World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The revival of German militarism

ஜேர்மன் இராணுவவாதம் மீண்டும் உயிர்பெறுகிறது

Peter Schwarz
18 November 2010

Back to screen version

கடந்த வாரத்தில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சரான கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் இராணுவப் படைகளுக்கான ஒரு புதிய “போரிடும் பதக்கத்தை” அறிமுகம் செய்தார். ஊடக செய்திகளும் இதனை “போரிடுவோருக்கான சிறப்புப் பதக்கம்” என்று அழைத்தன. “போர்களில் குறைந்தது ஒருமுறையேனும் செயலூக்கத்துடன் பங்குபெற்றவர்கள் அல்லது பயங்கரவாத அல்லது இராணுவ வன்முறை சம்பவங்களில் உயிருக்கு ஆபத்தான அபாயங்களை சந்தித்தவர்களுக்கு” இது வழங்கப்படும். இது மரணத்திற்குப் பின்னும் வழங்கப்படலாம்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஜேர்மன் மறுஇணைவிற்கு பின்னர் ஜேர்மன் இராணுவப் படைகள் (Bundeswehr) பெற்றிருக்கும் அடிப்படையான உருமாற்றத்தின் அறிகுறியாக இந்த புதிய ஒழுங்கு நிற்கிறது.

வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்த வேளையில் தான் 1955ம் ஆண்டில் ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) உருவாக்கப்பட்டது. ஹிட்லரின் இராணுவமான Wehrmacht, வலிந்து நடத்திய போர் ஒன்றில் மில்லியன்கணக்கான மக்களைக் கொன்று ஐரோப்பாவின் பாதியை அழித்து விட்டிருந்த பின், 1945ல் வெற்றி பெற்ற சக்திகள் அதனைக் கலைத்து விட்டிருந்தன. அந்த அனுபவங்களைத் தொடர்ந்து, போர் மற்றும் இராணுவவாதம் எதுவும் இனியும் தங்களுக்கு வேண்டாம் என்பதே பரந்த மக்களின் விருப்பமாய் இருந்தது.

சமூகரீதியாக ஏற்கப்படும் பொருட்டு, ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) பாதுகாப்பு கடமைகளுடன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாய் இருந்தது. வெளிநாட்டுத் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்புக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும் என இருந்தது.

ஒரு கட்டாய சேர்ப்பு இராணுவமானதால் துருப்புகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் இருந்தாலும், சர்வதேச செயல்பாடுகளைக் கைக்கொள்ளும் அளவுக்கு அணு ஆயுதங்களோ, போர் விமானங்களோ அல்லது போக்குவரத்து திறன்களோ அதனிடம் இல்லை. பனிப் போர் காலத்தில் ஐரோப்பிய எல்லைக் கோட்டில் அது நின்றது, உண்மையான போர் நடந்திருந்தால் அது கனமான இழப்புகளை சந்தித்திருக்கும்.

இவ்வாறு, போர், சண்டை மற்றும் கொல்வது இவையெல்லாம் ஜேர்மன் இராணுவத்தின் நோக்கமாகக் கருதப்படாதவை, மாறாக தவிர்க்க வேண்டியவையாகத் தான் இருந்தன. ஊக்கமளிக்கப்பட்ட இலட்சியப் படையினர் ஒரு போரிடும் படையினராக இருக்கவில்லை, மாறாக “சீருடையிலான குடிமகனாய்” இருந்தார். அவர் கட்டளைகளுக்கு அடிபணிந்து நிறைவேற்றுபவராய் சித்தரிக்கப்படவில்லை, மாறாக அரசியல் பொறுப்புடனான சீருடையில் இருந்த தனிமனிதராகவே சித்தரிக்கப்பட்டார். படை அதிகாரிகள் நிலையிலும் சரி சாதாரண படையினர் பல்வேறு அதிகார நிலைகளிலும் சரி இந்த கருத்தாக்கம் தான் வியாபித்ததாய் இருந்தது.

ஜேர்மன் மறுஇணைவுக்கு பின்னர் இவை எல்லாமே முழுமையாய் மாறியிருக்கின்றன. ஒரு புதிய பதக்கத்தின் அறிமுகம் இந்த மாற்றத்தையே பிரதிபலிக்கிறது. ”வெகுகாலமாக சீருடையில் இருக்கும் குடிமகன் குறித்து நாம் மிகக் குறைவாகவே கேள்விப்பட்டிருக்கிறோம், உலகெங்கும் ஜேர்மன் நலன்களுக்காகப் போராடியவர்கள் குறித்து தான் அதிகமாய் கேள்விப்பட்டிருக்கிறோம். நன்கு போரிடும் படையினருக்கு முறையான கருவிகள் மட்டும் போதாது, அங்கீகாரமும் அவசியம்” என்று Frankfurter Rundschau கருத்து தெரிவித்தது.

