World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

Seventy years since the assassination of Leon Trotsky

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 70 ஆண்டுகள்

By David North
21 October 2010

Back to screen version

இந்த உரை பேர்லினில் அக்டோபர் 17 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவருமான டேவிட் நோர்த் வழங்கியதாகும்.

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டின் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான காலமான எழுபது ஆண்டுகள் கடந்து விட்டிருக்கிறது. அரசியல் வார்த்தைகளில், இது ஒரு கணிசமான கால அளவாகும். 1940க்குப் பின் எவ்வளவோ மாறியிருக்கின்றன’ என்று கூறினால் அது ஏற்கனவே நன்கறியப்பட்ட ஒன்று தான். சேர்ச்சில், ரூஸ்வெல்ட் மற்றும் ஹிட்லரின் உலகம் எல்லாம் வெகு கடந்த சகாப்தம் ஒன்றைச் சேர்ந்ததாய் தோன்றுகிறது (தெரிந்தே இந்த வினைச்சொல் தெரிவு செய்யப்பட்டுள்ளது). அது உண்மையிலேயே நமக்குப் பின்னால் வெகுதொலைவு சென்று விட்ட ஒன்று தானா என்பது உண்மையிலேயே தீவிரமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு கேள்வி ஆகும், அதிலும் குறிப்பாக வரலாற்றாசிரியர்களிடம் இருந்து லியோன் ட்ரொட்ஸ்கிக்கு கிட்டும் வரவேற்பை ஒருவர் ஆராய்கையில். உலகில் மற்ற என்ன மாறியிருந்தாலும் சரி, ட்ரொட்ஸ்கி அசாதாரண அளவில் இன்னும் சமகால மனிதராகவே திகழ்கிறார். 70 ஆண்டுகள் கடந்திருந்தும் கூட, அவரது பெயர் ஊட்டும் பேரார்வம் குறைந்து விடவில்லை.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாட்களின் பின், நியூயோர்க் டைம்ஸ், அவரது மரணத்தை வரவேற்று எழுதிய ஒரு தலையங்கத்தில், பின்வருமாறு வஞ்சினத்தை கக்கியது: “அவரது உணர்ச்சியற்ற குரூரத்தனத்திற்குப் பலியானவர்கள்...... மில்லியன்கணக்கில் இருப்பார்கள்.....அவருக்கு ரஷ்யா மட்டும் இரத்தத்திலும் துன்பத்திலும் மூழ்கினால் போதாது, மொத்த உலகமுமே வன்முறைக் கடலினைத் துன்பப்பட்டுத் தாண்டியாக வேண்டும், அப்போது தான் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி உறுதி செய்யப்பட முடியும்.”

இந்த வரிகளை எழுதிய தலையங்க ஆசிரியர்களின் கடும்கண்டனத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தமது காலத்தின் மாபெரும் புரட்சிகரவாதியாக அவர்கள் ட்ரொட்ஸ்கியைக் கண்டு அஞ்சினார்கள். அவர்களது நலனுக்கும் வாழ்க்கை முறைக்கும் அவர் ஒரு அச்சுறுத்தலாய் திகழ்ந்தார். தாங்கள் வாழ்ந்த உலகத்தின் வடிவத்தை மாற்றுவதாயிருந்த ஒரு எதிரியைக் குறித்து அவர்கள் எழுதினார்கள். இருந்தபோதிலும், அந்த தலையங்க ஆசிரியர்களால் தங்களது விரோதியின் சாதனைகளின் பாரிய அளவினை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட முடியவில்லை:

“அவர் ஒரு சக்தி வாய்ந்த எழுத்தாளர், பெரும் மக்கள் கூட்டங்களை திரட்டக் கூடிய பேச்சாளர், முழுமையான மேதமை கொண்டவர்.....நியூயோர்க்கின் ஈஸ்ட் சைடு பகுதியில் இருந்து ரஷ்யாவில் வந்திறங்கிய ட்ரொட்ஸ்கி தான் சாதாரண, பாமர ரஷ்யர்களை எடுத்து அவர்களை செம்படைக்குள் ஒருங்கிணைத்தவர். ரஷ்ய மண்ணில் இருந்து ஒவ்வொரு ‘வெண்படையின்’ தளபதிகளையும் அவர் துரத்தியடித்தார், பழைய ஆட்சியை மீட்பதற்கான நேசநாடுகளின் ஒவ்வொரு முயற்சியையும் அவர் நொருக்கினார், முழுக் குழப்பத்திற்குள் மூழ்கியிருந்த போக்குவரத்து மற்று விநியோக அமைப்பிற்கு ஒரு ஒழுங்கான தோற்றத்தை அவர் தந்தார்.”

ட்ரொட்ஸ்கி இறந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் அவரது எதிரிகளின் கோபம் தணிந்து விடவில்லை. சென்ற எழுபது ஆண்டுகளில், ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றினை மூன்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் எழுதி வெளியிட்டிருக்கின்றனர். இயன் தாட்சர் எழுதிய முதலாவது 2003ல் வெளியானது. ஜெப்ரி ஸ்வெய்ன் எழுதிய இரண்டாவது 2005ல் கொண்டுவரப்பட்டது. மூன்றாவதாக ரொபேர்ட் சேர்விஸ் எழுதியது மிகசமீபத்தில் பெரும் வரவேற்புடன் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்த வாழ்க்கைச் சரிதங்களில் எல்லாம் வரலாற்று தொடர்பின்மை, புறநிலையாய்வு என்பதன் சுவடு கூட இல்லை, அடிப்படை நேர்மை என்பதைக் கேட்கவே வேண்டாம். ட்ரொட்ஸ்கியை வாழும் அரசியல் எதிரி மற்றும் தங்களது தனிப்பட்ட எதிரி என்பதாய் பாவித்து இந்த ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். இந்த விடயத்தில், 1940ல் எழுதிய டைம்ஸ் பத்திரிகை தலையங்க ஆசிரியர்கள், அவர்களுக்கு இருந்த அரசியல்ரீதியாக-வெறுப்புடனான கோபத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால், உண்மைகளை நோக்கிய தங்களது மனோநிலையில் மனச்சாட்சியுடன் எழுதினார்கள் என்பது விநோதம் தான். குறைந்தபட்சம், ட்ரொட்ஸ்கி ஆற்றிய பரந்த வரலாற்றுப் பாத்திரத்தையேனும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

வரலாற்று திரிப்பு மற்றும் பொய்மைப்படுத்தலில் வெட்கமற்ற செயல்களான தாட்சர், ஸ்வெயின் மற்றும் சேர்விஸ் ஆகியோரது புத்தகங்களுக்கு பதிலளிப்பதிலும் மறுப்பு எழுதுவதிலும் நான் செலவிட்டிருக்கும் நேரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த ஆசிரியர்கள் குறித்தான எனது கட்டுரைகளும் பேச்சுகளும் சேகரிக்கப்பட்டு ஒரு புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது, அது சுமார் 200 பக்கங்களுக்கு செல்கிறது. இந்த புத்தகத்தின் ஒரு ஜேர்மன் பதிப்பை உருவாக்கியதற்கு மெஹ்ரிங் பதிப்பகத்திற்கு (Mehring Verlag) நான் கடன்பட்டிருக்கிறேன். ஸ்வெயின், தாட்சர் மற்றும் சேர்விஸ் ஆகியோரை மறுப்பதில் எனது விமர்சனம் ரொம்ப நீளமானது என்பதை என்னால் சொல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, நேரம் மற்றும் பிற பொறுப்புகளின் நெருக்குதலின் கீழ், இந்த எழுத்தாளர்களின் வரலாற்று ஆவண பொய்மைப்படுத்தல்களில் மிக அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்தவற்றின் மீது மட்டுமே எனது முழு கவனத்தையும் குவிப்பதற்கு நான் தள்ளப்பட்டிருந்தேன்.

