World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Brutal attack on senior journalist in Jaffna in northern Sri Lanka

வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் மீது கொடூரமான தாக்குதல்

By S. Ramesh
01
August 2011

Back to screen version

வட இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் தெரியாத குண்டர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் அவர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

சுய நினைவற்ற நிலையில் உள்ள குகநாதனுக்கு யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது. தலையில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதனால் அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இன்றுதான் அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது. 59 வயதான குகநாதன் 22 ஆண்டுகளாக உதயனில் வேலை செய்துகொண்டிருக்கின்றார்.

வடக்கு மாகாணம் உட்பட இலங்கையில் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடந்து ஒரு வாரமே ஆன நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கில் பெரும்பான்மை சபைகளை எதிர்க் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கைப்பற்றிய அதே வேளை, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆளும் கட்சியினால் அங்கு மூன்று சபைகளையே வெல்ல முடிந்தது. தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இ. சரவனபவனுக்குச் சொந்தமான உதயன், தமிழ் கூட்டமைப்பின் அரசியலை நேரடியாக ஆதரிக்கின்றது.

தமிழ் ஆளும் தட்டின் பிரதான கட்சியான தமிழ் கூட்டமைப்பை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆதரிக்கவில்லை. ஆயினும், குகநாதன் மீதான கொலைகாரத் தாக்குதலையும், எதிர்ப்பை நசுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளையும் சோ.ச.க. கடுமையாக கண்டனம் செய்கின்றது.

இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகவியலாளர்கள் மீதான பெரும் தொகை தாக்குதல்களில் இது புதியதாகும். இந்த தாக்குதல், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், முன்பு யுத்தத்தினால் நாசமாக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் ஜனநாயகம் மற்றும் அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுவிட்டது என்ற அரசாங்கத்தின் போலி உரிமைகோரலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.

வெள்ளிக் கிழமை மாலை 7.30 மணியளவில், குகநாதன் தனது அலுவலகத்திற்கு அருகாமையில் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை மேட்டார் சயிக்கிளில் வந்த இருவர் பின் தொடர்ந்தனர். குகநாதனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி கடும் காயத்தை ஏற்படுத்திய தாக்குதலாளிகள், உடம்பிலும் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். உதயன் அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர்.

இத் தாக்குதல் சம்பந்தமாக பொலிசார் யாரையும் கைது செய்வில்லை. இந்த தாக்குதல்இனம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்டதாக பொலிசார் வழமைபோல் கூறியுள்ளனர். எவ்வாறாயினும், 15 மீட்டர் தூரத்தில் இருக்கும் சந்தியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் இருக்கின்ற போதும் தாக்குதலாளிகளால் எந்தவிதமான இடையூறுமின்றி தப்பியோட முடிந்துள்ளது.

உதயன் நிறுவனர் சரவணபவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்த தாக்குதல் தேர்தல் தோல்வியை சகிக்க முடியாத ஒரு குழுவால் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் குழுவின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், மறைமுகமாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியையே (ஈ.பீ.டி.பீ) குறிப்பிடுகின்றார்.

ஈ.பீ.டி.பீ. அரசங்கத்தின் ஒரு பங்காளியாக இருப்பதோடு, அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ளார். அதன் துணைப்படைக் குழு இராணுவத்துடன் நெருக்கமாக செயற்படுகின்றது. எவ்வாறாயினும், வடக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தின் ஆதரவு இன்றி இத்தகைய கொடூரமான தாக்குதல்களை மேற்கொள்ள முடியாது. வடக்கில் நடந்த தேர்தலில் பெரும்பான்மையான சபைகளில் தோல்வியடைந்ததையிட்டு ஈ.பீ.டி.பீ. சீற்றமடைந்துள்ளது.

குகநாதன் மீதான தாக்குதல் பற்றி உடனடியாக விசாரணையை முன்னெடுத்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு இராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கூறியுள்ளார். இராஜபக்ஷவின்உத்தரவு அடியோடு போலியானது. டசின் கணக்கான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள், அவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளார்கள். ஊடக நிறுவனங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இராஜபக்ஷ கடந்த காலத்தில் வழமையான இத்தகையஉத்தரவுகளை பிறப்பித்திருந்தார். ஆனால் பின்னர் அவற்றுக்கு ஒன்றும் நடந்ததும் இல்லை பொலிசார் எதனையும் கண்டுபிடித்திருக்கவும் இல்லை. அத்தகைய உத்தரவுகள் குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான சாக்குப் போக்காகவே இருக்கும்.

ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சிடுமூஞ்சித்தனமாக தெரிவித்ததாவது:குகநாதனின் உதாரணத்தினைக் காட்டிக் கொண்டு பத்திரிகையாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று சொல்ல முடியாது. இலங்கை முழுவதும் ஊடக சுத்ந்திரத்துக்கு அச்சுறுத்தல் இல்லை

உதயன் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றது. 2006 மே மாதம் ஒரு ஆயுதக் கும்பல் பத்திரிகை அலுவலகத்தினை மூர்க்கமாகத் தாக்கியதனால், விநியோக முகாமையாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். தாக்குதலாளிகள் குகநாதனைத் தேடினார்கள். ஆனால் அவர் தப்பி விட்டார். அன்றிலிருந்து அவர் நீண்ட காலமாக வெளியில் எங்கும் போகாமல் அலுவலகத்துக்கு உள்ளேயே தங்கியிருந்தார்.

.எஃவ்.பீ. அறிக்கையின் படி, 2006ல் இருந்து நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட உதயனின் 6 ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதன் செய்தியாளர்களில் ஒருவரான எஸ். கவிதரன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான், அதாவது மே மாதம் 28ம் திகதி இதே முறையில் குண்டர் குழுவினால் தாக்கப்பட்டார்.     

எல்லைகள் அற்ற பத்திரிகையாளர்கள் அமைப்பு இந்த தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. விசாரணை நடத்துமாறு கோரியுள்ள அந்த அறிக்கை கூறுவதாவது:அவரது தாக்குதலாளிகள் கையான்ட வன்முறை, அவரை அவர்கள் உயிருடன் விட்டு வைக்க நினைக்கவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.” ‘’இந்த தாக்குதல் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறையின் புதிய அலையாக இருக்க கூடாது, என கூறியுள்ள அந்த அறிக்கை கடந்த வருடத்தில் இது குறைந்து கொண்டிருக்கிறது. இருந்த போதிலும் பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தண்டனையில் இருந்து விலக்களிப்பு கொடுப்பதானது குற்றஞ் செய்பவர்களை தொடர்ச்சியாக ஊக்குவிக்கின்றது என்பதை நாங்கள் நினைவுபடுத்துகிறோம், என மேலும் கூறியுள்ளது.

நியூயோர்க்கினைத் தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) பிரதிப்பணிப்பாளர் றொபேட் மகோனி,இலங்கை அதிகாரிகள் நீண்டகாலமாக இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கும் சம்பவங்கள் பற்றி பாராமுகமாக இருக்கின்றனர்... இது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை குழுக்களின் படி, கடந்த தசாப்தத்தின் போது 17 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 50 பத்திரிகையாளர்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இது யுத்தத்துக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் விரோதமான எதிர்ப்புக்களை அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒடுக்குமுறைகளின் ஒரு பாகமாகும்.

2009 ஜனவரி 8 அன்று சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க பட்டப்பகலில் கொல்லப்பட்டார். தாக்குதலாளிகளால் பல சோதனைச் சாவடிகள் ஊடாக, சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க முடிந்தமை, அந்தக் குற்றத்தில் அவர்களுடைய உடந்தையை தெளிவாக காட்டுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் சிரச/எம்.டீ.வி. நிலையம் தாக்கி அளிக்கப்பட்டது.

2010 ஜனவரியில் லங்கா ஈ-நியூஸ் பத்திரிகையாளர் பிரதீப் எக்னெலிகொட காணாமல் போனார். இந்த வழக்கிலும் பொலிசார் எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஒரு மனித உரிமை அமைப்பான சமூக நம்பிக்கை நிதியத்தின் முகாமைத்துவ அதிகாரியான பட்டானி ராசிக் என்பவரினது என நம்பப்படும் ஒரு சடலத்தினை கடந்த வாரம் பொலிசார் தோண்டி எடுத்தனர். ஐ.நா. மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் ரவீனா சம்டாசனி, எக்னாலிகொட மற்றும் ராசிக் போன்றோர் காணாமல் போனது சம்பந்தமாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

புலிகள் தோல்வியடையும் வரை அவர்களின் குரலாக செயற்பட்டு, இப்போது தமிழ் ஆளும் தட்டுக்களுக்கு ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கைப் பெறும் எதிர்பார்ப்புடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் கூட்டமைப்பை உதயன் ஆதரிக்கின்றது.

உதயன் செய்தி ஆசிரியர் மீதான தாக்குதலானது, இராணுவம் ஆக்கிரமித்துள்ள வடக்கு மற்றும் கிழக்கில் எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ள மாட்டாது என்ற செய்தியை கொடுத்துள்ளது. இது இராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்படும் பரந்த தாக்குதல்களின் பாகமாகும். அது யுத்த காலத்தில் அபிவிருத்தி செய்த பொலிஸ் அரச வழிமுறைகளை இப்போது எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கவும் மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவும் பயன்படுத்துகிறது.