World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Protests in Germany against radioactive waste transport

கதிரியக்க கழிவு போக்குவரத்துக்கு எதிராக ஜேர்மனியில் எதிர்ப்புக்கள்

By Dietmar Henning
10 November 2010

Back to screen version

அணுசக்தி எதிர்ப்பாளர்கள் ஏராளமானவர்கள் கடந்த ஐந்து நாட்களில் பிரான்ஸ், ஜேர்மனி வழியே கதிரியக்கக் கழிவுகளை காஸ்ரோர் போக்குவரத்து (Cask என்பது கதிரியக்கப் பொருள் போக்குவரத்து, சேமிப்பு அல்லது அதிக கதிரியக்கக் கழிவு பெரும் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவது) எடுத்துச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

ஏராளமான எதிர்ப்பாளர்கள் சமீபத்திய ஆண்டுகளை விட இம்முறை மிக அதிகம் குழுமியமை அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU) தலைமையில் ஜேர்மனிய அரசாங்கத்தின் அணுசக்திக் கொள்கைகளுக்கு அதிகரித்தளவில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான அடையாளம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு அதிக கதிரியக்கக் கழிவுகளை எடுத்துச் செல்லும் காஸ்டர் பெருவாகனங்கள் இரயில்கள் மூலம் ஜேர்மனி வழியே கடக்கின்றன. இம்முறை பல ஆயிரக்கணக்கான அணுசக்தி எதிர்ப்பாளர்கள் குறுக்கிட்டு 123 தொன்கள் கதிரியக்கக் கழிவை எடுத்துச் செல்லும் இரயிலை தடுத்தனர். மாநில அரசாங்கங்கள் கிட்டத்தட்ட 17,000 பொலிசாரைத் திரட்டி இரயில் பாதையை பாதுகாக்கையில் இரயில் பிரான்சில் La Hague என்னும் கதிரியக்கப் பொருட்களை மாற்றும் ஆலையிலிருந்து அதன் இறுதியிடத்திற்குச் செல்லப் புறப்பட்டது. இது ஜேர்மன் லோவர் சாக்சனி மாநிலத்தில் கோர்லேபன் என்னும் தற்காலிக நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளில் வைத்திருக்கப்படும்.

ஜேர்மனிய கிராமப்புறப் பகுதியான வெண்லாண்டில் இருந்து விவசாயிகள் பாதையை தங்கள் டிராக்டர்களைக் கொண்டு தடைக்கு உட்படுத்தினர்; அணுசக்தி எதிர்ப்பாளர்கள் பாதையிலேயே அமர்ந்து முற்றுகையிட்டனர். சில எதிர்ப்பாளர்கள் தொடரூர்ந்து பாதையுடன் தங்களைச் சங்கிலிகளால் பிணைத்துக் கொண்டனர், மற்றவர்கள் பல முறையும் இரயில் பாதையை அடைய முயன்று பாதையில் இருந்து ஜல்லிக் கற்களை அகற்ற அவர்கள் விரும்பினர். ஞாயிறுகாலை கிட்டத்தட்ட 2,500ல் இருந்து 3,000 அணுசக்தி எதிர்ப்பாளர்கள் இரயில் பாதையைத் தடைக்கு உட்படுத்த பாதையை அடைய முற்பட்டனர். பொலிசார் கூற்றின்படி கிட்டத்தட்ட 250 பேர் இரயில் பாதைகளை அடைந்து கற்களை அகற்ற முற்பட்டனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஞாயிறன்று பொலிசார் நீர்பாய்ச்சுதல், தடியடி, மிளகுப்பொடி தூவுதல், கண்ணீர்க் குண்டு பிரயோகம் ஆகியவற்றைச் செய்ததால் பலர் காயமுற்றனர். இதன் பின் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் இருந்த காட்டுப் பகுதியில் ஒரு பொலிஸ் கவச வண்டியைத் தீக்கிரையாக்கினர்.

