World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Great interest in lecture by Professor Rabinowitch in Berlin

பேர்லினில் பேராசிரியர் ரபினோவிட்ச்சின் உரைக்கு பெரும் வரவேற்பு

By our correspondent
16 October 2010

Back to screen version

பேர்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் வியாழன் மாலை நடந்த ஒரு கூட்டத்தில் அமெரிக்க வரலாற்றாசிரியரான அலெக்சாண்டர் ரபினோவிட்ச் “அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள்: பெட்ரோகிராடில் போல்ஷிவிக் ஆட்சியின் முதலாம் ஆண்டு” என்னும் தனது புதிய புத்தகத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜேர்மன் புத்தக வெளியீட்டு அமைப்பான மெஹ்ரிங் வெர்லாக் (Mehring Verlag) மற்றும் நான்காம் அகிலத்தின் மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர் அமைப்பு (International Students for Social Equality) ஆகியவற்றின் ஏற்பாட்டின் கீழ் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

300 பேர் வரை அமரக் கூடிய அந்த அரங்கம் நிரம்பி வழிந்தது. பலரும் சாளரத் திட்டுகளிலும் படிக்கட்டுகளிலும் அமர்ந்திருந்தனர், இன்னும் நிறைய பேர் நின்றுபடியை உரையை கேட்டனர்.

ரஷ்யப் புரட்சியின் வரலாறு தொடர்பான விடயத்தில் முன்னணியான இந்த நிபுணரை சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei für Soziale Gleichheit-PSG) தலைவர் உல்ரிக் ரிப்பேர்ட் வரவேற்றார். பேராசிரியர் ரபினோவிட்ச் வரலாற்றை ஆவணரீதியாய் ஆயும் முறையின் ஆதரவாளர் என்று கூறிய ரிப்பேர்ட், “அவரது வேலையின் ஒவ்வொரு விவரமும் சரிபார்க்கத்தக்க ஆவணங்களின் ஆதாரங்களை கொண்டுள்ளன” என்றார்.

இன்று பரவலாகக் காணக்கூடியதாய் இருக்கின்ற ரஷ்யப் புரட்சி மற்றும் சோவியத் ஒன்றியம் குறித்த தத்துவார்த்த திரிபுகளுடனான பொருள்விளக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவகையில் ரபினோவிட்சின் வேலையின் விஞ்ஞான அடிப்படை அமைந்திருக்கிறது என்று ரிப்பேர்ட் கூறினார். பல வரலாற்றாசிரியர்கள் புறநிலை உண்மை என்ற ஒன்று இல்லை என்றும், காரணத்திற்கும் விளைவிற்கும் உறவொன்றும் இல்லை என்றும் கூறிக் கொண்டு வரலாற்றை முழுக்க அகநிலை உணர்காட்சி மற்றும் தனிநபர் பொருள்விளக்கமாக அறிவிக்கும் நிலையில், “பேராரியர் ரபினோவிட்ச்சோ வரலாற்றுக்கான அடிப்படையாக மாறுபட்டதொரு அணுகுமுறையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்” என்று சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவர் கூறினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய தலைவருமான டேவிட் நோர்த் இந்த அமெரிக்க வரலாற்றாசிரியரின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

1968 ஆம் ஆண்டின் சமூக அபிவிருத்திகளால் எழுச்சி பெற்றிருந்த, தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்ற ஒரு தலைமுறையின் ஒரு பகுதியே தானும் என்று நோர்த் கூறினார். “ரஷ்யப் புரட்சி குறித்த கேள்விதான் அப்போது பிரதான கேள்வியாக இருந்தது. நாங்கள் ஸ்ராலினிசத்திற்கு எதிராய் இருந்தோம், அத்தகையதொரு சோசலிச வடிவத்தை நாங்கள் விரும்பவில்லை. ஆக ரஷ்ய புரட்சி என்பது என்னவாக இருந்தது?”

அமெரிக்காவில் இதற்கான ஒரு பதிலைக் காண்பது கடினமாய் இருந்தது. பனிப் போர் காலத்து வரலாற்றாசிரியர்கள் புரட்சியை போல்ஷிவிக்குகள் செய்த ஒரு சதியாகவும், அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு ஒன்றும் இருக்கவில்லை என்பதாகவும் சித்தரித்தனர்.

