World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: University teachers union sells out wage campaign

இலங்கை: பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் சம்பளப் போராட்டத்தை விற்றுத் தீர்த்தது

By Kapila Fernando
30 July 2011

Back to screen version

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், மூன்று மாத காலத்துக்கு மேலாக சம்பள உயர்வு கோரி முன்னெடுத்து வந்த போராட்டத்தை, அரசாங்கம் சமர்ப்பித்த மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவு உயர்வை மட்டும் ஏற்றுக்கொண்டு  ஜூலை 22ம் திகதி முடிவுக்குக் கொண்டுவந்தது. எதிர்ப்புப் போராட்டம் அரசாங்கத்தின் அரசியல் பிரச்சினைகளை தீவிரமாக்கியுள்ள நிலைமைகளிலும், அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டம் இன்றி, சம்பள உயர்வு கோரிக்கையை வென்றெடுக்க முடியாதென்பது மென் மேலும் தெளிவாகியுள்ள நிலைமைகளின் கீழேயே, இந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க தலைமைத்துவம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.

உலக சோசலிச வலைத் தளம் இது பற்றி கேட்ட போது, விரிவுரையாளர் சங்கத்தின் செயலாளர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்ததாவது: எமது அடிப்டைச் சம்பளம் உயர்த்தப்படவில்லை. (சம்பளத்துடன் சேர்க்கப்படுகின்ற) கல்விசார் கொடுப்பனவும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான கொடுப்பனவும் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அரசாங்கம் விரிவுரையாளர்கள் பிரிவொன்றுக்கு மட்டும் இக்கொடுப்பனவை இருமடங்குக்கு நெருக்கமாக அதிகரித்திருப்பதற்கான காரணம், ஏதாவதொன்று கிடைத்துள்ளதாக அங்கத்தவர்கள் முன் மிகைப்படுத்திக் காட்டி, போராட்டத்தை நிறுத்திவிட சங்கத் தலைமைத்துவத்துக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். உதவி விரிவுரையாளர்களுக்கு எந்தவொரு கொடுப்பனவு அதிகரிப்பும் ஏற்படுத்தப்படவில்லை.

ஆரம்பத்தில் சிரேஷ்ட பேராசிரியர்களுக்காக ரூபா 168,000 வரையான சம்பள உயர்வுக்கான கோரிக்கையை முன்வைத்த சங்கம், அரசாங்கம் அதனை நிராகரித்த நிலைமையின் கீழ் ரூபா 132,000 வரை பின்னர் ரூபா 126,000 வரை கோரிக்கையை கீழிறக்கிக்கொண்டது. தற்போது கொடுப்பனவை மட்டும் அதிகரிப்பதென்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு, சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரின் மொத்த சம்பளத்தை ரூபா 115,000 வரை உயர்த்திக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. ஆயினும், சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரின் மொத்த சம்பளம் 15,000 ரூபாவாலும் முதுநிலை தேர்வு விரிவுரையாளர் ஒருவரின் சம்பளம் 1,500 ரூபாவாலும் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது என சங்கத்தின் ஊடக பேச்சாளர் மஹின் மென்டிஸ் தெரிவித்தார். இந்த கொடுப்பனவு அதிகரிப்பு, ஊழியர் சேமலாப நிதி அல்லது ஓய்வு பெறும் போது கிடைக்கும் கொடுப்பனவுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தாது.

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதை தொடர்ச்சியாக நிராகரித்து வந்துள்ளார். அவர் ஜூலை 13 அன்று திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரத்னவுடன் இணைந்து விரிவுரையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, சிரேஷ்ட பேராசியர்களின் கொடுப்பனவை உயர்த்துவதற்கான தீர்மானத்தை முன்வைத்தபடி, விரிவுரையாளர் சங்கத்திற்கு இறுதி தீர்மானத்தை வெளியிட்டார். இந்த நிலைமைகளின் கீழேயே விரிவுரையாளர் சங்கம் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

வியாழனன்று கூடிய விரிவுரையாளர்கள் சங்க நிர்வாகக் குழு, முழுமையாக அல்லாவிட்டாலும் அநேகமானவர்களுக்கு தீர்வு கிடைத்துள்ளதாக போலியாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட வண்னம் போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானித்தது.