குடிமக்கள் முன்னெடுப்பை கொண்ட லுஷோவ் டன்னன்பேர்க் சுற்றுசூழல் பாதுகாப்பு (Environmental Protection Luchow Dannenberg- BI) என்ற அமைப்பு ஒரு இராணுவ டாங்க் அருகில் காணப்பட்டதாகக் கூறியது. கூட்டாட்சி உள்துறை அமைச்சரகம் லோவர் சாக்சனி அதிகாரிகள் ஜேர்மனிய இராணுவத் தொழில்நுட்பக் கருவி பொலிசாருக்கு உதவியாக வரவேண்டும் என்று கோரியதை உறுதிபடுத்தியது. உத்தியோகபூர்வ மாநில ஆதாரங்கள் இராணுவம் பொலிஸ் நடவடிக்கையில் தொடர்பு கொண்டது என்பதை மறுத்தனர். அத்தகைய ஈடுபாடு ஜேர்மனிய அரசியலமைப்பில் இராணுவம் உள்நாட்டில் பயன்படுத்தவதைத் தடைசெய்யும் விதிக்கு முரணானதாகும்.

எதிர்ப்புக்களின் விளைவாக காஸ்ரோர் பெருவாகனங்கள் கோர்லேபனை அடைய கடைசி 20 கிலோ மீட்டர் டிரக்குகளில் மாற்றப்பட்டன. கோர்லேபனை செவ்வாய் காலை வந்து சேர்ந்திருக்க வேண்டியவை பல ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளிருப்புத் தடைகளில் ஈடுபட்டதால் போக்குவரத்து தாமதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களையும் பொலிசாரையும் வன்முறையில் ஈடுபடாமல் இருக்குமாறு BI கோரியது. BI செய்தித் தொடர்பாளர் வொல்வ்காவ் ஏரென்க ஞாயிறன்று டன்னன்பேர்க்கில் “நாங்கள் வன்முறையை விரும்பவில்லை; அணுசக்திப் பயன்பாட்டை திரும்பப் பெறுதல் பற்றி விவாதம் வேண்டும். பொலிசார் வன்முறையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கோருகிறோம்.” எதிர்ப்பாளர்களின் நோக்கம் “காஸ்ரோர் மூலம் கழிவு வருவதைத் தாமதப்படுத்த வேண்டும், அதேநேரத்தில் அரசாங்கத்தின் அணுக்கொள்கை கால அட்டவணையையும் தடைக்கு உட்படுத்த வேண்டும் என்பதாகும்.” எனக்கூறினார்.

CDU, CSU மற்றும் தடையற்ற சந்தைச் சார்பு FDP ஆகிய கன்சர்வேடிவ் கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தின் அணுசக்திக் கொள்கை காஸ்ரோர் போக்குவரத்து மற்றும் அதன் அணுசக்திக் கொள்கை பற்றி எதிர்ப்புக்களைப் புதுப்பித்துள்ளன. ஜேர்மனியில் அணுசக்தி ஆலைகள் வரம்பின்றி விரிவாக்கப்படுவதற்கு ஆதரவான கூட்டணியின் சமீபத்திய முடிவு எதிர்ப்புக்களுக்கு எரியூட்டியுள்ளன. பெருவணிக எரிசக்தி நலன்களின் இலாபங்களை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசாங்க முடிவின் பின்பு உந்துதல் உள்ளது என்பது தெளிவு. அவைதான் பெரிய அணுசக்தி ஆலைகளை நடத்துகின்றன. அவர்கள் காலம் கடந்துவிட்ட பெருகிய முறையில் பழுதடைந்து வரும் சக்தி ஆலைகளினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றி அதிகக் கவலை காட்டப்படவில்லை; அத்துடன் பெரும் கதிரியக்கப் பொருட்களை அனுப்பி வைத்தல், சேமித்து வைத்தல் ஆகியவற்றில் உள்ள ஆபத்துக்களும் இணைந்துள்ளன.