“அமெரிக்காவில் ஒரு புதிய தலைமுறை வரலாற்றாசிரியர்களை பிரதிநிதித்துவம் செய்பவராய் பேராசியர் ரபினோவிட்ச் இருந்தார்” என நோர்த் தெரிவித்தார். “இவர், 1968ல் வெளியான ரஷ்ய புரட்சி மீதான தனது முதல் புத்தகத்தில், போல்ஷிவிக்குகள் மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்ததை விளங்கப்படுத்தினார்.” ட்ரொட்ஸ்கியை வரலாற்று புத்தகங்களில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு ஸ்ராலினிஸ்டுகள் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்ததொரு சமயத்தில், போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் ட்ரொட்ஸ்கி ஆற்றிய முக்கியமான பாத்திரத்தையும் ரபினோவிட்ச் எடுத்துக்காட்டினார்.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர், “அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள்: பெட்ரோகிராடில் போல்ஷிவிக் ஆட்சியின் முதலாம் ஆண்டு” என்னும் புத்தகத்தை இப்போது ரபினோவிட்ச் எழுதியிருக்கிறார். “பலரும் தங்களது கோட்பாடுகளையெல்லாம் வீசியெறிந்து விட்டிருந்ததொரு” நேரத்தில் ரபினோவிட்ச் தனது கோட்பாடுகளுக்கு உண்மையாகவே இருந்தார் என்பதோடு தனது முந்தைய புத்தகங்களில் அடங்கியிருந்த வேலையைத் தொடர்ந்தார். வரலாற்று உண்மையை வெளிக்கொணர அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பள்ளியின் தனித்துவமான பிரதிநிதி அவர்” என்று நோர்த் முடித்தார்.

தான் ரஷ்யப் புரட்சியை ஆராய வந்த விதம் குறித்த விவரிப்புடன் ரபினோவிட்ச் தன் பேச்சைத் துவக்கினார்.

பிரபலமான உயிரி-இயற்பியல் நிபுணராய் இருந்த அவரது தந்தை யூஜென் ரபினோவிட்ச் (Eugene Rabinowitch) 1918 ஆகஸ்டில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் இருந்து வெளியேறி பின்னர் இப்போது ஹம்போல்ட் பல்கலைக்கழகமாக இருக்கும் பேர்லின் பல்கலைக்கழகத்தில் 1921 முதல் 1926 வரை அவர் பயின்றார். பின்னர் கோபன்ஹேகன் சென்று அங்கிருந்து பாஸ்டனுக்கு இவர் சென்றார். அங்கு குடியேறிய இவரது குடும்பம் மற்ற குடிபெயர்ந்த ரஷ்ய குடும்பங்களுடன் நெருக்கமான தொடர்பைப் பராமரித்தது. “சோவியத் ஒன்றியத்தின் வரலாறு, இலக்கியம் மற்றும் நடப்பு அபிவிருத்திகள் குறித்து கெரென்ஸ்கி, நிகோலேவ்ஸ்கி, செரெடெலி மற்றும் பல புகழ்பெற்ற குடிபெயர்ந்தோருடன் முடிவில்லாமல் விவாதங்கள் நடத்திய பசுமையான நினைவுகளை” இளம் அலெக்சாண்டர் ரபினோவிட்ச் கொண்டிருந்தார் என்று ரபினோவிட்ச் தெரிவித்தார்.

அவர்களுக்குள் பல்வேறு கருத்துமாறுபாடுகள் இருப்பினும் ’ரஷ்ய புரட்சி என்பது லெனினின் தலைமையிலான சதிகாரர்களின் ஒரு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இராணுவப் புரட்சி, இதற்கு ஜேர்மன்கள் நிதியாதாரமளித்தனர்’ என்ற ஒரு புள்ளியில் அனைவரும் உடன்பட்டனர். அவர் வளர்ந்த, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மெக்கார்தி சகாப்தம் மற்றும் கொரியப் போர் (1950-53) காலத்து அரசியல் காலநிலை ரஷ்யப் புரட்சி குறித்த இந்த எதிர்மறை உணர்காட்சியை வலுப்படுத்தியது. மாணவராக இராணுவத்தின் சேமைப்படைக்கு சேவைசெய்து கொண்டிருந்த சமயத்தில், சோவியத் ஒன்றியம் “தீமையின் அவதாரமாக” விவரிக்கப்பட்டு வந்தது.