வரலாற்றாசிரியர்கள் என்று கூறிக் கொண்டு பொய்மைப்படுத்தலையும் திரித்தலையும் பிழைப்பாகக் கொண்டிருப்பவர்களுக்கு பதிலளிக்கக் கூடிய மகிழ்ச்சியல்லாத ஒரு வேலையில் இருந்து, லியோன் ட்ரொட்ஸ்கியைப் பாதுகாத்து புத்தக வெளியீட்டின் மூலம், ஒரு வரவேற்கத்தக்க தற்காலிக நிம்மதி கிடைக்கக் கூடும் என்று தான் நான் நம்பியிருந்தேன். அந்தோ, அந்த ஆசை கூட நிறைவேறாது போலும். நான் இங்கே ஜேர்மனிக்கு வந்து சேரும் முன்பே Partei für Soziale Gleichheit (PSG-சோசலிச சமத்துவக் கட்சி) தோழர்கள், அக்டோபர் புரட்சி குறித்து பேராசியர் அலெக்சாண்டர் ரபினோவிட்ச் ஆற்றவிருந்த பொதுக் கூட்ட உரைக்கு ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் காட்டிய தீர்மானமான குரோத மனப்பான்மை குறித்து எனக்குத் தெரிவித்தனர். ஒரு பொருத்தமான கூட்ட அரங்கத்தை வழங்க அத்துறைக்கு விருப்பமில்லை, அல்லது ஒரு குவளை காப்பி குடிக்க அழைக்ககூட மற்றும் ஹம்போல்டில் ரபினோவிட்சின் வருகையை முறைப்படி வரவேற்க அத்துறைக்கு மனமில்லை.

பேராசிரியர் ரபினோவிட்ச்சின் உரைக்கு வரலாற்று பேராசிரியர்கள் காட்டிய குரோதத்தின் மூலவளத்தை அறிய எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. நிச்சயமாக, கண்ணியமற்ற நடத்தை என்பதற்கும் தாண்டி ஏதோ இருக்க வேண்டும். நிச்சயமாக இக்கூற்று உண்மை என்பதை இந்த துறையின் உறுப்பினர்கள் எழுதியுள்ளவற்றின் மீதான ஒரு திறனாய்வு துரிதமாக நிரூபித்தது.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் இணையக் காப்பகத்தில் ரொபேர்ட் சேர்விஸின் ட்ரொட்ஸ்கி புத்தகத்திற்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் அன்திரேயாஸ் ஓபரெண்டர் எழுதிய திறனாய்வும் இருக்கிறது. இவர் பேராசிரியர் ஜோர்க் பாபரோவ்ஸ்கியின் (Jörg Baberowski) வழிகாட்டுதலின் கீழ் வேலைசெய்கிற துறையின் இளைய உறுப்பினாராவார். ட்ரொட்ஸ்கியை ஒதுக்கித் தள்ளுவதற்கான சமகால பிரச்சாரம் என்பது, வேறு எதனையும் இல்லை என்றாலும், ஒரு தனித்துவமான ஆங்கில-அமெரிக்க முயற்சி அல்ல என்பதையேனும் ஓபரெண்டரின் எழுத்துக்கள் விளங்கப்படுத்துகிறது.

சேர்விஸ் எழுதிய வாழ்க்கை சரிதத்திற்கு ஓபரெண்டர் காட்டும் ஆர்வம் எல்லை கடந்ததாய் இருக்கிறது. சேர்விஸிடம் நீண்ட காலமாய் எதிர்பார்த்திருந்த, ட்ரொட்ஸ்கியின் உலக-வரலாற்று முக்கியத்துவ “மாயை” தகர்ப்பை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். சேர்விஸ் எழுதிய திரைக்கதையைப் பின்பற்றுபவரைப் போல, இஸாக் டொய்சர் மற்றும் பியர் புறூவே ஆகியோர் எழுதிய ட்ரொட்ஸ்கியின் புகழ்பெற்ற வாழ்க்கை சரிதங்களை சேர்விஸ் நிராகரிப்பதை ஓபரெண்டரும் திரும்பக் கூறுகிறார். இந்த ஆசிரியர்கள் எல்லாம் வெறுமனே ட்ரொட்ஸ்கியின் “வக்காலத்துவாதிகளாகவும்” “தொழுவோராகவும்” இருந்ததாகக் கூறுகிறார்.

நேரெதிராய், சேர்விஸ் தான் ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை சரிதத்தின் “மிகச் சிறந்த ஆசிரியர்” என்று ஓபரெண்டர் போற்றுகிறார்: ”ட்ரொட்ஸ்கிசத்துடன் எந்த தொடர்பும் குறித்த சந்தேகத்திற்கு முழுமையாக அப்பால் நின்று, தனது கதைநாயகருடன் அவசியமான முக்கிய தூரத்தை அவர் கொண்டிருக்கிறார்...” ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தீவிரமான கம்யூனிச-விரோத ஹூவர் இன்ஸ்டிடியூட் உடனான சேர்விஸின் தொடர்பு அவரது “முக்கிய இடைவெளி” மற்றும் “புறஆய்வு நிலை”யை கேள்விக்குள்ளாக்குகிறதா என்பதைக் கருத்தில் கொள்ள ஓபரெண்டர் தவறி விடுகிறார்.

சேர்விஸ் எழுதிய வாழ்க்கை சரிதத்திற்கு தகுதியற்ற புகழ்ந்துரையை அளிக்கும் போதிலும், அதனைக் குறித்து ஸ்தூலமாக சொல்வதற்கு ஓபரெண்டரிடம் எதுவுமில்லை. அற்புதமான படைப்பாக அவர் கூறும் ஒன்றில் இருந்து ஒற்றை வாக்கியத்தைக் கூட அவர் மேற்கோள் காட்டவில்லை. அதற்குப் பதிலாக, தனது திறனாய்வின் ஏறக்குறைய அனைத்து கவனத்தையும் தனது சொந்த வெளிப்பட்ட ட்ரொட்ஸ்கி மீதான கண்டனத்திற்கு அர்ப்பணிக்கிறார்.

