World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US-backed regime in Yemen carries out new slaughter of protesters

யேமனில் அமெரிக்க ஆதரவு பெற்றுள்ள ஆட்சியானது எதிர்ப்பாளர்களின் மீது புதிய படுகொலைகளை நடத்துகிறது

By David Walsh
5 April 2011
Back to screen version

யேமனிலுள்ள ஜனாதிபதி அலி அப்துல்லா சலேயின் ஆட்சியானது ஒபாமா நிர்வாகம் மற்றும் மேற்கத்தைய சக்திகளின் ஆதரவைத் தொடர்ந்து பெற்று, திங்களன்று தென்மேற்கு நகரமான டைசில் மற்றொரு அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படுகொலைகளை நிகழ்த்தியது.

இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஏனெனில் பொலிசார் தங்களுடைய வாகனங்களில் சில சடலங்களை அப்புறப்படுத்திவிட்டனர். ஆனால் நகரத்தின் மையத்தில் தற்காலிமாக அமைக்கப்பட்ட மருத்துவமனையின் தலைவர் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, குறைந்த பட்சம் 17 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர் என Agence France-Presse இடம் தெரிவித்தார்.

மார்ச் 18ம் திகதி தலைநகரான சானாவில் சலே ஆட்சியானது குறைந்தபட்சம் 52 பேரைப் படுகொலை செய்த திங்கள் சம்பவம் மிக மோசமான கொடூரச்செயல் ஆகும்.

செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் மன்டாப் ஜலசந்திக்கு அருகே கிட்டத்தட்ட 460,000 மக்களைக் கொண்டுள்ள டைஸ் நகரத்தில் தெருக்களில் மாபெரும் கூட்டம் வெள்ளமென நிறைந்ததை புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன. சர்வாதிகாரி சலே அகல வேண்டும் என்று கோரும் எதிர்ப்பாளர்கள் விடுதலை சதுக்கத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லுகையில், மாநில ஆளுனர் தலைமையகத்திற்கு அருகே தாக்கப்பட்டனர்.

டைசில் மருத்துவராகவுள்ள யேசர் அல்னுசாரியிடம் வாஷிங்டன் போஸ்ட் நிருபர் ஒருவர் பேசினார், மருத்துவர் கூறியதாவது: “கவர்னரின் அலுவலகத்திலிருந்து ஸ்னைப்பர்களால் முதலில் நான்கு எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர்…. ஆயிரக்கணக்கில் எதிர்ப்பாளர்கள் இருந்தனர், முக்கியமான டைஸ் தெருக்களில் எதிர்ப்புத் தெரிவித்தனர். நேற்று அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைச் செயல்களை அவர்கள் கண்டித்த வண்ணம் இருந்தனர்.” ஞாயிறன்று டைசில் இருந்த பாதுகாப்புப் படைகள் குறைந்தது இரு ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்றதுடன் மற்ற பலரைக் காயத்திற்கும் உட்படுத்தினர்.

தொலைக்காட்சியில் வந்த காட்சிகள்பொலிசார் துப்பாக்கிகள், கண்ணீர்ப்புகை இயக்கும் கருவிகள் மற்றும் தடிகளைக் கொண்டு ஒரு மாநில அரசாங்கக் கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற, ஆயுதமற்ற எதிர்ப்பாளர்கள் மீது திருப்பியதைக் காட்டுகின்றன என்று போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

சாட்சிகளானது துருப்புக்கள், துப்பாக்கி ஏந்தியவர்கள், (சிலர் அருகே இருந்த கட்டிடக் கூரைகளில் இருந்தனர்), டைசிலுள்ள ஆளுனரின் தலைமையகத்தைக் கடந்து சென்ற ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மீது பொறுப்பற்ற முறையில் சுட்டதை விபரித்துள்ளனர். கூட்டம் கலைந்து செல்ல முற்படுகையில் சிலர், வயதானவர்கள் உட்பட, மிதிக்கப்பட்டனர் எனச் சாட்சிகள் கூறுகின்றனர்என்று MSNBC தகவல் கொடுத்துள்ளது.