மோர்ஸ்லேபன், அஸ்ஸ என்னும் இரு இடங்களில் தற்காலிகமாக உள்ள சேமிப்பு நிலையங்களும் அதிக பாதுகாப்புத் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அரசாங்கம் கதிரியக்கக் கழிவுகள் நிலத்தடி இறுதி சேமிப்பு இடமாக கோர்லேபனை வைத்திருக்க விரும்புவது போல் தோன்றுகிறது.

1983ல் முன்னாள் சான்ஸ்லர் ஹெல்முட் கோலின் (CDU) அரசாங்கம் கோர்லேபனில் உள்ள நிலையத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் மீது அவர்கள் ஆய்வின் முடிவை வெளியாடாமல் இருக்க கணிசமாக அழுத்தம் கொடுத்தது. அது சல்ஸ்ரோக்கில் உள்ள நிலையம் என்னும் பொருத்தமாக இருக்கும் எனக்குறிப்பிட்டிருந்தது. முன்னாள் கிழக்கு ஜேர்மனி எல்லையும் நேரடியாக உள்ள கோர்லேபனுக்கு சாதகமாக அங்கு ஆலை நிறுவும் முடிவு அரசியல் உந்துதலைப் பெற்றிருந்தது. பவேரியா, பாடன் வூர்ட்டெம்பேர்க் ஆகிய மற்ற பொருத்தமான இடங்களைப் பற்றிய ஆய்வு உள்ளூர் CDU/CSU மாநில அரசியல்வாதிகளால் ஏற்கனவே தடுக்கப்பட்டுவிட்டது.

இதற்குப் பின்னரும், கூட்டாட்சி சுற்றுச்சூழல் அமைச்சரகத்தில் இருக்கும் மாநிலச் செயலாளர் கத்தரீனா ரைஸ் (CDU) நவம்பர் 5ம் தேதி கோர்லேபனில் உள்ள கதிரியக்கக் கழிவு சேமிப்புக்கிடங்கு பாதுகாப்பானது, அதுதான் இறுதியான இடம் என்பது பற்றிய பரிசீலனை தொடரும் என்று அறிவித்தார்.

கதிரியக்கக் கழிவு அகற்றப்படுதல் பற்றி முறையான கட்டுப்பாட்டைக் கொண்டிராத நாடு என்று ஜேர்மனி மட்டும் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் 14 நாடுகள்கிட்டத்தட்ட 140 அணுசக்தி நிலையங்களை கண்டம் முழுவதும் செயல்படுத்துகின்றன. அத்தகைய ஆலைகள் உலகெங்கிலும் 400க்கும் மேலாக உள்ளன. எந்த நாடும் இறுதியாகக் கழிவுப் பொருளை அகற்றும் நிலையத்தைக் கொண்டிருக்கவில்லை.

சமீபத்திய எதிர்ப்புக்களில் இருந்து ஆதாயம் பெற முற்படும் கட்சி பசுமைவாதக் கட்சி ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய பசுமைவாதக் கட்சியின் தலைவரான குளோடியா ரோத் மற்றும் முன்னாள் பசுமைவாத சுற்றுச் சூழல் மந்திரி யூர்கன் ரிட்டீன் இருவரும் இப்பகுதியில்தான் “துரோகிகள்” என்று ஆர்ப்பாட்டக்காரர்களால் குற்றம் சாட்டப்பட்டு, தாக்குதலுக்கு உட்பட்டனர்.