ரபினோவிட்ச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய வரலாற்றின் மீதான தனது ஆய்வைத் தொடக்கினார், இதன் ஒரு பகுதி வரலாற்றாசிரியரான லியோபோல்டு எச். ஹேம்சனின் கீழ் நிகழ்வதாக இருந்தது. “ஆயினும் ஒரு பட்டதாரி மாணவராய், அக்டோபர் புரட்சி மீதான எனது முன்னோக்கை அப்போதும் நான் மாற்றியிருக்கவில்லை” என்றார் அவர்.

அவர் முதலில் இரக்ளி செரெடெலியின் (Irakli Tseretelli) வாழ்க்கை வரலாறை ஒரு ஆய்வுக்கட்டுரையாக எழுதுவதற்குத் தான் சிந்தித்தார். ஜோர்ஜிய மென்ஷிவிக்காகவும் போல்ஷிவிக்குகளின் சமரசமற்ற எதிரியாகவும் திகழ்ந்த அவரை இவர் தனது இளம் வயதில் அறிந்திருந்தார். ஒரு திறம்பட்ட வாழ்க்கை வரலாற்றை எழுத ஜோர்ஜிய மொழியில் தனக்குப் பரிட்சயம் அவசியம் என்று உணர்ந்த பின் ரபினோவிட்ச், அதற்குப் பதிலாக 1917 பிப்ரவரியில் இருந்து அந்த ஆண்டின் கோடை வரையிலுமான காலத்தில் செரெடெலியின் பாத்திரத்தை ஆராய்வு செய்ய அவர் தீர்மானித்தார்.

ஆயினும், இந்த வேலையைச் செய்கையில் அவரது ஆர்வம் போல்ஷிவிக்குகளின் பாத்திரத்தின் மீது திரும்பியது. இது ஏன்? என ரபினோவிட்ச் கேட்டார். அதற்கு அவர் அளித்த எளிய பதில்: “ஹேமிசனின் கீழ், உண்மைகளை ஆராயவும் அவற்றை சாத்தியமான அளவு புறநிலையாகப் பொருள்புரிந்து கொள்வதற்கும் நான் கற்றுக் கொண்டிருந்தேன். 1960களின் ஆரம்பத்தில் பயில்வதற்கான ஆதாரங்கள் மிகக்குறைந்த அளவில் இருந்த, 1917 புரட்சி மீது ஒரு மாறுபட்ட முன்னோக்கை எடுத்துக்கொள்ள என்னைத் தள்ளியது.”

அப்போது கிடைத்த போல்ஷிவிக் பத்திரிகைகள் மற்றும் போல்ஷிவிக்கின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் குழுக்கூட்ட குறிப்புகள் பற்றிய உண்மை ஆவணங்களில் லெனின் ஆற்றிய பிரதான பாத்திரம் மற்றும் போல்ஷிவிக் கட்சிக்குள் ஆழமான பிளவுகள் நிலவியதான உண்மை ஆகிய இரண்டையும் தான் கண்டறிந்தது எவ்வாறு என்பதை அவர் விவரிக்கிறார்.