1991ல் ஜேர்மனி மறுஇணைவு கண்ட சிறிது காலத்திற்குப் பின்னர், இராணுவத்தின் கொள்கை இலக்குகள் எல்லாம் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வழிகாட்டல்களில் மறுவரையறை செய்யப்பட்டன. அதன் கடமைகளில் இப்போது தேசிய பாதுகாப்புடன் சேர்த்து “உலகளாவிய அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் சுற்றுச்சூழல் ஸ்திரநிலையை ஊக்குவிப்பதும் பாதுகாப்பதும்” அத்துடன் “தடையில்லாத உலக வர்த்தகத்தை மற்றும் மூலோபாய கச்சாப் பொருட்களை பெறுவதை பராமரிப்பதும்” சேர்ந்து கொண்டிருந்தன.

1994ல் உச்சநீதி மன்றம் அரசியலமைப்பிற்கு அற்புதமானதொரு பொருள்விளக்கம் கொடுத்து இராணுவத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது. 1998ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் முதல் சர்வதேச யுத்த இலக்கிற்கு ஒப்புதல் அளித்தது யூகோஸ்லேவியாவில். அப்போது தொடங்கி, ஜேர்மன் படையினர் உலகில் போர்நடக்கும் பல்வேறு பகுதிகளிலும் நிறுத்தப்பட்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் மட்டும் சுமார் 5,000 ஜேர்மன் படையினர் இருக்கின்றனர். அந்த நாட்டில், அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி தான் மூன்றாவது பெரிய துருப்புகளின் படையைக் கொண்டுள்ளது.

ஜேர்மன் இராணுவத்தை ஒரு பிராந்திய பாதுகாப்பு படை என்பதில் இருந்து ஏகாதிபத்திய தலையீட்டு படையாக உருமாற்றுவதை முழுமை செய்கிற பணியை நடப்பு பாதுகாப்பு அமைச்சரான கார்ல் தியோடர் சூ கூட்டன்பேர்க் இப்போது கையிலெடுத்திருக்கிறார். அவர் திட்டமிட்டிருக்கும் சீர்திருத்தங்களில், மக்கள் பணிகளுக்கான நிர்வாகக் கட்டமைப்புகளைக் குறைப்பது, இராணுவத் தலைமையை வலுப்படுத்துவது மற்றும் இராணுவப் படையை ஒழுங்குபடுத்துவது ஆகியவையும் அதே சமயத்தில் சர்வதேச செயல்பாடுகளுக்கு என இருக்கக் கூடிய படையினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இடம்பெற்றுள்ளன.

கட்டாய இராணுவ சேவையை இடைநிறுத்தம் செய்ததன் மூலம், ஜேர்மன் இராணுவத்தை ஒரு உண்மையான தொழில்முறை இராணுவமாக அவர் மாற்றியிருக்கிறார். கட்டாய இராணுவ சேவை, சட்டத்தில் பாதுகாக்கப்படவும் செய்கிறது, அப்போது தான் போர் வந்து பீரங்கிகளுக்கு தீனி அவசியமென்றால் அது உடனடியாகப் புனருத்தானம் செய்யமுடியும்.

ஜேர்மன் பொருளாதார நலன்களை இராணுவ வழிகளின் மூலம் பாதுகாப்பதற்கும் கூட்டன்பேர்க் தீவிரமாக ஆலோசனையளித்துக் கொண்டிருக்கிறார். இது அதிககாலமாகவே பாதுகாப்பு கொள்கை வழிகாட்டல்களில் புனிதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது என்றாலும் கூட இப்போது வரை அரசியல்வாதிகள் இந்த விடயத்தை தணித்தே பேசி வந்துள்ளனர்.

கூட்டரசின் முன்னாள் ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோலர் (Horst Köhler) அரை வருடங்களுக்கு முன்பாக, இந்த திசையிலான கருத்துகளுக்காக அவர் விமர்சிக்கப்பட்டதை அடுத்து இராஜினாமாவும் கூட செய்து விட்டார். கூட்டன்பேர்க் கோலரை வெளிப்படையாக ஆதரித்தார். “பாதுகாப்புக்கும் ஜேர்மன் பொருளாதார நலன்களுக்கும்” இடையிலமைந்த “நெருங்கிய தொடர்பை” அவர் வலியுறுத்தினார். இது இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதில் இருந்து சுருக்கிக் கொள்ளாத பாரம்பரிய ஏகாதிபத்திய அயலுறவுக் கொள்கையின் வழிவந்த நிலையாகும்.

கூட்டன்பேர்க் ஊடகங்களால் திட்டமிட்ட வகையில் ஒரு அரசியல் நட்சத்திரமாக கட்டமைக்கப்பட்டு வருகிறார். 38 வயதாகும் இந்த பழைய பிராங்கிய பிரபுக் குடும்பத்து வழித்தோன்றல், ஜேர்மன் வரலாற்றில் ஒரு அழிவார்ந்த பாத்திரத்தை ஆற்றிய ஒரு சமூகத் தட்டின் பிரதிநிதியாக அரசியல் அரங்கில் உலா வந்து கொண்டிருக்கிறார்.

