World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government to intensify austerity measures

இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை உக்கிரமாக்குகிறது

By Saman Gunadasa
13 October 2010

Back to screen version

சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு அது தரவிருந்த 2.6 பில்லியன் கடன் தொகையில் ஐந்தாவது பகுதியை கடந்த மாதம் வழங்கியது. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் “திருப்திகரமானது” என கவனமாக குறிப்பிட்ட அது, வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை குறைப்பதற்காக மேலும் சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டது.

செப்டெம்பர் 24 விடுத்த ஊடக அறிக்கையொன்றில், சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ ஆணையாளர் முரிலோ போர்துகல், அடுத்த மாதம் வரவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் மீது குவிமையப்படுத்தினார். [சர்வதேச நாணய நிதியத்தின்] “திட்டங்களின் இலக்கை அடைவதற்காக அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணித்துள்ளதை வெளிப்படுத்துவதற்கு 2011க்கான வரவுசெலவுத் திட்டம் பிரதானமானதாக இருக்கும் என” அவர் பிரகடனம் செய்தார். அவர், “உயரந்தளவிலான தனியார் முதலீட்டை” உறுதிப்படுத்துவதற்காக, “பரந்த மட்டத்திலான உட்கட்டுமான மற்றும் நிதித் துறை சீர்திருத்தங்களுக்கு” அழைப்புவிடுத்தார்.

அதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் கடிதமொன்றில், இலங்கை அரசாங்கம், வரவுசெலவுத் திட்ட பற்றாக்குறையை இந்த ஆண்டு நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 8 வீதமாக குறைக்கவும், பின்னர் அதை 6.8 வீதமாக குறைக்கவும் மற்றும் அடுத்துவரும் இரு ஆண்டுகளில் 5 வீதமாகக் குறைக்கவும் தான் எண்ணியிருப்பதாக வலியுறுத்தியது. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை 9.9 வீதத்தில் இருந்து குறைத்தமை, ஏற்கனவே பொதுத் துறை தொழில்கள், நிலைமைகள், சேவைகள் மற்றும் விலை மானியங்களின் செலவிலேயே மேற்கொள்ளப்பட்டது.

உழைக்கும் மக்கள் மீது இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன. கடந்த மாதம், கோதுமை மாவுக்கான விலை மானியத்தை, 50 கிலோவுக்கு 225 ரூபாயில் இருந்து 75 ரூபாவரை (2 டொலரில் இருந்து 0.67 டொலருக்கு) அரசாங்கம் குறைத்தது. இதன் விளைவாக, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரித்தது. 450 கிராம் பானின் விலை, கடந்த நான்கு வாரங்களில் இரு தடவை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களில், பானின் விலை 28 வீதத்தால் அதிகரித்துள்ளது.

பொதுமக்களின் விமர்சனத்தை நிராகரித்த அரசாங்கம், விவசாயிகளுக்கு உதவுவதற்காக இறக்குமதி செய்யப்படும் மாவுக்கு பதிலாக, மக்கள் சோறு சாப்பிட வேண்டும் என அறிவித்தது. சிரச டி.வி. க்கு அக்டோபர் 11 அன்று பேசிய கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, “நாம் அரிசியில் சுய திருப்தி அடைகின்றோம். எமது முன்னுரிமை விவசாயிகளை காப்பதற்கே. மற்றும் அதனால் எம்மிடம் இது சம்பந்தமாக [கோதுமை விலைக்கு] நிவாரணம் வழங்கும் எண்ணம் இல்லை,” என அறிவித்தார்.

அரிசியுடன் மாவு உற்பத்திகளும் சமுதாயத்தில் மிகவும் வறிய தட்டினருக்கு, குறிப்பாக தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்றியமையாதது என்பது அரசாங்கத்துக்கு மிக நன்றாகவே தெரியும். அவர்களைப் பொறுத்தளவில் விலை உயர்வு என்பதன் அர்த்தம் குறைவாக சாப்பிடுவதே. விலை உயர்ந்தால், அதன் இலாபம், ஒவ்வொரு ஆண்டும் உயிர்பிழைக்கப் போராடிக்கொண்டிருக்கும் நெல் விவசாயிகளுக்கு போய் சேரப் போவதில்லை. மாறாக, அரிசி விற்பனையில் இலாபம் பெறும் பல்வேறு இடைத் தரகர்களுக்கே இலாபம் போய் சேருகின்றது.

அரசாங்கத்தின் உள்நோக்க கடிதம், வர்த்தக வரி, பெறுமதி சேர் வரி மற்றும் வருமான வரிக்குமான வரி முறைமையை பங்கீடு செய்வதை (இலகுவாக்குவதை)” முன்னறிவிக்கின்றது. ஏனைய நாடுகளில் போல், சர்வதேச நாணயநிதியத்தின் ஆணையானது வறியவர்கள் மீது எண்ணிலடங்கா தாக்கத்தை ஏற்படுத்தும், பெறுமதி சேர் வரி போன்ற நுகர்வோர் வரிகளை அதிகரிப்பதன் மூலம், வர்த்தகங்கள் மற்றும் செல்வந்தர்களின் வருமானங்கள் மீதான வரிகளைக் குறைப்பதையே அர்த்தப்படுத்தும்.