ஓபரெண்டர் எழுதுகிறார்: “ஏற்கனவே ஆரம்பத்திலேயே வெளிப்பட்டதாய் இருந்த அவரது எழுத்து மற்றும் பேச்சுத் திறமைகள் இல்லாவிடின் அவரும் பல இளம் புரட்சிகரவாதிகளில் ஒருவராகத் தான் இருந்திருப்பார். அவரது வாய்ஜாலத்தை தவிர கவனத்தை ஈர்க்கும் அம்சம் எதனையும் அவர் கொண்டிருக்கவில்லை.”

அபத்தமான ஒப்பிப்பு வாசகமாக இருக்கும் இத்தகைய ஒன்றுக்கு ஒருவர் எவ்வாறு பதிலளிப்பது? லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை சரிதத்தை எழுதும் ஆசிரியர் ஒருவர், “ஒரு எழுத்தாளராக அவரது திறமை இல்லாமலிருந்தால், டால்ஸ்டாய் வெறுமனே பத்தோடு ஒன்றாக ஒரு பணக்கார நிலமுதலாளியாகத் தான் இருந்திருப்பார். அவர் மட்டும் போரும் சமாதானமும் மற்றும் அன்னா கரீனினா, ரீசரெக்சன், மற்றும் டெத் ஆஃப் இவான் இலிட்ச் போன்றவற்றை எழுதியிருக்காவிட்டால், டால்ஸ்டாய் பற்றி ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு எழுத்தாளராக அவரது திறமையைத் தவிர, கவனத்தை ஈர்க்கும் வேறு எந்த அம்சமும் அவரிடம் இருக்கவில்லை” என்று கூறினால் அவரைப் பற்றி ஒருவர் என்ன சிந்திக்க முடியும். ஆம், எவ்வளவு ஆழமான உண்மை!

ட்ரொட்ஸ்கிக்கு எதிராக ஓபரெண்டர் பாடும் வசையின் கீழ் சோசலிச இயக்கத்தின் மீதான ஒரு கடுமையான வஞ்சினம் அமைந்திருக்கிறது. அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “ட்ரொட்ஸ்கியின் அபிவிருத்தியானது சாரிச ஆட்சியில் அந்நியப்பட்டிருந்த தீவிரமயமான புத்திஜீவிகளின் ஒரு சாதாரண இடது-சாரி உறுப்பினரில் இருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர் குழுக்களின் வட்டாரங்களில், மார்க்சிச தத்துவத்தின் தூய்மை குறித்தும் புரட்சியின் சரியான பாதை குறித்தும் நிலவிய முடிவற்ற பண்டித விவாதங்களில் ஆதிக்கம் செலுத்திய உட்கட்சி கன்னைமோதலின் ஆரோக்கியமற்ற விளைநிலம் தான் அவரது சோசலிசமயத்தின் சூழலாய் இருந்தது.” ஓபரெண்டரின் கருத்துப்படி, “ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் மூச்சுமுட்டும் செல்வாக்கில் இருந்து ட்ரொட்ஸ்கி ஒருபோதும் எழுந்திருக்கவில்லை; கபடமற்ற பேச்சு மற்றும் ஏனைய புத்திஜீவிகள் மற்றும் தத்துவார்த்த சூழ்நிலைகளை எட்டுவதற்கான விருப்பம் ஆகியவற்றுக்கான அடையாளங்கள் ஏதேனும் இருக்கிறதா எனத் தேடி படிப்பவர் ஏமாற்றமடைகிறார்.”

இவரது அறியாமை திகைக்க வைக்கிறது! 1917க்கு முன்னதாக, ட்ரொட்ஸ்கியின் நடவடிக்கைகளும் செல்வாக்கும் ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் சூழலுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கவில்லை. ஐரோப்பிய சோசலிச இயக்கத்தில் அவர் ஒரு முக்கிய புள்ளியாய் திகழ்ந்தார், பிரிட்டிஷ் ஃபேபியனும் எதிர்காலத்தில் பிரதமரானவருமான ராம்சே மெக்டொனால்ட் உட்பட இரண்டாம் அகிலத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் ட்ரொட்ஸ்கியை அறிவர். பிரெஞ்சு மொழியிலும் ஜேர்மன் மொழியிலும் ட்ரொட்ஸ்கி சரளமாய் பேசினார், எழுதினார். குறைந்தது 1914க்கு முன்பு வரையேனும் அவர் கார்ல் கவுட்ஸ்கி உடன் மிக நெருக்கமான உறவினைப் பாவித்தார், அத்துடன் அவரது கட்டுரைகள் Die Neue Zeit பத்திரிகையில் வெளிவந்தன. பால்கன்களின் அரசியலில் ட்ரொட்ஸ்கி ஒரு தனிச்சிறப்பான அங்கீகாரமுடையவராய் கருதப்பட்டார். அவரது கலாச்சார ஆர்வங்களின் எல்லையைப் பொறுத்தவரை, பரந்த ஒரு வீச்சில் ட்ரொட்ஸ்கி புத்திஜீவித்தன, இலக்கிய மற்றும் கலைப் போக்குகள் குறித்து எழுதினார் என்பதை சேர்விஸே கூட மறுக்கவில்லை. நீட்சே, இப்ஸன் போலும் மற்றும் ஐரோப்பிய நவீன படைப்பியக்கம் (avant-garde) ஆகிய தலைப்புகளில் ட்ரொட்ஸ்கி எழுதியுள்ளார்.

ஓபரெண்டர் தொடர்கிறார்: “காற்றுப் புகாத கருத்துக் கட்டமைப்பை தன்னைச் சுற்றி சுவராக எழுப்பிக் கொண்டு இறுகிப் போன சித்தாந்தம் மற்றும் மறுக்கவியலாத உண்மைகளின் முப்பட்டகத்தின் மூலம் மட்டுமே யதார்த்தத்தை உணருகிறதாய் இருக்கும் ஒரு தத்துவத்திற்கு, சந்தேகத்திற்கிடமில்லாமல் சுறுசுறுப்பானதொரு சட்டெனப் புரிந்து கொள்கிற ஒரு புத்திஜீவி தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும்போது என்ன நடக்கும் என்பதை இளம் ட்ரொட்ஸ்கி மார்க்சிசத்தை எடுத்துக் கொண்டதும் புரிந்து கொண்டதும் விளக்கமாக எடுத்துக்காட்டுகிறது.”

