World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass protests shake French government

பிரெஞ்சு அரசாங்கத்தை உலுக்கும் வெகுஜனப் போராட்டங்கள்!

By Alex Lantier
13 October 2010

Back to screen version

பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு தொழிற்துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடருவதற்கு வாக்களித்தனர்.

''தீவிரமயப்படுதலின்'' அழுத்தத்தின் மத்தியில், அதாவது இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது தொழிற்சங்கங்கள் மற்றும் பூர்சுவா ''இடது'' கட்சிகளின் பிடியிலிருந்து தப்பித்துவிடும் என்று பரவலாக பரவிய பயத்தின் காரணமாக தொழிலாள வர்க்கத்தினருக்கும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபனத்திற்கும் இடையில் மோதலை ஏற்படுத்துகிறது.

முழு ஓய்வூதியத்தோடு ஓய்வு பெறும் வயது வரம்பை 65 லிருந்து 67 ஆக உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இப்போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்தன. மேலும் குறைந்தபட்ச ஓய்வு வயதும் 60 லிருந்து 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் முக்கியமான பிரிவுகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வாரத்தில் எஞ்சியுள்ள அம்சங்களை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பை நடத்த பிரெஞ்சு செனட் சபை உள்ளது.

மிகப்பெரியளவில் அடுத்து மேற்கொள்ளவுள்ள கடுமையான நடவடிக்கைகளின் முதல்கட்ட நடவடிக்கையே இது என்று கூறும் சார்க்கோசி, இந்த சீர்திருத்தங்களை அரசாங்கம் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். அரசாங்கத்திடமிருந்து வரும் கோரிக்கைகள், அதன் தெளிவான அரச கொள்கையின் நீதியை அம்பலப்படுத்தியுள்ளன. தொழிலாளர்கள் வெட்டுக்களை சந்திக்கும் அதே நேரத்தில் வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் பிணையெடுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இத்தகைய வெட்டுக்களை முன்னெடுக்கும் பொறுப்பிலுள்ள தொழிலாளர்கள் துறை அமைச்சர் எரிக் வோர்த், பில்லியனார் லிலியன் பெத்தன்கூர் உடன் ஊழல் உறவுகளை வைத்துக்கொண்டு, அவர் பல பில்லியன் யூரோ வரியை திரும்பப் பெற உதவுகிறார்.

மக்களில் பெரும்பான்மையானோர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதோடு, சார்க்கோசியின் சீர்திருத்தங்களையும் எதிர்க்கிறார்கள். Le Parisien க்காக நடத்தப்பட்ட CSA கருத்துக் கணிப்பில், மக்களில் 69 சதவிகிதத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்பதுடன், 61 சதவிகிதத்தினர் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடத்த ஆதரவாக இருப்பதும் தெரியவந்தது. மற்றொரு கருத்துக்கணிப்பில் 69 சதவிகிதத்தினர் சார்க்கோசியை அங்கீகரிக்காததும் தெரியவந்தது. போராட்டங்களின் அளவைக்குறைக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன. முந்தைய காலங்களின் நடவடிக்கைகளைப் போன்றே போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை குறைவாக மதிப்பிட்டு வெளியிட்டனர். 1.2 மில்லியன் பேரே போராட்டத்தில் கலந்துகொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் மார்செயிலுள்ள ஒரு போலீஸ் தொழிற்சங்கமே, இந்த மதிப்பீடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியதால், போலீசே பரிகாச பார்வைக்குள்ளானது. பாரிசில் நடைபெற்ற போராட்டத்தில் கூட போலீஸ் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன.

முந்தைய நாட்களில் நடந்ததைவிட மிக அதிகமானோர் கலந்துகொண்டனர் என்பதை அனைத்து வட்டாரங்களில் உள்ளவர்களும் ஒப்புக்கொண்டனர். தொழிற்சங்கங்கள் கூறியபடி, பாரிசில் 330,000 பேர் கலந்துகொண்டுள்ளனர். மார்செயில் 230,000 பேர்; துலூஸில் 145, 000 பேர்; போர்தோவில் 130,000 பேர்; நாந்தில் 95,000 பேர்; றுவான், மோன்பெலியே மற்றும் கிறனோபிள் ஆகிய ஒவ்வொரு இடத்திலும் தலா 70,000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

