World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Cleveland Orchestra musicians join striking DSO players for support concert

ஆதரவு திரட்டும் இசைநிகழ்ச்சியில் DSO இசைக்கருவி வாசிப்பாளர்களுடன் கிளெவ்லாந்து இசைக்குழு வாசிப்பாளர்களும் இணைகிறார்கள்

By Shannon Jones
26 October 2010

Back to screen version

டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவின் இசைக்கருவி வாசிப்பாளர்கள், டெட்ரோய்டின் புறநகர் பகுதியில் உள்ள புளூம்பீல்ட் ஹில்ஸில் அமைந்துள்ள கிறிஸ்ட் கிரான்புரூக் தேவாயத்தில் அக்டோபர் 24இல் ஆதரவு திரட்டும் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். அக்டோபர் 4இல் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண சுமார் 700 பேர் கூடியிருந்தனர். DSO இசைக்கருவி வாசிப்பாளர்களுடன் ஐக்கியப்பட்டிருப்பதை காட்ட டெட்ராய்டிற்கு பயணித்திருந்த கிளெவ்லாந்து இசைக்குழுவின் 17 உறுப்பினர்களும் இந்த இசைநிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விடாப்பிடியான வெட்டுக்களுக்கு எதிராக 84 வாசிப்பாளர்களும் ஒரே அரங்கில் கூடி இருக்கிறார்கள். அமெரிக்காவின் ஒரு முன்னணி இசைக்குழுவாக இருக்கும் DSO அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாகவும், தேசியளவிலும், சர்வதேசிய அளவிலும் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீதான கூடுதல் தாக்குதல்களுக்கு இது முன்னுதாரணமாக அமையக்கூடும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

DSO நிர்வாகம் அதன் இறுதி ஒப்பந்த நிபந்தனைகளைத் திணித்ததன் மூலமாக, வெளிநடப்பு செய்யும் நிலைக்கு அவர்களைத் தள்ளியது. அதில் சுகாதாரம், ஓய்வூதியம் ஆகியவற்றில் செய்யப்பட்ட வெட்டுக்களுடன் சேர்த்து 33 சதவீத ஊதிய குறைப்பும் திணிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, வேலையிட சட்டதிட்டங்களில் கடுமையான மாற்றங்களைச் செய்திருந்தது. அதன்படி, இசைகருவி வாசிப்பிற்கும் அப்பாற்பட்ட எல்லாவிதமான வேலைகளையும் வாசிப்பாளர்கள் செய்ய வேண்டியதிருந்தது. மேலும் புதிதாக வருபவர்கள் 42 சதவீத ஊதிய குறைப்பை முகங்கொடுக்க வேண்டும்.

இசைக்கருவி வாசிப்பாளர்கள் முதல் ஆண்டிலேயே அவர்களின் சொந்த ஊதியத்தில் 22 சதவீத வெட்டை அளித்திருக்கிறார்கள். மூன்றாம் ஆண்டில் இதன் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டது. 'நிர்வாகத்தால் கோரப்படும் இந்த கூர்மையான வெட்டுக்கள் இசை வாசிப்பாளர்களை தக்கவைப்பதிலும், புதிய திறமைசாலிகளை ஈர்ப்பதிலும் சிக்கலை உண்டாக்கும்; அது இசைக்குழுவின் தரம் குறைந்து போவதற்குத் தான் இட்டுச்செல்லும்' என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

DSO திட்டங்கள் இந்த ஆண்டில் $9 மில்லியன் பற்றாக்குறையில் உள்ளன. நுழைவுச்சீட்டு விற்பனையில் வீழ்ச்சி, தனியார் மற்றும் பெருநிறுவன நிதியுதவிகளில் வீழ்ச்சி மற்றும் சீரழியும் மானியம் ஆகியவற்றை இசைக்குழு முகங்கொடுத்து வருகிறது. நிதியுதவி அளிப்பவர்களிடம் இருந்தும் அழுத்தங்களை அது முகங்கொடுத்து வருகிறது.