அரசியல் காரணங்களுக்காகவே சம்பள கோரிக்கையிலிருந்து பின்வாங்கியதாக தேவசிறி பகிரிங்கமாக ஏற்றுக்கொண்டார். உலக சோசலிச வலைத் தளம் இது பற்றி கேட்டபோது அவர் பின்வறுமாறு கூறினார்: அரசாங்கம்  கடந்தவாரம் சமர்ப்பித்த தீர்மானத்துக்கு நாம் உடன்படக் காரணம், இதற்கும் மேல் இரு சாராராலும் முன் செல்ல முடியாது என்பதாலேயே ஆகும். அரசாங்கம் இதற்கு மேல் சம்பள உயர்வு கொடுக்க முடியாது என்று உறுதியாக கூறுகிறது. எமக்கு தொழிற்சங்க ரீதியாக இதற்கும் மேல் செல்ல முடியாது. தொடர்ந்தும் முன்செல்ல வேண்டுமெனில் நீங்கள் (சோசலிச சமத்துவக் கட்சி) முன்வைப்பது போல் அரசியல் முன்நோக்குடனான போராட்ட வேலைத் திட்டத்தில் இறங்க வேண்டும். ஆனால், அத்தகைய போராட்டத்தில் இறங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை இப்போதில்லை என்பதே எமது கருத்தாகும். அங்கத்துவத்தை அதற்காக இணக்கப்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமற்ற காரியமாகும்.

அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு போராட்டத்தை நிறுத்துவதற்கான பொறுப்பை அங்கத்தவர்கள் மீது திணித்து, தாங்கள் அரசியல் ரீதியில் அடிபணிந்து போனதை மூடி மறைப்பதற்கே தேவசிறியும் விரிவுரையாளர்கள் சங்க தலைவர்களும் முயற்சிக்கின்றனர். இரு சாராருக்கும் இதற்கும் மேல் செல்ல முடியாது என தேவசிறி கூறும்போது, அதன் அர்த்தம் தமது வழிமுறை அரசாங்கத்துடன் சமரசத்துடன் செயற்படுவதே என்பதாகும். இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி சம்பளம் மற்றும் ஏனைய கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது என்பதையே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளும் ஆரம்பத்தில் இருந்தே வெளிக்காட்டியுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பள கோரிக்கை தாங்க முடியாத ஒன்றெனவும், அப்படி கொடுத்தால் பல்கலைக்கழகத்தின் ஏனைய ஊழியர்களும், ஏனைய அரசாங்க ஊழியர்களும் அத்தகைய கோரிக்கைகளை முன்வைப்பர் என்றும் இராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக ஆசிரியர்களுடனான கூட்டமொன்றில் விரிவுரையாளர்கள் சங்க போராட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு விடையிறுத்த இராஜபக்ஷ, பண நோட்டை அச்சடித்து சம்பள உயர்வு கொடுக்கவா சொல்கிறீர்கள் என கேட்டார். 1996ல் இருந்தே பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பளம் அதிகரிக்கப்பட்டிராத ஒரு சூழ்நிலையிலேயே இராஜபக்ஷ இந்தக் கேள்வியை கேட்டுள்ளார். 2006ல் இருந்தே அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வை கொடுக்காது வாழ்க்கை செலவுக்கு சமனற்ற விதத்தில் அற்ப கொடுப்பனவை மட்டும் வழங்கி வந்துள்ள சூழ்நிலையிலேயே இராஜபக்ஷ இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நடந்த காலத்தில், தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிய போது, இராஜபக்ஷ தொழிற்சங்கங்களை பார்த்து என்னை நீங்கள் யுத்தத்தை நிறுத்தச் சொல்கின்றீர்களா? என்று அதட்டினார். அச்சமயம் தொழிற்சங்க தலைவர்கள் வாய்பொத்தியபடி தொழிலாளர்கள் மேல் யுத்தச் சுமைகளை சுமத்துவதில் அவருடன் கூட்டுச் சேர்ந்தனர்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் மலை போல் குவிந்த செலவீனம் மற்றும் அதே போல் 2008ல் அமெரிக்க வங்கிகளின் பொறிவினால் ஏற்பட்ட அழுத்தத்தினால் உக்கிரமடைந்த சர்வதேச முதலாளித்துவ நெருக்கடியையும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது சுமத்திவிட அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. 2009 ஜூலை மாதம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற கடன்களுக்கான நிபந்தனைகளின்படி, அரச செலவீனத்தை பாரிய அளவில் வெட்டிக் குறைத்தல், சமூக நலன்புரி செலவுகளை குறைத்தல் மற்றும் ஏனைய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் போன்றவற்றின் மூலம் இது அமுல்படுத்தப்படுகின்றது. கல்விச் செலவை வெட்டுவதன் பாகமாகவே, பல்கலைக்கழக கல்வியை தனியார்மயமாக்கவும் வெளிநாட்டு முதலீட்டளர்களை அழைக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது போராட்டத்துக்கு எதிராக குறைத்த வண்னம், தன்னிச்சையாக நிர்வாக பதவிகளில் இருந்து விலகிய விரிவுரையாளர்களுக்கு மீண்டும் அப்பதவிகளை வழங்குதில்லை என மிரட்டியுள்ளது. அரசாங்கத்துக்கு சார்பான மாணவர்களை பயன்படுத்தி அது இப் போராட்டத்திற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவொன்றையும் பிறப்பித்துக்கொண்டது.

சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும் முன்வைத்த வேலைத்திட்டமானது, வாழ்க்கைத் தரத்தைக் காக்கவும், பல்கலைக்கழக கல்வி தனியார்மயமாக்கத்துக்கு எதிராகவும், விரிவுரையாளர்களும் மாணவர்களும் தொழிலாள வர்க்கத்தின்பால் திரும்பி, சோசலிச கொள்கைகளை செயற்படுத்தும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றுக்காகப் போராடும் அனைத்துலக சோசலிச போராட்டத்தில் இறங்க வேண்டும், என அழைப்பு விடுத்தது. இத்தகயை வேலைத்திட்டத்தை எதிர்த்த தேவசிறி, நாம் ஒரு தொழிற்சங்கமாகவே செயற்படுகிறோம், அரசியல் வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டியது அரசியல் கட்சிகளது பணியாகும் என்று கூறினார்.

அங்கத்தவர்களை அரசியல் போராட்டமொன்றிற்கு உடன்பட வைப்பது என்பது சாத்தியமற்றது என்று தேவசிறி கூறுவது, அத்தகைய ஒரு போராட்டத்தை அவர் எதிர்ப்பதாலேயே ஆகும். விரிவுரையாளர்களின் போராட்டம் இரு மாதங்களுக்கு மேலாக நீடித்ததுடன், அரசாங்கத்தின் மிரட்டலை உதாசீனப்படுத்தி பெரும்பாலான விரிவுரையாளர்கள் அதில் பங்குபற்றி முன்னொருபோதும் இல்லாத அளவில் ஊர்வலம் மற்றும் மறியல் போராட்டங்களிலும் இறங்கியிருந்தனர்.

எனினும், தேவசிறியும் பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீடத்தின் பொறுப்பாளியான பேராசிரியர் சுமனசிறி லியனகேயும், முதலாளித்துவ முறைமையின் கீழ் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டியவாறே விரிவுரையாளர் சங்கத்தின் தலைமையில் அமர்ந்திருந்தனர். ஜூன் 20ம் திகதி கொழும்பில் நடந்த கூட்டமொன்றில் சம்பள போராட்டத்தை நிச்சயமாக வென்றெடுப்போம் என சூளுரைத்த லியனகே, முன்னர் நிலவிய சமூக நலன்புரி கருத்துக்களுக்கு, தற்போதைய சந்தை பொருளாதார கொள்கைகளால் குழி தோண்டப்பட்டுள்ளன என்றும், முன்னுரிமைகளின் படி பொருளாதார வேலைத்திட்டத்தை வரிசைப்படுத்துவது எப்படி என்று அரசாங்கத்துக்கு தெரியவில்லை என்றும் கூறினார். முதலாளித்துவ முறைமையை தேவைக்கு ஏற்ப முன்னுரிமைபடுத்தி முகாமைத்துவம் செய்வது எப்படி என்பது பற்றி ஆலோசனை கூறுபவராக தன்னை காட்டிய வண்னமே அவர் முன்னணிக்கு வருகின்றார்.

லியனகேயின் வழியை பின்பற்றியபடி நவீன தாரான்மைவாதத்துக்கு எதிராக, சமூக அபிவிருத்தி மற்றும் சமூக நியாயத்துக்கான போராட்டமொன்று நடத்தப்பட வேண்டும் என்று கூறிய தேவசிறி, விரிவுரையாளர்களது சம்பளப் போராட்டம் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானது அல்ல என தெரிவித்தார்.