வேலை நிறுத்த நடவடிக்கையை தொடருவதா வேண்டாமா என்பது குறித்து வாக்களிப்பதற்காக தொழிலாளர்கள் பல வேலை செய்யும் இடங்களில் பொது சபைகளில் (general assemblies) இன்று காலை கூடவுள்ளனர். Total எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், SNCF தேசிய இரயில்வேக்கள் மற்றும் RATP பாரிஸ் பொது போக்குவரத்து நிறுவனங்களின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து மேற்கொள்ள நேற்றிரவு வாக்களித்துள்ளனர். மார்செய் துறைமுகத்தில் நடைபெற்று வரும் வேலை நிறுத்தமானது எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் மறு விநியோகத்தை ஏற்கனவே தடுத்துவிட்டதோடு, எரிவாயுவை வாங்குவது குறித்த பீதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், பொது போக்குவரத்து வேலை நிறுத்தம் நீடித்தால் பொருளாதாரத்தின் பெரும் பகுதிகள் ஸ்தம்பித்துப் போவதற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்திவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த போராட்டங்களில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கூட அதிக அளவில் பங்கேற்றுள்ளதோடு, 300க்கும் அதிகமான உயர்நிலை பள்ளிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தொழிற்சங்கங்களால் பரந்த எதிர்ப்பை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதால்தான் அரசாங்கத்தினால் சட்டத்தை சட்டப்புத்தகத்திலேயே வைத்திருக்க முடிகிறது என்று ஆளும் வர்க்கம் தற்போது நம்புகிறது. இந்த சட்டம் ஒரு தற்காலிகம்தான் என்றும், சட்டத்தை திருத்தியமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் கன்சர்வேட்டிவ் சட்டத்தை உருவாக்குபவர்களிடம் பிரதமர் பிரான்சுவா பியோன் நேற்று கூறியுள்ளார். ஆகவே, "நம்முடைய இப்போதைய தேவை அமைதியாக இருப்பதும், யாரையும் ஆத்திரமூட்டாமல் இருப்பதும்தான்" என்றும் அவர் விளக்கியுள்ளார். இருந்தபோதிலும், " தீவிரமயமாதல் ஆபத்தும், அவ்வப்போது வன்முறையும் கூட வெடிக்கலாம்" என்ற அச்சம் எலிசே ஜனாதிபதி மாளிகை வட்டாரத்தில் நிலவுவதாக, அந்த வட்டாரத்தை மேற்கோள்காட்டி பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை எழுதியுள்ளது.

பாரிய அரசியல் அச்சுறுத்தலை தாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை ஆளும் வர்க்கம் நன்றாகவே அறிந்துள்ளது. இது தொடர்பாக L'Est Républicain பத்திரிகை எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பத்தியில், "சமூக கிளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் தற்போது காணப்படுகின்றன: அதாவது ஒரு பெரும் வெகுஜன ஆதரவற்ற அரசு, அநீதியாக கருதப்படும் ஒரு சீர்திருத்தம், நெருக்கடியால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக மக்களிடம் ஏற்பட்டுள்ள எண்ணம், தொடரும் வேலைவாய்ப்பின்மை, ஆர்ப்பாட்டத்தை விரும்பும் உயர்நிலை பள்ளி மாணவர்கள்." வன்முறை வெடிக்கலாம் என்று கூறும் அந்த பத்திரிகை, “ஒரு சகாப்தம் முடியப்போகிறது என்பதை அறிந்திருக்கும் தொழிலாளர்கள், தங்களது சமூக தேட்டங்களை தக்கவைத்துக்கொள்ள போராடி வருகின்றனர்.” என்றது.

1968 ஆம் ஆண்டு மே - ஜூனில் நடந்த மாணவர்கள் போராட்டம் மற்றும் பொது வேலை நிறுத்தத்தால் பிரெஞ்சு அரசியலமைப்பு "இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது" என்று அதிக வெளிப்படையாக ஃபைனான்சியல் டைம்ஸ் எழுதியுள்ளது. தொழிலாள வர்க்கத்தினரிடையே அதிகரித்த விரக்தியால் தொழிற்சங்கங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டன. மீண்டும் நடத்தப்பட்ட ஒரு நாள் போராட்டங்கள், சார்க்கோசியின் வெட்டைத் தடுத்து நிறுத்த எதையும் செய்துவிடவில்லை. "வெறுமனே வீதிகளில் சுற்றித்திரிவதினால் விரக்தியுற்றுள்ளனர்" தொழிலாளர்கள், என்று கூறுகிறார் GGT அதிகாரி ஜோன்-பியர் டெலானாய், இவரே ஒரு உயர்நிலை அதிகாரத்துவ அதிகாரிதான்.