அதன்பின் 1917 பிப்ரவரி புரட்சிக்கும் ஜூலை எழுச்சிக்கும் இடையிலான காலத்தில் போல்ஷிவிக்குகளின் அபிவிருத்தி குறித்த தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை ரபினோவிட்ச் எழுதினார். “புரட்சிக்கு முகவுரை- பெட்ரோகிரேடு போல்ஷிவிக்குகளும் 1917 ஜூலை எழுச்சியும்” என்கின்ற அவரது முதல் புத்தகத்திற்கான அடிப்படையை இது உருவாக்கியது. ஒரு சிறிய குழுவாக பெரும்பாலும் தலைமறைவாய் செயலாற்றிக் கொண்டிருந்த போல்ஷிவிக்குகள் பிப்ரவரி புரட்சிக்குப் பிந்தைய காலத்தில் ஒரு வெகுஜனக் கட்சியாக உருமாறியிருந்தது எங்ஙனம் என்பதை அதில் அவர் காட்டுகிறார். தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகளின் சோவியத்துகளில் கட்சி ஆழமாய் வேரூன்றியிருந்தது, அத்துடன் பல்வேறு போக்குகளிடையே விவாதத்திற்கான ஒரு உயர்ந்த ஜனநாயகக் கலாச்சாரத்தை அது கொண்டிருந்தது.

ரபினோவிட்சைப் பொரறுத்தவரை, ஜூலை எழுச்சி என்பது பிப்ரவரி புரட்சியின் விளைவுகளின் மீது அடிப்படை வெகுஜன அதிருப்தியின் ஒரு விளைவாகும். மத்தியக் குழுவின் விருப்பத்திற்கு எதிராக போல்ஷிவிக்குகளின் தீவிரமயமான பிரிவுகளாலும், குறிப்பாக இராணுவ அமைப்புகளாலும் இது ஆதரவளிக்கப்பட்டது.

அந்த சமயத்தில், அடுத்த ஒரு சில மாதங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றவிருக்கும் ஒரு கட்சியானது ஜூலை படுதோல்விக்குப் பின் ”எதேச்சாதிகார லெனினிச மாதிரி” என்பதான ஒன்றின் பாதைகளில் மறுசீரமைக்கப்பட்டிருந்ததாகவே (இது தான் சக வரலாற்றாசிரியர்களிடையே ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டமாய் இருந்தது) அப்போதும் ரபினோவிட்ச் கருதிக் கொண்டிருந்தார். “அந்த கண்ணோட்டம் தவறென நிரூபணமானது” என்றார் ரபினோவிட்ச். “உண்மையில் அதற்கு நேரெதிரானதே உண்மையாய் இருந்தது”. கட்சி “வெகுஜனங்களுக்கு நெருக்கமாய் இருந்தது” என்பதைக் காட்டுகின்ற வகையில் போல்ஷிவிக் கட்சியினர் இடையே பல மாறுபட்ட கண்ணோட்டங்களும் வன்முறையுடனான கருத்துவேறுபாடுகளும் இருந்தன. பின் இந்த மோதல்களுக்கான பல்வேறு உதாரணங்களை அவர் வழங்கினார்.

”அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கு” என்னும் முழக்கத்தை கைவிடுவதான லெனினின் முன்மொழிவை கட்சி நிராகரித்தது. 1917 ஜூலை எழுச்சிக்குப் பின்னர், லெனின் மிதவாத சோசலிஸ்டுகளே பெரும்பான்மையினராய் இருந்த சோவியத்துகளின் வழியாக புரட்சியைக் கொண்டுவருவதன் சாத்தியம் குறித்து நம்பிக்கை கொள்ளவில்லை, ”தனது கட்சியான போல்ஷிவிக்குகளால் தலைமை நடத்தப்படும் தொழிலாள வர்க்கத்திற்கு அனைத்து அதிகாரமும்” என்னும் முழக்கத்தை அவர் முன்மொழிந்தார். கட்சி தனது வேலையை ஆலைகளிலும் சிப்பாய்களின் குழுக்களிலும் கவனம் குவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆயினும் நடைமுறையில் “அனைத்து அதிகாரமும் சோவியத்துகளுக்கு” என்கிற முழக்கத்தில் விலக்கல் இன்றி இருந்தது. இது தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகளின் மனோநிலைக்கு ஒத்துச்செல்வதாய் இருந்தது.

