைவாத" சமூகம் என்பதை ஃபிரேசரின் வெற்றி விளங்கப்படுத்துவதாகக் கூறிக் கொண்டனர்.

206. 1975 அரசியல் எழுச்சிகளின் விளைவாய் சோசலிச தொழிலாளர் கழகம் முதுகின் மீது ஏற்றப்பட்ட பிரம்மாண்டமான அழுத்தங்களை, ஆஸ்திரேலியாவில் நடக்கும் நிகழ்வுகளின் புறநிலையான சர்வதேசிய முக்கியத்துவத்தை கண்டறிவது மற்றும் சமூக ஜனநாயகம் குறித்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்று அனுபவங்களின் மீது சோசலிச தொழிலாளர் கழகம் வேரூன்றியிருக்கச் செய்வது ஆகியதொரு ஒரு உலகளாவிய முன்னோக்கின் அடிப்படையில் மட்டும் தான் எதிர்கொண்டிருக்க முடியும். ஆனால் தொழிலாளர் புரட்சிக் கட்சியோ பெருகிய முறையில் ஒரு சர்வதேச முன்னோக்கு இன்றியே வேலை செய்து கொண்டிருந்தது. 1971 ஆகஸ்டில் பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் நொருங்கிப் போனதைத் தொடர்ந்து இத்தகைய அரசியல் பணி ஏறக்குறைய நின்று போகும் நிலையை அடைந்தது. தொழிலாளர் புரட்சிக் கட்சியின் நோக்குநிலையில் இருந்த மாற்றம் சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு முக்கிய சர்வதேச ஒத்துழைப்பு கிட்டாது செய்துவிட்டது. சதியை நோக்கி சென்று கொண்டிருந்த நிகழ்வுகளில், ஹீலி சோசலிச தொழிலாளர் கழகத்தின் நோக்குநிலையை மாற்ற முனைந்தார், அக்டோபர்-நவம்பர் நெருக்கடி எழுந்தபோது ஆஸ்திரேலிய சூழ்நிலை மீது விவாதத்திற்கு முன்முயற்சி அளிக்க தொழிலாளர் புரட்சிக் கட்சித்தலைவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த கடிதங்களும் இல்லை, தகவல் அல்லது ஆய்வுக்கு எந்த கோரிக்கையும் இல்லை, ஒரு தொலைபேசி அழைப்பு கூட இல்லை. "முதலாளித்துவ ஜனநாயகத்தின் முடிவின் தொடக்கத்தை" இந்த சதி குறிப்பதாக கூறிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் பிந்தைய மதிப்பீட்டை, ஆயினும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று கூறி விமர்சித்தது மட்டும் தான் தொழிலாளர் புரட்சிக் கட்சி தலைமையிடம் இருந்து வந்த ஒரே கருத்துரை ஆகும். இந்த கவிழ்ப்பு ஆஸ்திரேலிய தொழிலாள வர்க்கத்திற்கும் சர்வதேசிய தொழிலாள வர்க்கத்திற்கும் ஒரு பெரும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அனுபவமாக இருந்த அதே சமயத்தில், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தேசியவாத, வலது நோக்கிய திருப்பமானது, அந்த அனுபவத்தின் படிப்பினைகள் விவாதிக்கப்படவும் இல்லை அல்லது கிரகிக்கப்படவும் இல்லை என்றே பொருள் தந்தது. 1985-86 இல் அனைத்துலகக் குழுவின் பிளவுக்குப் பிந்தைய காலத்தில் தான் இது நடக்க முடிந்தது.

தொடரும்....

அடிக்குறிப்புகள்

77. லேபர் பிரஸ், ஜூலை 21, 1972.

78. WRP எவ்வாறு ட்ரொட்ஸ்கிசத்தை காட்டிக்கொடுத்தது’, நான்காம் அகிலம், தொகுதி. 13, எண்.1, 1986, ப.25.

79. அதே புத்தகம், பக்.26.

80. நிக் பீம்ஸ், தொழிற் கட்சியின் கீழ் தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிற்சங்கங்கள்: விட்டலாமில் இருந்து ரூட் வரை, சோசலிச சமத்துவக் கட்சி, பேங்ஸ்டவுன், ஆஸ்திரேலியா, 2007, ப.2