டெட்ராய்டில் அடிப்படை சமூக வாழ்க்கை நிலைமைகளின் மீது நாசகரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் அதே சூழ்நிலையில், DSO இசை வாசிப்பாளர்களின் மீதான தாக்குதலும் நடக்கிறது. அந்த நகரம் ஏற்கனவே அமெரிக்காவின் அதிக வறுமை நிறைந்த நகரமாக மாறியிருக்கிறது. அப்பகுதி ஏற்கனவே வாகன தொழில்துறையின் பெருந்திரளான பணிவிடுப்புகளால் சீரழிந்துள்ளது. பல டெட்ரோய்ட் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன; பேருந்து போக்குவரத்தும், ஏனைய அடிப்படை சேவைகளும் குறைக்கப்பட்டு விட்டன; நகரத்தின் ஒட்டுமொத்த பிரிவுகளை மூடவும், சேவைகளைக் குறைக்கவும் மற்றும் அங்கே குடியிருப்பவர்களைக் கட்டாயமாக வெளியேற்றவும் பரிந்துரைப்பதன் மூலமாக, ஜனநாயக கட்சி மேயர் டேவ் பிங், நகரத்தைச் சுருக்க அழைப்புவிடுத்திருக்கிறார்.

Detroit News போன்ற பெருநிறுவன ஊடகங்களை நிர்வாகம் பின்புலத்தில் கொண்டிருக்கும் நிலையில், இசைக்கருவி வாசிப்பாளர்களுக்கு பொதுமக்களிடம் வெகு குறைவான ஆதரவே இருப்பதாக நிர்வாகம் முறையிடுகிறது. ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆதரவு திரட்டுவதற்கான இசை நிகழ்ச்சி அதற்கு எதிர்மாறாக எடுத்துக்காட்டுகிறது. அக்டோபர் 10இல் நடந்த இசைநிகழ்ச்சியில் 400 பேர் திரண்டிருந்தனர்; ஆனால் அக்டோபர் 24இல் நடந்த நிகழ்ச்சியில் அதையும் விட அதிகமானவர்கள் குழுமி இருந்தனர். 'இந்த இசைநிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும்' என்று அமெரிக்காவில் மிகவும் மதிக்கப்படும் இசைக்குழுக்களில் ஒன்றான கிளெவ்லாந்து இசைக்குழுவின் உறுப்பினர்களால் எடுக்கப்பட்ட முடிவானது, DSO வாசிப்பாளர்களின் நிலைப்பாடு ஓர் ஆழ்ந்த நாணில் மாட்டிக் கொண்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது.

நிகழ்ச்சியின் முதல் பகுதியில் அடோனியோ விவால்டியின் Four Seasons வாசிக்கப்பட்டது. அத்துடன், சர்வதேச புகழ்பெற்ற வயலின் வாசிப்பாளரும், இசையமைப்பாளருமான ஜோசப் சில்வர்ஸ்டெய்ன், மெட்ரோபாலிட்டன் ஓபெரா இசைக்குழுவின் சராஹ் க்ரூக்கர், கிளெவ்லாந்து இசைக்குழுவின் எலாய்னா டுயட்மேன் மற்றும் DSO இணை நிகழ்ச்சியமைப்பாளர் கெம்பர்லி கலொயனிடெஸ் கென்னடி ஆகிய நான்கு சிறப்பு கலைஞர்களின் பிரத்யேக வயலின் வாசிப்பு பகுதியும் அதில் இடம் பெற்றிருந்தது. இசைவாசிப்பாளர்கள் மற்றும் சிறப்பு கலைஞர்கள் அனைவரும் அவர்களின் நேரத்தை இதற்காக அளித்திருந்தார்கள்.

இடைவேளையை தொடர்ந்து கிளெவ்லாந்து இசைக்குழு உறுப்பினர்களும் Johannes Brahmsஇன் இரண்டாவது சிம்பொனியில் DSO வாசிப்பாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். கிளெவ்லாந்து வாசிப்பாளர்களின் ஆதரவிற்காக பாராட்டு நிகழ்ச்சியில் அவர்களுக்கு சிவப்பு ரோஜாக்கள் வழங்கப்பட்டன. எழுந்துநின்று நீண்டநேரம் கரவொலியோடு அந்த கலைஞர்கள் வரவேற்கப்பட்டார்கள்.

சுயாதீனமான ஓர் உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் WADL, இந்த இசைநிகழ்ச்சியைப் பார்வையாளர்களுக்கு ஒளிபரப்பியது.

