World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

UAW: Reform or rebellion?

ஐக்கிய கார் தயாரிப்பு தொழிலாளர் சங்கம்: சீர்திருத்தமா அல்லது கிளர்ச்சியா?

Jerry White
18 October 2010

Back to screen version

அமெரிக்காவில் ஐக்கியக் கார்த் தொழிலாளர் சங்கத்திற்கு எதிராக கீழ்மட்டத் தொழிலாளர்களின் பெருகிய கிளர்ச்சி வந்துள்ளது. சமீபத்திய வாரங்களில் இந்தியானாபொலிஸிலுள்ள GM முத்திரையிடல் ஆலைத் தொழிற்கூடத் தொழிலாளர்கள் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கம் கொண்டு வர முயன்ற 50 சதவிகித ஊதிய வெட்டிற்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர். டெட்ரோயிட் புறநகரிலுள்ள லேக் ஓரியன் ஆலைத் தொழிற்கூடத்திலுள்ள தொழிலாளர்கள் ஒப்புதல் வாக்குக் கூட இல்லாமல் ஊதியங்களைப் பாதியாகக் குறைத்த ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்தின் உடன்பாட்டிற்குச் சீற்றம் மிகுந்த எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியானாபொலிஸிலுள்ள தொழிலாளர்கள் GM முத்திரையிடல் ஆலை கீழ்மட்டத் தொழிலாளர்கள் குழுவை அமைத்து ஏனைய தொழிலாளர்களும் இந்த உதாரணத்தைப் பின்பற்றி ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கத்திடமிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டமைக்குமாறும் தங்கள் வேலைகளைப் பாதுகாப்புதற்குப் போராடுமாறும், கடந்த ஆண்டு ஒபாமா நிர்வாகமும் ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கமும் சுமத்திய இரு அடுக்கு ஊதிய முறையை மாற்றுவதற்குப் போராடுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதேபோன்ற காட்டிக்கொடுப்புக்களை பெருநிறுவன மற்றும் அரசாங்கச் சார்பு தொழிற்சங்கங்களால் நடத்தப்பட்ட அனுபவத்தையடுத்து கீழ்மட்டத் தொழிலாளர்கள் குழு அமைக்கப்படுவது அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் உள்ளத்தில் ஆழ்ந்த ஏற்புத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய கிளர்ச்சியானது பெருநிறுவன மற்றும் செய்தி ஊடக ஸ்தாபனங்களில் பெரும் கவலையைத் தோற்றுவித்துள்ளது. ஐக்கிய கார்த் தொழிலாளர் சங்கமானது தொழிலாளர்கள் மீது தன்னுடைய பிடியை இழக்கிறதோ என்ற அச்சம் அவற்றிற்கு ஏற்பட்டுள்ளது. “அதிர்ச்சிக்கு உட்பட்டுள்ள தொழிலாளர்கள் ஓரியன் ஆலையை எப்படி உயர்மட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் நலன்களைப் பிரதிபலிப்பதில்லை என்பதற்கு உதாரணமாக மேற்கோளிடுகின்றனர்” என்று டெட்ரோயிட் Free Press சமீபத்திய முதல் பக்கக் கட்டுரையில் எழுதியது. “கடந்த ஆண்டு போர்ட் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை நிராகரித்தது, மற்றும் கடந்த வாரம் இந்தியானாபொலிஸில் GM முத்திரையிடல் ஆலைத் தொழிலாளர்கள் நிராகரித்தது ஆகியவை தலைமையுடன் முறித்துக் கொள்ள தொழிலாளர்கள் அஞ்சவில்லை என்பதைக் காட்டுகிறது.”

டெட்ரோயிட் நியூஸ் கருத்து ஒன்றின்படி, பல இதழ்களில் வெளிவரும் கட்டுரையாளர் Dan Calabrese தன்னுடைய வாசகர்களுக்கு பெரும்பாலான கார்த் தொழிலாளர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பது குறித்த குறிப்பை அறிய உலக சோசலிச வலைத் தளத்தைப் படிக்குமாறு கூறினார். “WSWS உடைய கருத்துப்படி, UAW தான் கறைபடிந்த தந்திரங்களைக் கையாண்டு, வறிய, முற்றுகைக்குட்பட்ட தொழிலாளர்களை நிர்வாகத்திற்கு அடிபணிய மிரட்டுகிறது” என்று அவர் எழுதியுள்ளார்.