கொச்சை நடைமுறைவாதிகளுக்கு வழமையான ஒரு பாணியில், ஓபரெண்டர், தத்துவார்த்த வழிமுறையில் நனவுடையவர்களாகவும் முறைமையார்ந்த வகையில் சிந்தித்தவர்களாகவும் இருந்த ட்ரொட்ஸ்கி போன்றவர்களை “கொள்கைப்பிடிவாதம்” கொண்டவர்களாய் கேலி செய்ய முயற்சிக்கிறார். ட்ரொட்ஸ்கியின் சிந்தனையை தடுத்ததாகக் கூறும் “பிடிவாதமான கோட்பாடுகளையும்” “மறுக்கவியலா உண்மைகளையும்” அடையாளம் காட்ட அவர் தவறி விடுகிறார். மார்க்சிச சிந்தனையின் ஒட்டுமொத்த படைப்புமுறை, மெய்யியல் சடவாதத்தில் அதன் அடித்தளங்கள், மற்றும் வரலாற்றின் சடவாதக் கருத்தாக்கம் ஆகியவற்றை ஓபரெண்டர் மனதில் கொண்டிருப்பார் என்பது அனுமானிக்க வேண்டியதே. எந்த ஆதரவு வாதங்களும் இல்லாமல் திட்டவட்டமாய் அவர் குற்றம்சாட்டுவது என்பதே, அவர் ட்ரொட்ஸ்கி மீது குற்றமாய்க் காணும் அதே கோட்பாட்டுப் பிடிவாத சிந்தனைக்கே சிறந்த உதாரணமாய் திகழ்கிறது என்பது ஓபரெண்டருக்கு தோன்றவில்லை.

ஓபரெண்டர் இன்னும் போகிறார்: “பாரபட்சமற்ற பகுப்பாய்வும் புறநிலைரீதியான வாதமுறையும் ட்ரொட்ஸ்கிக்கு விருப்பமானவை அல்ல; பகட்டான வாக்கியங்கள் மற்றும் உரசலான வாதத்திறன் இவற்றில் நிபுணராய் இருந்தார், மிக மறைபொருளான விநோதமான யோசனைகளை சுவையான வாய்ஜாலப் பகட்டில் மறைக்கும் திறனை கொடையாகப் பெற்றவர் அவர். அவரது நளினமான மிகையுணர்ச்சிகள் எல்லாம் சாரமும் ஆழமும் அற்ற தன்மை கொண்டிருப்பதுடன் கைகோர்த்துச் சென்றன.”

ட்ரொட்ஸ்கியின் இலக்கிய படைப்புகள் குறித்தும் ட்ரொட்ஸ்கி தனது எழுத்துக்கள் மூலம் மக்கள் சிந்தனையில் செலுத்திய செறிந்த செல்வாக்கு குறித்தும் தனது வாசகர்கள் எல்லோரும் முழுக்க அறியாதவர்கள் என்று ஓபரெண்டர் கருதிக் கொள்கிறார். 1931ல் வால்டர் பெஞ்சமின் மற்றும் ஹெர்மேன் ஹெசெவிடம் உரையாடுகையில் பிரெஸ்ட், ட்ரொட்ஸ்கி நியாயமாக ஐரோப்பாவின் மிகச் சிறந்த எழுத்தாளராய் கருதப்படத்தக்கவர் என்றார். பிரெஸ்ட், ட்ரொட்ஸ்கியின் அரசியல் ஆதரவாளராய் இருந்தவரல்ல என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும். இத்தகைய நேர்மையற்ற மற்றும் கலப்படமற்ற குப்பையை எழுதும் திறன்படைத்த எந்தவொரு தொழில்முறைக் கல்வியாளரும் ஒரு வரலாற்றாசிரியராக முக்கியத்துவமளித்து கருதப்படுவதற்கான அனைத்து உரிமையையும் கைதுறக்கிறார்.

சுமார் 40 ஆண்டு காலங்களில் ஐரோப்பிய மற்றும் உலக அரசியல் குறித்த ட்ரொட்ஸ்கியின் எழுத்துகள் நுண்ணறிவில் ஒப்பற்றவையாக உள்ளன. அப்படி இருந்தபோதிலும் ஓபரெண்டர் தொடர்ந்து சொல்கிறார்: “எல்லா வகைப் பிரச்சினைகளையும் பேசுவதற்கு தான் திறன்படைத்ததாய் கருதிக் கொண்டு ட்ரொட்ஸ்கி ஏராளமான எழுத்துக்களை அடுத்தடுத்து எழுதினார், அதன் விளைவு மக்கள் தொடர்புக்கான அவரது கட்டுப்படுத்த முடியாத ஆர்வமானது வெற்று வார்த்தைகளாய் கீழிறங்கியது. குறிப்பிடத்தக்கதாய், 1926 ஜூனில் ட்ரொட்ஸ்கி உரைகளை பாரியளவில் உற்பத்தி செய்வதை கடிவாளம்போடுவதற்கும் கட்சி அவருக்களித்த பொறுப்புகளிலும் கடமைகளிலும் அதிகமாய் கவனம் செலுத்துவதற்கும் சொல்வதற்காக கட்சியின் அரசியல்குழு அவரை அழைத்துக் கூறியது.”

ஓபரெண்டரின் அனுதாபங்கள் எல்லாம் ஸ்ராலின் பக்கமும் சோவியத் அரசியல்குழுவில் இருந்த ட்ரொட்ஸ்கியின் கன்னை எதிரிகளில் மற்றவர்களின் பக்கமும் இருக்கிறது. வளர்ந்து வந்த அதிகாரத்துவத்தின் மாபெரும் மற்றும் மிகப் பிரபல எதிரியை வாயை மூடச் செய்வதற்கும் சட்டரீதியாக நாட்டை விட்டுத் துரத்துவதற்கும் விஸ்தரிக்கப்பட்ட ஒரு பிரச்சாரத்தின் ஒரு பகுதியே ட்ரொட்ஸ்கியை கண்டிப்பதான ஸ்ராலினிச முயற்சிகள் என்பதைக் குறிப்பிட அவர் தவறுகிறார்.

ஓபரெண்டர் இன்னும் தாழ்ந்து செல்கிறார். உண்மைக்கு-எதிரான வரலாற்றின் ஒரு பரிகசிக்கத்தக்க முயற்சியில் அவர் கேட்கிறார்: “முதலாம் உலகப் போரின் ஒரு விளைவாக சாரிச ஆட்சி மட்டும் வீழ்ச்சியுறாது இருந்திருந்தால் ட்ரொட்ஸ்கி என்னவாகி இருப்பார்? அப்போது அவர் ஒரு இடதுசாரி கடுங்கோட்பாட்டுவாத செய்தியாளராகவும் வயது முதிரும் நிலையில் காத்திருக்கும் புரட்சிகரவாதியாகவும் இருந்திருப்பார்.”