நிகழ்ச்சியின் முடிவில் DSO வாசிப்பாளர்களைப் பாராட்டி பேசும் போது ஜோசப் சில்வர்ஸ்டெய்ன் பார்வையாளர்களைப் பார்த்து, “நான் பேசுவதற்கு ஒத்திகை பார்த்து வரவில்லை, ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், ஒரு மதிப்புமிக்க குழுவைத் தக்கவைப்பதற்கு தான் இந்த நிகழ்ச்சி” என்றார்.

ஆதரவு திரட்டுவதற்கான அடுத்த இசை நிகழ்ச்சிகள் நவம்பர் 7இல் கிரோஸ் பாயிண்ட் உட்ஸிலும், நவம்பர் 21இல் புளூம்பீல்ட் ஹில்ஸிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வேறு இசைக்குழுக்களுக்குச் சென்றுவிட்ட முன்னாள் DSO வாசிப்பாளர்களை எடுத்துக்காட்டுவதற்கே சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டவர்களின் பிரத்யேக வாசிப்புகள் இடம்பெற செய்யப்பட்டன என்று உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில், DSO நிகழ்ச்சி அமைப்பாளர் இமானுவெல் போஸ்வெர்ட் தெரிவித்தார். “சராஹ் க்ரூக்கர் மெட்ரோபாலிட்டன் ஓபெரா இசைக்குழுவில் மூன்று பருவகாலமாக இருக்கிறார். எலாய்னா டூயட்மேன் ஜூலையில் தான் கிளெவ்லாந்து இசைக்குழுவிற்கு மாறினார்.”

எலாய்னா டூயட்மேன் அவருடைய நிகழ்ச்சியை முடித்தபின்னர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “DSOஇல் நான் எட்டு ஆண்டுகள் இருந்தேன். நம்பமுடியாததெல்லாம் நடந்து கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இசை வாசிப்பாளர்கள், சமூகத்தின் பாகமாக இருந்து, சுய ஆர்வலர்களாகவும் இருந்து, பாடங்களை எடுத்துக்கூறி இங்கே அருமையான பணியைச் செய்திருக்கிறார்கள்; அவர்கள் சமூக நூலிழையின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். அவர்களின் தரம் கீழே கொண்டுவரப்படுவதைப் பார்க்கையில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.”

DSO மீதான தாக்குதலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்து அவருடைய கருத்தைக் கேட்ட போது, அவர் கூறியதாவது: “அமெரிக்க பெருநிறுவனம் தான் இதன் பின்னால் இருக்கிறது. இங்கே நாங்கள் அனைவரும் தொழிலாளர்கள் அவ்வளவுதான்―உயிர் வாழ்வதற்காக நாங்கள் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”

டெட்ரோய்ட் சிம்பொனி இசைக்குழுவைச் சேர்ந்த கிடார் வாசிப்பாளர் மார்சல் ஹட்சஸன் மற்றும் கிளெவ்லாந்து இசைக்குழுவைச் சேர்ந்த மேக்ஸ் டிமோப் ஆகியோரும் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்கள். DSO வாசிப்பாளர்களுக்குக் கிடைக்கும் ஆதரவிற்கு மார்சல் தம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். “கிளெவ்லாந்தில் இருந்து பயணித்து வந்த எங்களைப் போன்ற கிட்டார் வாசிப்பாளர்களுக்கு எங்களின் நன்றி. அவர்களின் ஆதரவை நாங்கள் வரவேற்பதுடன், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.”

மாக்ஸ் கூறியதாவது: “DSOக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பேஸ்புக்கின் பிரத்யேக டேப்கள் மூலமாக நீண்டநாட்களாகவே நான் கவனித்து வருகிறேன். நாட்டில் ஏனைய இசைக்குழுவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ இதுவும் அதேபோன்று உள்ளது. ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”

கடந்த ஜனவரியில் கிளெவ்லாந்து வாசிப்பாளர்களால் நடத்தப்பட்ட ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்தும் அவர் பேசினார். இரண்டு வருடத்திற்கு ஊதிய உயர்வின்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது. “நன்மை தராத ஓர் ஒப்பந்தத்தில் அவர்கள் எங்களை மாட்டி வைத்துவிட்டார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

சமூகத்திற்கு சிம்பொனி இசைக்குழுவின் முக்கியத்துவம் குறித்து கூறுகையில், மாக்ஸ் குறிப்பிட்டதாவது: “கிளெவ்லாந்து இசைக்குழுவின் முக்கிய நோக்க அறிக்கையில் (mission statement) கல்வியும் இடம் பெற்றிருக்கிறது. ஓர் இசைக்குழு செய்வதிலேயே, இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.”

