World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The rising danger of US-China trade war

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வணிகப் போர் தோன்றும் அபாயம்

Peter Symonds
2 October 2010

Back to screen version

புதனன்று அமெரிக்க கூட்டாட்சிப் பிரதிநிதிகள் சபையில் சீனாவிற்கு எதிரான அதன் நாணய மதிப்பிற்காக அபராத வகையிலான காப்புவரி விதிக்க வகைசெய்யும் சட்டத்திற்கு பெரும் ஆதரவுடன் வாக்கு அளிக்கப்பட்டது, வணிகப் போரை நோக்கிய ஒரு ஆபத்தான நடவடிக்கை இதுவாகும். “அடிப்படையில் குறைமதிப்பிற்கு” உடன்படுத்தப்படும் நாணயத்தைக் கொண்டுள்ள எந்த நாட்டிற்கு எதிராகவும் இலக்கு கொண்ட இச்சட்டம், அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளிருந்து, குறிப்பாக இதன் தாராளவாதப் பிரிவிலிருந்து, ஆக்கிரோஷமான கோரிக்கைகளை, சீனாவிற்கு எதிராக கடுமையான வணிக நடவடிக்கைகள் தேவை என்பதுடன் இணைத்துள்ளது.

“Taking on China” என்னும் கட்டுரையில் நியூ யோர்க் டைம்ஸ் அதன் வியாழன் பதிப்பில் வெளியிட்டுள்ள பொருளாதார வல்லுனர் போல் க்ருக்மன் கட்டுரையானது “வணிகப் போர் மற்றும் உலகப் பொருளாதாரத் தடை போன்ற பெரும் எச்சரிக்கைகளை” உதறிவிட்டு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று வாதிட்டுள்ளார். “சீன நாணயத்தை பொறுத்தவரை இராஜதந்திர முயற்சிகள் எந்தப் பலனையும் கொடுக்கவில்லை, பதிலடி கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கையின் ஆதரவிற்கு உட்பட்டாலொழிய எந்தப் பலனையும் தராது” என்று அவர் எழுதினார். “வணிகப் போர் குறித்து அதிக பரபரப்பு தேவையற்றது—மேலும் எப்படி இருந்தபோதிலும் வணிகப் போரை விட மோசமான விடயங்களும் உள்ளன. வேலையின்மை பெருகியுள்ள காலத்தில், அதுவும் சீனச் சூறையாடல் நாணய முறையால் மோசமாக்கப்பட்டுள்ள நிலைமையில், ஒரு சில புதிய காப்புவரிகள் சுமத்தும் வாய்ப்புக்களை நம் சிந்தனைக்குரியவற்றிலே சேர்க்கப்பட வேண்டியவை.”

இத்தகவல் அதே பதிப்பில், ஒபாமா நிர்வாகமானது சீனா மீது அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் “சீனாவின் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளுக்கு எதிராகப் பரந்த சவால் விடப்பட வேண்டும்,” இது உலக வர்த்தக அமைப்பு (WTO) மூலம் மற்றும் ஏனைய நாடுகளும் அவ்வாறு செய்ய ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் வரவேண்டும் என்று கூறியுள்ள தலையங்கத்தால்தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “இந்த மூலோபாயத்தில் பதிலடி என்ற ஆபத்து இல்லாமல் இல்லை. ஆனால் அமெரிக்கா அதையொட்டி முடக்கப்பட்டுவிட முடியாது, மற்றவர்களுடன் இணைந்து செயல்படுவது அந்த அச்சறுத்தலைக் குறைக்கும்” என்று நியூ யோர்க் டைம்ஸ் கருத்துத் தெரிவித்துள்ளது.

இத்தகைய வாதங்கள் அமெரிக்க அழுத்தம் சீனாவைப் பின்வாங்க வைக்கும் கட்டாயத்திற்கு தள்ளும் என்ற முன்கருத்தின் அடிப்படையில் கூறப்படுகின்றன. ஆனால் அதிக பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும்கூட, சீன ஆட்சி பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற நிலை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அமெரிக்கச் சட்டத்தை பற்றிப் பேசுகையில் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜியாங் யூ எச்சரித்தார்: “சீனாவிற்கு எதிராக நாணய மாற்றுவிகித அடிப்படையில் காப்புவரிக் கொள்கைகளை வளர்ப்பது சீன-அமெரிக்க வர்த்தகத்தையும் பொருளாதார உறவுகளையும் கடுமையாகச் சேதப்படுத்தும் என்பதோடு, உலகப் பொருளாதாரத்தின் இரு பொருளாதாரங்களிலும் எதிர்மறை விளைவுகளையும் கொடுக்கும்.”