1998 தொடக்கத்தில் இப்பொழுது சான்ஸ்லரும், ஹெல்முட் கோல் ஆட்சியின்போது சுற்றுச் சூழல் மந்திரியாகவும் இருந்த அங்கேலா மேர்க்கெல் காஸ்ரோர் போக்குவரத்துக்களை, பெருவாகனங்களில் கதிரியக்கப் பொருட்கள் ஆபத்தான அளவிற்கு உள்ளன என்பதைச் சோதனைகள் வெளிப்படுத்தியபின் நிறுத்தியிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவான காலத்திற்குப் பின்னர், தொடர்ந்து பதவிக்கு வந்த பசுமைவாதிகள் மற்றும் சமூக ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் (1998-2005) தங்கள் திட்டம் என்று கூறப்பட்ட “அணுசக்தியில் இருந்து பின்வாங்குதல்” என்பதின் ஒரு பகுதியாக போக்குவரத்துக்கள்மீது இருந்த தடைகளை அகற்றியது. உண்மையில் இந்த “திரும்பப் பெறுவது” என்பது இருக்கும் அணுசக்தி விசை ஆலைகள் பல தசாப்ங்கள் தங்களை வேலையைத் தொடரலாம் என்பதுதான்.

2001 தொடக்கத்தில் அணுசக்தி விசை நிறுவனங்கள் மீண்டும் காஸ்ரோர் போக்குவரத்து மூலம் கழிவுகளை அகற்றத் தொடங்கிமை பெரும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது. அப்பொழுது பசுமைவாதிகள் எதிர்ப்புக்களை கண்டித்து, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக பெரிய பொலிஸ் நடவடிக்கைகளுக்கு கூட்டுப் பொறுப்பைக் கொண்டிருந்தனர்.

ஓராண்டிற்குப் பின்னர் பசுமைவாதிகள் தலைமையில் இருந்த சுற்றுச்சூழல் அமைச்சரகத்திற்கும் எரிசக்தி நிலைய நிறுவனங்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு காஸ்ரோர் போக்குவரத்து மற்றும் அரசாங்க அணுசக்தி விசைக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக்கள் அடுத்த ஆண்டுகளில் குறைய வழிவகுத்தது. மேர்க்கெல் அரசாங்கம் அணுசக்தி ஆலைகளின் இயங்கும்காலத்தை விரிவாக்கும் சமீபத்திய முடிவை அடுத்து, பசுமைவாதிகள் இப்பொழுது எதிர்ப்புத் தன்மையைக் காட்ட முற்பட்டு இவ்வெதிர்ப்புக்களை தங்கள் நலன்களுக்கு பயன்படுத்த முற்படுகின்றனர்.

கட்சியின் கூட்டுத் தலைவர்களான குளோடியா ரோத், செம் ஒஸ்டிமியர் இருவரும் சமீபத்திய எதிர்ப்புக்களை ஏற்பாடு செய்திருந்தவர்களுடன், கடந்த 10 ஆண்டுகளாக எதுவுமே நடக்காதது போல், விவாதிக்க முன்வந்தனர். பசுமைக் கட்சியின் பாராளுமன்றபிரிவின் தலைவரான றெனாட்ட கூனாஸ்ட் எதிர்ப்புக்களில் தான் பங்கு பெறுவதை பேர்லின் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுவதற்காக கைவிட்டார். அங்கு அவர் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மேயரை எதிர்த்து அடுத்த ஆண்டு மாநிலத் தேர்தல்களில் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். பேர்லினின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தான் அணுசக்தி கழிவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறினார்.

சமீபத்திய மாதங்களில் ஜேர்மனிய பசுமைக் கட்சியின் தேர்தல் வாய்ப்புத் தரங்கள் 20 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துவிட்டன என்று சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. ஸ்ருட்கார்ட்-2011 கட்டிடத் திட்டத்திற்கு எதிராக பேர்லினிலும் பாடன் வூட்டம்பேர்க்கிலும் நடந்து கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களிலும் பசுமைவாதிகள் உண்மையில் SPDஐ விட முன்னணியில் உள்ளனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நிகழ்வு மத்தியதர வர்க்கத்தின் பரந்த தட்டுக்களில் பெருகிவரும் நெருக்கடியுடன் பிணைந்துள்ளது. போருக்குப் பிந்தைய காலத்தில் ஜேர்மனியின் இரு முக்கிய மக்கள் கட்சிகள் எனப்படும் SPD, CDU/CSU ஆகியவை இந்தத் தட்டுக்களைத்தான் நம்பியிருந்தன. இப்பொழுது இதே தட்டுக்கள்தான் செலவினக் குறைப்புக்கள் மற்றும் பொதுத்துறையில் பணிநீக்கங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு வருங்கால வாய்ப்புக்களும் குறைந்துவருகின்றன. வரிகள் செலுத்துவோரின் பில்லியன் கணக்கான யூரோக்கள் வங்கிகளுக்கு அளிக்கப்படுவது பற்றி அவர்கள் கோபம் அடைந்துள்ளனர். வெளிப்படையாக வங்கிகள், பெருவணிகங்களின் பணியாட்கள் போல் செயல்படும் முக்கிய கட்சிகளில் இருந்து பெருகிய முறையில் விரோதப் போக்கைக் கொண்டுள்ளனர்.

