World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Trade union federation works hand in glove with German government

தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஜேர்மனிய அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுகிறது

By Ulrich Rippert
16 November 2010

Back to screen version

கடந்த வார இறுதியில் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பால் (DGB) ஒழுங்கு செய்ய்ப்பட்ட “சூடான இலையுதிர்கால” நிகழ்வுகளின் ஒரு பகுதியாக ஜேர்மனியில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்களில் சோசலிசச் சமத்துவக் கட்சியால் (Partei fur Soziale Gleichheit) கீழ்க்கண்ட அறிக்கை வினியோகிக்கப்பட்டது. (See “’‘’German unions hot autumn protests seek to demobilize workers ”)

ஜேர்மனியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) இந்த ஒருதொடர் இலையுதிர்கால எதிர்ப்புக்கள் DGB அதிகாரிகள் மற்றும் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பில் இருந்து பொதுமக்கள் கவனத்தைத் திருப்பும் ஒரு முயற்சியாகும்.

“2010 சூடான இலையுதிர்காலம்” என்ற கோஷத்தின்கீழ் DGB உறுப்பினர்களைப் பல நிகழ்வுகளில் பங்கு பெறுமாறு அழைத்திருந்தது. மிகுந்த ஈடுபாடுடைய ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்களால் அழைப்புவிடப்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்குழு பிரதிநிதிகளைத் தவிர வெகு சிலரே ஆர்ப்பாட்டங்களிலும் அணிவகுப்புக்களிலும் பங்கு பெற்றனர். உண்மையில் ஆலைகளிலும் அலுவலகங்களிலும் ஒரு தீவிரமான அணிதிரளல் விரும்பப்படவில்லை. மாறாக செய்தி ஊடகங்கள் அதிக பரபரப்பை காட்டிய நிகழ்வுகள் உயர்மட்டத் தொழிற்சங்க அதிகாரிகள் தீவிர சொல்லாட்சியை பயன்படுத்தவதற்கான ஒரு வெறும் பின்னணியாகத்தான் இருந்தன.

கடந்த வாரம் DGB தலைவர் மைக்கேல் சொம்மர் பல ஆயிரக்கணக்கான தொழிற்சங்கச் செயலர்களிடம் தான் பொறுமையை இழப்பதாகக் கூறினார்.”இந்த அரசாங்கம் நம் நாட்டை சமூக உறுதியற்ற தன்மை நிலைக்கு இன்னும் அதிகமாக கொண்டு செல்கிறது.” என சொம்மர் புகார் கூறினார். Hartz IV நிதி (வேலையின்மை நலன்கள்) பெறுவோருக்கு குழந்தைகளுக்கான நிதிப்படி கிடையாது, ஆனால் செல்வம் படைத்த மற்றும் பெருநிறுவனங்களுக்கு மிகப் பெரிய நிதிகள் அளிக்கப்படுகின்றன என்றார் அவர். பல தொழிற்சங்கங்களின் தலைவர்களும் இதேபோன்ற கருத்தைத்தான் கூறினர். வெர்டி(Verdi) பொது ஊழியர் சங்கத்தின் தலைவரான பிராங் பியர்ஸ்கே ஒரு பொது வேலைநிறுத்தம் தேவை என்று கூடத் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்தின் மீதான சமூகத் தாக்குதல்களை திட்டமிட்டு, தயாரித்து, நெருக்கமாக மேர்க்கெல் அரசாங்கத்துடன் தாம் ஒத்துழைத்தனர் என்பதை ஒருவரும் நம்பவில்லை என்று தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் நினைத்தார்கள் போலும். மே மாதம் சான்ஸ்லரை DGB யின் ஆண்டு மாநாட்டிற்கு சொம்மர் வரவேற்று அவருக்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்பு பற்றிப் பாராட்டிப் பேசினார். ஓய்வூதிய வயது 67 என உயர்த்தப்பட வேண்டும் என்று கூடியிருந்த 400 அதிகாரிகளை மேர்க்கெல் எதிர்கொண்டு பேசினாலும், குறைந்தபட்ச ஊதியத்திற்கு எதிராகப் பேசினாலும், சமூகநலச் செலவுகளில் ஆழ்ந்த குறைப்புக்களை இன்னும் அறிவித்தாலும். சொம்மர் பின்பு கூறினார்: “திருமதி மேர்க்கெல் இந்த நெருக்கடியில் ஒன்றைக் கற்றுக் கொண்டுவிட்டார்; தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்படுவது, அவர்களுக்கு எதிராகச் செயல்படுவதைவிட நல்லது என்பதே அது.”

ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக IG Metall Engineering தொழிற்சங்கத் தலைவர் பெர்த்தோல்ட் ஹ்யூபர் தன் 60 வது பிறந்த நாளை பேர்லின் சான்ஸ்லர் அலுவலகத்தில் கொண்டாடினார். ஹியூபர் மற்றும் சான்ஸ்லரைத் தவிர பிறந்த நாள் பெருவிருந்தில் முதலாளிகள் சங்கத் தலைவர் மார்ட்டின் கன்னகீசர், Siemens இன் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் லொஸ்ஸர், Volkswagen தலைமை நிர்வாக அதிகாரி மார்ட்டின் வின்டர்காம் ஆகியோரும் கலந்து கொண்டனர். பல தொழிலாளர்களும் இந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் நட்புப் பிணைப்பை இகழ்வுடன் கண்டனர். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பொருட்படுத்தக்கூடாது என்பதைத் தவிர கூடுதலான செயல்கள் தேவை. இதில் இருந்து போதுமான அரசியல் படிப்பினைகள் எடுக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்துடனான தொழிற்சங்க ஒத்துழைப்பிற்கு தொழிலாளர்கள் மிக அதிக விலை கொடுக்கின்றனர். உற்பத்தி வளர்ச்சி விகிதங்கள் மீண்டும் உயர்ந்து, பெருநிறுவன இலாபங்கள் பெருகியுள்ள நிலைமையில், ஒரு தொழில்துறைத் தொழிலாளி அதிகமான பணி அழுத்தங்கள் இருந்தபோதிலும்கூட இன்று ஒரு தசாப்தத்திற்கு முன் வாங்கிய ஊதியத்தைவிடக் குறைவாகத்தான் பெறுகிறார். இதற்குக் காரணம் தொழிற்சங்கங்களின் “ஊதியக் கட்டுப்பாடு” என அதிகம் கூறப்படுவதுதான்; இது ஜேர்மனியில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு அலகிற்கான உழைப்புச்செலவுகள் மற்ற எந்த ஐரோப்பிய நாட்டையும் விட மிகக் குறைவாகத்தான் வளர்ந்துள்ளது என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

ஓய்வூதிய நலன்கள் சரிந்து கொண்டிருக்கின்றன, சுகாதாரப் பாதுகாப்புச் செலவுளோ உயர்ந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அதில் கிடைக்கும் சேவைகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. வங்கிகள் பிணை எடுப்புக்களுக்காக நிதியங்கள் அளிக்கப்பட்டதால், அரசாங்கக் கருவூலங்களில் உள்ள பெரும் பற்றாக்குறைகளுக்குக் காரணம் ஆகும். DGB இதற்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் 500 பில்லியன் யூரோக்கள் வங்கி மீட்புத் திட்டத்திற்கு செலவு செய்வதை அது முழுமையாக ஆதரித்தது. இதையொட்டித்தான் சமீபத்திய செலவுக் குறைப்புக்கள் நடவடிக்கைகளுக்கான திட்டத்திற்கும் உதவியுள்ளது.

பொருள்சார் விளைவுகளைவிட மோசமானது இந்த வர்க்க ஒத்துழைப்பின் அரசியல் விளைவுகள் ஆகும். DGB மற்றும் அரசாங்கம் முறையான தொழிலாளர் வர்க்கத்தில் பிளவுகளை ஏற்பட முயல்கின்றன. முக்கிய நிறுவனங்களில் உள்ள அடிப்படைத் தொழிலாளர் தொகுப்பு பொருளாதார நெருக்கடியின் மோசமான தன்மையினால் குறுகிய நேரப் பணி அறிமுகப்படுத்தப்பட்டதின் மூலம் பாதுகாக்கப்பட்டபோது, DGB மிகப் பெரிய குறைவூதியத் தொகுப்பு வெளிப்படுவதற்கு ஆதரவைக் கொடுத்து, நிறுவனங்களுக்கு குறைவூதிய வளைந்து கொடுக்கும் தன்மையுடைய தொழிலாளர் திரட்டை அளித்தது. இது பெரிதும் வேலை உரிமைகள் அனைத்தையும் அகற்றிவிட்டது.

