World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Millions demonstrate in France against pension cuts

பிரான்சில் ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக மில்லியன்கணக்கானோர் போராட்டம்

By Kumaran Ira
14 October 2010

Back to screen version

ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக அக்டோபர் 12 ஆம் தேதியன்று பிரான்ஸ் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத் துறை மற்றும் தனியார் துறையில் ஏறக்குறைய அனைத்து தொழிற் பகுதியுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. பிரான்ஸ் முழுவதும் 250 இடங்களில் நடைபெற்ற இந்த போராட்டங்களில், 3.5 மில்லியன் வரையிலான ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்துகொண்டதாக தொழிற்சங்கங்கள் மதிப்பிட்டுள்ளன.

ஓய்வூதிய வெட்டுக்கு எதிராக செப்டம்பர் தொடக்கத்திலிருந்து அமியானில் நடைபெற்ற போராட்டங்களில், அக்டோபர் 12 ல் நடைபெற்ற போராட்டம் தான் நான்காவது மற்றும் மிகப்பெரிய போராட்டமாகும். தொழிற்சங்கங்களால் சனிக்கிழமையன்றும் இன்னொரு போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஸ்ராலினிச தொடர்பு CGT (General Confederation of Labour) மற்றும் சோசலிஸ்ட் கட்சி தொடர்புடைய CFDT (French Democratic Confederation of Labour) போன்ற பிரான்ஸின் முக்கிய தொழிற்சங்கங்களால் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த முறை 300 க்கும் அதிகமான உயர் நிலைபள்ளிகளுடன், ஏராளமான எண்ணிக்கையிலான மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறைந்தபட்ச ஓய்வு வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தியது, முழு ஓய்வூதியத்துடன் ஓய்வு பெறும் வயதை 65 லிருந்து 67 ஆக உயர்த்தியது உள்ளிட்டவை ஓய்வூதிய குறைப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு முக்கிய நடவடிக்கைகளுக்கும் பிரெஞ்சு செனட் சபை ஏற்கனவே ஒப்புதல் அளித்த பின்னரே இந்த போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

மார்செயில் போராட்டம்: தற்போது மார்செயில் நடைபெற்று வரும் துறைமுக போராட்டத்தினால், டஜன் கணக்கான பெட்ரோல் டாங்கர்கள் எண்ணெயை இறக்க முடியாமல், எரிபொருள் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டு, பொருளாதாரம் இன்னும் அச்சுறுத்தப்படுகிறது. பிரான்சின் பெருநிலப் பரப்பிலுள்ள 12 சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. பொது போக்குவரத்து மற்றும் எரிசக்தி துறை உட்பட சில துறைகள் வேலை நிறுத்தம் தொடருவதற்கு வாக்களித்தன.

இந்த போராட்டத்திற்கு அணிதிரண்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சாதனை மற்றும் பெருமளவிலான மக்கள் ஆதரவுக்கிடையேயும் - 69 சதவிகிதத்தினர் ஆதரவு இருப்பதாக ஒரு வாக்கெடுப்பு கண்டறிந்துள்ளது - அரசாங்கம் தனது நிலையில் உறுதியாக உள்ளது. அரசாங்கம் அரசியல் ரீதியாக உறுதியான அதிருப்தி மற்றும் போராளித்தன வெளிப்பாட்டை தொழிலாள வர்க்கத்தினரிடமிருந்து எதிர்ப்பு அதிகரிப்பதை தடுக்க தொழிற்சங்கங்களை நம்பியுள்ளது.

ஓய்வூதிய சீர்திருத்தத்தில் எவ்வித சலுகையும் கிடையாது என அக்டோபர் 13 ஆம் தேதியன்று திட்டவட்டமாக அறிவித்த சார்க்கோசி," இந்த சீர்திருத்தம் மக்கள் சிலரை அதிருப்தியடையச் செய்யலாம் என்பது இயல்பானதுதான். ஆனால் ஓய்வூதியங்கள் அமைப்பு முறையை நாம் காப்பாற்றியுள்ளோம் என்பதை மக்கள் இன்னும் சில ஆண்டுகளில் உணர்ந்துகொள்வார்கள்" என்றார்.