AP மற்றும் ராய்ட்டர்ஸ் தகவலை அடிப்படையாகக் கொண்ட MSNBC குறிப்பு, கூட்டத்திலிருந்த ஒமர் அல்-சாகப்பின் கருத்துக்களை மேற்கோளிட்டுள்ளது: “எல்லா திசைகளில் இருந்தும் அதிகத் தோட்டாக்கள் வந்தன. சிலர் ஆளுனர் கட்டிடத்தின் உச்சியிலிருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.” “இரு கொல்லப்பட்ட எதிர்ப்பாளர்களின் சடலங்கள் இராணுவப் பொலிசாரால் ஒரு காருக்குள் ஏற்றப்பட்டதையும் அது பின்னர் விரைந்து சென்றதையும் நான் பார்த்தேன்என்று அல்-சாகப் கூறினார்.

47 வயதான பொறியியலாளர் அப்துல் ஹபிப் அல்-கடசி AP இடம் கூறினார்: “இராணுவச்சீருடை, குடிமக்கள் ஆடை ஆகிய இரண்டையும் அணிந்திருந்தவர்கள் நிஜ தோட்டாக்களை கூரைமீது அமர்ந்து சுட்டனர்.”

நகரத்திற்குள் வரும் நுழைவாயில்கள் இராணுவம் தடைக்கு உட்படுத்தியதுடன், விடுதலை சதுக்கத்தைச் சுற்றி டாங்குகள், ஆயுத வாகனங்களை நிறுத்தி, அவ்விடத்திலிருந்து வெளியேற முற்பட்டவர்களைக் கைதும் செய்தது. தொடர்ச்சியான எதிர்ப்புக்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள் ஆகியவை கடந்த ஆறு வாரங்களாக டைசில் நடைபெறுகின்றன. இவை சலேயில் அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கம் கொண்டவை.

மேற்கு யேமனி நகரமான ஹுடைடாவில் திங்களன்று பாதுகாப்புப் படைகள் சலே எதிர்ப்பாளர்கள் மீது வன்முறையாகத் தாக்கிஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிறு டைசில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில் அணிவகுத்துச் சென்றனர்டஜன்கணக்கானவர்களை துப்பாக்கித் தோட்டாக்களாலும், கற்களாலும், தடிகளாலும் காயப்படுத்தினர். நாட்டின் நான்காவது பெரிய நகரமான, செங்கடலிலுள்ள துறைமுக நகரத்தில், கிட்டத்தட்ட 400 பேர் கண்ணீர்ப்புகைக் குண்டுவீச்சின் சுவாசப் பாதிப்பிற்குட்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

பெயர்கூற விரும்பாத சாட்சி ஒருவர் ஹுடைடாவில் ராய்ட்டர்ஸிடம் கூறினார் : “எதிர்ப்பாளர்கள் திடீரென மாநில நிர்வாகக் கட்டிடத்தை சூழ்ந்து ஜனாதிபதி அரண்மனையை நோக்கி நகர்ந்தனர். ஆனால் பொலிசார் ஆகாயத்தை நோக்கி தோட்டாக்களை சுட்டும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். சாதாரண உடையணிந்த பல பொலிஸ்காரர்களும் அவர்களை தாக்கியதை நான் பார்த்தேன்.”

தெற்கு யேமனில் ஏடெனிலும், டைசிலும் ஏப்ரல் 3ம் திகதி ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டு பொதுவாக கடைப்பிடிக்கவும் பட்டது என்று தகவலை அபு தாபியிலுள்ள The National கூறியுள்ளது. “தொழிலாளர்களும் மாணவர்களும் நேற்று ஏடெனிலும் மற்றொரு தென்புற நகரமான டைசிலும் ஒரு பொது வேலை நிறுத்த அழைப்புக்களுக்கு இணங்கிச் செயல்பட்டனர் என்ற சாட்சிகளும் செய்தி ஊடகமும் கூறுகின்றனஏடெனில் பல தெருக்கள் தடைகளுக்கு உட்படுத்தப்பட்டு டஜன் கணக்கான கடைகள், நகரம் மூடப்படவேண்டும் என்னும் எதிர்ப்பு அழைப்புக்களுக்கு ஏற்ப மூடப்பட்டன. ஷேக் ஒத்மான், மன்சோரா, கிரேடர், முயாலா இன்னும் ஏடெனில் பல மாவட்டங்களும் வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டு அனைத்து பொது, தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன என்று கூடுதல் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெப்ருவரி மாதம் தொடங்கிய எதிர்ப்புக்களில் பாதுகாப்புப் படைகளால் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்காவர்கள் காயமுற்றனர். ஆனால் லிபியாவிற்கு எதிரான போரை நியாயப்படுத்தும் வகையில் தங்கள் மனிதாபிமான அக்கறைகளைக் கூறும், அமெரிக்க அரசாங்கம் மற்றும் பிற மேற்கத்தைய ஆட்சிகளால் எவ்வித அழைப்புக்களும் சலே அகன்றுவிட வேண்டும் என்பது பற்றி வரவில்லை. இவரோ இப்பிராந்தியத்தில் ஏகாதிபத்திய நலன்களுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கும் எதிரான போராட்டத்தில் முக்கிய நண்பராக இருக்கிறார்.