1917 ஆகஸ்டின் பிற்பகுதியில் கோர்னிலோவ் கவிழ்ப்பு முயற்சி தோல்வியுற்றதன் பின், பெட்ரோகிரேடு சோவியத்தில் போல்ஷிவிக்குகள், முயற்சிக்கப்பட்ட சதிக்கான எதிர்ப்பில் அவர்களது முக்கிய பாத்திரத்தின் காரணமாக, பெரும்பான்மையை எடுத்துக்கொண்டனர். அதன்பின் லெனின், கட்சி உடனடியாக அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கி நகர வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆயினும் அவரால் தனது நிலையை நேரடியாக திணிக்க முடியவில்லை. ”செப்டம்பரில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சி சாத்தியமாகி இருக்குமா என்கிற கேள்வியை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்” என்றார் ரபினோவிட்ச். ஆனால் இது ஜீலை தோல்வியைவிட பாரிய தோல்வி ஒன்றிற்கு இட்டுச்செல்லும் என்ற முடிவிற்கே வந்தேன்''.

சென். பீட்டர்ஸ்பேர்க்கின் மறைவிடத்தில் இருந்து லெனின் எழுதிய கடிதங்கள் அவரின் ஏப்பிரல் ஆய்வுரைகளைப்போல் முக்கியத்துவமுடையவையாக இருந்தன. லெனின் போல்ஷிவிக்குகளை இடதுநோக்கி ஊக்குவித்து, இடைக்கால அரசாங்கத்தை அகற்றிவிட்டு சுயாதீனமாக ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என கூறினார். அக்டோபர் 10 அன்று நடந்த மத்திய குழு கூட்டம் ஒன்றில் நடந்த வாக்கெடுப்பில் ஆயுதமேந்தி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆதரவாய் பெரும்பான்மையினர் வாக்களித்தனர். காமனேவ் மற்றும் சினோவிவ் எதிராய் வாக்களித்தனர்.

ஆயினும், இந்த முடிவை செயலூக்கத்துடன் அமல்படுத்துவதற்கு சொற்பமான நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்காப்பு மூலோபாயம் என்றழைக்கப்பட்ட ஒன்றின் மூலம் தான் இது சாத்தியமானது. கெரென்ஸ்கியின் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டதானது புரட்சி மற்றும் சோவியத்துகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்பு மூலோபாயத்தின் விளைவாய் வர இருந்தது. அக்டோபர் 25ல் கூடவிருந்த இரண்டாவது தேசிய சோவியத் காங்கிரஸ் அந்த அரசாங்கத்தை அகற்றுவதற்கு ஒப்புதலளிக்க இருந்தது.

அக்டோபர் 21 மற்றும் 24க்கு இடையே இந்த திட்டம் முழுவேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. “அனைத்திற்கும் மேலாக, லியோன் ட்ரொட்ஸ்கி தான் இதன் காரணம், ஒரு அற்புதமான பேச்சாளராக ஒவ்வொரு இடத்திலும் அவரைக் காணவும் கேட்கவும் முடிந்தது” என்றார் ரபினோவிட்ச். “இறுதியில், ஒரு தோட்டா கூட பாயாமல், தற்காலிக அரசாங்கம் அகற்றப்பட்டது. ட்ரொட்ஸ்கி அதில் மத்திய பங்குவகித்த மனிதராக இருந்தார், இராணுவப் புரட்சிகரக் குழுவின் தலைவராக மற்றும் பீட்டர்ஸ்பேர்க் சோவியத்தின் தலைவராக.” அதன்பின் தான், ஒரு மாதம் கழித்து, லெனினின் கோரிக்கைகள் எட்டப்பட்டன.

முடிவில் ரபினோவிட்ச் கூறினார்: “ஜூலை எழுச்சியை லெனினின் வெற்றிபெறாத இராணுவச்சதியாக சித்தரிப்பது எவ்வளவு குறைவான நியாயமோ 1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியதை லெனினின் ஒரு வெற்றிகரமான இராணுவச்சதியாக சித்தரிப்பதும் அவ்வளவு குறைவான நியாயமே. இரண்டு சந்தர்ப்பங்களிலுமே அவை செவ்வியல் (classical) வெகுஜன எழுச்சியாக நிலைப்படுத்த முடியவில்லை என்றாலும், பிப்ரவரி புரட்சியின் விளைவுகள் குறித்து பெட்ரோகிரேட் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் பரவலாய் இருந்த ஏமாற்றமான நிலை மற்றும் போல்ஷிவிக் வேலைத்திட்டத்திற்கு பரந்த மக்களிடையே இருந்த வானளாவிய ஆதரவு ஆகியவற்றின் விளைவே அவை என்பதை வரலாற்று ஆதாரங்கள் தெளிவுபடக் காட்டுகின்றன.”