பெய்ஜிங் அடித்தளத்தில் கொண்டுள்ள அச்சங்களை சுட்டிக் காட்டிய வகையில் சீனப் பிரதமர் வென் ஜியாபோ அமெரிக்க வணிகத் தலைவர்களிடம் கடந்த வாரம் கூறினார்: “ரெம்னிபி (யுவான்) 20 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதம் வரை அமெரிக்க அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப மதிப்புக் கூட்டப்பட்டால், எத்தனை சீன நிறுவனங்கள் திவால் ஆகும், எத்தனை சீனத் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர், எத்தனை கிராமப்புறத் தொழிலாளர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கூறமுடியாது (ஏராளமாக இருக்கும்). சீனச் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்” சமூக எழுச்சிகளை எதிர்கொள்ளும் நிலையில் சீனா பதிலடி கொடுக்கும்.

உலக வணிக மோதலை விரிவுபடுத்துவதின் விளைவுகள் நன்கு அறியப்பட்டுள்ளவைதான். திங்களன்று வாஷிங்டன் போஸ்ட்டில் அமெரிக்கப் பொருளாதார மேன்மை நிலை தொடர்வதற்கு வணிகப் போர்தான் ஒரு வழிவகை என்று வெளிப்படையாக ராபர்ட் சாமுவல்சன் வாதிட்டுள்ளார். “1930 Smoot-Hawley காப்புவரிக் கொள்கையை அறிந்தவர்கள் சீனாவுடன் ஒரு வணிகப் போர் நடத்தப்படுதை விரும்பமாட்டார்கள். ஆனால் அதை நோக்கித்தான் அமெரிக்க சென்று கொண்டிருக்கிறது, ஒருவேளை அப்படித்தான் செல்லவேண்டும் என்று உள்ளது போலும்.” என்று எழுதியுள்ளார்.

“Smoot-Hawley காப்புவரிக் கொள்கை பெருமந்த நிலையை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதன் கடும் போக்கிற்கு அது உதவியது, ஏனெனில் பரந்த பதிலடியை அது தூண்டிவிட்டிருந்தது. சீனாவில் ஏற்றுமதி உதவித் தொகைகள் இதேபோல் பதிலடி வட்டத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அதுவும் உலகப் பொருளாதார மீட்பு நலிவுற்ற நிலையில். இது ஒரு இடர்தான், ஆனால் துரதிருஷ்டவசமாக அமெரிக்கா அதைச் செய்யவேண்டியுள்ளது.”

சீனா “உலகப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அடிப்படை விதிகளை ஒருபொழுதும் உண்மையில் ஏற்றதில்லை”, மேலும் அது “தன்னுடைய தேவைகளுக்குக் கீழ்ப்படியும் ஒரு வணிக முறையைத்தான் விரும்புகிறது.” ஆனால் அமெரிக்காவோ தன்னுடைய சொந்த மேலாதிக்க நிலைமையைத் தக்கவைக்க முயல்கிறது, வணிக முறையைத் தன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள விரும்புகிறது. பெய்ஜிங் சுட்டிக்காட்டியுள்ளதுபோல், சமீபத்திய அமெரிக்கச் சட்டம், சீனாவை அதன் நாணய மதிப்பையொட்டி அபராதம் கொடுக்க வைப்பது என்பது WTO விதிகளுடன் பொருந்தாது.”

அமெரிக்கத தாராளவாதத்தின் போருக்குப் பிந்தைய ஒரு அடிப்படைப் பொருளாதார விதியை சாமுவல்சனின் கட்டுரை தலைகீழாக்குகிறது. அதாவது ஸ்மூத்-ஹாலி சட்டம் கொண்டுவந்த உங்கள் அண்டை நாட்டவரைப் பிச்சைக்காரர்கள் ஆக்குக என்ற கொள்கைக்கு மீண்டும் திரும்பக் கூடாது என்பதையாகும். ஆனால் போருக்குப் பிந்தைய முறைகள் மீண்டும் வருவதைத் தடுக்கும் வடிவமைப்புக் கொண்டிருந்தன. குறிப்பாக 1944 பிரெட்டன் வூட்ஸ் நிதிய முறை, அமெரிக்காவின் மாபெரும் பொருளாதார முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதுவோ இப்பொழுது சரிந்துவிட்டது. 1930களுக்கு பின்னர் மிக மோசமான பொருளாதா நெருக்கடிக் காலத்தில் வணிக அபராதங்கள் மீண்டும் திரும்புகின்றன.