கிளெவ்லாந்து இசைக்குழுவின் மற்றொரு உறுப்பினரான முதன்மை வயலின் வாசிப்பாளர் ரிச்சர்டு வாஹ் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “வாசிப்பாளர்களிடம் நிர்வாகம் என்ன கேட்கிறதோ அது கீழ்தரமானது என்று நான் நினைக்கிறேன். தங்களால் சமாளிக்க முடியாது என்று கூறுவதும் பொய். ஒருவேளை DSO இல்லாமல் போய்விட்டால், அது ஒரு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். டெட்ரோய்டைப் போலவே கிளெவ்லாந்தும் மோசமான நிலையில் தான் இருக்கிறது.”

“ஒரு விஷயம் ஊதிய வெட்டுக்கள் குறித்தது. ஆனால் அவர்கள் விரும்பிய இன்னும் பல விஷயங்களும் இருந்தன. பணிப்பாதுகாப்பின் எவ்வித வடிவத்திலிருந்தும் அவர்கள் தூரத்தில் இருக்கவே விரும்பினார்கள். ஆனால் இசைக்குழுவில் இணக்கம் இல்லாமல் இருக்கிறது. தொழில்வாழ்க்கைக்காக அதில் தங்கியிருக்க விரும்புபவர்களை மட்டும் தான் நீங்கள் கொண்டிருக்க வேண்டியதாக உள்ளது. இல்லையென்றால், தரம் போய்விடும்.”

புளூம்பீல்டு ஹில்ஸில் இருக்கும் வெளிப்படையான செல்வவளம், இசை நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்கள் மற்றும் அமெரிக்காவில் செல்வசெழிப்பான சமூகங்கள் குறித்து அவர் குறிப்பிட்டார். “அருகிலேயே இருக்கும் இவர்களையொட்டி செல்லும் போது, அங்கே நிறைய பணம் கொட்டி கிடப்பதைப் போல தோன்றுகிறது.”

ஆதரவு திரட்டுவதற்கான DSO இசைநிகழ்ச்சியில் நிறைய பேர் கலந்து கொண்டிருப்பது, வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கான ஆதரவை எடுத்துக்காட்டவில்லை என்று குறிப்பிட்ட Detroit News இதழின் சமீபத்திய தலையங்கத்தின் முறையீடுகளை அவர் நிராகரித்தார். “நிகழ்ச்சிக்கு முன்னால் இருந்த மக்களைக் குறித்து நான் பேசவில்லை,” என்று குறிப்பிட்ட அவர், “வாசிப்பாளர்களுக்கு ஒருமித்த ஆதரவு இருந்தது” என்றார்.

பார்வையாளர்களாக கலந்து கொண்ட பலரோடும் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் பேசினார்கள். பார்வையாளர்கள் வாசிப்பாளர்களுக்குத் தங்களின் பலமான ஆதரவைத் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற ஒரு கலை ஆசிரியர் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறுகையில், “DSO சமூகத்திற்கு மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். குழந்தைகளுக்குக் கலையை எடுத்துக்காட்ட இதுவே சிறந்த இடம். இங்கே தான் அவர்களால் ஒரு நேரடியான இசைக்குழுவின் வாசிப்பைக் காண வாய்ப்பு கிடைக்கிறது.”

உள்ளூர் அரசாங்கத்தின் மனிதவளத்துறையில் பணியாற்றும் கேரி வாஹ்ட் கூறுகையில், வாசிப்பாளர்களுக்குத் தமது ஆதரவைக் காட்டவே தாம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். அவர் உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்களிடம் பேசுகையில், “நிர்வாகம் செய்வது அர்த்தமற்றது. இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு இதுவொரு வாய்ப்பை அளிக்கிறது.”

அவர் மேலும் கூறுகையில், “DSOவிடம் இங்கே நீங்கள் பார்த்திருக்கும் ஒருவகையான திறமையை வேறெங்கும் பார்ப்பது மிகவும் சிரமம்” என்றார்.