World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Jewish, Arab workers and youth protest against social conditions in Israel

யூத, அரபுத் தொழிலாளர்களும் இளைஞர்களும் இஸ்ரேலில் சமூக நிலைமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்

By Patrick O’Connor 
1 August 2011

Back to screen version

பெரும்பாலும் இளைஞர்களை கொண்ட கிட்டத்தட்ட 150,000 என மதிப்பிடப்பட்ட யூதர்களும் அரபுக்களும் அடங்கிய மக்கள் கூட்டம் சனிக்கிழமையன்று இஸ்ரேலில் பெரிதும் உயரும் விலைவாசிகள் மற்றும் பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தன்யாகுவின் பொருளாதார, சமூகக் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல் அவிவ், ஜெருசலம் மற்றும் ஹைபா  ஆகிய இடங்களில் மிக அதிகம் குழுமியிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விலை உயர்ந்துள்ள வீட்டு விலைகள், வாடகைகள் ஆகியவற்றிற்காக மூன்று வாரங்களுக்கு முன் துவக்கப்பட்ட மாணவர்களின் கூடார நகரஇயக்கத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகின்றன. மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 7 மில்லியன் என்றுள்ள நிலையில் 150,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் என்பது நாட்டின் குறிப்பிடத்தக்க சதவிகிதத்தைப் பிரதிபலிக்கிறது.

இன்னும் அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும்கூட, இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் மோசமாகி வரும் சமூக சமத்துவமின்மை, பொருளாதார இடர்கள் மற்றும் நெத்தன்யாகுவின் அரசாங்கம் மற்றும் நாட்டிலுள்ள அரசியல் அமைப்பு முறை மீது பெரும் சீற்றம் ஆகியவற்றினால் உந்துதல் பெற்றுள்ளன.

Yediot Aharonof ல் எழுதம் கட்டுரையாளர் நஹும் பார்நியா எதிர்ப்புக்கள் முன்னோடியில்லாத தன்மையைக் கொண்டுள்ளன என விவரித்துள்ளார். “ மக்கள் கூட்டம் 100,000 அல்லது 200,000 என எப்படி இருந்தாலும், இத்தகைய எண்ணிக்கை சமூகப் பிரச்சினைகள் குறித்து ஒருபொழுதும் தெருக்களுக்கு வந்ததில்லைஎன்று அவர் எழுதினார். “சமூக மாற்றம் என்னும் பெயரில்150,000 இஸ்ரேலியர்கள் தெருக்களுக்கு வரும் சிரமத்தை எடுத்துக் கொள்ளுவர் என்று யார் நம்புவர்….பல ஆண்டுகளாக மக்கள் பெற்றுள்ள எதிர்ப்பும் அவநம்பிக்கையும் இப்பொழுது பங்கெடுப்பதிலும் ஆர்ப்பாட்டம் செய்தல் என்பதின் மூலம் வெளிப்படுகின்றன.”

மிகப் பெரிய எதிர்ப்பு டெல் அவிவில் நடைபெற்றது; இங்கு கிட்டத்தட்ட 100,000 மக்கள் நகர மையத்தின் வழியே அணிவகுத்துச் சென்றனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி மற்றும் ஒரு 10.000 பேர் ஜெருசலத்தில் பிரதம மந்திரியின் இல்லத்திற்கு முன் ஆர்பாட்ட அணிவகுப்பில் ஈடுபட்டனர்; 8,000 பேர் ஹைபாவில் அணிவகுத்துச் சென்றனர். மத்திய நஜரத்தில் யூதர்கள் மற்றும் அரபுக்கள் இரு சமூகத்தவரும் பங்கு பெற்ற ஒரு சிறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது; வீடுகள் தொடர்பான எதிர்ப்புக்கள் கூட்டாகத் தொடங்கியதில் இருந்து இது முதலாவது அத்தகைய ஆர்ப்பாட்டம் ஆகும்.