தொழிலாளர்கள் நிதியப் பிரபுத்துவத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால், அவர்கள் அடிப்படையான அரசியல் கேள்விகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த நிதியப் பிரபுவத்துவக் கொள்கையை தோற்கடிப்பதற்கான புறநிலையான சமூக சக்தியைக் கொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்தினர், அவற்றுக்கு எதிராக உறுதியான அரசியல் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களை தொடங்கியே தீரவேண்டும். இருந்தாலும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரதான இடராக, தற்போதுள்ள தொழிற்சங்கங்களினதும் கட்சிகளினதும் திவால் நிலையும், மேற்கூறிய வெட்டுகளுக்கான எதிர்ப்பானது ஒரு மோசடியாக இருப்பதும்தான்.

சார்க்கோசிக்கு தெரிவிக்கப்படும் பரந்த எதிர்ப்பின் மத்தியில், தொழிற்சங்கங்களும், ஸ்தாபனக் கட்சிகளும் அவ்வப்போது நடத்தும் திறனற்ற போராட்டங்களின் முகமூடிக்குள் மேற்கூறிய வெட்டுக்கான தங்களது ஆதரவை மறைத்துக்கொள்கின்றன. இதில் தொழிலாள வர்க்கத்தின் வரவிருக்கும் போராட்டங்களில் முதலாளித்துவத்திற்கு பிரதான ஆதாயம் அடங்கியுள்ளது: அதாவது தற்போதுள்ள அரசியல் கட்சிகளின் மூலமாக வேலை நிறுத்தங்கள் மீதான அதன் அரசியல் கட்டுப்பாட்டை கொள்ளமுடிகிறது. மீண்டும் நடத்தப்படும் மீள்பேச்சுவார்த்தை மூலம் வெட்டுக்களை "மேம்படுத்தலாம்"என்று அரசாங்கம் பரப்பும் மாயையுடன், வேலை நிறுத்தங்களை முன்னெடுக்கவும், அவை ஒரு அரசியல் போராட்டமாக உருவெடுப்பதை தடுக்கவும் அவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதே அதன் நோக்கம்.

சோசலிஸ்ட் கட்சியின் (PS) வஞ்சகமான நிலை தெளிவான உதாரணமாக உள்ளது. தற்போது சார்க்கோசியை விமர்சிக்கும் அதன் செயலாளர் மார்ட்டின் ஒப்ரி, "மோதல் அச்சுறுத்தல்" குறித்தும் எச்சரிக்கிறார். ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்து சார்க்கோசிக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். இருந்தாலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கிரேக்க கடன் நெருக்கடியின் போது, ஓய்வு பெறும் வயதில் இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதிய வயதை அதிகரிக்க ஒப்ரி பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தார். - இது அவரது கட்சி ஆட்சிக்கு வரும்போது எடுக்கும் வலதுசாரி நிலைப்பாட்டோடு பொருந்துகிறது -

சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கு ஆதரவு தெரிவித்து கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தற்போதைய தலைவரான டொமினிக் ஸ்ட்ராஸ்-கான், சோசலிஸ்ட் கட்சியின் (PS) 2012 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி வேட்பாளராக இருக்கக்கூடும் என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்த வெட்டானது, ஓய்வூதியத்திற்கான செலவினத்தில் 15 சதவிகிதத்தை குறைப்பதால் அது அரசின் வரவு-செலவுப் பற்றாக்குறையை குறைத்து, பிரெஞ்சு நிறுவனங்களின் சர்வதேச போட்டி மற்றும் இலாபத்தை அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை புகழ்கிறது. இந்த வசந்த காலத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியின்போது கிரேக்கத்தின் மீது இதைவிட மிக கடுமையான வெட்டை திணித்ததில் ஸ்ட்ராஸ்-கான் மற்றும் IMF முக்கிய பங்காற்றினர்.