UAW தலைவர் பாப் கிங் “ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கைக்கூலி” என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் Dan Calabrese கேலியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கீழ்மட்டத் தொழிலாளர்களுக்கும் UAW க்கும் இடையேயுள்ள மோதல் ஒரு முக்கியமான மூலோபாய வினாவை எழுப்புகிறது: அதாவது கார்த் தொழிலாளர்கள் UAW வைத் திருத்துவதற்குப் போராடவேண்டுமா அல்லது தொழிற்சங்கத்துடன் முறித்துக் கொண்டு போராட்டத்திற்காக புதிய அமைப்புக்களைக் கட்டமைக்க வேண்டுமா?

பல முன்னாள் மற்றும் தற்போதைய UAW அதிகாரிகள், Soldiers of Solidarity நிறுவனர் Greg Shotwell மற்றும் அவருடைய Labor Notes இன்னும் போலி “இடது அமைப்புக்கள்” அதாவது சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு போன்றவற்றிலுள்ள ஆதரவாளர்களும் தொழிலாளர்களும் UAW உடன் முறித்துக் கொள்ளக்கூடாது, மாறாக அதைச் சீர்திருத்த முயல வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை UAW யின் அமைப்பிற்குள் இருந்தாலொழிய எந்தப் போராட்டமும் நடக்க இயலாது அல்லது நெறியுடன் நடைபெறாது என்ற கருத்து உள்ளது.

இது தொழிலாளர்களைப் பொறுத்த வரை உறுதியான இன்னும் பல தோல்விகளைக் காண்பதற்கான சூத்திரம்தான்!

இந்த வழிவகையை ஒத்து இருப்பதுதான் லேக் ஓரியன் தொழிலாளர்கள் பற்றிய ஷாட்வெல்லின் கருத்தும், அவர் தொழிலாளர்களை UAW அதிகாரிகளிடம் முறையிடுங்கள் என்று வலியுறுத்தும் விதத்தில், “அவர்களுக்கு அவர்களுடைய முதல் கடமை உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய அடிப்படைச் சட்டங்களுக்கும் என்பது பற்றிய நினைவுறுத்தல் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டுமின்றி, கடந்த 30 ஆண்டுகளாக நடப்பவற்றைக் காண்போருக்கு, UAW அதிகாரிகள், தொழிலாளர்களின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் செலுத்த வேண்டிய “கடமை” பற்றிய நினைவுறுத்தலுக்குக் கட்டுப்படுபவர் என்னும் கூற்று தங்களை ஏமாற்றிக் கொள்ளுதல் என்பது மட்டுமில்லாமல் பிறரையும் சிதைவிற்கு வேண்டுமேன்றே உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என்பது நன்கு புலனாகும்.

UAW மற்றும் அதனது உத்தியோகப் படையும் நீண்ட காலமாக தொழிலாளர்களுக்காக உழைக்காமல், நிர்வாகங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தான் உழைத்து வருகின்றனர். இவ்விதத்தில்தான் ஆயிரக்கணக்கான பணிப் பிரதிநிதிகள், பிராந்திய இயக்குனர்கள், உள்ளூர் அதிகாரிகள் இன்னும் பிற UAW உத்தியோகத்தர்கள் தங்கள் ஆறு இலக்க சம்பளங்கள், பிற சலுகைகளைப் பெறுகின்றனர். டெட்ரோயிட் கார்த் தயாரிப்புக்களில் கணிசமான உடைமை உரிமை இருக்கையில், UAW நிர்வாகிகள் தங்கள் சொந்த உறுப்பினர்களை வறிய நிலையில் தள்ளுவதிலேயே நேரடி நிதிய நலன்களைப் பெறுகின்றனர்.