பசுமைக் கட்சித் தலைவர்கள் சமீபத்தில் கூட்டாட்சி அரசாங்கத்தின் தற்போதைய கொள்கையுடன் தங்கள் வேறுபாடுகளை வலியுறுத்திக் கூற முற்பட்டுள்ளனர். கடந்த ஞாயிறன்று ஒஸ்டிமியர் Bild am Sonntag செய்தித்தாளிடம், “கறுப்பு-பச்சை” (CDU- பசுமைவாதிகளின் கூட்டு) விருப்பதேர்வு இராது என்றும் கூட்டாட்சி அந்த விருப்பத்தேர்வை மேசையில் இருந்து அகற்றிவிட்டது என்றும் கூறினார். CDU, CSU இரண்டும் “பழைய கட்சி முகாம்கள்” தங்கள் அணுசக்திக் கொள்கை மூலம் தீவிரமயமாக்கலை கொண்டுவர முயல்கின்றன. ஒஸ்டிமியர் பாடன் வூர்ட்டம்பேர்க்கில் உள்ள CDU வையும் தாக்கி, “ஸ்ருட்கார்ட்-21’ நம் அரசியல் முன்னுரிமைகளில் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை” என்று அறிவித்தார்.

இந்த நிலைப்பாடு முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். பேர்லினில் றெனாட்ட கூனாஸ்ட் பேர்லின் மேயர் என்ற முறையில் தான் காஸ்டர் போக்குவரத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தத் தயார் என்று விளக்கினார்; ஆனால் அவருடைய பேச்சில் CDU உடன் கூட்டணி கிடையாது என்று கூறிவிடவில்லை. பசுமைவாதிகள் எவருடன் வேண்டுமானாலும் சேரத் தயாராக உள்ளனர்.

மேர்க்கெலின் CDU பாடன் வூர்ட்டம்பேர்க் மாநிலத் தேர்தலில் அடுத்த மார்ச் மாதம் பெரும் தோல்வியை சந்தித்தால், பசுமைவாதிகள் சான்ஸ்லரின் கொள்கைகளை ஒரு கூட்டணி மூலம் செயல்படுத்தத் தயார். இது கன்சர்வேடிவ் முகாமோடு அல்லது SPD கூட இருக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்ததுபோல் அதிகாரத்திற்கு வந்ததும் இன்று அவர்கள் துள்ளிக்குதிக்கும் வெண்ட்லாண்டிற்கு எதிராக பசுமைவாதிகள் உறுதியுடன் மாறுவர்.

சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் தீவிரமாகையில் பசுமைவாதிகள் தங்கள் முக்கிய பணி அரசாங்கம் மற்றும் அரசாங்கக் அமைப்புகள் மீது நம்பிக்கையை மீட்பது என்று கருதிக்கொண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக மத்தியதர வர்க்கம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு இடையே ஐக்கியத்தை தடுத்தல் என்றும் கருதுகின்றனர். இலாப முறையை தீவிரமாக பாதுகாப்பததுடன், அதை செய்வதற்கும் அரசின் முழுச்சக்தியையும் பயன்படுத்தத் தயாராக உள்ளனர்.