தனியார்மயத்தை நோக்கிய “பேராவல்கொண்ட திட்டத்தை” அமுல்படுத்துவதன் மூலம், “நட்டத்தை ஏற்படுத்தும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் இயக்கம் மற்றும் செயற்திறனை” மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. டெயிலி மிரர் பத்திரிகையில் அக்டோபர் 4 வந்த செய்தியின்படி, நட்டம் ஏற்படுத்தும் 17 அரச நிறுவனங்களை உட்கிரகிக்கவும் மூன்று ஆண்டுகளுள் அவற்றை மறுசீரமைக்கவும், அரச வளங்கள் முகாமைத்துவ கூட்டுத்தாபனம் ஒன்றை அரசாங்கம் அமைக்கும் என அரச வள மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டபிள்யூ. கமகே தெரிவித்தார். இந்த கூட்டுத்தாபனம் முழு தனியார்மயத்துக்கான முன்னோடியாக தனியார்-அரசாங்க இணைப்புடன் நடத்திச் செல்லப்படும்.

கமகே 17 நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஆனால், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், தேசிய நீர்வழங்கல் சபை மற்றும் வடிகாலமைப்புச் சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை போக்குவரத்துச் சபை, புகையிரதம் மற்றும் அஞ்சல் சேவைத் திணைக்களத்தையும் நட்டம் ஏற்படுத்தும் பிரதான நிறுவனங்களாக முன்னரே அரசாங்கம் அடையாளங்கண்டிருந்தது. மானியங்கள் மீண்டும் வெட்டப்படும் நிலையில், அதிகரிக்கும் விலைவாசி மற்றும் நுகர்வோருக்கான கட்டனங்கள் அதிகரிப்பின் உச்சத்தில், இந்த நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது, தொழில் மற்றும் தொழிலாளர்களின் நிலைமைகளில் பெரும் வெட்டுக்களை ஏற்படுத்துவதற்கே தவிர்க்க முடியாமல் வகை செய்யும். மின்சாரக் கட்டணங்களுக்கான மானியங்கள் 2011 அளவில் முடிவுக்கு வரும் என நாணய நிதியத்துக்கு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

“மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது” மற்றும் நாணய நிதியத்துடன் “தொடர்ந்தும் கூட்டுறவை” வைத்துக்கொள்ளும் என அரசாங்கத்தின் உள்நோக்கக் கடிதம் வாக்குறுதியளித்துள்ளது. நாட்டின் நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, மேலும் கடன்களைப் பெறுவதற்கு நாணய நிதியத்தின் ஆதரவை எதிர்பார்க்கின்றார். அண்மையில், சர்வதேச கடன் தரப்படுத்தும் முகவரமைப்பான பிட்ச் தரம் மற்றும் குறைபாட்டு மதிப்பீட்டு (Fitch Ratings and Standard & Poors) அமைப்பு, நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் காரணமாக நாட்டை தரப்படுத்தலுக்கு உட்படுத்தியது.

அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அதன் உள்நாட்டு யுத்தத்திற்கு செய்த பிரமாண்டமான செலவினால் ஆழமான கடனில் மூழ்கியுள்ளதோடு, நிலைமை பூகோள நிதிய நெருக்கடியினால் மேலும் குவிக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக, கடந்த மாதம் பெற்ற 1 பில்லியன் டொலருடன், அரச கடன் பத்திரங்களை விற்பதன் ஊடாக 2 பில்லியன் டொலர்களை சேகரித்தது. செலவு மிக்க வர்த்தக கடன்களை செலுத்துவதற்கு இந்தப் பணம் பயன்படுத்தப்படுகின்றது. 2009 மே மாதம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்த யுத்தத்தின் போது கடன் பெற இருந்த ஒரே ஆதாரம் அதுமட்டுமே.

மொத்த பொதுக் கடன், டிசம்பரில் 4,161 பில்லியன் ரூபாயில் (37 பில்லியன் டொலர்) இருந்து இந்த மே மாதம் 4,293 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. வட்டி மற்றும் கடன் தொகை மீள் செலுத்துகை இரண்டும் சேர்த்து, மொத்த வரவு செலவுத் திட்ட வருமானத்தை விட அதிகமாக உள்ளது. இதனால் பழைய கடனை திருப்பிச் செலுத்த புதிய கடன்களைப் பெற அரசாங்கம் தள்ளப்படுகின்றது. உயர்ந்த மட்ட கடன் நிலையை சுட்டிக் காட்டி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் அண்மையில் எச்சரித்ததாவது: “இந்த சூழ்நிலையில், தனது மீள் செலுத்துகைக்கும் அதே போல் மூலதனத்துக்காகவும் மேலும் கடன்களை வாங்க அரசாங்கம் நெருக்கப்பட்டது. இதன் விளைவாக, கடன் மீள் செலுத்துகை செலவு மேலும் அதிகரித்தது. நாடு, மீண்டும் மீண்டும் ஒரே நெருக்கடிக்குள் கொண்டுவரும் இத்தகைய சுழல் கடன்பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது.”

