World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Top Saudi court confirms death sentence on Sri Lankan worker

சவுதி நீதிமன்றம் இலங்கை தொழிலாளியின் மரணதண்டனையை உறுதிப்படுத்தியது

By Sampath Perera
3 November 2010

Back to screen version

ரியாத்தில் உள்ள சவுதி அரேபியாவின் உயர் நீதிமன்றம், நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துகொண்டிருந்த இலங்கை யுவதியான ரிஸானா நஃபீக் மீது திணிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான மனுவை நிராகரித்தது. செப்டெம்பரிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும், நஃபீக்கின் சட்டத்தரணிகளுக்கு இந்தத் தீர்ப்பைப் பற்றி கடந்த மாதமே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான இலங்கையர்களைப் போலவே, தனக்கும் தனது குடும்பத்துக்கும் வருமானத்துக்காக ஏங்கிய காரணத்தால் நஃபீக்கும் சவுதி அரேபியாவில் வேலையொன்றை பெற்றார். அப்போது அவருக்கு 17 வயது மட்டுமே. தொழிலுக்கான தகமைகளை நிரப்புவதன் பேரில், வேலைவாய்ப்பு முகவர்கள் அவரது வயதை மறைக்குமாறு தூண்டியுள்ளனர். சில வாரங்களின் பின்னர், அவரை பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்திக்கொண்ட குடும்பத்தின் நான்கு மாத மகனை கொன்றதாக நஃபீக் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே, நஃபீக்கின் வழக்கு விசாரணை நீதியை கேலிக்கூத்தாக்கியது. மூன்று நீதிபதிகள் குழுவைக் கொண்ட டவடாமி உயர் நீதிமன்றம், அவரது வயதை அலட்சியம் செய்தது. 2007 ஜூலை 16 அன்று அவரை குற்றவாளியாகக் கண்டதோடு தலையை துண்டிக்கும் முறையிலான மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு பொலிசாரால் கறக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவர் பொலிசாரால் தாக்கப்பட்டிருந்ததோடு அவரால் புரிந்துகொள்ள முடியாத அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த ஆவணங்களில் கைச்சாத்திட நெருக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றில் சட்ட உதவிகளோ உரிய மொழி பெயர்ப்புகளோ கிடைக்கவில்லை.

ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் உதவியுடன், ஒரு சட்ட முறையீடு செய்யப்பட்டது. உரிய மொழிபெயர்ப்பாளரை பெற்றுக்கொண்ட நஃபீக், தனது ஒப்புதல் வாக்குமூலத்தை மறுத்ததோடு சகல குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்தார். அந்தக் குழந்தையின் மரணம் ஒரு விபத்து என அவர் நீதி மன்றுக்கு அறிவித்தார். அவர் அப்போது குழந்தைக்கு போத்தலில் பால் ஊட்டிக்கொண்டிருந்தார். குழந்தைக்கு மூச்சுத் திணறியதோடு அவரால் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது. அவர் உதவி பெற முயற்சித்துள்ளார்.

அந்த மேன்முறையீட்டை கேட்ட உயர் நீதிமன்றம், புதிய சாட்சிகளை அலட்சியம் செய்ததோடு திட்டமிடப்பட்ட கொலை என்ற தீர்ப்பையும் மாற்ற மறுத்தது. இந்த தீர்ப்பு செப்டெம்பர் 25 வழங்கப்பட்ட போதும், நஃபீக்கின் சட்டத்தரணிகளுக்கு அக்டோபர் 19 அன்றே இது தெரியவந்தது. இந்தத் தீர்ப்பை பற்றி அக்டோபர் 25 பகிரங்கப்படுத்திய அரேப் நியூஸ் மூலமே ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிந்துகொண்டது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சவுதி மன்னரிடம் “கருணை” காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அதுவும் அந்த இளம் யுவதிக்கு உதவி செய்ய மறுத்து, பின்னர், முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள செய்த செயலாகும். 2007ல் நஃபீக்குக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது, அவரது மேன் முறையீட்டுக்கான சட்டச் செலவுகளை செலுத்த மறுத்த இலங்கை அரசாங்கம், அது இன்னொரு நாட்டின் இறைமையை மீறுவதற்கு சமனாகும் எனக் கூறியது.

