World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Tamil parties hold talks with government

இலங்கை: தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன

By K. Ratnayake
28 March 2011
Back to screen version

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடந்த இரு மாதங்களாக பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. தீவின் தமிழ் சிறுபான்மையினரின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் அதே வேளை, தமிழ் கூட்டமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பரவலாக்களின் ஊடாக தமிழ் முதலாளித்துவத்தின் சிறப்புரிமையை தக்கவைத்துக்கொள்ளும் ஒரு உடன்பாட்டுக்கு முயற்சிக்கின்றது.

கொழும்பு அரசாங்கமானது 18 மாதங்களுக்கு முன்னர் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் நசுக்கியதன் பின்னர் இந்தப் பேச்சுக்களை தொடங்கியது.  இந்த யுத்தத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுமாக 250,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களின் செலவில், சிங்கள முதலாளித்துவ தட்டுக்களின் மேலாதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக, ஒரு கால்நூற்றாண்டு காலம் நடந்த யுத்தம் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

எந்தவொரு கணிசமான சலுகைகளையும் தமிழ் தட்டுக்களுக்கு வழங்க மறுத்த ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சர்வதேச அழுத்தத்தை தணிப்பதற்காகவே இந்த கலந்துரையாடல்களை தொடங்கினார். உள்நாட்டு யுத்தத்துக்கு உத்தியோகபூர்வமான முடிவுகட்ட ஒரு அரசியல் தீர்வை காணுமாறு குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றன. அவர் தமிழ் கூட்டமைப்புடனான பேச்சுக்களில், வெளிநாட்டில் உள்ள கணிசமானளவு தமிழ் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியில் இருக்கும் புலிகள்-சார்பு குழுக்களின் விமர்சனங்களை தோற்கடிப்பதை பற்றியும் கணக்கிடுகின்றார். பெப்பிரவரியில் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் மார்ச் 18 அன்று மூன்றாவது சுற்றும் இடம்பெற்றன.

இராஜபக்ஷ, வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உட்பட சிரேஷ்ட அமைச்சர்களை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள நியமித்துள்ள போதிலும், பேச்சுவார்த்தைக்கான எந்தவொரு நிலைப்பாட்டையும் உத்தியோகபூர்வமாக ஒழுங்கமைக்கவில்லை. ஜனாதிபதி முன்னதாக மாகாண மட்டத்திலோ அல்லது மாவட்ட மட்டத்திலோ எந்தவொரு குறிப்பிடத்தக்க அதிகாரப் பரவலாக்கலையும் நிராகரித்தார். அவரது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) 2002-03ல், இலங்கைக்கு ஒரு சமஷ்டி வரைவு சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி.) அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை கசப்புடன் எதிர்த்தது.

பேச்சுவார்த்தையில் தமிழ் கூட்டமைப்பு பங்குபற்றுவதானது தமிழ் முதலாளித்துவத்தின் மோசடிப் பண்பை மீண்டும் வெளிப்படுத்துகிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை பாராளுமன்றத்தில் அவர்களின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, கொழும்பு அரசியல் ஸ்தாபனத்துடன் தன்னையே ஒருங்கிணைத்துக்கொள்வதற்கு ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.

புலிகளின் இராணுவத் தோல்வியை அடுத்து, இலங்கை இராணுவம் தமிழ் பொது மக்களை தடுப்பு முகாங்களுக்குள் அடைத்தது. இப்போது அநேகமானவர்கள் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்புக்கு சமமான நிலைமையின் கீழ், இழிநிலையிலான தற்காலிக தங்குமிடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். ஆயிரக்கணக்கான இளம் தமிழர்கள் புலி சந்தேகநபர்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு மீண்டும் கல்வியூட்டப்படுகிறது.