”ஆனால், போல்ஷிவிக் கட்சி மற்றும் சோவியத் ஒன்றியம் ஏன் அத்தகைய வகையில் முடிந்தன” என்று அவர் வினவினார். அக்டோபர் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தையும், அச்சமயத்தில் கட்சியின் கட்டமைப்பையும் ஆராய்வதால் மட்டுமே இது விளக்கப்பட்டு விட முடியாது என்றார் அவர். சோவியத்துகள் மற்றும் கட்சியின் உண்மையான, திறந்த விவாத நிகழ்முறை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் அவற்றின் பிந்தைய மையப்படுத்தப்பட்ட, எதேச்சாதிகார தன்மைக்கும் இடையிலிருந்த முரண்பாட்டை எவ்வாறு விளக்குவது என்பது தான் அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள் புத்தகத்தில் வழிகாட்டும் கோட்பாடாய் இருந்தது என்று அவர் கூறினார்.

அவர் சுருங்க விளக்கினார்: “இந்த முதலாவது ஆண்டில் போல்ஷிவிக் கட்சி மற்றும் பெட்ரோகிராட் சோவியத்துகளின் கொள்கை மற்றும் கட்டமைப்பில் நடந்த மாற்றங்கள், தத்துவத்தினால் என்பதை விட நிரந்தர நெருக்கடிகள் மற்றும் அவசரநிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. அவற்றில் தங்களது உயிர்வாழ்வைப் பாதுகாப்பதே போல்ஷிவிக்குகளுக்கு கடினமான பிரதான பணியாக ஆகி விட்டது.” தனது புத்தகத்தை “உயிர்வாழ்வின் விலை” (“The Price of Survival”) என அழைக்கவே ஆரம்பத்தில் அவர் சிந்தித்திருந்தார்.

1919 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளைக் கையாளும் ஒரு புதிய புத்தகத்தை நிறைவு செய்வதற்கான திட்டங்களை அறிவித்து பேராசிரியர் ரபினோவிட்ச் தனது உரையை முடித்தார்.

பெரும் கைதட்டலைப் பெற்ற உரையைத் தொடர்ந்து பார்வையாளர்களிடம் இருந்தான ஏராளமான கேள்விகளுக்கு ரபினோவிட்ச் பதிலளித்தார். சோவியத்துகளின் அங்கீகார நிலை, கெரென்ஸ்கியின் பாத்திரம், புரட்சி ஏன் இறுதியாய் உண்மையான சோசலிசத்தை ஸ்தாபிக்கத் தவறியது, மற்றும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த மற்ற புரட்சிகளுடன் ஒப்பிடுகையில் ரஷ்யப் புரட்சியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த கேள்விகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தன்னுடைய பதில்களில், ரஷ்யப் புரட்சியை உலகளாவிய சோசலிசப் புரட்சிக்கான ஒரு தூண்டுவிசையாக கருதிய லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் சர்வதேச முன்னோக்கை ரபினோவிட்ச் வலியுறுத்தினார். ஜேர்மனி மற்றும் பின்லாந்தில் புரட்சிகள் தோற்றது அதிகமாய் தனிமையுற்றுக் கொண்டிருந்த ரஷ்யா மீது நெருக்குதலை அதிகரித்தது என்றார் அவர்.

பார்வையாளர்களிடையேயான சுறுசுறுப்பான விவாதம் வெகுநேரம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து கூட்டம் உத்தியோகபூர்வமாய் முடிவுக்கு வந்தது. பங்குபெற்றோரில் ஏராளமானோர் புதிதாக வெளியிடப்பட்டுள்ள “அதிகாரத்தில் போல்ஷிவிக்குகள்” புத்தகத்தின் ஜேர்மன் பதிப்பை வாங்குவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.