இந்த ஆண்டு ஒரு மதிப்பீட்டில் 8 சதவீத வளர்ச்சியையும், மற்றும் “உலகில் சிறப்பாக செயற்படும்” ஒரு பங்குச் சந்தையையும் சுட்டிக்காட்டி, யுத்தத்தின் முடிவில் அதிசயமான பொருளாதார மீட்சி என்ற ஊகத்தைப் பற்றி அரசாங்கம் பெருமை பாராட்டிக்கொண்டது. செப்டெம்பர் கடைசி வாரத்தில், கொழும்பு பங்குச் சந்தை பரிமாற்றம் 7,000 புள்ளிகளைத் தாண்டியது. நிதிய ஊகங்களைப் பற்றிய கவலைகளை நிராகரித்த மத்திய வங்கி ஆளுனர் நிவார்ட் கப்ரால், “நாம் அதைப் பற்றி பொருத்தமின்றி கவலைப்படவில்லை” என பிரகடனம் செய்தார்.

எவ்வாறெனினும், பொருளாதார விரிவாக்கத்தின் வெதுவெதுப்பான பண்பு, பூகோள பொருளாதாரத்தின் கூர்மையான மாற்றங்களால் இலங்கை பாதிக்கப்படக் கூடும் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கூர்மையான அந்நிய செலாவனி நெருக்கடியொன்றை நாடு எதிர்கொண்ட 2009 நடுப்பகுதியில் இருந்து, நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களின் மீட்சியானது, வெளிநாட்டுக் கடன்கள், வெளிநாடுகளில் தொழில்புரியும் தொழிலாளர்கள் அதிகளவில் அனுப்பிய பணம், மற்றும் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் வணிகச் சரக்கு ஏற்றுமதி விலைகளிலேயே தங்கியிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம், 2009 காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் 2.1 பில்லியன் டொலர் வரை 12.5 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாத்துறையிலான வருமானம் 301 மில்லியன் டொலர்வரை 68.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. தேயிலை ஏற்றுமதியின் 20.6 சதவீத அதிகரிப்புடன், விவசாய உற்பத்தி ஏற்றுமதிகள் 23.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆடை ஏற்றுமதியில் 3.7 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டதால், தொழிற்துறை ஏற்றுமதி 7.9 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்திருந்தது. எவ்வாறெனினும், இறக்குமதி ஆகவும் வேகமாக அதிகரித்து, முதல் ஏழு மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறையை 3.3 பில்லியன் டொலர்வரை அல்லது 103 சதவீதம் வரை அதிகரிக்கச் செய்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்த ஆண்டு இதுவரை 110.9 வீதத்தால் அதிகரித்த “உலகின் சிறப்பாக செயற்படும் பங்குச் சந்தையை” மிகவும் எச்சரிக்கையுடன் கையாளுகின்றனர். அதே காலகட்டம் பூராவும், இலங்கை பங்குகளிலான வெளிநாட்டு முதலீடு 16 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சிகண்டுள்ளது. வங்கிக் கடன் கிடைப்பதற்கு தயாராக இருக்கும் நிலை மற்றும் பதிலீடான, இலாபம் தரத்தக்க முதலீட்டு வாய்ப்புக்களின் பற்றாக்குறையை பிரதிபலிக்கும் வகையில், உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் ஒரு ஊகச் சீற்றம் நிலவுகிறது.

கொழும்பு பங்குகளின் விலைச் சுட்டெண் வீதங்கள், இலங்கையில் 1993ல் ஏற்பட்ட பங்குச் சந்தை குழப்பத்தின் பின்னர் காணப்படாதளவு மட்டத்துக்கு வெடித்துள்ளது. ஆய்வாளர் அமல் சந்தரட்ன லங்கா பிஸ்னஸ் ஒன்லைனுக்கு தெரிவித்ததாவது: “எனது கருத்தின்படி சந்தை அதிகம் சூடேறியுள்ளது. பெறுமதிகள் ஆசியாவிலேயே உயர்ந்ததாக உள்ளன. முன்னேறும் மடங்குகள் 19 தடவையாக உள்ளன; இது சிலவேளையில் 1993 தவிர முன்னெப்போதும் இல்லாததாகும்.” இத்தகைய ஊகக் குமிழிகள் தவிர்க்க முடியாமல் சிதறி, பொருளாதாரம் பூராவும் அதிர்ச்சி அலைகளை அனுப்பும்.

சில வர்த்தகத் துறையினர் தற்காலிகமாக இலாபத்தைப் பெற்றாலும் உழைக்கும் மக்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைகின்றது. இது நாணய நிதியம் மற்றும் பூகோள நிதி மூலதனத்தின் கட்டளைகளின் வழியில், நவம்பர் 22 முன்வைக்கப்படவுள்ள அடுத்த வரவு செலவுத் திட்டத்தை இராஜபக்ஷ அரசாங்கம் அறிவித்த பின்னர் நிச்சயமாக மேலும் அதிகரிக்கும்.