உண்மையில், சவுதி அரேபிய அரசாங்கத்துக்கு அதிருப்தியூட்டி, மத்திய கிழக்குக்கான மனித உழைப்பு வியாபாரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பது பற்றி இலங்கை அரசாங்கம் கவலை கொண்டிருந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணம் இந்த ஆண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இது 2009ல் கிடைத்ததை விட 3.4 பில்லியன் டொலர் அதிகரிப்பும் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தின் அரைப் பங்கிற்கு நெருக்கமானதாகும். மொத்தத்தில் 85 வீதமானது, மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்கின்ற, பயிற்சி பெறாத தொழிலாளர்களிடம், பிரதானமாக நஃபீக் போன்ற வீட்டுப் பணிப்பெண்களிடம் இருந்தே வருகின்றது.

நஃபீக்கின் வழக்கில் முறையீட்டு செலவு அளவு கடந்ததாகும். 150,000 சவுதி ரியால் அல்லது 40,000 டொலர்கள் என்பது, இலங்கை ரூபாய்ப்படி வானுயர்ந்த தொகையாகும், மற்றும் இதை செலுத்துவது நஃபீக்கின் மிக வறிய குடும்பத்துக்கு சாத்தியமற்றதாகும். நஃபீக் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மூதூர் நகரைச் சேர்ந்தவராவார். அவர் ஒரு விறகு வெட்டியின் மூத்த மகளாவார்.

தனது செயலின்மை சம்பந்தமாக மனித உரிமை அமைப்புகளின் விமர்சனத்துக்கும் அதிகரித்து வந்த வெகுஜன அக்கறைக்கும் முகங்கொடுத்த இலங்கை அரசாங்கம், நஃபீக்கை சிறையில் சென்று பார்க்குமாறு தூதரக அதிகாரிகளை அனுப்பியதோடு அவரது பெற்றோர்கள் சவுதி அரேபியாவுக்கு செல்வதற்கான பயணத்தையும் ஏற்பாடு செய்தது. தூதரகம் நஃபீக்குக்கு வேலை வழங்கியவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த இளம் யுவதி வேண்டுமென்றே குழந்தையைக் கொன்றதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

எவ்வாறெனினும், வீட்டு வேலையாட்கள் தேவையை பெருமளவில் ஆசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவு உழைப்பில் பூர்த்தி செய்வதில் கனமாகத் தங்கியிருக்கும் சவுதி அரேபியாவின் ஒடுக்குமுறை அரசாங்கத்தை சவால் செய்ய இலங்கை அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. சவுதி ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்று பங்கினரை உள்ளடக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, ஏறத்தாழ சட்ட உரிமைகள் எதுவும் கிடையாது. மற்றும் அவர்கள் அடிக்கடி வார்த்தை ரீதியான மற்றும் சரீர ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றனர்.

வீட்டுப் பணிப்பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். அவர்கள் ஏறத்தாழ அடிமைத் தொழிலாளர்களாக கருதப்படுவதோடு கொஞ்ச நேர தூக்கம் கொஞ்ச நேர ஓய்வுடன் மிக நீண்ட நேரம் வேலைசெய்யத் தள்ளப்படுகிறார்கள். துப்புரவு வேலைக்காக சேர்க்கப்பட்ட நஃபீக், குழந்தையைப் பார்க்கும் பொறுப்பையும், அதே போல் துப்புரவு செய்தல், சமையல், கழுவுதல் மற்றும் அயர்ன் செய்தல் போன்ற பொறுப்புக்களையும் ஏற்கத் தள்ளப்பட்டார். அவருக்கு ஒரு குழந்தையை பராமரிக்கும் அனுபவமோ பயிற்சியோ கிடையாது.

ஏனைய புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே, நஃபீக்குக்கும் மாற்று தொழிலை எதிர்பார்க்க முடியாது. அவரது ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் அல்லது அவருக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது போன்ற தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை அவர் எதிர்கொண்டார். சவுதி அதிகாரிகள் மத்திய காலத்து இஸ்லாமிய சட்டத்தையும், அதன் ஜனநாயக விரோத செயல்முறைகள் மற்றும் அதன் அநாகரிக வடிவிலான தண்டனைகளையும் பயன்படுத்துவதானது, நாட்டில் உள்ள பிரமாண்டமான தொகையிலான வெளிநாட்டு தொழிலாளர்களையும், அதே போல் உள்நாட்டில் எந்தவொரு மாற்றுக் கருத்து கொண்டவரையும் பீதிக்குள்ளாக்கும் புதிய தேவைகளுக்காக சேவை செய்கின்றது.