மக்கள் சமூக நீதியைக் கோருகிறார்கள்”, “எங்களுக்கு ஒன்றும் பிச்சை தேவையில்லை, நீதி வேண்டும்”, “மக்களுக்கு எதிராக அரசாங்கம் இருந்தால், மக்களும் அரசாங்கத்திற்கு எதிராக இருப்பர்போன்றவையும் முழக்கமிடப்பட்டவற்றுள் அடங்கியிருந்தன. சமீபத்தில் எகிப்து மற்றும் பிற அரபு நாடுகளில் நடைபெற்ற எழுச்சிகளின் செல்வாக்கை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்ப்பாளர்கள் கோஷ அட்டைகளைத் தயாரித்திருந்தனர். அவற்றுள் ஒன்று, “இது இஸ்ரேலிய வசந்தம்என்று கூறியது: மற்றொன்று முபாரக், அசாத், நெத்தன்யாகு!” என எழுதப்பட்டிருந்தது.

RT செய்தி இணையத்தால் ஒரு இளைஞர் எதிர்ப்புக்கள் அரபு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளினால் உந்துதல் பெற்றதா என்று கேட்கப்பட்டார். “தஹிர் சதுக்கத்தில் நடந்ததின் செல்வாக்கு நிறையவே உள்ளது…. உண்மையில் அதிகச் செல்வாக்கு உள்ளது. மக்கள் தங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை உணரும்போதுதான், அவர்கள் தங்களை ஒழுங்குற அமைத்துக் கொள்ள முடியும்; தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தேவையில்லை; தங்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கத்திற்கு அவர்கள் கூறத் தொடங்கலாம்என்றார்.

இப்போக்குகள் சியோனிச நாட்டிற்குள் ஒரு பெரிய மாற்றத்திற்கு வகை செய்கின்றன. உலகப் பொருளாதார முறிவிற்கு நடுவே, இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள சமூக நெருக்கடி யூதத் தொழிலாளர்களை தங்கள் அரபு சகோதர, சகோதரிகளுடன் இஸ்ரேலுக்குள்ளும் மத்திய கிழக்கு முழவதும் ஒன்றுபடுத்தும் பொதுநிலைத் திறனை அப்பட்டமாக முன்வைத்துள்ளது. அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்திற்கான ஒரு புதிய பாதையை, சியோனிச ஆளும் உயரடுக்கிற்கு எதிராக, அரபு முதலாளித்துவம் அதன் ஏகாதிபத்திய ஆதரவு கொடுப்பவர்களுக்கு எதிராகத் திறக்கிறதுஇந்த பொது வர்க்க நலனானது தேசியம், இனம் அல்லது மதம் அடையாளமற்ற தன்மையில் உள்ளது.

இஸ்ரேலிய மக்களின் பரந்த அடுக்குகள் எதிர்ப்பு இயக்கத்தில் இழுக்கப்படுகின்றன. முக்கிய இசைக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் சேர்ந்துள்ளனர். நேற்று கிட்டத்தட்ட 1,000 பெற்றோர்களும் அவர்களுடைய இளம் குழந்தைகளும் ஜெருசலத்திலும் ஹைபாவிலும் மிக அதிக நாள் பாதுகாப்பு மையச் செலவுகள், போதுமானதற்ற பெற்றோர் விடுப்பு விதிகளுக்கு எதிராக நடப்போர்அணிவகுப்புஒன்றில் பங்கு பெற்றனர்.

பொது மருத்துவமனைத் தொழில் வல்லுனர்களின் வேலைநிறுத்தமும் ஐந்து மாதமாக நடைபெறுகிறது. ஞாயிறன்று நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவமனையில் வசிப்பவர்கள், மருத்துவமனை உள்ளிருப்போர் ஆகியவர்கள் நெசட் (பாராளுமன்றம்) அருகே பொதுச் சுகாதாரத் திட்டத்திற்குப் போதுமான நிதி தேவை என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று உள்ளூராட்சி ஊழியர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்; பொது அலுவலகங்கள் மூடப்படும்; குப்பைகள் சேகரிக்கப்பட மாட்டாது.