நாடு முழுவதும் நடந்த பல்வேறு போராட்டங்களில் உலக சோசலிச வலைத் தள (WSWS) ஆதரவாளர்கள் கலந்துகொண்டு "சமூக சிக்கன நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய சோசலிச முன்னோக்கின் தேவை" என்ற தலைப்பிலான துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

வெட்டுகளுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, இச்சட்டத்தை அரசாங்கம் திரும்பப்பெறும் வரை போராட்டத்தை தொடர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

மார்செயில் நடந்த போராட்டத்தில் சமூக பாதுகாப்பு அதிகாரிகள், தாதிகளுடன் தன்னாட்சி துறைமுகங்களின் முகவர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்களும் பங்கேற்றனர். தனிப்பட்டவர்களாக வந்தவர்கள் வெகு குறைவாக இருந்தது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்களிடையே வெட்டுக்களை நிறுத்த ஒருநாள் போராட்டம் போதாது என்ற உணர்வு வெளிப்பட்டதை உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் கண்டறிந்தனர்.

மார்செய் ஆர்ப்பாட்டத்தின் போது 18 வயதான இரண்டாவது ஆண்டு என்ஜினியரிங் மணவரான எடி கூறுகையில, "சார்க்கோசியின் சமூக சிக்கன திட்டத்திற்கு எதிராக போராடுவது சாத்தியமானதே. அவர்கள் அவர்களது வாதங்களை கூறுகிறார்கள். ஆனால் நாமும் நமது வாதங்களைக் கூற முடியும், நமது வாதங்கள் போதுமான அளவில் கேட்கப்படவில்லை. தனிப்பட்டவர்களின் மீதான போலீஸ் அடக்குமுறையை அடிப்படையாகக்கொண்டதுதான் சார்க்கோசியின் அரசியல்" என்று தெரிவித்தார்.

அவர் மேலும் விளக்குகையில், " சார்க்கோசி சட்டங்களை வைத்து செயல்பட விரும்புகிறார், ஆனால் நீங்கள் பிரச்சினையின் ஆணி வேருக்கு செல்ல வேண்டியதுள்ளது. மக்கள் வறுமையில் வாடுவதால் கோபத்துடன் உள்ளனர். ஓய்வு பெறுவதில் மற்ற நாடுகளில் உள்ள கொள்கையையே சார்க்கோசியும் கொண்டிருக்கிறார்- ஆனால் ஐரோப்பாவிலேயே நாம் தான் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருக்கிறோம். ஓய்வூதிய முறைக்கு நிதியை பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உற்பத்தித்திறன் நான்கு மடங்காகி உள்ளதால் அது அதிகரித்துள்ளது. அங்கே பணம் இருக்கிறது. ஆனால் அது பங்குகளை வைத்திருப்பவர்களிடத்தில் செல்வதற்குப் பதிலாக தொழிலாளர்களுக்கும், ஓய்வூதிய முறைக்கும் செல்ல வேண்டும்" என்றார்.

ஒலிவியே என்ற 24 வயதுடைய கம்ப்யூட்டர் விஞ்ஞான மாணவர் கூறுகையில், " சார்க்கோசியின் பதவிக் காலம் தொடங்கியதிலிருந்தே தொழிற்சங்கங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடந்தபோது, அதனை நிறுத்துமாறு CGT அழைப்புவிடுத்தது. அப்போது டக்ஸிக்களோ அல்லது அதிகாரிகளோ தாக்கப்பட்டபோதிலும், தொழிற்சங்கங்கள் எதுவுமே செய்யவில்லை. அவர்கள் அவர்களது பணியை செய்யவில்லை. இன்றும், நாம் போராட்டத்தில் இருக்கிறோம். ஆனால் CPE (First Job Contract protests in 2006) ல் செய்ததைப் போன்றே நம்மை கோழைகளாக்கப் போகிறார்கள் என்பது நமக்கு தெரியும். அரசாங்கம் ஒரு அடி பின் எடுத்துவைத்தால், பின்னர் இரண்டு அடிகளை முன்னெடுத்து வைக்கிறது. தொழிற்சங்கங்கள் ஆரம்பத்திலிருந்தே உரிமைகளை கைவிட்டுவிட்டன" என்றார்.