திங்களன்று ஒரு தகவலை வெளியிட்ட நியூ யோர்க் டைம்ஸ் ஆனது ஒபாமா நிர்வாகம் அதன் கொள்கையைஓசையின்றி மாற்றிஇப்பொழுது சலே அகல வேண்டும் எனச் செயல்பட விழைகிறது என்று கூறியுள்ளது. டைம்ஸ் கூறியிருப்பதாவது: “ஜனாதிபதி அலி அப்துல்லா சலேக்கு ஆதரவு என்பதை ஒபாமா நிர்வாகம் அந்தரங்கமாக வைத்துக் கொண்டு அவரை பகிரங்கமாக நேரடியாகக் குறை கூறாமல் இருந்து வருகிறது….. இந்த நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவில் குறைகூறல்கள் சில இடங்களிலிருந்து வந்துள்ளன. அவை லிபியாவில் ஒரு அடக்குமுறைச் சர்வாதிகாரியை அகற்ற விரையும் அரசாங்கம் மூலோபாய நட்பு நாடுகளான யேமன், பஹ்ரைன் போன்றவற்றில் அவ்வாறு செயல்படாததின் பாசாங்குத்தனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளன.

டைம்ஸ் கட்டுரை வாஷிங்டன்திரு. சலேயுடன் கொண்டுள்ள உறவிலுள்ள பரஸ்பர நம்பிக்கை பற்றியும் எச்சரிக்கையாக உள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய எச்சரிக்கை உணர்வு ஒன்றும் அமெரிக்காவை சலேக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் மதிப்புடைய இராணுவத் தளவாடங்கள், பயிற்சி கொடுப்பதை நிறுத்திவிடவில்லை. “அமெரிக்கா ஆயுதங்களை அளித்துள்ளது, யேமனித் தலைவர் அமெரிக்க இராணுவம் மற்றும் CIA ஐ அல் கெய்டா கோட்டைகளைத் தாக்க அனுமதித்துள்ளது என்று செய்தித்தாள் எழுதியுள்ளது.

உண்மையில் தற்போதைய நியூ யோர்க் டைம்ஸ் இதழில் ஒரு நீண்ட கட்டுரை சுட்டிக்காட்டுவது போல், “அமைதியின்மை தொடங்கியதிலிருந்து சலே ஆட்சி அசாதாரணமுறையில் வலுவான ஆதரவை ஒபாமா நிர்வாகத்திடமிருந்து பெற்று வந்தது. வெள்ளை மாளிகை யேமனில் திடீரென்ற மாற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தான் நம்புவதைத் தெளிவாக்கியுள்ளது, அதற்காக யேமனியர்கள் உயிர் பறிக்கப்பட்டாலும் பரவாயில்லை.”

அதே நேரத்தில் அமெரிக்கா யேமனிய முதலாளித்துவ எதிர்ப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளது. சலேயை அகற்றி, ஆனால் அதே நேரத்தில் அடக்குமுறை அரசாங்கம் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளைத் தக்க வைக்கும் கருத்துக் கொண்ட வகையில் நெருக்கடிக்கு தீர்வுகாண முற்படுகிறது. ஏப்ரல் 4ம் திகிதி டைம்ஸில் வந்துள்ள கட்டுரை அமெரிக்க அதிகாரிகள் சலேயை மிரட்டி அவரிடமிருந்து சலுகைகளை பெற விரும்பும் முயற்சிகளில் ஒரு பகுதியா இல்லையா எனத் தெரியாவிட்டாலும், அரச அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் பின்னர் டைம்ஸின் கூற்றான அமெரிக்க கொள்கையில் மாற்றம் என்பதைப் பெரிதுபடுத்தவில்லை.