நெத்தன்யாகுவின் அரசாங்கம் ஒரு நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. Ynet News  வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கட்டுரையாளர் அட்டிலா சோம்பல்வி குறிப்பிடுவதாவது: “நேற்று தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்த 150,000 மக்கள் அரசாங்கத்தின் தனியார்மயமாக்குதல், சாதாரண மக்களின் நலன்களைப் புதைத்தவை ஆகியவற்றிற்குப் பின்னணியில் இருந்த குற்றவாளி என்று தாங்கள் கருதிய நபரின்மீது தங்கள் சீற்றத்தைக் காட்டினர். இவர்கள் ஒன்றும் உதவாக்கரைச் சிறுவர்கள்என்று இகழ்வுடன் கைச் சைகைகள் மூலம் ஒதுக்கப்பட வேண்டியவர்களோ, கண்களைச் சுழற்றி அகற்றக் கூடியவர்களோ அல்லர். இவர்கள் சீற்றம் மிகுந்த மக்கள், சரிவிற்கு முகம் கொடுப்பவர்கள். இந்த எதிர்ப்பு அரசாங்கத்தின் உயர்மட்டத்திற்கும் சென்று கொண்டிருக்கிறது, லிகுட்டை அதிர்விற்கு உட்படுத்துகிறது, நெசட்டிலுள்ள ஆடம்பர நாற்காலிகளை ஆட்டி அசைக்கிறது, பிரதம மந்திரி மற்றும் நிதி மந்திரியை வியர்க்க வைத்து, தெருக்களில் வெளிவந்துள்ள சீற்றத்தில் இருந்து தப்பிப்பதற்கு பாதையைத் தேட வைக்கிறது

ஷாஸ் கட்சி, தீவிர மரபார்ந்த யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது, நெசட்டிலுள்ள 120 இடங்களில் 11 இடங்களைக் கொண்டது, நெத்தன்யாகுவின் கூட்டாட்சி அரசாங்கத்திலிருந்து தான் விலகக் கூடும் என்று எச்சரித்துள்ளது: இது புதிய தேர்தல்களைத் தூண்டும் திறன் உடையது ஆகும்.

பிரதம மந்திரி எதிர்ப்பு இயக்கத்தை தணிக்கச் செய்வதற்குப் பரபரப்புடன் செயல்படுகிறார். சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் முடிந்தவுடன், நெத்தன்யாகு ஒரு காபினெட் கூட்டத்தைக் கூட்டி மந்திரிகள், வல்லுனர்கள் கொண்ட சிறப்புக் குழுஒன்று எதிர்ப்புத் தலைவர்களின் குறைகளைக் கேட்க நியமிக்கப்படும், அது இஸ்ரேலின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்குதிட்டத்தை அளிக்கும் என்று அறிவித்தார். “இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவுகள் உயர்வின் கடினத்தன்மை பற்றி எங்களுக்கு நன்கு தெரியும்…. உண்மையான இடர்களை நாம் தீர்க்க வேண்டும், தீவிரமாகவும், பொறுப்பாகவும். சந்தேகத்திற்கு இடமின்றி, இது எங்கள் முன்னுரிமைச் செயற்பாடுகளை மாற்றச் செய்துள்ளதுஎன்று அறிவித்தார்.

இத்தகைய வெற்றுத்தன வனப்புரை எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளுக்கு விடையிறுக்கும் வகையில் பற்பல சலுகைகளுடன் வந்துள்ளது. கடந்த செவ்வாயன்று, நெத்தன்யாகு 50,000 வீட்டுப் பிரிவுகளை 18 மாதங்களுக்குள் கட்டுவதாக உறுதியளித்தார். நேற்று அரசாங்கம் பெட்ரோல் மீதான வரி ஆகஸ்ட் மாதத்திற்குக் குறைக்கப்படும், சில வயோதிக மக்கள் வீடுகளை வெப்பமாக்குவதற்கான நிதி உதவியை இரு மடங்காகப் பெறுவர் என்று அறிவித்துள்ளது. பிரதம மந்திரி வரிகளையும் நீர் வரியையும் தான் குறைக்க முடியும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் நெத்தன்யாகு எதிர்ப்புக் காட்டும் தொழிலாளர்கள், இளைஞர்களின் சமூகக் கோரிக்கைகளுக்கு எத்தீவிரச் சலுகைகளும் கிடைக்காது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார். “பொறுப்பற்ற, அவசரமான முறையில் கூறப்படும் ஜனரஞ்சக நடவடிக்கைகளை நாம் தவிர்க்க வேண்டும்; அவை நாடு சில ஐரோப்பிய நாடுகள் அடைந்துள்ளது போன்ற நிலைக்குச் சரிவதற்குக் காரணமாகிவிடும்; அவையோ திவால் தன்மையின் விளிம்பில் உள்ளன; மிக அதிக அளவு வேலையின்மையும் அங்கு காணப்படுகின்றனஎன்று அவர் அறிவித்தார்.

