World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Letter from Balmoral plantation workers to Indianapolis rank-and-file committee

இன்டியானாபொலிஸ் சுயாதீன உறுப்பினர்கள் குழுவுக்கு பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ஒரு கடிதம்

5 October 2010

Back to screen version

இந்தக் கடிதம் பெல்மோரல் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் ஆதரவாளர்களான இலங்கையில் உள்ள தொழிலாளர்களால் எழுதப்பட்டது. இந்தக் குழுவானது செல்வாக்குச் செலுத்தும் பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களால் தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட வறிய மட்டத்திலான சம்பள உடன்படிக்கைக்கு எதிராக போராடுவதற்காக 2009 செப்டெம்பர் மாதம் அமைக்கப்பட்டது. (பார்க்க, “இலங்கை: பெல்மோரல் தோட்ட நடவடிக்கை குழு சகல தொழிலாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள்””)

ஐக்கிய அமெரிக்க, இன்டியானாபொலிஸ் ஜெனரல் மோட்டர்ஸைச் சேர்ந்த சுயாதீன உறுப்பினர்கள் குழுவுக்கு,

அன்பின் தோழர்களே,

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஊடாக உங்களது போராட்டம் பற்றி அறிந்துகொண்டோம்.

இலங்கை, அக்கரபத்தனையில் உள்ள பெல்மோரல் தோட்ட தொழிலாளர் நடவடிக்கை குழுவின் சார்பில், தொழிற்சங்கத்தின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிராக சுயாதீன உறுப்பினர்கள் குழுவை அமைக்க நீங்கள் எடுத்த நடவடிக்கையையும் உங்களது போராட்டத்தையும் நாம் ஆதரிக்கின்றோம்.

எமது நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராவும், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக முதலாளித்துவ வேலை வழங்குவோருடன் சேர்ந்து கூட்டாக இயங்குகின்றன. இது மீண்டுமொருமுறை உங்களது போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது போராட்டம் எங்களை மேலும் ஊக்குவிக்கின்றது. தொழிலாளர்கள் தமது உரிமைகளைக் காக்க உலகம் பூராவும் ஐக்கியப்பட வேண்டும்.

2009 செப்டெம்பரில் எங்களது போராட்டத்தை காட்டிக்கொடுத்த தொழிற்சங்கங்களுக்கு எதிராக, எங்களது சம்பளப் போராட்டத்தின் போது பெல்மோரல் தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை நாம் அமைத்தோம். அதன் பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவம், பெருந்தோட்ட நிர்வாகம் மற்றும் பொலிசாரிடமிருந்தும் நாம் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டோம். உள்நாட்டிலும் மற்றும் அனைத்துலகிலும் உள்ள ஏனைய தொழிலாள வர்க்கத்திடமிருந்து தனித்து நின்று எங்களால் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள முடியாது.

தொழிலாளர்களாகிய நாம் ஒரு அனைத்துலக வர்க்கம் என்ற முறையில் தேசிய, இன, நிற, மொழி, பால் மற்றும் மத வேறுபாடுகளைக் களைந்து ஐக்கியப்பட வேண்டும். அந்த முறையில் ஐக்கியப்பட்டு எம்மால் முதலாளித்துவ எதிரிகளின் தாக்குதலை தோற்கடிக்க முடியும்.

உங்களது போராட்டத்தை மீண்டுமொருமுறை பாராட்டுகிறோம்.

வாழ்த்துக்களுடன்,

வி. தன்ராஜ், தலைவர், பெல்மோரல் தோட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழு
பி. துரைராஜ்
பி. மஹேந்திரன்