இத்தகைய நிலைமைகளின் கீழ், வேலை வழங்குவோரின் துஷ்பிரயோகங்கள், மீகவும் தீவிரமான சம்பவங்கள் கூட அம்பலத்துக்கு வருவது மிகக் குறைவே. சவுதி அதிகார்கள் அல்லது இலங்கை அதிகாரிகளால் மரணங்கள் பற்றி சரியாக விசாரிக்கப்படுவதில்லை. 2009ல் 333 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் 127 மரணங்கள் சவுதி அரேபியாவில் நடந்ததாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. 500,000 இலங்கையர்கள் சவுதி அரேபியாவில் வேலை செய்யும் அதே வேளை, அதிகளவானவர்கள் இளைஞர்கள் ஆவர். அவர்கள் இயற்கை காரணங்களால் மரணிப்பது நடக்க முடியாதது. 2009ல் சவுதி அரேபியாவில் இலங்கையர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,796 வரை அதிகரித்துள்ளது. அவற்றில் 4,564 முறைப்பாடுகள் பெண் தொழிலாளர்களிடம் இருந்து வந்துள்ளன.

குறிப்பாக, ஒரு திகிலூட்டும் சம்பவம் ஆகஸ்ட்டில் அம்பலத்துக்கு வந்தது. ஒரு பெண் தொழிலாளி எல்.பீ. ஆரியவதி, தனது சவுதி எஜமான் தனது உடம்புக்குள் ஆணிகளை அடித்து செருகியதாக முறைப்பாடு செய்தார். சவுதி அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை மறுத்த போதும், அந்தப் பெண் இலங்கைக்குத் திரும்பிய பின் மேற்கொண்ட மூன்று மணித்தியால சத்திர சிகிச்சையின் மூலம் வைத்தியர்கள் 13 ஆணிகளையும் 5 ஊசிகளையும் அவரது உடலில் இருந்து அகற்றினார்கள். பரந்தளவில் பிரசித்திபெற்ற இந்த விவகாரம் இலங்கையிலும் உலகம் பூராவும் தொழிலாளர்களின் சீற்றத்தை தூண்டிவிட்ட அதே வேளை, கொழும்பு அரசாங்கம் தயக்கத்துடனேயே இந்தப் பிரச்சினையை சவுதி அரசாங்கத்திடம் எடுத்துச் சென்றது.

அக்டோபர் 17 சண்டே டைம்ஸ் பத்திரிகையின் படி, அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி வர்த்தக கைத்தொழில் சம்மேளனமும் மன்னராட்சியின் தேசிய ஆட்சேர்ப்புக் குழுவும், இலங்கையில் இருந்து வேலைக்கு ஆட்களை சேர்ப்பதை தடை செய்யுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தன. ஒரு தற்காலிக தடை அமுலில் இருப்பதாகவும், அப்படியிருந்தும் அத்தகைய ஒரு முடிவின்படி இலங்கை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நஃபீக்கின் மரண தண்டனையை உறுதிப்படுத்தும் சவுதி உயர் நீதிமன்றின் முடிவுக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ அமைதியாக பிரதிபலிப்பதற்கான தெளிவான காரணம், வெளிநாட்டு வருமானத்தின் மீதான அச்சுறுத்தலே ஆகும். சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இந்த மரணதண்டனையை நிறுத்துமாறு சவுதி மன்னருக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவரை விடுவிக்குமாறு கோரி, நஃபீக்கின் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள திருகோணமலை உட்பட இலங்கையின் பல பிரதேசங்களிலும் மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன.

எவ்வாறெனினும், முன்னதாக அத்தகைய வேண்டுகோள்களை சவுதி அரசாங்கம் நிராகரித்தது. நாட்டின் உள்துறை அமைச்சு தீர்ப்பை மீளாய்வு செய்வதோடு மூன்று வாரங்களுக்குள் அமைச்சரவை அலுவலகத்துக்கு அறிவிக்கும் என சவுதி மூலாதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஏசியன் ரிபியூன் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. மன்னரின் மேற்பார்வையிலான இந்த அமைச்சரவை, இந்த மரண தண்டனை தொடர்பாக இறுதி முடிவெடுக்கும்.