மார்ச் 17 நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழர்களின் ஜனநாயக உரிமைகளின் காவலனாக காட்டிக்கொண்ட தமிழ் கூட்டமைப்பு, தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மாகாணத்தில் இரண்டு சபைகளைத் தவிர அநேகமாக எல்லா சபைகளதும் கட்டுப்பாட்டை வென்றது. அதன் தேர்தல் விஞ்ஞாபனம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், அந்தப் பிரதேசங்களில் இருந்து அகற்றப்பட்ட மக்களை மீளக் குடியமர்த்துதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுதலை செய்தல் போன்றவற்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எவ்வாறெனினும், இராஜபக்ஷ அரசாங்கமும் இலங்கை இராணுவமும் இழைத்த யுத்தக் குற்றங்கள் பற்றிய விவகாரத்தை எழுப்புவது ஒரு புறம் இருக்க, இத்தகைய எந்தவொரு பிரச்சினை பற்றியும் தமிழ் கூட்டமைப்பு பொதுப் பிரச்சாரமொன்றை முன்னெடுக்கவில்லை. மாறாக, அது அற்ப சலுகைகளுக்காக அரசாங்கத்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றது. கடைசியாக நடந்த பேச்சுக்களில், கைதிகளின் குடும்பங்களுக்கு சில தகவல்களைக் கொடுக்க அரசாங்கப் பிரதிநிதிகள் உடன்பட்டுள்ளனர். முன்னர், தமது மகன்மாரும் மகள்மாரும் இழுத்துச் செல்லப்படுவதை பல பெற்றோர்கள் பார்த்துக்கொண்டிருந்ததோடு, அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகின்றார்கள் என்பது பற்றி கூட அவர்களுக்கு சொல்லப்படவில்லை.

உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் கஷ்டங்களை பற்றி அக்கறை காட்டுவதாக தமிழ் கூட்டமைப்பு கூறிக்கொள்கின்றது. ஆயினும், அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வதன் பேரில், 2011 நவம்பரில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை. அந்த வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியம் கோரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு இணங்க வரையப்பட்டிருந்ததோடு வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழிக்கும்.

தமிழ் கூட்டமைப்பு, கடைசியாக நடந்த பேச்சு சுற்றுக்களில் தெளிவாக கலந்துரையாடப்பட்ட, அரசியல் தீர்வு என செல்லப்படுவது பற்றியே பிரதானமாக மூன்னீடுபாடு கொண்டுள்ளது. அதைப்பற்றிய விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அடுத்த மாதமளவில் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைகளின் போதே தமிழ் கூட்டமைப்பு அதன் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளது.

பேச்சுவார்த்தைகளுடன் முன்செல்வதற்காக, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளுடன் கூட்டமைப்பு ஒரு பொது முன்னணியை அமைத்துக்கொண்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்த அதே வேளை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் துணைப்படை குழு, புலிகளின் தோல்விக்கு உதவுவதற்காக பாதுகாப்பு படைகளுடன் நெருக்கமாக செயற்பட்டது.

2010 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் கூட்டமைப்பு எதிர்க் கட்சி வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரித்தது. இராஜபகஷவின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்த அவர், யுத்தத்தின் கடைசி மாதங்களில் நடந்த பல யுத்தக் குற்றங்களுக்கு நேரடிப் பொறுப்பாளியாவார். ஆயினும், சிங்கள பேரினவாத மக்கள் விடுதலை முன்னணியாலும் (ஜே.வி.பி.) ஆதரிக்கப்பட்ட பொன்சேகாவை ஆதரிப்பதில் தமிழ் கூட்டமைப்பு தயக்கம் காட்டவில்லை.

தமிழ் கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஒன்றுகூடின. கடந்த ஆண்டு தேர்தலில் தமிழ் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும், மீண்டும் அதற்குள் நுழைந்துகொண்டார். கடந்த ஆண்டு, தமிழ் கூட்டமைப்பு இந்தியாவின் கைப்பொம்மையாக செயற்படுவதாக விமர்சித்த அவர், தான் தொடர்ந்தும் ஈழத் தனி நாட்டுக்காகப் போராடுவேன் என பிரகடனம் செய்தார்.

தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், அரசாங்கத்துடனான பேச்சுக்களில் தமது கையை பலப்படுத்த தமது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தமிழ் கூட்டமைப்பு அதிக உள்ளூராட்சி மன்றங்களை வெற்றுள்ள அதே வேளை, வாக்களித்தோரின் தொகை 50 வீதத்தை விட சற்றே அதிகமாக இருந்தது. இது, அதனது சந்தர்ப்பவாத சூழ்ச்சித்திட்டங்கள் பற்றி பரந்த மக்கள் மத்தியில் உள்ள ஆழமான பகைமையை பிரதிபலிக்கின்றது.

தமிழ் கட்சிகளின் நெருக்கமான கூட்டிணைவுக்கான நெருக்குதல், சர்வதேச சமூகத்திடம், குறிப்பாக இந்தியாவிடம் இருந்தே வந்தது, என தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இலங்கை உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு அரசியல் தீர்வு காண நெருக்குவதில் புது டில்லிக்கு உள்ள பிரதான நோக்கம், புலிகளைத் தோற்கடிக்க இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கிய சீனா மற்றும் பாகிஸ்தானின் செலவில் தீவில் தனது சொந்த நிலையை விரிவுபடுத்திக்கொள்வதேயாகும்.

இந்திய அரசாங்கம், இராஜபக்ஷ அரசாங்கத்தின் யுத்தத்துக்கு புது டில்லி ஆதரவு கொடுத்ததற்கு எதிராக 2009ல் பெரும் போராட்டங்கள் நடந்த தென் மாநிலமான தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தல்களை எதிர்கொள்கின்றது.

தன் பங்கிற்கு, தமிழ் கூட்டமைப்பானது கொழும்பு அரசாங்கத்திடம் இருந்து சிறியளவிலான சலுகைகளையேனும் கறந்தெடுக்கவும் தீவின் வடக்கு மற்றும் கிழக்கின் நிர்வாகத்தில் தமிழ் முதலாளித்துவத்துக்கு ஒரு கனிஷ்ட வகிபாகத்தை பெற்றுக்கொள்ளவும் சர்வதேச ஆதரவை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. புலிகளின் தோல்விக்கு வழிவகுத்ததும் இதே இனவாத முன்நோக்கே ஆகும்.

தீவில் அல்லது உலகில் ஏனைய பாகங்களில் உள்ள தொழிலாளர்கள் ஒரு புறம் இருக்க, தமிழ் உழைக்கும் மக்களுக்குக் கூட எந்தவொரு வர்க்க அழைப்பும் விடுக்க இயல்பிலேயே இலாயக்கற்ற புலிகள், யுத்தத்தின் கடைசி மாதங்களிலும் தொடர்ந்தும் சர்வதேச சமூகத்துக்கு பயனற்ற வேண்டுகோள்களை விடுத்து வந்தனர். ஆயினும், இந்தியா, சீனா மற்றும் ஏனைய பெரும் வல்லரசுகளும் இராஜபக்ஷ அரசாங்கத்தை ஆதரித்தன.

1948ல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் அடைந்ததில் இருந்து இலங்கையின் முழு வரலாறும், மற்றும் குறிப்பாக கால் நூற்றாண்டு யுத்தமும், தமிழ் சிறுபான்மையினரின் அல்லது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் ஜனநாயக அபிலாஷைகளை இட்டு நிரப்ப ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு பகுதியும் இலாயக்கற்றுள்ளதை அம்பலப்படுத்துகிறது. ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காக, கிராமப்புற மக்களின் தலைமையை பெற்று தொழிலாள வர்க்கம் முன்னெடுக்கும் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் மட்டுமே, சகலரதும் ஜனநாயக உரிமைகளையும் ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தையும் உத்தரவாதப்படுத்த முடியும்.