இதற்கான அடிப்படைக்கு முன்னாள் சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக-பசுமைவாத அரசாங்கத்தின் Hartz சட்டங்கள் அடித்தளத்தை கொடுத்திருந்தது. அற்பமான Hartz IV வேலையின்மைக்காலப் படிகளைப் பெறுபவர்கள் தன்மைக்கு நழுவும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் பலரையும் குறைந்த ஊதிய வேலையை ஒப்புக் கொள்ளுவதற்கு பெரும் அழுத்தத்தைக் கொடுத்தது-இது பொதுவாக ஊதியங்களைக் குறைப்பதற்கு வகை செய்தது. முதல் தடவையாக வேலையில் நுழைந்த பள்ளி, பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பல நேரமும் பல ஆண்டுகள் தற்காலிகப் பணி அல்லது குறிப்பிட்ட காலம் மட்டும் அல்லது பகுதி நேர வேலை ஒப்பந்தம் என்று உழல வேண்டியதாயிற்று. அவர்கள் குறைவூதியம் பெறுவதால் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்க இயலவில்லை.

இச்சட்டங்களை இயற்றி அதற்குத் தன் பெயரையும் கொடுத்தது பீட்டர் ஹார்ட்ஸ் என்பதில் வியப்பு ஏதும் இல்லை. Volkswagen Corportion உடைய இயக்குனர், IG Metall தொழிற்சங்க உறுப்பினர் மற்றும் கூட்டாட்சி அரசாங்க ஆணையர் என்னும் முறையில் ஹார்ட்ஸ் வணிகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள சமூகப் பங்காளித்தனத்தின் உருவகமாக இருந்தார். கடந்த ஆண்டு நடந்த VW ஊழலிலும் அவர் முக்கியப் பங்கைக் கொண்டிருந்தார். அது தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரிவில் நிலவிய அப்பட்டமான ஊழலை பொது மக்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தது.

தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் ஜேர்மனியுடன் நின்றுவிடவில்லை. ஒரு குறைச் சொல் கூடக் கூறாமல், DGB தொழிற்சங்கங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை கிரேக்கம், அயர்லாந்து, ஸ்பெயின், போர்த்துக்கல், ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகள் மீது சுமத்திய கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்துள்ள. இங்கு உந்துதல் சக்தி மேர்க்கெல் அரசாங்கத்தால்தான் மீண்டும் கொடுக்கப்பட்டது. இதுதான் ஐரோப்பா முழுவதும் நிதிய உறுதிப்படுத்தல் மூலம் இரக்கமற்ற கொள்கை தேவை எனக் கோரியது.

கிரேக்கத் தொழிலாளர்கள் 30 சதவிகித ஊதியக் குறைப்புக்கள் மற்றும் ஆட்சித் துறையில் ஏராளமான பணிநீக்கங்கள் ஆகியவற்றை எதிர்த்தபோது, ஜேர்மனியின் தொழிற்சங்கங்கள் ஒற்றுமையுணர்வு பற்றிய அடையாளத்தைக் காட்டக்கூடத் தவறின. பிரான்சில் ஓய்வூதிய வயது உயர்த்தப்பட்டதற்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கும் இது பொருந்தும். இதில் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஜேர்மனியில் நீண்ட காலத்திற்கு முன்னதாக சமூக ஜனநாயக தொழில்துறை மந்திரி பிரன்ஸ் முன்டபெயரிங் DGB ஆதரவுடன் சாதித்ததைத்தான் இப்பொழுது சாதித்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தொழிலாளர்களும் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கமும் பிரிந்துள்ளதற்கு அரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இப்பொழுது DGBயின் உட்குறிப்பான ஆதரவுடன் கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் தொழிலாளர்களுக்கும் DGB ஆதரவுடன் கொடுக்கப்படும் பட்டினித்தர ஊதியங்கள் நாளை ஜேர்மனியிலும் கொடுக்கப்பட வேண்டிய ஊதியங்கள், பணி நிலைகளுக்கு அளவுக்குறியீடு ஆகிவிடும். தொழிற்சங்கங்கள் இதன்பின் ஜேர்மனி உலகப் போட்டித் தன்மையைத் தக்க வைத்துக்கொள்வதற்கு ஒரு புதிய சுற்று ஊதியக் குறைப்புக்களை தேவை என்று தொடங்குவதற்கு உடன்படும்.

தங்கள் பங்கிற்குத் தொழிற்சங்க அதிகாரிகள் மகத்தான ஊதியங்களைப் பெறுகின்றனர். IG Metall ன் மாவட்டத் தலைவர் ஒரு நடுத்தர அல்லது உயர்நிலை அரசாங்க அதிகாரியின் சம்பளத்தைப் போல் பெறுகிறார். Volkswagen, Siemens போன்ற முக்கிய நிறுவனங்கள் முழுநேர தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர்களை நூற்றுக்கணக்கில் நியமித்துள்ளன. அவர்கள் நிறுவனத்தில் தொழில்துறை அமைதி இருப்பதை உறுதி செய்து அதே நேரத்தில் இணைக்கும் பிரிவில் உள்ள தொழிலாளர்களைவிட மிக அதிக ஊதியம் பெறுகின்றனர். தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களில் உள்ள பிரிவினர் மிகுந்த ஊழல் நிறைந்தவர்கள்.