இதே சமூக சிக்கன பாதுகாப்பிற்கு எதிரான ஒரு தீர்மானமான போராட்டத்தை நடத்துவதற்கான தொழிற்சங்கங்களின் பகிரங்கமான மறுப்பு அடிக்கோடிட்டு காட்டப்படுக்றது. CGT யின் செயலாளர் பேர்னாட் திபோ, Libération க்கு கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில்," பொது வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு எனக்கு முற்றிலும் புரியாத அருவமான கோஷமாக உள்ளது. ... ஒருவர் சமூக சக்திகளுக்கிடையே உள்ள உறவை அதிகரித்துக்கொள்ளும் வழி இதுவல்ல" என்று விளக்கி உள்ளார்.

"மே மாதத்திலிருந்தே அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்வேறு வழிகளில் பல மில்லியன் தொழிலாளர்கள் ஏற்கனவே கலந்துகொள்ள, தற்போதைய போராட்டங்கள் அனுமதித்துள்ளன" என்று திபோ மேலும் கூறுகிறார். இருந்தபோதிலும், "பேச்சுவார்த்தைகளை முற்றிலும் மீண்டும் தொடங்குவதற்கான" - அதாவது ஓய்வூதிய வெட்டுக்களின் தற்போதைய சுற்றை உருவாக்கிய சார்க்கோசியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திரும்பவேண்டும் என்ற - திட்டத்தை மட்டுமே திபோ தெரிவிக்க முடியும். பொது வேலை நிறுத்தத்திற்கான அவரது எதிர்ப்பு, அவரது நிலைப்பாட்டின் ஒரு முக்கியமான அறிகுறி: அதாவது ஓய்வூதிய வெட்டுத் திட்டத் தயாரிப்புக்கு உதவியதால், அவற்றுக்கு எதிரான நீண்ட போராட்டத்தை அவர் எதிர்க்கிறார்.

Le Monde எழுதுகிறது இவ்வாறு: அனைத்து விலைகளையும் கொடுத்து தீவிரமயப்படுதலை தவிர்க்க பேர்னார்ட் திபோ விரும்பும் சூழ்ச்சி அங்கே உள்ளது. அப்படியான ஒரு இயல்பான கட்டுப்படுத்த முடியாத தீவிரமயப்படுதலானது, அரச தலைமையின் பிடிவாதத்தை வெற்றிக்கொள்ளலாம் என்று தொழிலாளர்களை நம்ப வைத்து, CGT உருவாக்க விரும்பும் நம்பகத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ அதிகாரத்திற்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்திவிடலாம்.

இது புறநிலைரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான அரசியல் எதிர்ப்பில் CGT யை வைத்துள்ளது. செனட் சபையால் இந்த சட்டம் சரியாக நிறைவேற்றப்பட்ட பின்னர், முற்றிலும் தோல்வியடைந்த "எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொள்வதில்" அதிருப்தியுற்றதால், அந்த சட்டத்திற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்தகைய பரவலான அதிருப்தி தொழிலாள வர்க்கத்தின் பெரும்பான்மை பிரிவினரிடையே கோபம் மற்றும் போராளித்தனத்தை அதிகரிக்க வைத்தது. சார்க்கோசி, PS, தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது "இடது" ஆதரவாளர்கள் உள்ளிட்ட முதலாளித்துவ அமைப்புக்கு ஆதரவான அனைவருடனும் நேரடியான மோதலுக்கு தொழிலாளர்களை கொண்டுவருவதுதான் இந்த எதிர்ப்பிற்கான காரணம்.

பிரான்சில் எழுந்துள்ள தொழிலாள வர்க்கத்தின் இந்த எதிர்ப்பு உலகம் முழுவதுவதிலுமுள்ள தொழிலாளர்களிடம் காணப்படும் மாபெரும் தீவிரமயமாதலின் ஒரு பாகமே. இருந்தாலும் இந்த எதிர்ப்பு வெற்றிபெற, பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் இலாப நலன்களுக்கு கீழ்படுத்தப்படும் உலக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சுயாதீனமான அரசியல் வடிவத்தை எடுக்கவேண்டும்.

தொழிலாளர்களுக்கும், ஒட்டுமொத்த அரசியல் அமைப்புக்கும் இடையேயான சமூக இடைவெளி, சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒரு புதிய கட்சியை தோற்றுவிப்பதற்கான சாத்தியத்தையும், தேவையையும் காண்பிக்கிறது. தொழிலாள வர்க்கத்தினரின் புரட்சிகர கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்ப உதவுமாறு உலக சோசலிச வலைத் தளம் பிரான்சிலும் உலகம் முழுவதுவதிலுமுள்ள தொழிலாளர்களை ஊக்குவிக்கிறது.