Shotwell மற்றும் Labor Notes & Co ஆகியவற்றின் கருத்துக்களில் “போராளித்தனமோ” அல்லது “பிளவுத் தன்மையோ” “கிடையாது. இவை ஒன்றும் போராளித்தன நடவடிக்கைகளுக்கு அழைப்புவிடவில்லை—வேலைநிறுத்தங்கள் ஆலை ஆக்கிரமிப்புக்கள் போன்றவற்றை ஊதியங்கள், நலன்கள், வேலைகள் ஆகியவற்றைக் காப்பாற்றப் போராடுவதற்கு மாறாக அவை தாழ்ந்து பணிந்து UAW அதிகாரத்திற்கு இருக்க வேண்டும் என்றுதான் உபதேசிக்கின்றன. அதற்குத்தான் அவை கடைமையுணர்வுடன் ஆதரவைக் கொடுக்கின்றன.

UAW க்கு அவர்கள் கொடுக்கும் ஆதரவு ஜனநாயகக் கட்சி மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவத்திற்கு தாழ்ந்து நிற்றல் என்பதுடன் இணைந்து செல்லுகிறது. இவர்கள் உளுத்துப் போன பொய்யான ஜனநாயக க் கட்சி என்பது “மக்கள் கட்சி” என்பதை இன்னும் வளர்த்து அதைத் தொழிலாள வர்க்கத்தின் புரவலர் என்பது போல் சித்தரிக்கின்றனர்.

அமெரிக்கத் தொழிலாளர்கள் வென்ற ஒவ்வொரு நலனும் பெருநிறுவன ஸ்தாபன, இரு பெருவணிகக் கட்சிகளுக்கு எதிராக அவர்கள் நடத்திய போராளித்தனப் போராட்டத்தின் விளைவுதான் என்று வரலாறு காட்டுகிறது. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் எட்டு மணி நேர வேலை, சிறுவர் உழைப்பு குறித்த சட்டங்கள், கூடுதல் பணிக்கான ஊதியம், சுகாதார நலன்கள் ஆகியவை பல வேளைகளில் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை எதிர்ப்பின் போது குருதி கொட்டித்தான் பெறப்பட்டன. புரட்சி என்னும் அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஜனநாயகக் கட்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்ற போது, அக்கட்சியினர் சமூக இயக்கத்தை நெரித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் செய்தனர், அதையொட்டி பின்னர் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்டதை மீட்டு விடலாம் என்ற எண்ணத்தில்தான் செய்தனர்.

இன்று, தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சிக்குத் தொழிற்சங்கங்கள் மூலம் தாழ்ந்து நின்றதினால் ஏற்பட்டுள்ள விளைவு தெளிவாக உள்ளது—அதாவது வறிய நிலைக்கும், அடிமை உழைப்புச் சுரண்டலுக்கும் மீண்டும் உட்படுவது என்பதே அது.

அமெரிக்கத் தொழிலாளர்கள் இருக்கும் நிலையைப் பாதுகாக்க வேண்டும் என்று கூறியவர்கள் அனைவருக்கும் எதிரான எழுச்சி முயற்சியை எடுத்தபோதுதான் கணிசமான வெற்றியைப் பெற்றனர். அப்படித்தான் 1930 களில் சோசலிஸ்ட் மற்றும் இடதுசாரிப் போராளிகள் AFL கைவினைத் தொழிற்சங்கங்களில் இருந்து முறித்துக் கொண்டு UAW ஐ அமைத்தனர்.

இந்த முதல் முன்னோடிகளின் வேலைத்திட்டம் —1934-35 ல் Auto-Lite மற்றும் Chevrolet வேலைநிறுத்தங்களை டொலிடோ, ஓகையோவில் தலைமை தாங்கியவர்கள்— இன்றைய UAW மீது ஒரு பெரும் குற்றப்பதிவு போல் காணப்படுகிறது. அவர்கள் கட்டாய நடுநிலைத் தீர்ப்பைக் கண்டித்தனர், வேலைநிறுத்தம் கிடையாது என்ற ஒப்பந்தங்களைக் கண்டித்தனர். தொழிலாளர்கள் “அரசாங்கக் குழுக்கள் மற்றும் அமைப்புக்கள் மீது நம்பிக்கை வைக்கக்கூடாது, விதிவிலக்கின்றி அவை அனைத்தும் முதலாளிகளுக்குத்தான் உதவும்” என்றனர். 1935ல் UAW இன் நிறுவன மாநாடு ஜனநாயகக் கட்சியுடன் முறித்துக் கொள்ள வேண்டும் என்றும் ஒரு தேசிய தொழிற் கட்சி கட்டமைக்கப்பட வேண்டும் என்று கூறியது.