ஆனால் இதற்கு விடை தொழிற்சங்கங்கள் எப்படியும் இன்னும் நேர்மையாக, போராளித்தனமாக மாறும் என்று நம்புதல் இல்லை. தொழிற்சங்கங்கள் வர்க்க விரோதி முகாமாக மாறியுள்ள நிலை எல்லா நாடுகளிலும் நிகழ்ந்துள்ளது. தங்கள் பணியை ஏட்டளவிலேனும் தங்கள் உறுப்பினர்களுக்கு இருக்கும் முதலாளித்துவ நிலைமைகளுக்கு ஏற்ப கிடைக்கக்கூடிய சலுகைகளைச் சாதிப்பது என்று கருதுகின்றனர். எனவே முதலாளித்துவம் சீராகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதுடன் தங்கள் “சொந்த”அமைப்புக்களின் வெற்றியையும் உறுதிப்படுத்துகின்றன. சந்தைகள் மற்றும் இலாபங்கள் நெருக்கடிக் காலத்தில் தீவிரமாகையில் அவர்கள் தவிர்க்கமுடியாமல் “தங்கள்” நிறுவனங்கள், தங்கள் “நாடுகள்” ஆகியவற்றுடன் பிணைந்து கொள்ளுகின்றனர். அவ்வாறு செய்வது தங்கள் சொந்த உறுப்பினர்களின் நலன்களுக்கு நேர்மாறாக முரணானது என்றாலும் கூட.

தன் முழு ஐரோப்பிய அமைப்பையும் ஐரோப்பியத் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்து ஒன்றுபட்ட எதிர்ப்பு ஏதும் வராமல் முளையிலேயே கிள்ளி எறியப் பயன்படுத்துகிறது. இதன் இலையுதிர்காலப் பிரச்சாரங்கள் உறுப்பினர்கள் தங்கள் சீற்றத்தை வெளியிட ஊக்கம் தரும் முயற்சி ஆகும்; அதுதான் மற்ற ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளர்களுடன் ஒற்றுமையுணர்வை ஏற்படுத்திக் கொள்வதைத் தடுக்கும். இதையொட்டி அது கூட்டாட்சி அரசாங்கத்திற்கு ஊக்கம் கொடுக்கிறது. அதுவோ ஜேர்மனிய பெருநிறுவன நலன்களுக்கு ஆக்கிரோஷத்துடன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொடர் ஆதரவைக் கொடுக்கிறது.

ஐரோப்பா முழுவதும் உள்ள அரசாங்கங்கள் பொருளாதார நெருக்கடியின் முழுச்சுமையையும் தொழிலாளர் வர்க்கத்தின் தோள்களில் மாற்ற உறுதியாக உள்ளன. தொழிலாளர்வர்க்கம் இந்த அரசியல் சவாலை எதிர்கொண்டு அரசியல் அதிகாரத்திற்கான போராட்டத்திற்குத் தயாரிப்பை நடத்த வேண்டும். முதலாளித்துவக் கோட்பாட்டை எதிர்த்து சோசலிச முன்னோக்கிற்காகப் போராட வேண்டும். ஆனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக எழுச்சி செய்தால் ஒழிய இது இயலாது. தொழிலாளர் குழுக்கள் பற்றிய வரலாற்று மரபிலிருந்து படிப்பினையை எடுத்துக் கொண்டு நடவடிக்கைக் குழுக்களை அமைத்து மற்ற நாட்டுத் தொழிலாளர்களுடன் ஒத்துழைப்பது முக்கியமாகும். இவ்விதம் மூலம்தான் தொழிலாளர் இயக்கத்தில் ஒரு சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் சோசலிசப் புத்துயிர்ப்பு அடையப்பட முடியும். உலக சோசலிச வலைத் தள ஆசிரியர்களுடன் தொடர்பு கொண்டு, நான்காம் அகிலத்தின் ஜேர்மனியப் பிரிவாக சோசலிச சமத்துவக் கட்சியை (Partei fur Soziale Gleicfhheit, PSG) கட்டமைப்பதற்கு அனைத்து வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.