நாமும் இதேபோல் கேட்க முடியும், கூட்டரசின் நெருக்கடி இல்லாது போயிருந்தால் லிங்கனுக்கு என்ன நடந்திருக்கும்? அவர் ஒரு சிறிய நகர வழக்கறிஞராகவே தொடர்ந்து இருந்திருப்பார். சீர்திருத்தவாதத்திற்கு மேடை அமைத்துத் தந்த ரோம் மற்றும் ஜேர்மன் இளவரசர்களுக்கு இடையிலான மோதல் வராதிருந்தால் லூதருக்கு என்ன நடந்திருக்கும்? பேர்லின் சுவர் வீழ்ச்சியுறாது இருந்திருந்தால் திருமதி.மேர்கேலுக்கு என்ன நடந்திருக்கும் என்றும் கூட சற்று கூடுதல் கண்ணியமான அளவில் ஒருவர் வியக்கக் கூடும். அடிப்படையில், 20 ஆம் நூற்றாண்டே நிகழாது போயிருந்தால் ட்ரொட்ஸ்கி என்னவாகியிருக்கக் கூடும்! என்று சிந்திக்க ஓபரெண்டர் நம்மைக் கேட்கிறார். ஆனால் திரு. ஓபரெண்டரின் அனுமதி இல்லாமலேயே அது நிகழ்ந்து விட்டது, அதன் முடிவுகள் அவருக்குத் திருப்தி தரவில்லை.

”புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் காலங்களில் வெண்படையினருக்கு எதிராக ஆயுதங்களைக் கையிலேந்துவதற்கு வெகுஜனங்களிடையேயும் செம்படையிடையேயும் கிளர்ச்சி ஏற்படுத்த எழுந்து சென்று விடுவார். அவரது வாய்ஜாலத் திறமை மற்றும் ஒழுங்கமைப்புத் திறமைகளுடன் சேர்ந்து, வன்முறை பிரயோகிப்பில் ஐயமற்ற உணர்ச்சிவயப்படாத அவரது அணுகுமுறையும் சேர்ந்து, மிகப் பிரபலமான மற்றும் மிகச் செல்வாக்கு படைத்த கட்சித் தலைவர்களில் ஒருவராய் அவர் துரிதமாய் உருவெடுக்க அனுமதித்தது.”

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மில்லியன்கணக்கான மக்கள் பாரிய அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டிருந்ததான, போர் மற்றும் புரட்சியின் பெரும் சுழலில், ட்ரொட்ஸ்கி உலக வரலாற்றின் மாபெரும் மனிதர்களில் ஒருவராய் எழுச்சியுற்றார்!

இப்போது வரலாற்றில் நடந்ததை இல்லாதுசெய்ய ஓபரெண்டருக்கு ஆசை வருகிறது. “ட்ரொட்ஸ்கி மற்றும் அவரைச் சுற்றிய மாய வலையில் என்ன எஞ்சியிருக்கிறது?...[சேர்விஸ் எழுதிய] வாழ்க்கை சரிதத்தைப் படித்த வகையில் ஒரு விமர்சனரீதியான ஆய்வின் அடிப்படையில் பார்த்தால் ஒரு காலத்தில் ஊதிப் பெருக்கப்பட்ட ட்ரொட்ஸ்கியின் மரியாதையில் அதிகம் எஞ்சியிருக்கவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. அவரது எழுத்துக்கள் பெரும்பாலும் அரும்பொருள்களின் காட்சியறைக்கு உரியவை, அவரது சிந்தனையின் பகட்டு ஒருவருக்கு இன்று, அதாவது நமது சொந்த சித்தாந்தம்-அற்ற யுகத்தில், விநோதமானதாய் (பைத்தியக்காரத்தனமாக இல்லையென்றால்) படுகிறது. அவர் ஸ்தாபித்த நான்காம் அகிலம் என்பது தொழிலாளர்’ இயக்க வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு அளவிற்கும் கூட இல்லை.” என அவர் எழுதுகின்றார்.

ஓபரெண்டர் அவர்கள் ஒரு காலத்தில் கிழக்கு ஜேர்மனியாக இருந்த பகுதியில் தான் பிறந்தார் என நான் புரிந்து கொண்டிருக்கிறேன். தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஸ்ராலினிச ஆளும் ஜேர்மன் சோசலிச ஐக்கிய கட்சிக்கான (SED) இடத்தை அவர் இன்று எவ்வாறு மதிப்பிடுவார்? அல்லது, அந்த விடயத்தில், சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியைத் தான் எவ்வாறு மதிப்பிடுவார்? இந்த பிற்போக்குவாத அதிகாரத்துவ கட்டமைப்புகளில் என்ன எஞ்சியிருக்கிறது? ஸ்ராலினிச கட்சிகளின் தலைவிதியை ட்ரொட்ஸ்கி முன்கணித்துக் கூறினார்: “இந்த பிற்போக்குவாத அமைப்புகளின், கல்லுக்கு மேல் கட்டிய ஒரு கல்லும் கூட மிச்சமாக இருக்காது” என்று அவர் எழுதினார்.

போரும் புரட்சியும் குறுக்கிடாதிருந்தால் ட்ரொட்ஸ்கியின் தலைவிதி என்னவாய் இருந்திருக்கும் என்கிற ஊகத்தில் திளைக்கச் சென்ற திரு. ஓபரெண்டர், நான் இந்த கேள்வியை முன்வைப்பதற்கு ஆட்சேபிக்க முடியாது: ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருக்குலையாமல் இருந்திருந்தால் ஓபரெண்டர் அவர்களுக்கு என்ன நேர்ந்திருக்கும்? வெளிப்படையாக, அவரது வாழ்க்கை அவ்வளவு வித்தியாசமாகச் சென்றிருக்குமா என்பதில் எனக்கு சந்தேகமிருக்கிறது. அவரது சாதாரணத் திறமைக்கு ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் கல்விக் கட்டமைப்புக்குள்ளாக எங்கேனும் ஒரு இடத்தைக் கண்டிருக்க முடியும். ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திலேயே கூட அவர் ஒரு இடத்தைப் பிடித்திருக்கக் கூடும். சொல்லப் போனால், சேர்விஸ் எழுதிய வாழ்க்கைச் சரிதத்தின் மீதான அவரது திறனாய்வு ஒற்றை வார்த்தை கூட மாற்றப்படாமல் ஒரு ஸ்ராலினிச ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கக் கூடும்!

ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் அரும்பொருள் காட்சியறைக்குச் சொந்தமானவை என்றும், அவை நமது காலத்திற்கு எந்த சம்பந்தமும் அற்றவை எனவும் ஓபரெண்டர் கூறுகிறார். ஒரு வரலாற்றாசிரியரிடம் இருந்து, அதிலும் சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை சிறப்புப் பொருளாக எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு வரலாற்றாசிரியரிடம் இருந்து வருகின்ற ஒரு விந்தையான தீர்ப்பு இது. ட்ரொட்ஸ்கி சம்பந்தமற்றவர் என்பது 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக எண்ணப்பட வேண்டிய ரஷ்யப் புரட்சியின் வரலாற்று முக்கியத்துவத்தை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துகளைக் குறிப்பிடாமல் அக்டோபர் புரட்சிக்கு வழிகாட்டிய அரசியல் மூலோபாயத்தை புரிந்துகொள்வது சாத்தியமாகுமா? ட்ரொட்ஸ்கியின் ’ரஷ்யப் புரட்சியின் வரலாறு’ புத்தகத்தை (சர்ச்சைக்கப்பாற்பட்ட வகையில் உலக இலக்கியங்களின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் அது திகழ்கிறது) கவனமாகப் படிப்பதை எந்த தீவிரமான ஒரு வரலாற்றாசிரியரும் 1917 பற்றிய தனது ஆய்வில் இருந்து விலக்க இயலாது. அதேபோல், ட்ரொட்ஸ்கியின் ’காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி’யை படிப்பது என்பது வரலாற்றாசிரியர்களுக்கு மட்டுமல்லாமல், சோவியத் ஒன்றியம் என்பது என்னவாக இருந்தது மற்றும் 1991ல் அதன் கலைப்புக்கு இட்டுச் சென்ற (இது ட்ரொட்ஸ்கியால் 1936 ஆம் ஆண்டிலேயே கணித்துக் கூறப்பட்ட தலைவிதி!) சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் பிறப்பிடம் மற்றும் தன்மை என்ன என்பதை இன்று புரிந்து கொள்ள விரும்பும் எவரொருவருக்கும் அத்தியாவசியமானதாய் திகழ்கிறது.

அவரது காலத்தின் வேறு எந்த ஒரு படைப்பாசிரியரும் சமமாய் நிற்க முடியாத ஒரு அளவிற்கு, ட்ரொட்ஸ்கியின் இலக்கியப் பணி அசாதாரணமான வகையில் சமகாலத்தையதாய் திகழ்கிறது. கடந்த 70 வருடங்களில் உலகில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்க, இன்று வரை நம்முடன் நிற்கும் பிரச்சினைகளை, நிகழ்முறைகளை மற்றும் சிக்கல்களை - உலகப் பொருளாதாரத்தின் தன்மையும் தேசிய-அரசுடன் அதன் உறவும்; அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய மேலாதிக்கத்தின் முக்கியத்துவமும் தாக்கங்களும்; மற்றும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் நொருங்குநிலை - ட்ரொட்ஸ்கி கையாண்டார். சொல்லப் போனால், ட்ரொட்ஸ்கியின் ஒரு ஒற்றைப் படைப்பின் பேரையும் கூட திரு. ஓபரெண்டர் நமக்கு வழங்கவில்லை. ஆனால், எல்லாவற்றையும் விட்டிருந்தாலும் கூட, ஜேர்மன் பாசிசம் குறித்த ட்ரொட்ஸ்கியின் பகுப்பாய்வு மற்றும் ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு நாசிசம் முன்வைத்த வானளவாவிய ஆபத்து குறித்த அவரது உணர்ச்சிகரமான எச்சரிக்கை, ஆகிய ட்ரொட்ஸ்கியின் மாபெரும் சாதனைகளில் கருதப்பட வேண்டியவற்றை (குறைந்தபட்சம் ஒரு ஜேர்மனிய வரலாற்றாசிரியரால்) குறிப்பிடக் கூட அவர் தவறுவது மிகவும் வேதனையளிக்கிறது.

இந்த எழுத்துக்களும் கூட, புரியா வரலாற்று அரும்பொருள் காட்சியறைக்குச் சொந்தமானவை என்று தான் திரு.ஓபரெண்டர் நம்புகிறாரா? இவையெல்லாம் நமது “சித்தாந்தம்-தவிர்த்த”தாய் சொல்லப்படும் யுகத்திற்கு எந்த சம்பந்தத்தையும் கொண்டிருக்கவில்லையா? நாம் சந்திக்கும் இந்த வேளையிலும் கூட, நாஜி ஆட்சி குறித்த ஒரு பெரிய கண்காட்சி பேர்லின் வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நாள் வரைக்கும், 1933 ஜனவரி மற்றும் அதற்குப் பிந்தைய நாஜி வெற்றியின் தழும்பு ஜேர்மன் அரசியலிலும் கலாச்சாரத்திலும் உள்ளது. ஆனால் பாசிஸ்டுகளின் இந்த வெற்றி சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் கோழைத்தனமான மற்றும் பொறுப்பற்ற கொள்கைகளின் காரணத்தினாலேயே சாதிக்கப்பட்டது, இந்த கட்சிகள் ஜேர்மனியில் இருந்த மில்லியன்கணக்கான சோசலிசத் தொழிலாளர்களை ஹிட்லருக்கு எதிரான ஒரு பொதுவான போராட்டத்தில் ஒன்றுபடுத்த மறுத்தன.

பாசிசத்தால் முன்வைக்கப்பட்ட அபாயம் குறித்த ட்ரொட்ஸ்கியின் எச்சரிக்கைகள் 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மிக தீர்க்கதரிசனமான அரசியல் ஆவணங்களில் முன்னணியில் இருக்கும் ஒன்றாய் திகழ்கிறது. துருக்கியில் கட்டாய நாடுகடத்தலில் வாழ்ந்த சமயத்தில் ட்ரொட்ஸ்கியால் எழுதப்பட்டது என்கிற வகையில் அவை இன்னும் அசாதாரண தன்மையுடன் காட்சியளிக்கின்றன. நாஜிக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கிய முன்னணிக்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்தார், அத்துடன் ஹிண்டன்பேர்க்கிற்கு சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பரிதாபகரமான அடிபணிதல் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியை பாசிசத்துடன் அடையாளப்படுத்திய ஸ்ராலினிச கட்சியின் குற்றவியல் வகையிலான பொறுப்பற்ற தன்மை ஆகிய இரண்டையும் அவர் கண்டனம் செய்தார். நாஜி வெற்றியானது துரிதமாய் ஒரு கம்யூனிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லும் என்று வீராவேசமும் மிரட்சியுற்ற விதிவசவாதமும் கலந்து ஸ்ராலினிச ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) கூறிய வேளையில், ட்ரொட்ஸ்கி, ஹிட்லர் அதிகாரத்தைப் பிடிப்பதென்பது கற்பனை செய்தும் பார்க்கமுடியாத பரிமாணங்களிலான ஒரு அரசியல் பெருங்கேட்டைக் குறிப்பதாகும் என்று எச்சரித்தார்.