முடிவுரையாக சாமுவல்சன் வணிகப் போர், சீன ஏற்றத்தை ஏற்பதோடு ஒப்பிடும்போது ஒரு குறைந்த தீமையைப் பிரதிபலிக்கிறது என்று வாதிடுகிறார். “உலக ஒழுங்கின் இரு கருத்தாய்வுகளுக்கு இடையே மோதல் என்பதுதான் இது. பழைய ஒழுங்கு முறையை முக்கியமாக வகுத்துப் பாதுகாத்தது என்ற முறையில் அமெரிக்கா ஒரு பயங்கரமான தேர்வை எதிர்கொள்கிறது. சீன விழைவுகளை தடுத்து அனைவரும் இழக்கும் வணிகப் போரை இடரைத் தோற்றுவித்தல் அல்லது பேசாமலிருந்து சீனா வணிக முறை அமைத்தலைச் செய்யவிடுதல். முதலாவது ஆபத்தாக இருக்கக் கூடும், ஆனால் பிந்தையதோ பேரழிவுத் திறன் கொண்டது.”

ஒருவேளை சாமுவல்சன் தன் கட்டுரைக்கு “உலகப் போருக்கு ஒரு நிதானமான திட்டம்” என்று பெயரிட்டிருக்க வேண்டும். ஸ்மூட்-ஹாலிச் சட்டம் இயற்றப்பட்டது ஏனைய நாடுகளிடமிருந்து வெள்ளமெனப் பதிலடி காப்புவரி நடவடிக்கைகளுக்கு வழிவகுத்தது, உலக வணிகத்தில் பேரழிவு கொடுத்த சரிவைக் கொடுத்தது. வணிகம் 1929ல் இருந்து 1933க்குள் 40 சதவிகிதம் குறைந்தது. தவிரவும் போட்டி நாணய முகாம்களையும் ஏற்படுத்தியது. வணிகப் போரின் துணைவிளைவு மீண்டும் ஆயுதங்களை விரிவாக்குதல், ஆசியா மற்றும் ஐரோப்பாவில் போட்டிகள், மோதல்களை பெருக்குதல் என இருந்து, இவை 1939ல் இரண்டாம் உலகப் போரில் உச்சக்கட்டத்தை அடைந்தன.

சீனாவின் யுவான் பற்றிய வாஷிங்டனின் கோரிக்கைகள் ஏற்கனவே ஒபாமா நிர்வாகத்தின் சமீபத்திய சீனச் செல்வைக்கைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஆக்கிரோஷ நடவடிக்கைகளின் இணைந்தவையாக உள்ளன. இவை தென்கொரியாவுடன் இராணுவக் கூட்டை அமெரிக்கா ஒருங்கிணைத்துக் கொண்டது, வடகிழக்கு ஆசியாவில் ஜப்பானுடன் இராணுவக் கூட்டைப் பெருக்கியது மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவுடனான தென் சீனக்கடல் பக்கங்களில் நிலப்பகுதி மோதல்களுக்கு ஆதரவு கொடுத்தது என்று வெளிப்பட்டுள்ளன. பொருளாதார வலிமை சரிந்துள்ள நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் பொறுப்பற்ற முறையில் அதன் எஞ்சியிருக்கும் இராணுவ வலிமையைப் பயன்படுத்தி அதன் போட்டியாளர்களை மிரட்டுகிறது. ஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரு போர்களை அமெரிக்கா நடத்தியுள்ளது. மத்திய ஆசியா, மத்திய கிழக்கில் முக்கிய ஆதாரச்செழிப்புடைய பகுதிகளில் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகும்.

ஒரு பேரழிவு தரக்கூடிய போரில் மூழ்குவதைத் தடுக்கக் கூடிய ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கம்தான். அமெரிக்க மற்றும் சீனத் தொழிலாளர்கள் தேசியவாதம், காப்புவரிக் கொள்கை என்னும் அரசியல் நச்சுக்களை நிராகரிக்க வேண்டும். அவைதான் அவர்களை அந்தந்த நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தாழ்த்தி வைத்துள்ளன. அவர்கள் ஒரு பொது வர்க்க நலன்களை பகிர்ந்து கொள்கின்றனர், மற்ற சர்வதேச தொழிலாளர்களும் இதில் அடங்குவர். இது சுரண்டல் தன்மை கொண்ட அடக்குமுறையான இலாபமுறையை அகற்றி உலகப் பொருளாதாரத்தை ஒரு சில செல்வந்தர்களின் இலாபங்களுக்கு என்று இல்லாமல் சமூகத்தின் நலன்களை சோசலிச வழிவகைகளில் பூர்த்தி செய்யும் விதத்தில் மாற்ற வேண்டும். இந்த முன்னோக்கிற்குத்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் உலகெங்கிலும் போராடுகின்றன.