"தொழிற்சங்கத் தலைவர்களை தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் நலன்களை உண்மையாகவே பாதுகாக்கிற தொழிற்சங்கங்களை வைத்திருப்பதே நல்லதாக இருக்கும்" என்று ஒலிவியே மேலும் கூறினார்.

பசுமைக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், "சார்க்கோசியை பின்வாங்க செய்ய நமக்கு இன்னும் அதிகமான மக்களும், தொழிற்சங்கத்தில் அல்லாதவர்களும் தேவைப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கிடையிலும் சார்க்கோசியின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். தேர்தல் காரணங்களுக்காவே அவர்கள் ரோமாக்ககளை வேட்டையாடுகிறார்கள்.

பாரிஸில் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பிரிவில் பங்கேற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களான குகோ மற்றும் ஜூலியன் ஆகியோர், வெட்டுக்களிலிருந்து அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை என்றே தாங்கள் கருதுவதாக கூறினர். சீர்திருத்தங்களுக்கு எதிரான உயர்நிலைப் பள்ளிகளின் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கிடையேயும் அரசாங்கம் அதனை முற்றிலும் புறம்தள்ளிவிட்டது. போராட்டங்களை தொடர்ந்து நடத்தவும், "பொருளாதாரத்தை ஆபத்தில் நிறுத்தவும்" முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

SUD தொழிற்சங்கங்களின் உறுப்பினரும் ரயில்வே தொழிலாளருமான டேவாக்ஸ் என்பவர் கூறுகையில், "சார்க்கோசி நமது சமூக ஆதாயங்களை தாக்கிக்கொண்டிருக்கிறார், நாம் அதனை தடுத்தாக வேண்டும். ஓய்வூதிய நிதிக்கு பிரான்ஸிடம் போதுமான பணம் உள்ளது. பேச்சுவார்த்தையை மறுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

ஓய்வூதிய வயது 60 ஆக தொடரவேண்டும் என்ற நோக்கமுடைய நமது போராட்டத்தை நாம் நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் அரசாங்கம் உண்மையான சலுகைகளை அளிக்கும். பொது வேலை நிறுத்தம் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்திக்கும். தனியார் துறையை நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் வேலை இழப்பிற்கும் மற்றும் சம்பள இழப்புக்கும் ஆளாகுவோம் என்று அவர்கள் பயப்படுவதுதான்" என்றார்.

அமியானில், 10,000 க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏறக்குறைய அந்த நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களிலுள்ள ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிகளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், "ஆயுதம் ஏந்துவோம்" என்று அவர்களில் சிலர் பாடிய கீதத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குட்இயர் (Goodyear) இல் 11 ஆண்டு காலம் பணியாற்றும் டெக்னீசியனான மேகிட் தனது மகனுடன் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டார். அவர் கூறுகையில், " நான் தொழிற்சங்கவாதி அல்ல. ஆனால் ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு பணிமனையிலிருந்து இலேசாக வந்துவிட முடியாது. முதலாளித்துவத்தை தூக்கி எறிய PS மற்றும் இடதுசாரிகள் திட்டமிடவில்லை, CGT யின் தேசிய கண்ணோட்டத்தை நான் எதிர்க்கிறேன். வங்கிகளுக்கு கொடுத்து தீர்ப்பதற்காக, கிரேக்கத்தின் (சமூக ஜனநாயக அரசாங்கம்) மீது திணித்த கடுமையான வெட்டைப் போன்றே ஒன்றை PS அரசாங்கமும் செய்யும்.