நிதி மந்திரியும் மூத்த லிகுட் உறுப்பினருமான Yuval Steinitz நாட்டுத் திவால் என்ற பேய் உரு பற்றிய கருத்தை இன்னும் தீவிரமாக எழுப்பினார். “ஐரோப்பியக் கடன் நெருக்கடி பற்றிய பேச்சுக்களைப் பார்க்கிறோம். அமெரிக்கா கூட கடனைத் திருப்பித்தருவதில் பிறழலாம் என்ற வாய்ப்பு உள்ளது என்ற பேச்சையும் கேட்கிறோம். என்னுடைய தலையாய கடமை இஸ்ரேல் நாட்டில் நாம் அந்த நிலையை அடையாமல் காப்பது என்பதுதான்….செல்வந்தர்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களை மக்கள் விரோதிகளாக நாங்கள் மாற்ற மாட்டோம்; ஏனெனில் அவர்கள்தான் ஒரு ஆரோக்கியமான பொருளாதாரத்தின் பகுதியாவர்என்றார்.

நிதியச் சந்தைகள் நேடன்யாகு அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களைக் கொண்டுவருகின்றன என்பது தெளிவு. மக்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும் வணிகச்சார்பு உடைய கொள்கைகள் தொடரப்பட வேண்டும் என அவை வலியுறுத்துகின்றன. இஸ்ரேலிய அரசாங்கக் கடன் பத்திரங்களின் மதிப்பு வார இறுதி அணிவகுப்புக்களை அடுத்துக் குறைந்து விட்டது. “உயரும் விலைகளை எதிர்த்துப் பெருகும் எதிர்ப்புக்கள் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்னும் அழுத்தங்களை அதிகரித்துள்ளனஎன்று டெல் அவிவின் பத்திர வணிகர் எகுட் இட்ஜகோவ் ப்ளூம்பெர்க்கிடம் கூறினார். “அரசாங்கம் இன்னும் கடன்களை எழுப்பலாம் என்ற கவலை சந்தையில் உள்ளது; இது பற்றாக்குறையைப் பற்றிய உறுதியற்ற தன்மையைத் தோற்றுவித்துள்ளது.”

இஸ்ரேலிய கருவூலத்துறை அரசாங்கத்தின் எதிர்ப்புக்களுக்கு விடையளிக்கும் வகையில் குறைந்த செலவு அறிவிப்புக்கள் பற்றிச் சீற்றம் அடைந்துள்ளது. இஸ்ரேலின் நிதித்துறையின் இயக்குனர் தலைவரான ஹைர்ன் ஷானி நேற்று இராஜிநாமா செய்தார். நிதி மந்திரியுடன்அடிப்படைப் பிரச்சினைகளில் வேறுபாடுகள்என்ற காரணத்தைக் காட்டியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களில் நடந்துள்ள நிகழ்வுகள் பிரச்சினைகளை அதிகப்படுத்திவிட்டனஎன்றும் சேர்த்துக் கொண்டார்.

நெத்தன்யாகு அரசாங்கம் எப்படி அடுத்த சில நாட்களிலும் வாரங்களிலும் நெருக்கடியைச் சமாளிக்க உள்ளது என்பது பார்க்கப்பட வேண்டும்; ஆனால் பாலஸ்தீனிய மக்கள் அல்லது அண்டை அரபு நாடுகளின் மீது தூண்டுதல் வகையில் சீற்றம் திசைதிருப்பப்படும் உண்மையான ஆபத்து உள்ளது. கல்வி மந்திரி Gideon Saar தன்னுடைய லிகுட் பிரிவுச் சக ஊழியர்களிடையே கடந்த வாரம் இஸ்ரேலில் ஒவ்வொரு தேர்தலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை சுற்றித்தான் இருந்தது, லிகுட்தோற்றுவிட்டதுஎன்று ஆலோசனையாக தெரிவித்தார். ஆனால் முக்கிய பிரச்சினைகள் பாதுகாப்புடன் தொடபாக இருந்தபோது, லிகுட் வெற்றிபெற்றுள்ளது.”