லியனகேயும் தேவசிறியும் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற பிரமையை வளர்த்த வண்னம் முதாலாளித்துவ அமைப்பினுள் சமூக நியாயத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்த முடியும் என்ற பொறிக் கிடங்கினுள் விரிவுரையாளர்களை மட்டுமன்றி, மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களையும் சிறைப்படுத்தி வைக்கும் உத்தியை கடைப்பிடிக்கின்றனர். இவர்கள், சோசலிச வேலைத் திட்டத்துக்கான போராட்டத்துக்கான காலம் எழவில்லை என்று கூறி, அந்த போராட்டத்திற்கு எதிராக கந்தலாகிப்போன பழைய சந்தர்ப்பவாத கருதுகோளை சமர்ப்பிக்கின்றனர்.

லியனகேயும் தேவசிறியும் முன்னாள் தீவிரவாதிகள் என்ற வகையில் கடந்த காலங்களில் சோசலிசத்தைப் பற்றி அவ்வப்போது போலியாக புலம்பிவிட்டு, தற்போது அரசாங்கத்தின் தாக்குதல்களை தோற்கடிக்கும் போராட்டத்தை எதிர்ப்பவர்களாக முன் நிற்பதை காணலாம். மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட பெரும்பாலான மக்களின் ஆதரவு விரிவுரையாளர்களது போராட்டத்திற்கு கிடைத்திருந்தது. அப்பிரிவினர் உடனடியாக ஆதரவு வழங்க வருவர் என்ற நிலைமை காணப்பட்டதாலேயே, விரிவுரையாளர் சங்கம் அவர்களது ஆதரவுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கவில்லை. அதற்குப் பதில், அரசாங்கத்துடன் சமரசம் காணும் எதிர்பார்ப்பில், அவர்கள் எதிர்க் கட்சியான யூ.என்.பீ.,  அரசாங்கத்தின் பங்காளிகளான லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ராலினிஸ கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இனவாத ஐக்கிய மக்கள் முன்னணியின் பக்கமாக திரும்பினர்.

நவசமசமாஜக் கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணாரட்ன, விரிவுரையாளர் சங்க காட்டிக்கொடுப்புக்கு பக்கபலமளிப்பவராக முன் நின்றார். விரிவுரையாளர் சங்கம் மேற் கூறிய பிரதிநிதிகளுடன் ஜூன் 26ம் திகதி பேச்சுவார்த்தை நடத்திய கூட்டத்தில் வெட்கமற்று அவரும் பங்குபற்றியிருந்தார்.

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை, தனது வலதுசாரி கொள்கைக்காக சுரண்டிக்கொள்ளும் கட்சி யூ.என்.பீ. யாகும். ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளியாக சர்வதேச நாணய நிதிய சிக்கன வெட்டுக்களுக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்குபவை. அக்கூட்டத்தில் கருணாரட்ன இப்படி ஆலோசனை வழங்கினார்: நான் இந்த கருத்தை (விரிவுரையாளர்களது போராட்டம் தவறற்றது என்ற கருத்தை) சமர்ப்பித்தேன். இவ்வாறு ஒரு சிறிய மனுவில் கையொப்பமிடுவோம் என கூறினேன். பொதுவான ஒரு நிர்ப்பந்தத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எல்லோரதும் தேவையாக இருந்தது. சமுதாயத்துள் நிர்ப்பந்தம் விளைவிக்கும் ஒரு பெரும் இயக்கமொன்றை கட்டியெழுப்பி, அரசாங்கத்தை வளைக்க முடியும் என்ற பிரமையை நிலைநாட்டிக் கொள்ளும் முகமாகவே கருணாரட்ன இந்த கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

முதலாளித்துவ எதிர்க் கட்சி மற்றும் அரசாங்க கட்சியுடன் இணைந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் முன் தோன்றியுள்ள அரசியல் பிரச்சினையை கீழ்ப்படுத்திவிட இவ்விதமே நவசமசமாஜக் கட்சி தலைவர் விரிவுரையாளர் சங்கத்திற்கு ஒரு காகித உரையை அமைத்துக் கொடுத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே மாற்று அரசியல் வேலைத்திட்டமொன்றை வழங்கும் ஒரே ஒரு கட்சி என்பது பல்கலைக்கழக போராட்டத்தினுள் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவக் கட்சிகளிடமிருந்தும் தொழிற்சங்க விலங்கிலிருந்தும் மீண்டு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியிலும் அதன் இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பிலும் இணைந்துகொள்ளுமாறு நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.