World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German Social Democrats take up racist program of Thilo Sarrazin

ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சியினர் திலோ சராஸின்னின் இனவாத வேலைத்திட்டத்தை எடுத்துக் கொள்கின்றனர்

By Justus Leicht
1 October 2010

Back to screen version

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) சமீபத்தில் கட்சி உறுப்பினர் திலோ சராஸின்னை வெளியேற்றுவதற்கு சம்பிரதாயபூர்வமான நடவடிக்கை எடுக்கும் தன் நோக்கத்தை அறிவித்தது. ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி சராஸின்னின் அவருடைய புத்தகமான ஜேர்மனி தன்னை அழித்துக்கொள்கின்றது என்பதில் உள்ள முற்றிலும் வலதுசாரி, இஸ்லாமிய-எதிர்ப்பு நிலைப்பாடுகளில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறாகிவிடும்.

இதற்கு முற்றிலும் எதிரான நிலைதான் உள்ளது. அவருடைய கொள்கைகளுக்கு எதிராக அது கருத்து வேறுபாடு கொண்டிருப்பது என்பதால் ஒன்றும் சராஸின்னுக்கு எதிராக சமூக ஜனநாயகக் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை, ஆனால் கட்சியின் நீண்டகால உறுப்பினரும் மத்திய வங்கியாளரும் மிகத் தெளிவாக முழு இனவாத மற்றும் தொழிலாள வர்க்க விரோத உணர்வு அவர்கள் மத்தியில் உள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியதால்தான்.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் சராஸின்னும் ஒரேமாதிரியான உணர்வைத்தான் “ஒருங்கிணைப்பு” கொள்கையில் கொண்டுள்ளனர் என்பது கடந்த வார இறுதியில் கட்சித் தலைவர் சீக்மார் காப்பிரியேல் அழைத்திருந்த சிறப்புக் கட்சி மாநட்டில் தெளிவாகியது.

சராஸினின் வெளியெற்றத்திற்கு தன் செல்வாக்கைப் பயன்படுத்திய காப்ரியேல், சமூக ஜனநாயகக் கட்சி கூட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பு Der Spiegel இதழுக்கு கொடுத்த பேட்டியில் சராஸினின் கொள்கைகளையே வாதிட்டார். அதுவும் சற்றும் இனவாதம் குறைவில்லாத சொற்றொடர்களில்.

“மொழி கற்றல், சமூகத்தில் பின்தங்கிய பகுதிகளில் குடும்ப மையங்கள், முழுநாள் பள்ளி, பயிற்சி இடங்களை” அமைப்பது பற்றி சில சாதாரண கருத்துக்களைக் கூறியபின், காப்ரியேல் தன்னுடைய முக்கிய கருத்தைக் கூறினார். “நீண்டகாலத்திற்கு சமூகத்தோடு ஒருங்கிணைப்புக்கான அனைத்து அழைப்புக்களையும் நிராகரிப்பவர்களுக்கு வெளிநாட்டு நிதி பெற்று மசூதிகளில் வெறுப்பை உபதேசிக்கும் பிரச்சாரகர்களுக்கு இருப்பதுபோல் ஜேர்மனியில் வசிக்கும் உரிமை கிடையாது. குற்றம் அதிகமாக நடக்கும் இடங்கள் உள்ளனவோ, அவை ஜேர்மனியர் அல்லது வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களாக இருக்கும் இடமாக இருந்தாலும், நமக்குத் தெளிவாக உள்ளூர் மட்டத்தில் அதிகப் பொலிசார் தேவை.”

இக்கருத்துக்களில் முன்பு சமூக ஜனநாயகக் கட்சியிடம் பரந்திருந்த நம்பிக்கையான குற்றம் பற்றிய சிறந்த கொள்கை சமூகம் பற்றிய சிறந்த கொள்கையே என்பதின் அடையாளம் துளிகூட இல்லை. அதற்குப் பதிலாக தீவிர வலதுசாரிகளின் சொந்தமான அச்சுறுத்தும் சொல்லாட்சிதான் உள்ளது.

“ஒருங்கிணைப்பு பற்றிய அழைப்புக்களை நிராகரிப்பவர்கள்”, “வெறுப்பை உபதேசிக்கிறவர்கள்” என்னும் காப்ரியேலின் கருத்துக்கள் ஐரோப்பிய ஆளும் வட்டங்களில் “குடியேறுபவர்கள்”, “முஸ்லிம்கள்” என்பதாக நன்கு உணரப்பட்டுள்ளன. “ஒருங்கிணைப்பை மறுப்பவர்கள்”-அதாவது சமூக இழிவை முறைப்பாடு இல்லாமல் ஏற்க மறுப்பவர்கள் அல்லது ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர்கள் நாடுகடத்தலை எதிர்கொள்ள நேரிடும் (அவர்களுக்கு ”ஜேர்மனியில் வசிக்கும் உரிமை ஏதும் கிடையாது.”) குடியேறுபவர் வசிக்கும் குடியிருப்புகள் “உள்ளூர் மட்டத்தில் அதிக பொலிசின்” ரோந்துக்கு உட்படும்.

சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் சட்டம் மற்றும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கைக்கு அப்பட்டமாக அழைப்புவிட்டுள்ளார். அதே நேரத்தில் ஜேர்மனி, ஆஸ்திரியாவில் உள்ள “ஜேர்மனியர்களுக்கும்”, “வெளிநாட்டவர்களுக்கும்” இடையே இனவேறுபாடு பற்றியும் அழைப்பு விடுத்துள்ளார்.

“ஜேர்மனியர்களின் பாதுகாப்பு பற்றிய உணர்வு மதிக்கப்பட வேண்டும்” என்று காப்ரியேல் விளக்கினார். “வியன்னாவின் நகரசபை தலைவர் இப்பொழுது குறிப்பாக நகரப்பகுதிகளில் பொது வீடுகள் விதிகள் கடைபிடிக்கப்படுவதற்காக அதிக பாதுகாப்புப் படைகளை நிறுத்தியுள்ளார். உள்ளூர் மக்கள் அப்பகுதியில் இருந்து ஒதுங்கி வெளிநாட்டினர் ஆதிக்கம் அதிகம் இருக்கும் பெரிய வீட்டுத்தொகுதிகள் அமைப்பதை அவர் ஏற்கத் தயாராக இல்லை.”

காப்ரியேலின் கருத்துப்படி குடியேறிய தொழிலாளர்கள் அவர்களுடைய குடும்பங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகள் குறைந்த வேலை வாய்ப்புக்கள், வறுமை, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட நிலை மற்றும் வீடுகள் சந்தையில் பாகுபாடு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பாதகும். மாறாக காப்ரியலின் கருத்துப்படி இவை குடியேறுபவர்கள் பொது வீடுகள் விதிகளைப் பின்பற்றத் தயாராக இல்லை, எனவே உள்ளூர் குடிமக்களை அகற்றுகின்றனர் என்பது ஆகும். இவர் கொடுக்கும் தீர்வு இன்னும் அதிக பொலிஸ், பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்புத்தான்.

கல்விப் பிரச்சினைகளை தீர்க்கக்கூட காப்ரியேல் வறியவர்களுக்கு எதிராக இன்னும் அடக்குமுறையைத்தான் கூறுகிறார்: “தங்கள் குழந்தைகளை முறையாகவும், சரியான நேரத்திலும் பள்ளிக்கு அனுப்பத் தவறுபவர்களுடைய வீடுகளுக்கு பொலிசை அனுப்ப வேண்டும்; அவர்கள் அரச நிதியுதவியில் இருந்தாலும்கூட அவர்களுக்கு வேதனை தரும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் .”

Der Spiegel உடனான இந்தப் பேட்டி சமூக ஜனநாயகக் கட்சி மாநாட்டிற்கு தெளிவான முன்னுரை ஆகும்; அதிலும் இதேபோன்ற கருத்துக்களைத்தான் தொடர்ந்திருந்தது.

சராஸினை அகற்றியது எந்தவிதத்திலும் அவர் கொள்கை நிராகரிக்கப்பட்டதை பிரதிபலிக்க அல்ல என்பதை உறுதி செய்யும் விதத்தில் ஒருங்கிணைப்பு பற்றிய கருத்தின் மீதான விவாதம் மாநாட்டில் பேர்லின் புறநகரான Neukolin உடைய நகரசபைத்தலைவர் ஹென்ஸ் புஸ்கொவிஸ்கி இன் தலைமையில் நடைபெற்றது. இவர் பல ஆண்டுகளாக தன் ஜேர்மனிய தேசிய நிலைப்பாடுகளுக்கு பெயர் பெற்றவர் என்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