கைய்சர் சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட ஆண்டான 1871க்கும் மூன்றாம் குடியரசு தோற்கடிக்கப்பட்ட ஆண்டான 1945க்கும் இடையில் ஜேர்மன் பிரபுத்துவம் தான் இராணுவ மற்றும் அயலுறவுக் கொள்கையில் தொனியை நிர்ணயித்தது. வரலாற்று ஆவணங்களை ஆராய்ந்தால் ஒருவர் தனித்துவமான பிரபுத்துவ இணைப்பு கொண்ட பெயர்களைக் காண முடியும்.

போருக்குப் பிந்தைய மேற்கு ஜேர்மனியில், பிரபுத்துவமானது பின்னணிக்குத் தள்ளப்பட்டது, ஆனாலும் அது இருந்து கொண்டு தான் இருந்தது. கூட்டன்பேர்க் (இவரது பிரபலமான குடும்ப வம்சாவளி 12 ஆம் நூற்றாண்டு வரை செல்கிறது) நன்கு இணைப்பு கொண்டுள்ளார். அவரது மனைவி ஓட்டோ வொன் பிஸ்மார்க்கின் கொள்ளுப் பேத்தியின் கொள்ளுப் பேத்தி. இவரது தாய் (இயற்பெயர் கவுண்டெஸ் வொன் எல்ட்ஸ்) ஹிட்லரின் வெளியுறவு அமைச்சரான ஜோவாகிம் வொன் ரிப்பண்டிராப்பை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டவர். அரசியலுக்கு வரும் முன்னதாக, நடப்பு பாதுகாப்பு அமைச்சர் தனது குடும்பத்தின் சொத்துகளை (பெரிய காடுகள் மற்றும் மலைத்தோட்டங்கள் அத்துடன் ஒரு தனியார் மருத்துவமனை குழுமத்தில் பங்கு என 600 மில்லியன் யூரோவாக மதிப்பிடப்படுகிறது) நிர்வாகம் செய்யும் வேலைக்குத் தான் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார்.

முந்தைய ஜேர்மன் இராணுவங்கள் இருந்த இடத்தைப் பிடிக்க ஜேர்மன் இராணுவம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. வருடத்திற்கு 46 பில்லியன் டாலர் செலவிடப்படும் நிலையில், ஜேர்மன் இராணுவச் செலவினம் அமெரிக்காவினுடையதில் வெறும் பன்னிரண்டில் ஒரு பங்கு மட்டுமே.

பொருளாதார அளவில் பார்த்தாலும் கூட ஜேர்மனி தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3 சதவீதத்தை இராணுவத்திற்கென செலவிடுகிறது. அமெரிக்கா (4 சதவீதம்) பிரான்ஸ் (2.3 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (2.2 சதவீதம்) ஒதுக்குவதை விட இது வெகு குறைந்த அளவாகும். பிந்தைய இரண்டு நாடுகளும் ஐரோப்பாவின் இராணுவ செலவினத்தில் பாதிக்கு பங்களிக்கின்றன.

ஆனால் புதிய பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும் ஜேர்மன் இராணுவத்திற்கான இராணுவ செலவினத்தை பாரிய அளவு அதிகரிப்பதற்கான பாதையில் இப்போது நின்று கொண்டிருக்கும் பரவலான எதிர்ப்பை உடைப்பதற்கு ஏதேனும் அதிர்ச்சிகரமான சம்பவம் மட்டுமே தேவைப்படுகிறது.

இரண்டாம் உலகப் போர் முடிந்து 65 ஆண்டுகளின் பின்னர் ஜேர்மன் இராணுவவாதம் உயிர்பெற்றிருப்பது என்பது உலக-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அபிவிருத்தி ஆகும். உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியில் இருந்து இதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெரும் சக்திகளுக்கு இடையிலான நிதியியல் மற்றும் பொருளாதார மோதல்கள் மோசமடைய மோசமடைய, இராணுவவாதம் ஒவ்வொரு இடங்களிலும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.

அமெரிக்கா, தனது பொருளாதார பலம் வீழ்ச்சியுறுவதன் விளைவுகளை சரிக்கட்டுவதற்கு தனது இராணுவ மேலாதிக்கத்தை சுரண்டும் முயற்சியில் நீண்ட காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கிறது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருக்கும் அமெரிக்காவின் பொருளாதார எதிரிகள் தங்களது சொந்த இராணுவத் திறன்களை மேம்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் கூட்டன்பேர்க்கின் வார்த்தைகளில் சொல்வதானால் “பாதுகாப்புக்கும் பொருளாதார நலன்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பை” வலியுறுத்துவதன் மூலமாகவும் பதிலிறுப்பு செய்து வருகின்றன.

கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களுமே ”மாற்றமுடியாத வகையில் சர்வதேச முதலாளித்துவ நலன்களின் முரண்பாடுகளில் இருந்தே” எழுந்தவை என்று லியோன் ட்ரொட்ஸ்கி 1940ல் குறிப்பிட்டார். உழைக்கும் மக்கள் முதலாளித்துவ போர்விரும்பிகளை காலத்தே தடுத்து நிறுத்தி சமூகத்தை சோசலிச அடித்தளத்தில் மாற்றுவதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்கவில்லை என்றால் இன்னொரு உலகப் போர் தவிர்க்கவியலாதது.