ஆனால் ஜோன் எல். லீவிஸ் மற்றும் வால்டர் ரூதர் உட்பட CIO தலைவர்கள் அனைவரும் புதிதாகத் தோன்றியிருந்த தொழிற்சங்கங்களை ரூஸ்வெல்ட்டுடனும் ஜனநாயகக் கட்சியினருடனும் அமெரிக்க முதலாளித்துவத்தின் உள்நாட்டு, சர்வதேச நலன்களுடனும் பிணைத்தனர். அவர்கள் தொழில்துறை ஜனநாயகத்திற்கான எவ்விதப் போராட்டத்தையும் கைவிட்டதுடன், அமெரிக்கப் பொருளாதாரத்தை தீவிரமான முறையில் மறுகட்டமைப்பு செய்வதை கைவிட்டதுடன், தொழிற்சங்கத்தைக் கட்டமைத்தபோது இருந்த சோசலிச, இடதுசாரிப் போராளிகளையும் அகற்றிவிட்டனர்.

இது 1970 மற்றும் 1980 களில் பெருநிறுவன அமெரிக்கா மறுதாக்குதல் நடத்தியபோது தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பற்ற நிலையில் இருத்தியது. தொழிலாள வர்க்கத்தின் விதியை அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆரோக்கிய நிலையில் பிணைத்ததால், UAW வெளிப்படையாக முதலாளிகள், பெருவணிக அரசியல்வாதிகளுடன் ஒத்துழைத்து தொழில்துறையின் தன்மையைக் குறைத்து தொழிலாளர் செலவினங்களைக்குறைத்து, கடந்த மூன்று தசாப்தங்களில் ஒரு மில்லியனுக்கும் மேலான கார்த் தயாரிப்புத் தொழிலாளர்கள் வேலைகளையும் அழித்துவிட்டது.

UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் “தொழிலாளர்களின் அமைப்புக்கள்” என்று இனியும் அழைக்கப்பட முடியாதவை. ஏனெனில் அவை தொழிலாளர்களின் நலன்களைக் காத்தல் என்னும் அடிப்படை அளவுகோலைச் சந்திப்பதில் தோல்வியுற்றுவிட்டன.

அமெரிக்காவில் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்களின் பெருகிய எதிர்ப்பு உலகெங்கிலும் எழுச்சி பெற்றுவரும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் பற்றிய வெளிப்பாடுதான். எல்லா இடங்களிலும் தொழிலாளர்கள் சலுகைகளை விட்டுக் கொடுக்க வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்று கூறப்படுகின்றனர். அதே நேரத்தில் இந்த நெருக்கடியைத் தோற்றுவித்த வங்கியாளர்களும் பெருநிறுவன நிர்வாக அதிகாரிகளும் முன்னைக்காட்டிலும் செழிப்பாகத்தான் உள்ளனர்.

ஒரு வேலை, கௌரவமான வருமானம், சுகாதாரப் பாதுகாப்பு, கௌரவமான ஓய்வு ஆகியவற்றிற்கான போராட்டம் தொழிலாளர்களை மக்கள் தொகையில் மிகச் சிறிய தட்டு ஒன்றின் இலாப நலன்களுக்கான ஆணையைச் செயற்படுத்தும் பொருளாதார முறையுடன் நேரடி மோதலுக்கு இட்டுச் செல்லும்.

இந்த உரிமைகளுக்கான போராட்டத்தின் முதல் படி, தொழிலாள வர்க்கப் போராட்டத்திற்கான உண்மையான அமைப்புக்களை, அதாவது அனைத்துத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை முற்றிலும் பெருநிறுவனங்கள், இரு வணிகக் கட்சிகள் மற்றும் அவற்றின் UAW எடுபிடிகள் ஆகியவற்றில் இருந்து சுயாதீனமாக நிறுவப்படுவதாக இருக்க வேண்டும்.