புஸ்கொவிஸ்கி, சமூக அறிவியலாளர் நைகா போருட்ரான், சமூக சேவகர் லோதர் கென்னன்பேர்க் ஆகியோரிடையலான விவாதத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை காப்ரியேலே எடுத்துக் கொண்டார். தன்னுடைய கருத்துக்களில், காப்ரியேல் முன்னாள் கூட்டாட்சி ஜனாதிபதி ஜோகானஸ் ரவ் (SPD- 1931-2006) ஐ மேற்கோளிட்டு, அவருடைய பணியில் அவர் மிக அதிக வெளிநாட்டினர் இருக்கும் பள்ளிகளில் பயிலும் தங்கள் குழந்தைகளின் கல்வி வாய்ப்பு பற்றிக் கவலைப்பட்ட பெற்றோர்களின் உணர்வை “புரிந்து கொண்டவர்” என்றும், அதேபோல் “வெளிநாட்டவர்கள், குடியேறிவயவர்களிடையே சராசரி குற்ற விகிததம் அதிகமாக இருப்பது பற்றிய அச்சங்களையும்” உணர்ந்திருந்தார் என்றார்.

குடியேறிய தொழிலாளர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் முற்றிலும் சராஸினின் இனவாத கூச்சல்கள் பற்றி கவலைப்படுதல் முற்றிலும் நியாயம் என்பது பற்றி காப்ரியேல் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. சராஸினுடைய கருத்துக்கள் செல்வாக்குடைய அரசியல் புள்ளிகளாலும் செய்தி ஊடகப் பண்டிதர்க்களாலும் ஏற்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் விவாதத்தின்போது, புஸ்கொவிஸ்கி Der Spiegel இல் காப்ரியேலின் “ஒருங்கிணைத்துகொள்ள விருப்பம் இல்லாதவர்கள்” பற்றிய கருத்துக்களுக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில், “ஆம். இது நன்கு வெளிப்படையாக உள்ளது.” என்றார்.

புஸ்கொவிஸ்கியின் கருத்துக்கள் “பிரயோசனமற்ற சைகைகள் மற்றும் சமூகத்தில் நலிந்தவர்களை பாதுகாக்க முற்படும் சமூக ஜனநாயகக் கட்சிக் கொள்கையின் நோக்கங்களுக்கு மாறுபட்டவை” என சமூக அறிவியலாளர் நைகா போருட்ரான் வலியுறுத்தினார். போருட்ரான் கடந்த இரு தசாப்தங்களாக உறக்கத்தில் இருந்தார் போலும், எனவே சமூக ஜனநாயகக் கட்சிதான் ஜேர்மனிய போருக்குப் பிந்தைய வரலாற்றுக் காலத்தில் பேரழிவு தரும் பொதுநலச் செலவுக் குறைப்புக்களை (செயற்பட்டியல் 2010ஐ) செயல்படுத்தியுள்ளது என்பதைக் கருத்திற் கொள்ளத் தவறிவிட்டார். மற்றும் அதுதான் இடது கட்சியுடன் கூட்டணியில் இருந்து ஜேர்மனியின் தலைநகரான பேர்லினில் வாழ்க்கைத் தரங்கள் சரிந்துவிட்டதற்கு நேரடிப் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஒரே ஒரு முறைதான் போருட்ரான் சமூக ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளைப் பற்றிய உண்மையான விளைவுகள் குறித்துப் பேசினார்; தன் குழந்தைகள் பயிலும் பேர்லின் வெட்டிங் நகரப்பகுதி பள்ளியில் ஒரு சில மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்தான் உள்ளனர் என்பதைக் கண்டித்தார்.

தன்னுடைய பங்கிற்கு புஸ்கொவிஸ்கி குடியேறும் தொழிலாளர்களுக்கு முதலில் மொழி ஆசிரியர்கள் தேவையா என்ற தன் இகழ்வுணர்வை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு தனிநபரும் தன்னுடைய விதிக்குப் பொறுப்பானவர்கள் என்று அவர் வாதிட்டார்; இதன் பொருள் அவருடைய கருத்துப்படி ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதற்கு அவர்களேதான் காரணம் என்பதாகும். இந்த நிலைப்பாடு சராஸினின் ஆதரிக்கும் நிலைப்பாட்டை ஒத்து உள்ளது. ஆனால் புஸ்கொவிஸ்கி தன்னுடைய சக கட்சி உறுப்பினர் முன்வைத்த மரபணு கோட்பாடுகளில் இருந்து தன்னை ஒதுக்கிக் கொண்டார்.

சமூக ஜனநாயகக் கட்சி மாநாடு சமூக ஜனநாக ஒருங்கிணைப்புக் கொள்கைக்கான தீர்மானத்தை ஏற்றது. அது சட்டம் மற்றும் ஒழுங்கு கோஷங்களையும், சமூகப் பிளவுகள், பாகுபாடுகளுக்கு எதிரான அறிக்கைகளையும் பயனற்ற விதத்தில் அத்துடன் இணைத்துள்ளது.