டைஸ் மற்றும் ஹுடைடாவில் நடக்கும் வன்முறையைபெரும் கடுமைஎன்று கூறிய டோனர், சலே பதவியிறங்கும் நேரம் வந்து விட்டது என்ற கருத்தைக் கூறவில்லை. “அது ஒருக்கால் நாம் எடுக்க வேண்டிய முடிவு அல்லஎன்றார் அவர். ஆனால் ஒபாமா அதிகாரிகள் இந்த அளவு நிதானத்தை லிபியாவிலிருந்து முயம்மர் கடாபி அகலவேண்டும் எனக்கூறும்போது காட்டவில்லை. அமெரிக்காவானது யேமனி அரசாங்கத்துடனும் எதிர்ப்புடனும் பேச்சுக்கள் நடத்துவதாகவும்ஒரு அமைதியான தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் செய்தியாளர்களிடம் டோனர் கூறினார்.

அமெரிக்க கொள்கை மாற்றம் பற்றி டைம்ஸில் தகவல் வந்துள்ளதற்கு மாறாக MSNBC ஏப்ரல் 4ம் தேதி ஒரு தகவலைக் கொடுத்துள்ளது: “திங்களன்று சானாவில் ஒரு தூதர் இப்பொழுது குவிப்பு இன்னும் பேச்சுக்களை நடத்துவதில் உள்ளது. சலே கீழிறங்க வேண்டும் என்னும் பொதுஅழைப்புக்கள் பற்றியும் உள்ளதுஇவை இதுவரை பிரான்ஸில் இருந்துதான் வந்துள்ளன, கனியாத கருத்துக்கள் அவை…..வாஷிங்டன் சலே அகன்றுவிட வேண்டும் எனக் கோரினால், “உடனே சலே ஒப்புக் கொள்ளுவரா என்பது பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லைஎன்றார். பிந்தைய கருத்து அபத்தமானது. ஏனெனில் அமெரிக்க அரசாங்கம், இராணுவத்தின் ஆதரவினால்தான் சலே அதிகாரத்தில் நீடித்திருக்க முடிகிறது.

யேமனின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான JMP(Common Forum) எனப்படும் பொது அரங்கின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது சலேயின் பழங்குடி மக்கள் எதிர்ப்பாளர்கள், மற்றும் முன்னாள் அரசியல் நண்பர்கள், இஸ்லாமியவாதிகள் மற்றும் பெரிதும் இழிந்துவிட்ட சக்திகளின் கூட்டு ஆகும். வார இறுதியில் JMP அரசியல் வருங்காலம் பற்றிஒரு பார்வையைஅளித்தது. சலே அதிகாரத்தை அவருடைய துணை ஜனாதிபதி அப்த் அல் ரப் மன்சூர் அல்-ஹடியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பின்னர் பிந்தையவர் புதிய அரசியலமைப்பை இயற்றுதல், புதிய தேர்தல்கள் நடத்தும் பொறுப்பைப் பெற வேண்டும் என்றும் அது கூறுகிறது. எதிர்ப்புக்களுக்கு வழிநடத்தும் மாணவர்கள் குழுக்கள் இத்திட்டத்தை சலே மற்றும் அவருடைய குடும்பத்திற்கு ஒரு புதிய வாழ்வைக் கொடுக்கும் திட்டம் எனக்கூறி நிராகரித்துவிட்டனர்.

தற்போதைய பேச்சுக்களின் தன்மையும் எதிர்ப்பின் தன்மையும் பிரிட்டனின் டெய்லி மெயிலில் வந்துள்ள கருத்து வெளிப்பாட்டின் மூலம் அளவிடலாம்: “சலே ஆட்சி மற்றும் எதிர்ப்பிற்கும் இடையே நடக்கும் பேச்சுக்கள் கடந்த இரு வாரங்களாக அவ்வப்பொழுது நடைபெறுகின்றன, சில சமயம் அமெரிக்கத் தூதர் முன்னிலையில்.”

யேமனி சர்வாதிகாரியோ திங்களன்று நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் காட்டுவதுபோல் உறுதியாக உள்ளார். ஞாயிறன்று சலேஎதிர்ப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், இராணுவத்தின் சில பிரிவுகளின் கலகமும் நிறுத்தப்பட வேண்டும்என்று அழைப்பு விடுத்தார். “மிரட்டுதல் மூலம் எதையும் சாதிக்க முடியாதுஎன்றும் அவர் கூறினார்.