கட்சிக்குள்ளான போராட்டத்தில் ட்ரொட்ஸ்கி வெற்றி பெற்றிருந்தால் கூட அது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தியிருக்கப் போவதில்லை என்பதான அனைத்துக் கூற்றுகளும் ஜேர்மனியின் நிகழ்வுகளால் நிராகரிக்கப்படுகின்றன. ட்ரொட்ஸ்கி மற்றும் ஸ்ராலினை வேறெந்த பிரச்சினையும் வேறுபடுத்திக் காட்டவில்லை என்றால், ஜேர்மனி விடயத்திலான மோதலே ட்ரொட்ஸ்கியின் தோல்வியானது மிகவும் துயரகரமான பின்விளைவுகளைக் கொண்டிருந்தது என்பதான கூற்றினை நியாயப்படுத்த போதுமான வரலாற்றுத் தருணமாகும். ஹிட்லர் வெற்றி பெறுவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாக, 1932 ஏப்ரலில் ட்ரொட்ஸ்கி எழுதிய ஒரு ஆவணத்தை மேற்கோள் காட்ட என்னை அனுமதியுங்கள். ஒரு பாசிச வெற்றிக்கு சோவியத் அரசாங்கத்தின் பொருத்தமான பதிலிறுப்பு என்னவாக இருக்கும்? ட்ரொட்ஸ்கி எழுதினார்:

“....தற்போதைய ரஷ்ய அரசாங்கத்தின் பெயரில் பேசுவதற்கோ அல்லது அதன் நோக்கங்களைக் குறிப்பிடுவதற்கோ (இவற்றைக் குறித்து நானும் எந்தவொரு பிற அரசியல் வாசகர் அல்லது மனிதரைப் போல கிடைக்கத்தக்கதாய் இருக்கும் விபரங்கள் அனைத்தையும் கொண்டு மட்டுமே தீர்ப்பளிக்க முடியும் என்கிற நிலையில்) எனக்கு எந்த உரிமையும் இருக்கிற வகையில் அதனுடனான எனது உறவுகள் இல்லை. ஆனாலும் ஜேர்மனியில் ஒரு பாசிச அரசு வெற்றிபெறுவதான சந்தர்ப்பத்தில் எனது கருத்தில் சோவியத் அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைச் சொல்ல நான் முழுச் சுதந்திரமுற்றவனாய் இருக்கிறேன். இந்த நிகழ்வு பற்றிய தந்தி விபரத்தைப் பெற்றவுடனேயே, சேமப்படைகளை அணிதிரட்டுவதற்கு உத்தரவில் கையெழுத்திடுவேன். உங்களுக்கு முன்னால் ஒரு மரணகர எதிரி இருக்கும்போது, புறவய நிலைமையின் தர்க்கத்தில் இருந்து போர் பாய்கின்ற சமயத்தில், எதிரி தன்னை ஸ்தாபித்துக் கொள்வதற்கும் அரணமைத்துக் கொள்வதற்கும்....இவ்வாறாக ஒரு வானளாவிய அபாயத்தின் பரிமாணங்களுக்கு வளர்ச்சியுறுவதற்கும் நேரமளிப்பதானது மன்னிக்க முடியாத மெத்தனம் ஆகும்.”

இந்த வார்த்தைகளும் கூட புரியா வரலாற்று அரும்பொருள் காட்சியறைக்குச் சொந்தமானவை என்றே திரு.ஓபரெண்டர் நம்புகிறாரா?

லியோன் ட்ரொட்ஸ்கி இறந்து 70 வருடங்களுக்குப் பின்னர், அவர் குறித்து என்ன மதிப்பீடு செய்ய முடிகிறது? இப்போது வரலாற்று முன்னோக்கின் அனுகூலம் நமக்கு உள்ளது. ட்ரொட்ஸ்கி மிக மையமான ஒரு பாத்திரத்தை ஆற்றிய அரசியல் மோதல்களின் விளைவை நாம் அறிவோம். சோவியத் ஒன்றியத்தின், மற்றும் ட்ரொட்ஸ்கியுடனான அரசியல் போராட்டத்தின் அடிப்படையில் அதிகாரத்திற்கு வந்த ஸ்ராலினிச ஆட்சியின் தலைவிதியை நாம் அறிவோம்.

ஸ்ராலின்-புக்காரினது “தனியொரு நாட்டில் சோசலிசம்” தத்துவமா அல்லது ஒரு தேசிய அடிப்படையில் சோசலிசத்தை ஸ்தாபிப்பதன் மீதான சாத்தியத்தை ட்ரொட்ஸ்கி மறுத்ததா, இவற்றில் எந்த முன்னோக்கு அடுத்துவந்த வரலாற்று அபிவிருத்தியால் உறுதிப்படுத்தப் பெற்றது என்கிற கேள்வி கேட்கப்பட வேண்டும். எந்த முன்னோக்கு பொருளாதார அபிவிருத்தி வரைகோட்டை எதிர்பார்த்துக் கணித்தது: ஸ்ராலினின் தேசிய சோசலிச தன்னிறைவுப் பொருளாதாரக் கருத்தாக்கமா அல்லது உலகளாவிய பொருளாதார நிகழ்முறைகளின் பிரதானம் குறித்த ட்ரொட்ஸ்கியின் வலியுறுத்தலா?

சோவியத் ஒன்றியத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், 1923ல் அரசியல்குழுவில் தொடங்கிய ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பது, அக்டோபர் புரட்சி அடித்தளமாய்க் கொண்டிருந்த புரட்சிகர சர்வதேசிய வேலைத்திட்டத்திற்கு எதிராக ஒரு வலது-சாரி மற்றும் அடிப்படையில் ரஷ்ய தேசியவாத வகைப்பட்டதாய் இருந்த பிற்போக்குவாதத்தின் உதயத்தைக் குறித்தது என்பதை ஸ்தாபித்துக் காட்டுகிறது. ஒரு தசாப்தத்திற்கு சற்று பிந்தைய காலத்திற்குள்ளாக, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளாக சர்வதேசியவாதிகளை வெளியேற்றுவது என்பது, சோசலிச புத்திஜீவிகள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக மார்க்சிச அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அனைத்துப் பிரதிநிதிகளையும் உருத்தெரியாமல் ஒழித்துக் கட்டும் நோக்கத்தைக் கொண்ட கட்டவிழ்ந்த அரசியல் படுகொலைப் பிரச்சாரமாக அபிவிருத்தியடைந்திருந்தது.

1930களின் சோசலிச-எதிர்ப்பு பயங்கரத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் ஒரு அரசியல்ரீதியாய்-காயத்தழும்புகளுடனான சமூகமாய் எழுந்தது. சோவியத் ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பட்டாளத்தின் தளபதிகளையும் ஏறக்குறைய இல்லாதொழித்தது உட்பட ஸ்ராலினின் பாரிய படுகொலைப் பிரச்சாரம் நாஜிக்களுக்கு உறுதுணையாய் அமைந்ததோடு அவர்கள் அதனையடுத்து ஊடுருவுவதற்கும் வழிவகை செய்து அளித்தது. 1941 மற்றும் 1945க்கு இடைப்பட்ட காலத்தில் சோவியத் ஒன்றியத்திற்கு நேர்ந்த படுபயங்கரமான உயிரிழப்புகளுக்கு, பெருமளவுக்கு, ஸ்ராலினிச வெளியேற்ற நடவடிக்கைகளின் பாதிப்பைக் காரணமாகக் கூற முடியும். இரண்டாம் உலகப் போரில் சோவியத்தின் வெற்றி, தொலைநோக்கில், சோவியத் ஒன்றியத்தின் அழிவார்ந்த அரசியல் பாதையை திருப்ப முடியவில்லை. 1953ல் ஸ்ராலினின் இறப்புக்குப் பின்னர் சோவியத் அதிகாரத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட வெறிகொண்ட அனைத்து சீர்திருத்த முயற்சிகளும், ஸ்ராலினிச ஆட்சியின் அடித்தளத்தை உருவாக்கியிருந்த தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அபிவிருத்தியானவை. ஸ்ராலின் விட்டுச் சென்ற அமைப்புமுறை, அச்சர்வாதிகாரி இறந்து 38 வருடங்களுக்கும் குறைவானதொரு காலத்தில் அது வீழ்ந்து போகும் வரை, நெருக்கடி மாற்றி நெருக்கடியில் தத்தளித்தது. அந்த வீழ்ச்சியின் வடிவம் - அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது, நாட்டுடைமையாக்கப்பட்டிருந்த சொத்துக்கள் தனியார் உடைமையாக மாற்றப்பட்டது, மற்றும் அதிகாரத்துவத்தின் பகுதிகள் முதலாளித்துவ பலபில்லியனர்களாக உருமாற்றம் கண்டது - 1930களில் ட்ரொட்ஸ்கி எதிர்பார்த்துக் கணித்துக் கூறியிருந்த பாதைகளிலேயே நிகழ்ந்தது.

நிறைவாக, ட்ரொட்ஸ்கியின் இன்றைய பொருத்தம் குறித்து கூற விரும்புகிறேன். வரலாற்றில் ட்ரொட்ஸ்கியின் இடம் என்ன? ஒரு எழுத்தாளராய், பேச்சாளராய், புரட்சிகரக் கிளர்ச்சி மூலோபாயவாதியாய், இராணுவத் தலைவராய் மற்றும் அரசியல் சிந்தனையாளராய், ட்ரொட்ஸ்கி 20 ஆம் நூற்றாண்டில் சோசலிச அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் உச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 1917க்கு முன்னதாக ரஷ்யப் புரட்சியின் மூலோபாயம் குறித்து ட்ரொட்ஸ்கி விவரித்தார். புரட்சி மற்றும் உள்நாட்டு யுத்தத்தின் காலங்களில், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கான விருப்பத்திற்கு உருவாய் அவர் திகழ்ந்தார். அதன் பின், அரசியல் தோல்விக்கும் தனிமைப்படலுக்கும் முகம் கொடுத்த நிலையில், நாடு கடத்தப்பட்டும் வேட்டையாடப்பட்ட ஒரு மனிதராக, ட்ரொட்ஸ்கி இன்னும் மாபெரும் அரசியல் மற்றும் தார்மீக உச்சங்களுக்கு உயர்ந்தார் - ஸ்ராலினிச எதிர்ப்புரட்சியின் சமரசமற்ற எதிரியாகவும் எதிர்வரும் காலத்தின் உலக சோசலிசப் புரட்சிக்கான மூலோபாயவாதியாகவும்.

வேறு எந்த ஒரு மனிதரையும் ஒப்பிட முடியாத வண்ணம், 20 ஆம் நூற்றாண்டில் ஒரு புரட்சிகர சோசலிஸ்டாக இருப்பது என்றால் என்ன என்பதை ட்ரொட்ஸ்கி வரையறை செய்து காட்டினார். சோசலிசத்தின் வரலாற்றில் லெனின் ஒரு உச்சமான மனிதர் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவரது வாழ்க்கையும் பணிகளும் ரஷ்ய புரட்சியில் (அதன் அனைத்து முரண்பாடுகளுடனும் சேர்ந்து) பொதிந்ததாய் இருந்தது. அவர் உருவாக்கியிருந்த கட்சியில் அக்டோபர் புரட்சிக்கு எதிரான பிற்போக்குத்தனம் அப்போது தான் கட்டவிழத் தொடங்கிய நிலையில் ஜனவரி 1924ல் அவரது மரணம் வந்தது. தனது நனவார்ந்த அரசியல் வாழ்க்கையின் இறுதி வாரங்களில், புரட்சியின் தலைவிதி குறித்த கவலை சூழ்ந்த நிலையில், லெனின், அவரது இறுதி எழுத்துக்களில் ஆவணப்படுத்தப்பட்டவாறு, தோள் பற்ற ட்ரொட்ஸ்கியின் பக்கம் திரும்பினார். ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில், ட்ரொட்ஸ்கியின் அரசியல் வேலை ஒரு உலக வரலாற்று முக்கியத்துவத்தை வென்றதாகும். ரஷ்யப் புரட்சி என்பது ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் அத்தியாயம், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கான அவரது போராட்டத்திலான ஒரு அத்தியாயம். உலக சோசலிசப் புரட்சியின் வடிவாய், பிரதிநிதியாய் ட்ரொட்ஸ்கி திகழ்ந்தார். மேலும், ஸ்ராலினிசத்திற்கு எதிரான போராட்டத்தில், கிரெம்ளின் கூலிப்படையினர் மற்றும் அவர்களது அரசியல் துணைக்கூட்டாளிகள் சோசலிசத்தை இழுத்துச் சென்று விட்டிருந்த பாதாளத்தில் இருந்து அதனை ட்ரொட்ஸ்கி மீட்டார்.

ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட அரசியல் கருத்தாக்கங்கள் மற்றும் அரசியல் போராட்டங்களின் வழி அல்லாமல் வேறு எந்த வழியிலும் சோசலிஸ்ட் என தன்னை அழைத்துக் கொள்ளும் எந்த அரசியல் போக்கும் தன் வேலைத்திட்டத்தை வரையறை செய்ய முடியாது, மார்க்சிசத்துடன் இன்று அதற்குள்ள உறவை வரையறை செய்ய முடியாது. அவரால் 1938ல் ஸ்தாபிக்கப்பட்ட நான்காம் அகிலம் தாக்குப்பிடித்து வாழ்ந்திருக்கிறது, உண்மையான மார்க்சிசத்தின் அரசியல் வெளிப்பாடாக அபிவிருத்தியுற்றிருக்கிறது. சென்ற நூற்றாண்டின் மாபெரும் அரசியல் மனிதராய் வாழ்ந்த ட்ரொட்ஸ்கி, தான் இறந்து 70 வருடங்களுக்குப் பிந்தையதொரு காலத்தில், புதிய நூற்றாண்டில் சோசலிஸ்டுகளுக்கான மிக முக்கிய ஆசிரியராய் திகழ்கிறார்.